Advertisement

அத்தியாயம் 3
என் விழிகளை
தூது அனுப்பினேன்,
நீ தரும் நினைவுகளை
உன்னிடம் யாசிக்க!!!
 
எதார்த்தமாக பிடிப்பது போல் சந்தோசத்துடன் அவளுடன் கை கோர்த்து வந்த ஹரி, இப்போது சோகமாக அவள் கைகளை விட்டான்.
 
“இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி, பைக் நிப்பாட்டிருக்கலாம்”, என்று நினைத்து கொண்டான்.
 
“அலையாத டா”, என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு “ஏறு நந்திதா”, என்றான் ஹரி.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி ஏறினாள். “இன்னும் கொஞ்சம் நெருங்கி உக்காந்தால் தான் என்னவாம்?”, என்று சிணுங்கியது அவன் மனது.
 
“நீ விட்டா, உன் மடியிலே அவ உக்காரனும்னு நினைப்ப. அடங்கிட்டு வண்டியை ஓட்டு”, என்று கிண்டல் அடித்தது மனசாட்சி.
 
புன்னகையுடன் வண்டியை ஒட்டி சென்று ஒரு துணி கடை முன்பு வண்டியை நிறுத்தினான்.
 
“இறங்கு நந்திதா”, என்றான் ஹரி.
 
“இல்ல ஹரி, இவ்வளவு பெரிய கடைக்கு வேண்டாமே. ரொம்ப விலை போட்டிருக்கும்”, என்று தயங்கினாள் நந்திதா.
 
மறுபடியும் அவள் கையை பிடித்தவன், அவளை இழுத்து கொண்டே உள்ளே சென்றான். “மறுபடியும் கை பிடிக்க சான்ஸ் கிடைச்சிருச்சா?’, என்று சிரித்தது மனது.
 
கடைக்குள் அவளுடனே வந்தவன் “உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ”, என்றான்.
 
“இல்லை, எனக்கு மூணு செட் போதும்”
 
“மாத்தி மாத்தி அதையே போடுவியா? முதலில் அஞ்சு சேலை வாங்கிக்கோ. சட்டை துணி மட்டும் நிறைய வாங்கிக்கோ. அம்மா சேலை கட்டிக்கலாம்”
 
“ஏற்கனவே உங்களுக்கு நிறைய சிரமம் கொடுத்துட்டேன், அதான்”, என்று இழுத்தாள் நந்திதா.
 
“அதை எல்லாம் யோசிக்காத. உனக்கு வேணும்னு தோணுறதை வாங்கு”, என்று சொல்லி விட்டு அவள் அருகே நின்றான்.
 
அவன் சொன்ன மாதிரி, ஐந்து சேலை எடுத்தாள் குறைந்த விலையில்.
 
“இப்போது நான் என்ன சொன்னாலும், உடனே சகஜமா மாற அவளால முடியாது”, என்று நினைத்தவன் அமைதியாக நின்றான்.
 
“இவன் கொஞ்சம் தள்ளி போனா, இன்னர் எல்லாம் வாங்குவேன். இப்படி நின்னா அந்த பொண்ணு கிட்ட எப்படி கேப்பேன்?”, என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
 
அவன் நகரவே இல்லை. “நகன்று போனால், எதுவும் எடுக்காமல் வந்து விடுவாள்”, என்று நினைத்து அங்கேயே நின்றான் ஹரி.
  
வேறு வழி இல்லாமல், “உள் பாவாடை வாங்கணும். எங்க வாங்க?”, என்று அங்கு இருந்த பெண்ணிடம் வாய் விட்டே கேட்டாள்.
 
“இருங்க மேடம், எடுத்துட்டு வரேன்”, என்று போனாள் அந்த பெண்.
 
“அட பாவி போனதே போனா, என்னையும் கூட்டிட்டு போக கூடாது. இப்ப மித்த ஐட்டம் எல்லாம் எப்படி கேப்பேன்?”, என்று மனதில் நினைத்து கொண்டு நின்றாள்.
 
