Advertisement

“நான் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்தவ. நான் இந்த வீட்ல இருக்க கூடாது. நான் போய் தான் ஆகணும்”, என்று கம்பீரமாக சொன்னாள் நந்திதா.
 
“எல்லாருமே அவன் சொன்னதை நம்பி பேசிட்டோம் நந்துமா. எல்லாரையும் மன்னிச்சிக்கோ. உள்ள வா மா”, என்று சொன்னாள் சுமதி.
 
“உன்னை பொறுத்தவரைக்கும் நான் அவமானம்”, என்று சொல்லி எச்சில் விழுங்கியவள், “நீ என்னை கருவிலே அழிச்சிருப்பேன்னு சொன்ன தான? அப்படி நான் கருவுலயே அழிஞ்சிட்டேன்னு நினைச்சிக்கோ”, என்றாள்.
 
“அம்மா, தெரியாம சொல்லிட்டேன் மா”
 
“அம்மா!! இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? இந்த ஒரு சொல்லில் தான் உலகமே இயங்குதுன்னு சொல்லுவாங்க. ஆனா நீ என்ன சொன்ன? ஆம்பளை சுகத்துக்கு ஆசை பட்டு போனேனு சொன்ன? என்னை பொறுத்த வரைக்கும், நீ எனக்கு அம்மாவும் இல்லை, நான் உன் பொண்ணும் இல்லை”
 
“நந்து, எல்லாருமே தப்பா புரிஞ்சிக்கிட்டதுனால தான் பிரச்சனை. இனி எல்லாம் சரியாகிரும் மா. உள்ள வா மா”, என்று சொன்னான் சுந்தர்.
 
“ஓ அண்ணனா? என்னை தொடுறது கூட பாவம். அருவெறுப்பா இருக்குனு சொன்ன ஆள் தான சார் நீங்க? இப்ப எதுக்கு என்கிட்ட பேசுறீங்க?”
 
“ப்ளீஸ் நந்திதா, எல்லாரும் பாக்குறாங்க. எல்லாருமே உன்கிட்ட மன்னிப்பு கேக்குறோம். உள்ள வாடி”, என்று கெஞ்சினாள் பிரபா.
 
“நீ எதுக்கு கெஞ்சிற? என்னால உன் மாமியார் வீட்ல உன் மரியாதை போகும்ல? இங்க நடந்ததை சொல்லு, எல்லாரும் உன்னை கொண்டாடுவாங்க”, என்று சொல்லி கொண்டே தன்னுடைய கையில், கழுத்தில், காதில் இருந்த நகைகளை கழட்டியவள், கடைசியாக காலில் இருந்த கொலுசையும் கழட்டி சிவா கையில் கொடுத்தாள்.
 
“இனிமே இங்க வரவே மாட்டியாக்கா? உன்னை நான் பாக்கவே முடியாதாக்கா?”, என்று கேட்டான் சிவா.
 
“அழாத சிவா. உன்னோட அக்கா நந்திதா எப்பவோ செத்து போய்ட்டா”, என்று சொல்லி கொண்டு திரும்பி ஹரி அருகில் வந்தவள் “போகலாம் ஹரி”, என்றாள்.
 
மறுபடியும் அனைவரும் அவளை கெஞ்சினார்கள். “எப்ப என்னை நம்பலையோ அப்பவே எனக்கு அப்பா செத்து போய்ட்டாரு. எப்ப கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணை, நான் கெட்டு போய்ட்டேனா இல்லையானு சோதனை போட கூட்டிட்டு போனாங்களோ, அப்பவே என்னோட அம்மா செத்து போய்ட்டாங்க. கடைசிவரைக்கும் கூட பிறந்தவன் துணை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு அவனும் செத்து போய்ட்டான். அக்கா ஒரு நல்ல தோழினு நினைச்சேன். ஆனா இனி அப்படி ஒரு உறவே எனக்கு இல்லை. இந்த ஊரில் உங்க மானத்தை வாங்கிட்டேன். சந்தி சிரிக்க வச்சிட்டேன்னு சொன்னீங்க. இப்ப இங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நான் எப்படி பட்டவன்னு. இல்லை இன்னும் கெட்டவன்னு நினைச்சாலும் பரவால்ல. இனி செத்தாலும் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்”, என்று சொல்லி விட்டு நடந்து விட்டாள்.
 
