Advertisement

“நடிக்காத, கொன்னுருவேன். நீ பேசுனதை நான் கேட்டேன். சாகுற வரைக்கும் அவளை நீ மறக்க மாட்டியா? அப்ப எதுக்கு டா என்னை கல்யாணம் செஞ்ச? அவ என்ன உன்னை விட்டு ஓடி போய்ட்டாளா?”
 
“ஏய் அவளை பத்தி தப்பா பேசாத”, என்றான் ஹரி.
 
“பாத்தியா, பாத்தியா! அவளை பத்தி சொன்ன உடனே உனக்கு இவ்வளவு கோபம் வருது? போச்சு, போச்சு என் வாழ்க்கையே போச்சு. என்னை ஏமாத்திட்ட. இரக்க பட்டு தான எனக்கு வாழ்க்கை கொடுத்த? பெரிய தியாகியா டா நீ?”, என்று கேட்டு கொண்டே அழ ஆரம்பித்தாள் நந்திதா.
 
“ஏய் நந்திதா அழாத மா. நானே என் லவ் பத்தி தான் சொல்ல வந்தேன் இப்ப”
 
“ஓஹோ உன்னோட காதல் கதையை கேக்க தான், நான் காத்துட்டு இருக்கேன் பாரு”
 
“அவ யாருன்னு தெரிஞ்சா, நீ இப்படி எல்லாம் கோப பட மாட்ட மா”
 
“யாரு? நீ தான் அந்த பொண்ணுன்னு சொல்ல போறியா?”
 
“ஆமா நந்திதா. அது நீ தான்”
 
“என்னை பாத்தா உனக்கு கேனை மாதிரி இருக்கா? அங்க சாகுற வரைக்கும் அவளை மறக்க மாட்டேன்னு சொன்ன. இப்ப அவளை பத்தி தப்பா பேசாதன்னு என்கிட்ட கோப பட்ட. கடைசியில் பெரிய பொய்யை சொல்ற? இந்த வருசத்துல இது தான் சிறந்த பொய்யா இருக்கும் ஹரி”
 
“இல்லை மா. நான் சொல்றதை கேளு டா”
 
“இந்த மா, டா னு பேசுன, பல்லை பேத்துருவேன், பாத்துக்கோ. எனக்கு இரக்க பட்டு, நான் இந்த வீட்டை என் வீடா நினைக்கனும்னு தான பிளான் பண்ணி இந்த கல்யாணத்தை முடிச்ச? அதுக்காக மட்டும் நானும் இந்த கல்யாணத்தை ஏத்துக்குறேன். என்னோட வீடு இது தான். ஆனா நீ ஒன்னும் என்னோட புருஷன் இல்லை. போடா”
 
“ஏய் அப்ப நான் யாரு?”
 
“நீ பிராடு, சீட்டர், லையர், திருடன், கிரிமினல்”
 
“யாரும் எனக்கு இப்படி பட்டம் கொடுத்திருக்க மாட்டாங்க”
 
“அவங்களுக்கு எல்லாம் உன்னை பத்தி தெரியலை”
 
“ஓ உனக்கு என்னை பத்தி தெரிஞ்சிட்டா? சந்தோசம் சரி வா தூங்கலாம்”, என்று சொல்லி அவள் அருகில் படுத்தான்.
 
“ஏய் படுக்குறேனு சொல்லி, கையை மேல போட்ட கொன்னுருவேன்”, என்று மிரட்டினாள் நந்திதா.
 
“ஹா ஹா கை போட்டா கொன்னுருவியா? அன்னைக்கு முத்தம் கொடுத்தப்ப மட்டும், எதுவுமே பேசாம உதட்டை கொடுத்துட்டு நின்ன? இதுல என் உதட்டை வேற கடிச்சு எனக்கு வெறி ஏத்துற? நீங்க கொன்ன அழகை தான் அன்னைக்கே பாத்தோமே”, என்று சொல்லி சிரித்தான் ஹரி.
 
“ச்சி அசிங்க படுத்திட்டானே”, என்று நினைத்த நந்திதா “எனக்கு தூக்கம் வருது”, என்று சொல்லி அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.
 
