Advertisement

“நானும் அப்படி தான் நினைச்சேன். என் செல்ல தங்கச்சி நல்லவள்ன்னு. ஆனா, அவ கேவலமானவன்னு இப்ப தானே தெரியுது? உன்னால என் புருஷன் வீட்டுக்கு முன்னாடி, எனக்கு தலை குனிவு.
என் மாமியார் இதை, எப்படி எல்லாம் குத்தி காட்டி பேச போறாங்களோ தெரியலை”
 
“எதுக்கு இப்படி எல்லாம், எல்லாரும் என்னை பேசுறீங்க? அப்பா, எல்லாரையும் இப்படி பேச வேண்டாம்ணு சொல்லுங்க பா. நான் உங்க பொண்ணு. நம்புங்க பா”
 
“யாரையாவது காதலிச்சு தொலைச்சிருந்தா, சொல்லிருக்கலாமே மா? சேத்து வச்சிருப்பேனே? இப்படி குடும்ப மானத்தையே வாங்கிட்டியே?”
 
“ஏன் இப்படி எல்லாரும் அக்காவை திட்டுறீங்க? அக்கா தப்பு செஞ்சிருக்காது”, என்றான் சிவா.
 
“என் தம்பியாவது என்னை நம்புறான். சின்ன பையன் அவனுக்கு இருக்குற அறிவு கூட, இங்க யாருக்கும் இல்லாம போச்சே? நான் சொல்றதை விட, ஒரு மாசம் முன்னாடி தெரிஞ்ச இவங்க பார்த்த மாப்பிளை சொன்ன பொய் பெருசா போச்சு”, என்று அவனை நினைத்தாலே உடம்பெல்லாம் எரிந்தது. 
அண்ணி அருந்ததியை பார்த்தாள் நந்திதா, “நீங்களாவது நம்புங்களேன்”, என்று.
 
ஆனால், அவள் சொன்ன பதில் இவளை வாயடைக்க செய்தது. “ஆள் ஆளுக்கு பேசிக்கிட்டு இருக்காம, ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிக்கிட்டு போவோம். இந்த தெருவுக்கு மட்டும் தெரிஞ்ச விசயம், ஊரெல்லாம் நாறுறதுக்கு முன்னாடி போய் ஒரு ஊசியை போடுவோம். விமல் தம்பி, எத்தனை பெருந்தன்மையா இவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருக்கு”, என்றாள் அருந்ததி.
 
அருந்ததியை கொலை வெறியோடு பார்த்தாள் நந்திதா. அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் வாயை மூடி கொண்டாள் அருந்ததி.
 
“சரி நீங்க சொல்ற படி, நான் கெட்டு போயிருந்தாலும் இப்ப எதுக்கு திரும்பி வரணும்? அப்படியே போயிருக்க மாட்டேனா?”, என்று எரிச்சலோடு கேட்டாள் நந்திதா.
 
“ரெண்டு நாள் உன்னை அனுபவிச்சிட்டு, திருப்பி அனுப்பிருப்பான். அதான் வெக்கமே இல்லாம வந்துருக்க. வராம, அப்படியே போய் செத்து போய்ருக்கலாம்”, என்றாள் சுமதி.
 
“ஹ்ம் செத்து போய்ருக்கலாம் தான்”, என்று நினைத்து கொண்டாள் நந்திதா. “நீங்க சொல்றதுல, கொஞ்சமாவது லாஜிக் இருக்காமா? பெத்த பொண்ணு என்னை நம்பாம ஏதோ கேடு கேட்டவனை நம்புறீங்க? அவன் சொல்றது பொய் மா”
 
“அந்த தம்பி பொய் சொல்லாது. எவ்வளவு பெருந்தன்மையா, நம்ம அப்பாவோட கடன் எல்லாம் அடைச்சிருக்காரு? நீ தேவை இல்லாம பேசி நேரத்தை கடத்தாம, ஒழுங்கா ஹாஸ்பிட்டலுக்கு வா”
 
“இவங்க சொன்ன மாதிரி ஹாஸ்பிட்டல் போய் நிரூபித்தால் தான் என்ன?”, என்ற எண்ணம் ஒரு நொடி நந்திதாவுக்கு வந்தது.
 
