Advertisement

அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள். 
அது காலியாகும் போது தான் நல்லா இருக்கிறது என்ற உண்மை புரியும். சித்தார்த் நல்லா இருக்கு என்று சொல்வான். மற்ற படி தாயம்மாவோ, சுந்தரமோ இது நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள். 
இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே லீவ் இருப்பதால் இருவரும் சிந்துவின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வரலாம் என்று கிளம்பி சென்றார்கள். அப்போதே சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது சிந்துவுக்கு. 
இருவரையும் அன்புடன் வரவேற்ற சுந்தரமும் ராணியும் இருவரையும் நன்கு கவனித்துக் கொண்டார்கள். 
சித்தார்த்தும் சிந்து வீட்டில் சகஜமாக இருந்தான். வீட்டை சுற்றி பெருக்குவதில் ஆரம்பித்து அவனால் செய்ய முடிந்த வேலைகளை செய்தான். அனைவருமே நல்ல மருமகன் என்று பூரித்து போனார்கள். 
அங்கே விருந்து முடிந்து சித்தார்த் வீட்டுக்கு வந்தார்கள். அடுத்த நாள் வேலைக்கு கிளம்பினான் சித்தார்த். காலையில் எழுந்து குளித்து முடித்து வெளியே சென்று முத்தம் பெருக்கி பின் காலை டிபன் செய்து மதியத்துக்கு அவனுக்கு வெரைட்டி ரைஸ் செய்து பொரியல் செய்து கொடுத்து விட்டாள். 
எவ்வளவு செய்யனும் என்று ஏற்கனவே மாரியிடம் கேட்டிருந்ததால் இப்போது தயக்கம் இல்லாமல் செய்தாள்.
“காலைலே எல்லாருக்கும் சாதம் வச்சிரு சிந்து. பொரியலும் காலைலே வச்சிரு. மதியம் குழம்பு மட்டும் வச்சிக்கோ. சித்தார்த்க்கு வெரைட்டி ரைஸ் கொடு”, என்று மாரி சொல்லி இருந்ததால் அது படி செய்தாள்.
சித்தார்த் ஏழு மணிக்கு கிளம்பினான். எட்டு மணிக்கு எழுந்து வந்த தாயம்மா, “எதுக்கு மதியத்துக்கும் சாதம் வச்ச? மாமா சூடா சாப்பிடணும்னு சொல்லுவார். நீ காலைல அவனுக்கு மட்டும் செஞ்சி கொடுத்துட்டு மதியத்துக்கு ஒரு பன்னிரெண்டு மணிக்கு செய்ய ஆரம்பி போதும்”, என்று சொன்னதும் சிறு எரிச்சல் எட்டிப் பார்த்தாலும் “சரி”, என்றாள். 
எட்டரைக்கு தாயம்மாவுக்கு மஞ்சள் பொடி, மிளகு தூள், நாட்டுசர்க்கரை போட்டு பால் ஆற்றிக் கொடுத்தாள். “நான் இன்னும் பல்லு விளக்கலை”, என்றான். 
பின் ஐந்து நிமிடம் கழித்து வந்தவள் “சூடு செஞ்சு கொடு தாயி”,என்றாள்.  
ஒன்பதரைக்கு குளித்து முடித்து வந்த சுந்தரத்துக்கு பால் ஆத்தி கொடுத்து பத்து மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைத்தால் “எனக்கு தக்காளி சட்னி தான் வேணும்”, என்று அடம் பிடித்த ஹாசினியை சப்பென்று அறையலாம் போல் தான் இருந்தது சிந்துவுக்கு.
வீட்டில் எட்டு மணிக்கு சாப்பிடும் சிந்து இவர்களால் இன்று பட்டினியாக இருந்தாள். சித்தார்த் இல்லை தான். ஆனால் தனியா சாப்பிடலாமா, வேண்டாமா? ஏதாவது சொல்லுவாங்களோ என்ற பயத்திலே அவர்கள் கூடவே சாப்பிடலாம் என்று இருந்தாள். 
