Advertisement

காதல் பூக்குமா என்னவனே
அத்தியாயம் 1  
உன் முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடியும்
என்னுள் பல கவிதைகள்
ஜனனம் எடுக்கின்றன!!!
கண்களில் முழு காதலை தேக்கி, அவளை பார்த்து கொண்டிருந்தான் ஹரி கிருஷ்ணன். குழந்தை போல் தூங்கும், அவள் முகத்தை ரசித்தான். 
“இந்த உலகத்தில் என் கண்ணுக்கு, இவளை தவிர யாரும் அழகியா தெரிய மாட்டாங்க”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து கொண்டே இருந்தான்.
 
அப்போது தான் கண் விழித்த நந்திதா, கண்களை சுழற்றி அந்த அறையை பார்த்தாள்.
 
“இது என்ன ஹாஸ்பிட்டல் மாதிரி இருக்கு? இங்க எப்படி நான் வந்தேன்?”, என்று யோசித்து நினைவுகளை ஓட்டினாள். அந்த பயங்கரம் நினைவு வந்தது.
 
“நான் இன்னும் உயிரோட தான் இருக்கேனா? அந்த வெறி நாய்களிடம் இருந்து தப்பிச்சிட்டேனா? அப்புறம் என்ன ஆச்சு?”, என்று தலையை பிடித்து யோசித்தாள் நந்திதா. அப்போது தான் அவள் கையில், தலையில் இருந்த கட்டு தட்டு பட்டது.
 
“நீங்க கண்ணு முழிச்சிட்டிங்களா? இருங்க டாக்டரை கூட்டிட்டு வரேன்”, என்று எழுந்தான் ஹரி. அப்போது தான், அவனையே பார்த்தாள். அவனை யார் என்று தெரியாததால் “நீங்க யாரு? நான் எப்படி இங்க வந்தேன்?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“என்னோட பேர் ஹரி. இங்க உங்களை என்னோட மனைவின்னு தான், அட்மிட் பண்ணிருக்கேன். மித்த விவரம் எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப டாக்டரை கூட்டிட்டு வரேன்”, என்று எழுந்து சென்றான்.
 
“இவன் யாரு? இவன் எப்படி என்னை, இங்க கூட்டிட்டு வந்தான்?”, என்று குழம்பினாள். அந்த குழப்பத்திலும், மனது அவன் கம்பீரத்தை ரசித்தது. 
“பாக்க, ஹீரோ கணக்கா இருக்கான். எனக்கும் மாப்பிள்ளை பாத்துருக்காங்க பாரு? கேவலமான பரதேசி. கடைஞ்செடுத்த அயோக்கியன். அவன் கிட்ட இருந்து தப்பிச்சதே, அப்படியே புல்லரிக்குது”, என்று நினைத்து கொண்டிருக்கும் போதே டாக்டருடன் உள்ளே வந்தான் ஹரி.
 
“ஓ மை காட் கண்ணு முழிச்சிட்டிங்களா? ரெண்டு நாள் எங்க எல்லாருக்கும், ரொம்ப டென்ஷன் கொடுத்துடீங்க. அதுவும் உங்க வீட்டுக்காரர், ஒரு பொட்டு கூட தூங்காம உங்களை கவனிச்சிக்கிட்டார்”, என்று பேசி கொண்டே அவளை பரிசோதித்தார் அந்த டாக்டர்.
 
“என்னது ரெண்டு நாளா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் நந்திதா.
 
“ஆமா”, என்று சொல்லி விட்டு “உங்க மனைவி சரியாகிட்டாங்க ஹரி. நீங்க இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். தலை காயம் ஆற மட்டும், ஒரு வாரம் ஆகும்”, என்று சொல்லி விட்டு அந்த டாக்டர் சென்று விட்டார்.
 
“நிஜமாவே, நான் இங்க வந்து ரெண்டு நாள் ஆகிட்டா?”, என்று ஹரியை பார்த்து கேட்டாள் நந்திதா.
 
“ஆமா”, என்று சொல்லி அழகாய் அவளை பார்த்து சிரித்தான் ஹரி.
 
“கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. அன்னைக்கு ஒரு கார் என்னை மோதுச்சு. அது தான் நினைவு இருக்கு. அப்புறம் என்ன ஆச்சு?”
 
