Advertisement

அடுத்த நொடி, அழுதே விட்டாள் நந்திதா. “என்ன மா சின்ன பிள்ளை மாதிரி?”, என்று கேட்டு தன் நெஞ்சோடு நந்திதாவை அணைத்து கொண்டாள் விஜி.
 
“நீங்க எல்லாரும் இல்லைன்னா, நான் இப்ப என்ன ஆகிருப்பேன் அத்தை. எங்க வீட்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பாக்கலை. அனாதை மாதிரி வந்த என்னை ஆதரிச்சு, இப்படி அன்பா பரிமாறுறீங்க. இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்?”, என்று அழுதாள் நந்திதா.
 
“உன்னை என்ன சொன்னேன்? பழசை எல்லாம் மறந்துறணும்னு சொன்னேன்ல? ஒழுங்கா சாப்பிடு. எல்லாத்தையும் காலி பண்ணனும் ரெண்டு பேரும். இல்லைன்னா மீதியானதை நீங்க ரெண்டு பேரும் தான் நைட் சாப்பிடணும்”, என்று மிரட்டினாள் விஜி.
 
“அம்மா இது அநியாயம்”, என்றான் ஹரி.
 
“பாத்தியாம்மா, நைட் சோறுன்னு சொன்ன உடனே, அவன் மூஞ்சு போற போக்கை பாரு? நாங்க எல்லாம் மூணு தடவையும் சோறு சாப்பிட்டு தான் வளந்தோம். உனக்கு டிபன் கேக்குது. ஒழுங்கா அந்த காயை எல்லாம் சாப்பிடு”
 
“அம்மா ஒரே ஒரு ஆம்ப்லேட் போட்டு தாங்களேன்”, என்று ஐஸ் வைத்தான் ஹரி.
 
“ஏண்டா, அதான் ரெண்டு கூட்டு இருக்குல்ல? அப்புறம் என்ன? சாப்பாடை பாத்தாலே எதுக்கு தான் தெறிச்சு ஓடுறியோ? இரு எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னாள் விஜி.
 
இருவருக்கும் மிளகு பொடி மட்டும் போட்டு, முட்டை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.
 
“அம்மான்னா அம்மா தான்”, என்று சிரித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான் ஹரி.
 
“முட்டையை பாத்த உடனே, உனக்கு வாயெல்லாம் பல்லா தெரியுமே. சாப்பிடு டா”
 
“அப்பா சாப்பிட்டாச்சா மா? எங்க காணும்?”
 
“நீங்க சாயங்காலம் சாப்பிடுறீங்க. உங்க அப்பா இப்ப டீ குடிக்கிற டைம். தூங்கிட்டு இருக்கார். நான் தான் உங்களுக்காக காத்துட்டு இருந்தேன்”
 
“நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தை. நாங்க சாப்ட்டுக்குறோம்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“சரி எல்லாத்தையும் காலி பண்ணிரனும். அப்புறம் ஹரி சாப்பிட்டதும், நந்திதாவுக்கு அவ ரூமை காட்டு. இன்னைக்கு எல்லாருக்கும் டீ கிடையாது. நேரடியா நைட் சாப்பாடு தான். நான் கொஞ்சம் படுக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
 
“என்ன நந்திதா கொரிச்சிட்டே இருக்க? அள்ளி சாப்பிடு”, என்று சொன்னான் ஹரி.
 
இப்போது தான், அவன் அவளை “வா போ”, என்று பேசுவதையே உணர்ந்தாள். “இவன் எப்ப, இப்படி கூப்பிட ஆரம்பிச்சான்?”, என்று நினைத்தாலும் நினைவு வர வில்லை.
 
“நான் சாப்பிடுறேன். ஆனா உங்க பிளேட்ல தான், காய் அப்படியே இருக்கு. சாப்பிடுங்க, காய் பிடிக்காதா?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“ஆமா நந்திதா. எனக்கு காய் சாப்பிடணும்னாலே அலர்ஜி. அம்மா தான் வற்புறுத்தி சாப்பிட சொல்லுவாங்க. காய் சாப்பிட்டா தான் உடம்புக்கு நல்லதுன்னு தெரியும். ஆனாலும், எனக்கு அது பிடிக்காது. ஆமா நீ என்ன முட்டையை சாப்பிடாம வச்சிருக்க? அசைவம் சாப்பிடுவ தான?”
 
