Advertisement

அவளின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை பார்த்த ஹரி, சிறு சிரிப்புடன் உள்ளே சென்றான்.
 
அவள் அருகே போய் நின்ற பின்னும், அடி கண்ணால் அவனை பார்ப்பதும், அடுத்து வேறு எங்கோ பார்ப்பதுமாய் இருந்தாள் நந்திதா.
 
“ஹாய் நந்திதா”, என்று சிரித்தான் ஹரி. அவளோ அமைதியாய் இருந்தாள்.
 
“என் மேல கோபமா?”, என்று கேட்டான் ஹரி. அவள் மௌனம் தொடர்ந்தது.
 
“வேணும்னு செய்யலை மா. உன்கிட்ட நேரடியா என்னை கல்யாணம் செஞ்சிக்கிறியான்னு கேக்க தயக்கமா இருந்தது. அதனால் தான் இந்த யோசனை செஞ்சேன். அதுவும் நான் இல்லை. அம்மா தான்….”
 
“ஏன் ஹரி இப்படி?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“ஏன்னா எனக்கு உன்னோட சந்தோசம் முக்கியம். நீ பழசை மறக்கணும். எங்க கூட சகஜமா இருக்கணும். இது தான் உன்னோட வீடுன்னு ஆகிட்டு. அப்புறம் நீ யாரோ மாதிரி, நிம்மதி இல்லாம இருக்கலாமா சொல்லு? இப்ப கல்யாணம் ஆகிருச்சுன்னு வச்சிக்கோ, நீ பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வந்துருக்கன்னு நினைச்சிக்குவ. நாங்களும் நிம்மதியா இருப்போம் அதான்”
 
அவன் பதிலில் உருகியவள், “எனக்காக இப்படி மூணு பேரும் யோசிச்சீங்க. சரி தான். ஆனா இது உங்க வாழ்க்கை ஹரி”, என்றாள்.
 
“ஏன் என்னோட வாழ்க்கைக்கு என்ன? நாம ஒரு கவிதை மாதிரி ஒரு வாழ்க்கை வாழ போறோம். நீ வேணா பாரேன்”, என்று சொல்லி சிரித்தான்.
 
“போங்க ஹரி. தப்பு பண்ணிட்டீங்க. அவசர பட்டுட்டீங்க”
 
“எதுக்கு இப்படி சொல்ற நந்திதா? என்னை உனக்கு பிடிக்கலையா?”
 
“ப்ச் நான் எங்க அப்படி சொன்னேன்? அதான் அன்னைக்கே உங்களை சைட் அடிச்சேன்னு உளறிட்டேனே. பிரச்சனை எனக்கு இல்லை. உங்களுக்கு தான். இப்ப நல்ல நிலைமைல இருக்கீங்க. அழகா இருக்கீங்க. அம்மா, அப்பா அன்பா இருக்காங்க? உங்களுக்கு என்னை விட பெஸ்ட்டான பொண்ணு கிடைக்கும். இப்ப என்னோட நிலைமைக்காக இப்படி அவசர பட்டு கல்யாண ஏற்பாடு செஞ்சு …..”
 
“ஏய் நந்திதா. அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நீ மனைவியா வரது சந்தோசம் தான்”
 
“போங்க ஹரி. சிம்பதில இப்படி அவசர பட்டுட்டீங்க. நான் வேணும்னா அத்தை, மாமா கிட்ட வேற பொண்ணு பாக்க சொல்லவா?”
 
“ஏய் லூசு, சிம்பதில வாழ்க்கை கொடுக்குற அளவுக்கு நான் வள்ளல் இல்லை மா. எனக்கும் உன்னை பிடிச்சது. அதுக்கு பிறகு தான் இந்த ஐடியாவே தோணுச்சு”
 
“பொய்”
 
“உண்மை”
 
“இல்லை பொய் தான்”
 
“இப்ப என்ன? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குனு உனக்கு நிரூபிக்கணும் அப்படி தான? இரு வரேன்”, என்று சொன்னவன் அவளை விட்டு விலகி வாசலுக்கு நடந்தான்.
 
குழப்பமாக அவனை பார்த்து கொண்டு நின்றாள் நந்திதா.
 
வாசல் வரை சென்ற ஹரி, வெளியே எட்டி பார்த்தான் யாராவது இருக்கிறார்களா என்று.
 
யாரும் இல்லை என்றவுடன் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, அறை கதவை சாத்தி தாளிட்டான்.
 
“பிடிச்சிருக்கானு கேட்டா, எதுக்கு கதவை சாத்துறான்?”, என்று நினைத்து மேலும் குழம்பினாள் நந்திதா.
 