“என்ன படுத்துட்ட? லைட் ஆப் பண்ணிட்டு படு நந்திதா”
 
“ஹ்ம்ம் உனக்கு என்ன நான் வேலைக்காரியா? வேணும்னா போய் ஆப் பண்ணு டா”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.
 
“நல்ல மரியாதை கொடுக்குறீங்க மேடம். ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொன்ன ஹரி எழுந்து விளக்கை அணைத்து விட்டு அவள் அருகில் படுத்தான்.
 
மெதுவாக அவளை நோக்கி நகர்ந்தான் ஹரி. அதை உணர்ந்த நந்திதா அவனை திரும்பி பார்த்தாள். மிக அருகாமையில் அவன் முகம் இருந்தது.
 
அவளை அப்படியே அள்ளி அணைக்க துடித்த கைகளை அடக்கிய ஹரி “உன் பக்கத்துல படுக்கலாமா நந்திதா? தூக்கத்துல என்னை எதாவது செஞ்சிர மாட்ட தான? என் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்குமா?”, என்று கேட்டான்.
 
“என்ன கிண்டலா? எனக்கு சிரிப்பே வரல”, என்று சொல்லி கொண்டே தலையணையை தூக்கி இருவருக்கும் இடையில் வைத்து விட்டு “இது தான் எல்லை கோடு. இதை தாண்டி வர கூடாது”, என்று சொல்லி விட்டு திரும்பி படுத்தாள்.
 
“பெரிய அரண் தான்”, என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டே படுத்தான் ஹரி.
 
பாதி ராத்திரியில் அந்த தலையணை, அவள் தலைக்கு அடியில் இடம் பெயர்ந்தது. அதை விட கொடுமை அவன் இடுப்பில், கை போட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து, உறங்கி கொண்டிருந்தாள் நந்திதா.
 
அதை உணர்ந்த ஹரி “அரணை மேடமே இடிச்சிட்டாங்களே”, என்று நினைத்து கொண்டு அவளை தன்னுடன் இறுக்கி கொண்டு தூங்கினான்.
 
காலையில் கண் விழித்த நந்திதா திகைத்தாள். அவன் கை அணைப்பில் இருந்து விலகி எழுந்து அமர்ந்தவள் அங்கு இருந்த தலையணையை எடுத்து அவன் வயித்தில் அடித்து கொண்டே “எந்திரி  டா பன்னி”, என்று எழுப்பினாள்.
 
“எவன் டா அது, பன்னியை வீட்டுக்குள்ள கொண்டு வந்தது?”, என்று கேட்டு கொண்டே எழுந்தான் ஹரி. எதிரே தலையணையை கையில் வைத்து கொண்டு அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
 
“ஓ நீயா நந்திதா? என்ன ஆச்சு விடுஞ்சிடுச்சா?”, என்று கேட்டான் ஹரி.
 
அவனை முறைத்து விட்டு “எதுக்கு டா என்னை கட்டி புடிச்ச?”, என்று கேட்டாள்.
 
“என்னது உன்னை கட்டி புடிச்சேனா? சொல்லவே இல்லை. எப்படி புடிச்சேன்? இப்படியா?”, என்று கேட்டு கொண்டே அவளை இறுக்கி கட்டி பிடித்தான்.
 
“டேய் பிராடு விடு. விடு டா”, என்று அவனை விலக்கினாள் நந்திதா.
 
“நீ தான கேட்ட? அதான் இப்படியானு கேட்டேன்?”
 
“நீ எதுக்கு இந்த தலையணையை எடுத்துட்டு, என்கிட்ட வந்த? நான் அதை தான் கேட்டேன்”
 
“லூசு, நான் ஒன்னும் உன் பக்கத்துல வரல. நீ தான் நைட்டே அதை எடுத்து போட்டுட்டு, என் மேல கையை போட்ட. நான் கூட எடுத்து விடலாமான்னு நினைச்சேன்”
 
“எடுத்து விட்ருக்க வேண்டியது தான டா எருமை?”
 