“சாப்பிடுவேன். ஆனா இன்னைக்கு முதல் நாள் வீட்டுக்கு வந்துருக்கேன். அசைவம் சாப்பிட வேண்டாமேன்னு நினைச்சேன். ஆனா, அத்தை தட்டில் வச்சிட்டு போய்ட்டாங்க. எப்படி வேஸ்ட் பண்ணணு தெரியலை”
 
“எதுக்கு வேஸ்ட் ஆக போகுது? எனக்கு முட்டைன்னா அவ்வளவு பிடிக்கும். நான் இருக்கும் போது என்ன கவலை?”, என்று சொல்லி கொண்டே அவள் பிளேட்டில் இருந்து முட்டையை எடுத்து கொண்டான்.
 
எடுத்த பின்னர் தான் “சாரி நந்திதா, எச்சி கை வச்சு எடுத்துட்டேன்”, என்றான் ஹரி.
 
“அதெல்லாம் சாரி வேண்டாம். பரவால்ல. உங்க காயை நான் எடுத்துக்கவா, வீணா போயிரும்னு தான் கேக்குறேன்”
 
“ஆனா, நான் இதில் கை வைச்சிட்டேனே நந்திதா”
 
“பரவால்ல”, என்று சொல்லி விட்டு அவன் தட்டில் இருந்து எடுத்து, தன்னுடையதில் வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தாள் நந்திதா.
 
அப்படியே அவளை குறு குறு வென்று பார்த்து கொண்டே இருந்தான் ஹரி.
 
சாப்பிட்டு முடித்த பின்னர், அவனுடைய தட்டையும் சேர்த்து எடுத்து கழுவ எழுந்தாள் நந்திதா.
 
“இல்லை நீ விடு. நான் கழுவி வச்சிக்கிறேன். இல்லைன்னா அம்மா கழுவுவாங்க”, என்று தடுத்தான் ஹரி.
 
“நம்ம வீடுன்னு சொன்னீங்க. அப்ப நான் வேலை செய்ய கூடாதா? நீங்க கை கழுவிட்டு நகருங்க . நான் பிளேட் கழுவுறேன்”, என்று சொல்லி கழுவி வைத்தவளை பார்த்து, சொல்ல முடியாத உணர்வை அடைந்தான் ஹரி.
 
அவள் எல்லாம் எடுத்து வைத்து வரும் வரை அவளுக்காக காத்திருந்தான் ஹரி.
 
பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, அவன் அருகே வந்தாள் நந்திதா.
 
“வேலைக்கு போறதை பத்தி, அத்தை கிட்ட பேசணுமே ஹரி”, என்று ஆரம்பித்தாள் நந்திதா.
 
“ஹ்ம்ம்.. நான் எல்லாம் பேசி பாத்துட்டேன். நீ தான் கடைசி முறை. ட்ரை பண்ணு”
 
“மாமா, என்ன சொன்னாங்க ஹரி?”
 
“அப்பா, எப்பவுமே அம்மா சொல்படி தான் நடப்பார். அப்பாக்கு அம்மா மேல அவ்வளவு லவ்”, என்று சிரித்தான்.
 
“ஹ்ம்ம் சரி ஹரி. அத்தை, மாமா தூங்கி எந்திச்சு வந்த உடனே, நான் பேசுறேன்”
 
“சரி நந்திதா வா, உன்னோட ரூம் காட்டுறேன். உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு”
 
“என்ன ஹரி நீங்க? நானே அனாதையா வந்து நிக்குறேன். என்கிட்ட போய் பிடிச்சிருக்கானு கேக்கீங்க”, என்று விரக்தியாக சிரித்தாள்.
 