அதே சிரிப்போடு அவள் அருகே வந்தான் ஹரி. “எதுக்கு கதவை பூட்டுனீங்க ஹரி? அத்தை வருவாங்க”, என்று சொல்லி விட்டு அதை திறக்க சென்றாள்.
 
அடுத்த நொடி அவள் கைகளை பற்றி நிறுத்தினான் ஹரி.
 
அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்த நந்திதா “என்ன ஹரி?”, என்று கேட்டாள். அவள் வார்த்தைகள் தடுமாறியது.
 
பிடித்த கையை விடாமல் அவள் அருகில் வந்தான். அவனுடைய நெருக்கத்தையும், தொடுகையும் முதல் முறை அனுபவிப்பதால் பெயர் சொல்ல முடியாத உணர்வை அடைந்தாள் நந்திதா.
 
“நீ தான் எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்றதை நம்பலையே. அதை நிரூபிக்க வேண்டியது என்னோட கடமை தான?”, என்று சிரித்தான் ஹரி.
 
அவனுடைய சிரிப்பில் கலந்து கொள்ள முடியாமல் அவஸ்தையாய் நெளிந்தாள் நந்திதா.
 
பிடித்திருந்த கையை விட்ட ஹரி, அவள் தோளை சுற்றி தன் கைகளை போட்டான்.
 
கூச்சத்துடன் அதை விலக்கினாள் நந்திதா. மெதுவாக அங்கு இருந்த கண்ணாடி முன்பு போய் அவளை நிறுத்தினான் ஹரி.
 
இருவரும் அருகருகே நிற்கும் பிம்பம் கண்ணாடியில் தெரிந்தது.
 
குழப்பமாக அவன் முகத்தை பார்த்தாள்.
 
“என்னை பாக்காத, அங்க பாரு”, என்று கண்ணாடியை காட்டிய ஹரி “எனக்கு உன்னை விட பொருத்தமான பொண்ணு கிடைப்பாளா நந்திதா?”, என்று கேட்டான்.
 
விழி விரித்து அவனை பார்த்தாள். மறுபடியும் அவள் தலையை திருப்பி கண்ணாடியை பார்க்க வைத்த ஹரி “பாரு நந்திதா, ரெண்டு பேரும் எப்படி நிக்குறோம்னு? எனக்காகவே உன்னை கடவுள் படைச்ச மாதிரி தான இருக்கு? அப்படியே தேவதை மாதிரி என் கண்ணுக்கு தெரியுற”, என்றான்.
 
மெதுவாக அவன் கைகள் அவளுடைய நெற்றியை வருடியது. அவன் கண்களை மிக அருகில் பார்த்தாள் நந்திதா.
 
“இந்த நெத்தில இருக்குற பொட்டு கூட எனக்கு பிடிச்சிருக்கு டா. அது உன்னோட நெத்தில இருக்குறதுனால”, என்று சொன்ன ஹரியின் விரல்கள் அவள் கண்ணிமையை வருடியது.
 
“கம்பீரமான மகாராணிக்கு இருக்குற மாதிரி உனக்கு இருக்குற இந்த புருவம் எனக்கு பிடிச்சிருக்கு. இந்த கண்கள் என்னை பாக்கணும் அப்படிங்குறதுக்காக தான் என்னையே கடவுள் படைச்சிருக்காருன்னு நான் நம்புறேன். பவுடர் கூட பூசாத இந்த கன்னம் எனக்கு மெழுகு சிலையை தான் நினைவு படுத்துது”, என்று சொன்ன ஹரியில் விரல்கள் அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டிருந்தது. சிலை போல் உறைந்து நின்றாள் நந்திதா.
 
மெதுவாக அவன் விரல்கள், அவள் உதடுகளை தீண்டும் போது நந்திதா கண்கள் தன்னாலே மூடியது. அடிவயிற்றில் ஒரு விதமான இன்பமான உணர்ச்சியை உணர்ந்தாள்.
 
“இந்த உதடு ஹரி, ஹரின்னு என்னோட பேரை சொல்லும் போது, இந்த பேரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நந்திதா”, என்றான் ஹரி.
 
கண் திறந்து அவனை பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்தவன் “இப்ப நம்புறியா, எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு?”, என்று கேட்டான்.
 
அதில் நிகழ்காலத்துக்கு வந்தவள், “இருந்தாலும் ஹரி…”, என்று இழுத்தாள்.
 
“இன்னும் நீ நம்பலையா?”, என்ற ஹரி “ஒருத்தங்களை மனசுக்கு பிடிக்காம முத்தம் கொடுக்க முடியாது தான நந்திதா?”, என்று கேட்டான்.
 