“எப்படி எடுக்க சொல்லு. தூக்கத்துல உன்னோட சேலை வேற விலகி இருந்துச்சா? அதுவும் விடி விளக்கு வெளிச்சத்தில் உன்னோட இடுப்பு தெரிஞ்சது பாரு அப்பா, சொல்லவே முடியாது அதை. அப்புறம் கண்ணு கண்ட இடத்துக்கு எல்லாம் போகும்.  இதுவே உன்னை கட்டி பிடிச்சிகிட்டா, அங்க எல்லாம் தெரியாது பாரு. அதான் நானும் பிடிச்சிகிட்டேன்”, என்று சிரித்தான் ஹரி.
 
சிவந்த முகத்தை மறைத்தவள் “நான் குளிக்க போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே விட்டாள்.
 
அவள் முகத்தில் வரும் உணர்வுகளை படித்த ஹரி, முகத்தில் புன்னகை தவழ்ந்தது. “வாழ்க்கை இனி சுவாரசியமா போகும், என் செல்லத்தால”, என்று நினைத்து கொண்டே ஒரு துண்டையும், செல்ப்பில் இருந்த புது சோப்பையும் எடுத்து கொண்டு மற்றொரு அறைக்கு குளிக்க சென்றான்.
 
குளித்து முடித்து வந்த பின்னரும், அவள் வெளியே வந்திருக்க வில்லை. நேராக வெளியே சென்றான். சுதாகர் டிவி முன்பு அமர்ந்திருந்தார். விஜி கிச்சனில் இருந்தாள். நேராக அம்மா அருகில் சென்றவன், விஜியை கை பிடித்து அழைத்து வந்து சுதாகர் அருகில் அமர வைத்தான்.
 
“என்ன ஹரி?”, என்று கேட்டாள் விஜி.
 
“இப்ப நான் ஒன்னு சொல்வேன் அது படி செய்யணும்”, என்று சில விஷயங்களை சொல்லி கொடுத்தான். “ஹ்ம்ம் சரி”, என்று இருவரும் சொல்லி விட்டு தங்கள் வேலையை தொடர்ந்தார்கள்.
 
காலை உணவின் போது, “நான் ஹரி கூட ஊருக்கு போகலை. எனக்கு உங்க கூட தான் இருக்கணும்னு ஆசையா இருக்கு”, என்று புது பிரச்சனையை கிளம்பினாள் நந்திதா.
 
“அடுத்த சீன் நடிக்க ரெடி”, என்று விஜி மற்றும் சுதாகரை பார்த்து கண்ணை கட்டினான் ஹரி.
 
“என்ன நந்திதா இப்படி சொல்ற?”, என்று கேட்டாள் விஜி.
 
“ஆமா அத்தை. எனக்கு உங்க கூட இருக்க தான் பிடிச்சிருக்கு. நாம எல்லாரும் இங்கேயே இருப்போம். ஹரி வேணும்னா வாரம் வாரம் இங்க வரட்டும்”, என்றாள் நந்திதா.
 
இப்படி அவள் சொல்லுவாள் என்று தெரிந்து தான், ஏற்கனவே  தன் அம்மா, அப்பாவை ரெடி பண்ணிருந்தான் ஹரி.
 
“இல்லை நந்திதா, அது வந்து”, என்று இழுத்தாள் விஜி.
 
“என்ன அத்தை, நான் உங்க கூட இருக்க கூடாதா?”
 
“அது இல்லை மா. உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே, உங்களை ஊரில் விட்டுட்டு நானும் உங்க மாமாவும் டூர் போகலாம்னு பிளான் பன்னிருந்தோம்”
 
“ஓ டூர் எத்தனை நாள் அத்தை?”
 
“அது ஒரு மாசம் மேல ஆகும் மா”, என்று விஜி சொல்லும் போதே இடை புகுந்த சுதாகர் “உங்க அத்தை பொய் சொல்றா மா. நாங்க வர அதுக்கும் மேலயே ஆகும். அப்புறம் இது டூர் இல்லை, செகண்ட் ஹனிமூன்”, என்று சிரித்தார்.
 
“ஓ  அப்படியா  நல்ல படியா  போய்ட்டு வாங்க”, என்று  சொன்னாள் நந்திதா.
 
ரூம்க்கு வந்த பிறகு “என்ன மேடம் உங்க பிளான் புஸ்சுன்னு போய்ட்டா?”, என்று சிரித்தான் ஹரி.
 
