Advertisement

அத்தியாயம் 4
வானில் உள்ள நட்சத்திர
கூட்டங்களில் என்னவளின்
முகத்தை தேடி
தத்தளிக்கிறேன் நான்!!!
 
“எதையும் யோசிக்காத”, என்று மனதை அடக்கியவள், “நானே இந்த வீட்டுக்கு ஆதரவு தேடி வந்துருக்கேன். கிட்ட தட்ட ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி. நான் போய் அவனை நினைக்கலாமா? அது தப்பு. முதலில் அத்தை கிட்ட பேசணும். கல்யாணம் கண்டிப்பான்னா, ஹரியை சம்மதிக்க வைக்கணும். அவங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு, எங்கயாவது போயிரணும். மூணு வேளை சாப்பாடுக்கு உழைச்சா போதும். அப்படியே காலம் போயிரும்”, என்று தனக்கு தானே பேசி கொண்டாள்.
 
மறுபடியும் அவள் கண்கள், அவனுடைய புகை படத்தை ரசிக்க தான் செய்தது. மூளைக்கு வேலி போட தெரிஞ்ச நந்திதாவுக்கு, மனதுக்கு போட தெரியுமா என்ன?
 
அதை கட்டிலில் வைத்தவள், அவன் வாங்கி தந்த உடைகள் ஒன்றை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.
 
குளித்து முடித்து வெளியே வந்தவளின் கண்ணிலும், அவள் கவிழ்த்து வைத்து விட்டு போன அந்த புகைப்படம் பட்டது.
 
“திருப்பி பாக்காத. அதை அப்படியே கொண்டு போய், மித்த போட்டோ இருக்குற இடத்தில வச்சிரு”, என்று சொல்லி கொண்டே அதை எடுத்தாள்.
 
“ஒரே ஒரு தடவை பாத்தா தப்பு இல்லை”, என்று மனதை சமாதானம் செய்து அதை திருப்பி பார்த்தாள் நந்திதா.
 
மறுபடியும் அவன் அழகு அவளை ஈர்த்தது நிஜம். “வேண்டாம் நந்திதா. நீ பாக்குறதே சரி இல்லை. ஒழுங்கா அதை வை”, என்று சொன்னது மனசாட்சி.
 
“அழகா ஒரு ஹீரோ இருந்தா, அப்படியே பாத்துட்டே இருப்போம்ல? அப்படி நினைச்சிக்குவோம். நம்ம ரசிக்கிறது, அந்த ஹீரோவுக்கு தெரியவா போகுது? அதே மாதிரி ஹரிக்கும் தெரியாது”, என்று நினைத்து கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்து, கடைசியில் அதை கட்டி பிடித்து கொண்டு தூங்கியே விட்டாள்.
 
நல்ல உறக்கத்தில் இருந்தவளின் காதுகளில், கதவு தட்டும் சத்தம் கேட்டது.
 
“அதுக்குள்ளே எழுப்புறீங்க? கொஞ்ச நேரம் தூங்குறேன் மா”, என்று சொல்லி கொண்டே தூங்க போன நந்திதா, அடுத்த நிமிடம் திடுக்கிட்டு விழித்தாள். அறை முழுவதும் இருள் கவிழ்ந்திருந்தது. எழுந்து விளக்கை போட்டாள்.
 
“லூசு, இது ஹரி வீடு. இன்னும் உன்னோட வீட்ல தூங்குறதா நினைக்கிறியா? போய் கதவை திற”, என்று தனக்குள் பேசி கொண்டு, கையில் இருந்த புகை படத்தை மற்ற புகை படத்துடன் வைத்து விட்டு போய் கதவை திறந்தாள்.
 
அங்கே விஜி நின்றிருந்தாள். “மன்னிச்சிக்கோங்க அத்தை, விளக்கு வைக்கிற நேரம் தூங்கிட்டேன்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“நீ படுக்க போனதே அஞ்சு மணிக்கு மேல தான மா? என்னைக்காவது ஒரு நாள் அசந்து தூங்குனா பரவா இல்லை. மணி எட்டு ஆகிட்டு. சாப்டுட்டு திரும்பி போய் படுத்துக்கோ”, என்று பரிவுடன் சொன்னாள் விஜி.
 
“ஹ்ம்ம் சரி அத்தை. நீங்க போங்க முகம் கழுவிட்டு வரேன்”
 
“ஹ்ம்ம் வா”, என்று சொல்லி விட்டு “ஹரி எழுந்து சாப்பிட வா”, என்று அழைத்து கொண்டே சென்றாள் விஜி .
 
