Advertisement

அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது. 
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம் “நீங்க பேசாட்டி இருக்கீங்க? எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. என்ன தான் செய்ய போறோமா?”, என்றாள் ராணி.
“மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்”, என்று வியாக்கியானம் பேசினார் சுந்தரம்.
சுந்தரத்தின் பொறுப்பற்ற செய்கையை நினைத்து கடுப்பாக வந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் நிம்மதியை இழந்தாள்
ராணி.
ராணியின் கஷ்டம் சிந்துவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அதை அவள் சித்தார்த்திடம் புலம்ப “என்கிட்ட பணம் இல்லை சிந்து. பிக்சட் டெப்பாசிட்ல தான் போட்டுருக்கேன். நம்ம வாழ்க்கைக்கு அது ஹெல்புல்லா இருக்கணும். நாளைக்கு நாம யார் கிட்டயும் போய் நிக்க கூடாதேன்னு தான் அதுல கை வைக்காம இருக்கேன். அதை எடுத்து தரவா? இல்லைன்னா எங்க அப்பா கிட்ட வேணும்னா நான் வாங்கி தரவா?”, என்று கேட்டான் சித்தார்த்.
“அது நம்ம பிள்ளைங்களுக்காகவே இருக்கட்டும். அப்புறம் உங்க வீட்ல பைசா வாங்கி உங்களுக்கே சீர் செய்யவா? அதெல்லாம் வேண்டாம்”, என்று அவனிடம் மறுத்தவள் “இன்னைக்கு கொடுத்துட்டு நாளைக்கு அசிங்க படுத்தினாலும் படுத்துவாங்க”, என்று எண்ணிக் கொண்டாள்.
அதை ராணியிடம் சொன்னதுக்கும் ராணியும் அதையே சொன்னாள். நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. சித்தார்த் தான் சில நேரம் புரியாத புதிராக இருந்தான்.
“எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு டி”, என்று அவன் சொன்னால் “கிளம்பி வீட்டுக்கு வாங்க”, என்பாள் சிந்து.
“வண்டி இல்லை டி. இன்னைக்கு எங்க அண்ணன் வண்டியை எடுத்துட்டு போய்ட்டான்”
“உங்க கிட்ட வண்டி இல்லையா?”
“இல்லை வாங்கணும். ஆனா பைசா இல்லை. எங்க மாமியார் கிட்ட சொல்லு. வாங்கி தருவாங்க”, என்று அவன் நக்கலாக சொன்னானா? உண்மையாக சொன்னானா என்று புரியாமல் இருந்த சிந்து அதை ராணியிடம் பேச்சு வாக்கில் சொன்ன போது “இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கிக் கொடுப்போமா சிந்து?”, என்று கேட்டு அன்பான அன்னை என்று உணர்த்தினாள் ராணி.
அதன் படி இன்ஸ்டால்மெண்டில் வாங்குவது என்று முடிவானது. அதற்கு சித்தார்த்தை அழைத்ததும் வந்தவன் அவனுக்கு பிடித்த வண்டியை புக் செய்தான். பின்னர் “கொஞ்ச நாள் கட்ட சொல்லு சிந்து. அப்புறம் நம்மலே கட்டிரலாம்”, என்றான்.
மற்றொரு நாள் “மாப்பிள்ளைக்கு உங்க வீட்ல இருந்து என்ன போடுவீங்க?”, என்று கேட்டான்.
“இருக்குற நிலைல இது வேறா?”, என்று எண்ணினாலும் அதை அவள் பெரியதாக எடுக்க வில்லை. ஆனால் அதையே இரண்டு, மூன்று முறை கேட்கும் போது “உங்களுக்கு என்ன போடணும்?”, என்று கேட்டாள்.
“ஏய், நான் சும்மா தான் கேக்குறேன்”, என்று சொன்னதும் அவளும் சமாதானம் ஆகி விட்டாள்.
ஆனால் சிந்துவிடம் பேசிய தாயம்மாவோ “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தங்கம். சித்தார்த்துக்கு ஒரு மூணு பவுன் உங்களால போட முடியுமா? சபைல போட்டா நல்லா இருக்கும்னு தோணுது”, என்று கேட்டாள்.
மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “சரி அத்தை, அம்மா கிட்ட
சொல்றேன்”, என்றாள்.
