Advertisement

“இரு நந்திதா, நான் போட்டோ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் விஜி.
 
ஒரு பொண்ணுடைய போட்டோவை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.
 
வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள் நந்திதா.முதலில் போட்டோவை ஹரி கையில் கொடுத்து, “பொண்ணு பிடிச்சிருக்கான்னு பாரு டா”, என்று சொன்னாள் விஜி.
 
“யார் போட்டோவை அம்மா தராங்க”, என்று நினைத்து கொண்டே அதை வாங்கி பார்த்தவன் மனதுக்குள் சிரித்து கொண்டான்.
 
அது அவனுடைய மாமா பொண்ணு வனிதா. ஒரு பரிட்சை எழுத இங்கே வந்திருந்த போது வைத்து விட்டு சென்ற போட்டோ அது.. வனிதா பயங்கரமான கருப்பு. அவள் போட்டோவைத் தான் இப்போது விஜி காண்பித்தாள்.
 
“அம்மா இது எல்லாம் அநியாயம். இந்த பொண்ணா?”, என்று அலறினான் ஹரி.
 
“எங்க கொடு நான் பாக்குறேன்”, என்று வாங்கி பார்த்தார் சுதாகர். அவருக்கும் தன்னுடைய மனைவி எந்த வழியில் காய் நகர்த்துகிறாள் என்று புரிந்து போனது.
 
சுதாகர் கையில் இருந்து போட்டோவை வாங்கிய விஜி “இந்த பொண்ணுக்கு என்ன மா குறைச்சல்?”, என்று நந்திதாவிடம் காண்பித்தாள்.
 
மனதில் எழுந்த ஒரு வித வலியுடன், அந்த போட்டோவை பார்த்த நந்திதா திகைத்தாள். அடுத்த நொடி “என்ன அத்தை இது? ஹரிக்கு இப்படி ஒரு பொண்ணா?”, என்று சொன்னாள்.
 
“ஏன் மா? இவளுக்கு என்ன?”
 
“இல்லை அத்தை, பொண்ணு ரொம்ப கருப்பா இருக்கு”
 
“கருப்பா இருந்தா என்ன மா? என்னோட அண்ணண் பொண்ணு தான். நல்ல படிச்சிருக்கா. தங்கமான பொண்ணு. அப்புறம் என்ன வேணும்?”
 
“பாரு நந்திதா, எப்படி ஒரு பொண்ணை பாத்து வச்சிருக்காங்கன்னு? அதுவும் சொந்தத்துல. சொந்தத்துல கல்யாணம் பண்ண கூடாது தான?”, என்று கேட்டான் ஹரி.
 
“ஹ்ம்ம் ஆமா ஹரி” என்று மண்டையை ஆட்டினாள் நந்திதா.
 
“நானும், உங்க அப்பாவும் சொந்த காரங்க தான். இவரோட அம்மாவும், எங்க அப்பாவும் கூட பிறந்தவங்க. நாங்க கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழலையா? கேளுமா நந்திதா”
 
“இல்லை அத்தை, அது வந்து, எனக்குமே அந்த பொண்ணு பிடிக்கலை, வேண்டாமே ப்ளீஸ்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“வேற யாரு இவனுக்கு உடனே பொண்ணு தருவாங்க. ஒன்னு இவன் இந்த வனிதாவை கல்யாணம் செய்யணும். அப்படி இல்லைன்னா, எந்த வேலைக்கும் அனுப்ப மாட்டேன்”, என்று உறுதியாக சொன்னாள் விஜி.’
 
