Advertisement

16

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பாசை நீ பேசவேண்டும்
முழு நேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை நாம் போவோம்அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுத்தே….

ஜெ.கே மற்றும் வீட்டினர் ஒவ்வொருவராக வந்து வாங்க  என்று கேட்டனர்.,
“என்ன இந்த நேரத்துல” என்று பாட்டி கேட்டார்.
திவ்யாவின் மாமியார் தான்.,  “இவங்க அம்மா வரட்டும் எல்லாருக்கும் சேர்த்து சொல்றோம்” என்று குரலை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேசும் போதே.,  அனைவருக்குமே ஏதோ பிரச்சனை போலயே என்று நினைக்கத் தொடங்கி இருந்தனர்.,

அப்போது தான் கிச்சனை சுத்தம் செய்து விட்டு கையை கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்த சரண்யா அவர்களை பார்த்து விட்டு வாங்க என்று கேட்டாள்.

அந்த வீட்டின் பெண்ணாக வாங்க என்று கேட்க திவ்யா மூஞ்சி திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். விசாலாட்சி தான் “வீட்டுக்கு வந்தவர்களுக்கு தண்ணி கொடுமா” என்று சொன்னார்.

அவள் போய் தண்ணி எடுத்து வந்து கொடுக்க., விசாலாட்சி வாங்கிக் கொடுத்தார். பின்பு காபி டீ ஏதாவது போடவா என்று கேட்க.,  மற்றவர்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி சொல்லிக்கொண்டிருந்தனர்.

அதேநேரம் சீதாவும் வந்துவிட.,  திவ்யாவின் அப்பாவும் அண்ணனும் பின்னாடி மெதுவாக வந்தனர்.  “இந்த நேரத்தில் அதுவும் இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க என்ன விஷயம்” என்று  திவ்யாவின் மாமியாரிடம் கேட்டவர்.,

திவ்யாவைப் பார்த்து “என்னடி வம்பு பண்ணி வச்சிட்டு வந்து இருக்க”.,  என்று கேட்டார்.

“பரவாயில்லையே.,  உங்க பொண்ண நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க., ஏதோ வம்பு பண்ணிட்டு தான் வந்திருப்பா ன்னு”., என்று திவ்யாவின் மாமியார் மறுபடியும் குரலை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேசினார்.

“என்ன விஷயம் சொல்லுங்க., நீங்க என்ன விஷயம் சொன்னா தானே.,  எங்களுக்கு தெரியும்”., என்று சீதா பதட்டத்தோடு கேட்டார்…

“எனத்தங்க சொல்ல சொல்றீங்க.., எப்ப பாத்தாலும், எங்க வீட்ல வசதி  இப்படி இருக்கு., உங்க வீட்ல ஏன்  இப்படி இருக்கு.,   நான் எதுக்கு இந்த வேலையை செய்யனும்., எங்க வீட்ல நான் ஒரு வேலை செஞ்சது கிடையாதாக்கும்., அப்படியா ஒரு பொம்பள புள்ள சொல்லிவிட்டு இருப்பா..,  ஒரு வீட்டுல போய் வாழனும்னா., அந்த வீட்டுக்கு தகுந்தாற் போல விட்டுக்கொடுத்து போக கத்துக்கணும்., அது போக  தான் ன்ற எண்ணத்தை வளர்த்து வச்சிருக்கீங்க.., அது மட்டும் இல்ல., நான்  எங்க மாமா பையனை கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்துருக்கும்., உங்க மகன் கட்ட போய் தான் என் வாழ்க்கை இப்படி இருக்கு.., கல்யாணம் முடிஞ்சு 10 நாள் தான் ஆகுதா…,  படிக்கும் போதே கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்லை…,  அப்புறம் என்னத்த மறுபடி மறுபடி குறை சொல்லிகிட்டே இருக்கா., அதை கேட்டுட்டு போலாம்னு வந்தோம்., ஒன்னு ஒழுங்கா வந்து வாழத் தெரிஞ்சா., வரச்சொல்லுங்க.,   எங்க குடும்பத்த பத்தி தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணி இருப்பா.., எங்க வீட்டு வசதி வாய்ப்பை தெரிஞ்சு  தானே லவ் பண்ணி இருப்பா., அப்போ  அவன் சம்பாத்தியத்தில் அட்ஜஸ்ட் பண்ணி வாழ தெரியாதா.,  என்று கேட்டு விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார்”.., அங்கு  சீதாவிற்கு தான் தலைகுனிவாக  இருந்தது…

நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு..,  என்னமோ காலேஜ்ல படிக்கும் போதே பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி பண்ணுவான்.,  இப்ப என்னைய கண்டுக்கவே மாட்டிக்கான்., அந்த மாதிரி இருக்க மாட்டானா., எனக்கு எல்லா வேலையும் செய்ய முடியாது., என்றாள்.