“ஆனால் இவங்க ஒண்ணும் என் மேல உள்ள அக்கறையில் பேசலையே? அப்படியே நிரூபித்தாலும் இவங்க பேசிய பேச்சை மறக்க முடியுமா? இனியொரு தரம் இவங்க கூட முன்னாடி மாதிரி பழக முடியுமா? அதை விட கொடுமை, நாலு பேரு முன்னாடி என் மானத்தை வாங்க துடித்த, அந்த விமலை கல்யாணம் செய்யணுமா? இது உன் வாழ்க்கை நந்திதா. தெளிவா முடிவெடு”, என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.
 
ஒரு நொடி யோசித்தவள் அடுத்து என்ன செய்யணும் என்று முடிவு எடுத்து விட்டாள். “இனி வருவது வரட்டும்”, என்று அமைதியாக இருந்தாள். “எவ்வளவு தான், பேசுறாங்கன்னு பாப்போம்”, என்று நினைத்து கொண்டாள். அடுத்து எல்லாருடைய வசவும் ஆரம்பித்தது.
“உன்னை ரொம்ப அதிகமா செல்லம் குடுத்து வளர்த்துட்டோம் போல மா. இத்தனை பெரிய அசிங்கத்தை, எங்களுக்கு கொடுத்துட்டியே. எவனையாவது புடிச்சிருந்தா, எங்க கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே? தலை எழுத்தேனு நினைச்சு கட்டி கொடுத்துருப்போமே? கண்டவனோட போய், கேவலமான வேலைய பார்த்துட்டு வந்துருக்கியே ச்சி”, என்றார் வாசுதேவன்.
 
“குட்டிமா, நீ எப்போதும் சிரிச்சுட்டே இருக்கணும் டா. அது தான் இந்த அப்பாவுக்கு வேணும்”, என்று சொல்லும் அப்பா , “இன்று பேசிய இந்த பேச்சு இனி ஆயுசுக்கும் அவரை அப்பானு சொல்ல முடியாத படி செஞ்சிட்டு”, என்று நினைத்து கொண்டாள் நந்திதா.
 
“இப்படி சீரழிஞ்சு வருவானு தெரிஞ்சிருந்தா, கருவுல இவ இருக்கும் போதே அழைச்சிருப்பேனே? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டா. அசிங்கம் புடிச்சவ…”, இன்னும் காதால் கேட்க கூடாத வார்த்தைகளை பேசினாள் அம்மா சுமதி.
 
“உன்னை எல்லாம் கையை காலை முறிச்சு வீட்ல போடணும். ஆனால், உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு”, என்றான் அண்ணன் சுந்தர்.
 
“போதும் பேசினது. ஏய், எவனோ கேடு கெட்டவன் குடுத்த துணிய கழட்டி எறிஞ்சிட்டு, வேற டிரஸ் மாத்திட்டு வா”, என்றாள் அக்கா பிரபா.
 
அதுவரை அமைதியாக இருந்தவள், இந்த வார்த்தையில் கொந்தளித்தாள். “கேடு கெட்டவனா? அவனா கண்ணிமைக்குள் வைத்து காத்து கொண்ட அவனா கேடு கெட்டவன்”, நினைத்து கொண்டு “வாயை மூடுங்க எல்லாரும். இனி ஒரு வார்த்தை யாரும் பேச கூடாது. கேடு கெட்டவனாம், கேடு கெட்டவன். யாரு அவரா? அவர் மட்டும் இல்லைன்னா, இந்நேரம் நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன். ஆனால், அவர் காப்பாத்தாமலே இருந்திருக்கலாம். நிம்மதியா நடு ரோட்ல செத்து கிடந்துருப்பேன். இப்ப உங்க அழுக்கான சுய ரூபம் எல்லாம் தெரியாமலே போயிருக்கும்”, என்றாள் நந்திதா.
 
“அவனை சொன்ன உடனே, கோபம் வருதோ உனக்கு? இதுல இருந்தே தெரியலையா உன்னோட யோக்கியதை? அப்புறம் எதுக்கு டி அவனை விட்டுட்டு இங்க வந்த?”, என்று கத்தினாள் சுமதி.
 
“உங்களுக்கு, இனி என்னால புரிய வைக்க முடியாது. இப்ப முடிவா, என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க?”
 
