Advertisement

அத்யாயம் – 2
      
நம் புவியில் இருந்து நிலா 384,400 கி.மீ தொலைவில் உள்ளது.
சூரியன் பார்த்து தாமரை மலரும் 
சந்திரன் பார்த்து அல்லி மலரும் 
உன் முகம் பார்த்தால் மட்டுமே என் அகம் மலரும் 
இப்படிக்கு உன் – நிலா 
இடம் – தேனீ மாவட்டம், பூஞ்சோலை கிராமம்.
வேகமாக ஓடி வந்ததின் பலனாக மூச்சு வாங்க வீட்டினுள் செல்லாமல், வாயிலில் நின்று மூச்சி வாங்கிக் கொண்டிருந்தாள் சௌபர்ணா.
இவளை பார்த்த நாட்சி அம்மை ஆச்சி வெத்தலை குழவியை குத்தியபடியே, “ஏண்டி அடுத்த மாசம் ஒருத்தன் வீட்டுக்கு போறவ இப்படித்தான் அரக்க பறக்க ஓடிக்கிட்டு திரிவியோ! இருடி உம் புருஷன் வீட்டு ஆளுக இனி உன்னைய கொமட்ல குத்த போறாக” என அவளை வெற்றிலைக்கு பதில் மெல்ல துவங்கினார். 
 “ஏ கிழவி சும்மா இரு. இல்ல வெத்தலை குழவி வெச்சி உன் பல்ல தட்டிபுடுவேன்” என சௌபர்ணா பழிப்பு காட்ட, 
“ம்ம் …பல் இருந்தா தான! என்னடி விஷயம் இப்படி அரக்க பறக்க ஓடியந்து இருக்க” என ஆச்சி வினவினார்.  

“ஆமாம் உன்கிட்ட தான் சொல்ல வந்தேனாக்கும். அது சரி ஆச்சி வேல் அண்ணன் எங்க ?” 
“என்கிட்ட சேதிய சொல்லு அப்புறம் எம் பேராண்டி எங்கன இருக்காண்டு சொல்றேன்.”
“போ ஆச்சி நான் மணி பெரியம்மா கிட்டையே கேட்டுகிறேன்’’ என்று அவள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கவும் ,
“ஏடி! பழகுடோனுக்கு போயிருகாண்டி. நாளைக்கு நம்ம பழம் எல்லாம் ஏதோ வெளிநாட்டுக்கு போகுதாம்ல.” என்று பதில் கொடுத்தார்.
உடனே, “என் செல்ல ஆச்சி “என்று கன்னத்தை பிடித்து திருகியவள் கால்களில் இறக்கை கட்டி கொண்டவளாய் குடோனை நோக்கி ஓட்டம் பிடித்தாள் .
“என்ன மாரியண்ணே! போன சீசன் விட மாம்பழம் கொஞ்சம் சின்னதா இருக்கு. விளைச்சலும் கூட கொறச்சலா தான் இருக்கும் போல இருக்கு?” கேட்டு கொண்டிருந்த ரத்னவேலு ஆறடிக்கு குறையாமல் இருந்தான்.
கரு கரு கேசம். கருமையில் கோதுமை கலந்த அடர் நிறம். வடிவான உதடு. அதன் மேல் முறுக்கு மீசை. அழகான பெரிய ஆனால் ஆளை அளக்கும் கண்கள்.
“என்ன தம்பி செய்ய, இந்த வருஷம் பூ விடுற காலம் காத்து வந்து பழிவாங்கிட்டு. அதான் காயும் சிறுத்து விளைச்சலும் குறைஞ்சிட்டு. அடுத்த சீசன் விளைச்சலை அமோகமா ஆக்கிடலாம் தம்பி” பதில் சொல்லி கொண்டிருந்தார் மாரியண்ணன்.
“அது சரி நீங்க என் கிட்ட சொல்லிடீங்க. இதே பதிலை நான் வெளிநாட்டுக்காரன்ட சொல்ல முடிமா? ஏஜென்ட் வேற கேள்வியா கேட்டு குடயுறான். சரி விடுங்க எடை நிறுத்தி முடிச்சதும் வெள்ளையன்கிட்ட  பணம் குடுத்து விடுறேன்” என்றான்.
 
