Advertisement

அத்தியாயம் 7
சூழல் காற்றில் சிக்கித் தவிக்கும்
நேரத்திலும் என் இதயத்தை
வருடுகிறது உன் நினைவுகள்!!!
 
அன்று “ஹாய் பொண்டாட்டி. கொஞ்சம் காபி தாயேன். தலை வலியா இருக்கு “, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவனை, சப்பென்று கன்னத்தில் அடித்தாள் நந்திதா.
 
அதிர்ந்து போய் நின்றான் ஹரி. கோபத்தில் பத்திரகாளியாக நின்றாள் நந்திதா.
 
“ஏய் என்ன ஆச்சு நந்திதா? எதுக்கு இப்படி அடிச்ச?”
 
“உன்னை அடிக்க கூடாது டா, கொல்லணும். எருமை மாடு, பன்னி, பிசாசு”
 
“நீ அடி, திட்டு வேண்டாம்னு சொல்லலை. ஆனா எதுக்குன்னு காரணம் சொல்லு மா”
 
“ஒரு மாசமா ஒருத்தி குடைச்சல் கொடுத்துட்டு இருக்கா. அவளை செவ்வியோட இப்ப நான் கொடுத்த மாதிரி ஒன்னு கொடுக்காம, டீச்சர் இந்த பையன் என்னை கிள்ளிட்டான்னு சின்ன பிள்ளைங்க கம்பளைண்ட் பண்ற மாதிரி பண்ணிருக்க? ஆம்பளையா டா நீ? என்கிட்ட மட்டும் வீறாப்பா பேசிட்டு திரியுற”
 
“சண்முகம் சார் வத்தி வச்சிட்டாரா? இப்ப தான் அந்த ஸ்கூல்ல சேந்துருக்கேன். அது மட்டும் இல்லாம ஒரு பொம்பளையை போய் என்ன செய்ய சொல்லு. சாக்கடைன்னு  தெரிஞ்சு போச்சு. அது கூட சமமா பேசி அசிங்க படணுமா?”
 
“இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் இல்லை”, என்று சொல்லி கொண்டே அங்கு அமர்ந்தவள் “எல்லாம் என் தலை எழுத்து. கண்ணுக்கு அழகா, மனசுக்கு புடிச்ச புருஷன் கிடைச்சும் சேந்து வாழ முடியாம, ஏதோ தீவுல வாழுற மாதிரி தவிச்சிட்டு இருக்கேன். இதுல புதுசு புதுசா எவளோ வாரா. எல்லாருக்கும் என் புருஷன் தான் கிடைச்சாரா? நான் என்ன வரம் வாங்கிட்டு வந்தேனோ தெரியலை. எல்லாம் என் தலை எழுத்து”, என்று புலம்பி கொண்டே அழ ஆரம்பித்தாள்.
 
“என் மனசுல ஆசை துளிர் விட ஆரம்பிச்சதே உன்னால தான் டி. இப்படி என்னை பேச விடாம தள்ளி வச்சு, நீயும் கஷ்ட பட்டு, என்னையும் கஷ்ட படுத்துறயே. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”, என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றான்.
 
அடுத்த நாள் முகத்தை திருப்பி கொண்டு இருந்தாள் நந்திதா.
 
“இவ வேற என்னைக்கு மாற போறாளோ? சரி இப்ப ஒரு தடவை சொல்லி பாப்போம்”, என்று நினைத்து கொண்டு மெதுவாக அவள் அருகில் சென்றான்.
 
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் தோசையை எடுத்து தட்டில் வைத்தாள்.
 
“நந்திதா”, என்று அழைத்தான் ஹரி.
 
“என்ன?”
 