“அத்தை ப்ளீஸ் சொல்றதை கேளுங்க. கல்யாணம் அப்படிங்குறது பிடிச்சவங்களை தான் பண்ணிக்க முடியும். மனசுக்கு விருப்பம் இல்லைன்னா, அந்த கல்யாணம் நல்லா இருக்காது அத்தை. ஹரியை பாருங்க ஹீரோ மாதிரி இருக்காங்க. அவங்களுக்கு பொருத்தமான பொண்ணா, அழகான பொண்ணா தான் பாக்கணும்”
 
“அழகான பொண்ணா பாக்கணும்னா, இவனுக்கு உலக அழகியை தான் கட்டி வைக்கணும்”
 
“இப்படி சொன்னா எப்படி அத்தை? ஹரி முதலில் வேலைக்கு போகட்டும். நீங்க பொறுமையா வேற பொண்ணு தேடுங்க. அப்புறம் கல்யாணம் வைக்கலாம் சரியா அத்தை”
 
“அதெல்லாம் கிடையாது. நான் முடிவு செஞ்சா செஞ்சது தான்”
 
“ப்ளீஸ் அத்தை எனக்காக”
 
“சரிம்மா நீ இவ்வளவு சொல்றதுனால உன்கிட்டயே கேக்குறேன். இவன் அழகா தான இருக்கான்? இவனுக்கு நல்ல பொண்ணா பாக்கணும்னு சொல்றல்ல? பேசாம நீயே இவனை கல்யாணம் செஞ்சிக்கோயேன்”, என்று குண்டை தூக்கி போட்டாள் விஜி.
 
அதிர்ச்சியாக எல்லாருடைய முகத்தையும் பார்த்தாள் நந்திதா.
“என்ன மா நந்திதா, இப்படி அதிர்ச்சியா பாக்குற? விளையாட்டுக்கு கேக்கலை மா. நிஜமாவே விருப்பத்தோடு தான் கேக்குறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை அன்னைக்கு மகளா பாத்துக்குறேன்னு தான் சொன்னேன். இப்பவும் சொல்றேன். உன்னை என் மகளா தான், எப்பவும் நினைப்பேன். ஆனா நீ என்னமோ இது யார் வீடோ அப்படிங்குற மாதிரி இருக்குற? உன்னை பொறுத்த வரைக்கும் இது அடுத்த வீடு தான். அப்படி தான் நினைக்க தோணும். அது இயற்கை தான். ஆனா நீ இப்படி இருந்தா எங்களுக்கு கஷ்டமா இருக்கும் மா.
 
இதுவே நீ ஹரியை கல்யாணம் செஞ்சிட்டா, நீ உன்னோட புகுந்த வீட்டுக்கு வந்துருக்குறதா தான் நினைப்ப. ஹரிக்கும் அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைச்ச மாதிரி இருக்கும். எனக்கும் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச சந்தோசம் கிடைக்கும். அவனுக்கு கிடைச்ச வேலைக்கு சந்தோசமா போவான். உனக்கும் இது உன்னோட வீடா நினைக்க தோணும்? எப்படி என்னோட ஐடியா?”, என்று கேட்டாள் விஜி.
 
“என்ன இந்த அம்மா லாஜிக்கே இல்லாமல், இப்படி ஓப்பனா சம்மதம் கேட்டுட்டாங்க?”, என்று விழித்தான் ஹரி.
 
ஒரு சிரிப்புடன் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் சுதாகர்.
 
குழப்பமாக விஜியை பார்த்த நந்திதா, ஹரியை பார்த்தாள்.
 
“இவனை போய் வேண்டாம்னு எப்படி சொல்ல தோணும்? ஆனா உடனே ஓகே சொன்னா அலையுறேன்னு நினைப்பாங்களோ? சும்மா சைட் அடிக்க தான் நினைச்சேன். ஆனா எனக்கே எனக்குன்னு, என்கிட்டயே அவனை தூக்கி கொடுக்க போறாங்களா?”, என்று நினைத்து மனது குதூகலம் அடைந்தது நந்திதாவுக்கு.
 
தன்னுடைய உணர்வுகளை மறைத்தவள் “அது வந்து அத்தை…”, என்று இழுத்தாள்.
 
“உனக்கு நந்து ஓகே தான டா ஹரி?”, என்று சிரித்து கொண்டே சம்மதம் கேட்டாள் விஜி.
 
“உன் அண்ணன் பொண்ணுக்கு, நந்திதா பல கோடி மடங்கு பெஸ்ட் மா. ஆனா, அவளுக்கு என்னை பிடிக்கணுமே”, என்று சொன்னான் ஹரி.
 
“உலக நடிப்பு டா மகனே”, என்று நினைத்து ஹரியை பார்த்தார் சுதாகர்.
 
