Advertisement

13

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்துடும் மழைச்சாரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூளும் தீ

அவர்கள்  திண்டுக்கல் கிளம்பும் நாள் அன்று பிள்ளைகள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்தோடும்.,  கூட்டில் இருந்து பறந்து செல்ல துடிக்கும் சிறு பறவைகளாக குதித்துக் கொண்டு கிளம்பினர். காலையிலேயே இங்கிருந்து கிளம்பி விட்டனர்., திண்டுக்கல் சென்று சேரும் போது மதியத்திற்கு மேல் தாண்டியிருந்தது.,  மற்றவர்களைப் போல நிறுத்தி நிறுத்தி ஓட்டிக் கொண்டு வராததால் காலை உணவுக்காக ஒரு இடத்திலும்., பிறகு இடையில் ஒரு காபிக்காக மட்டும் நிறுத்தி., மதிய உணவுக்காக திண்டுக்கல் வந்து சேரும் போது மதியம் இரண்டு மணி ஆகியிருந்தது….

பாட்டி வீட்டில் இருந்து சாப்பாடு தயாராக இருந்தது., அனைவரும் வரவும் அன்று அசைவ உணவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது., தடபுடலான விருந்து சாப்பாடு அங்கு தயாராக இருக்க வந்ததும் அனைவரும் முகம் கால் கை கழுவி கொண்டு சாப்பிட அமர்ந்தனர். வேன் கொண்டு வந்த டிரைவர் தெரிந்தவர் என்பதால் அவருக்கும் ஒரு அறை ஏற்பாடு செய்துவிட்டு., அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த உடன் அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள்., அவர்கள் அம்மா வழி சொந்தம் என பெரிய கூட்டமே கிளம்பி வந்து அவளைப் பார்த்துவிட்டு., ஜெ.கே இடமும் பேசிவிட்டு மாலை வரை இருந்துவிட்டு சென்றனர்.  ஆனால் சற்று நேரம் கூட அவளுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்காத அளவிற்கு யாராவது வந்து கொண்டே இருந்தார்கள்…

அங்கிருந்த அனைவரையும் நல்லபடியாக கவனித்துக்கொள்வது அவளின் பொறுப்பாக இருந்ததால்., அனைவரையும் நல்லபடியாக கவனித்துப்  கொண்டாள்.,  அன்று மாலை அனைவரும் அங்கு உள்ள  வீட்டின் பின்பக்கமாக சென்றால் இருக்கும் மாந்தோப்பு.,  தென்னந்தோப்பு., என்று சுற்றிவிட்டு நேரத்தை போக்கிக் கொண்டு வந்தார்கள்.

மறுநாள் வெளியே எங்காவது சென்று விட்டு வரலாம்., அல்லது ரெஸ்ட் எடுங்கள் அதற்கு மறுநாள் கொடைக்கானல் சென்றால் உங்களுக்கு சுற்றிபார்க்க நிறைய இருக்கும்., மூன்று நாளும் சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் அனைவரும் மங்கையின் அம்மா வழி சொந்தங்கள் அனைவரும் வருவதால் அங்கு வைத்து விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. முரளியின் பெற்றவர்களும் அங்கு தான் இருந்தார்கள்., எனவே விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது., மறுநாள் விருந்திற்கு உறவினர் அனைவரும் வர., அங்கு திருமண வீட்டு  விருந்து போலவே பெரிய விருந்து ஏற்பாடு செய்ய., அங்கு உள்ள சிறந்த உணவகத்தில்  பிரியாணி மற்றும் சில சிறந்த உணவு வகைகளை ஆர்டர் செய்து வர வைக்கப்பட்டிருந்தது., வீட்டில் செய்வது எப்போதும் செய்வது தான்., ஆனால் அவ்வூரிலுள்ள பிரியாணி மிகவும் பிரபலம் என்பதால் அதை ஆர்டர் செய்து வர வைத்திருந்தார் மங்கையின் அப்பா…

நன்றாக உண்டு விட்டு., வீட்டினர் உண்ட மயக்கத்தில் அனைவரும் உறங்கி எழலாம் அவரவர்க்கு ஒதுக்கிய அறையில் ஓய்வெடுக்க அனுப்பி விட்டாள். வீட்டிற்கு வந்த அம்மா வழி உறவில் வந்தவர்களை  வைத்து விட்டு போய் தூங்க முடியாது.,  என்ற காரணத்தினால் மட்டுமல்லாமல்.,  அவள் இங்கிருந்து சென்றாள் திருப்பி எப்பொழுது இங்கு வருவாள் என்று தெரியாத காரணத்தினாலும் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்தாள்.

