Advertisement

மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும் சொல்லி இருக்க மாட்டாள். ஆனால் அவளை இயல்பாக்க நினைத்து, “விக்கல் நின்னுருச்சே”, என்று சிரித்தான் ஹரி.
 
அவன் மடியில் இருந்து எழுந்து “அப்ப விக்கல் நிப்பாட்ட தான் முத்தம் கொடுத்திருக்க. என்மேல உள்ள ஆசைல கொடுக்கல அப்படித்தானே? என் மேல எப்படி ஆசை வரும்? உன் மனசுல தான் வேற யாரோ இருக்காங்களே?”, என்று திட்டினாள் நந்திதா.
 
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?”
 
“நான் ஆரம்பிகிறேனா? நீ தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்”
 
“இல்லை மா. நிஜமாவே மனசு முழுக்க உன் மேல தான் ஆசை தெரியுமா? நீ எதாவது நினைப்பேன்னு தான் விலகினேன்”
 
“நிஜமாவா?”
 
“ஆமா நந்திதா”
 
“அப்ப என் மேல சத்தியம் பண்ணு. இன்னும் நீ லவ் பண்ண பொண்ணை நினைக்க மாட்ட. அவளை லவ் பண்ண மாட்ட. அவளை மறந்துருவேன்னு சத்தியம் பண்ணு நம்புறேன்”
 
“அது எப்படி நந்திதா முடியும்? உன்னை எப்படி என்னால மறக்க முடியும்?”
 
“பாத்தியா பண்ண மாட்டிக்க. கேட்டா என்னை சொல்ற? போடா இதுக்கு தான் உன்னை பிடிக்கலை. போ. இந்த வாரம் ஊருக்கு போகும் போது என்னை அத்தை, மாமா கூட விட்டுட்டு வந்துரு. எனக்கு உன்கூட இருக்க பிடிக்கலை”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டாள்.
 
“அன்னைக்கு இவ வீட்டை விட்டு வெளிய வரும் போது, எப்படி கம்பீரமா ஒரு மகாராணி மாதிரி வந்தா. இன்னைக்கு பாரு பேபி  மாதிரி பிஹேவ் பண்றா. என்கூட அடுத்த வாரம் வர மாட்டியா? இனி ரெண்டு நாள் கழிச்சு என்னை விட்டு நீ எப்படி நகருறன்னு  பாக்குறேன் டி செல்லம்”, என்று நினைத்து கொண்டு டீவியை பார்த்தான்.
 
அடுத்த நாள்  அவளை எழுப்பி தன்னுடனே  பள்ளிக்கு கிளம்ப சொன்னான் ஹரி.
 
“லூசா ஹரி நீ? எதுக்கு என்னை வர சொல்ற?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“நீ இங்க வீட்ல போர் அடிக்குனு சொல்லிட்டு இருக்க தான? அதுக்கு தான் எங்க ஸ்கூல்ல உனக்கு ட்ராயிங் டீச்சர் வேலை சண்முகம்  அப்பா கிட்டகேட்டேன். சம்பளம் எல்லாம் தர மாட்டாங்க. உனக்கு ட்ராயிங் பிடிக்குமே. சூப்பரா நேரம் போகும்”
 
“நிஜமாவா ஹரி?”, என்று சந்தோசத்துடன்  கூவி கொண்டே சென்றாள் நந்திதா. “இதுவே ஒரு பாப்பா, இவ சொல்லி கொடுக்க போறாளா?”, என்று நினைத்து கொண்டே அவனும் கிளம்பினான்.
 
இருந்த சந்தோஷத்தில் ஹரிக்கு எப்படி நந்திதாவுக்கு ட்ராயிங் பிடிக்கும் என்பது தெரியும் என்று கேள்வி கூட தோன்றாமல் அவனுடனே பள்ளிக்கு கிளம்பினாள் நந்திதா.
 
வண்டியில்  அவனுடன் சேர்ந்து  போகும் போது, அவனை இடித்து   கொண்டு அமர்ந்தாள் நந்திதா.
 
“ஏய் நந்திதா கொஞ்சம் தள்ளி உக்காருமா”, என்று சிரித்து கொண்டே சொன்னான் ஹரி.
 
“பெரிய இவன் மாதிரி என்னை பிடிக்கும் பிடிக்கும்னு சொல்ற? ஆனா எதாவது நீ செஞ்சிருக்கியா ஹரி. இப்ப கூட தள்ளி உக்கார சொல்ற?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“நீ என்ன சொல்ற? எனக்கு புரியலை”
 
“உனக்கு புரிஞ்சா தான் அதிசயம். என்னை பிடிச்சிருக்குன்னா நான் இப்படி உன்னை பிடிச்சிட்டு உக்காந்துருக்குறதும் பிடிச்சிருக்கும். இன்னும் நிறைய இருக்கு தெரியுமா?”
 