“ஹரி”, என்ற வார்த்தையில் அப்படியே நின்றாள் நந்திதா. கொஞ்சம் நேரம் முன்பு வந்த கனவு நினைவு வந்தது.
 
ஹரியுடன் நெருக்கமாக இருப்பது போல் காட்சி வந்தது. “அவனையே நினைச்சிட்டு படுத்தா, கனவு வராம என்ன செய்யும்? எனக்கு பாத்தாங்களே ஒரு மாப்பிள்ளையை. அவனும் அவன் மூஞ்சும். அவன் என்னைக்காவது என் கனவுல வந்துருக்கானா? அவனுக்கு பதிலா ஹரியை மாப்பிள்ளை பாத்துருந்தா, எப்படி இருக்கும்? ச்சி நான் இப்ப எதுக்கு ஹரி பத்தியே யோசிக்கிறேன். நந்து லூசு இப்ப வெளிய போற? அவன் முகம் பாக்காம சாப்பிடுற. அத்தை கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிற. மறுபடியும் அவன் முகத்தை பாக்காம வந்துரணும்”, என்று தனக்கு தானே சொல்லி கொண்டு முகம் கழுவ சென்றாள்.
 
அங்கே அவள் முகம் காண, தவித்து கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான் ஹரி.
 
“தூங்கி எழுந்தா எப்படி இருப்பா? சீக்கிரம் வாயேன் டி செல்லம். பாக்க இங்க துடிச்சிட்டு இருக்கேன்”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அமர்ந்திருந்தான் ஹரி.
 
அவன் கண் முன்னே நடந்து வந்தாள், அவனுடைய இதய தேவதை. அப்படியே அவன் கண்கள் அவளை புகை படம் எடுத்தது.
 
“அவனை பாக்காதே”, என்று தனக்குள் சொல்லி கொண்டே அவன் எதிரே அமர்ந்தாள் நந்திதா.
 
“என்ன நந்திதா நல்ல தூங்குனியா?”, என்று விசாரித்தான் ஹரி.
 
“ஹ்ம்ம் ஆமா தூங்குனேன்”, என்று சொன்ன நந்திதா, அவனை பார்த்து சொல்லாமல் சுதாகரை பார்த்து சிரித்தாள்.
 
அவள் செய்கையில் புருவம் உயர்த்தினான் ஹரி. “ஏண்டா, நந்துவுக்கு இந்த நைட்டி, நைட் டிரஸ் இதெல்லாம் வாங்கி கொடுத்துருக்கலாம்ல? சுடிதார் சேலைன்னு வாங்கி கொடுத்திருக்க”, என்று கேட்டாள் விஜி.
 
“ஆன்”, என்று வாயை பிளந்த படி ஹரியை பார்த்தாள் நந்திதா.
 
அவள் செய்கையை பார்த்து சிரித்தான் ஹரி. அடுத்த நிமிடம் தலை குனிந்து கொண்டாள் நந்திதா.
 
“மேடம் கிட்ட எதுவோ சரி இல்லையே. வந்ததில் இருந்து பிளேட்ல தான் கண்ணு இருக்கு”, என்று நினைத்து கொண்டு, “புது இடம்னு அவ போட தயங்குவான்னு தான் மா வாங்கலை. நாளைக்கு வேணும்னா வாங்கி கொடுக்குறேன்”, என்றான்.
 
“ஐயையோ, வேண்டாம் அத்தை. இதுவே போதும்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“சொன்னது நான், பதில் எதுக்கு எங்க அம்மா கிட்ட சொல்றா?”, என்று நினைத்து கொண்டு அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் ஹரி.
 
“அவளுக்கு இன்னொரு தோசை வை மா”, என்று சொன்னார் சுதாகர்.
 
“எனக்கு போதும்”, என்று நந்திதா சொல்வதுக்குள் அவள் தட்டில் வைத்து விட்டாள் விஜி.
 
“வயிறு நிறைஞ்சிட்டு அத்தை. சாயங்காலம் தான நல்ல சாப்பிட்டேன் அதான்”
 
“சரி மா வேண்டாம்ன்னா வச்சிரு”
 
“வீணாகிருமே”
“பரவால்ல மா”
 
“எதுக்கு வீணாகும். நான் இருக்கும் போது”, என்று சொல்லி கொண்டே மதியம் போல் அவள் தட்டில் இருந்து எடுத்து கொண்டான் ஹரி.
 
“அத்தை, மாமா முன்னாடி என்ன இப்படி செஞ்சிட்டான்?”, என்று தர்ம சங்கடமாக விழித்தாள் நந்திதா.
 