ஜெ.கே வை ஓய்வெடுக்க சொல்லி விட்டு சரண்யா பேசிக் கொண்டு இருந்தாள்.

மாலை உறக்கம் கலைந்து அனைவரும் எழுந்து வரும் போது இவள் மட்டும் உறங்காமல் இருந்தாலும்., ஆனால் எங்கேயோ கிளம்பியது போல பிரஷ்ஷாக தலை நிறைய பூவோடும் அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்கு யாராவது வருவார்கள் என்று பாட்டிகள் இருவரும் சேர்ந்து அவளை பாடாய்படுத்தி புது பெண்ணாட்டம் அமர வைத்திருந்தனர்., அவளும் சிரித்துக்கொண்டே பாட்டிகளோடு கதை பேசிக் கொண்டிருக்கும் போது தான்.,  ஒவ்வொருவராக எழுந்து வர தொடங்கினார்கள். எனவே அதன் பிறகு அவள்  கிச்சனுக்கு சென்று அனைவருக்கும் காபி கலந்து தரச்சொல்லி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

சித்தப்பா  கூட சகஜமாக பேசத் தொடங்கினார்.  அவளிடம் பேசிய பிறகு சித்தப்பா., சித்தியிடம்  சொல்லிக் கொண்டு இருந்தார்.,   “நல்ல பொண்ணா தான் இருக்கு., நம்ம கார்த்தி கொடுத்து வச்சவன்” என்று பேசிக் கொண்டிருந்தார்…

அதற்கு சித்தியும் “நாங்களும் அது தான்  அன்னைக்கே பேசிகிட்டு இருந்தோம்.,  நல்ல வேளை,  நல்ல பொண்ணா நம்ம வீட்டுக்கு வந்து விட்டா”.,  என்று சொல்லி அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்…

அனைவரும் மாலை சிற்றுண்டி முடித்தபிறகு அமர்ந்து சீட்டு விளையாடுவது.,  பல்லாங்குழி விளையாடுவது., செஸ், கேரம் என்று ஆளாளுக்கு விளையாட்டில் பொழுதை கழிக்க தொடங்கியிருந்தனர். வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று தாத்தா சொல்லிவிட்டார்., மறுநாள் காலையில் கொடைக்கானல் கிளம்ப வேண்டும் என்பதற்காக., எனவே இரவு உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் சீக்கிரம் போய் படுங்க., காலையில் அப்பொழுது தான் எழுந்து கிளம்ப முடியும் என்று சொல்லி இருந்ததால்.,  அனைவரும் இரவு உணவை சற்று சீக்கிரமாகவே முடித்துவிட்டு படுக்க சென்றனர். கார்த்தியோடு சற்று கூடுதலாக பேசத் தொடங்கியிருந்தாள் சரண்யா..

“சாயா  ரெஸ்ட் எடுக்கணும் னா., தூங்கு இல்லனா., கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்று சொன்னான்.

அங்கு அவளுக்கான அறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த கார்த்தியை எதிர்ப்பக்கமாக பார்த்து அமர்ந்தாள்., “சொல்லுங்க பேசனும் னு சொன்னீங்க” என்று கேட்டதோடு,  “மனசு விட்டு பேசுங்க” என்று சொன்னாள்.

” கண்டிப்பா பேசலாம்” என்று சொல்லி தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை அன்று தொடங்கி வைத்தனர்., “ஏன் சாயா ஏழு வருஷமா வரல., என்று அவன் கேட்டான்.