பாவாடையும் வாங்கி முடிச்சாச்சு. இப்பவும் அங்கே தான் இருந்தான் ஹரி. “இதுக்கு மேல கேக்காம இருக்க முடியாது”, என்று நினைத்து கொண்டு அந்த பெண் அருகில் சென்று, அவளுக்கு மட்டும் கேக்கும் வகையில் கேட்டாள் நந்திதா.
 
ஆனால், அந்த பெண் “என்ன சைஸ் மேடம்?”, என்று கத்தி கேட்டு அவள் மானத்தை வாங்கினாள்.
 
ஹரியை சங்கோஜத்தோடு ஒரு பார்வை பார்த்து விட்டு, அளவு சொல்லி அனுப்பினாள் நந்திதா.
 
எதுவோ கேக்க வந்த ஹரி, “இப்ப இதை கேட்டா காலில் போட்டுருக்க செருப்பை கழட்டி அடிப்பா”, என்று நினைத்து கொண்டு “நீ வாங்கிட்டு வா, நான் பில் போடும் இடத்துல இருக்கேன்”, என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.
 
“இது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போயிருக்க கூடாது”, என்று நினைத்து கொண்டு தனக்கு தேவையானதை எடுத்தாள் நந்திதா.
 
கடைசியில், கைக்குட்டை கூட வாங்கி கொடுத்த பிறகு தான் அழைத்து வந்தான் ஹரி.
 
“வேற ஏதும் வாங்கணுமா நந்திதா?”
 
“இல்லை இதுவே போதும். இதுக்கே ரொம்ப பணம் ஆச்சு. வேற எதுவும் வேண்டாம்”
 
“சரி இங்க வா, ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு போலாம்”, என்று உள்ளே சென்றான்.
 
“எப்படியும் அவன் கிட்ட பேசணும். இங்க தான் பேச முடியும்”, என்று நினைத்து அவன் பின்னே சென்றாள் நந்திதா.
 
அவளுக்கு பிடிச்சதை கேட்டு, ஆர்டர் செய்தான் ஹரி. அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தவளை, பார்த்து கொண்டிருந்தான்.
 
எல்லாமே கனவு போல இருந்தது அவனுக்கு. அவனை நிமிர்ந்து பார்த்த நந்திதா, “ஹரி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னாள்.
 
“சொல்லு நந்திதா”
 
“இல்லை…. அது வந்து… எனக்கு ஒரு வேலை. நான் வீட்ல இருந்து செர்டிபிகேட் கூட எடுத்துட்டு வரலை. பெரிய வேலை எல்லாம் வேண்டாம். என்னோட செலவையாவது நான் பாத்துக்குற மாதிரி ஒரு வேலை கிடைச்சா போதும். உங்களையே எத்தனை நாளைக்கு கஷ்ட படுத்த முடியும்?”
 
“உனக்கு செய்றதை நாங்க யாருமே கஷ்டம்னு நினைக்க மாட்டோம் நந்திதா”
 
“இருந்தாலும்…..”
 
“சரி நீ கண்டிப்பா வேலைக்கு போய் தான் ஆகணும்ன்னா, நான் அப்பா கிட்ட பேசுறேன்”
 
“ஹ்ம்ம் தேங்க்ஸ்”
 
“ஏய் என்னது இது? தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். அப்புறம், நான் உன்கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன்”
 
“சாரியா? எதுக்கு ஹரி?”
 
“இல்லை… அம்மா, அப்பா உன்னை வந்த அன்னைக்கே, அத்தை மாமான்னு கூப்பிட சொல்லிட்டாங்க. அது உனக்கு ஒரு மாதிரி இருந்துருக்கும். அதான்…”
 
“அப்படி எல்லாம் இல்லை ஹரி. அப்படி கூப்பிட்ட பிறகு தான், நானே கொஞ்சம் சகஜமா உணர்ந்தேன். அதுவரைக்கும், எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது”
 
“ம்ம்ம்”
 
“ஏன், நான் அவங்களை அப்படி கூப்பிடுறது உங்களுக்கு பிடிக்கலையா?”
 
