Advertisement

அத்தியாயம் 2
உன் நினைவுகளை சுமப்பது
என்னைப் பொறுத்த வரை
சுகமான சுமையே!!!
 
“என்ன விளையாடுறியா? இந்த கேவலத்தை யார் கிட்ட போய் சொல்ல?”
 
“யார் கிட்டானாலும் சரி. ஏன், பிரபாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கூட இருக்காங்களே. அவங்க கிட்ட போகலாம்”, என்றாள்.
 
“சரி”, என்று கிளம்பினார்கள்.
 
“என்னை பொறுத்தவரைக்கும், இங்க வீட்ல எல்லாரும் செத்துட்டீங்க”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அவர்களின் பின் சென்றாள் நந்திதா.
 
விஜியிடம் சொல்லி விட்டு, நேராக தன்னுடைய அப்பாவின் நண்பரை பார்க்க சென்றான் ஹரி.
 
“வா பா ஹரி. அப்பா எப்படி இருக்காரு?”, என்று விசாரித்தார் சதாசிவம் போலீஸ் கமிஷனர்.
 
“நல்லா இருக்கார் அங்கிள். போன வாரம் தான பாத்தீங்க? அதுக்குள்ளே கேக்குறீங்க?”, என்று சிரித்தான் ஹரி.
 
“அதெல்லாம் பல வருச நட்பு. அப்படி தான். சரி நீ என்ன இந்த பக்கம்?”
 
“ஒரு முக்கியமான விசயம் அங்கிள்”, என்று சொல்லி எல்லாவற்றையும் சொன்னவன் வீடியோ எல்லாம் கொடுத்தான்.
 
“இது ரொம்ப பெரிய பிரச்சனையா இருக்கும் போலவே ஹரி? இரு இவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு”, என்று நினைத்து கொண்டே தன்னுடைய கம்ப்யூட்டரை பார்க்க ஆரம்பித்தார்.
 
“இவன் மேல பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி மோசடி செஞ்சான்னு ரெண்டு கேஸ் இருக்கு ஹரி. இப்ப தைரியமா மூவ் பண்ணலாம். இந்த வீடியோ வச்சு அவனை பிடிக்க முடியும். கண்டிப்பா அவனை ஏர்போர்ட்ல வச்சு பிடிச்சிரலாம். இப்ப நீ போ. மீதி எல்லாம் நான் பாத்துக்குறேன். இந்த எவிடேன்ஸ் கொடுத்த பொண்ணு பேர் கூட வெளிய வராம பாத்துக்குறேன்”, என்றார் சதாசிவம்
 
“இல்லை அங்கிள். அவனை பத்தி கம்பளைண்ட் கொடுக்க படுறதே நந்திதா பேர்ல தான் இருக்கணும்”
 
“எப்படி பா? அந்த பொண்ணோட பேர் பாதிக்க படுமே. அவளுக்கு வேற வாழ்க்கை அமையனும்”
 
“அதெல்லாம் பாதிக்க படாது அங்கிள். ஆனா, அவ பேர் இதில் வரணும். இதை பிடிக்க காரணமே நந்திதான்னு தான் நியூஸ் எல்லாருக்கும் தெரியணும்”, என்று ஆரம்பித்து அவள் வீட்டில் அவர்கள் பேசிய பேச்சை சொன்னான்.
 
“அப்ப ஓகே ஹரி. லீகலாவே மூவ் பண்ணலாம். சரி அப்ப நீயும் எங்க கூட வா”, என்று சொல்லி விட்டு எழுந்தார்.
 
அந்த ஹாஸ்பிட்டலில் வெயிட்டிங் ரூமில் தன் அம்மாவுடன் அமர்ந்திருந்தாள் நந்திதா. மனமெல்லாம் புண்ணாக வலித்தது அவளுக்கு. எதிரே பிரபாவும், அருந்ததியும் உக்காந்திருந்தார்கள்.
 