“அவனுக்கு ஓகே வாம் மா. நீ என்ன சொல்ற?”, என்று நந்திதாவை பார்த்து கேட்டாள் விஜி.
 
“இல்லை அத்தை அது வந்து… நான் வந்து… நான் எப்படி மருமகளா…”, என்று மறுபடியும் இழுத்தாள் நந்திதா.
 
“சரி மா நந்திதா. உனக்கு ஹரியை பிடிக்கலை போல? சரி அவன் கல்யாணம் முடிஞ்ச உடனே உனக்கு வேற மாப்பிள்ளை பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு ஹரியிடம் திரும்பி “நந்துவுக்கும் உன்னை பிடிக்கலையாம் டா ஹரி. உனக்கு என் அண்ணன் பொண்ணு தான் சரி படுவா. நான் இப்பவே எங்க அண்ணன் கிட்ட பேசுறேன்”, என்று எழுந்து போனாள் விஜி.
 
“அந்த கருவாச்சி தான், உனக்கு பொண்டாட்டி போல டா ஹரி. ஐயோ பாவம் டா நீ”, என்று சொல்லி விட்டு விஜி பின்னே போனார் சுதாகர்.
 
இவர்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தார்கள். குழப்பமாக அமர்ந்திருந்தவளை பார்த்த ஹரி “விடு நந்திதா. இந்த தடவை இல்லைன்னா இன்னொரு தடவை பாஸ் பண்ணி வேலை வாங்கிக்கிறேன். இந்த வேலை போனா போகுது”, என்றான்.
 
“என்ன ஹரி இப்படி சொல்லிட்டீங்க? அது கஷ்ட பட்டு வாங்குன வேலை”
 
“என்ன செய்ய? வேலைக்காக அந்த கருப்பழகியை கல்யாணம் செய்ய முடியுமா சொல்லு? நீயே பாத்த தான? அவ எப்படி இருக்கான்னு”
 
“ஹ்ம்ம் சரி தான். ஆனா வேலை. இதுக்கு என்ன தான் வழி ஹரி?”
 
“அம்மா சொன்ன மாதிரி ஒரே வழி தான இருக்கு நந்திதா?”
 
“என்ன ஹரி?”
 
“நம்ம கல்யாணம் தான்”
 
“ஹரி”
 
“ஆமா, நந்திதா. எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு நம்ம கல்யாணம் தான். ஆனா, உனக்கு தான் என்னை பிடிக்கலையே. சரி விடு. உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு என்னை மாதிரி பையனை எப்படி பிடிக்கும்? என்ன.. ராத்திரி பகல் தூங்காம படிச்சு கண்ணு முழிச்சு வாங்குன வேலை. சரி அதுக்காக என்ன செய்ய முடியும்?”, என்று சொல்லி வராத கண்ணீரை துடைப்பது போல பாவனை செய்தான் ஹரி. சிரிப்பை அடக்குவது அவனுக்கு பெரும்பாடாய் இருந்தது.
 
“சும்மா இருங்க ஹரி. உங்களுக்கு என்ன குறைச்சல்? எப்படி இருக்கீங்க தெரியுமா? சும்மா ஹீரோ மாதிரி. இப்ப கூட நான் உங்க போட்டோவை ரூம்ல பாத்து, ஹீரோ மாதிரி இருக்கீங்கன்னு சொல்லிட்டு தான் வந்தேன். எல்லா பொண்ணுங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்”, என்று உளறியே விட்டாள் நந்திதா. அவனை சமாதான படுத்த, தன்னுடைய மனதில் நினைத்ததையும் சேர்த்து சொல்லி விட்டாள் நந்திதா.
 
“பாரு டா, கேடி. ரூம்ல என் போட்டோவை தான் பாத்துட்டு இருந்தாளா? அதுக்கு தான் மேடம் அப்படி குனிஞ்ச தலை நிமிராம இருந்தாங்களா?”, என்று நினைத்து கொண்டு “வேற பொண்ணுக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன நந்திதா? உனக்கு என்னை பிடிக்கலையே. சரி விடு, வேற வேலையை பாப்போம்”, என்று எழுந்து போக பார்த்தான் ஹரி.
 