“எதுக்கு இப்படி கேக்குறான்?”, என்று நினைத்து “ம்ம்”, என்று தலை அசைத்தாள்.
 
“அப்ப அப்படியே உன்னை பிடிச்சிருக்குன்னு நிரூபிக்கிறேன்”, என்று சொன்ன ஹரி அவள் இதழ்களை, தன் இதழ்களால் மூடினான்.
 
அதிர்ச்சியில் முட்டை போல் விரிந்த நந்திதா கண்கள், முத்த மயக்கத்தில் ஒரு துளி இடைவெளி இல்லாமல் மூடியது.
 
அவள் உதடுகளை, அவன் உதடுகள் மூடி இருக்கும் போதே, அவள் இதழ்கள் பிரிந்து அவன் உதடுகளுக்கு வழி விட்டது.
 
அதுக்காக காத்திருந்த ஹரி உதடுகள், அவள் உதடுகளை கவ்வி கொண்டது.
 
அவளுடைய கீழ் உதடுகள், அவன் உதடுகளில் சிறை பட்டிருக்கும் வேளையில் தான் சுயநினைவுக்கே வந்தான் ஹரி.
 
“என்ன டா செய்ற? விடு டா ஹரி”, என்று கெஞ்சியது மனசாட்சி.
 
“ப்ளீஸ் டா. சும்மா தான் ஆரம்பிச்சேன். ஆனா முடியல. ப்ளீஸ் கொஞ்ச நேரம் கொடுத்துக்குறேனே”, என்று அதனிடம் கெஞ்சினான் ஹரி.
 
“அதெல்லாம் கிடையாது. விடு. விலகு முதல்ல. இத்தனை நாள் காத்துட்டு இருந்துட்டு, இப்ப இப்படி செஞ்சு காரியத்தை கெடுத்துறாத டா”
 
“என் செல்லமே, எப்படி கோப்பரேட் பண்ணிட்டு இருக்கா? நீ வேற, தூர போ. இன்னும் என்னைக்கு இப்படி சந்தர்ப்பம் கிடைக்க போகுதோ”, என்று அதை அடக்கி விட்டு முத்தத்தில் கவனம் செலுத்தினான்.
 
மந்திரத்துக்கு கட்டு பட்டது போல், தன் உதடுகளை அவனுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தாள் நந்திதா. இதில் அவளே அறியாத விசயம், அவளுக்கே தெரியாமல் இவள் பற்கள் அவன் உதடுகளை கடித்தது தான்.
 
ஆனால் அதை உணர்ந்த ஹரி, கள் உண்ட வண்டாக அவள் உதடுகளை பிய்த்து எடுத்து விட்டான்.
 
“தோரணம் கட்ட ஆள் வந்துட்டாங்க அத்தை”, என்ற வனிதாவின் குரல் கேட்டது ஹரிக்கு.
 
அடுத்த நொடி நந்திதாவை விட்டு விலகிய ஹரி, கண்களை மூடி இருந்த நந்திதாவை சின்ன சிரிப்புடன் பார்த்தான்.
 
அவன் விலகலை உணர்ந்து கண் விழித்து அவனை பார்த்தாள் நந்திதா.
 
“இப்ப புரியுதா? உன்னை எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு. இனி கவலை படாம சந்தோசமா இருக்கணும் சரியா?”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
 
அப்படியே அங்கு இருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள் நந்திதா.
 
“இப்ப இவன் என்ன செஞ்சான்? ஏன் இப்படி செஞ்சான்? அப்படியே உடம்பு எல்லாம் எதுக்கு இப்படி சுடுது. ஏன் இப்படி பேன் ஓடியும் வேர்த்து ஊத்துது. எப்பா இது முத்தமா? என் ரத்தம் எல்லாம் உறைஞ்ச மாதிரி இருக்கு. எதுக்கு இப்ப விலகுனான். இன்னும் வேணும்னு ஏன் தோணுது?”, என்று தன்னையே மறந்து யோசித்து கொண்டிருந்தாள் நந்திதா.
 
அடுத்து வந்த நாளில் அவன் முன்பு வெட்கத்துடன் நடமாடி கொண்டிருந்தாள். முதலில் “நான் செஞ்சதில் கோபமா இருக்காளா?”, என்று நினைத்த ஹரிக்கு, அதுக்கு பிறகு தான் அவள் வெட்கம் கண்ணில் பட்டது. அதன் பின் தான் கொஞ்சம் நிம்மதியானது.
 
அடுத்து அவனும், அவளை, அவள் வெட்கத்தை ரசித்து கொண்டிருந்தான். கல்யாண நாளும் வந்தது.
 
தேவதை போல் அவளை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தாள் வனிதா.
 
