Advertisement

அத்தியாயம் – 10

“ரஞ்சனா…”

உடன் பணிபுரியும் லாவண்யா சிஸ்டரின் அழைப்பில் திரும்பினாள் ரஞ்சனா.

“சொல்லுங்க லாவண்யா…”

“என்னாச்சு, நானும் நேத்திருந்து உங்களை கவனிக்கறேன்… எதையோ பறிகொடுத்த போல யோசனையாவே இருக்கீங்க…”

“அ..அப்படிலாம் எதுவும் இல்ல, லாவண்யா…”

“ஓகே, சொல்ல விருப்பமில்லைனா பரவால்ல… ஆனா, கொஞ்சம் கவனமா இருங்க… பேஷன்ட் ஹிஸ்டரில தப்பா மாத்தி எழுதி வச்சிருக்கிங்க, நான் பார்த்து சரி பண்ணிட்டேன்… பட் டாக்டர் பார்த்திருந்தா திட்டிருப்பாங்க…” என்றாள் லாவண்யா.

அதைக் கேட்டு அதிர்ந்தவள், “ச…சாரி லாவண்யா, ஹஸ்பன்ட் வெளியூர் போயிருக்கார்… என்னவோ மனசு ஒருமாதிரி தவிப்பாவே இருக்கு…” தன் மனதை அவளிடம் சொல்லிவிட சிரித்தாள் லாவண்யா.

“கல்யாணமாகி முதல் பிரிவா, அப்ப அப்படிதான் இருக்கும்…”

“ம்ம்… அவர் கேட்டப்ப சம்மதிச்சு அனுப்பி வச்சிட்டேன்… இப்ப ஒரு நாளைத் தள்ளவே சிரமமா இருக்கு, எப்படி பத்து நாள் பார்க்காம இருக்கப் போறேன்னு புரியல…” ரஞ்சனா சொல்ல ஆதரவாய் தோளைத் தொட்டாள் லாவண்யா.

“கணவன் மேல அன்பிருக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் முதல்ல இப்படித் தோணும் தான்… இத்தனை வருஷம் பெத்து வளர்த்த பெத்தவங்களைப் பிரிஞ்சு வந்ததைக் கூட மனசு ஏத்துக்கும்… ஆனா அன்பான புருஷனைப் பிரிஞ்சிருந்தா வாழ்க்கையே தொலைஞ்சுட்ட போல மனசு ஆர்ப்பரிக்கும், அவர் நினைவு வரும் போதெல்லாம் போன்ல பேசுங்க… பழகிடும்…” என்றவள் புன்னகைத்து நகர்ந்தாள்.

இத்தனை நாளில் ஹாஸ்பிடலில் எல்லாரிடமும் பழகி இருந்தாலும் லாவண்யா இவள் வயதொத்தவள் என்பதால் இருவருக்குள்ளும் நெருக்கமான தோழமை வந்திருந்தது. தனியே அமர்ந்திருந்தால் மனம் கணவனையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் எனத் தோன்ற எழுந்து வார்டில் உள்ள பேஷண்டுகளைக் காண சென்றாள். மதியம் கான்டீனில் சாப்பிட அமர்ந்தபோது கணவனின் அழைப்பு வர மனம் துள்ளியது.

“ஹ..ஹலோ பிரபா…”

“ரஞ்சு மா, நான் டிஸ்டர்ப் பண்ணலியே…” அவன் குரலைக் கேட்டதும் மனம் சில்லிட்டது.

“அதான் பண்ணிட்டே இருக்கீங்களே…”

“ஓ… நீ வேலையா இருந்தா அப்புறம் கால் பண்ணறேன்…”

“ஏய்…! இருங்க… நான் அந்த டிஸ்டர்ப்பை சொல்லல…”

“அப்புறம்…” என்றவனுக்குப் புரிய சிரித்தான்.

“நீயும் என்னை மிஸ் பண்ணறியா, ரஞ்சு மா…” குரலில் காதலை இழைத்து அவனும் மிஸ் செய்வதை உணர்த்த அவளுக்கு உடனே அவனைக் காணும் ஆவல் எழுந்தது.

“ம்ம்… ரொம்ப…! இந்த ஒரு நாளைத் தள்ளுறதுக்குள்ள நான் பட்ட பாடிருக்கே, எப்படா பத்து நாள் முடியும்னு இருக்கு…” அவள் வருத்தமாய் சொல்ல புன்னகைத்தான்.

“சாப்டியா…?”

“கான்டீன்ல சாப்பிட்டு இருக்கேன், நீங்க சாப்டீங்களா…?”

