Advertisement

சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி தான் பாத்ரூம்ல துவைக்கிறியோ, அந்த
வீட்ல கல்லு இருக்கு. அங்க போய் துவைக்க வேண்டியது தான? டைல்ஸ்ல எப்படி அழுக்கு போகும்?”, என்று கடுப்பேற்றிக் கொண்டே இருந்தாள்.
“சென்னைல உங்க மக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி குடியிருக்காங்களே. அங்க பாத்ரூம் என்ன சிமெண்ட்லயா போட்டுருக்கு? அதே டைல்ஸ்ல தானா அவங்களும் துவைக்காங்க?”, என்ற கேள்வி வாய் வரை வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகன்று விடுவாள்.
தாயம்மாவிடம் எதையும் சொல்ல முடியாத சிந்து அந்த கோபத்தை அப்படியே சித்தார்த்திடம் காட்டினாள். “உங்க அம்மா என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க”, என்று அவனிடம் கத்தி விட்டு தனியே படுத்து விடுவாள் சிந்து. 
திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இருவரும் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருப்பது கொடுமையாக பட்டது இருவருக்குமே. 
ஆனால் மனதில் இருந்த அழுத்தம் சித்தார்த்துடன் சகஜமாக இருக்க விடாமல் செய்தது.  சித்தார்த் சிந்துவை எப்படி சமாதான படுத்த என்று தெரியாமல் தவித்தான். 
தாயம்மா தான் குறை சொல்கிறாள் என்றால் சுந்தரம் ஒன்றும் சும்மா இருந்து விட வில்லை. பாகற்காய், முதல் கத்தரிக்காய் வரை எது சமைத்தாலும் அதை இப்படி வெட்டிருக்கணும், வேக வச்சு அப்புறம் சமைக்கணும், என்னைல வதக்க கூடாது, உப்பு பத்தாது, உப்பு நிறைய இருக்கு”, என்று ஏகப்பட்ட புகார்களை வாசித்து அவளை டென்ஷன் செய்தார். 
ஒரு வேளை நான் சமைக்கிறது நல்லா இல்லையோ என்று நினைத்து சித்தார்த்தைக் கேட்டால் “நல்லா இல்லாமலா காலி ஆகுது. எங்க அப்பாவே எவ்வளவு சாப்பிடுறார். சாப்பிடும் போது நல்லா இருக்குனு சொல்லுவாரே. நீயும் சாப்பிடுற தான? அப்புறம் எதுக்கு இப்படி கேள்வி கேக்குற?”, என்றான்.
“அப்ப எதுக்கு உங்க அப்பா குறை சொல்லிக்கிட்டே இருக்கார்?”, என்று சிந்து கேள்வி கேட்டால் “விடு”, என்று சொல்ல மட்டும் தான் அவனால் முடிந்தது.
அவனுக்கும் என்ன செய்வது என்று தான் புரிய வில்லை. எதுக்கு இப்படி என் பொண்டாட்டியை குறை சொல்றீங்க என்று அவன் கேட்டால் அங்கே குடும்பத்தில் விரிசல் ஏற்படும் என்ற உண்மை அவனுக்கு புரிந்தது. அதனால் வாயை மூடிக் கொண்டு இருந்தான்.
திருமணம் முடிந்து மூன்று வாரம் ஆகி இருக்கும் போது அன்று கடைசி வெள்ளி என்பதால் அவளை கோயிலுக்கு கிளம்ப சொன்னான் சித்தார்த். 
யுடுபில் வீடியோ பார்த்து சேலை கட்ட பழகி இருந்தவள் ஒரு மாதிரியாக கட்டி முடித்தாள். அங்கே மாரி பாஸ்கர் சுந்தரம் தாயம்மா, அந்த கோயிலின் வரிக்காரர்கள் சித்தார்த்தின் அப்பா பாட்டி என அனைவரும் இருந்தார்கள். 
முருகர் சிலை இல்லாமல் ஒரு பூடம் மட்டும் வைத்திருந்தார்கள். சித்தார்த்தை பின்பற்றி சாமி கும்பிட்டு முடித்தாள் சிந்து. சிந்துவுக்கு சாமி மீது பக்தி இருக்கிறது தான். அதற்காக வெறி எல்லாம் கிடையாது. அதிகம் கோயிலுக்கு சென்றதும் கிடையாது. 
அப்படி இருக்க, அங்கே பொங்கல் வைத்து படைப்பு போட்டு சாமி கும்பிடும் வரை அனைத்தும் சரியாக சென்றது. ஆனால் பூஜை மணி அடித்ததும் சித்தார்த், பாஸ்கர் ஆட அதைப் பார்த்து இங்கே சிந்துவுக்கு நெஞ்சில் ரயில் தடதடத்தது.
“இவன் இப்படி எல்லாம் சாமியாடுவானா?”, என்று பயந்து நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்தது. மனதில் ஒரு வித அதிர்வுடன் நின்றாள்.
