Advertisement

“ஹேய்…! என்னமா இது… எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இவ்ளோ தூரம் வரணும்னு ஆசையா, நான் சொன்னா நீ வருத்தப்படுவேன்னு தான் சொல்லல… உன்னைப் பார்க்காம பத்து நாள் எல்லாம் என்னாலயும் இருக்க முடியாது… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்பிடணும்னு தான் இந்த நேரத்துல கூட ஓடிட்டு இருக்கேன்… மேக்ஸிமம் ஒரு வாரம், அதுக்குள்ள எப்படியாச்சும் முடிச்சிட்டு வந்திடறேன், அதுவரை கொஞ்சம் பொறுத்துக்க மா…” என்றவனின் குரலில் அவளது தவிப்புக்கு சற்றும் குறைவில்லை.

“எனக்கு உங்களைப் பார்க்கணும், வீடியோ கால் வாங்க…”

“ரஞ்சுமா, இப்பதான் ரூமுக்கு வந்து டிரஸ் எல்லாம் அவிழ்த்திட்டு டிரவுசரோட நிக்கறேன், ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாது… பத்தே நிமிஷம், குளிச்சிட்டு வீடியோ கால் பண்ணறேன்…” சொன்னவன் அவளது பதிலை எதிர்பாராமல் துண்டித்து விட்டு அவசரமாய் குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வர மனம் சற்று லேசானது. சுவிட்சைத் தேய்த்து அறையை வெளிச்சத்தில் நிறைத்தவள் கண்ணாடி முன் நின்றாள். கணவன் வீடியோகாலில் வரும்போது தான் அழகாய்த் தெரிய வேண்டுமே… என நினைத்தவள் வேகமாய் சென்று முகம் கழுவினாள். தனது உடையைப் பார்த்தாள்.

அணிந்திருந்த வெள்ளையில் கறுப்புப் புள்ளியிட்ட மெல்லிய இரவு உடைக்குள் அவளது உடல் வளைவுகள் அழகாய் தெரிய கூந்தலை அவிழ்த்து முதுகில் படர விட்டாள். கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் தொட்டுக் கொண்டு லேசாய் முடியை சீவி ஒதுக்கி கண்மையை விரலில் தொட்டு மையிட விழிகளின் ஜ்வலிப்பில் அவளையே அவளுக்கு ரசிக்கத் தோன்றியது.

“இப்படி இருந்தால் தானே பிரபாவுக்குப் பிடிக்கும்…” என நினைக்கும்போதே மனது இனித்தது. ரஞ்சனா எப்போதும் தோற்றத்தை அழகாக்க பெரிதாய் மெனக்கிட்டதில்லை. ஆனால் பிரபஞ்சனுக்குப் பிடித்ததை செய்யத் தயங்கியதும் இல்லை… தனக்குப் பிடிக்காத விஷயமே ஆனாலும் தனது இணைக்காய் செய்வது தானே அன்பு, காதல்…!

உத்தியோகமும் அப்படி ஆகவே வெறுமனே நெற்றியில் ஒரு குட்டிப் பொட்டை மட்டுமே தொட்டுக் கொள்வாள். வைஷாலியின் கல்யாணத்துக்கு புறப்படும்போது இப்படி எல்லாம் செய்தால் பிடிக்கும் என்று கணவன் சொல்லவே அவனுக்காய் தன்னை அலங்கரித்துக் கொண்டவளுக்கு உண்மையிலயே தான் இத்தனை அழகா என பிரமிப்பானது.

தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு கணவனின் சில்மிஷங்கள் நினைவில் வர முகம் சிவந்தாள். அலைபேசி ஒலிக்கவே ஓடிச்சென்று எடுத்தாள்.

வீடியோ காலை ஆன் செய்ய திரையில் புத்துணர்வோடு பளிச்சிட்டது கணவனின் முகம். அமைதியாய் ஒருவரை ஒருவர் புன்னகையோடு சில நொடிகள் பார்த்திருந்தனர்.

அவனது கனிவும், காதலும் நிறைந்த விழிகள் அவள் முகத்தை நேசத்துடன் வருடி மௌனமாய் ஓராயிரம் விஷயம் சொல்ல, பதிலுக்கு அவனைப் பார்த்தவள் விழிகளும் அவனைக் காதலுடன் தழுவின.