“ஏய் நந்து, இப்ப எங்க மா போவ? தயவு செஞ்சு போகாத மா. கையில் ஒரு ரூவா கூட இல்லாம போற?”, என்று பின்னாடியே வந்தாள் சுமதி.
 
“வீட்டை விட்டு வெளியே போனவ செத்தாளா இருக்காளான்னு கவலை படாம, நீ செத்துருக்கலாம்னு பேசுன நீங்க, இப்பவும் நான் செத்து போய்ட்டேன்னு நினைச்சுக்கோங்க”, என்று சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.
 
சதாசிவம் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தார். அவர் அருகில் அமர்ந்தான் ஹரி. அவர்கள் வீட்டில் எல்லாருமே கதறி அழுதார்கள். சதாசிவம் மற்றும் ஹரிக்கு கூட கஷ்டமாக இருந்தது. ஆனால் நந்திதா மட்டும் நிம்மதியாக உணர்ந்தாள்.
 
கமிஷனர் ஆபிஸ் முன்பு காரை நிறுத்தி விட்டு இறங்கினார் சதாசிவம். கூடவே ஹரியும், நந்திதாவும் இறங்கினார்கள். அடுத்தது என்ன என்பதாய் ஹரியை பார்த்தார் சதாசிவம்.
 
“சரி அங்கிள் நாங்க வீட்டுக்கு கிளம்புறோம். அம்மா வெயிட் பண்ணுவாங்க. ரொம்ப தேங்க்ஸ். இந்த வாரம் வீட்டுக்கு வாங்க”, என்று விடை பெற்றான் ஹரி.
 
அவன் முகத்தில் இருந்த துள்ளல், அவருக்கு எதையோ உணர்த்த, சிரித்து கொண்டே “பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க”, என்று அனுப்பி வைத்தார்.
 
அவருக்கு நன்றி சொல்லி விட்டு, அவனுடன் நடந்தாள் நந்திதா.
 
பைக் ஸ்டார்ட் பண்ணி விட்டு அவளை பார்த்தான். ஒரு தயக்கத்துடன் அவன் பின்னே அமர்ந்தாள்.
 
வேகமாக வண்டியை ஓட்டியவன், அவன் வீட்டு முன்பு நிறுத்தினான்.
 
அங்கு வாசலிலே காத்திருந்தாள் விஜி. தயக்கத்துடன் இறங்கிய நந்திதாவை “உள்ள வா நந்திதா. இது தான் எங்க வீடு. இது தான் எங்க அம்மா விஜயலக்ஷ்மி”, என்று அறிமுக படுத்தினான் ஹரி.
 
அவளை பார்த்து சிரித்தாள் நந்திதா. “வா மா”, என்று பாசமாக அணைத்து கொண்டாள் விஜி. அதில் கொஞ்சம் தயக்கம் நீங்கினாள் நந்திதா.
 
உள்ளே அழைத்து சென்றவள் நந்திதாவை அமர வைத்து விட்டு, ஏற்கனவே போட்டிருந்த லெமன் ஜூஸை கொடுத்தாள்.
 
“தேங்க்ஸ்”, என்று சொல்லி வாங்கி கொண்ட நந்திதா அவனை பார்த்தாள்.
 
அம்மாவையும், நந்திதாவையும் ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் ஹரி.
 
“இந்தாங்க ஜூஸ்”, என்று சொல்லி தன் கையில் உள்ளதை அவனிடம் நீட்டினாள் நந்திதா.
 