வேறு வழியில்லாமல் எழுந்தவள் தக்காளி மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து சிறு மிளகாய் பொடியையும், உப்பையும் போட்டு தாளித்து கொதிக்க வைத்து அவசர சட்னியை தயார் செய்து கொடுத்தாள்.
“இனியாவது சாப்பிடலாம்”, என்று அமரும் போது “எனக்கு சின்னமா தான் ஊட்டி விடணும்”, என்று அவள் சொல்லும் போது கொலை வெறியே வந்தாலும் அதை செய்வதைத் தவிர வேறு வழி இருக்க வில்லை சிந்துவுக்கு. 
“இப்படியே இவங்க கூட போராட முடியாது. நாளைக்கு சீக்கிரம் சாப்பிட்டுரனும்”, என்று முடிவெடுத்தாள்.
அதன் பின் மதியம் நைட், என்று அவள் தான் ஹாசினிக்கு ஊட்டி விட வேண்டும். குழந்தைக்கு செய்வது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் சிந்துவோ மூச்சு மூட்டுவது போல உணர்ந்தாள்.
வேறு ஏதாவது வேலை இருப்பது போல் அங்கிருந்து சென்றால் “அவளுக்கு ஊட்டி விடு மா”, என்று சுந்தரமோ தாயம்மாவோ சொன்னார்கள்.  
அடுத்த நாள் சித்தார்த்க்கு மட்டும் சமையல் செய்து விட்டு பின்னர் அனைவருக்கும் சமைக்கலாம் என்று முடிவு செய்து அவனுக்கு கொஞ்சம் குக்கரில் சாதம் வைத்தாள். 
அதைக் எழுந்து வந்த பின்னர் பார்த்த தாயம்மா, “குக்கர்ல சாப்பாடு வைக்காத. பொங்கிக் கொடுத்தே. மாரியும் குக்கர்லே தான் வைப்பா. சொன்னாலும் கேக்க மாட்டா”, என்றாள்.
சரி என்று சொல்லி காலையில் அவர்களுடன் சாப்பிட்டு விட்டு மதிய சமையலை ஆரம்பித்தாள். சாப்பாடு பொங்கிக் கொடுத்து சாப்பிடும் போது “மாமாவுக்கு சாப்பாடு நல்லா குழையணும், விதை விதையா இருக்க கூடாது”, என்றாள் தாயம்மா. 
அடுத்த நாள் காலை மதியம் என்று இருமுறை சாப்பாடு பொங்கினாள். அன்று மதியம் மீதி இருந்த சாதத்தை இரவு சாப்பிட்ட சித்தார்த் “எதுக்கு களி மாதிரி பொங்கி வச்சிருக்க?”, என்று கேட்டான். 
“அத்தை தான் இப்படி பொங்க சொன்னாங்க. எனக்கு சாப்பிடவே முடியலை”
“நீ காலைல எனக்கு செய்யும் போதே உனக்கும் செஞ்சு வச்சிரு சிந்து”
“அப்படி வச்சேன், ஆனா உங்க அம்மா அதை உலப்பி வச்சிருதாங்க. மதியம், அதை பாக்கவே பிடிக்க  மாட்டிக்கு. விடுங்க பாத்துக்கலாம்”, என்று சொல்லி தன்னையே சமாதான படுத்திக் கொண்டாள். 
நாலரைக்கு தினமும் எழும் சிந்து ஐந்தரைக்கு சாப்பாடு செய்ய ஆரம்பிப்பாள். அவன் ஏழு மணிக்கு வேலைக்கு சென்றதும் அவரவர் எழுந்து வரும் நேரம் பார்த்து பால் கொடுத்து, சாப்பாடு கொடுத்து எல்லாம் விளக்கி போட பதினொரு மணி ஆகும் பன்னிரெண்டு மணிக்கு மதிய சமையல் ஆரம்பித்து இரண்டு மணிக்கு சாப்பிட்டு பின்னர் எல்லாம் விளக்கி போட மணி மூன்று ஆகும். மூன்று மணி முதல் ஐந்து மணி வரை மட்டுமே சிந்துவுக்கு ஓய்வு. பின் காபி, சமையல் என்று ஏழு மணிக்கு சாப்பாடு செய்து முடிப்பாள். இடையில் ஹாசினிக்கு ஊட்டுவது அதிகப் படியான வேலை. சில நேரம் மதியம் நான்கு மணி வரைக்கும் அவளுக்கு ஊட்டுவதே வேலையாகி போனது. ஒரு நாளைக்கு ஐந்து முறை வெந்நீர் வைப்பது அவள் வேலை தான். 