“சரிங்க தம்பி” அவர் விடை பெற்று  செல்லவும் சௌபர்ணா உள்ளே வரவும்  சரியாய் இருந்தது. காற்றில் பலவகை பழங்களின் மணம் ரம்யமாய் வீசிக் கொண்டிருந்தது.
“வாடி குள்ள வாத்து. என்ன இங்கிட்டு…? இப்பவே கல்யாண சீர் வாங்கி போலாம்டு வந்தியோ ?” என வேலு கேட்கவும், 
“ம்ம் … ஆளை பாரு நல்ல அய்யனார் மாதிரி கையில வீச்சருவா இல்லாதது குறையா இருக்கே ஆசாரி கிட்ட சொல்லி செஞ்சி குடுத்துட்டு போலாம்டு தான் வந்தேன்.” என்று தனமையனை பதிலுக்கு வாரினாள் சௌமி. 
“அடி” வேல் விளையாட்டாய் கை ஓங்கவும் சிரித்தவள், “இல்லண்ணே உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்” என்றாள்.
தமக்கை தொடர்ந்த பகடியை விடாது தொடர்ந்த வேலு, “அப்பாடா…! சித்தப்பா உன் கல்யாணத நிறுத்திட்டாரா…? உன் பட்டுசேலை நெய்ய சொல்ல மறுநா காஞ்சிபுரம் போகணும்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்தது. வேல மிச்சம் போ” வேல் சொன்ன உடன் தரையில் கால்களை உதைத்து சிணுங்கியவள், “போ நான் போறேன்” என்று சிணுங்கி கொண்டு கிளம்பினாள். 
“அதான் சொல்றதுன்னு வந்துட்ட இல்ல சொல்லிட்டு போறது” என்று வேலு ராகம் இழுக்கவும், 
“ம்ம்…சொன்னா எனக்கு என்ன தருவ” என பேரம் பேசினாள் தங்கை. வேலுவோ, “முதல்ல விசயத்த சொல்லுடி வாயாடி” என அவள் வாயை கிளறினான்.
“சரி சரி சொல்றேன் மதனி என் கல்யாணத்துக்கு வாரகளாம். ரெண்டு நா தங்குற மாதிரி.” சொல்லிவிட்டு வேல் முகத்தை உற்று பார்க்க முதலில் இறுகிய அவன் முகம் பின்பு இளகி, “ஓ..லண்டன் ராணி இந்தியா வராலோ ம்ம்…” என்றான். 
அண்ணனின் குரலில் இருந்த இறுக்கத்தை உணர்ந்தவள், “நிசம் தான். இனிக்கு காலைல தான் மெயில் வந்தது. கூட என் மருமகளும் வாரளாம்.” எனவும் வேலுவின் முகம் பிரகாசிக்க துவங்கியது.
“ஆமா இனி அவ உன் மருமகதான். சரி நீ கிளம்பு, சித்தி தேட போறாக.” அவன் அவளை அங்கிருந்து கிளப்ப முயன்றான். என்னவோ அவனுக்கு அப்போது தனிமை வேண்டியிருந்தது. 
“அதெல்லாம் முடியாது முதல்ல தட்சணை குடு” என்று அவள் கை நீட்ட,  அதில் அவன் இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றை வைக்கவும், “ம்ம்…. கம்மியா தான் இருக்கு பாரவாயில்ல நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” என்றுவிட்டு,  பின்னல்ஆட ஓடும் சௌபர்ணா போகும் பாதையை பார்த்து கொண்டு இருந்தான் வேலு.
என் குட்டிமாவின் குட்டிமா எப்படி இருப்பாள், கற்பனை செய்யும் போதே இரட்டை சடையுடன் பள்ளி கூட பாவாடை தாவணியில் மது மஞ்சரியின் முகம் நினைவிற்கு வந்தது. பழைய நினைவுகளை அசைபோட்டவனாய் அவன் வேலையில் லயிதிருக்க,
“சௌக்கியமா தம்பி?’” என்றபடி உள்ளே வந்தார் மஞ்சரியின் அம்மா விசாலம். 
“வாங்க அத்தை…! உட்காருங்க. என்ன இவ்ளோ தூரம். போன் போட்டிருந்தா நான் வந்திருப்பேனே அத்தை. ஏலேய் முருகா இளநீ சீவியாட” விசாலத்திடம் பேசிக் கொண்டே வேலு முருகனுக்கு கட்டளையிட்டான்.  
விசாலாமோ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பா. இன்னைக்கு காத்தால சௌமீ பாப்பா வீட்டுக்கு வந்தாக. மஞ்சு வாறாளாமே சௌமி கல்யாணத்துக்கு. ஏதோ போறதா காலம் ரெண்டு பேரும் இத்தனை நாளா பிரிஞ்சி இருந்துடீக.
நீங்க தான் இனி அவ இங்கயே இருக்க வழி பண்ணனும். எம் மகள தான் தாங்கமுடியல. எம் பேத்தியையாவது என் கண்ல வச்சி தாங்கனும்”  இறுதி வாக்கியத்தை அவர் முடிக்கும் போது கண்களில் நீர் கோர்த்துவிட,  
“என்னால முடிஞ்சத கண்டிப்பா நானும் செய்றேன் அத்தை. அதுக்கு மேல அவ பிடிவாதமா மறுபடி போறேன்னா நாம தடுக்க கூடாது. அவளை ஒரு முறை தடுத்ததுக்கு உண்டான விளைவை தான், இந்த மூன்றை வருசமா அனுபவிக்கிறோம்.” அவன் குரலிலும் வலி இருந்ததை உணர்ந்த விசலாம் கிளம்ப முனைந்தார். 
“அப்போ நான் கிளம்புறேன் தம்பி!” என்று அவர் எழுந்து கொள்ள, “பொறுங்க அத்தை பழமாவது எடுத்துட்டு போங்க!” என வேலு உபசரித்தான்.  
“வேண்டம்பா அங்கன என்ன பிள்ளையா குட்டியா நான் வரேன்.” என்றவர் கிளம்பியிருந்தார். 
ஒரு கசந்த  புன்னகையோடு விடை பெற்று செல்லும் அவரை காண்கையில் இந்த முறை எப்படியாவது மஞ்சரியை இங்கேயே தங்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியம் ரத்னவேலுவிற்குள் அத்தனை உக்கிரமாய் எழுந்தது. 

Advertisement