ஆனால் அடுத்த ஐந்து நிமிசத்தில் போன் செய்த சித்தார்த்தோ “எங்க அம்மா என்ன சொன்னாங்க?”, என்று கேட்டு குடைந்தான்.
“ஒண்ணும் சொல்லலையே? சும்மா தான் பேசினோம்”, என்றாள் சிந்து.  
“பொய் சொல்லாத, சொல்லு சிந்து”
“அப்ப நான் சொல்றது பொய்ன்னு உங்களுக்கு தெரியும் அப்படி தானே? நீங்களே உங்க அம்மாவை விட்டு நகை போடுங்கன்னு பேச வச்சிட்டு இப்ப தெரியாத மாதிரி நடிக்கிறீங்க?”, என்று எரிந்து விழுந்தாள் சிந்து.
“நான் அப்படி சொல்லலையே”
“நீங்க துருவி துருவி எங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு கேக்கும் போதே தெரியுது. எங்க அம்மா செயின் போடுறேன்னு சொல்லிட்டாங்க”, என்று பேச்சை முடித்து விட்டாள்.
ஆனால் சித்தார்த் அப்போது பேச்சை விட்டாலும் அடுத்து வந்த நாட்களில் “எத்தனை பவுன்ல செயின், மூணு பவுனா? அப்படினா ரெண்டு பவுன்ல செயினும் ஒரு பவுன்ல மோதிரமும் போட சொல்லேன். சபைல வெயிட்டா இருக்கும்ல?”, என்றான்.
அதை எரிச்சலோடு ராணியிடம் சொல்லிய போது “விடு சிந்து, உனக்கு இத்தனை பவுன் போடுங்கன்னு அவங்க வீட்ல சொல்லலைல? அப்புறம் என்ன? அவங்களுக்கு போடுறது உனக்கு செய்றது மாதிரி தான?”, என்றாள் ராணி.
“பணத்துக்கு என்ன மா செய்ய?”
“பாப்போம், கடவுள் இருக்கார்”
அதே போல் கடவுள் இருக்க தான் செய்தார். அரவிந்த் அவனுடைய கம்பேனியில் ஒன்றரை லட்சத்துக்கு லோனை போட்டு  பணத்தைக் கொடுத்தான். அவன் ஏற்கனவே லோன் கட்டிய போது ஒரு லட்சம் வாங்கி இருந்ததால் இப்போது அவனுக்கு அவ்வளவு தான் கிடைத்தது. மேலும் ஐம்பதாயிரத்தை கடனாக வாங்கிக் கொடுத்தான்.
அவனுடைய வேலைக்கு அவன் இவ்வளவு செய்ததே பெரிய விஷயமாக பட்டது. அந்த பணம் கிடைத்ததும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள் ராணி. 
அது போக ராணியின் அத்தை மகள் கவுரி “ராணி, நான் எங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு லட்சம் வாங்கி தாரேன். கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்துல கொடுக்க முடியுமா?”, என்று கேட்டாள்.
சந்தோஸ்சமாக சரி என்று சொன்னாள் ராணி. ராணியின் தங்கையும் கடனாக ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தாள். இந்த பணத்தில் சித்தார்த்துக்கு நகையும் சிந்துவுக்கு நான்கு பவுனில் ஒரு ஆரமும் எடுத்தாள். அடகு வைத்த ஒரு நெக்லசையும் திருப்பினாள். 
சிந்துவின் தாய் மாமா தனம் ஒரு லட்சம் கொடுக்க மறுவீட்டு செலவுக்கும் சீர் வரிசை சாமான்கள் வாங்குவதற்க்கும் பணம் இருந்தது. 
அமுதா கட்டில், பீரோ வாங்க முப்பதாயிரம் கொடுத்தாள். பணப் பிரச்சனை அனைத்தும் முடிந்தது. 
“சிந்து, அவங்க வீட்ல சோஃபா இல்லை. உனக்கு பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஷோபா இது மூனுல எது வேணும்?”, என்று கேட்டாள் ராணி.
சிந்து அதை சித்தார்த்திடம் கேட்ட போது “வீட்ல பிரிட்ஜ் இருக்கு சிந்து. நாம தனியா போனா தான வேற வாங்கணும். இப்ப தேவை இல்லை. வாஷிங் மிசினா சோஃபாவானு நீ முடிவு பண்ணிக்கோ”, என்றான்.