“ஹாஸ்பிட்டல் போய், ஒரு ஊசி போட்டுட்டு அந்த விமல் தம்பியை கல்யாணம் பண்ணி, போன குடும்ப மானத்தை காப்பாத்து டி”
 
“அம்மா சொன்னா கேளுங்க. எனக்கு எந்த தப்பும் நடக்கலை. நான் சுத்தமா தான் இருக்கேன். அவன் என்னை வேற ஊருக்கு கடத்த முடிவு செஞ்சான். அதுல இருந்து தான் தப்பிச்சு வந்துருக்கேன். மறுபடியும் புதை குழில தள்ள பாக்குறீங்களே?”
 
“பொய் சொல்லாத. அதெல்லாம் எங்களுக்கு அந்த தம்பியை பத்தி நல்லா தெரியும். அத்தனை பெரிய பணக்காரங்க, ஏன் இப்படி செய்யணும்? உன்னோட தப்பை மறைக்க, அவர் மேல பழி போடாத. ஏற்கனவே அக்கம் பக்கம் காரி துப்ப ஆரம்பிச்சிட்டாங்க. இனியும் கேவல படுத்தாம கிளம்பு”
 
“ஒரு வேளை அங்க ஹாஸ்பிட்டலில், என்னை கன்னினு சொல்லிட்டாங்கன்னா, அப்ப உங்க மூஞ்சிய எங்க வச்சுக்குவீங்க?”, என்று கேட்டாள் நந்திதா.
 
அனைவரும் ஒரு நிமிடம் திகைத்தாலும், அவளை நம்ப வில்லை.
 
“அம்மாடி நந்திதா”
 
“அப்பா”
 
“எங்களை அசிங்க படுத்தாத மா. மானமே போகுது. நீ இப்படி சொல்லி தான், எங்களை ஏமாத்துவன்னு அந்த தம்பி சொல்லுச்சு. அதே மாதிரி சொல்ற. அந்த பையனுக்கு நல்ல மனசு. தயவு செஞ்சு இதுக்கு மேல பேசாத. தம்பியே ஒரு டாக்டர் அட்ரஸ் கொடுத்துருக்காரு, வா போகலாம்”
 
வெறுத்து விட்டது நந்திதாவுக்கு. “இத்தனை கேவலமாக மனிதர்கள் இருப்பார்களா? பொய் சொல்லி இத்தனை பேரையும் நம்பும் படி செஞ்சிட்டு, இப்ப அவனே ஒரு டாக்டர் பாத்து வச்சிட்டு, அவன் சொன்ன பொய்யை உண்மையாக்க போறான்”, வீட்டை சுற்றி இருந்த அனைத்து பொருள்களையும் பார்த்தாள். எல்லாமே புதியதாக இருந்தது.
 
அவன் வாங்கி தந்தது. “கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்த அவனை, இவர்கள் நம்பாமல் இருந்தால் தான் அதிசயம். இந்த உலகத்தில் பணத்துக்கு மயங்காத ஆள் இருக்காங்களா என்ன?
 
ஆனால், யார் என்ன சொன்னாலும் பெத்த பொண்ணையும், கூட பொறந்தவளையும் நம்ப வேண்டாமா? என் கற்பையே கலங்க படுத்தின, இவங்க வீட்ல இனியும் இருக்கணுமா? இனியும் இந்த வீட்டில் இருக்க கூடாது. ஆனால், போகும் முன்னாடி அத்தனை பேருக்கும் பாடம் புகட்டணும். அந்த கேடு கெட்ட விமலின் முக மூடியை கிழிக்கணும். அப்படி செய்யலைன்னா, என் பெயர் நந்திதா இல்லை”, என்று நினைத்து தனக்குள் சபதம் செய்து கொண்டாள்.
 
“போய் கிளம்பி வா”, என்று முடிவாய் சொன்னாள் சுமதி. அழுது கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்றாள் நந்திதா. கட்டிலில் அமர்ந்தவள் வாழ்க்கையில் கடைசி முறையாக அழுவது போல அழுதாள்.
 
அப்போது, தன்னுடைய அறைக்கு வந்த சுமதியை பார்த்தாள். “கோபத்தில் திட்டிட்டு என்னை சமாதான படுத்த வந்திருப்பாங்களோ?”, என்று ஏக்கத்துடன் பார்த்தாள் நந்திதா.
 