“அவன் உள்ளே போய் எடுத்துக்குவான் மா. நீ குடி”, என்று சொன்னாள் விஜி.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி அதை குடித்து முடித்து விட்டு, இருவரையும் தயக்கத்துடன் பார்த்தாள் நந்திதா.
 
“இது உன்னோட வீடு நந்திதா. நீ சகஜமா இரு. அன்னியம்னு நினைக்க கூடாது சரியா?”, என்று சொன்னாள் விஜி.
 
முதல் பார்வையிலே தெய்வீகமாக, உண்மையான பாசத்துடன் தன்னை அணைத்து கொண்ட விஜியை நந்திதாவுக்கு ரொம்ப பிடித்து போனது. ஆனாலும், அவள் பேச வேண்டி இருக்கே.
 
“இல்லை, நான் உங்க வீட்ல எப்படி தங்க முடியும்? உங்களுக்கு தொந்தரவா இருக்குமே. வெளிய எங்கயாவது தங்க ஏற்பாடு செஞ்சு, ஒரு வேலையும் ஏற்பாடு செஞ்சா நல்லா இருக்கும்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“இப்ப தான சொன்னேன்? இது உன்னோட வீடுன்னு. அப்புறம் ஏன் வெளிய தங்கணும்? இவ்வளவு பெரிய வீட்ல உனக்கு இடம் இல்லையா? ஒரு வேளை உனக்கு இங்க தங்க பிடிக்கலையாமா? எங்களை விட்டு வேற எங்கயாவது இருக்கணும்னு நினைக்கிறியா?”, என்று கேட்டாள் விஜி.
 
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை. உங்களுக்கு தொந்தரவா இருக்கும்னு தான் அப்படி சொன்னேன்”
 
“நீ இங்க தங்குறது இங்க யாருக்கும் தொந்தரவும் இல்லை. அது மட்டும் இல்லாம, எல்லாருக்கும் சந்தோசம் தான்”, என்றாள் விஜி.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி அந்த வீட்டை சுற்றி கண்களை ஓட்டினாள்.
 
“வா மா வீட்டை சுத்தி காட்டுறேன்”, என்று அவளை எழுப்பினாள் விஜி. அப்போது உள்ளே இருந்து வெளிய வந்த சுதாகர் “என்ன நம்ம வீட்டுக்கு புது மேடம் வந்தாச்சா?”, என்று சிரித்து கொண்டே கேட்டார்.
 
“இவர் ஹரியோட அப்பா மா”, என்று அறிமுக படுத்தினாள் விஜி.
 
“வணக்கம்”, என்று சொன்னாள் நந்திதா.
 
அவர் சரியாக தான் நடந்தார். ஆனால், கொஞ்சம் சாய்த்து நடந்தது போலவே தோன்றியது நந்திதாவுக்கு.
 
அவள் பார்வையை உணர்ந்த விஜி “மிலிட்டர்ல இருந்தார். அப்ப ஒரு குண்டு வெடிச்சதில், கால்ல நல்ல அடி பட்டுருச்சு. அதனால், நம்மளை மாதிரி அவரால் வேகமா எல்லாம் நடக்க முடியாது”, என்று சொன்னாள்.
 
“ஓ வலி எதுவும் இருக்குமா?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“வலி எல்லாம் இல்லை மா. ஆமா நீ என்ன மா, சும்மா மொட்டையா பேசுற?” என்று கேட்டு விட்டு ஹரியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “அம்மா, அப்பான்னு சொல்லு”, என்று சொன்னார் சுதாகர்.
 
ஹரி அவரை முறைத்தான். “இல்லை அப்படி வேண்டாம். எனக்கு அம்மா அப்பா அப்படிங்குற வார்த்தையே பிடிக்கலை. அங்கிள் ஆன்ட்டினு வேணும்னா சொல்லவா?”, என்று கேட்டாள் நந்திதா.
 