“இப்ப எதுக்கு மா கோபம்? அந்த பொம்பளை அப்படி செஞ்சா, நான் என்ன செய்வேன் சொல்லு”
 
“என்ன செய்வியா? சொல்ல வேண்டியது தான ஹரி? எனக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு”
 
“அதை சொல்ல தான் போனேன். ஆனா அவ ஒரு மாதிரி பேசுறா மா”
 
“அப்ப சரி, இன்னைக்கு என்னை உன் கூட கூட்டிட்டு போ. அவளை நான் ஒரு வழி பண்றேன்”
 
“விளையாடுறியா நந்திதா? தேவை இல்லாம நமக்கு பிரச்சனை வர கூடாதுன்னு தான், நானே ஒதுங்கி போறேன். இப்ப நீ போய் பிரச்சனை பண்ணா தப்பா ஆகிரும் மா. சண்முகம் அப்பா கிட்ட சொல்லிருக்கேன்ல? பாக்கலாம். இல்லைன்னா, அவர் கிட்ட சொல்லி லவன்த்க்கு என்னை போட சொல்ற மாதிரி பேசுறேன். அப்படி அங்க போய்ட்டேன்னா, அது வேற பிளாக். அவ மூஞ்சில் முழிக்க வேண்டியது வராது சரியா?”
 
“ஹ்ம்ம்”
 
“என்ன ம்ம்? என்ன கோபம் போகலையா?”
 
“நீ ஏன் ஹரி என்னை கல்யாணம் பண்ண? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்மேல  பைத்தியமா ஆகிருவேனோன்னு பயமா இருக்கு. யாராவது உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிருவாங்களோன்னு  பயமா இருக்கு. என்னை பாவம் பாத்து தான கல்யாணம் செஞ்ச? எனக்கு நீ என்னை விட்டு தள்ளி இருக்குறது கஷ்டமா இருக்கு”, என்று பாவமாய் சொன்னாள் நந்திதா.
 
“லூசு, நான் எங்க உன்னை விட்டு விலகி இருக்கேன்? நீ தான் என்னை தள்ளி நிறுத்தி வச்சிருக்க”
 
“அப்ப நீ வேற பொண்ணை லவ் பண்ணாம இருந்துருக்கலாம்ல? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. ஆனா கோபம் கோபமா வருது. லூசு மாதிரி பண்றேன்னு எனக்கே தெரியுது. ஆனா எனக்கு அன்னைக்கு நீ சொன்ன சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன், அப்படிங்குற வார்த்தை தான் நினைவு வருது போ”
 
“இங்க பாரு நந்திதா. நிஜமாவே நான் லவ் பண்ண பொண்ணு நீ தான் மா”
 
“இப்படி பொய் சொல்லி ஏமாத்தாத. எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு”, என்று சொல்லி விட்டு வேறு அறைக்கு சென்று விட்டாள்.
 
“இவளோட ஐ. டி கார்டு காட்டலைன்னா, இந்த லூசு நம்பாது. இந்த வாரம் ஊருக்கு போகும் போது அதை எடுத்து காட்டுனா தான், இவ நம்புவா. கொஞ்சமாவது பேச விடுறாளா?”, என்று நினைத்து கொண்டே சாப்பிட கூட மறந்து வேலைக்கு சென்று விட்டான்.
 
“சாப்பிடாம போய்ட்டான் பாரு? வரட்டும் இன்னைக்கு”, என்று நினைத்து கொண்டு அவளுடைய அன்றாட வேலைகளை செய்தாள் நந்திதா.
 
நந்திதாவை பற்றியே யோசித்து கொண்டே வண்டியை ஷெட்டில் விட்டவன், ஆபிஸ் ரூம் சென்று சைன் போட்டு விட்டு, ஸ்டாப் ரூம் நோக்கி நடந்து சென்றான். அப்போது எதிரே வள்ளி வந்தாள்.
 
“ச்சி காலைலே இது மூஞ்சுல முழிச்சேட்டேனா? விளங்குன மாதிரி தான்”, என்று நினைத்து கொண்டே அவளை கவனிக்காத மாதிரி சென்றான்.
 
“என்ன ஹரி பாத்துட்டு பாக்காத மாதிரி போறீங்க?”, என்று கேட்டாள்  வள்ளி.
 
“இது எல்லாம் மனித ஜென்மமே கிடையாது”, என்று நினைத்து கொண்டு சென்று விட்டான்.
 
கொஞ்சம் எரிச்சலுடன் தான், அவன் சேரில் அமர்ந்தான். அப்போது இன்னும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே அந்த அறையில் அமர்ந்திருந்தார்கள். வேறு யாரும் வந்திருக்க வில்லை.
 