சோர்ந்து தெரிந்த அவளுடைய தோற்றத்தையும் ரசித்த ஹரி “அன்னைக்கு ஒரு கார் உங்களை அடிச்சு போட்டுட்டு நிக்காம போய்ட்டு. நான் தான் இங்க தூக்கிட்டு வந்தேன்”, என்றான்.
 
“ஓ தேங்க் யு சார். ரெண்டு நாளா நான் இங்க தான் இருக்கேனா? என்னை எங்க வீட்டில் தேடி இருப்பாங்களே? நான் உடனே போகணும்”, என்றாள் நந்திதா.
 
அவள் சொன்னதை கேட்டு. அவன் முகம் இறுகியது. “நல்லா தான சிரிச்சு பேசிட்டு இருந்தான்? எதுக்கு திடீர்னு இவன் முகம் இப்படி மாறுது?”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.
 
“என்னுடைய பேக்”, என்று சுற்றி கண்களை சுழல விட்டாள். “இருங்க நான் எடுத்து தரேன்”, என்று சொல்லி விட்டு எடுத்து கொடுத்தான்.
 
அதை வாங்கியவள், தன்னுடைய போனை எடுத்தாள். மௌனமாக அவள் செய்கையை பார்த்து கொண்டிருந்தான் ஹரி.
 
அவன் பார்வையை சட்டையே செய்யாமல் தன்னுடைய வீட்டுக்கு அழைத்தாள். அந்த பக்கம் மணி அடித்து, பின் எடுக்க பட்டது. இவள் இங்கே “ஹலோ”, என்றதும், அங்கே இணைப்பு தூண்டிக்க பட்டது.
 
“என்ன ஆச்சு கட் ஆகிட்டு?”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் அழைத்தாள். இந்த முறை எடுக்க படவே இல்லை. “சரி அப்பாவோட மொபைல்க்கு கூப்பிடுவோம்”, என்று நினைத்து அழைத்தாள். அதுவும் எடுக்க பட வில்லை, அதை விட பெரிய விசயம் ஒரு ரிங்கிலே கட் செய்ய பட்டது.
 
“என்ன ஆச்சு எல்லாருக்கும்? ரெண்டு நாள் இங்க காணாம போய்ருக்கேன். என்னை தேடவே இல்லையா?”, என்று தன்னுடைய போனில் “என்னை கூப்பிட்டு இருக்காங்களா?”, என்று நினைத்து கால் கிஸ்ட்ரியை பார்த்தாள். அதில் கடைசியாக இரண்டு நாள் முன்பு இவளிடம் இருந்து கால் போனது மட்டும் தான் பதிவாகி இருந்தது.
 
அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அந்த போன் தன்னுடைய சார்ஜ் இழந்து மொத்தமாக அணைந்தது. “சார்ஜ் செய்ய படாத போன், அணையாம என்ன செய்யும்?”, என்று நினைத்து கொண்டு ஹரியை பார்த்தாள். அவன், அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
 
“நான் வீட்டுக்கு போகணுமே மிஸ்டர் ஹரி. எப்படினு சொல்றீங்களா? இது எந்த இடம்?”, என்று அவனிடம் கேட்டாள்.
 
அவளை பார்த்தவன், “நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுறேன். என் கூட வர இஷ்டம் இல்லைன்னா கூட, வேற கார் ஏற்பாடு செய்றேன். ஆனா, போறதுக்கு முன்னாடி, நீங்க எனக்கு ஒரு சத்தியம் செய்யணும்”, என்று முகம் இறுக சொன்னான் ஹரி.
 
“நீங்க எப்படியும், எனக்கு இங்க பில் கட்டி இருப்பீங்க. அதை கொடுப்பேன்னு தான, சத்தியம் பண்ணனும்? கண்டிப்பா தந்துறேன் ஹரி”, என்று சிரித்தாள் நந்திதா.
 
“நான் அதுக்காக சொல்லலை மிஸ் நந்திதா. உங்க பெயரை உங்க டிரைவிங் லைசன்ஸ்ல பாத்தேன். இப்ப கூட என்னோட எண்ணம், நீங்க உங்க வீட்டுக்கு போக வேண்டாம்னு தான். ஆனா, நீங்க என்னை நம்ப மாட்டிங்க. அதனால, நீங்க வீட்டுக்கே போங்க. ஆனா, அவங்க என்கிட்ட பேசுறதை பார்த்தா, நீங்க அங்க இருந்து வெளிய வருவீங்கன்னு தான் நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், நீங்க என்கூட என் வீட்டுக்கு ஒரு பிரண்டா வருவேன்னும், எந்த சூழ்நிலையிலும் எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்னும் எனக்கு சத்தியம் பண்ணனும்”, என்றான்.
 