“ஹா ஹா, வேற என்ன எல்லாம் இருக்கு? நான் என்ன செய்யாம இருக்கேன்?”
 
“என்ன செய்யாம இருக்கியா? எதுவுமே தான் செய்ய மாட்டிக்க. காலைல எந்திச்சு, பல்லு விளக்காம ஒரு முத்தம் கொடுக்க மாட்டிக்க. அப்புறம் என்கூடவே குளிக்க போறேன்னு அடம் பண்ண  மாட்டிக்க. அப்புறம் சமையல் செய்யும் போது, இடுப்பை கிள்ளி வம்பு பண்ண மாட்டிக்க. எனக்கு சாப்பாடு ஊட்டி விட மாட்டிக்க. அப்புறம் பைக்ல உக்காரும் போது இன்னும் நெருங்கி உக்காருன்னு சொல்ல மாட்டிக்க. நீ எதுவுமே செய்ய மாட்டிக்க. கேட்டா என்னை தான் பிடிக்கும், என்னை தான் காதலிக்கிறேன்னு பொய் வேற சொல்ற போடா”
 
“பார் டா உன் மனசுல இவ்வளவு ஆசை இருக்கா நந்து? எனக்கு இது தெரியாம போச்சே. அப்பறம் மேடம், எனக்கு இதை விட பெரிய ஆசை எல்லாம் இருக்கு. ஆனா என் பொண்டாட்டிக்கு தான் என்னை பிடிக்கவே இல்லை. என்னை விட்டு தள்ளியே இருக்கா”, என்று சிரித்தான் ஹரி.
 
“அதுக்கு நீ வேற பொண்ணை லவ் பண்ணாம இருந்துருக்கணும். ஆமா ஹரி அவ எப்படி இருப்பா? என்னை விட அழகா இருப்பாளா? உனக்கு அவளை ரொம்ப பிடிக்குமா? அவ கூட இப்படி பைக்ல போயிருக்கியா?”
 
“ஆமா அவ ரொம்ப அழகு. இந்த உலகத்துல அவ தான் அழகா இருப்பா. அவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்பறம் என் பைக்ல அவ வந்தது கிடையாது. எங்க அம்மாவை தவிர என்கூட பைக்ல வந்தது நீ தான் நந்து”
 
“ஹ்ம்ம்”
 
“என்ன நந்து அமைதியா வர?”
 
“ஒன்னும் இல்லை போடா. வாயை மூடிட்டு வண்டியை ஒட்டு”, என்று சொல்லி விட்டு அமைதியாக வந்தாள்.
 
“எப்படி தான் பொண்ணுங்களுக்கு புருஷன்னு வந்தா பொசஸிவ்நெஸ் வந்துருமோ தெரியலை”, என்று நினைத்து கொண்டே ஸ்கூல் உள்ளே வண்டியை நிறுத்தினான்.
 
அங்கு இருந்தவர்களுக்கு நந்திதாவை தன்னுடைய மனைவி என்று அறிமுக படுத்தினான் ஹரி.
 
வள்ளி பக்கம் கூட அவன் பார்வையை செலுத்த வில்லை. “இவ தான் அந்த பொம்பளை போல”, என்று நினைத்து கொண்டாள் நந்திதா.
 
அன்றே ஹரி வேற ப்ளாக் க்கு மாற்ற பட்டான். அவனுடைய பழைய சீட்டில் நந்திதா, டெம்ப்ரோவரி ட்ராயிங் டீச்சராக அமர்த்த பட்டாள்.
 
அந்த வாரம் ஊருக்கு கிளம்பும் போது அங்கே போய் அவளுடைய ஸ்கூல் ஐ டி கார்டு காட்டி “பாரு நீ தான் என்னுடைய லவ்வர்”, என்று சொல்ல நினைத்த ஹரிக்கு அப்போது தான் நினைவு வந்தது இரண்டு வாரம் கழித்து அவளுடைய பிறந்த நாள் வருவது.
 
“அன்னைக்கே சொல்லலாம்”, என்று நினைத்து ஊருக்கு போனான். அங்கு இரண்டு நாள் இருந்து விட்டு திரும்பி வரும் போது, அவனுடைய டைரியை எடுத்து வந்தான்.
 
அதை நந்திதா பார்த்து விட்டு, “உங்க டைரியா?”, என்று கேட்டாள்.
 
“ஹ்ம்ம் ஆமா”, என்று சொன்னான் ஹரி.
 
“இதுல உங்க லவ்வர் பத்தி எழுதிருக்கீங்க அப்படித்தானே? அதுக்கு தான இதுல பூட்டு போட்டு வச்சிருக்கீங்க? நான் ஒன்னும் படிக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டு போனாள். 
 