“இனி என் வாழ்க்கை என்னவாகும்? சொந்த வீட்டில் இருந்து வெளியே போகும் நிலைமை யாருக்கும் வர கூடாது. குடும்பம் சரி இல்லாததால் தான் நிறைய பேர் தப்பு செய்றாங்களோ? இப்ப வேற வேலையை தேடிட்டு ஏதாவது ஹாஸ்டல் போயிறலாமா? ஹரி வீட்டுக்கு தொல்லை கொடுக்கணுமா?” 
“என் பொண்ணு மாதிரி உன்னை கவனிச்சுக்குறேன் மா”, என்று சொன்ன விஜியின் குரல் நினைவுக்கு வந்தது. “அங்க தான் போகணும். அந்த அம்மா என்ன சொல்றாங்களோ அதை தான் செய்யணும்,. அவங்களுக்கு என்னால் ஆன உதவியும் செய்யணும். ஹரி கிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கி தர சொல்லணும்”, என்று முடிவு எடுத்த பின்னர் கொஞ்சம் தெம்பு வந்தது.
 
“டாக்டர் கூப்பிடுறாங்களாம் வா”, என்று அவள் கையை பிடித்தாள் சுமதி.
 
“தொடாதீங்க, நானே வரேன்”, என்று சொல்லி சுமதியின் கைகளை தட்டி விட்டு உள்ளே சென்றாள் நந்திதா. கூட சுமதி மட்டும் சென்றாள்.
 
“எப்படி இருக்கீங்க டாக்டர்?”, என்று விசாரித்தாள் சுமதி. “வாங்க வாங்க உங்க பொண்ணும், குழந்தையும் எப்படி இருக்காங்க?”, என்று விசாரித்தாள் டாக்டர் வசந்தி.
 
“நல்லா இருக்காங்க. அப்புறம் டாக்டர் இது என்னோட ரெண்டாவது பொண்ணு. குழந்தை விசயமா உங்களை பாக்க வந்தோம்”
 
“ஓ நல்ல விசயம் தான். செக் பண்ணிரலாம். உள்ள வா மா”, என்று உள்ளே கூட்டி சென்றாள். பல்லை கடித்து கொண்டு இருந்தாள் நந்திதா.
 
டெஸ்ட் எடுத்து முடித்து வெளியே வந்தவுடன் சுமதியை ஒரு அருவெறுப்பான பார்வை பார்த்து விட்டு அருகில் போய் அமர்ந்தாள் நந்திதா.
 
“என்ன பேச? எப்படி ஊசி போட சொல்ல?”, என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தாள் சுமதி.
 
அவர்களுக்கு எதிரே அமர்ந்த வசந்தி,” நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா சுமதி. நான் உங்க பொண்ணு கிட்ட தனியா பேசணும்”, என்றாள்.
 
“இல்லை டாக்டர், எது கேக்குறதா இருந்தாலும் அவங்க முன்னாடியே கேளுங்க”, என்று சொன்னாள் நந்திதா.
 
“உங்க கணவருக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையா? மண்டையில் வேற அடி பட்டிருக்கு. நிறைய தையல் வேற போட்டிருக்கு. பெரிய ஆக்ஸிடெண்ட் மாதிரி இருக்கு. இப்ப தான் நடந்துருக்கணும். கட்டு கூட இன்னும் பிரிக்க படலை. அதான் கேட்டேன்”
 
தன் அம்மா புறம் திரும்பி பார்த்து விட்டு “இல்லை டாக்டர், எனக்கும் என்னோட கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ரோட்ல ஒரு கார் மோதி தலைல அடி பட்டிருச்சு. ரெண்டு நாள் ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருந்தேன்”, என்றாள் நந்திதா.
 
“ஓ எந்த ஹாஸ்பிட்டல்? டாக்டர் என்ன சொன்னாங்க?”
 
“வி எல் என் ஹாஸ்பிட்டல் டாக்டர். டாக்டர் அர்ஜுன் தான் ஆபரேஷன் பண்ணாங்க”, என்று தெளிவாக சொன்னாள் நந்திதா. சுமதியின் முகம் வெளுத்தது.
 