“கான்டீனா…? ஏன் சமைக்கலியா…?”

“ப்ச்… எனக்கு எதுவுமே செய்யப் பிடிக்கல…” என்றவளின் வருத்தம் அவனுக்குப் புரிந்தது.

“சரிமா, நீ சாப்பிடு, நானும் சாப்பிட்டு ஒரு மீட்டிங் அட்டன்ட் பண்ணப் போகணும்…” அவன் வைக்கப் போக அவள் அழைத்தாள்.

“பிரபா, வச்சுடாதிங்க…”

“சொல்லு மா…”

“ஐ பேட்லி மிஸ் யூ பிரபா…”

“மீ டூ மிஸ் யூ ரஞ்சு மா…”

“நைட் கால் பண்ணுவீங்க தானே…” அவளது குரல் குழைந்து மென்மையாய் ஒலிக்க, “கண்டிப்பா…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க அலைபேசியையே கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.

“இது என்ன மாதிரி உணர்வு, அவன் அருகாமையில் கூட இப்படி ஒரு தவிப்பு வந்ததில்லை… அவனது பிரிவை என்னால் இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு நிமிடமும் நரகமாய்த் தோன்றுவது ஏன்…? எனது கவனம் பிசகி நடைமுறையின் இயல்பு வாழ்க்கையைக் கூட பாதிக்கும் அளவுக்கு அவன் மேல் காதல் கொண்டு பித்தாகி விட்டேனா…” மனம் அரற்றிக் கொண்டிருக்க பிளேட்டில் உணவு அப்படியே இருந்தது.

கவன சிதறல்கள்

எல்லாம்

காதலின் விதியில்

கட்டாயமாகிறதோ…!

சாப்பிடப் பிடிக்காமல் எழுந்தவள் வார்டுக்கு சென்றாள். ஓரிடத்தில் இருக்காமல் அடுத்தடுத்து வேலைகளில் தன்னை பிஸியாக்கிக் கொண்டாள்.

மாலை வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப மீண்டும் மனதுக்குள் பிரபஞ்சனே அவளது பிரபஞ்சமானான். தியாவின் வீட்டுக்கு சென்று அவள் அன்னையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள் வீட்டுக்கு வந்தாள்.

பிரட் டோஸ்ட், காபியுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தவள் கணவனின் அழைப்புக்காய் காத்திருந்தாள்.

நிமிடத்திற்கொரு முறை அதையே பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று அது சப்திக்கவும் ஆவலுடன் பார்த்தவள் அன்னையின் அழைப்பைக் கண்டதும் யோசித்தாள்.

“ஒருவேளை அம்மாட்ட பேசிட்டு இருக்கும்போது பிரபா கால் பண்ணிட்டா…” என நினைத்தபடி வேகமாய் அன்னையிடம் பேசி வைக்க சிறிது நேரத்தில் ராதிகா அழைத்தார்.

“அச்சோ, அத்தை எதுக்கு கூப்பிடறாங்க… பிரபா நேத்து இந்த நேரத்துக்கு தானே கால் பண்ணார்…” யோசித்தபடி எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ, சொல்லுங்கத்தை…”

“ரஞ்சனா, சாப்டியா மா…”

“ம்ம்… நீங்க சாப்பிட்டீங்களா, எல்லாரும் எப்படி இருக்கீங்க…? வைஷூ கால் பண்ணாளா…?”

“ம்ம்… பிரபா கால் பண்ணிருந்தான்… உனக்கு அவன் இல்லாம தனியாருக்க கஷ்டமாருக்கும், மாமா உடம்பு நல்லாருந்தா நான் அங்க வந்து உனக்கு ஒத்தாசையா இருந்திருப்பேன்… முடியலியேன்னு வருத்தமா இருக்கு மா…” பிரபஞ்சன் அன்னையிடம் ஏதேனும் சொல்லியிருக்கக் கூடும் என்பது அவர் வார்த்தையில் புரிய நெகிழ்ந்தாள்.