கல்யாணத்திற்கு முன்னாடி இருக்கிற மாதிரி யா கல்யாணத்திற்கு அப்புறம் இருப்பாங்க.., யாரை கட்டிக்கிட்டாலும் அப்படி தான் வாழ்க்கை போகும்., என்றார் சீதா.,

சம்மந்தியம்மா நல்லா கேளுங்க., அங்கே ஒரு வேலையும் கிடையாது.,  வேலைக்கு ஆள் இருக்கு., எந்த வேலை உங்க மக செஞ்சா னு கேளுங்க., புருஷனுக்கு சாப்பாடு எடுத்து போட்டு  கூட கொடுக்க மாட்டிக்கா., வீட்டுக்கு வந்தவுடன் காபி ., டீ எதுவும் வேணுமா ன்னு கேட்டு கொடு னா…. அவன் ட்ட கேட்க மாட்டிக்கா…,  எனக்கு இந்த வீடு பிடிக்கல., அது சரியில்லை., இது சரியில்லை ன்னு சொல்லுறா…,  என்ன நினைச்சுட்டு இருக்கா ங்க..,  எப்ப பாத்தாலும் எங்க மாமா வீடு அப்படி., எங்க மாமா வீடு இப்படி ன்னு புராணம் வேற., மாமா வீட்டில் மருமகளா போயிருந்தா, என் வாழ்க்கை அப்படி இருந்திருக்கும்., ன்னு பேச்சு வேற அதுதான் மாமா வீட்டுக்கு நேரா கூட்டிட்டு வந்து இருக்கேன்”., என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த ஜெ.கே யின் அப்பா முதல் முறையாக பேசத்தொடங்கினார்.

“இங்க பாருமா திவ்யா நீ பேசுறது தப்பு., நீ உரிமையா வரப்போக இருந்தனா காரணம்.,  நீ என் கூட பிறந்தவளோட பிள்ளை ங்கிற அப்படி ங்கிற ஒரே காரணத்துக்காக தான்.,  எதுக்காக நீ எங்க வீட்டை  கம்பேர் பண்ணி பேசுற.., நீ இன்னொரு வீட்டுக்கு வாழப் போன பிறகு அது தான் உன் வீடு.,  அடுத்த வீடு என்னைக்கும் உன் புருஷன் வீட்ட விட உனக்கு பெருசா தெரியக்கூடாது.,    அப்படியே பேசனும் னா., உரிமையா நீ  உங்க  அப்பா வீட்டை தான் சொல்லனும்.,  என் வீட்டை சொல்றது உனக்கு  உரிமை இல்லை..,  நீ  நல்ல புள்ளையா வாழக் கற்றுக்கொள்.., அதைவிட்டு தேவையில்லாமல் பேசாத..,  நான் பீல் பண்றேன்  உன்னை வளர்த்த விதம் சரியில்லை…,   என்று சொன்னார்.

அவள் காரணமே இல்லாமல் பேச்சில் சரண்யாவை இழுக்கத் தொடங்கினாள். “ஏன் உங்க வீட்டுக்கு வந்திருக்கும் மருமக அவ வீட்டு வசதியை பத்தி பேசினது இல்லையோ.., அவன் வீட்டை பத்தி அவளுக்கு  இருக்கும் சொத்தை பற்றியும் பேசலையாக்கும்”., என்றாள்.

அதற்குள் அங்கு சென்று பார்த்து விட்டு வந்த கடைசி சித்தி தான்., “வாயை மூடிட்டு போ., பார்த்து தேவை இல்லாம எங்க வீட்டுக்குள்ள வந்து பிரச்சினை பண்ணாத.,  கடவுளா  பார்த்து  எங்களுக்கு நல்ல மருமகளை கொடுத்திருக்கான் னு.,  சந்தோஷமா  இருக்கோம்., நீ வளர்ந்தத  விட..,   அவள வளர்ந்த விதம்., ரொம்ப நல்லாவே வளர்த்து இருக்காங்க.,  எப்பவும் பணம் , காசு ,சொத்து சுகங்களைப் பற்றி மட்டும் தான் யோசிக்க..,  அவ இதுவரைக்கும் இந்த மாதிரி யோசிச்சிறக்க கூட மாட்டா…, அவ மனுஷங்களை தான் பார்ப்பா…,  எங்க வீட்டுக்கு வந்த பொண்ண பத்தி பேசுறதுக்கு கூட உனக்கு தகுதி இல்லை திவ்யா..,  ஆனால் அண்ணி  எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்..,  பொம்பள புள்ளைய அடிச்சு வளர்க்கணும்.,  சொல்லிக் கொடுத்து வளர்க்கனும்., பொம்பள பிள்ளைங்க ன்னு எல்லாம் கிடையாது., எந்த பிள்ளையா இருந்தாலும் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கணும்.., ஆம்பளை புள்ளையா இருந்தாலும்.,  பொம்பள புள்ளையா இருந்தாலும்., வீட்டு சூழ்நிலை தெரியணும்,  பெரிய மகாராணி நினைப்புல எல்லாம் பேசக்கூடாது., எங்க வீட்டு மருமகளே பத்தியும் சரி.,  எங்க வீட்டு பற்றியும் சரி பேசக்கூடாது…,  உங்க பொண்ணுக்கு நல்ல புத்திமதி சொல்லி அனுப்பி வையுங்கள்”..,  என்று சொல்லி விட்டு அவர் பேச்சை நிறுத்தினார்…