“இன்னொரு தடவை இப்படி பேசினா சப்புன்னு அடிச்சிருவேன் நந்திதா. இது உன்னோட வீடு. இனி ஒரு தடவை, நீ பழசை பத்தி பேச கூடாது. அது எல்லாமே முடிஞ்சு போன விஷயம் புரிஞ்சதா? அப்புறம் நீ ஒன்னும் அனாதை கிடையாது. இனிமே நீ எங்க சொத்து. உனக்குன்னு நாங்க எல்லாரும் இருக்கோம். இனி அப்படி பேசாத”, என்று கத்தினான் ஹரி.
 
“ஓகே ஓகே கூல் ஹரி. இனி அப்படி பேசலை. எப்பா என்ன கோபம் வருது உங்களுக்கு? ரொம்ப கோப படுவீங்களா ஹரி?”
 
“அப்படி எல்லாம் இல்லை. நீ இனி இப்படி பேசுனா கோபம் வரும். அடி பிச்சிருவேன் சொல்லிட்டேன்”
 
“சரி சரி இனி பேசலை. ரூம்க்கு போவோமா?”
 
“ஹ்ம்ம் வா. இந்தா உன்னோட டிரஸ் எடுத்துக்கோ”, என்று சொல்லி அழைத்து சென்ற ஹரி ” இது தான் உன்னோட ரூம் பிடிச்சிருக்கா?”, என்று கேட்டான்.
 
“ஹ்ம்ம் நல்லா இருக்கு”
 
“சரி நந்திதா நீ கொஞ்சம் நேரம் படு”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு செல்லும் போது அவனை “ஹரி”, என்று அழைத்தாள் நந்திதா.
 
“என்ன?”, என்று கேட்டு கொண்டே திரும்பினான்.
 
“தேங்க்ஸ்”, என்று சிரித்தாள் நந்திதா.
 
“நீ அடி வாங்காம போக மாட்ட”, என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டே சென்றான் ஹரி. அவளும் உள்ளே சென்றாள்.
 
தன் அறைக்குள் செல்லும் முன் அம்மா, அப்பா அறை கதவை தட்டினான் ஹரி.
 
விஜி வந்து கதவை திறந்தாள். “சாப்டீங்களா ரெண்டு பேரும்?”
 
“சாப்பிட்டோம் மா. நந்து அவ ரூம்க்கு போய்ட்டா. உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும் மா”, என்று சொன்னான் ஹரி.
 
“உள்ள வா ஹரி. என்னங்க, உங்க பையன் அடுத்த குண்டோட வந்துருக்கான். கொஞ்சம் என்னனு கேளுங்க”, என்று சிரித்தாள் விஜி.
 
“இப்ப என்ன டா?”, என்ற படியே எழுந்து அமர்ந்தார் சுதாகர்.
 
“வேற ஒன்னும் பெருசா பிரச்சனை இல்லை. ஒரே ஒரு குட்டி பிரச்சனை தான்”, என்று சிரித்தான் ஹரி.
 
“என்ன பா?”, என்றாள் விஜி.
 
“அது வந்து அம்மா… நந்து என் வேலையை பத்தி விசாரிச்சாளா? அடுத்த வாரம் ஜாயின் பண்ண போற வேலை பத்தி சொல்லிட்டேன். ஆனா, அது கூட ஒரு பொய்யும் சேத்து சொன்னேன்”
 
“ஐயையோ, என்ன பொய் டா?”
 
“அது வந்துப்பா, அம்மா என்னை அந்த வேலைக்கு போக விட மாட்டிக்காங்கன்னு சொன்னேன்”
 
“அட பாவி, நான் எப்ப டா உன்னை போக வேண்டாம்னு சொன்னேன்? இது என்ன புது கதை. உன்னை வேலைக்கு போன்னு விரட்டுனதே நான் தான டா?”
 
“அம்மா அம்மா, அது வந்து அப்படி சொன்னா தான் மா, அவ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவா”
 
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஹரி?”, என்று கேட்டார் சுதாகர்.
 