“அது என்னோட ப்ரதர் ஹாஸ்பிட்டல் தான் நந்திதா. எங்க பெரியப்பா பையன் தான் அர்ஜுன்”, என்றாள் வசந்தி.
 
தாயும், மகளும் அமைதியாய் இருந்தார்கள். “இது உங்க அந்தரங்கம் நந்திதா. உங்க அம்மா முன்னாடி நான் பேசலாமான்னு, இன்னொரு தடவை முடிவு செஞ்சிக்கோங்க”
 
“அவங்க முன்னாடி நீங்க தாரளாமா பேசலாம் டாக்டர். அவங்களுக்காக தான் நான் இந்த டெஸ்ட்கே வந்தேன்”
 
“அப்புறம் உங்க இஷ்டம். புருசனும் பொண்டாட்டியும் தாம்பத்தியத்தில் இணையாம குழந்தை உருவாகாதுன்னு தெரியாத அளவுக்கு நீங்க இன்னும் குழந்தை இல்லைனு நினைக்கிறேன். நீங்களும், உங்க கணவரும் சேர்ந்தே வாழாமல் எப்படி குழந்தை வரும்?”, என்று கேட்டு சுமதியின் தலையில் இடியை தூக்கி போட்டார்.
 
“என்ன டாக்டர் சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாய் கேட்டாள் சுமதி.
 
“உங்க பொண்ணு கன்னினு சொல்றேன். அவங்க இன்னும் புருஷன் கூட வாழவே ஆரம்பிக்கல. அதுக்குள்ளே எப்படி குழந்தை வரும் சுமதி?”
 
“அது ஒன்னும் இல்லை டாக்டர். என்னோட கணவர் வெளிநாட்டுக்கு போற மாதிரி இருந்தது. அதனால், நாங்க தான் அப்படி யோசிச்சு….. அம்மா கிட்ட எனக்கு சொல்ல ஒரு மாதிரி இருந்தது. தெரியாம இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. அதான், நீங்களே சொல்லுங்கன்னு சொன்னேன். கூடிய சீக்கிரம் என்னோட குழந்தையோட செக்கப்புக்கு உங்களை வந்து பாக்குறேன்”, என்று சிரித்து கொண்டே சொன்ன நந்திதா குரோதத்துடன் சுமதியை பார்த்தாள்.
 
வெளியே முதலில் வந்த நந்திதாவை பார்த்த பிரபாவும், அருந்ததியும் அருகில் வந்து “டாக்டர் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டார்கள்.
 
அவர்களை பார்த்தவள், எதுவும் சொல்லாமல் அங்கு இருந்த சேரில் அமர்ந்தாள். பின்னாடியே முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தாள் சுமதி.
 
“என்ன ஆச்சு மா? டாக்டர் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள் பிரபா.
 
“பிரபா, நந்திதா எப்படி வீட்ல இருந்து போனாளோ அப்படியே தான் மா திரும்பி வந்துருக்கா. நாம தான் அவசர பட்டு பேசிட்டோம்”, என்று தலை குனிந்து கொண்டே சொன்னாள் சுமதி.
 
பிரபாவுக்கும், நந்திதாவை எப்படி நிமிர்ந்து பார்க்க என்று தெரிய வில்லை.
 
தைரியத்தை வரவழைத்து கொண்டு, சின்ன சிரிப்புடன் “நல்ல விஷயம் தான மா? அப்ப எந்த பிரச்சனையும் இல்லாமல், அவள் கல்யாணம் நடக்கும். நாங்க பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காத நந்திதா”, என்று பல்லை காட்டி சொன்னாள் பிரபா.
 
“நம்ம வீட்டு ஆள்கள் பேசியதை எல்லாம், நம்ம நந்திதா பெருசா எடுக்க மாட்டா. வாங்க அத்தை. வீட்டுக்கு போகலாம்”, என்று முன்னே நடந்தாள் அருந்ததி.
 
“அம்மாடி நந்திதா”, என்று உருக்கமாக அழைத்தாள் சுமதி.
 
அதை காதில் கூட வாங்காமல், அருந்ததி பின்னே நடந்தாள் நந்திதா.
 