சுதாகரும், விஜியும் ஒரு பார்வையை தங்களுக்குள் பரிமாறி கொண்டார்கள்.
 
“எனக்கு சாப்பாடு போதும் மா”, என்று எழுந்து போனார் சுதாகர்.
 
“நீங்க ரெண்டு பேரும் மெதுவா சாப்பிடுங்க. நான் அவருக்கு மாத்திரை எடுத்து கொடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு சுதாகர் பின்னே போனாள் விஜி.
 
அவர்கள் போன பிறகு “என்ன ஹரி, அம்மா அப்பா முன்னாடி இப்படி செஞ்சீட்டிங்க?”, என்று கேட்டாள் நந்திதா.
 
இப்போதும் தன்னை பார்க்காமல் கேள்வி கேட்பவளை தான் கவனித்து கொண்டிருந்தான் ஹரி.
 
“மதியமும் உன் பிளேட்ல இருந்து தான எடுத்து சாப்பிட்டேன்? அம்மா, அப்பா எதுவும் நினைக்க மாட்டாங்க. ஆனால் உனக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான் ஹரி.
 
“எனக்கா? எனக்கு என்ன? ஒன்னும் இல்லையே!”
 
“ஒன்னும் இல்லையா? எதுவோ இருக்கே! நீ எதுக்கு என் முகத்தை பார்க்காமல் பேசுற?”
 
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லையே”, என்று அவனை பார்த்தாள். இப்போதும் தண்ணீர் குடித்ததால் அந்த ஈரத்தில், அவன் உதடுகள் பள பளவென்று இருந்தது. அந்த சிவந்த உதடுகளின் மேல் இருந்த கம்பீரமான மீசையின் மேல் அவள் பார்வை போனது.
 
“ச்சி நான் ஏன் இப்படி பண்றேன்?”, என்று தன்னையே நொந்து கொண்டு அந்த புறம் திரும்பி கொண்டாள்.
 
“அட பாவி இவ சைட் தான் அடிக்கிறா. மேடம் என்கிட்ட மயங்கிட்டாங்க. பரவால்லயே! இவ்வளவு சீக்கிரம் அவளை நான் கவர மாதிரி இருக்கேனா? அப்ப சரி தான். சீக்கிரம் வேலை முடிஞ்சிரும்”, என்று நினைத்து கொண்டு “சரி நந்திதா. அம்மா கிட்ட பேச போகலாமா?”, என்று கேட்டான்.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி அவன் முகம் பார்க்காமல் அவனுடன் எழுந்தாள்.
 
அவளை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்து விட்டு, நகர்ந்தான் ஹரி.
 
சுதாகரும், விஜியும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். ஹரியும், நந்திதாவும் அங்கு சென்று அமர்ந்தார்கள்.
 
“என்ன மா நந்திதா, உனக்கு வீடு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் சுதாகர்.
 
“அழகா இருக்கு மாமா. அத்தை அழகா வச்சிருக்காங்க”
 
“உங்க அத்தைக்கு ஐஸ் வச்சா போதும். உச்சி குளுந்துரும் அவளுக்கு”, என்று சிரித்தார்.
 
அவருடன் சிரித்த நந்திதா, “அத்தை உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்”, என்று ஆரம்பித்தாள்.
 
“என்ன நந்திதா? சொல்லு மா”
“இல்லை… நான் இன்னைக்கு தான் இந்த வீட்டுக்கு வந்தேன். வந்தவுடனே அதிகமா உரிமை எடுக்குறேன்னு நினைக்க கூடாது. அப்புறம் உங்க குடும்ப விசயத்தில் தலையிடுறேன்னு நினைக்க கூடாது….”
 
“இங்க பாரு மா, நீ இந்த வீட்டு பொண்ணு. இது உன்னோட குடும்பம். நீ என்ன வேணா பேசலாம். இனி ஒரு தரம், நீ யாரோன்னு நினைக்காத. இப்ப சொல்லு, என்ன விசயம்?”
 
“அது அது வந்து ஹரியோட வேலை விஷயமா பேசலாம்னு…”
 
“உன்னை சிபாரிசு பிடிச்சிருக்கானா? ஆமா, அவனுக்கு வேலை கிடைச்சிருக்கு. ஆனா அது எல்லாம் வேண்டாம். உங்க மாமாவோட சொத்தே நிறைய இருக்கு மா. எல்லாமே விவசாய பூமி. அதை எல்லாம் குத்தகைக்கு விட்டுருக்கோம். அப்புறம் இவருக்கு பென்ஷன் பணம் வேற வருது. எல்லாமே ஹரிக்கு தான? அவன் கண்டிப்பா வேலைக்கு போகனும்னு என்ன அவசியம்? அப்படியே போணும்னாலும் கல்யாணம் பண்ணிட்டு போகட்டும்”
 
“வேலைக்கும், கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் அத்தை?”
 