ஹரி முகத்தில் சிரிப்பு வந்தது. “அது என்ன அங்கிள், ஆண்ட்டி? ஒழுங்கா அத்தை மாமான்னு சொல்லு”, என்றாள் விஜி.
 
“சரி அத்தை”, என்று நந்திதாவும் சிரித்தாள்.
 
வீட்டை அவளுக்கு சுற்றி காட்டி விட்டு, அவளுடைய அறையையும் நந்திதாவுக்கு காண்பித்து விட்டு நால்வரும் அமர்ந்து பேசும் போது தான் “முதலும் கடைசியா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு, எங்க எல்லாருக்கும் சொல்லிரு மா. இனி நீ அதை பத்தி யோசிக்கவே கூடாது”, என்று ஆரம்பித்தார் சுதாகர்.
 
“உனக்கு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம் மா”, என்று சொன்னாள் விஜி.
 
“இல்லை அத்தை சொல்றேன். அந்த விமல் எங்க அப்பா கூட தான் ஆபிஸ்ல வேலை செய்தான். எங்க அப்பா எங்க அக்காவோட கல்யாணத்துக்கும், எங்க அண்ணனோட கல்யாணத்துக்கும் கடன் வாங்கி இருந்தார்.
 
நான் அப்ப தான் பி எஸ் சி முடிச்சிட்டு பக்கத்துல இருக்குற, ஒரு சின்ன கம்ப்யூட்டர் கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டு இருந்தேன். அப்பா கிட்ட எப்படி பேசினானோ தெரியாது. உங்க கடன் எல்லாம் நான் அடைக்கிறேன். உங்க பொண்ணை கட்டி கொடுங்கன்னு சொல்லிருக்கான்.
 
கூட வேலை செய்றான். நல்ல பையன்னு நம்பி, அது மட்டும் இல்லாம கடன் அடையும்னு நினைச்சு சரின்னு சொல்லிட்டார் எங்க அப்பா.
 
என்கிட்ட அவன் போட்டோ கூட காட்டலை. எங்க அக்கா, எங்க மாமாவை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சதுல இருந்து அம்மா, அப்பாக்கு கொஞ்சம் வருத்தம். நானும் அப்படி செய்ய கூடாதுன்னு  சீக்கிரம் என் கல்யாணத்தை முடிக்கணும்னு அப்படி செஞ்சிட்டாங்க. கடைசில நிச்சயம் அன்னைக்கு தான், அவனை பார்த்தேன். அவனை எனக்கு பிடிக்கவே இல்லை. சொல்லி பாத்தேன், வீட்ல கேக்கலை. சரி விதின்னு விட்டுட்டேன்.
 
அதுக்கு அப்புறம், அவன் கண்ணுலே படாம தான் இருப்பேன். ஆனா அன்னைக்கு, வீட்டுக்கு வந்தவன் வெளிய கூட்டிட்டு போறேன்னு அம்மா கிட்ட கேட்டான். நான் முடியாதுன்னு சொன்னேன். அம்மா கட்டாய படுத்தி அனுப்பி வச்சாங்க. ஆனா, அவன் கூட்டிட்டு போனது ஒரு பங்களாவுக்கு.
 
எனக்கு அந்த இடமே பயத்தை கொடுத்தது. வேற வழி இல்லாம போனேன். அங்க இவனை விட கொஞ்சம் வயசான ரெண்டு பேர் இருந்தாங்க. அவங்களை பாக்க எனக்கு எதுவோ தப்பா பட்டது.
 
உடனே என்னோட போன் எடுத்து கேமரா ஆன் பண்ணி வச்சிட்டேன். அப்ப தான் ஒரு வேலைக்காரன் ஜூஸ் கொண்டு வந்தான்.
 