அடுத்து இருவருக்கும் வாழ்க்கை சாதாரணமாக தான் சென்றது.
 
அப்போது ஒரு நாள் ஊஞ்சல் விற்கும் கடைக்கு அவளை அழைத்து சென்றான் ஹரி. அதை பார்த்து அவள் கண்கள் விரிந்தது. அவள் சந்தோசத்தை  அவள் முகத்தில் பார்த்தவன் சிரித்து கொண்டே, “உனக்கு பிடிச்சதை சொல்லு நந்திதா. ரெண்டு பேர் உக்கார மாதிரி வாங்குவோமா? இல்லை ஒரு ஆள் ஆடுறது போதுமா?”, என்று கேட்டான்.
 
“ஒரு ஆள் மாதிரி வேண்டாம். நீளமா இருக்குறது வாங்கலாம் ஹரி”, என்று சிரித்தாள் நந்திதா.
 
“எதுக்கு நந்து? நான் உன்கூட உக்காருறதுக்கு தான?”
 
“ஐயோ டா ஆசையை பாரு? நான் கேட்டது, எனக்கு தான் போர் அடிக்கிற நேரம் அங்கேயே படுத்துறலாம்ல? உன்கூட படுக்கவே பயமா இருக்கு. நைட் எல்லாம் டிரஸ் விலகிருமோன்னு விடிலைட் வேற ஆப் பண்ணிட்டு தூங்க வேண்டி இருக்கு”
 
“அதுக்கு நான் ஒரு ஐடியா சொல்லட்டா நந்து? அப்புறம் டிரஸ் விலகிரும்னு பயமே வேண்டாம்”
 
“என்ன ஐடியா ஹரி?”
 
“ட்ரெஸ்ஸே இல்லாம தூங்குறது தான்”, என்று சொல்லி கண்ணடித்தான் ஹரி.
 
குப்பென்று சிவந்த முகத்தை திருப்பி கொண்டு “ஊஞ்சல் வாங்குற வழியை பாருங்க”, என்று சொன்னாள்.
 
கடைசியாக அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து விட்டு, டெலிவரி கொடுக்க சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
 
சிறிது நேரத்தில்  ஊஞ்சலும் வந்தது. அவர்களே அதை மாட்டி கொடுத்து விட்டு சென்றார்கள்.
 
ஆசையாக அதில் அவளை அமர வைத்தவன், அவளை ஆட்டி விட்டான்.
 
“உனக்கு எப்படி ஹரி எனக்கு ஊஞ்சல் பிடிக்கும்னு தெரியும்?”, என்று ஆடி கொண்டே கேட்டாள் நந்திதா.
 
“அது அது வந்து”, என்று இழுத்தவன் “அதான் பொதுவா எல்லாருக்குமே ஊஞ்சல் ஆட பிடிக்குமே. அதான் உனக்கும் பிடிக்கும்னு நினைச்சேன். நானும் உன்கூட உக்காரவா நந்து?”, என்று கேட்டான்.
 
அவன் குரலில் இருந்த இறைஞ்சல் மனதை தொட “வா”, என்று கை நீட்டி அழைத்தாள் நந்திதா.
 
அடுத்த நொடி அவள் அருகே அமர்ந்தவன், அவள் தோள்களில் கையை போட்டு கொண்டான்.
 
வானத்தை பார்த்து அமர்ந்து ஆடி கொண்டிருந்த இருவருக்கும், இந்த தருணம் சொர்க்கமானதாக இருந்தது.
 
அன்றில் இருந்து இரவு உணவுக்கு பிறகு, ஊஞ்சலில் அமர்ந்து ஒரு மணி நேரம் நெருக்கமாக அமர்ந்து கதை பேசுவது, அவர்களின் வழக்கமாக ஆனது.
 
அந்த வாரத்தில் சில்ட்ரன்ஸ் டே வந்தது. அதுக்காக டீச்சர்ஸ் ஸ்டுடன்ட்ஸ்க்கு எதாவது செஞ்சு காட்டலாம் என்று முடிவு எடுத்து இரண்டு மணி நேரம் பங்க்சன் என்று உறுதி செய்ய பட்டது.
 
அவரவருடைய கிளாஸ் பிள்ளைகளுக்கு, சின்ன சின்ன பரிசு பொருள்கள் கொடுக்கலாம் என்றும் அந்த மீட்டிங்கில் சொல்ல பட்டது.
 
அதன் படி, ஹரியும், நந்திதாவும் ஹரி கிளாஸ் பிள்ளைகளுக்கு பரிசு பொருள் எல்லாம் வாங்கினார்கள். கூடவே இருவருக்கும் டிரஸ் எல்லாம் எடுத்தார்கள்.
 
அதில் அவளுக்கு என்று அவன் எடுத்து கொடுத்த புடவையை பார்த்து, இமைக்க மறந்து நின்றாள் நந்திதா.
 