“விடு மா, ரெண்டு நாள் கோபமா இருப்பா. அப்புறம் சகஜமா ஆகிருவா.நீ வா”, என்று சொல்லி சுமதியை அழைத்து கொண்டு சென்றாள் பிரபா.
 
ஆட்டோ, வீட்டு முன்பு நின்றது. அதில் இருந்து இறங்கிய நந்திதா, வீட்டுக்குள் போகாமல் அந்த தெருவே வேடிக்கை பார்க்க வசதியாக வீட்டு வாசல் படியில் அமர்ந்தாள்.
 
கூட வந்த முவரும் திகைத்தார்கள். “என்ன நந்து இங்கயே உக்காந்துட்ட? உள்ள வா”, என்று சொன்னாள் அருந்ததி.
 
இவர்களின் சத்தம் கேட்டு, உள்ளே இருந்த ஆண்களும் வெளியே வந்தார்கள்.
 
யாரையும் கவனிக்காமல், அப்படியே அமர்ந்திருந்தாள் நந்திதா.
 
“என்ன ஆச்சு சுமதி? உள்ள வராம, இங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?”, என்றார் வாசுதேவன்.
 
“நந்திதா எந்த தப்பும் செய்யலை, அவ கன்னி பொண்ணு தான்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதான் கோபமா இருக்கா”, என்றாள் பிரபா.
 
எல்லாருக்கும் குற்ற உணர்வு தலை தூக்கியது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அமைதியாக இருந்தாள் நந்திதா.
 
“நாங்க பேசினதை தப்பா எடுத்துக்காத மா. விமல் தம்பிக்கும் சந்தேகம் தான். இப்ப உண்மையை சொன்னோம்னா அவரும் சந்தோச படுவார். உள்ள வா”, என்று கையை பிடிக்க போனார் அவளுடைய அப்பா.
 
அவரை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் நந்திதா. அவளுடைய பார்வையே, அவரை இரண்டு அடி அவளை விட்டு, பின்னால் போக வைத்தது.
 
அவள் எதுக்கு இப்படி வாசலில் உக்காந்திருக்கிறாள் என்று தெரியாமல், அனைவருக்கும் குழப்பமாக இருந்தது. அவள் கையை தொட்டாலும், தட்டி விட்டு கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் நந்திதா.
 
தெருவே இவர்கள் வீட்டை தான், வேடிக்கை பார்த்தது.
 
அப்போது தான் சைரன் அதிர, போலீஸ் வண்டி ஒன்றும், காரும் அந்த தெருவுக்குள் வந்தது. எல்லாருடைய கவனமும் அங்கே திரும்பியது.
 
அதில் இருந்து இறங்கினார்கள் சதாசிவமும், ஹரியும்.
 
ஜீப்பில் இருந்து இரண்டு காவலர்கள், அந்த விமலை கைது செய்து கீழே இறக்கினார்கள்.
 
அதிர்ச்சியாக அவனை பார்த்தார்கள் நந்திதா வீட்டில் எல்லாரும்.
 
சதாசிவம் அந்த விமலை நந்திதா முன்பு அழைத்து வந்தார். கூடவே அமைதியாய் ஹரி வந்தான். அவனுடைய கண்கள் முழுவதும் நந்திதா மேல் தான் இருந்தது. நந்திதா எழுந்து நின்றாள்.
 
இப்போது அவள் மனது படும் வலியை பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். “எப்படி ஆளே மாறி போய் உக்காந்துருக்கா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
 
“நந்திதா தான மா உன் பேரு?”, என்று கேட்டார் சதா சிவம்.
 
“ஆமா சார்”
 
“நீங்க இவன் மேல கம்பளைண்ட் கொடுக்குறீங்களா?”
 
“கொடுக்குறேன் சார்”, என்று நந்திதா சொல்லும் போது “எதுக்கு சார் எங்க வீட்டு மாப்பிளையை கைது பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டார் வாசு தேவன்.
 