“பரவால்ல அத்தை, மாமாவை நீங்கதான பக்கத்துல இருந்து பார்த்துக்கணும், உங்களை எனக்குத் தெரியாதா…? என் அம்மாவும் இதே தான் சொன்னாங்க, அப்பாவை தனியா விட்டுட்டு வர முடியலைன்னு… எனக்கு அப்பாவும், மாமாவும் ஒண்ணு தான், ரெண்டு பேரும் உடம்பு தேறி நல்லபடியா இருக்கிறது தான் முக்கியம்… பிரச்சனை இல்ல, நான் பார்த்துக்கறேன் அத்தை… நீங்க கவலைப் படாதீங்க…”

“ம்ம்… பாத்து பத்திரமா இரும்மா, என்ன தேவைன்னாலும் பக்கத்துல சரிதாகிட்ட கேளு… அந்தப் பொண்ணு நல்ல குணம், எல்லா உதவியும் பண்ணுவா…”

“சரிங்கத்தை… மாமா, பாட்டியைக் கேட்டதா சொல்லுங்க…”

“சரிம்மா, வச்சிடறேன்…” சொன்னவர் போனை வைத்துவிட மீண்டும் கணவனின் அழைப்புக்காய் காத்திருந்தாள்.

“இன்னும் கூப்பிடலியே, நாமளே அழைச்சுப் பார்க்கலாம்…” நினைத்தவள் அவனுக்கு அழைக்க லைன் ‘பிஸி’ என்றது.

மனம் வாடியவள் தொலைக்காட்சி, லைட் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு கட்டிலுக்கு சென்றாள். பிரபாவின் டீஷர்ட் ஒன்று சுவரில் தொங்கிக் கொண்டிருக்க அதை எடுத்தவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

இன்னும் துவைக்காததால் கணவனின் வாசமும், அவன் உபயோகிக்கும் பர்ப்யூம் மணமும் இன்னும் அதில் மிச்சமிருந்தது. அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கட்டிலில் அவன் படுக்கும் இடத்தைக் கையால் தடவியவளுக்கு வெறுமை வருத்த கணவனின் சூடான அணைப்புக்காய் மனமும், உடலும் ஏங்கியது.

“ச்சே, நான் ஏன் இப்படி கிறுக்கு போல நடந்து கொள்கிறேன்,

பிரபா…! நீ எப்படி என்னுள் இப்படி நிறைந்து போனாய்… இந்தக் காதல் என்பது எத்தனை பொல்லாதது…! என் அத்தனை கனவுகளையும் நீ தத்தெடுத்துக் கொண்டாய்… என் அத்தனை மௌனங்களையும் நீ மொழிபெயர்த்துக் கொள்கிறாய்… என் அத்தனை புன்னகைக்கும் நீ காரணமாகிப் போகிறாய்… இப்போது என் கிறுக்குத் தனங்களுக்குக் கூட நீயே தான் காரணமாகிறாய்… என் வருத்தங்களும், சந்தோஷங்களும் எல்லாம் நீ மட்டுமே ஆக நான் உனக்குள் எப்படி தொலைந்து போனேன்… இத்தனை நேசத்தை எனக்கு நீ எப்படி உணர்த்தினாய்…” அவள் அந்த டீஷர்ட்டிடம் புன்னகையுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க அலைபேசி சிணுங்கி பிரபா காலிங் என்றது.

ஆர்வமாய் எடுத்து காதில் வைத்துக் கொண்டவளின் குரலில் காதல் தெறிக்க, “பிரபா…” என்றாள். அந்தக் குரல் என்னவோ செய்ய மனதுள் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தான் அவன்.

“ரஞ்சு மா, சாப்டியா…?”

“ம்ம்… நீங்க…?”

“இன்னும் இல்லமா, இப்பதான் ரூம்க்கு வந்து ஆர்டர் பண்ணேன்… ஒரு குளியல் போட்டு வந்துடட்டுமா…? ப்ளீஸ்…”

அவனது குரலுக்கு பதிலின்றிப் போக, “ரஞ்சு மா… என்னடா, என்னாச்சு உனக்கு…” என்றான் அன்புடன். நேசம் தாங்கிய அவன் குரல் மனதுக்குள் எதிரொலிக்க நெகிழ்ந்தவள் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

“பிர..பா…” சட்டென்று குரல் உடைந்து போக பதறினான்.

“ஹேய், என்னமா… எதுக்கு இப்படி கலங்கற…?”

“எ..என்னால முடியல பிரபா… வீட்டுல நீங்க இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் வெறுப்பா இருக்கு… எங்க பார்த்தாலும் நீங்க ஏதாவது சொல்லுற போல, செய்யுற போலத் தோணுது… உடனே உங்களைப் பார்க்கணும் போலருக்கு, என்னால பத்து நாள் எல்லாம் காத்திருக்க முடியாது… உங்களைப் பார்க்க முடியாத ஏக்கத்துல நான் செத்தே போயிருவேன்…” அவள் விசும்ப அவன் தவித்தான்.

Advertisement