சுற்றி இருந்த உறவினர்களின் கூட்டத்தால், சிறு நடுக்கத்துடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் நந்திதா.
 
ஹரியோ அவள் அழகில் சொக்கி போய் அமர்ந்திருந்தான்.
 
அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம் தடுக்க, குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் நந்திதா,
 
ஒரு வழியாக அவளுடைய கழுத்தில் தாலியை கட்டி, அவளை தன்னுடையவளாக ஆக்கி கொண்டான் ஹரி.
 
தாலி கட்டி முடித்த பின் அவனை நிமிர்ந்து பார்த்த நந்திதா, அழகான புன்னகையை அவனை பார்த்து சிந்தினாள்.
 
வாழ்க்கையிலே இந்த தருணம் அதிக சந்தோசம் மிகுந்ததாக இருந்தது ஹரிக்கு.
 
அன்று முழுவதும் ஹரியின் பிரண்ட்ஸ், அப்புறம் சொந்தக்காரர்கள் ஹரியையும், நந்திதாவையும் கிண்டல் அடித்தே சிவக்க வைத்தார்கள்.
 
அன்று இரவே முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டது. சாயங்காலமே நெருங்கின உறவினர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள். அடுத்து ஹரியின் நண்பர்களும் சென்று விட்டார்கள். இருந்தது சுதாகர், விஜி, மணமக்கள் அடுத்து ஹரியின் நண்பன் முரளி மட்டுமே.
 
“காலையில் சீக்கிரமே எழுந்தது, ரொம்ப சோர்வா இருக்கும். போய் கொஞ்ச நேரம் படுங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்கள் சுதாகரும், விஜியும்.
 
நந்திதாவும் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்.
 
உள்ளே வந்து அமர்ந்தவள், அவன் புகை படத்தை கையில் எடுத்தாள். சிறு வெட்கம் வந்தது அவளுக்கு.
 
“அன்னைக்கு கொஞ்ச நேரத்தில் என்ன எல்லாம் செஞ்சிட்டான்? இன்னைக்கும் எதாவது செய்வானோ? ச்சி நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்? சும்மா இருந்தா இப்படி தான் தோணும். என்னைக்கு ஊருக்கு கிளம்பனும்னு தெரியலை. ஹரி கிட்ட கேட்டு, போறதுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வைப்போம்”, என்று நினைத்து வெளியே வந்தாள்.
 
சிரித்த முகத்துடன் வந்தவளின், காதில் விழுந்த வார்த்தைகளில் முகத்தில் இருந்த புன்னகை, துணி கொண்டு துடைத்தது போல காணாமல் போனது.
 
அங்கே “உன்னுடைய வருஷ கணக்கான காதல் எங்க டா போச்சு? அந்த பொண்ணை நீ மறந்துட்டியா? உருகி உருகி காதலிச்சியே? அதெல்லாம் பொய்யா? நந்திதாவை உனக்கு உண்மையிலே பிடிச்சிருக்கா?”, என்று கேட்டு கொண்டிருந்தான் முரளி.
 
இந்த வார்த்தைகளை கேட்டு, ஏதோ வெளியே சொல்ல முடியாத வேதனையை அடைந்தாள் நந்திதா.
 
“இதுக்கு ஹரியோட பதில் என்னவா இருக்கும்?”, என்று கேட்கும் ஆவலில் ஒளிந்திருந்து அவன் முகத்தை பார்த்தாள்.
 
ஆனால் அவன் “டேய் முரளி சும்மா இரு டா. நந்திதா காதில் விழுந்துற போகுது? என்னோட சுவீட்டியை எப்படி டா மறக்க முடியும்? அவ என் உயிர் டா. நான் செத்தா கூட அவளை மறக்க முடியாது”, என்றான்.
 
அவன் பதிலில் அப்படியே உறைந்த நந்திதா, மெதுவாக வந்த தடயமே இல்லாமல் அவள் அறைக்குள் சென்று குப்புற படுத்து அழுதாள்.
 
“அப்ப பரிதாப பட்டு தான் என்னை கல்யாணம் செஞ்சிருக்கான். ஆமா என்னை எல்லாம் விருப்ப பட்டா கல்யாணம் செய்ய முடியும்? நான் இந்த உலகத்தில் பிறந்ததே வேஸ்ட்”, என்று நினைத்து குமுறி கொண்டிருந்தாள்.
 
“அப்ப எதுக்கு டா நந்திதாவை கல்யாணம் செஞ்ச?”, என்று கேட்டான் முரளி.
 
“டேய் முரளி என்னோட காதலியே நந்திதா தான் டா”, என்று சொல்லி சிரித்தான் ஹரி.
காதல் பூக்கும்…

Advertisement