எத்தனை படம் பாத்துருக்கோம். அதுல மயக்க மருந்து கலப்பாங்கன்னு. உடனே தான் நான் அதை வாங்கி தெரியாம கீழ போடுற மாதிரி கொட்டிட்டேன். அது என்னோட சேலைல கொட்டிடுச்சு.
 
சரி நான் வேற கொண்டு வர சொல்றேன். நீ போய் அங்க வாஷ் பண்ணிக்கோன்னு என்னை அனுப்புனான். நானும் பாத்ரூம் போய் அவங்க பேசினதை கேட்டேன். அவன் பொண்ணுங்களை கடத்துறவன்னு புரிஞ்சது. இதுக்கு மேல இங்க இருந்தா ஆபத்துன்னு நினைச்சு, அவங்க அசந்த நேரம் அந்த போன் எடுத்துட்டு எனக்கு எதுவும் தெரியாத மாதிரி, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன்.
 
இரு கொஞ்ச நேரத்தில் போகலாம்னு சொன்னான். இல்ல விமல், எனக்கு அந்த ரெண்டு ஆள்களை பாத்தால் பிடிக்கவே இல்லை. நான் கார் கிட்ட நிக்குறேன் நீங்க பேசிட்டு வாங்கனு சொல்லி எப்படியோ வெளிய வந்தேன்.
 
அவனும் அவன் பிளான் மாத்திட்டு, சரின்னு சொல்லிட்டு அவங்க கிட்ட சொல்ல உள்ள போனான். நான் அப்ப ஓடியே வந்தேனா, பாத்துட்டான் போல? அப்ப தான் அவன் கார் வச்சு துரத்தி என்னை அடிச்சு போட்டுட்டு போய்ட்டான்.
 
அன்னைக்கு நான் தப்பிக்கலைன்னா, என்னை கெடுத்துட்டு அன்னைக்கே என்னை கடத்திருப்பாங்க. என்னை மயக்கத்துல வச்சு, பொய் பாஸ்போர்ட் வாங்கி, உடம்பு சரி இல்லைன்னு சொல்லி கடத்துறது தான் அவங்க பிளான்.
 
அப்படி ஒரு பொண்ணை ரெண்டு நாள் கழிச்சு கடத்த போறோம். அன்னைக்கே இவளையும் கடத்தணும்னு பிளான் செஞ்சாங்க.
 
அப்புறம் தான் ஹரி காப்பாத்தி, வீட்டுக்கு போய் கேவலமா பேசி…. எப்படி அத்தை, பெத்த பொண்ணையே எங்க வீட்ல சந்தேக பட முடிஞ்சது?
 
என்னை அன்னைக்கு ஹரி காப்பாத்துனதை, அவன் பாத்துருக்கணும். அதனால் தான் வீட்ல நான் என் லவ்வர் கூட ரெண்டு நாள் தங்கி இருக்கேன்னு சொல்லிருக்கான் அந்த நாய். ஆனாலும், நான் சொல்றதை ஒருத்தர் கூட நம்பலை தெரியுமா? வீட்ல கடைக்குட்டி அவன் நம்புறான். பெரியவங்களுக்கு அறிவு இல்லாம போச்சு”, என்று சொல்லி தலை கவிழ்ந்து அமர்ந்தாள் நந்திதா.
 
அவள் அருகில் அமர்ந்து, அவளை தன்னுடன் அணைத்து கொண்ட விஜி, “உண்மையை ஹரி கூட்டிட்டு வந்த போலீஸ் சொல்லிருப்பாரே மா. நீ எதுக்கு அவங்க கூட டெஸ்ட்க்கு போகணும்?”, என்று கேட்டாள்.
 
எச்சில் விழுங்கி கொண்டு, கண்களில் நீரோடு “என்னை போய் உடம்பு சுகத்துக்காக ஓடி போய்ட்டேன்னு சொன்னாங்க அத்தை. அவங்களுக்கு ஒரு பதில் அடி கொடுக்க வேண்டாமா?”, என்று கேட்டு அழுதாள்.
 