அவனை “லூசா நீ?”, என்பது போல பார்த்தாள் நந்திதா. ஆனால், அவன் உறுதியாக நின்றான்.
 
“நீங்க எங்க வீட்டுக்கு பேசினீங்களா? என்ன சொன்னாங்க? எதுக்கு நீங்க இப்படி பேசுறீங்க?”, என்று கேட்டாள்.
 
“சொல்றேன். அதுக்கு முன்னாடி நீங்க சத்தியம் பண்ணுங்க”
 
“எனக்கு அப்படி எந்த சூழ்நிலையும் வராது. ஆனாலும், சத்தியம் பண்றேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தா, உங்க வீட்டுக்கு வரேன். தப்பான முடிவு எடுக்க மாட்டேன். இது சத்தியம்”, என்றாள் நந்திதா.
 
“இந்தாங்க, இது தான் என்னோட போன் நம்பர்”, என்று கொடுத்தான் ஹரி.
அதை சிரித்து கொண்டே வாங்கி, தன்னுடைய பையில் வைத்தாள்.
 
அவளை இறக்கத்துடன் பார்த்தவன், “அன்னைக்கு ரோட்ல அடி பட்டு கிடந்த உடனே, என்ன செய்யனு தெரியாம இங்க வந்து சேர்த்துட்டேன். ஆனா, உங்க வீட்டுக்கு சொல்லணுமேன்னு நினைச்சு, உங்க போன்ல ஹோம்ன்னு இருக்குற நம்பருக்கு கூப்பிட்டேன். ஒரு பொம்பளை ஆள் தான் எடுத்தாங்க. ஒரு வேளை உங்க அம்மாவா கூட இருக்கலாம். உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சுனு சொல்றேன். அசிங்க அசிங்கமா பேசிட்டு போனை வச்சிட்டாங்க”, என்றான்.
 
திகைத்து அவனை பார்த்தாள் நந்திதா. “என்ன சொல்றீங்க? எங்க வீட்லயா? அப்படி எல்லாம் இருக்காது. எங்க வீட்ல யாரும் என்னை திட்ட கூட மாட்டாங்க தெரியுமா? சரி அப்படி என்னை என்ன திட்டுனாங்க?”
 
“சாரி, அதை மட்டும் என்கிட்டே கேக்காதீங்க. என்னால, அதை சொல்ல முடியாது. சத்தியம் செஞ்சிட்டிங்கள்ல? இனி உங்க வீட்ல போய், மித்த விஷயம் தெரிஞ்சிக்கோங்க. நானே உங்களை கொண்டு போய் விடுறேன். வாங்க”, என்று அழைத்தான்.
 
அப்போது தான், தன்னை குனிந்து பார்த்தாள், அது ஹாஸ்பிட்டல் உடை.
 
“என்ன செய்ய?”, என்று அவனை பார்த்தாள். “ஓ சொல்ல மறந்துட்டேன். அன்னைக்கு உங்க புடவை எல்லாம் கிழிஞ்சிட்டு. அதான், நான் ஒரு சேஃப்ட்டிக்காக இந்த சுடிதாரை நர்ஸ் விட்டு வாங்கிட்டு வர சொன்னேன்”, என்று கொடுத்தான்.
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி அதை வாங்கி கொண்டவள் அதை மாற்றி விட்டு, அவனுடன் வண்டியில் ஏறி பின்னால் அமர்ந்தாள்.
 
“வண்டில வந்துருவீங்க தான? கார் ஏற்பாடு பண்ணவா?”, என்று கேட்டான் ஹரி.
 
“இல்லை, வண்டிலே போகலாம்”
 
அவளிடம் வீட்டுக்கு வழி கேட்டு, வீட்டை அடைந்தான் ஹரி. அவளை இறக்கி விட்டவன் “சத்தியம் நினைவு இருக்கட்டும்”, என்றான்.
 
“ம்ம்”, என்றவள் “உள்ளே வாங்க”, என்றாள்.
 
“நீங்க போங்க. உங்களுக்கு பிரச்சனைன்னா, ஒரு போன் போடுங்க நான் ஓடி வரேன். ஆனா, நான் இப்ப உங்க கூட உள்ள வந்தா, நல்லா இருக்காது. வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
 
அந்த தெருவே அவளை வேடிக்கை பார்ப்பதை பார்த்து, குழப்பத்துடன் உள்ளே போனாள் நந்திதா.
 