“வாஷிங் மிஷின்ல துவைச்சா அழுக்கே போகாது மா. சோஃபாவே வாங்கிரலாம்”, என்று சொன்னாள் சிந்து. 
அதன் பின் ஒவ்வொரு வேலையாக நடந்தது. சிந்து சித்தார்த் இடையே காதல் பயங்கரமாக பல பட்டாலும் சித்தார்த் வீட்டில் உள்ளவர்களை நினைத்து அடிக்கடி சோர்ந்து போனாள் சிந்து.
மாரியைப் பற்றி அனைவரும் குறை சொல்லிக் கொண்டே தான் இருந்தார்கள். அவர்கள் சொல்ல சொல்ல மாரியைப் பற்றி குழப்பம் வந்தாலும் “நாளைக்கு நம்மளையும் இப்படி தான் சொல்லுவாங்களோ? கொஞ்சம் கவனமா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டாள்.
இதில் தாயம்மா வேறு, “மேக்கப் பண்ணுறதுக்கு அம்மாவையே ஆள் பாக்க சொல்லு. நான் பணம் கொடுத்துறேன்”, என்று சொல்ல ராணியே அதற்கும் ஆளைப் பிடித்தாள்.
அந்த பணத்தை அவர்கள் கடைசி வரை கொடுக்க மாட்டார்கள் என்று அப்போது தெரியாது. அவர்கள் கொடுப்பார்கள் என்று ராணியும் எதிர் பார்க்க வில்லை. தன்னுடைய மகளுக்கு என்று சந்தோஸமாகவே செய்தாள்.
இடைப்பட்ட நாட்களில் பல முறை சிந்துவை சித்தார்த் பார்க்க வந்து விட்டான். அவனுக்கு அவளைப் பார்க்க பல காரணங்கள் இருந்தது. 
செயின் மோதிரம் ஆர்டர் கொடுக்க, பத்திரிக்கை பெயர் வாங்க, அதன் புரூப் காட்ட, பத்திரிக்கை அடித்ததைக் கொடுக்க, அவனுடைய நகைகள் வாங்க, வண்டி புக் செய்ய, அதை டெலிவரி வாங்க என அனைத்துக்கும் அவனே வந்தான்.
அவனைப் பார்த்ததும் அவளுடைய கோப தாபங்கள் அனைத்தும் வடிந்து விடும். அவன் நெஞ்சில் முகம் புதைத்திருக்கும் தருணங்கள் அவள் மனதில் நீங்க இடம் பிடித்தது.
பட்டு சேலை, தாலி எப்போது எடுக்க என்று பேச்சு எழுந்தது. கல்யாணத்துக்கு ஆறு நாட்கள் இருக்கும் போது போகலாம் என்று இரு வீட்டினரும் முடிவு செய்தார்கள். அன்று தான் பிரேமாவும் குடும்பத்தோடு சென்னையில் இருந்து சித்தார்த் வீட்டுக்கு வருகிறாள்;. அதனால் அன்றே போகலாம் என்று முடிவு செய்தார்கள். 
அந்த பேச்சு வரும் போதே தாயம்மா சிந்துவிடம் “நீயும் வா தங்கம், உனக்கு பிடிச்சதை எடுக்கலாம்ல?”, என்றாள்.
போக ஆசை இருந்தாலும் உடனே சரி சொல்லக் கூடாது என்று எண்ணி “நீங்களே எடுங்க அத்தை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை”, என்று பேச்சுக்காக சொன்னாள் சிந்து.
“நீ எப்படி நல்ல பிள்ளையா இருக்க? ஆனா மாரி சீலை எடுக்கவும் வந்தா. தாலி எடுக்கவும் வந்தா. முன்னாடி காலத்துல எல்லாம் பொண்ணு இப்படியா போய்கிட்டு இருந்தாங்க”, என்று தாயம்மா சொன்னதும் “நல்லதா  போச்சு. நான் வரலைன்னு சொன்னேன். இல்லைனா என்னையும் இப்படி தான திட்டுவாங்க”, என்று எண்ணிக் கொண்டாள் சிந்து.
