Advertisement

                               காதலை தவிர வேறில்லை

1

  உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்

ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும்

வேறு என்ன கேட்கிறேன்

வீடு விழாக் கோலத்தில் இருந்தது அவ்வீட்டின் இளவரசன் என்ற பெயரோடு மகாராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெ. கே விற்கு திருமணம் பேசி முடித்தது தான் காரணம்..

செங்கோட்டை அருகே மலை சூழ்ந்த கிராமப் பகுதி தான் ஜெ.கே வின் சொந்த ஊர்., தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஊரில் பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசு தான் ஜெ. கே அவனுக்கென்று பெயரும் புகழும் சம்பாதித்து தனிக்காட்டு ராஜாவாக  விவசாய தொழில்களின் அதிபதியாக இருக்கிறான்..

நல்ல மழை வளம் கொண்ட மலை சூழ்ந்த ஊர் என்பதால் அங்கு எப்போதும் தண்ணீருக்கு பஞ்சம் கிடையாது., அதுமட்டுமன்றி விவசாயத்தை எடுத்து நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின் ஊரின் முக்கால்வாசி இடத்தை அவன் கைகளில் தான் வைத்திருக்கிறான்..

விவசாயம் செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்களிடமும்., விவசாய இடங்களை பிளாட் போட்டு விற்க நினைப்பவர்களிடமும்., மொத்தமாக வாங்கி சேர்த்து வைத்திருக்கிறான்.

             இயற்கை விவசாயம் தான் அவனது குறிக்கோள், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி அதைப் பற்றி நிறைய தெரிந்து கொண்ட பின்புதான் தொழிலையே தொடங்கியிருந்தான். ஒருபுறம் காய்கறி ஏற்றுமதி., காய்கறி விளைவிப்பது என்று இருக்கும் போதே.,  மலையடிவார இடங்களிலுள்ள நிலங்களில் பழப்பண்ணை தொடங்கி இருந்தான். அதில்  அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழவகைகளை பதப்படுத்தி அதையும் ஏற்றுமதி தொழிலாக மாற்றி வைத்திருந்தான்..

நிறைய நாட்டு மாடுகளை வாங்கி ஒரு பால் பண்ணை வைத்து அதில் வரும் பாலை  தேவையானவர்களுக்கு விற்பது போக., மீதமான அவற்றைக்கொண்டு பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை தொடங்கி  வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபர் தான் ஜெ.கே.

ஜெ. கே என்பது ஜெய கார்த்திக்கின் சுருக்கம். வீட்டில் அனைவரும் அவனை கார்த்திக் என்று அழைத்தாலும்.,அவனுக்கு என்னவோ ஜெ. கே தான் மிகவும் பிடிக்கும்.. அவனின் அந்த பெயர் சுருக்கத்தை சொன்னால்.,  சுற்றுவட்டாரத்தில் தெரியாத ஆட்களே இல்லை என்னும் அளவிற்கு பிரபலமானவன்.

ஒரு தொழிலில் இருந்து மற்றொரு தொழிலுக்கு ஏதாவது கிடைக்குமா என்பதை பார்ப்பதில் அவன் வியாபார சாணக்கியன் என்றே சொல்லலாம்., அந்த அளவிற்கு வியாபாரத்தில் எதை செய்தால் எது கிடைக்கும் என்னும் அளவிற்கு புதிது புதிதாக செய்யக்கூடியவன்..

அவனுடைய பால் பண்ணையில் வளர்க்கும் நாட்டு மாடுகளின் சாணத்தில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது ஆகட்டும்.,  பண்ணையில் பழம் பதப்படுத்தும் இடத்தில் அதன் தோல்களை கொண்டும் உரம் தயாரிக்கிறான்., அவற்றை எல்லாம் அவனுடைய விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறான்.. பண்ணை வைத்து வியாபாரத்தை பெருக்குவதில் ஜெ.கே விற்கு நிகர் யாரும் இல்லை என்னும் அளவிற்கு திறம்பட நடத்திக் கொண்டிருந்தான்…

அவரின் பெரிய குடும்பத்தில் அவனுடைய தாத்தா பழனிவேலுக்கும்., பாட்டி தெய்வானைக்கும்., 4 மகன்கள் ஒரு மகள் , உண்டு பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு வரிசையாக மூன்று ஆண் மகன்களை பெற்ற பிறகு நாலாவதாக இரட்டை பிள்ளைகளாக ஒரு மகனும் மகளும் பெற்றெடுத்த பெரியவர்கள் அவர்கள்..,  அவர்களின் மூத்த மகனின் வாரிசு தான் இந்த ஜெ.கே.