“இன்னைக்கு என்ன கிளாஸ் எல்லாம் இருக்கு”, என்று பார்வையிட்டு கொண்டிருந்தவனின் அருகே இரண்டு மாணவர்கள் வந்தார்கள்.
 
“என்ன பா?”, என்று கேட்டான் ஹரி.
 
“நேத்து நேரம் ஆகிருச்சுன்னு எங்க ரெண்டு பேருக்கும் சைன் பண்ணல சார்”, என்று சொன்னான் ஒரு மாணவன்.
 
“ஓ ஆமா, சரி கொடுங்க”, என்று சொல்லி அதை திருத்தி கொண்டிருந்தவனின் அருகே வந்தாள் வள்ளி.
 
“இவ எதுக்கு, அவ இடத்துக்கு போகாம இங்க வந்துருக்கா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
 
எல்லாருடைய கவனமும் அந்த வள்ளி மீது தான் இருந்தது.
 
“என்ன ஹரி நான் பேசிட்டே இருக்கேன். நீங்க கண்டுக்காம வந்துட்டீங்க?”, என்று கேட்டாள் வள்ளி.
 
என்னமோ கட்டின பொண்டாட்டி போல் உரிமையாக, அதுவும் ஒரு விட வழிசலோடு கேட்டவளை, ஏற்கனவே எரிச்சலில் இருந்த ஹரி திட்டாமல் போனால் தான் ஆச்சர்யம்.
 
அதுவும் ஸ்டுடண்ட்ஸ் முன்னால், அவள் அப்படி பேசியது அவனுக்கு வெறியை கிளப்பியது.
 
“நான் எதுக்கு நீங்க பேசுனா பேசணும்? யாருங்க நீங்க? அறிவே கிடையாதா? எதுக்கு என்கிட்ட வந்து பேச வரீங்க?”. என்று கத்தினான் ஹரி.
 
அவனுடைய கத்தலில் ஒரு நிமிடம் திகைத்தாலும் “என்ன ஹரி இன்னைக்கு ரொம்ப கோபமா இருக்கீங்க? காலைல சாப்பிட்டு வரலையா? என்னோட சாப்பாடை சாப்பிடுறீங்களா?”, என்று கேட்டாள் வள்ளி.
 
“ஹலோ மேடம் கண்ட இடத்தில் வாங்கி திங்குற பழக்கம் எனக்கு இல்லை. எனக்கு வேளைக்கு விதவிதமா சமைச்சு போட, அழகான பொண்டாட்டி இருக்கா. தேவை இல்லாம என்கிட்ட பேச்சு வச்சிக்கிட்டிங்க, உங்க மரியாதை தான் கெடும். நேத்து தான் உங்க நடவடிக்கை எதுவும் சரி இல்லைனு, பிரின்சிபால் கிட்ட கம்பளைண்ட் கொடுத்திருக்கேன். அவரும் மேலிடத்துக்கு புகார் அனுப்புறேன்னு சொல்லிருக்கார். அதுல இருந்து எப்படி தப்பிக்க போறீங்கன்னு யோசிங்க. வேலையை காப்பாத்திக்கோங்க”
 
….
 
“நான் ரொம்ப ஆசை பட்டு, எனக்கு பிடிச்சு இந்த வேலைக்கு வந்துருக்கேன். ஸ்டுடண்ட்ஸ் முன்னாடி இப்படி கேவலமா நடந்து, அவங்க மனசுலயும் விஷத்தை விதைச்சு, என்னையும் தேவை இல்லாம சீண்டி பாத்தீங்க மரியாதை கெட்டுரும் சொல்லிட்டேன். இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்தா செருப்பு பிஞ்சிரும். போங்க இங்க இருந்து. சொல்றேன்ல? காது கேக்கலை? போங்கன்னு சொன்னேன்”, என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்து அந்த நோட்டை திருத்த ஆரம்பித்தான்.
 
அவனமான பட்ட உணர்வுடன், அங்கு இருந்து சென்றாள் வள்ளி.
 