“ரஞ்சு மா… இன்னிக்கு நீ ரொம்ப அழகாருக்க…!” அவன் பார்வை ஆவலுடன் அவள் மேனியெங்கும் உலாவ, மேகம் தழுவிய தேகமாய் அவள் உள்ளம் சிலிர்த்தது. பெண்ணவள் பதில் எதுவுமின்றி அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருக்க அவள் நாணம் மின்னும் முகத்தை ரசித்திருந்தவன் அவனே பேசினான்.

“ரஞ்சு மா…”

“ம்ம்…”

“பேசணும், பார்க்கணும், தூங்க முடியல, சாப்பிட முடியல, நார்மலா இருக்க முடியலன்னு சொல்லிட்டு இருந்த, இப்ப எதுவும் வாயே திறக்க மாட்டிங்கற…?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்ட ரஞ்சனாவுக்கு கண்கள் கலங்கியது.

“ரஞ்சு மா, என்னடா எதுவும் பேச மாட்டிங்கற…?”

“ப்ச்… மிஸ் யூ பிரபா, ரொம்ப ரொம்ப மிஸ் யூ… அப்புறம் பேசறேன், வச்சிடறேன்…” என்றவள் தவிப்போடு அழைப்பைத் துண்டிக்க மீண்டும் அவன் வீடியோ காலில் வர கலங்கிய தன் முகத்தைக் காட்ட விரும்பாமல் அழைப்பைத் துண்டித்தாள். உடனே அவன் சாதாரண அழைப்பில் வந்தான். எடுத்தவள் அமைதியாய் இருக்க, புன்னகையுடன் கேட்டான்.

“ரஞ்சு, நீ என்னை இவ்ளோ லவ் பண்ணறியா…?”

“இல்ல, வெறுக்கறேன்… கேள்வியைப் பாரு, ஏண்டா என்னை இப்படி உன் அடிமையா ஆக்கிட்ட…?” அவளது கலங்கிய குரலும், வார்த்தையும் அவனை நெகிழ்த்த மகிழ்ந்தான்.

“ரஞ்சு மா… நான் என்ன பண்ணேன்…?”

“டேய் புருஷா, நீ எதுவும் பண்ணாம தான் ஒவ்வொரு நிமிஷமும் உன்னோடவே இருக்கணும்னு மனசு ஏங்குதா…? அந்த அளவுக்கு என்னை உன் அன்புக்கு அடிமையாக்கி வச்சிருக்க…! லவ் யூ டா புருஷா, ஐ லவ் யூ சோ மச்…” என்றவளின் நேசம் அவனுக்குள் பிரவாகமாய் பொங்கி கண்களில் காதலாய் மலர, வாய்விட்டு சிரித்தான்.

“ஹாஹா… என் செல்லம், என் வெல்லம்டி…”

“ப்ச்… இப்படிக் கொஞ்சி தான் மயக்கி வச்சிருக்கிங்க…”

“என் பொண்டாட்டியை நான் கொஞ்சாம யாரு கொஞ்சுவா…?”

“ஹூக்கும், அளவா கொஞ்சிருந்தா உங்களைக் காணாம இப்படி தவிக்க மாட்டேன்ல…”

“ரஞ்சுமா, டெய்லி மூணு நேரமும் நான் கால் பண்ணறேன், ஒரே வாரம் தான், பொறுத்துக்கடி செல்லம்… அப்புறம் பறந்து வந்து என் புஜ்ஜுக்குட்டியை மடில போட்டு நாளெல்லாம் கொஞ்சிட்டே இருக்கேன்… என்ன…? கொஞ்சும்போது என் கை தான் கொஞ்சம் கன்ட்ரோல் இல்லாம அங்க இங்க போகும், அதுக்கு நீ அலோ பண்ணினாப் போதும்…”

“ச்சீ… பேச்சைப் பாரு…” சிணுங்கியவள் சற்று நார்மலாகி இருக்க இயல்பாய் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தனர். மனம் சற்று லேசாகி இருக்க தினமும் போனிலேயே குடித்தனம் நடத்தி தங்கள் பிரிவை சமாளித்துக் கொண்டனர்.

ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு யுகமாய் கழிய தொலைபேசி மட்டுமே இருவருக்கும் துணையானது. இந்த ஒரு வாரப் பிரிவு ஒருவர் மேல் மற்றவர் வைத்திருந்த காதலை இருவருக்கும் உணர்த்த ஆவலோடு துணையைக் காணப் போகும் நாளுக்காய் காத்திருக்க ஒரு வாரத்தில் பிரபஞ்சன் அங்கே வேலையை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்புவதாய் சொன்னான்.

முன்தினம் காலை அழைத்தவன் மனைவிடம், “ரஞ்சு, உனக்கு இங்கிருந்து என்ன வாங்கிட்டு வரட்டும்…” என்றான்.