ஆள் ஆளுக்கு அழாத என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்ச்சி அவளுக்குள் பயத்தை உருவாக்கி இருந்தது. 
சிறு வயதில் கோயிலில் ஆடும் சாமிகளைப் பார்த்தே பயப்படும் சிந்து தன்னுடன் ரத்தமும் சதையுமாக கலந்தவன் ஆடும் போது அவளுக்குள்; உருவாகிய தவிப்பை பயத்தை வரையறுக்க முடிய வில்லை. 
ஏதோ தனித் தீவில் தத்தளிப்பது போல பரிதவித்தாள். சுற்றிலும் அனைவரும் இருந்தும் அங்கிருந்த இருட்டு அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. இதுவரை அவளுக்கு பிடித்த தெய்வமான முருகர் கோவில் கூட இன்று பயத்தைக் கொடுத்தது.  கண்களில் அருவி மட்டும் நிற்காமல் வந்தது.
பின் சாமி கும்பிட்டு முடிக்கும் போது பூஜை செய்த சுந்தரம் அனைவருக்கும் விபூதி பூசி விட்டார். மாரியும் மற்ற அனைவரும் சுந்தரம் காலில் விழுந்து விபூதி பூசிக் கொண்டார்கள்.
“மாமா பூசாரி தானே? அவர் காலில் ஏன் விழனும்?”, என்று எண்ணம் வந்தாலும் வயதில் பெரியவர் என்பதால் காலில் விழுந்து வணங்கினாள். 
ஒன்பது மணிக்கு சாப்பிட்டேன் என்று சொல்ல அழைக்கும் சிந்து இன்று கூப்பிட வில்லை என்றதும் ராணியே சிந்துவை அழைத்தாள்.
சிந்து போன் எடுக்க படாததால் சித்தார்த் போனுக்கு அழைத்தாள். பாயாசத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சித்தார்த் போனை சிந்து கையில் கொடுத்து “அத்தை பேசுராங்க”, என்றான்.
அதை வாங்கி பேசும் போதே சிந்து கண்கள் மேலும் கலங்கியது. அம்மா என்ற ஒற்றை குரலிலே அவள் அழுததை ராணிக்கு உணர்த்த “சிந்து அழுதியா? என்ன ஆச்சு தங்கம்?”,என்று பதறிப் போனாள் ராணி.
“ஆன், ஒண்ணும் இல்லை மா. இவங்க கோயில இருக்கோம். அதான் போன் பண்ணலை”,. என்றாள்.
எதுவோ சரி யில்லை என்று புரிந்தது ராணிக்கு.இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்தவள் “சாப்பிட்டியா?”, என்று கேட்டாள். 
“இல்லை மா, இப்ப தான் சாமி கும்பிட்டு முடிச்சிருக்கு. இன்னும் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு தான் கிளம்பனும்”
“சரி வீட்டுக்கு போய் சாப்டுட்டு தூங்கு. நான் காலைல பேசுறேன்”:, என்று வைத்து விட்டாள்.
அதன் பின்னர் இலை கொடுக்க பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பரிமாரி சாப்பிட்டு முடித்ததும் பொங்கல் பானையை அங்கிருந்த பெண்கள் விளக்கினார்கள். பின் வரி தேங்காய் எல்லாம் பிரிக்க பட்டது. வீட்டுக்கு வரும் போது மணி பத்து ஆகி இருந்தது. அதன் பின்னர் ஆனவைரும் சாப்பிட அமர சிந்து “எனக்கு பொங்கல் சாபிட்டது ஒரு மாதிரி இருக்கு”, என்று சொல்லி விட்டாள்.
பின் அனைவரும் படுக்கும் போது மணி பதினோன்றரை. வந்ததில் இருந்து இப்போது வரை சித்தார்த முகத்தை சிந்து ஏறெடுத்தும் பார்க்க வில்லை. 
அவன் நெஞ்சில் சாய சொல்லி ஒரு மனம் சொன்னதென்றால் மற்றொரு மனமோ அவன் சாமி ஆடிய பொழுதுகளை எண்ணி பயப்பட்டது.
சித்தார்த் அருகில் சென்று படுத்துக் கொண்டாள் சிந்து. “பயந்துட்டியா செல்லம்? இதெல்லாம் ஒண்ணும் இல்லை”, என்று எவ்வளவோ சமாதானப் படுத்தினான் சித்தார்த். 
அவன் சொன்ன சமாதானம் ஒன்றுமே அவள் மனதில் பதிய வில்லை. திடீரென்று அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் நிம்மதியாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியதும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
சாய்ந்தவளை அப்படியே அணைத்து தலை கோதியிருந்தால் நிம்மதியாக தூங்கிருப்பாள். 
அவள் அணைத்ததை தவறாக புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு வெள்ளிக்கிழமை, வேண்டாம் சிந்து”, என்று சொல்லி அவள் கையை விலக்கியதும் அடுத்த நொடி அவனுக்கு முதுகு காட்டி படுத்த சிந்து மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
எதனால் அழுகிறாள் என்று புரியாமலே அழுது கரைந்தாள். அவனோ நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.