திவ்யாவிற்கு கோபம் கோபமாக வந்தாலும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை.., தான் செய்த தவறு இன்று எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைத்து வருந்தி கொண்டாலும்.,  அவள் பேச்சை மட்டும் குறைக்காமல் சின்ன மாமாவின் பையனை பார்த்து “எல்லாம் உன்னால தாண்டா.., நீ மட்டும் வாய் திறக்காமல் இருந்திருந்தால்”., என்று சொல்லத் தொடங்கவும்.,

அவளுக்கு தாலி கட்டியவன் “அறிவே இல்லாம அசிங்கமா பேசாத., எத்தனை தடவை இதே மாதிரி பேசுவ., ஏற்கனவே  கல்யாணம் பண்ணியாச்சி, அத மறைச்சி நீ அடுத்த பேச்சு வார்த்தை நடக்கும் போது அமைதியா இருந்ததையே நான் அசிங்கமா தான் நினைக்கிறேன்” என்று சொல்லி கத்தினான்.

சீதா தான் “திவ்யா வ இரண்டு நாள் கழித்து  கூட்டிட்டு போறீங்களா” என்று கேட்டார்.

அவர்களும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினர்.  சீதா திவ்யாவை கையை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு சென்றார்.  அதன்பிறகு என்ன புத்தி சொன்னாரோ.,  இரண்டு நாள் கழித்து அடங்கிய பெட்டிப்பாம்பாக கணவன் வீட்டுக்கு கிளம்பி சென்றாள்.  அதை வந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது “என்ன சொல்லி அனுப்பின” என்று கேட்டதற்கு.,

“நல்ல நாலு போடு போட்டு., இத்தனை நாள் சொல்லாத அறிவுரை எல்லாம் இப்ப சொல்லி அனுப்பி இருக்கேன்”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

சரண்யா இங்கு நன்றாக பொருந்திப் போக தொடங்கியிருந்தாள்.. அவர்களுக்கான வாழ்க்கை அப்படியே தான் போய்க் கொண்டிருந்தது.,

அந்த வருடத்திற்கான கோயில் திருவிழாவிற்கு முரளி மங்கையோடு சேர்ந்து திண்டுக்கல்லிலிருந்து தாத்தா பாட்டியுமே வந்திருந்தனர்., எப்போதும் ஊரின் கோயிலில் மரியாதை ஜெ.கே ன் குடும்பத்திற்கு தான் வரும்., இந்த முறை அவனுக்கு திருமணமாகி விட்டது என்ற காரணத்தினால்., அந்த முதல் மரியாதை ஜெ.கே க்கும் சரண்யாவிற்கும் கொடுக்க சொல்லி பழனிவேல் தாத்தா சொல்லிவிட்டார்.

அக் குடும்பத்தின் வாரிசாக பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.  என்ற நிலையில் காலையிலேயே இருவரும் கிளம்பி கொண்டிருக்கும் போது ஜெ. கே தான் அவனுக்கு பிடித்த புடவை எடுத்துக் கொடுத்து “இதை கட்டிக் கொண்டு வா” என்று சொன்னான். அதுவரை உடை விஷயத்தில் இதை போடு என்று ஒரு நாளும் சொன்னதில்லை என்பதால் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“ஏன்” என்று அவன் கேட்க “ஒன்னும் இல்ல., சும்மா பார்த்தேன்,  இது வரைக்கும் சொன்னது இல்லையே.,  திடீர்னு சொல்றீங்களே பார்த்தேன்” என்று சொன்னாள்.