அவன் காய்ச்சி எடுத்ததை பார்த்த இரண்டு ஆசிரியர்களும் இரண்டு மாணவர்களும்  “இந்த பொம்பளைக்கு இது தேவை தான்”, என்று நினைத்தார்கள்.
 
“ஹரி சார், வள்ளி மிஸ்ஸை கேவலமா திட்டிட்டாங்க”, என்று அந்த ஸ்கூல் முழுவதும் பரவியது. அதுக்காக தான அவன் அப்படி அந்த ஸ்டுடன்ட்ஸ் முன்னால் பேசவே செய்தான்.
 
இதை கேள்வி பட்ட சண்முகமும் ஹரியை கூப்பிட்டு விசாரித்தார். “டீச்சர்ஸ் எல்லாரும் உன்னை ரொம்ப பாராட்டுறாங்க ஹரி. இப்படி கொடுத்தா தான், அவ எல்லாம் சரி பட்டு வருவா. ஆனா எதுக்கு ஸ்டுடன்ட்ஸ் முன்னாடி கோப பட்ட? நீ அப்படி செய்ய மாட்டியே”
 
“என்ன சார் செய்றது? அவங்க முன்னாடி சொன்னா தான அந்த விவரம் பரவும். என் மேல விழ இருந்த தப்பான எண்ணமும் மாறும். அதுக்கு தான் அப்படி செஞ்சேன். இனி வாலாட்ட மாட்டா”, என்று சிரித்தான் ஹரி.
 
“சரி ஹரி. ஆனா நீ நெக்ஸ்ட் மன்த்ல இருந்து லவன்த் டூவல்த்க்கு கணக்கு பாடம் எடு”
 
“நானே அதை தான் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். தேங்க்ஸ் சார்”
 
“ஆனா அதுலயும் பிரச்சனை வரும் ஹரி. இப்ப உள்ள ஸ்டுடன்ட்ஸ் எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவங்களே வந்து உன்னை லவ் பண்றேன்னு சொல்லலாம்”
 
“என்ன சார்  இப்படி பயமுறுத்துறீங்க.  ஆனா கவலை படாதீங்க, அவங்க கிட்ட ஒரு சார் மாதிரி இல்லாம, பிரதர் மாதிரி தான் பழகுவேன். அப்புறம் நம்ம ஸ்கூல்ல, டிராயிங் டீச்சர் போஸ்ட் இப்ப காலியா தான இருக்கு. கவர்ன்மென்ட்ல இருந்து ஆள் போடுற வரைக்கும், நந்திதாவை அந்த வேலைக்கு போடுறீங்களா? அவளுக்கும் நேரம் போகும். சம்பளம் எல்லாம் வேண்டாம்”
 
“ஹ்ம்ம் இது நல்ல ஐடியா தான். சரி ஹரி நாளைல இருந்து அவ வரட்டும்”, என்று சொன்னார் சண்முகம்.
 
மனம் முழுவதும் ஒரு நிம்மதியுடன் வீட்டுக்கு வந்தான் ஹரி.
 
அவன் வருவதுக்கு முன்னேமே, ஹரி வள்ளியை திட்டினது நந்திதாவுக்கு தெரிந்து போனது.
 
அவளுக்கும் அவன் செஞ்சது நிம்மதியை தந்தது.
 
ஆனாலும் “அவனா வந்து சொல்றானா பாப்போம்”, என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
 
அவனும் வந்தான். அதையே மறந்தவன் போல, அவனுடைய அன்றாட வேலைகளை செய்தான். அதில் அவளிடம் வம்பிழுப்பதும் ஒன்று.
 
பொறுத்து பொறுத்து பார்த்தவள், அதுக்கு மேல் முடியாமல் டிவி பார்த்து கொண்டிருந்தவனின் முன்னே போய் டீவியை மறைத்து கொண்டு நின்றாள்.
 
“ஐயோ இன்னைக்கு என்ன ஆச்சு தெரியலையே? எதுக்கு இப்படி முறைக்கிறா? என்று நினைத்து கொண்டு “என்ன நந்திதா?”, என்று கேட்டான்.
 
“இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது?”
 
“ஓ உனக்கு தெரிஞ்சிட்டா?”
 