“ஐயையோ, அப்படி எல்லாம் இல்லை. இனி அப்படியே கூப்பிடு. நீ எதாவது நினைப்பேன்னு தான் சொன்னேன்”
 
அடுத்து இருவருக்குள்ளும் அமைதி தொடர்ந்தது. அதை கலைக்க “நீங்க எங்க ஒர்க் பண்றீங்க ஹரி?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“நானா, இது வரைக்கும் கிடைச்ச வேலை செய்துட்டு இருக்கேன்”
 
“என்ன படிச்சிருக்கீங்க?”
 
“பி.எஸ்.சி, பி. எட், எம். எஸ். சி”
 
“இவ்வளவு படிச்சிருக்கீங்க? அப்ப ஸ்கூல்ல வேலைக்கு போகலாமே?”
 
“நீ வேற? அதெல்லாம் டெட் பாஸ் ஆகி, வேலை எல்லாம் கிடைச்சிட்டு. அடுத்த மாசம் ஜாயின் பண்ணனும். ஆனா, போறதுல தான் எங்க அம்மா பிரச்சனையை கிளப்பிட்டு இருக்காங்க. அநேகமா போக மாட்டேன்னு நினைக்கிறேன்”
 
“என்ன சொல்றீங்க? அதுல பாஸ் ஆகுறதே கஷ்டம். எதுக்கு அத்தை பிரச்சனையை கிளப்புறாங்க?”
 
“அது எனக்கு தென்காசி பக்கம் வேலை போட்டுருக்காங்க. அங்க போக அம்மா விட மாட்டிக்காங்க”
 
“ஒரே பையன்னு பாசம் போல? உங்களை பிரிஞ்சு இருக்கணும்னு பீல் பண்றாங்க போல?”
 
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எனக்கு இருபத்தி ஆறு வயசு ஆகிட்டாம். அதனால கல்யாணத்தை செஞ்சு அவளை கூட்டிட்டு நீ எங்க வேணா போ. அது வரைக்கும் எங்கயும் விட மாட்டேன். வேலை போனா போகுது. அந்த வேலை வேற யாருக்காவது கிடைக்கட்டும்னு சொல்றாங்க”, என்று சொல்லி விட்டு அவளை குறு குறுவென்று பார்த்தான் ஹரி.
 
“ஓ”, என்று சொன்ன நந்திதா “நான் வேணா அத்தை கிட்ட பேசவா?”, என்று கேட்டாள்.
 
“அதெல்லாம் பேசி பாத்தாச்சு. அவங்க கேக்கலை. முடிவா இருக்காங்க”, என்று சொன்னான் ஹரி.
 
“அப்ப என்ன செய்ய போறீங்க ஹரி?”
 
“தெரியலை. எனக்கு பிடிச்ச வேலை. கஷ்ட பட்டு வாங்குன வேலை. ஆனா, அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது”, என்று பாவமாய் சொன்னான் ஹரி.
 
தனக்கே எல்லாரும் சேர்ந்து செக் வைக்க போகிறார்கள் என்று தெரியாமல் “இன்னைக்கு போன உடனே அத்தை கிட்ட நான் பேசுறேன்”, என்று சொன்னாள் நந்திதா.
 
சிரித்து கொண்டு “ட்ரை பண்ணு”, என்று சொன்னான் ஹரி.
 
“போகலாமா ஹரி”
 
“ஹ்ம்ம் போகலாம் “, என்று சொல்லி விட்டு அவளை அழைத்து சென்றான்.
 
அடுத்து மற்றொரு கடையில், மூன்று சுடிதார் எடுத்து கொடுத்தவன் அங்கேயே அவளுடைய சட்டைகளை தைக்க கொடுக்க சொன்னான்.
 
அவள் “சுடிதாரும் எதுக்கு?”, என்று கேட்டதுக்கு “சட்டை எல்லாம் தச்சு வரும் வரைக்கும் தேவை படும் நந்திதா”, என்று சொல்லி விட்டான். பார்த்து பார்த்து தனக்காக அவன் வாங்கி தருவது அவளுக்கு பிடித்திருந்தது
 
“உங்களுக்கு ரொம்ப தொல்லை கொடுக்குறேன்லே?”, என்று சொன்னாள் நந்திதா.
 