நிமிர்ந்து அவனைப் பார்க்கும் போது மெதுவாக அவளுக்கு கண்கலங்க தொடங்கியது. “உண்மைய சொல்லனும்னா,  எனக்கு எங்க அம்மா வீட்டுல அம்மா மட்டும் தான்., வேற அம்மா கூட பிறந்தவங்க யாரும் கிடையாது., இந்த மாதிரி வருவாங்க., இன்னைக்கு வந்தாங்க இல்ல.,  அந்த மாதிரி வருவாங்க போவாங்க.,  ஆனா ஃபுல்லன் ஃபுல் இருக்க மாட்டாங்க., எனக்கு அதனால அங்க வந்தா ரொம்ப பிடிக்கும்., உண்மைய சொன்னா உங்க வீடு ரொம்ப பிடிக்கும்..,  பெரியப்பா வீடும்.,  பாட்டி வீடும்., பக்கத்துல பக்கத்துல இருந்தாலும்., நான் போனா பெரியம்மா நல்லா பேசுவாங்க.,அண்ணன் நல்ல பேசுவாங்க., அப்புறம் அந்த பெரியம்மா வீடு என்று சொல்லி அசோக்., கதிர் அம்மாவை சொன்னாள்.  அங்கேயும் அண்ணன் ரெண்டு பேரும் நல்லா பேசுவாங்க.,சோ எனக்கு ஊருக்கு வருவது னா.,  அவ்வளவு பிடிக்கும்.,எப்பவும் நான் தனியாவே இருக்கிறதால எனக்கு இந்த மாதிரி எல்லாரும் சூழ இருக்கிறது, ரொம்ப பிடிக்கும், அதனால தான் நான் வருஷம் தவறாம அம்மா அப்பா கூட ஊருக்கு வந்துடுவேன்., அப்புறம் நான் வளர்ந்த விதம் அப்படி னா.,  எங்க பாட்டியும் ஸ்ட்ரிக்ட்.,  அம்மாவும் ஸ்ட்ரிக்ட்., நான் பிப்த் வரைக்கும் சிங்கப்பூரில் தான்.,   அப்பா ஒர்க்கிங்., அம்மா வீட்டில் தான் இருக்காங்க.,   அம்மா ஸ்கூலுக்கு அனுப்பும் போது எல்லாமே கொஞ்சம் பயந்து பயந்து தான் அனுப்புவாங்க., அப்பா எப்பவுமே சொல்லி அனுப்புவாங்க., யாரையும் டச் பண்ணி பேச கூடாது.,  அது வீட்டில எழுதப்படாத சட்டம் அப்படிங்கிற மாதிரி., சோ அதனால நான் யாரையும் டச் பண்ணி பேசினது கிடையாது., யாரும் என்னை டச் பண்ணி பேசினது கிடையாது., எனக்கு அங்கே வரும் போதெல்லாம் உங்க வீட்ல எல்லாரும் சேர்ந்து விளையாடுவது.,  எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பிடிக்கும்.,  சோ., அதைய ரொம்ப எதிர்பார்ப்போட வருவேன்.., அங்கு வந்தா நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க., ரிலேஷன் இருக்காங்க., எல்லார்ட்டையும் பேசலாம்.,  பழகலாம் அப்படின்னு.,  திவ்யாவை பொருத்த வரைக்கும்.,  அவ என்ன சொன்னாலும் நான் காதுல வாங்காம தான் இருந்தேன்.  ஜஸ்ட் எனக்கு நல்ல நியாபகம் இருக்கு., நான் நைன்த்  படிக்கும் போது அப்ப தான் நீங்க என்னைய சாயா கூப்பிட்டீங்க., அந்த சமயத்தில் நான் வந்திருக்கும் போது அத்தையும்,  பெரியம்மாவும்., வந்து உங்கள அத்தான் கூப்பிடனும் சொன்னாங்க”.,

“உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா”., என்று சிரித்தபடி கேட்டான்.

“ஞாபகம் இருக்கு கூப்பிட சொன்னாங்க., ஆனால்  நான்  தான் அத்தான் கூப்பிடனும் ஆ அப்படின்னு அத்தை கிட்ட பேசிட்டு இருந்ததற்கு., திவ்யா சண்டை ஆரம்பித்து விட்டாள்., நீங்க அப்போ வீட்டில் தான் இருந்தீங்க னு  நினைக்கிறன்., எனக்கு என்னவோ போல இருந்துச்சு., எப்படி கூப்பிடறது ன்னு., ஏன்னா அந்த மாதிரி கூப்பிடறது  சினிமால தான் பார்த்திருக்கேன்., அதனால் சோ கொஞ்சம் ஸையா பீல் பண்ணேன்”., என்றாள்.

“சினிமா ல கூப்பிடுற மாடூலேஷன் ஞாபகம் வந்திருக்கும்” என்று சிரித்த படி
அவன் சொன்னான்.

” அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அவளும் சிரித்தபடி பதில் சொல்லும்போது அவள் கண்ணும் சேர்ந்து சிரிப்பதை அப்போது தான் கண்டான்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்று அவன் கேட்டான்.

“அப்புறம் அவ தான் கூப்பிடக் கூடாது ன்னு சொல்லிட்டா., பேர் சொல்லியே கூப்பிடு.,  அப்படி முறை சொல்லி எல்லாம் கூப்பிட கூடாது அப்படின்னு சொன்னா.,     என்ன பெயர் சொல்லி கூப்பிட போறேன் னு நீங்க கூட அதுக்கப்புறம் கேட்டீங்க.,  அத்தை கூட சும்மா கார்த்தி னே  கூப்பிடு  அப்படின்னு சொல்லிட்டு போனாங்க., ஆனா எனக்கு ஒரே யோசனை உங்களை  எல்லாரும் கார்த்தி ங்காங்க.,  நானும் அப்படி கூப்பிட்டனுமா, அப்படின்னு தோணுச்சு., ஏன் அப்படி தோணினது னு.,  எனக்கு தெரியல., சோ நான் வீட்டுக்கு போயிட்டு., அன்னைக்கு புல்லா உட்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன்.,  உங்க நேம் அ பேப்பர்ல அன்னைக்கு எழுதி எழுதி பாத்துட்டே இருந்தேன்., தமிழ்ல இங்கிலீஷ்ல அப்படின்னு மாத்தி மாத்தி எழுதி பார்த்தேன்.,  எனக்கு என்னவோ அந்த ஜெ.கே  ங்கிற பேரு ரொம்ப புடிச்சிருந்துச்சு., அதனால தான் அப்படி கூப்பிட்டேன். அத்தை முன்னாடி வச்சு சொன்னேன்., அத்தை கூட ஒன்னும் சொல்லல., நல்லா தான் இருக்கு கூப்பிடு அப்படினுட்டு போயிட்டாங்க., அதுக்கும் அவ மூஞ்சி திருப்பிட்டு போனா., அப்பல்லாம் எனக்கு தோணல.,  நீங்களும் சாயா னு கூப்பிட்டீங்க.,  எனக்கு அது ஒன்னும் தோணல ஜஸ்ட் அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டேன்., டென்த் படிக்கும் போது அப்ப ரொம்ப டைட் ஒர்க்., படிப்பு பிஸி., ஒரு மாதிரி  டென்ஷன் ஆனாலும் இங்க வந்த இந்த ஒரு மாசம் ரொம்ப ஹாப்பியா தான் பீல் பண்ணேன்.., அந்த டைம்ல நீங்க என்கிட்ட நிறைய சொன்னீங்க.,  நைன்த் படிக்கும் போது சொன்னீங்க நினைக்கிறேன்., தோட்டம் விவசாயம் இந்த மாதிரி எல்லாம் சொல்லிட்டு இருந்தீங்க.,   எனக்கு தோட்டத்தில் இருப்பது ரொம்ப பிடிக்கும்., அப்படிங்கறதால  நா அங்க தான் இருப்பேன்., நீங்க உங்க ஃபிரண்ட்சோட விளையாட்டு முடிச்சு வரும் போதெல்லாம் என்ட்ட பேசிட்டு போவீங்க.,  நான் உங்ககிட்ட பேசும்போது எனக்கு என்னவோ அடுத்தவங்க கிட்ட பேசுற ஒரு பீல் இருக்காது.., அதனால உங்ககிட்ட பேசும் போது எனக்கு என்னவோ ஒன்னும் பெருசா வேற வித்தியாசமெல்லாம் தோனுறதில்லை., நான் உன்கிட்ட நல்ல நார்மலா தான் பேசினேன்.,  அது அவளுக்கு பிடிக்கல போல., அப்ப  அந்த முறை வந்திருக்கும் போது அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருந்தாங்க.,  ரொம்ப பேசிட்டா” என்று அமைதியாக தலையை குனிந்து அமரவும்., அவள் மனம் திறந்து பேச வேண்டும் என்பதற்காக தான்., அவள் பேச்சை எல்லாம் ஆரம்பித்து விட்டு விட்டு அவன் காத்திருந்தான்.

Advertisement