“ரெண்டு ஒட்டகம் வாங்கிட்டு வாங்க, தினமும் நாம ஆபீஸ் போக யூஸ் ஆகும்…” கிண்டலடித்தாள் அவன் மனைவி.

அவனாகவே ராஜஸ்தானி லட்டு, கச்சோரி என சுவீட்டுகளை வாங்கிக் கொண்டவன் இறுதி வேலைகளை முடித்து அந்த கிளையன்டிடம் பாராட்டையும் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் கிளம்பத் தயாரானான். அந்த பிங்க் சிட்டியின் வண்ணங்கள் முழுதும் அவன் எண்ணத்திலும் பிரதிபலிக்க சந்தோஷக் கலவைகளுடன் மனைவியைக் காணத் தயாரானான்.

நீண்ட நெடிய இரவை நெட்டித் தள்ளி விடியலைக் கண்டதும் குஷியானது. அன்று ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு பிளைட் ஏறினால் மதியம் 12.30க்கு கணவன் சென்னை வந்துவிடுவான் என்பதால் அன்று ரஞ்சனாவுக்கு டியூட்டி இருந்தும் விடுமுறை எடுத்திருந்தாள்.

ஏர்போர்ட்டில் இருந்து மனைவிக்கு அழைத்திருந்தான் பிரபா. அவனுக்குப் பிடித்த உணவுகளை மதியத்துக்கு சமைத்து வைத்து குளிக்க சென்றாள் ரஞ்சனா. மனம் முழுதும் கணவனைக் காணப் போகும் நொடிக்காய் சந்தோஷமாய் காத்துக் கிடந்தது. குளித்து வந்தவள் பானுக்கு அடியில் அமர்ந்து தலை துவட்டினாள்.

ஷாம்பிட்ட மென் கூந்தல் காற்றில் அடங்க மாட்டேனென்று அலை பாய, அலமாரியைக் குடைந்து பிரபஞ்சனுக்குப் பிடித்த கருஞ்சிவப்பு நிற சேலையில் சின்னதாய் கறுப்புக் கரையில் ஜமிக்கி வேலைப்பாடுடன் இருந்த ஷிபான் சேலையைத் தேர்ந்தெடுத்து உடுத்திக் கொண்டாள். அது ஜம்மென்று அவள் உடல் வளைவுகளை ஆசையுடன் தழுவி அமர்ந்து கொண்டது.

கல்யாணத்திற்கு வாங்கிய சேலைகளில் அவளுக்கும் மிகவும் பிடித்த சேலை அது. துணியின் நயமும், ஆழ்ந்த வண்ணமும் அவளது தங்க நிறத்தை மேலும் எடுப்பாய் காட்டி எழில் கூட்டியது.

வேண்டாமென்று மறுத்தும் கேட்காமல் சஞ்சனா அதற்குப் பொருத்தமாய் வாங்கியிருந்த கண்ணாடி வளையலை எடுத்து அணிந்து கொண்டாள். விரலில் துளி மையெடுத்து விழிகளுக்கு இட்டுக்கொண்டாள்.

இயல்பாய் சிவந்த இதழ்கள் சேலையின் நிறத்துக்குப் போட்டி போட்டு சோபையைக் கூட்ட முடியைத் தளர்வாய் கட்டிக் கொண்டவள், கழுத்தில் பாட்டி கொடுத்த சிவப்புக் கல் வைத்த அட்டிகையை அணிந்து கொண்டு கண்ணாடியில் தன் தோற்றத்தை வியந்து நோக்கினாள். அது அவளைப் பேரழகியாய் காட்டியது.

கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க பெரிய முள் ஒன்றை நெருங்கி இருக்க, இன்னும் சிறிது நேரத்தில் கணவன் வந்துவிடுவான் என்ற நினைவே தேகத்தில் புது ரத்த ஓட்டத்தைப் பாய வைக்க காத்திருக்கத் தொடங்கினாள்.

அந்த அலங்காரமும், ஆவேசமும், காத்திருப்பும் எல்லாம் சில நிமிடங்களில் காணாமல் போகப் போகிறது என்பதை அறிந்த விதி மட்டும் மௌனமாய் நோக்கி நின்றது.

பேரன்பைப் புரிந்திட

பேருதவியாய் சில

பிரிவுகள் பெரும்

படை கொண்டு

போர் தொடுத்திடும்…

பிரியங்களின் பேரரசான

உன் நினைவுகளில் – நான்

விரும்பியே சரணடைகிறேன்…

Advertisement