“இல்லை பா. அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி தான், அந்த வேலைக்கு அனுப்புவேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னேன். கல்யாணம் பண்ணாம அம்மா, என்னை அனுப்ப மாட்டாங்கன்னு சொல்லிட்டேன். அவ வந்து உங்க கிட்ட பேசுவா, என்னை அனுப்ப சொல்லி. ஆனா, நீங்க கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணனும்னு அடிச்சு பேசணும் சரியாம்மா?”
 
“அதுக்குள்ளே உனக்கு கல்யாணம் கேக்குதா? ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்க வேண்டியது தான?”, என்று கேட்டு கொண்டே ஹரியின் காதை திருகினாள் விஜி.
 
“ஆ அம்மா வலிக்குது விடுங்க. நான் சொல்றது எதுக்கு தெரியுமா? அவ இப்ப தனியா பீல் பண்ணுவாம்மா. நாம எவ்வளவு தான், இது உன் வீடுன்னு சொன்னாலும், அவ அந்நியமா தான் நினைப்பா. இதுவே கல்யாணம் முடிஞ்சா பழசை எல்லாம் மறந்துருவாம்மா”
 
“நீ இந்த அளவுக்கு யோசிக்கிறியா? நம்ப முடியலையே”, என்று சிரித்தார் சுதாகர்.
 
“ஹி ஹி அதுவும் தான், அப்புறம் எத்தனை நாள் தான் நீங்க பேரன், பேத்தி எல்லாம் பாக்காம இருக்குறது? அதுக்கு தான்”, என்று சொல்லி அசடு வழிந்தான் ஹரி.
 
“பாத்தியா விஜி, உன்னோட பையனுக்கு கல்யாண களை வந்துட்டு”
 
“ஆமாங்க. எனக்கும் ஹரி சொல்றது சரின்னு தான் படுது. அவனும் எத்தனை நாள் தான், காதலை சொல்லாமல் மனசுக்குள்ளே வச்சிருப்பான். இப்பவும் போய் பட்டுன்னு சொன்னாலும் அவளால ஏத்துக்க முடியாது. இதுவே கல்யாணத்தை முடிச்சிட்டா, அப்புறம் நேரம் பாத்து அவ கிட்ட ஹரி சொல்லிருவான்”
 
“ஹ்ம்ம் சரி விஜி. அந்த பொண்ணு கிட்ட, அவ சம்மதிக்கும் படி பேசு”
 
“ஹ்ம்ம் கவலையை விடுங்க. நந்துவை சம்மதிக்க வச்சிரலாம்”
 
“அம்மான்னா அம்மா தான்”, என்று சிரித்து விட்டு அவள் கன்னத்தில், ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு சென்றான் ஹரி.
 
“அத்தை கிட்ட எப்படி பேச? இத்தனை வருஷம் பெத்து வளர்த்த பையன் சொல்லியே கேக்காதவங்க நான் சொன்னால் கேப்பாங்களா? ஆனால், ஹரியும் பாவம். எப்படி கஷ்ட பட்டு இந்த வேலையை வாங்கிருக்கார். அது கிடைக்கலைன்னா எப்படி இருக்கும்? ஒரு வாரத்தில் நல்லா பொண்ணை பாத்து வைக்க சொல்லணும். ஹரி போய் வேலையில் ஜாயின் செஞ்ச பிறகு கல்யாணத்தை வைக்க சொல்லணும். அவருக்கு எப்படி பட்ட பொண்ணு பிடிக்கும்னு தெரியலையே”, என்று யோசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
 
அப்போது அவள் கண் முன் இருந்த டேபிளில், வரிசையாக போட்டோக்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது. அப்போது தான், அந்த அறையை பார்த்தாள். அங்கே நிறைய போட்டோக்கள் ஆணியில் இருந்து, எடுக்க பட்டதுக்கு அடையாளமாக வெறும் ஆணி மட்டும் சுவரில் இருந்தது.
 
“எனக்கு ரூம் கொடுக்கணும்னு கழட்டி வச்சிருக்காங்க போல?”, என்று நினைத்து கொண்டு அதை ஒவ்வொன்றாக பார்த்தாள் நந்திதா.
 