“மாப்பிள்ளையா? இவனா மாப்பிள்ளை? இவனுக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் முடிஞ்சிருக்கு. இன்னும் எத்தனை முடிஞ்சிருக்குன்னு யாருக்கு தெரியும்? இவனை போய் உங்க பொண்ணுக்கு பாத்துருக்கீங்க? பாத்தா படிச்ச குடும்பம் மாதிரி இருக்கீங்க? எதுவும் விசாரிக்க மாட்டிங்களா? இவன் பொண்ணுங்களை கல்யாணம் அப்படிங்குற பேர்ல வியாபாரம் செய்றவன். கல்யாணம் செஞ்சு அவங்களை வித்துருவான். ரெண்டு பேர் இவன் மேல கம்பளைண்ட் கொடுத்தாங்க. இப்ப உங்க பொண்ணு மேல கண்ணு வச்சிருக்கான். நந்திதா மட்டும் இவனை பத்தின வீடியோ ஆதாரங்களை அனுப்பலைன்னா, இவனை பிடிச்சிருக்க முடியாது”, என்று சொன்னார் சதா சிவம்.
 
மொத்த குடும்பத்துக்கும், இடி விழுந்தது போல இருந்தது.
 
“ஐயோ! கடவுளே, நல்லதா போச்சு என் பொண்ணு வாழ்க்கை தப்பிச்சது”, என்று அவளை அணைத்து கொள்ள வந்த சுமதியை, கையை நீட்டி தடுத்த நந்திதா, “நான் எங்க வேணும்னாலும், இவனை பத்தி சொல்றேன் சார்”, என்றாள்.
 
“ஹ்ம்ம் சரி மா. இப்படி தான் தைரியமா இருக்கணும். உன்னை காரை ஏத்தி கொல்ல வேற முயற்சி செஞ்சிருக்கான். அதுக்கு சாட்சி அங்க உள்ளவங்க, இவனோட காரை பாத்துருக்காங்க. அப்புறம், ஹரி உங்களை காப்பாத்தி ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்திருக்கார். இதெல்லாம் சேர்த்து இவனுக்கு நிறைய நாள் தண்டனை கிடைக்கும். நீங்க இதில் ஒரு கை எழுத்து போடுங்க”, என்று சொன்னார்.
 
“சரி”, என்று அதில் கையெழுத்திட்டாள் நந்திதா.
 
அடுத்து அந்த காவலர்கள் புறம் திரும்பிய சதாசிவம், “இவனை லாக்கப்ல வைங்க. வந்து விசாரிக்கிறேன்”, என்று அனுப்பி விட்டு ஹரி புறம் திரும்பி “போகலாமா ஹரி?”, என்று கேட்டார்.
 
“ஒரு நிமிஷம் சார்”, என்றவன் நந்திதா அருகில் சென்று “போகலாமா நந்திதா?”, என்று கேட்டான்.
 
எல்லாரும் குழப்பமாக, அவனையும் அவள் முகத்தையும் பார்த்தார்கள்.
 
“ஒரு நிமிஷம் ஹரி”, என்றவள் தன்னுடைய வீட்டுக்குள்ளே சென்று அவன் வாங்கி கொடுத்த உடைகளை, அணிந்து கொண்டு கீழே வந்தாள்.
 
தன்னுடைய தம்பி சிவாவின் அருகில் சென்றவள், “நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு போகணும் சிவா. அக்கா இனி இங்க வர மாட்டேன். நான் போறேன்”, என்று சொன்னாள்.
 
“அக்கா என்னக்கா சொல்ற? எங்க போற?”
 
“மனுசங்க இருக்குற இடத்துக்கு போறேன்”
 
“ஏய் என்ன நந்து சொல்ற? இப்ப தான் எல்லாமே சரியாகிட்டு தான?”, என்று கேட்டாள் சுமதி.
 
“எதுவுமே சரியாகலை. அதை சரி பண்ண தான் வீட்டை விட்டு போறேன்”
 
“அம்மாடி நந்திதா, இந்த அப்பாவை மன்னிச்சிக்கோ மா, அதுக்காக வீட்டை விட்டு எல்லாம் போகலாமா?”, என்று கேட்டார் வாசுதேவன்.
 

Advertisement