சிந்துவை அழைத்த பிரேமாவும் அன்னையை ஒட்டியே பேசவும் சேலை எடுக்க போக வேண்டும் என்ற ஆசையை மனதில் இருந்து அளித்தாள் சிந்து. 
சிந்துவின் பெரியம்மா, அண்ணி அனைவரும் “நீ இல்லாம எப்படி, கிளம்பு”, என்று திட்ட “நீங்களே எடுங்க”, என்று எவ்வளவோ சமாளித்துப் பார்த்தாள். 
அவர்கள் கண்டிப்பாக அவளை வர சொல்லவே “நான் வரது அவங்களுக்கு விருப்பம் இல்லை பெரியம்மா. மாரியக்கா போனதுக்கே ஒரு மாதிரி பேசுறாங்க”, என்று உண்மையை சொன்னாள். 
சித்தார்த்துக்கோ கல்யாணத்துக்கு முந்தைய வாரம் ஓய்வு இல்லாமல் இருந்தான். கல்யாண பத்திரிக்கை முதல் சந்தைக்கு காய்கறி, மசால் சாமான், சமையலுக்கு ஆள் என்று அனைத்துக்கும் அவனே அலைந்தான். அவனுடைய தந்தை செய்தார் தான். ஆனால் இவனுக்கு அதிக வேலைகள் குமிந்தது.
அவனுடைய அண்ணன் அதிக வேலை செய்ய வில்லை. அதை எண்ணி அவனுக்கு வருத்தம் அதிகமாக இருந்தது. “அவன் கல்யாணத்துக்கு நான் எப்படி இழுத்து போட்டு வேலை செஞ்சேன் தெரியுமா சிந்து? ஆனா என் கல்யாணத்துக்கு செய்ய ஆள் இல்லை. எல்லாத்துக்கும் நானே அலையுறேன். உன்னை ரொம்ப தேடுது டி. சீக்கிரம் என்கிட்ட வந்துரு டி செல்லம்”, என்று அவன் சொல்லும் போது உருகிப் போவாள். 
சேலை எடுக்க அனைவரும் சென்றார்கள் சிந்துவை தவிர. மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள வில்லை. 
முதலில் தாலிக்கு மற்றும் தாலி செயினுக்கு ஆர்டர் செய்தார்கள். பின் உடை எடுக்க சென்றார்கள். 
அங்கே தாயம்மா, மாரி, பிரேமா, மூவருக்கும் ஐயாயிரம் ரூபாயில் சேலையும் சிந்துவுக்கு ஐயாயிரத்துக்கு நிச்சய சேலையும் மற்றும் ஏழாயிரம் ரூபாயில் முகூர்த்த சேலையையும் எடுத்தார்கள். 
சிந்துவின் அண்ணி சௌமியா முகூர்த்த சேலையை போட்டோ எடுத்து அனுப்பியதும் சிந்து “நல்லா இருக்கு”, என்றாள். 
சித்தார்த் ஒரு மணி நேரம் சென்று அவனுக்கு தேவையான உடையை எடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்த ராணியோ சிந்துவிடம் “உன் அண்ணன் அண்ணிக்கு ஒரு சேலை ரொம்ப பிடிச்சது. உன் அண்ணன் எவ்வளவோ சொன்னான். ஆனா உன் மாமியாரும் நாத்தனாவும் அது பன்னிரெண்டாயிரம்னு சொல்லி எடுக்கலை. எனக்கும் கஷ்டமா போச்சு. முகூர்த்த சேலை கலராவது நல்லா இருக்கு. ஆனா நிச்சய பட்டு கேவலமா இருக்கு. நான் அந்த இடத்துல என்ன சொல்ல முடியும் சிந்து?”, என்று சொன்னதும் வருத்தமாக உணர்ந்தாள் சிந்து.
கல்யாண சேலை ஒரு நாள் கட்டப் போறது தான். ஆனால் கடைசி வரை போட்டோ இருக்குமே. அப்படி இருக்கும் போது அந்த சேலை இன்னும் கிராண்டாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மனது எண்ண மிட்டது. சித்தார்த் வீட்டில் இருப்பவர்கள் கஞ்சமா? இல்லை என் விஷயத்தில் இப்படி கஞ்சமா நடந்து கொள்கிறார்களா என்று கேள்விக்குறி பிறந்தது.
