Advertisement

அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள். 
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான். 
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா பெரியப்பா, சித்தி எல்லாரும் இருக்கோம்”,. என்றாள் சிந்து.
“என் மாப்பிள்ளை எப்ப கிளம்புறான்?”
“தம்பி நைட் கிளம்புறான்”
“ஒரு வழியா ரெண்டு பேரும் இன்னைக்கு தான் மீட் பண்ணிருக்கோம். நான் உன்னைப் பாத்தேன். இன்னைக்காவது நீ என்னை பாத்தியா இல்லையா?”
“பாத்தேன்”
“எதுக்கு ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசலை? போன்ல பேசுற தான?”
“சுத்தி எல்லாரும் இருக்கும் போது எப்படி பேச? நீங்க எதுக்கு பேசல?”
“எனக்கும் அதே காரணம் தான். ஆனா நான் பேசலாம்னு வந்தேன். அத்தை கிளம்ப சொல்லிட்டாங்க”
“அது நீங்க சீக்கிரம் போகணும்னு சொல்லிருந்தீங்கல்ல? அதான்”
“சரி சரி, உனக்கு யார் மேக்கப் போட்டு விட்டா. வெறும் பவுடர் மட்டும் போட்டாலே நீ அழகா இருக்க? ஆனா இன்னைக்கு நல்லாவே இல்லை. தலை ஒரு மாதிரி சீவி, முகத்துக்கு ஏதேதோ போட்டு அசிங்கமா இருந்தது”
“உங்க அக்கா தான் அப்படி பண்ணாங்க”
“கல்யாணத்துக்கு எல்லாம் இப்படி போடாத”
“ஹ்ம் சரி, அப்புறம் ஒரு விஷயம். அடுத்த வாரம் சென்னை போறேன். ஒரு எக்ஸாம்க்கு ஃபிசிகல் டெஸ்ட் இருக்கு. இப்ப தான் மெயில் பாத்தேன்”
“ஓ, அப்படியா சூப்பர். ரிட்டர்ன் எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டியா?”
“ஆமா”
“என்னைக்கு போகணும்?”
“சாட்டர்டே கிளம்பனும். மண்டே எக்ஸாம்”
“எங்க அக்கா வீட்டுக்கு போறியா?”
“இல்லை எங்க அக்கா வீடு அங்க தான் இருக்கு.  அங்க போய்க்கிறேன்”
“அமுதா அத்தையோட மகளா?”
“ஆமா”
“அத்தை கூட வராங்களா?”
“ஆமா, நானும் அம்மாவும் தான்”
“எங்க அக்கா வீட்டுக்கு நீ போ. நான் அவ கிட்ட சொல்றேன்”
“நீங்க பேசுறது உங்களுக்கே நியாயமா இருக்கா? கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உங்க அக்கா வீட்டுக்கு போக முடியும்? அது மட்டும் இல்லாம அவங்களை நான் நேர்ல கூட பாக்கல. நீங்களா கூட்டிட்டு போகாம நான் எப்படி போக முடியும்?”
“அதெல்லாம் போகலாமே, நான் ஸ்டேஷன் வந்து கூட்டிட்டு போக சொல்றேன். சரி அப்புறம் கூப்பிடுறேன். கொஞ்சம் வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
“இன்னைக்காவது மாப்பிள்ளையை பாத்தியா சிந்து?”, என்று கேட்டாள் ராணி.
“பாத்தேன் மா”
“ஏதாவது பேசுனியா?”
“அவங்க பேச வந்தாங்களாம். அப்ப தான் நீங்க கிளம்ப சொல்லிட்டீங்க?”
“ஐயையோ, நான் தான் கரடியா? நான் அவங்க பெர்மிசன்ல வந்துருக்காங்களேன்னு தான் சொன்னேன். சாரி சொன்னேன்னு சொல்லிரு”, என்று ராணி சொன்னதும் சிரித்தாள். 
அதை அவனிடம் சொன்னதற்கு அவனும் சிரித்தான். அதன் பின் சென்னைப் போவது பற்றிய பேச்சு ஆரம்பித்தது. அதற்கு பின்னர் போன் பேசும் போதெல்லாம் பிரேமா வீட்டுக்கு போக சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தான் சித்தார்த். 