எல்லாமே விஜி, சுதாகர், ஹரி இருக்கும் படங்கள். அடுத்து முழுவதும் ஹரியுடைய புகைப்படம். அவன் சிறு வயது முதல், இப்போது வரைக்கும் உள்ள புகை படங்கள் இருந்தன. “இது அவனோட ரூம் போல?”, என்று எண்ணிக் கொண்டாள்.
 
சிரித்து கொண்டே அதை பார்வை இட ஆரம்பித்தாள். கடைசியாக உள்ள புகை படம் அவள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.
 
அதை மட்டும் எடுத்து கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். அதில் ஹரி மட்டுமே இருந்தான். எதுவோ ஒரு கார்டனில் எடுக்க பட்டிருந்தது. அதில் செடியில் இருந்த ஒரு சிவப்பு ரோஜாவை பிடித்து கொண்டு நின்றான் ஹரி.
 
நந்திதாவுக்கு சிவப்பு ரோஜா என்றால் பைத்தியம். அந்த போட்டோவை பார்த்து கொண்டே இருந்தாள். மெதுவாக அவள் கவனம் பூவில் இருந்து, ஹரி முகத்துக்கு நகர்ந்தது. இமைக்க மறந்து அவனை பார்த்தாள் நந்திதா.
மெதுவாக போட்டோவில் இருந்த ஹரியின் கன்னத்தில் கை வைத்தாள். “எவ்வளவு அடர்த்தியான புருவம்?”, என்று வாய் விட்டே சொல்லி கொண்டு சிரித்தாள்.
 
அவனுடைய புருவத்தை அவள் விரல்கள் அளவெடுத்தது. “மூக்கு ரொம்ப ஷார்ப் ஹரி உங்களுக்கு. அப்புறம் லிப்ஸ் அப்படியே அழுத்தமா அழகா இருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ. அப்படியே உங்களையே ரசிச்சிட்டே இருக்கலாம். யாருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுதோ? அப்பா!!! சிரிச்சா எப்படி இருக்கு தெரியுமா?”, என்று நினைத்து கொண்டே வந்தவள் திகைத்தாள்.
 
“நான் எதுக்கு இப்படி எல்லாம் யோசிச்சிட்டு இருக்கேன். எதுக்கு எனக்குள்ளேயே அவனை ரசிச்சு எதாவது பேசிட்டு இருக்கேன்?”
 
“நீ பேசல நந்து, சைட் அடிக்கிற?”, என்று சொன்னது மனசாட்சி.
 
“ஹ்ம்ம் ஆமா. கண்ணு முன்னாடி அழகான பொண்ணு இருந்தா பாக்காம இருக்க முடியாதுன்னு பசங்க மட்டும் தான் சொல்லுவாங்களா? பொண்ணுங்க சொல்ல கூடாதா? கண்ணு முன்னாடி ஹீரோ மாதிரி வந்து நின்னா திரும்பி பாக்க தான் தோணும்”
 
“ஏய் லூசு நந்து, நீ சைட் அடிச்சு என்ன பண்ண? அவன் தான் உன்னை சைட் அடிக்கணும்?”
 
“அவன் எதுக்கு என்னை சைட் அடிக்கணும்? அதெல்லாம் வேண்டாம். நான் மட்டும் அவனை சைட் அடிச்சா போதும். பாவம் ஹரி, எப்படியாவது ஆண்ட்டி கிட்ட பேசணும். அந்த வேலைக்கு எப்படியாவது அவனை அனுப்பி வைக்கணும்”
 
“அவனை அனுப்பி வைக்கணும்னா, முதலில் அவனுக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் செய்யணும்”
 
“ஹ்ம்ம் அது தான் குழப்பமே. அப்படி மட்டும் அத்தை சொல்லிட்டாங்கன்னா, இப்படி அழகா இருக்குறவனுக்கு எப்படி பொண்ணு பாக்க? எங்க போய் தேட?”
 
“அது அவங்க பிரச்சனை. ஆனா, உன்னோட கவலையை யோசிச்சியா? அப்படி அவன் இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சிட்டு போயிட்டான்னா, நீ எப்படி சைட் அடிப்ப?”, என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் நந்திதா.
காதல் பூக்கும்…

Advertisement