“மறுபடியும் உடம்பு சுகத்துக்காக, வேற எவன் கூடவும் ஓடிறாத”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
 
“இவ வயித்தில் தான், நான் பொறந்தேனா? இவங்க எல்லாரையும் விட அந்த விமல் மேல் போல”, என்று நினைத்து கொண்டவள் “பேசாம செத்துரலாமா?”, என்று யோசித்தாள்.
 
ஹரி கேட்ட சத்தியம் நினைவு வந்தது. “என்னோட மனநிலை யோசிச்சு தான், அப்படி சத்தியம் வாங்கிருக்கான். அவன் அப்படி முடிவு செஞ்சிருக்கான்னா, இவங்க அவன் கிட்ட போனில் எப்படி பேசிருக்கணும்? அது மட்டும் இல்லாம செத்தோம்னா, இவங்க என் மேல போட்டுருக்க பழியை எப்படி நிரூபிக்க முடியும்?”, என்று நினைத்து கொண்டே தன்னுடைய ஹாண்ட் பேக் எடுத்தாள். அதில் தன்னுடைய போனையும், ஹரி கொடுத்த அவனுடைய போன் நம்பரையும் எடுத்தவள், அந்த அறையை மூடி தாள் போட்டாள்.
 
மனம் முழுக்க சஞ்சலத்துடன், அவனுடைய எண்களை அழுத்தினாள்.
 
யார், என்று தெரியாமல் “ஹலோ யாரு?”, என்று கேட்டான் ஹரி.
 
அமைதியாக இருந்தாள் நந்திதா. “என்ன சொல்ல? எங்க வீட்ல என்னை கேவலமா பேசுறாங்க. அதனால, என்னை கூட்டிட்டு போன்னு, முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட சொல்லனுமா?”, என்று நினைத்து இந்த தருணத்தை அறவே வெறுத்தாள் நந்திதா.
 
அவள் அமைதியை உணர்ந்த ஹரி, ஒரு சந்தேகத்துடன் “நந்திதாவா?”, என்று கேட்டான்.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி விட்டு அழுதாள் நந்திதா.
 
“அழாத நந்திதா. நான் உன் போன்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். உங்க வீட்ல அப்படி பேசுவாங்கன்னு நினைச்சேன். என்ன நடந்தது மா உன் வாழ்க்கைல?”
 
சுருக்கமாக நடந்ததை சொன்னாள் நந்திதா.
 
“இப்போதைக்கு, என் மேல நம்பிக்கை இருந்தா என் வீட்டுக்கு வா நந்திதா. நம்பிக்கை இல்லைன்னா கூட பரவால்ல. நிறைய ஹாஸ்டல் இருக்கு. அங்க இடம் பாத்து தரேன். ஒரு நிமிஷம், என்னோட அம்மா உன்கிட்ட பேசணுமாம்”, என்று கொடுத்தான்.
 
“அம்மாடி நந்திதா, என்னோட பேர் விஜி மா. ஹரியோட அம்மா. அவன் உன்னை பத்தி, எல்லாம் சொன்னான். பய படாத மா. அங்க இருந்தா தான் உன்னை பேசியே கொல்லுவாங்க. நான் உன்னை பாத்தது கூட இல்லை மா. ஆனா, நீ என்கிட்ட வந்துரு. நான் உன்னை, என் பொண்ணு மாதிரி வச்சு பாத்துக்குறேன்”
 
அவளுடைய பாசமான குரலை கேட்டு “அம்மா”, என்று சொல்லி கதறி அழுதாள் நந்திதா.
 
“அழாத மா. இப்ப அழ வேண்டிய நேரம் இல்லை. முடிவு எடுக்க வேண்டிய நேரம். ஒரு வேளை உனக்கு உன் வீட்ல இருந்து, வர விருப்பம் இல்லைன்னா ஹரி கிட்ட சொல்லு மா. அந்த பொறுக்கியை பிடிச்சு, உங்க வீட்ல உண்மையை சொல்ல வைப்பான். இந்தா, அவன் கிட்ட பேசு”, என்று கொடுத்தாள் விஜி.
 