இதெல்லாம் விட கொடுமை இரவு உணவை முடித்து விட்டு “பசிக்குது சாப்பிட வாங்க”, என்று சித்தார்த்தை அழைத்தால் “எங்க அப்பா குளிச்சிட்டு வந்த அப்புறம் சாப்பிடலாம்”, என்பானே தவிர “நீ பசிச்சா சாப்பிடு”, என்று சொல்ல மாட்டான். 
“உனக்கு பசிக்குதா? வா நாம சாப்பிடலாம் அவங்க அப்புறமா சாப்பிடட்டும்”, என்றும் சொல்ல மாட்டான். 
எல்லாவற்றுக்குமே பொறுமையாக இருந்தாள் சிந்து. இதில் ஒரு நாள் “எனக்கு என்னை தேய்ச்சு விடு தாயி”, என்று வந்து சொன்னாள் தாயம்மா. 
தாயம்மாவுக்கு முடி அதிகம் என்பதால் வேறு வழியில்லாமல் எண்ணைய் தேய்த்துக் கொண்டிருந்தாள். தேய்த்து விடுவதை அன்பாக தான் செய்தாள் சிந்து. ஆனால் அவளுக்கு கடுப்பை வரவழைத்த விஷயம் ரெண்டு. 
ஒன்று அவள் தேய்க்கும் போது இப்படி தேய், அங்க தேய், அப்படி செய்யாத, என்று கமெண்ட் சொல்லிக் கொண்டிருந்தாள் தாயம்மா. மற்றொரு விஷயம் ஊரில் இருப்பவர்களையே எல்லாம் குறை சொல்லி பேசிக் கொண்டே இருந்தாள்.
இப்படி புறணி பேசுவது பிடிக்காத சிந்து வேறு வழியில்லாமல் அங்கே எரிச்சலில் அமர்ந்திருந்தாள். அதில் அவளை கோப படுத்திய இன்னொரு விஷயம் தாயம்மா, சிந்துவின் பெரியம்மா அமுதாவை குறை சொல்லியது.
“உங்க அம்மாவ பாத்தாக் கூட ஒண்ணும் தெரியலை தாயி, உங்க பெரியம்மாவ பாத்தா தான் ஒரு மாதிரி இருக்கு”, என்று தாயம்மா சொன்னதும் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் “எதுக்கு அத்தை?”, என்று கேட்டாள்.
“இல்லை, பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே அப்படி குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டாங்க. எதுவும் எங்களை குறை சொல்லுவாங்களா உன்கிட்ட?”
“குறை சொல்றதைப் பத்தி நீங்க பேசுறீங்களா?”, என்று மனதில் நினைத்துக் கொண்டு “மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்கணும்ல? அதானால தான் கேட்டாங்க. அவங்க கேக்காங்கன்னு தான் அம்மா அப்பா எதுவும் கேக்கல. அவங்க என்னை சொந்த பொண்ணா தான் பாத்துப்பாங்க”, என்று விட்டுக் கொடுக்காமல் பேசினாள் சிந்து. 
“இல்லை இல்லை சொன்னேன்”, என்று இழுத்து மற்றவரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள் தாயம்மா. எண்ணைய் தேய்த்து தலை பின்னி முடிப்பதற்குள் தாயம்மாவால் வெந்து நூடுல்ஸ் ஆகி விட்டாள் சிந்து. 