பெருமளவு நிலப்பரப்பில் ஒரே காம்பவுண்டுக்குள் வரிசையாக ஒரே போல வீடு கட்டி குடியிருக்கிறார்கள். ஜெ. கே வின் அப்பா கிருஷ்ணனும் விசாலாட்சியும் பரம்பரை வீடான பெரிய வீட்டில் இருக்க., தாத்தா ., பாட்டியும் அவர்களோடு வசித்து வருகிறார்கள் அருகிலேயே சின்னவர்களான மூவரின் வீடும் அடுத்தடுத்து உள்ளது.,

           பெண்ணை  இன்னொரு பெரும் பணக்காரரான ராமையா செண்பகம் அவர்களின் மூத்த மகன் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்., இவர்கள் குடும்பம்  சற்று பெரிய குடும்பம்தான்..

குடும்பம் தனித்தனியாக இருந்தாலும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அனைவரும் சேர்ந்தே முடிவெடுப்பார்கள்., அனைவருக்கும் தனித்தனி தொழில் உண்டு அரிசி ஆலை., சர்க்கரை ஆலை ., எண்ணை  ஆலை என்று தனித்தனியாக சித்தப்பாக்கள் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாரிசு அவர்களுக்கு துணையாக நிற்க..,  ஜெ. கே யின் தந்தை விவசாயம் செய்து கொண்டிருந்தார். எனவே ஜெ.கே வளர்ந்த பிறகு பிற தொழில்களை தொடங்கி  நடத்த ஆரம்பித்து வெற்றிகண்டு அப்பகுதியில் காலூன்ற தொடங்கியிருந்தான்..

ஒரே காம்பவுண்டுக்குள் இருந்தாலும் தனித்தனியாக இருப்பதற்கு முக்கிய காரணம் வீட்டுப் பெண்களின் ஒற்றுமை எந்த விதத்திலும் குறைந்து விடக்கூடாது என்பது தான்., ஒற்றுமைக்கு அங்கு குறை கிடையாது ஆனாலும் பெண்களின் மனநிலை எப்போதும் ஒன்றுபோல இருக்கும் என்று எண்ணிவிட முடியாது.., அந்த காரணத்திற்காகவே தனிவீடு தனித் தனி தொழில் எல்லாம்..

சீதா சந்திரன் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு., அவர்களின் மகளான திவ்யாவிற்கு தான் ஜெ.கே விற்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள்…

தாத்தா பாட்டியின் பிடிவாதத்தில் தான் இந்த திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருக்கிறது., அவருடைய மகள் பிள்ளை வேறு யார் வீட்டுக்கும் சென்று விடக்கூடாது என்பதும் ஒரு காரணமாக, அவர்களின் பிடிவாதம் இருந்தது.,  ஜாதகப் பொருத்தம் பார்த்து விட்டு வந்திருந்ததால் தேதி குறிப்பது பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருக்க அனைவரும் ஒரே வீட்டில் கூடியிருக்க வீடு களை கட்டியிருந்தது.‌

வீட்டில் இருந்த அனைவரிடமும் இருந்த மகிழ்ச்சி, இருக்க வேண்டிய அவனிடம் இல்லை.  அவனும் எப்போதும் போல் தன் வேலையை பார்க்க கிளம்பி கொண்டிருந்தான். வீட்டில் பெரியவர்கள் திருமணம் பேசி முடிவு எடுத்துவிட்டு அதன் பிறகு தான் அவனிடம் தெரிவித்திருந்தனர். அப்போதுகூட தனக்கும் அவர்கள் சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது போன்ற பார்வையோடு நகர்ந்து விட்டான்..

அவனுக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என்பது, அவனது பார்வையிலே கண்டுகொண்ட அவன் தாய்க்கு மட்டும் மனம் பதறியது. மகனின் வாழ்வு வீணாகி விடக்கூடாது என்று, மற்றபடி அவர் அந்த குடும்பத்தின் மூத்த மருமகளாக யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் தயங்கி நின்றார்.

                ஒரே பெண் சீதா என்பதால் நான்கு அண்ணன் மாறும் அவள் மீது பாசமாக இருப்பார்கள்., அந்த பாசமே இன்று தன் மகனின் நிம்மதிக்கு பங்கம் விளைவிப்பதை அவள் என்னவென்று சொல்ல முடியும் .  இன்றைய நிலையில் அமைதியாக இருந்தார் வாயிருந்தும் ஊமையாக வேறுவழியின்றி அமைதியை தத்தெடுத்து இருந்தார்.