“இந்த புடவை ல ரொம்ப அழகா இருப்ப., அதுதான் இதையே கட்டு” என்று சொல்லி விட்டு அவன் கிளம்பி “நான் முன்னாடி அப்பாவோட போறேன்” என்றவன் “நீ அம்மா கூட சீக்கிரம் வந்துரு” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டி கழுத்தில் தாலி செயினைத்  தவிர.,  ஒரு மாங்காய் மாலை., நெக்லஸ்., அதற்கேற்ப ஜிமிக்கி., என்று போட்டு கை நிறைய வளையலோடு.., ஊரில் உள்ள பெரிய குடும்பத்து பெண்ணாக தலை நிறைய பூவோடும் அழகாக கிளம்பி கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்., அவளைப் பார்க்கும் போது மங்கைக்கும்., மங்கையின் பெற்றவர்களுக்கும்., முரளிக்கும்.,  முரளியை பெற்றவர்களுக்கும் , அத்தனை பெருமையாக இருந்தது. இத்தனை பாந்தமாக ஒரு குடும்பத்தோடு பொருந்திப் போகும்  பெண்ணை வளர்த்ததை அவர்கள் பெருமையாகவே உணர்ந்தனர்….

அதன் பிறகு கோவிலில்  நடந்த ஒவ்வொரு பூஜையிலும் சரி., ஒவ்வொரு விஷயத்திலும் சரி., ஜெ. கே ன் அருகில் அவன் மனைவியாக நின்று அத்தனையையும் பொறுமையாக  பங்கேற்றாள்.   விசாலாட்சி கடவுளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு.,  கைகூப்பி வணங்கி நின்றார்.,  தன் மகனின் மனதிற்கு ஏற்றார் போல குடும்பத்தின் பெருமையை காப்பது போல ஒரு மருமகள் கிடைத்தது., தன் கும்பிடும் தெய்வம் தன்னை கைவிடவில்லை என்று வணங்கிக் கொண்டார்.

இரண்டு நாள் திருவிழாவும் அமோகமாக நடந்தது. அதன் பிறகு கறி விருந்து போட்டு மிக விமர்சையாக பெரிய வீட்டில் விருந்து தடபுடலாக நடத்தி காட்டினர் ஜெ. கே யின் பெற்றவர்கள்.,

ஏனெனில் மகனின் திருமணத்திற்கு பிறகு நடக்கும் முதல் விசேஷம் சொந்த பந்தங்கள் நிறைந்து இருப்பதால் அனைத்தையும் எடுத்து நடத்தி நிறுத்திக் கொண்டார்கள்., திருமணம் முடிந்து இந்த மூன்று மாதத்தில்., இருவருக்குள்ளும் நல்ல புரிதலும் அன்பும் சொல்லாமல் சொல்லி வைத்த காதலும் வளர்ந்து பெருகி நின்றது.

காதலை சொல்லிய பிறகு கூட இருவரும் காதலை சொல்லாத போது இருந்தது போலவே இருந்து கொண்டார்கள்.,  இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனம் விட்டு பேசிக்கொண்டார்கள்., தொழிலும் அதற்கேற்றார்போல் சிறக்க தொடங்கியது..

கறி விருந்து முடிந்த மறுநாள் அவளிடம் “தோட்டத்து வீட்டில் போய் ஒரு நாலு நாள் தங்கிட்டு வருவோமா” என்று கேட்டான்.

“ம்ம்ம் போலாமே”., என்றாள்.

ஏனெனில் இவளுக்கு அங்கு உள்ள அந்த தோட்டம் மிகவும் பிடிக்கும். தோட்டத்தின் நடுப்பகுதியில் வீடு.,  வீட்டைச்சுற்றி பூந்தோட்டமும்., காய்கறி தோட்டமும் இருக்க சற்றுத்தள்ளி தென்னந்தோப்பு, மாந்தோப்பு, என்று ஒரு புறம் இருக்க., மற்றொரு புறம் கொஞ்சம் தள்ளி சென்றால் நிறைய பலவிதமான., பழவகை மரங்கள் தனித்தனியாக பிரித்து நடப்பட்டிருக்கும்., பெரிய அளவில் உள்ள தோட்டம்., அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு என்று தனி வீடு கட்டி கொடுத்திருந்தான்.

இவர்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் போனால்.,  அங்கு வேலை பார்ப்பவர்களின் குடும்பமே இவர்களுக்கு சமையலும் செய்து கொடுத்தார்கள்., அதனால் போகலாமா என்று கேட்ட உடனே.,  அவளும் சரி என்று சம்மதித்தாள்.,

விசாலாட்சி இடம் மறுநாள் காலையில் சொல்ல “போயிட்டு வாப்பா.., இதுக்கு என்கிட்டே ஏன் கேட்கிற” என்று சொன்னார்.

Advertisement