அதற்கு அடுத்த நாள் “எனக்கு எண்ணை தேய்ச்சு விடு சிந்து பேபி”, என்று சித்தார்த் சொன்னதும் அவன் மேல் உள்ள அன்பில் சந்தோஷமாக செய்தவள், அவனும் தாயம்மா போலவே “இப்படி செய், அப்படி செய்”, என்று சொல்ல “இனி கண்டிப்பா உங்களுக்கு தேய்ச்சு விட மாட்டேன். ஆளை விடுங்கப்பா”, என்று சொல்லி விட்டு எழுந்து விட்டாள். 
அடுத்த வாரத்தில் தாயம்மாவும் எண்ணை தேய்த்து விட சொல்ல எரிச்சலின் உச்சத்துக்கு சென்றவள் எண்ணையை அதிகமாக அப்பி வைத்து விட்டாள். 
அடுத்த நாள் அவள் துணி முழுக்க எண்ணை ஒட்டி இருந்தது. அதைப் பார்த்தே சிந்து புரிந்து கொண்டாள், “இனி கண்டிப்பா என்னை எண்ணை தேய்க்க சொல்ல மாட்டாங்க”, என்று. அது தான் நடந்தது. 
தாயம்மா அழுக்கு துணியை பாத்ரூமில் போட்டு விடுவாள் அதை சிந்து தான் துவைப்பாள். சுந்தரம் துணியை அவரே துவைத்தார். 
“நான் வேணா மாமா துணியையும் துவைக்கிறேன் அத்தை “, என்று சிந்து கேட்டதுக்கு “மாமாக்கு அவர் துணியை அவர் துவைச்சா தான் பிடிக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் “நல்லதா போச்சு”, என்று நினைத்துக் கொண்டாள் சிந்து. 
கல்யாணம் ஆகி ஐந்தாம் நாளில் இருந்தே தாயம்மா மற்றும் ஹாஷினி துணியை சிந்து தான் துவைப்பாள். சுந்தரமும் அவர் துணையை காய போட்டிருப்பார். மதியம் அனைத்தையும் எடுத்து விட்டு கீழே வருபவள் அவர்கள் துணியையும் மடித்து அவர்கள் அறையில் வைத்து விடுவாள்.
துணி துவைப்பதிலும் சிந்துவுக்கு எரிச்சலை கிளப்பினாள் தாயம்மா. தங்களின் அறையில் இருந்த பாத்ரூமில் குளிக்கும் சிந்து அங்கேயே துணிகளை துவைத்து விடுவாள்.
அப்போது தாயம்மா, “இந்த பாத்ரூம்ல எதுக்கு துணி துவைக்கிற? தண்ணி தெருவுல போகும். வெளிய உள்ள பாத்ரூம்ல துவை, தண்ணி பின்னாடி போயிரும். இல்லைன்னா பழைய வீட்ல போய் துவை”, என்றாள்.
அங்கே போவதற்கு பின்னாடி துவைப்பதே மேல் என்று எண்ணிய சிந்து சிறு எரிச்சலுடன் வெளியே உள்ள பாத்ரூமில் துவைத்தாள்.
“ரூம்குள்ள இருக்குற பாத்ரூம் நம்ம ரெண்டு பேர் தான் யூஸ் பண்ணுறோம். நீங்க கூட நைட் மட்டும் தான் யூஸ் பண்ணுறீங்க. ஆனா வெளிய உள்ளதுல எல்லாரும் யூஸ் பண்ணுறீங்க. அசிங்கமா கிடக்கு. அதுல போய் உங்க அம்மா துவைக்க சொல்றாங்க”, என்று சித்தார்த்திடம் சொன்னாள் சிந்து.
“உங்க அம்மான்னு சொல்லாத. அத்தைன்னு சொல்லு”
“இது இப்ப ரொம்ப முக்கியம்”, என்று எண்ணினாலும் “சரி, அத்தை சொல்றாங்க போதுமா?”, என்றாள்.

“உள்ள துவைச்சா தண்ணி ரோட்டுக்கு போகும்னு சொல்லிருப்பாங்க. பின்னாடியே துவை. நான் அங்க கல்லு போட சொல்றேன்”, என்று சொல்லி முடித்து விட்டான்.

Advertisement