Advertisement

அத்தியாயம் 7
இரு துருவமாய் இருந்தாலும்
நாம் இருவரையும்
ஒரே புள்ளியில்
இணைக்கிறது காதல்!!!
நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து விட்டாள் அவளின் அக்கா லட்சுமி. 
இங்கே சித்தார்த் வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.ஆறு மணிக்கு தாம்பூலம் மாற்றி நிச்சயம் செய்து அப்படியே மண்டபத்துக்கு பெண்ணை அழைத்து செல்வது என ஏற்பாடு. 
மூன்று மணிக்கு வந்து படுத்த சித்தார்த்தை ஐந்து மணிக்கு எழுப்பிய பிரேமா “பிள்ளைங்க தூங்குராங்க சித்தார்த். பாத்துக்கோ. கொஞ்ச நேரம் கழிச்சு அவங்களை எழுப்பி தயார் படுத்திரு. நீயும் கிளம்பி இரு. நாங்க சிந்துவை கூட்டிட்டு வந்து மண்டபத்துல விட்டுட்டு உன்னை கூப்பிட வரோம்”, என்று சொன்னாள்.
அனைவரும் வேனில் ஏறிக் கிளம்பியதும் மீண்டும் படுத்து விட்டான். அவன் கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சியது. 
அதே நேரம் அங்கே கிளம்பிக் கொண்டிருந்தாள் சிந்து. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் தாம்பூலம் மாற்றப் பட்டது. நிச்சய சேலையை மாற்றி வர சொன்னார்கள். வாடா மல்லிக் கலரில் இருந்த அந்த சேலை சிந்துவுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. சரி ஒரு மணி நேரம் தானே. அதன் பின்னர் தான் கல்யாண சேலை கட்டி விடுவார்களே என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள். 
பின் ராணி மற்றும் சுந்தரம் காலில் விழுந்து வணங்கினாள். 
சுந்தரம் விபூதி பூசி விட்டார். ராணி நெற்றியில் சிலுவை போட்டு விட்டாள்.
பின் பாண்டி மற்றும் அமுதாவின் காலில் விழுந்தார்கள். பின் அவளின் சொந்தங்கள் என்று அனைவர் காலிலும் விழுந்த பின்னர் அவள் தலையில் ஒரு பெட்டியை தூக்கி வைத்தார்கள். 
பின் சித்தார்த்தின் வீட்டினர் அவளை அழைத்து சென்றார்கள். சிந்து வீட்டில் இருந்து அவளுக்கு துணையாக அவளுடைய இரண்டு தோழிகளும் அக்கா லட்சுமியும் சென்றார்கள். காரில் ஏறுவதற்கு முன் அங்கிருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்று வணங்கினார்கள். பின் காரும் வேனும் மண்டபத்தை நோக்கி சென்றது.
அழகு நிலையப் பெண் வந்ததும் அவளுக்கு ஒப்பனை ஆரம்பித்தது. பிரேமாவும் அவள் கணவனும் மாபிள்ளையை அழைக்க சென்று விட்டார்கள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த மாரி சிந்துவிடம் தன்மையாகவே பேசினாள். இப்படி முகத்தில் புன்னகையோடும், அன்போடும் பேசும் மாரியக்காவை எதுக்கு மொத்த குடும்பமே தப்பாக பேசுகிறது என்று தான் சிந்துவுக்கு புரியவே இல்லை. 
சிந்துவுக்கு ஒப்பனை நடக்கும் போது அவள் அழகைப் பற்றி கமெண்ட் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தாயம்மா. 
“அன்னைக்கு இன்னும் கலரா இருந்த. இப்ப கொஞ்சம் கருத்துட்ட? முடியும் கழிஞ்சிருச்சோ?”, என்று தாயம்மா கேட்கும் போது “இந்த அத்தை கொஞ்சம் தள்ளிப் போனால் நல்லா இருக்கும். நொய் நொய்ன்னு பேசிட்டு இருக்காங்க”,என்று சிந்து எண்ணும் போது “எதுக்கு இந்த பொம்பளை இப்படி பேசிட்டு இருக்காங்க?:”, என்று சிந்துவின் காதில் கேட்டே விட்டாள் அந்த அழகு நிலைய பெண்.