அழைப்பு மணியை அடித்து விட்டு, காத்திருந்தாள் நந்திதா. கதவை திறந்தான் சிவா. அவளுடைய தம்பி.
 
“வாக்கா, என்ன தலைல கட்டு?”, என்று கேட்டான் சிவா.
 
“அது ஒரு ஆக்சிடென்ட் சிவா. சரி நீ காலேஜ்க்கு போகலையா?”
 
“இல்லைக்கா போகலை. ஆனா, நீ இங்க வராமலே இருந்துருக்கலாம் அக்கா”
 
“ஏண்டா இப்படி சொல்ற?”
 
“ஆமாக்கா, உன்னை பத்தி அந்த விமல் தப்பு தப்பா, நம்ம வீட்ல சொல்லி வச்சிருக்கான். இவங்களும் நம்பிட்டாங்க. நீ இங்க இருந்து போயிருக்கா”, என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்து விட்டான்.
 
குழப்பத்துடன் அவன் போன திசையை பார்த்து கொண்டு நின்றாள் நந்திதா.
 
அடுத்த அடி, அவள் எடுத்து உள்ளே வைக்கும் போது “அங்கேயே நில்லு. இன்னொரு அடி எடுத்து வைக்காத. எங்க வந்த?”, என்று கேட்டாள் நந்திதாவின் அம்மா சுமதி.
 
“அம்மா”, என்று திகைத்து நின்றாள்.
 
எல்லாரும் அவரவர் அறையில் இருந்து வர ஆரம்பித்து, மொத்தமாக அவளை சுற்றி நின்றார்கள்.
 
“இவ கிட்ட என்ன மா பேசிட்டு இருக்கீங்க? வெளிய தள்ளி கதவை அடைக்க வேண்டியது தான?”, என்றான் அவளுடைய அண்ணன் சுந்தர்.
 
குற்றவாளி கூண்டில் நிற்பது போல் தன் வீட்டு வானவெளி முற்றத்தில் நின்றாள் நந்திதா.
 
இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வரும் என்று கனவிலும் அவள் நினைத்தது இல்லை. சொந்த குடும்பமே தன்னை வெளியே போக சொல்லுவார்கள் என்று இரண்டு நாள் முன்பு யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பாள். 
 
“ரெண்டு நாள் முன்பு என்ன? ஒரு மணி நேரம் முன்னாடி சொன்னானே, அந்த ஹரி. உனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு. அப்ப கூட சிரிக்க தான செஞ்சேன்?”
 
நம்பிக்கை எத்தனை பெரிய வார்த்தை? அந்த ஒரு வார்த்தையில் தான் உலகமே இயங்கி கொண்டு இருக்கிறது. ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை குறைந்தால், அடுத்து அந்த மனிதரின் மேல் வைத்த அத்தனை உணர்வுகளும் மங்கி விடும்.
 
குழந்தையில் இருந்து செல்லமாக வளர்ந்த நந்திதாவுக்கு, அவர்கள் நிற்க வைத்து இப்படி பேசியது அதிர்ச்சியை தந்தது.
 
“இருபத்தி அஞ்சு வருஷம் என் கூட இருந்தவங்களுக்கு என் மேல் எப்படி நம்பிக்கை இல்லாமல் போனது? என்னை சந்தேக பட எப்படி முடிந்தது இவங்களால? அவன் தப்பு தப்பா சொன்னா, இவங்க எல்லாரும் நம்புவாங்களாமா?”, என்று நினைத்தாள்.
 
“ஒரு வேளை கனவு காணுறேனோ? ஆமா, இது எல்லாம் கனவு தான். கண்ணு முழிச்சா, என்னை கோபமாக பாக்கும் எல்லாரும் பாசமா பாப்பாங்க”, என்று நினைத்தாள் நந்திதா.
 
ஆனால், அவள் இப்போது நினைப்பது தான் கனவு, நடப்பது தான் உண்மை என்று புரிய வைத்தான் அவள் அண்ணன் சுந்தர்.
 
“ஒழுங்கு மரியாதையா சொல்லு டி, எவன் கூட ரெண்டு நாளா இருந்த? இப்ப சொல்லலை, உன்னை கொன்னு புதைச்சிருவேன். ஆனால் உன்னை தொடுறதே பாவம்”, என்றான் சுந்தர்.
 