சீதா நல்லவள் தான் நல்ல குணம் தான்., அண்ணன்மார் மேலும் தன் பிறந்த வீட்டின் மேல் பாசம் வைத்திருப்பவள் தான்., ஆனால் அவளின் மகள் குணம் அனைவரும் அறிந்தது  என்றாலும் வீட்டுப் பெரியவர்களின் பிடிவாதம் அவளை வீட்டின் மருமகள் ஆக மாற்ற முடிவு எடுத்திருந்தது…

‘வீட்டில் இருந்தால் யாரிடமும் கோபத்தை காட்டி விடுவோமோ’ என்ற எண்ணத்தில் தான் அங்கிருந்து வேகமாக கிளம்பி வெளியேறினான் ஜெ. கே.,  அவனது மொத்த கோபத்தையும் வாங்கிக் கொண்டது போல அவனுடைய ராயல் என்பீல்ட் கிராமத்து சாலையில் பறந்தது.. அவன் தோட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருந்தான் மனம் மட்டும் ரணமாய் தகித்தது..,  அவனுடைய கோபத்தை கண்டால் பதறும் குடும்பம் தான் ஆனால் திருமண விஷயத்தில் மட்டும் பிடிவாதத்தில் இருந்தனர் தாத்தாவும் பாட்டியும்…

என்ன வாழ்க்கை என்னும் விரக்தியின் விளிம்பில் இருந்தது அவனது மனம்., இப்படி ஒரு திருமண வாழ்க்கை அவசியம் தானா என்று குழம்பித் தவித்த மனதிற்கு குழப்பத்தைப் போக்க அவனுடைய வேலையில் முழு கவனம் செலுத்தி இருந்தான்., எப்போதும் பார்க்கும் வேலையை விட அதிகமாக வேலைகளை அலைந்து திரிந்து பார்த்துவிட்டு வந்தான்…

நிறைய வேலைகள் இருப்பதால் பாதி வேலை இடங்களுக்கு ஒரு நாள் சென்று பார்த்தான் என்றால்., மீதி வேலை இடங்களை மறுநாள் சென்று பார்ப்பான்., ஆனால் அவனுடைய சூழ்நிலை இன்று ஒரே நாளில் அத்தனை இடங்களுக்கும் சென்று விட்டு வந்தான்…

வேண்டுமென்றேதான் அனைத்து இடங்களுக்கும் ஒரே நாளில் சென்றான்.  மனதின் தவிப்பை அடக்கவும்., அவனுடைய கவனத்தை திசை திருப்பவும் தான்.  வீட்டிற்கு வரும்போது இரவு உணவு நேரத்தை நெருங்கி இருந்தது…

“ஏன்யா கார்த்தி இம்புட்டு நேரமா.., இன்னைக்காவது சீக்கிரம் வீட்டுக்கு வந்தா என்ன.,  நல்லது பேசிகிட்டு இருக்கோம்,  நீ பேசாமல் கிளம்பிப் போயிட்டே., இன்னைக்கு ஒரு நாளைக்கு வேற யாருக்காவது கொடுத்து வேலையை பார்க்கச் சொல்ல வேண்டியது தானே.., இன்னைக்கு நீ வீட்ல இருக்க வேண்டாமா”., என்று பாட்டி நீட்டி முழக்கி கேட்டார்..

வாயை திறக்காமல் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்.., “என் வேலையை பார்க்க எனக்கு தெரியும், இதில் யாரும் உள்ளே வந்து சொல்ல வேண்டிய அவசியமில்லை”., என்றுவிட்டு திரும்பி போக போனவனை தாத்தா நிறுத்தினார்.

                  “ கல்யாணம் பேசுறோம்.,  நல்ல விஷயம் மத்தியான சாப்பாட்டுக்கு எல்லாருமா ஒரே வீட்ல இன்னைக்கு கூடியிருந்தது., ஒன்னா சமைச்சு சாப்பிட்டு இருக்கோம்.,  நீ வேலை வேலைனு அழையுற.,  வேலையெல்லாம்  இருக்கட்டும் மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கலாமே.., உங்க அத்தை வீட்ல எல்லாரும் இங்க தான் இருந்தாங்க., நீ வரலைன்னா என்ன யோசிப்பாங்க நீ யோசிக்க வேண்டாமா டே”… என்றார்.

“நான் எதுக்கு இங்க” என்று பட்டும் படாமலும் பேசினான்…

“எடே கார்த்தி என்ன பேசுத, இது உன் கல்யாணம் டே.. நீ தான வே எல்லாத்தையும் முன்னாடி நிக்கணும்”… என்று தாத்தா கேட்டுக்கொண்டிருக்கும் போதே கார்த்தி வாயை திறந்து ஏதோ பதில் சொல்லத் தொடங்கும் முன் அவனின் அம்மா அவசரமாக அழைத்தார்..,

              “போய் டிரஸ் மாத்திட்டு  முதல்ல சாப்பிட வாயா.., பேசிக்கிட்டே நிக்க வேண்டாம்.. சாப்பிட்டதுக்கு அப்புறம் கூட பேசிக்கலாம்” என்று சொல்லி பேச்சை திசை திருப்ப அவனும் வீட்டில் உள்ளவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் அறைக்கு சென்றான்..

“ஏன் இப்படி ஒரு மாதிரி பார்த்துவிட்டு போறான்” என்று ஜெ.கே யின் அப்பா கேட்டார்.

Advertisement