“சம்பந்தம் இருக்கே. இப்ப அவன் அந்த ஊரில் போய் வேலைக்கு சேந்தான்னா, கண்டிப்பா ரெண்டு வருசத்துக்கு மேல தான், ட்ரான்ஸ்பர் கிடைக்கும். ஏன் அது அஞ்சு வருசமா கூட ஆகலாம். அது வரைக்கும் இவன் அங்க ஜாலியா இருப்பான். நான் இவன் கூட கல்யாணம் பண்ணிக்கோன்னு போராட முடியாது.
 
எனக்கும் என் பையன் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல டீச்சர் வேலை பாக்குறான்னு சொல்ல பெருமையா தான் இருக்கு. ஆனா, இவனை விட்டா பிடிக்க முடியாது மா. நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிப்பான். நீயே சொல்லு நந்திதா. ஒரே பையனை பெத்து வச்சிக்கிட்டு, அவன் குழந்தை குட்டிகளை எங்களுக்கும் கொஞ்சணும்னு ஆசை இருக்காதா? நீயே அவனுக்கு எடுத்து சொல்லுமா?”
 
“ஹரி, அத்தை சொல்றதும் சரியா தான் படுது எனக்கு”, என்று சொன்னாள் நந்திதா.
 
“என்ன நந்திதா? எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவன்னு பாத்தா, இப்ப அம்மா பக்கம் பேசுற?”, என்று கேட்டான் ஹரி.
 
“என்ன சொல்ல?”, என்று தெரியாமல் சுதாகரை பார்த்தாள் நந்திதா.
 
“இப்படி தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி, பேசிட்டு கடைசில் நம்மளை மண்டை காய விடுவாங்க மா. இது அம்மாக்கும், பையனுக்கும் இடைல உள்ளது. நீ விட்டுரு”, என்று சிரித்தார் சுதாகர்.
 
“இல்லை மாமா. அந்த வேலை கிடைக்கிறது இப்போதைக்கு ரொம்ப கஷ்டம். அப்படி கஷ்ட பட்டு வாங்குன வேலை இல்லாம போறது, ரொம்ப கஷ்டமா இருக்கும் அதான்”
 
“அப்ப அவனை கல்யாணத்துக்கு சரினு சொல்ல சொல்லு மா”
 
“ஹ்ம்ம். ஹரி நீங்க பேசாம அத்தை சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கோங்களேன். இது தான கல்யாணம் பண்ண சரியான வயசு”
 
“என்ன நந்திதா? நினைச்ச உடனே கல்யாணம் பண்ண முடியுமா சொல்லு? பொண்ணு பாக்கணும்ல?”
 
“ஆமா, பாக்கணும் தான். நீங்க அத்தை கிட்ட கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு வேலைல போய் ஜாயின் பண்ணுங்க. அப்புறம் அத்தை பொண்ணு பாப்பாங்க”, என்று சொன்னாள் நந்திதா.
 
அவளுடைய சாமர்த்தியத்தை ரசித்த ஹரி “ஹ்ம்ம் இந்த டீல் ஓகே”, என்று அவளிடம் சொல்லி விட்டு “அம்மா நான் கல்யாணம் பண்ண சம்மதிக்கிறேன். நீங்க அலசி ஆராய்ந்து எனக்கு பொண்ணு தேடுங்க. நான் வேலைக்கு போறேன்”, என்று விஜியிடம் சொல்லி சிரித்தான்.
 
“இந்த கதையே இங்க வேண்டாம். நான் ஏற்கனவே பொண்ணு பாத்துட்டேன். இவன் பாத்து சரின்னு சொல்ல வேண்டியது தான் பாக்கி”, என்று சிரித்தாள் விஜி.
 
“இவ்வளவு சீக்கிரம் ஹரிக்கு கல்யாணமா?”, என்று மனதில் எழுந்த வலியை மறைத்து கொண்டு “பொண்ணு பாத்துட்டிங்களா அத்தை? பொண்ணு யாரு?”, என்று கேட்டாள் நந்திதா.
 
ஹரியும், சுதாகருமே புரியாமல் தான் விஜியை பார்த்தார்கள்.
 
“இப்ப பொண்ணு யாருன்னு கேட்டா, அம்மா என்ன சொல்லுவாங்க?”, என்று பார்த்து கொண்டிருந்தான் ஹரி.
 

Advertisement