“அப்படி தீண்டத்தகாதவளா ஆவதுக்கு, நான் என்ன செஞ்சேன்?”, என்று நினைத்தவள் “அண்ணா இப்படி எல்லாம் பேசாத. என்னால தாங்க முடியலை. நீங்க என்ன கேக்குறீங்கன்னே, எனக்கு தெரியலை. நான் யார் கூடவும் இருக்கலை”, என்றாள்.
 
“சும்மா பொய் சொல்லிட்டு இருக்காத”
 
“இவன் எப்படி தான் பேங்க் வேலையில் இருக்கானோ?”, என்று நினைத்தாள். “இது வரை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாத, பாசத்தை பொழியும் அண்ணனா இவன்?”, என்று மனதில் நினைத்து விட்டு, “நீங்க பார்த்த மாப்பிளை தான், என்னை கடத்திட்டு போக பார்த்தான். அவன் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும் போது தான், ஒரு வண்டில மோதி அடுத்து இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல மயக்கமா இருந்துருக்கேன். அங்க இருந்த ஒருத்தர் தான் என்னை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தார்”, என்றாள்.
 
“சும்மா நடிக்காதடி”, என்றாள் சுமதி.
 
“கண்ணு”, என்று கொஞ்சும் அம்மாவா இப்ப நடிக்காதேன்னு சொல்றது?
 
“அம்மா நீங்களுமா? என்னை நம்ப மாட்டீங்களாம்மா?”
 
“இனி ஒரு தரம் என்னை அப்படி கூப்பிடாத. நாங்க தான் உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணி இருக்கோம்ல? அதுக்குள்ள என்ன அவசரம்? ஆம்பளை சுகம் கேக்குதோ உனக்கு?”, என்று சுமதி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் சிலையானவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
“ச்சி எப்படி மா உங்களுக்கு என்னை இப்படி கேவலமா பேச முடியுது? என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா? கஷ்டமா இருக்கு மா. நீங்க தான மா அன்னைக்கு அந்த விமல் கூட என்னை போன்னு அனுப்பி வச்சீங்க? இப்ப அசிங்கமா பேசுறீங்க?”, என்று கேட்டாள்.
 
“தெரியாம தான் டி இருந்துருக்கோம். நல்லவ மாதிரி எங்க கிட்ட, நாங்க சொன்னதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டிட்டு, ஏமாந்த நேரம் இப்படி செஞ்சிருக்க. விமல் தம்பி எல்லாம் சொன்னாரு. அவர் கூட போன நீ, அவரை மண்டையில் அடிச்சு போட்டுட்டு ஓடிருக்க. சொல்லு எவன் கூட ஓடுன?”
 
“அசிங்கமா பேசாதீங்க மா. விமலை நான் அடிச்சது உண்மை தான். அவன் என்னை கெடுக்க முயற்சி செஞ்சான். அதனால் தான் அடிச்சேன். நான் சொல்றது நிஜம்மா”
 
“சும்மா நிறுத்தும்மா. பொய் சொல்ல ஒரு அளவு வேணும்”, என்றார் விசுவநாதன். அவளுடைய அப்பா. இல்லை அவளுடைய ரோல் மாடல் ஹீரோ.
 
“நீங்கள் கூட என்னை நம்பலையா அப்பா? என் காலை வேணும்ன்னா பாருங்க. வண்டியில் இடிச்சு இன்னும் காயம் ஆரலை. என் தலைல உள்ள அடியை பாருங்க பா. அவன் என்னை கார் ஏத்தி கொல்ல வந்தான் தெரியுமா?”
 
“எதுக்கு இப்படி பொய் பொய்யா சொல்ற? அது நீ விமலை அடிச்சிட்டு ஓடும் போது, அங்கு இருந்த ஆணியில் குத்தி உன் காலில் உள்ள தோள் கிழிஞ்சு ரத்தம் வந்ததை, இப்படி சொல்றியா? அப்புறம் நம்புற மாதிரி இருக்கணும்னு நீயே, உன் தலையை சுவரில் இடிச்சி கிட்டயாமே?”, என்று கேட்டாள் பிரபா. நந்திதாவின் அக்கா.
 
“பிரபா, நீயுமா பிரபா? நான் உன் தங்கச்சி டி. உனக்கு கூடவா என்னை பத்தி தெரியாது?”
 

Advertisement