“அம்மா, அப்பா போதும் விசாரிச்சது. சரி நீங்க இருங்க. நானும், நந்திதாவும் போய் அவளுக்கு தேவையான டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வரோம்”, என்று இடையில் புகுந்து சொன்னான் ஹரி.
“எதுக்கு டா, எங்களை அவ கிட்ட பேச விட மாட்டிக்கிற?”, என்று சண்டைக்கு வந்தாள் விஜி.
 
“நாம அவளோட கஷ்டத்தை கேட்டு மேலும் அவளை கஷ்ட படுத்துறோம்ல? அதனால தான் அவன் அப்படியே நம்மளை கழட்டி விட்டுட்டு போக பாக்குறான். இனி அதை பத்தி பேச மாட்டோம் மா நந்திதா. நீ அந்த அயோக்கியன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்ததே எங்களுக்கு போதும் மா. அப்புறம் உங்க வீட்டில பேசினதை எல்லாம் மறந்துரு. இனி நீ சிரிச்சுட்டே இருக்கணும் சரியா?”, என்று சொன்னார் சுதாகர்.
 
“சரி மாமா”, என்று சொன்னாள் நந்திதா.
 
“நீங்க, நாங்க போய்ட்டு வந்த உடனே அவ கூட எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்க. இப்ப எங்களை விடுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு போனோம்னா, கூட்டமா இருக்கும் பா”, என்று கெஞ்சினான் ஹரி.
 
அவன் கெஞ்சலை காதிலே வாங்காமல், விஜியும் சுதாகரும் இருந்தார்கள்.
 
ஹரி ரியாக்சனை பார்த்து நந்திதாவுக்கு சிரிப்பாக வந்தது. அடக்கி கொண்டு அவனை பார்த்தாள்.
 
“போறோம்னு சொல்லேன்”, என்று ஆக்சனில் அவளிடம் சொன்னான் ஹரி. அவள் “நான் எப்படி சொல்ல முடியும்?”, என்று யோசித்து விட்டு அமைதியாக இருந்தாள்.
 
“இன்னும் விட்டா, நீங்க அவளை விடவே மாட்டீங்க. நான் கடத்திட்டு போறேன்”, என்று சொன்னவன் அவர்கள் முன்னாடியே, அவள் கையை பற்றி இழுத்து கொண்டு வெளியே வந்தான்.
 
“இரு டா. அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்? ஒரு நிமிஷம் இரு நந்தும்மா. இப்ப வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்ற விஜி, ஒரு ஜோடி கம்மலையும், ஒரு செயினையும், ஒரு ஜோடி வளையளையும் அவளுக்கு அணிவித்தாள்.
 
“இதெல்லாம் புதுசா, தங்கம் மாதிரி இருக்கு அத்தை. வேண்டாமே”, என்று கூச்சத்துடன் மறுத்தாள் நந்திதா.
 
“நீ சும்மா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது”, என்று சொல்லி எல்லாவற்றையும் அவளுக்கு போட்டு விட்டுவிட்டு, “அவளை பத்திரமா திருப்பி கூட்டிட்டு வரலை, உன் தோலை உரிச்சிருவேன்”, என்று ஹரியை மிரட்டினாள் விஜி.
 
“அதெல்லாம் உங்க மருமகளை பத்திரமா, கூட்டிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சிருவேன். இப்ப போயிட்டு வரோம்”, என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வெளியே வந்தான் ஹரி.
 
“பெரியவங்க முன்னாடி எப்படி இழுத்துட்டு வரான்?”, என்று நினைத்து அவளுக்கு கூச்சமாக இருந்தது.
 
வெளியே பைக் அருகே வந்த பின்னரும், அவள் கை அவன் கைக்குள் தான் இருந்தது.
காதல் பூக்கும்…

Advertisement