மனது கேட்காமல் “எங்க அண்ணன் வேற சேலை
எடுக்க சொன்னாங்களாம். உங்க வீட்ல விலை அதிகம்னு எடுக்கலையாம்”, என்று சித்தார்த்திடம் சொன்னாள் சிந்து.
“விடு மா, அன்னைக்கு ஒரு நாள் கட்டுறதுக்கு தான? அப்புறம் அதுல நம்ம ரெண்டு பெரோட பெயர் எழுதி இருக்கு”, என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான்.
“அப்புறம் இன்னொரு விஷயம் சிந்து, உனக்கு தாலி செயின் ஏழு பவுன்ல செய்ய கொடுத்துருக்காங்க?”
“எதுக்கு ஏழு பவுன், ஒரு மூணு பவுன்ல போதாதா?”, என்று அவனிடம் கேட்டாள் சிந்து.
“எங்க அம்மா, எங்க அக்கா பதினொரு பவுன்ல போட்டுருக்காங்க. உனக்கும் அப்படி செய்யணும்னு நினைச்சேன். ஆனா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை. மாரிக்கு ஏழு பவுன்ல போட்டாங்க. அதே மாதிரி உனக்கும் எடுக்காங்க”
ஆனால் சிந்து தாயம்மாவிடம் பேசும் போது “எதுக்கு அத்தனை பவுன் அத்தை? மூணு பவுன் போதுமே”, என்று சொன்னாள். 
“அவளுக்கு செஞ்ச மாதிரி தான் உனக்கும் செய்யனும் தங்கம். அவ வேற முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கா?”
“எதுக்கு அத்தை?”
“மாமா, மாரிக்கு செஞ்ச மாதிரி தான் அவளுக்கும் செய்யனும்? இவளுக்கு செஞ்சிட்டு அவளுக்கு குறைய செய்ய முடியுமானு பேசுனாரு. அதுக்கு என்ன நினைச்சாளோ சமையல் செய்யாம படுத்துகிட்டா. இன்னைக்கு மீன் வாங்கி உன் மச்சான் வச்சான். நான் நீ சமச்சிருவியான்னு கேட்டா பதில் கூட பேசலை. நீ செஞ்சா செய் செய்யலைன்னா கிடன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”
தாயம்மா சொன்னதும் “நான் அவங்க வீட்டுக்கு வந்ததும் மாரியக்காவோட முக்கியத்துவம் குறைஞ்சிரும்னு யோசிச்சிருப்பங்களோ? ஆனால் பெரியவங்க கேட்டா பதில் சொல்லலாமே”, என்று எண்ணினாள்.
அடுத்த மூன்று நாட்களில் செய்ய கொடுத்த மாங்கல்யத்தை வாங்க சென்றார்கள். தாலி வாங்கும் முந்தைய நாள் இரவு “அப்பா கிட்ட கொஞ்சம் பணம் குறையுது போல? அவரோட ரிட்டயர்மெண்ட் பணம் இன்னும் வரலை. எங்க அண்ணன் நிறைய வச்சிருக்கான். அவன் கிட்ட கேட்டுருப்பார் போல? அவன் பதிலே சொல்லலையாம்”, என்றான் சித்தார்த்.
“எதுக்கு அவங்க கிட்ட கேக்கணும்? எனக்கு போட வேண்டிய செயினை மூணு பவுனா குறைச்சிருக்க வேண்டியது தான?”
“சே, அது போட்டா தான் கழுத்து நிரஞ்சி இருக்கும்”
“எனக்கு கழுத்து நிரஞ்சு இருக்கணும்னு எல்லாம் ஆசை இல்லை. தாலி செயின் போடணும்னு மட்டும் தான் ஆசை”
“வேற என்ன ஆசை எல்லாம் இருக்கு செல்லம்?”
“வேறயா? அது நிறைய இருக்கே?”
என்னன்னு சொல்லு மா”
“நெத்தில குங்குமம் வச்சிக்கணும். கழுத்துல தாலி செயின் போடணும், காலுல மெட்டி போட்டுக்கணும். இதெல்லாம் நான் பார்த்து கல்யாணத்துக்காக ஏங்கிய விஷயங்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்கும். எத்தனை பேர் எப்ப கல்யாணம் கல்யாணம்னு கேட்டு சாகடிச்சிருக்காங்க தெரியுமா? அண்ணி, தாலி செயின் போட மாட்டாங்களாமே”
“ஆமா, உன்கிட்ட சொன்னாளா?”