அடுத்த நொடி, அவன் கைகளை பற்றி நிறுத்தி இருந்தாள் நந்திதா. அப்படியே புல்லரித்து போனது ஹரிக்கு.
 
“உங்களை பிடிக்கலைன்னு நான் எப்ப சொன்னேன்? உங்களை பிடிக்காம யாருக்கும் போகாது. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா ஹரி நான், இப்போதைக்கு ஒரு அனாதை மாதிரி. எனக்குன்னு யாருமே இல்லை. என்னை கல்யாணம் செஞ்சா உங்க சொந்தகாரங்க எதாவது பேசுவாங்க. இன்னும் சொல்ல போனா மருமகள்னா சீரோட வரணும். ஆனா, நானே உங்க தயவுல தான் இருக்கேன். அதான் யோசிச்சேன் ஹரி. மித்த படி உங்களை பிடிக்காம போகுமா?”
அவள் அருகில் அமர்ந்த ஹரி, அவள் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு அவள் கையை தன்னுடைய இரண்டு கைகளுக்குள் பொத்தி வைத்து கொண்டு “எனக்கு சீதனமா நீ தான் வரணும்னு நினைக்கிறேன் நந்திதா. நீ கொண்டு வர போற பொருளுக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு. நான் உன்னை மதிக்கிறேன். எனக்கு பிடிச்ச பொண்ணு, என்னோட பொண்டாட்டியா வரணும்னு நினைக்கிறேன். அது மட்டும் இல்லாம யாரும் இல்லாம அனாதை மாதிரி இருக்கிறேன்னு சொல்றல்ல? உனக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு நினைக்கிறேன்”
 
…..
 
“காலம் முழுக்க உனக்காகவே வாழணும்னு நினைக்கிறேன். உன் மனசுல இருக்குற தனிமை உணர்வை போக்கணும்னு ஆசை படுறேன் நந்திதா. எனக்கு உன்னை விட வேற எந்த பொண்ணும் பொருத்தமா இருக்க மாட்டா”
 
…..
 
“என்னை கல்யாணமா செஞ்சுக்கிறியா? இப்பவும் உன்னை கட்டாய படுத்தலை. இந்த சூழ்நிலைன்னு சொல்லி உன்னை சூழ்நிலை கைதியாவும் ஆக்கல. முழுமனசோட கேக்குறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நந்திதா. உன்னை கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுறேன். உனக்கும் விருப்பம்னா சொல்லு. இல்லைன்னா கூட நீ இப்ப மாதிரியே, எனக்கு பிரண்டா, அம்மா அப்பாக்கு பொண்ணா, எங்க கூடவே எப்பவும் இருக்கலாம்”, என்று சொன்னவன் மனதை கல்லாக்கி கொண்டு “வேற உனக்கு புடிச்ச பையனா கல்யாணமும் செஞ்சிக்கலாம். எல்லாமே உன்னோட விருப்பம் தான். யோசிச்சு முடிவு எடு நந்திதா”, என்று சொல்லி விட்டு எழுந்தான்.
 
“ஐயோ சும்மா சீன் போட்டா, நிஜமாவே எழுந்து போறான். உன்னை கல்யாணம் செய்ய எனக்கு எப்படி பிடிக்காம போகும்? தினமும் உன்னை சைட் அடிப்பேன் டா ஹீரோ, ஜாலி. அவனை போக விடாத நந்திதா. பிடிச்சிருக்குன்னு சொல்லு. ஆனா நீ அவன் கிட்ட மயங்குன மாதிரி காட்டிக்காத”, என்று தனக்குள் சொல்லி கொண்டு நல்ல பிள்ளையாய் “ஹரி”, என்று அழைத்தாள்.
 
திரும்பி பார்த்தான் ஹரி. மிகுந்த தயக்கத்துடன் சொல்வதை போல “எனக்கு உங்களை கல்யாணம் பண்ண சம்மதம் ஹரி”, என்று சொன்னாள் நந்திதா.
 