“ஐயோ அக்கா, சும்மா இருங்க. அது என் மாமியார்”, என்றாள் சிந்து. அந்த பெண் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டாள்.
முகூர்த்த சேலை மாற்ற பட்டு அவள் போட்டிருந்த தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி லட்சுமியிடம் கொடுத்து விட்டு அழகு நிலைய பெண் கொண்டு வந்திருந்த நகைகளைப் போட்டாள். 
மொத்த அலங்காரமும் முடிந்த பிறகு தேவதையாகவே இருந்தாள் சிந்து. சித்தார்த்தும் மண்டபத்துக்கு வந்து விட்டான். அவன் சிந்து இருக்கும் அறைக்கு நேரே மேல மாடியில் கிளம்பிக் கொண்டிருந்தான். 
அவன் கிளம்பியதும் சிந்துவை போனில் அழைத்தான். அவள் போனை எடுத்ததும் “சாப்பிட்டியா மா?”, என்று கேட்டான்.
“இன்னும் இல்லை, நீங்க”
“இனி தான், முதல்ல சாப்பிடு. பக்கத்துல யார் கிட்டயாவது போனைக் கொடு. நான் உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்றேன். இன்னும் நேரம் இருக்கு”, என்றான்.
அவன் அக்கறையில் நெகிழ்ந்தவள் “அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் இருக்காங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
“என்ன சொல்றாரு என் கொழுந்தனாரு?”, என்று கேட்டாள் லட்சுமி.
“சாப்பிடலையான்னு கேட்டாங்கக்கா”, என்று சொல்லி சிரித்தாள் சிந்து.
“நானே நினைச்சேன் மறந்துட்டேன் பாரு. இரு உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னவள் இட்லி, பொங்கல், வடை என்று கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வந்து அவளுக்கு ஊட்ட தொடங்கினாள்.
அவள் சாப்பிடும் போதே உள்ளே வந்த ராணி தன்னுடைய ஒரே மகளின் அழகில் சந்தோஷ பட்டாள். பாதி சாப்பாடு உள்ளே போய்க் கொண்டிருக்கும் போது “பொண்ணை வர சொல்றாங்க”, என்று அழைத்ததும் சிந்து அனைவருடனும் கிளம்பி விட்டாள்.
மண்டபத்துக்கு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில் தான் திருமணம் என்பதால் அங்கே சென்றார்கள். இவள் போவதற்கு முன்பே சித்தார்த் அங்கே இருந்தான். 
பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்த அவனின் அழகில் மயங்கியவள் அவனைப் பார்த்து சிரித்தாள். அவனும் அதே நிலையில் தான் இருந்தான். 
மேக்கப் போட்டு அவள் முகத்தை கெடுத்து வைத்திருப்பார்களோ என்று பயந்திருந்தவன் தேவதை போல் இருந்தவளின் அழகில் சொக்கிப் போனான். 
அதன் பின் நேரம் மின்னல் வேகத்தில் சென்றது. சிந்து சித்தார்த் இருவரின் தாய்மாமாக்களை அழைத்த ஐயர் அவர்களின் கைகளில் மாலையை கொடுத்து இருவருக்கும் போட சொன்னார். பின் மந்திரங்களை உச்சரித்து தாலியை எடுத்து கொடுத்ததும் அவள் சங்கு கழுத்தில் கட்டினான் சித்தார்த். 
இருவருக்கும் எதையோ சாதித்தது போல நிம்மதியாக இருந்தது. 
பின் மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தான். தாலியை மறைத்து போட சொன்னாள் பிரேமா. பின் இருவரின் பெற்றவர்களை அழைத்தவர் மணமக்களின் கைகளை அவர்களுடைய பெற்றவர்களின் கைகளோடு வைத்து தாரைவார்த்து கொடுப்பது போல செய்தார். 