காலையில் கண்கள் எரிந்தது சிந்துவுக்கு. மௌனமாக தன்னுடைய வேலையை செய்தாள். சித்தார்த் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
முந்தைய நாள் மாலை, மாடியில் காயப் போட்ட துணியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் தாயம்மா. 
தாயம்மா வின் இந்த செயல் எப்போதுமே சிந்துவை முகம் சுளிக்க வைக்கும். எப்போதுமே அனுமதி கேட்காமல் அறைக்குள் நுழைந்து விடுவாள்.
ஒரு முறை சிந்துவும் சித்தார்த்தும் கட்டிப் பிடித்த படி இருக்கும் போதும் உள்ளே வந்தவள் சிரித்து சமாளித்து தூங்குறீங்களா என்று கேட்டு விட்டு போனாள். பொண்டாட்டி புருஷன் அறைக்குள்ள இருந்தால் ஏதாவது கேக்கவோ, கொடுக்கவோ வெளியே இருந்தே கூப்பிட வேண்டியது தானே என்பது சிந்துவின் எண்ணம். 
அதை சித்தார்த்திடம் சொன்னால் “அது அவங்களா புரிஞ்சிக்கணும் சிந்து. உங்க வீட்ல பாரு அத்தை வெளியே இருந்தே தான் உன்னைக் கூப்பிடுவாங்க. இவங்க பொசுக்கு பொசுக்குன்னு உள்ள வராங்க. நான் என்ன செய்ய சொல்லு. அவங்க கிட்ட நான் கேக்காம உள்ள வராதீங்கன்னு சொல்ல முடியுமா?”, என்று அவனும் புலம்பினான். 
இப்போது துணியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வரும் போதும் அதே தான் தோன்றியது சிந்துவுக்கு. “இப்ப இவங்களை யாரு எடுத்துட்டு வர சொன்னது?”, என்று எண்ணினாள். 
சித்தார்த்தோ “நல்லா தா போச்சு, ரெண்டு நிமிஷம் லேட்டா இந்த அம்மா வந்தாங்க. இல்லைன்னா ஜட்டியோட நின்னுருப்பேன்”, என்று எண்ணிக் கொண்டான். 
துணி எடுத்து வந்து சாவாகாசமாக ரூமில் இருந்த சேரில் போட்ட தாயம்மா,  “பாத்ரூம்ல துவைக்காதேன்னு சொல்றேன்.கேக்கவே மாட்டிக்கா. டைல்ஸ் தரைல அழுக்கு எப்படி போகும்?”, என்று ஆரம்பித்தாள்.
வேலைக்கு போகும் முன் ஒரு ஐந்து நிமிடமாவது சிந்துவை கொஞ்சுவான் சித்தார்த். அந்த நேரத்தில் அறைக்குள் வந்ததும் இல்லாமல் மீண்டும் குறை சொல்லவும் மனதளவில் கொதித்துக் கொண்டிருந்த சிந்து “அழுக்கு இருக்கோ? எதுல அழுக்கு இருக்கு காட்டுங்க”, என்று கேட்டே விட்டாள். 
சிந்து கோபத்தை முகத்தில் காட்ட வில்லை தான். ஆனால் அவள் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. அதை உணர்ந்த சித்தார்த் “ஐயோ இந்த அம்மா எதுவும் சொல்லிரக் கூடாதே”, என்று பயந்து போனான்.
“இல்லை சும்மா தான் சொன்னேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் தாயம்மா. அவள் வெளியே சென்றதும் “நான் துவைக்கிற துணில அழுக்கு இருக்கா? அப்படி அழுக்கு இருந்தா நீங்களே உங்க துணியை துவைச்சிக்கோங்க. இல்லைனா உங்க அம்மாவை துவைக்க சொல்லுங்க”, என்று அவனிடம் கோபத்தை காட்டினாள்.
“அவங்க சொல்றதுக்கு நான் என்ன செய்வேன் சிந்து. கண்டுக்காத விடு. நேரம் ஆச்சு சாப்பாடு அடைச்சிட்டியா?”
ஒரு பெருமூச்சொடு எழுந்து கிட்சனுக்கு செல்லும் போது அங்கு நின்ற தாயம்மா, சிந்து முகத்தில் என்ன கண்டாளோ “நான் சொன்னது கோபமா தாயி? அழுக்கு போவாதேன்னு தான் சொன்னேன்”, என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.
“கோபம் இல்லை. அதெல்லாம் அழுக்கு போகும். நம்ம தேய்கிறதுல தான இருக்கு. இத்தனை வருஷம் ஹாஸ்டல்ல கூட டைல்ஸ் தரைல தான் துவைச்சிருக்கேன்”, என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். 
காதல் தொடரும்….

Advertisement