அவளை ஒரு சிரிப்புடன் பார்த்தவன், “நீ ரொம்ப யோசிக்கிற நந்திதா. பிடிக்கலைன்னா விடு”, என்று சொல்லி விட்டு அவளை குறுகுறுவென்று பார்த்தான்.
 
“அட பாவி, இவன் என்ன பிளேட்டை மாத்துறான்?”, என்று நினைத்து கொண்டு அவசரமாக “எனக்கு தயக்கமே இல்லை, ஹரி. சம்மதம்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“அப்பாடா வழிக்கு வந்துட்டா”, என்று நினைத்து கொண்டு “அம்மா, நந்திதா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா”, என்று கத்தினான்.
 
சுதாகரும், விஜியும் வெளியே வந்தார்கள். இவர்களை பார்த்து பெரியவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது.
 
“நிஜமாவே உனக்கு இவனை புடிச்சிருக்கா நந்திதா?”, என்று கேட்டாள் விஜி.
 
“ஹ்ம்ம் பிடிச்சிருக்கு அத்தை”, என்று வெட்கத்துடன் பதில் அளித்தாள் நந்திதா.
 
“ஒரு வழியா சாதிச்சிட்ட டா”, என்ற பார்வையை ஹரியை பார்த்து கொடுத்தார் சுதாகர்.
 
அவளுடைய வெட்கத்தை ரசித்து கொண்டிருந்தான் ஹரி. ஏதோ தன்னுடைய தவம் நிறைவேறியது போல, சந்தோசம் அவன் மனதில் நிறைத்து இருந்தது. எத்தனை வருட ஏக்கம்? தன்னுடைய தேடல். அனைத்தும் நிறைவேறியது போல இருந்தது ஹரிக்கு.
 
பல நாள் அவளால் தூக்கத்தை தொலைத்து அமர்ந்திருக்கிறான். அவள் வேண்டும் என்ற தாபத்தில் தவித்திருக்கிறான். அவளுக்கான காதல் கோட்டையை, மனதில் கட்டி விட்டு அது சரிந்து விடுமோ என்று பயந்திருக்கிறான்.
 
ஆனால், இன்று எல்லாம் சொர்க்கமாக தெரிந்தது. இன்ச் இன்சாக அவளை ரசித்து கொண்டிருந்தான் ஹரி.
 
தன் மகன் முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்த சுதாகருக்கும், விஜுக்கும் கண்ணில் நீர் கோர்த்தது.
 
ஒரு வழியாக இரண்டு வாரங்களுக்கு பிறகு கல்யாணம் முடிவு செய்ய பட்டது,. “முதலில் அவன் போய் வேலையில் சேரட்டும். அடுத்த வாரம் கல்யாணம் வச்சுக்கலாம்”, என்று சொன்னார் சுதாகர்.
 
“ஹ்ம்ம் சரி தான். கல்யாணத்தை முடிச்சிட்டு நந்திதாவை கூட்டிட்டு மறுபடியும் வேலைக்கு போகலாம். அங்க போய் ஒரு வீடு பாத்துரு ஹரி”, என்று சொல்லிவிட்டாள் விஜி.
 
அடுத்து வந்த நாள்களில் “எதுக்கு ரெண்டு வாரம் கழிச்சு?”, என்று தவித்தான் ஹரி. “விட்டா நீ இப்பவே அவளை இழுத்துட்டு போவ”, என்று சிரித்தது மனசாட்சி.
 
ஆசையாக பருகு பருகு என்று யாருக்கும் தெரியாமல், அவனை சைட் அடிக்க ஆரம்பித்தாள் நந்திதா. அவனுடைய போட்டோ, இப்போது, எப்பவும் அவள் நெஞ்சில் தான் தூங்கும்.
 
அவளுடைய பார்வையை வைத்தே அவள் மனதை அறிந்தவன் “கேடி”, என்று அவளை நினைத்து கொண்டான். “நீயும் கேடி தான்”, என்று சொன்னது மனசாட்சி.
 
“சரி விடு கேடிக்கும், கேடிக்கும் கல்யாணம்”, என்று நினைத்து தனக்குள் சிரித்தான் ஹரி.
காதல் பூக்கும்…

Advertisement