“உண்மையை நிரூபிச்சாலும், இந்த வீட்டில் மானமுள்ள எந்த பொண்ணும், இருக்க மாட்டா”, என்று நினைத்து கொண்டு “ஹரி என்னை கூட்டிட்டு போயிருங்க. ஆனா, அதுக்கு முன்னாடி என்னை பத்தி நிரூபிக்கணும். அவனை, முதலில் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கணும். அவனை பத்தி எனக்கு கொஞ்சம் விஷயம் தான் தெரியும்னு நினைச்சு, என்னை கொல்ல முடிவு செஞ்சான். ஆனா, அவன் பேசுனது எல்லாமே நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன். நான் உங்களுக்கு அனுப்புறேன். அவன் வீடும், எங்க இருக்குன்னு அனுப்புறேன். அவன் இன்னைக்கு மதியம் மூணு மணிக்கு, ஒரு பொண்ணை ஏர்போர்ட் வழியா கடத்த போறான். இதை வச்சு அவனை பிடிக்கலாம்”, என்று சொன்னாள்
 
“இவ்வளவு சொல்லிருக்க. கண்டிப்பா பிடிச்சிறலாம் நந்திதா. நீ மட்டும் அழாமல் தைரியமா இரு. நான் இப்பவே வந்து, உன்னை கூப்பிட வரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்தே, அவனை பிடிச்சு உங்க வீட்ல உண்மையை சொல்ல வைப்போம், சரியா?”
 
“இப்ப வேண்டாம் ஹரி. நீங்க அவனை மூணு மணிக்கு பிடிச்சதுக்கு அப்புறம், என்னை கூப்பிட வாங்க. இப்ப ஒரு இடத்துக்கு போறோம்”, என்றாள் நந்திதா.
 
“இப்ப எங்கயும் போகாத? அவன் எதாவது பிளான் செஞ்சிருப்பான் மா. ஆமா எங்க போற? வீட்ல என்ன சொன்னாங்க?”, என்று கேட்டான் ஹரி.
 
“என்னை கன்னியா, இல்லையான்னு சோதனை பண்ண, எங்க வீட்ல கூட்டிட்டு போறாங்க”, என்று சொல்லி கதறி அழுதாள் நந்திதா.
 
“ஏய், இங்க பாரு அவங்க கூட போகாத. அவங்க தான் அசிங்கம் பிடிச்ச வேலை செய்றாங்கன்னா, நீயும் அவங்க சொல்றதை பெருசா எடுக்கணுமா?”, என்று கேட்ட அவன் குரலில் அத்தனை கோபம் தெரிந்தது.
 
“நீ சுத்தமானவ மா. எங்கயும் போக கூடாது, வீட்லயே இரு. அழாமல் எனக்கு அவனை பத்தின டீடெயில்ஸ் அனுப்பு. நான் இப்பவே கமிஷனர் பாக்க போறேன். அவர் என் அப்பாவோட பிரண்ட் தான்”, என்று சொல்லி விட்டு வைத்தான் ஹரி.
 
“என்னை யாருன்னே தெரியாதவன் சொல்றான், நான் தப்பானவ இல்லைன்னு. ஆனா, என்னை பெத்த அம்மா என்னை உடம்பு சுகத்துக்கு அலையுறேன்னு சொல்லிட்டாங்க”, என்று நினைத்து கொண்டே கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள்.
 
“இன்னும் அழாத நந்திதா”, என்று தனக்குள் சொல்லி கொண்டவள், அவள் அணிந்திருந்த உடையை கழட்டி துவைத்து விட்டு குளித்தாள். ஒரு சேலையை எடுத்து அணிந்தவள், அவள் துவைத்த உடையை உலர்த்த போட்டாள் “போய்ட்டு வரதுக்குள்ள காஞ்சிரும்”, என்று நினைத்து கொண்டு.
 
ஈர தலையை துவட்ட கூட, இல்லாமல் ஒரு கிளிப் வைத்து மாட்டியவள் வெளியே வந்தாள்.
 
எல்லாரும் அவள் வரவுக்காக தான், நின்று கொண்டிருந்தார்கள்.
 
“கிளம்பலாமா?”, என்று சொல்லி கொண்டு சுமதியும், அவளுடன் பிரபாவும், அருந்ததியும் கிளம்பினார்கள்.
 
“ஒரு நிமிஷம்”, என்று சொல்லி அவர்களை நிறுத்திய நந்திதா, “உங்க கூட நான் டெஸ்ட்க்கு வரேன். ஆனா, அவன் சொன்ன டாக்டர் கிட்ட மட்டும் போக கூடாது”, என்றாள்.
காதல் பூக்கும்…

Advertisement