“ரொம்ப சிரிக்காத. பள்ளு சுளிக்கிக்க போகுது”, என்று முறைத்து கொண்டே சொன்னாள் நந்திதா.
 
“ஆமா, நீ எதுக்கு நந்து என் கூட வர பய படுற?”
 
“நந்து  கிந்துனு  கூப்பிட்ட பல்லை  உடைச்சிருவேன். அப்புறம் என்ன சொன்ன? பயமா? எனக்கு ஒன்னும் பயம் இல்லையே”
 
“பயம் இருக்கு. ஏற்கனவே என் அழகில் மயங்கி இருக்குற நீ, என் மேலே இன்னும் காதலாகி கசிந்துருகிருவன்னு தான பயப்படுற?”
 
“நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம். உன் மேல அப்படியே உருகிட்டாலும்? ஆள பாரு”
 
“அதையும் பாக்கலாம்”, என்று சிரித்து கொண்டே உடை எல்லாம் எடுத்து வைத்தான்.
 
அடுத்து இரண்டு நாளில் நந்திதாவை  அழைத்து கொண்டு சண்முகம் வீட்டுக்கு  வந்து விட்டான் ஹரி.
 
மல்லிகாவும், சண்முகமும் அன்புடன் அவர்களை வர வேற்றார்கள். சுதாகரும் விஜியும் கூட வந்தார்கள். பின் பொருள்கள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சென்றார்கள்.
 
புது வீடு, ஒரு வழியாக நந்திதாவுக்கு பழகியது.
 
மல்லிகாவுடன் சேர்ந்து மார்க்கெட் போவது, வித விதமா சமைப்பது, அவனுடன் ஏட்டிக்கு போட்டி பேசி வம்பிழுப்பது என்று பொழுது போனது நந்திதாவுக்கு.
 
ஹரிக்குமே வேலை நன்றாக போனது. அவனை அங்கு உள்ள மாணவ, மாணவியருக்கும் ரொம்ப பிடித்து போனது.
 
எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருக்கும் போது தான், ஒரு புது பிரச்சனை கிளம்பியது ஹரிக்கு.
 
அவனுடன் பணி புரியும் வள்ளி டீச்சர், அவனை ஒரு மாதிரியாக பார்வையிட்டாள்.
 
“இது என்ன டா கேவலமான தலை வலி”, என்று நினைத்து ஒதுங்கி போனான் ஹரி.
 
ஆனால் நாள் ஆக ஆக அவள் தொல்லை அதிகமானது. எதாவது பேச வருவது போல வந்து பக்கத்தில் நிற்பது, தெரியாமல் இடிப்பது போல இடிப்பது, என்று தொல்லை கொடுக்க ஆரம்பித்தாள் வள்ளி.
 
“நந்திதா கிட்ட சொல்லலாமா?”, என்று யோசித்தான். “ஏற்கனவே வேற ஒரு பொண்ணை விரும்புனேன்னு நினைச்சிட்டே என்னை பந்தாடிட்டு இருக்கா. இப்ப இதுவும் தெரிஞ்சதுன்னா சாமி ஆடிருவா. சொல்ல வேண்டாம்”, என்று நினைத்து கொண்டான்.
 
இத்தனைக்கும் வள்ளியின் வயது, ஹரியை விட நான்கு அதிகம். தம்பி மாதிரி நினைக்க வேண்டியவனை பார்த்து  காம பார்வை வீசி கொண்டிருந்தாள்.
 
நாட்கள் போக போக இவனுடைய கிளாஸ் பிள்ளைகளும், அவள் செய்கையை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
 
“ஹரி சார், வள்ளி டீச்சர் கண்ணுல பட்டா அவங்க கோபமே படமாட்டாங்க”, என்று அவர்களுக்குள் பேச்சு வந்த பிறகு தான் உஷார் ஆனான் ஹரி.
 
“இன்னைக்கு அந்த பொம்பளைட்ட பேசியே ஆகணும்”, என்று நினைத்து அருகில் சென்றான்.
 
உதட்டை வளைத்து ஒரு மாதிரி சிரித்தாள் அந்த வள்ளி.
 