“ஓ அப்ப தெரிய கூடாதுன்னு நினைச்சிருக்கீங்க, அப்படித்தான? அன்னைக்கும் சொல்லலை. இன்னைக்கும் சொல்லலை”
 
“அதுக்கு இல்லை மா. உன்னை எதுக்கு கஷ்ட படுத்தணும்னு நினைச்சு தான் சொல்லலை”
 
“பொய் சொல்லாதீங்க. வேணும்னு தான் இப்படி பண்றீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை. இதுக்கு தான் அன்னைக்கே கேட்டேன். எதுக்கு என்னை கல்யாணம் பண்றீங்கன்னு. தினமும் நடக்கும் சாதாரண விஷயம் கூட என்கிட்ட ஷேர் பண்ண மாட்டுக்கீங்க”, என்று திட்டி கொண்டே இருந்தவளுக்கு திடீர் என்று விக்கல் வந்தது.
 
“இது வேற”, என்று புலம்பி கொண்டே அவனை திட்டி கொண்டிருந்தாள். விக்கல் வேறு விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது.
 
“விக்கல் எடுக்கே மா. அப்புறம் எதுக்கு கஷ்ட படுற? அமைதியா இரு”, என்று சொன்னான் ஹரி.
 
“ரொம்ப கரிசனம் தான். விக்கல் எடுக்குன்னா தண்ணி கொடுத்து விக்கலை நிப்பாட்டனும். அதை விட்டுட்டு வாயடிச்சிட்டு இருக்கீங்க. இதுவே என்னை காதலிச்சிருந்தா என்னை தாங்கு தாங்குன்னு தாங்கிருப்பீங்கள்ல? எவளோ ஒருத்தியை சுவீட்டினு சொல்றீங்க. என்னை மட்டும் நந்திதானு முழு பேர் வச்சி கூப்பிடுறது. ஒரு தடவையாவது எனக்கு செல்ல பேர் வைக்கணும்னு தோணிருக்கா? உங்க கிட்ட கோப பட்டு போக கூட எனக்கு பிறந்த வீடு இல்லாம போய்ட்டு”, என்று  சொல்லி கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள்.
 
“நான் ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பி இருக்கேன்னு சொன்னது தான் அவ மனசில் ஆழமா பதிஞ்சிருக்கு. அதை நினைச்சு கஷ்ட பட்டு தான் என்மேல இருக்குற அன்பை கூட இப்படி காட்டுறா”, என்று நினைத்து கொண்டு அவள் புறம் திரும்பி அமர்ந்து “தண்ணி கொடுத்து தான் விக்கலை நிப்பாட்டணும்னு இல்லை. இப்படியும் நிப்படலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தை தாங்கி பிடித்தான்.
 
எப்படி என்னும் விதமாய் அவன் முகத்தை பார்த்தாள் நந்திதா.
 
அவனை பார்த்து கொண்டே விக்கி கொண்டிருந்தவளை, ஒரு சிறு சிரிப்புடன் பார்த்து விட்டு அவள் உதடுகளை சிறை செய்தான் ஹரி.
 
அவன் விலகி இருப்பது தான், அவளுக்கு பெரும் காயத்தை கொடுத்தது. அவளே பக்கத்தில் வராதே என்று சொன்னாலும், அவனாகவே அரவணைப்பை தர வேண்டும் என்று எதிர் பார்த்தது அவள் பெண்மை.
 
இப்போது அவனாக கொடுத்த நெருக்கம் ஒரு பெரிய ஆறுதலை தந்தது.
 
அவளும் இன்னும் அவனை நெருங்கி அவன் முத்தத்தில் ஒன்றினாள்.
 
“மேடம் செமையா என் மேல ஆசை வச்சிருக்காங்க. எப்படி காட்டன்னு தெரியாம தான், இப்படி என்னை காய விடுறா”, என்று நினைத்து கொண்டு அவள் உதட்டை விட்டு உதட்டை விலக்காமலே அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்து இறுக்கி கொண்டான்.
 
அவளுடைய கைகளும் அவனுடைய கழுத்தை சுற்றி படர்ந்தது.
 

Advertisement