“ஆமா. அஞ்சு மணிக்கு வாக்கிங் போறாங்கல்லா? பயமா இருக்காதானு கேட்டேன். நான் நகை ரொம்ப போட மாட்டேன். ஒரு மூணு பவுன் செயின்ல தான் தாலி போட்டுருக்கேன்னு சொன்னாங்க”
“ஆமா அவ பங்க்ஸன்னா தான் போடுவா. எங்க அம்மாவும் அப்படி தான். எங்க அம்மா ரெண்டு தாலி செயின் வச்சிருக்காங்க. சின்னது தினமும் போடுவாங்க. பெருசு பங்சனுக்கு போடுவாங்க. மாரியும் எங்கயாவது போகணும்னா தான் போடுவா”
“ஆனா என்னால எல்லாம் அவங்கள மாதிரி இருக்க முடியாதுப்பா. என் கழுத்துல எப்பவும் இருக்கணும்”
“ஹ்ம்ம சரி”, என்று அவன் சொன்னதும் அவர்களுக்குள் பேச்சு வேறு பக்கம் சென்றது. 
அவள் அப்போது அறிய வில்லை. அந்த தாலி செயினால் தான் அவள் மனதில் பெரிய விரிசல் வரும் என்று. 
கல்யாண நாளும் நெருங்கியது. புது வண்டியை டெலிவரி எடுத்து சிந்து வீட்டில் விட்டு விட்டான்.  
அடுத்த நாள் கல்யாணம் என்னும் நிலையில் சிந்து வீட்டை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். வாசலில் சாமியானாப் பந்தல் போடப் பட்டது. 
ராணியும் அமுதாவும் சிந்துவுக்கு தேவையான பொருள்கள், சீர் வரிசை பாத்திரங்கள் எடுக்க அலைந்து கொண்டிருந்தார்கள். சுந்தரம் மறுவீட்டுக்கு சாப்பாடு செய்பவர்களை காண அலைந்து கொண்டிருந்தார். 
அரவிந்த் சித்தார்த்துடன் சென்று பேனர் அடிக்கும் வேலையில் இருந்தான். சிந்து வீட்டை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். மதியம் சிந்துவின் பெரியம்மா விஜயா கேரளாவில் இருந்து வந்தாள். அதன் பின்னர் மாலையில் சிந்துவின் தாய்மாமா குடும்பம் வந்து விட்டது. 
இரவு வரை ஆள் ஆளுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. இரவு பத்து மணிக்கு சிந்துவின் அத்தை அவளுக்கு மருதாணி போட்டு விட்டாள். பதினொரு மணிக்கு அவள் படுக்கும் போது சித்தார்த் அவளை அழைத்தான். 
புன்னகையுடன் “என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டாள் சிந்து.
“சந்தைல காய்கறி வாங்கிட்டு இருக்கேன் சிந்து. நீ என்ன செய்ற?”
அவன் குரலில் சோர்வை உணர்ந்தவள் “நான் படுத்துட்டேன், இப்ப சந்தைல இருந்தா எப்ப வீட்டுக்கு போய் எப்ப தூங்குவீங்க?”, என்று அக்கறையாக கேட்டாள். 
“என்ன செய்ய? நான் தான் அலையனும். எங்க அண்ணனை போக சொன்னதுக்கு எனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டான். எங்க அப்பாவும் நானும் வந்தோம். இப்ப காய் எல்லாம் வாங்கி மண்டபத்துல போட்டுட்டு வீட்டுக்கு போக மூணு மணியாவது ஆகும்”
“சாப்ட்டீங்களா?”
“இனி தான், இங்க இருக்குற கடைல சாப்பிட தான் போயிட்டு இருக்கேன். அதான் போன் பண்ணுனேன். நீ நல்லா தூங்கு செல்லம்”
“சரி சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க”
“சரி மா, காலைல பேச முடியாது. நாலு மணிக்கு எங்க வீட்ல இருந்து எல்லாரும் கிளம்பிருவாங்க”
“ஹ்ம்ம சரி”, என்று சொல்லி வைத்து விட்டு படுத்து விட்டாள். 
இருவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் அழகாக விடிந்தது அந்த விடியல். 
காதல் தொடரும்….

Advertisement