“ச்சி இது வேறையா?”, என்று நினைத்து கொண்டு அவளை முறைத்து விட்டு “மேடம் உங்க கிட்ட பேசணும்”, என்று சொன்னான்.
 
ஒரு பேப்பர், பேனா  எடுத்து எழுதி “இது தான் என்  வீட்டு அட்ரஸ். இங்க வாங்க நாம  விவகாரமா, சாரி சாரி விவரமா பேசுவோம்”,  என்று சொன்னாள் வள்ளி.
 
“எதுக்கு  உன் வீட்டுக்கு  வந்து புது பிரச்சனையை  கிளப்பவா?”, என்று நினைத்து கொண்டு நேரடியாக  பிரின்சிபாலை பார்க்க சென்றான்.
 
“என்ன ஹரி இந்த நேரத்தில் பாக்க வந்துருக்க?”, என்று கேட்டார் சண்முகம்.
 
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார்”
 
“சொல்லு பா”
 
“அது வந்து… எப்படி ஆரம்பிக்கன்னு தான்”
 
“என்ன ஆச்சு ஹரி? சொன்னா தான தெரியும்?”
 
“அது இந்த வள்ளி டீச்சர்…”
 
“அவளுக்கு என்ன? பொம்பளையா அவ? அவளும் அவ சேலை கட்டிருக்குற லட்சணமும். ச்சீன்னு தோணும். சரி அவளை பத்தி நீ என்ன சொல்ல வந்த?”
 
“அந்த டீச்சர் ஒரு மாதிரி பாக்குறாங்க சார். எங்க போனாலும் கண்ணுக்கு முன்னால வந்து நிக்குது. ஸ்டுடன்ட்ஸ் எல்லாரும் ஒரு மாதிரி பாக்காங்க. என் மேல என்னோட ஸ்டுடன்ட்ஸ்க்கு பெரிய இம்ப்ரெஸ்ஸன் இருக்கு. என்னை ஹீரோ மாதிரி நினைக்கிறாங்க. ஆனா இப்ப இவங்க இப்படி செய்றதுனால என்னை பத்தி என்ன நினைப்பாங்க?”
 
“இது என்ன ஹரி புது பிரச்சனை?”
 
“ஆமா சார். புது தலை வலியா இருக்கு. சரி நேரடியா பேசலாம்னு போனா, வீட்டு அட்ரஸ் கொடுத்து அங்க வா விவகாரமா பேசுவோம்னு அசிங்கமா சொல்றா. சப்புன்னு அடிக்கணும்னு தான் தோணுச்சு. சீனியர்னு சும்மா விட்டேன்”
 
“இதை கொஞ்சம் கவனமா தான் ஹரி ஹேண்டில் செய்யணும். இது கவர்மெண்ட் ஸ்கூல். அவளும் கவர்மெண்ட் செர்வன்ட். நான் எதுவும் செய்ய முடியாது. நான் அவ நடவடிக்கை சரி இல்லைனு இன்னைக்கு கம்பளைண்ட் பைல் பண்றேன்”
 
“ஹ்ம்ம் சரி சார்”
 
“ஆனா அது வரைக்கும் கொஞ்சம் கவனமா இரு ஹரி. அது கொஞ்சம் மோசமான பொம்பளை. நான் அவளை கூப்பிட்டு இந்த விஷயத்தில் விசாரிச்சா என் மரியாதை தான் போகும். நாங்க எல்லாம் கிழவனா இருக்க போய், எங்க கிட்ட வாலாட்டலை. நீ வயசு பையனா இருக்க போய் இப்படி பண்றா. நீ கிளாசுக்கு போ. நான் பாத்துக்குறேன்”
 
“சரி சார் வரேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போனான்.
 
இதை கவலையாக சண்முகம் போய், மல்லிகாவிடம் சொல்ல “ச்சி பொண்ணுங்க இப்படியா இருப்பாங்க? உன் புருஷனை பத்திரமா பாத்துக்கோ நந்திதா”, என்று அப்படியே அதை நந்திதாவிடம் பற்ற வைத்தாள் மல்லிகா.
காதல் பூக்கும்…

Advertisement