பின் மாலை மாற்றி மாற்றி இருவரும் போட்டார்கள். அவன் உயரத்துக்கு அவள் எட்டிப் போட வேண்டும் என்பதால் அவனை கண்களால் குனிய சொன்னாள். “இப்பவே பொண்டாட்டிக்கிட்ட தலை குனியாதே சித்தார்த்”, என்று கிண்டலாக சொன்னார் ஐயர்.
“என் பொண்டாட்டிக்கிட்ட நான் தோத்து போனாக் கூட சந்தோஷம் தான்”, என்று மனதில் எண்ணமிட்டவன் தலை குனிந்து அவள் போட்ட மாலையை ஏற்றுக் கொண்டான். 
அந்த ஐயரை சித்தார்த்துக்கு நன்கு தெரியும். அவனுக்கு திருமணம் நடக்க அந்த கோவிலில் செவ்வரளி மாலையை வாங்கிப் போட சொன்னவரும் அவர் தான். அதனால் அவர் கடைசி வரை கிண்டல் அடித்துக் கொண்டே இருந்தார். 
“பொண்ணோட தம்பியை வர சொல்லுங்க”, என்று ஐயர் சொன்னதும் வந்த அரவிந்த் சித்தார்த்தின் கையைப் பற்றிக் கொண்டான். 
சிந்துவின் புடவையும் சித்தார்த்தின் துண்டும் கட்ட பட்டது. இருவரையும் கோயிலைச் சுற்றி அழைத்து சென்றான் அரவிந்த். 
“பொண்ணோட அக்கா இல்லைன்னா தங்கச்சியை கூப்பிடுங்க”, என்று சொன்னதும் வந்த லட்சுமி கையில் தலையணை மற்றும் போர்வையைக் கொடுத்து தூக்கி கொள்ள சொன்னார். 
பின் ஒரு ஜமுக்காளம் விரித்து அதில் பெண் மாப்பிள்ளை அமர்ந்ததும் ஒவ்வொருவராக வந்து இருவருக்கும் விபூதியை பூசினார்கள். ராணி சிலுவை போட்டு விட்டார். 
அப்போது சித்தார்த்தின் தந்தை சுந்தரம் “பிள்ளையார் கோயில்ல யேசு வந்துட்டார்”, என்று நக்கலாக சொன்னார். அப்போது அனைவரும் சிரித்தார்கள். சிந்துவும் அதை பெரிதாக எண்ணவில்லை.
அதன் பின் பொண்ணையும் மாப்பிள்ளையையும் காரில் ஏற்றி சித்தார்த் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். 
காரில் ஏறி அமர்ந்ததும் யாருக்கும் தெரியாமல் அவள் கையைப் பற்றிக் கொண்டான் சித்தார்த். அந்த தொடுகையில் சிலிர்த்து போனவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள். வீடு வரும் வரை இருவரின் கையும் பின்னிப் பிணைந்தே இருந்தது. 
பிரேமா ஆரற்றி எடுக்க, வலது காலை எடுத்து வைத்து இருவரும் உள்ளே சென்றார்கள். இப்போது தான் முதல் முறை அந்த வீட்டுக்கு வருகிறாள் சிந்து. அதனால் சுற்றிக் கண்களை ஓட்டினாள்.
பின் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற வைத்தார்கள். இருவருக்கும் பாலும் பழமும் வழங்க பட்டது. 
சித்தார்த் உடை மாற்ற சென்று விட்டான். சிந்துவின் அண்ணி சௌமியாவும் வந்திருந்ததால் “பாத்ரூம் போகணும்னா போய்க்கோ சிந்து”, என்று சொன்னதும் உள்ளே சென்று வந்தவளின் சேலையை ஒழுங்காக எடுத்து விட்டாள் சௌமியா.
கோர்ட் சூட்டில் தயாராகி வந்தவனை இமைக்காமல் பார்த்தாள் சிந்து. சிந்துவுக்கு அதே சேலை தான் என்பதால் அங்கிருந்து உடனே மண்டபம் சென்றார்கள். 