வெள்ளை கலர் புடைவையில் சிவப்பு கற்கள் பதித்த அந்த புடவை அவளை அப்படியே புரட்டி போட்டது. அது அவளுடைய கனவு புடவை. முன்னாடியே அவள் அம்மாவிடம் அந்த கலரில் புடவை கேட்டால், “வெள்ளை கலர்ல எடுக்க கூடாது”, என்று சொல்லி வாங்கி தர மாட்டாள். இன்று அவன் எடுத்து கொடுத்த புடவையை பார்த்து சந்தோஷத்தில் மிதந்தாள் நந்திதா.
 
வீட்டுக்கு வந்தவுடன் கையில் இருந்த பையை எல்லாம், அங்கு இருந்த சேரில் தூக்கி போட்டவள், அவனை இறுக்கி கட்டி கொண்டாள்.
 
அவள் மன நிலை புரிந்தவன், “இப்படி இறுக்கி பிடிச்சிருந்தா நல்லா தான் இருக்கு. ஆனா இப்படியே பிடிச்சிருந்தா அதுக்கு மேல எதாவது நடந்தா நான் பொறுப்பு இல்லைப்பா”, என்று சொல்லி சிரித்தான்.
 
அவனிடம் இருந்து விலகியவள் “நீ சரியான வேஸ்ட் ஹரி”, என்று சொல்லி விட்டு நகர பார்த்தாள்.
 
அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்து அவளை கட்டி கொண்டவன், “புலி பதுங்கி இருக்கு, அதுக்காக அது வேஸ்ட்னு சொல்ல முடியாது. பாயுறதுக்காக காத்துட்டு இருக்கு. அன்னைக்கு நீ என்ன ஆக போறியோ?”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தில் கையை வைத்து அவள் கண்களை பார்த்தான்.
 
“என்ன பண்ற விடு”, என்று சொன்னாள் நந்திதா.
 
“நீயா வந்து என்னை கட்டி எல்லாம் பிடிச்சிருக்க. அதுக்கு எதாவது கொடுக்க வேண்டாமா நந்து?”
 
“அது எனக்கு புடிச்ச சேலை. அதனால தான் விடு. நீ ஒன்னும் தர வேண்டாம்”
 
“அது எப்படி? முத்தம் கொடுத்து ஒரு வாரம் மேல ஆக போகுது”, என்று சொல்லி கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
 
அவள் கண்கள் அப்படியே மூடியது. அடுத்து இரண்டு கன்னத்திலும் தன் இதழ்களை பதித்தவன், கடைசியில் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான். அப்போது அவனிடம் இருந்து விலகி ஓடி விட்டாள்.
 
அன்று மாலை “சில்ட்ரன்ஸ் டே க்காக என்ன செய்ய?”, என்று யோசித்து கொண்டிருந்தான் ஹரி.
 
“என்ன ஹரி யோசிச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டு கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் நந்திதா.
 
“மேடம் நல்ல மூடுல இருக்காங்க போல? வாங்க போங்கன்னு பேசுறாங்க”, என்று நினைத்து கொண்டே, “இல்லை ரெண்டு நாளில் பங்க்சன் இருக்குல்ல? அதுக்கு என்ன பெர்பார்மன்ஸ் செய்யனு யோசிச்சிட்டு இருக்கேன். ஆமா நீ என்ன செய்ய போற நந்திதா?”, என்று கேட்டான்.
 
“தெரியலை ஹரி. பேசாம நீங்க ஒரு டேன்ஸ் ஆடுங்களேன்”
 
“டேன்ஸா? எனக்கு சுத்தமா வராது. வேற எதாவது தான் செய்யணும்”
 
“வேற எல்லாம் வேண்டாம் ஹரி. மித்த ஸ்டாப் எல்லாரும் கண்டிப்பா டேன்ஸ் ஆட மாட்டாங்க. எல்லாரும் வயசானவங்க. அதனால இது ஸ்டுடன்ட்ஸ்க்கு பிடிக்கும் ஹரி. அதையே செய்ங்க”
 
“அதெல்லாம் முடியாது. எனக்கு ஆட தெரியாது நந்து”
 
“அதெல்லாம் கிடையாது. நீங்க ஆடுறீங்க அவ்வளவு தான். அப்புறம் நான் பாரதியார் பாட்டு பாட போறேன்”
 
“அப்ப உனக்கு தான் டேன்ஸ் தெரியும்ல? எனக்கு சொல்லி கொடு”, என்று சொன்னான் ஹரி.
 
“எனக்கு டேன்ஸ் தெரியும்னு உங்களுக்கு எப்படி தெரியும் ஹரி?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் நந்திதா.
காதல் பூக்கும்…

Advertisement