“அதுக்கு பரிகாரமா, எங்க அம்மா கிட்ட என்னை வேலைக்கு விட சொல்லி பேசு”, என்று சொல்லி கண்ணடித்தான் ஹரி.
 
திடீரென்று அவன் அப்படி கண்ணடித்ததில், ஒரு நிமிடம் உறைந்தாள் நந்திதா.
 
அவன் அவள் எண்ணத்தை உணராமல் சிரித்தான். சிரிக்கும் போது தெரிந்த அவனுடைய அழகை ரசித்தாள் நந்திதா.
 
அலையலையான கேசத்துடன், மயக்கும் புன்னகையுடன், காந்த கண்களுடன், வசீகரமாக இருந்தான் ஹரி.
 
சிரித்து கொண்டே “போகலாமா நந்திதா?”, என்று கேட்க வந்த ஹரி, அவள் பார்வையை பார்த்து விட்டான்.
 
“சயிட்டா அடிக்கிற? இரு டி உனக்கு இருக்கு”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
 
“நான் பாத்ததை பாத்துருப்பானோ? ஆனாலும், நான் எதுக்கு அப்படி லூசு மாதிரி பாத்துட்டு இருந்தேன்”, என்று நினைத்து கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள்.
 
வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “போகலாமா நந்திதா? வேற எதாவது தேவையா?”, என்று கேட்டான் ஹரி.
 
“இல்லை, போதும். வீட்டுக்கு போகலாம்”, என்று தலை குனிந்து சொன்னாள் நந்திதா.
 
“சரி உக்காரு”, என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினான்.
 
ஏறி அமர்ந்தவள், வண்டியை பிடித்தாள். “தோளில் கை வைக்க வேண்டியது தான?”, என்று சிணுங்கியது அவன் மனது.
 
அது அவளுக்கு எட்டியதோ என்னவோ, கையில் உள்ள பை விழ போகுதோ என்ற தடுமாற்றத்தில் அவன் தோளை பிடித்தாள் நந்திதா.
 
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். “இவ்வளவு நேரமாக டா? பிள்ளை ஒன்னுமே சாப்பிடலை. நானும் வெயிட் பண்ணிட்டே இருக்கேன்”, என்று திட்டினாள் விஜி.
 
“இல்லை அத்தை. எனக்கு டிரஸ் வாங்க தான் நேரம் ஆகிட்டு. நீங்க பாருங்களேன்”, என்று விஜி கையில் பையை கொடுத்தாள் நந்திதா.
 
அதை வாங்கிய விஜி, அங்கு இருந்த சோபாவில் அதை போட்டு விட்டு “அதெல்லாம் அப்புறம். ரெண்டு பேரும் வாங்க. கை கழுவிட்டு சாப்டுட்டு அப்புறம் பாக்கலாம்”, என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள்.
 
“சாரி மா. நந்திதாவை சாப்பிட வச்சு கூட்டிட்டு போயிருக்கணும். கடையில் சாயங்காலம் கூட்டம் ஆகிருமேன்னு நினைச்சு அப்படியே போய்ட்டேன்”, என்றான் ஹரி.
 
“சரி டா, வா சாப்பிடு. நீயும் வா மா”. என்று சொல்லி நந்திதாவை சாப்பிட அமர வைத்தாள் விஜி.
 
சிரித்து கொண்டே, அவர்கள் பின்னாலே சென்ற ஹரி, நந்திதா அருகில் அமர்ந்தான்.
 
இருவருக்கும் உணவு பரிமாறினாள் விஜி.
 
அவள் தயங்கி தயங்கி சாப்பிடுவதை பார்த்தவன், விஜியிடம் கண்ணை காட்டினான்.
 
“இது உன்னோட வீடு மா, தேவையானதை எடுத்து வச்சு சாப்பிடு. உனக்கு பிடிச்சதை சொல்லு, நான் செஞ்சு தரேன் என்ன?”, என்று சொல்லி நந்திதா தலையை வருடினாள் விஜி.
 

Advertisement