பின் ரிசப்ஷன் மேடையில் எஸ். சித்தார்த் பி.ஈ வெட்ஸ் எஸ். சிந்து எம்.ஈ என்று போடப் பட்டு மேடை முழுவதும் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.
இருவரும் பொருத்தமான ஜோடியாக மேடையில் நிற்க ஒருவர் ஒருவராக வந்து மொய்க்கவரைக் கொடுத்தார்கள். அரவிந்த் வந்து அவனுக்கு செயினும் மோதிரமும் போட்டு விட்டான். பின் அவனின் மாமா அத்தை அனைவரும் மோதிரம் போட்டார்கள். பிரேமாவின் கணவன் ராஜா அவனுக்கு ஒரு செயினை போட்டு விட்டான்.
சிந்துவின் அத்தை மோதிரம் போட்டு விட்டாள். அவளுடைய தாய்மாமா மோதிரம் போட்டு விட்டார். 
வெகு நேரம் நின்றதால் சிந்து கால் வலியில் நிலை கொள்ளாமல் தவித்தாள். அதை விட அவளுக்கு மற்றொரு எரிச்சலை தந்த இன்னொரு விஷயம் சித்தார்த்தின் அண்ணன் மகள் ஹாஷினி.
போட்டோ எடுக்கும் போது தாலி கட்டியவுடனும் சரி, இப்போது மேடையில் இருக்கும் போதும் சரி சிந்துவை மறைத்த படியே தான் இருந்தாள்.
சிந்துவும் முதலில் ஒன்றுமே யோசிக்க வில்லை. சின்ன பிள்ளை என்று எண்ணி ஹாசினியின் கையை அவளும் பற்றிக் கொண்டாள். 
ஆனால் எல்லா போட்டோவிலும்  அப்படியே இருக்க மெதுவாக சித்தார்த் காதில் சொன்னாள்.
“பாப்பாவை அவங்க அம்மா அப்பா கிட்ட அனுப்புங்க. எல்லா போட்டோலயும் அவ என் முன்னாடி நிக்குறா. ஒரு நாள் எடுக்க கூடிய போட்டோ. ஆனா காலத்துக்கும் நாம பாக்கணும். நான் ஒண்ணுல கூட தனியா தெரியலை. என் இடுப்பு வரைக்கு அவளே மறைக்கிறா”, என்று சொல்லியும் விட்டாள்.
கேட்ட அவனோ “சின்ன பொண்ணு தான விடு”, என்று சொன்னானே தவிர அவளை ஒன்றுமே சொல்லவே இல்லை. 
சிறிது சிறிதாக அந்த எரிச்சல் அதிகரித்துக் கொண்டு தான் போனது. அந்த எரிச்சல் முகத்தில் தெரியாமல் காட்ட அவள்  பெரிதும் போராட வேண்டி இருந்தது. உறவினர்களுடன் எடுத்த எல்லா போட்டோவிலும் ஹாஷினி அவளை மறைத்த படி தான் நின்றாள். 
பின் பெண் மாபிள்ளையை மற்றும் வித விதமான கோணங்களில் போட்டோ எடுப்பவர் எடுக்கும் போது தான் ஹாஷினி அங்கிருந்து சென்றாள். 
மூன்று மணிக்கு மறுவீடு என்று அழைப்பு. ஆனால் மணமக்கள் சாப்பிட செல்லும் போதே மணி மூன்று. சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று பார்த்தால் மறுபடி சிந்துவின் குடும்பம் போட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள். 
மறுவீட்டுக்கு அவர்களை அழைத்து செல்ல அரவிந்த், லட்சுமி லட்சுமியின் கணவன் மோகன், பாண்டி, சிந்துவின் பெரியம்மா அவளுடைய தோழிகள் அனைவரும் இருந்தார்கள்.
ராணி வேறு போன் செய்து சீக்கிரம் வர சொல்ல மோகன் அவசரப் படுத்தினார்.

Advertisement