சில சமயம் சிந்துவுக்கு எரிச்சல் வந்தது நிஜம். “இவன் சொல்றது தான் நடக்கணுமா? என்னோட நிலைமை எல்லாம் யோசிக்க மாட்டானா?”, என்று கடுப்பாக இருந்தது.
சிந்து சென்னைக்கு போவதற்கு முந்தின நாள் தான் சித்தார்த் பால் குடம் எடுக்கும் நாள். எல்லா பூஜையையும் முடித்து விட்டு முகத்தில் இருந்த தாடி மீசை எல்லாம் எடுத்தான் சித்தார்த்.
ஒரு மாதம் கழித்து அவன் முகத்தை அவனே புதிதாக பார்ப்பது போல பார்த்தான். “இப்ப சிந்து பாத்தா என்ன சொல்லுவா?”, என்று நினைத்து சிரித்தான்.
அன்று இரவு சிந்துவை அழைத்தவன் “நாளைக்கு காலைலே உன்னை பாக்க வரேன்”, என்று சொன்னான்.
“இங்கயா? ஏன்?”
“எக்ஸாம்கு விஷ் பண்ண, போன் கொடுக்க?”
“சரி வாங்க”
“நான் வந்தா அத்தை மாமா ஏதாவது சொல்லுவாங்களா?”, என்று கேட்டான் சித்தார்த்.,
“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீங்க வாங்க. எனக்கும் உங்களை பாக்கணும் போல இருக்கு”
“சரி, வந்தா என்ன கிடைக்கும்?”
அவன் கேட்பது புரிந்தாலும் புரியாதது போல “என்ன வேணும்?”, என்று கேட்டாள் சிந்து. 
“ஒண்ணும் இல்லை”,என்று சொல்லி முடித்து விட்டான் சித்தார்த். 
அவன் வருவதை ராணியிடம் சொன்ன போது “இன்னைக்கு எதுக்கு சிந்து வாராங்க?”, என்று கேட்டாள்.
“எக்ஸாம் நல்லா பண்ணுன்னு சொல்றதுக்கு வாராங்களாம் மா. அப்புறம், புது போன் அவங்க அத்தை கொண்டு வந்துட்டாங்களாம். அதை கொடுக்க வாராங்க”
அடுத்த நாள் காலை, சென்னைக்கு போக ராணியும் சிந்துவும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். 
அவன் வருவேன் என்று சொன்ன நேரம் வந்ததும் பப்பியை சங்கிலி போட்டுக் கட்டி வைத்தாள்.
சொன்னது போல் வந்தவனும் கையில் புது போனைக் கொடுத்தான். அதை வாங்க முடியாத படி அதிர்ச்சியில் இருந்தாள் சிந்து. அந்த அதிர்ச்சி அவன் முகத்தைக் கண்டு.
அவளுக்கு கொடுத்த போட்டோவில் எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான். தாடி தான் இவன் அழகைக் கெடுத்ததா? முகத்தில் மீசை தாடி இல்லாமல் சின்ன பையன் போல தோற்றத்தில் இருந்தவனை ரசித்துப் பார்த்தாள். 
அவள் அதிர்ச்சியை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தான். பப்பி குலைத்ததும் தான் கனவில் இருந்து வெளியே வந்தாள். பின் வெளி வராண்டாவில் ஒரு சேரைப் போட்டு அமர வைத்த சிந்து ராணியை அழைக்க சென்றாள். 
ராணியும் சுந்தரமும் அவனை வரவேற்று “உள்ள உக்காருங்க”, என்று சொல்லி அமர வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றதும் அவளை காதலாக பார்த்தான். சிந்து போனை ஆசையாக பிரித்து பார்த்தாள். 
“ரொம்ப அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு”, என்று சிந்து சொன்னதும் அவளைப் பார்த்து சிரித்தவன் “கிட்ட வாயேன்”, என்றான்.
“என்ன?”,என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றவளின் கையைப் பற்றி இழுத்தவன் தன்னுடைய மடியில் அமர வைத்து விட்டான்.
கை பற்றியதுக்கே விதிர்த்து போனவள் அவன் மடியில் அமர்ந்ததை நம்ப மாட்டாமல் இருந்தாள்.
அவள் அடி வயிற்றில் ஒரு இனிய கதகதப்பு உருவானது. ராணி எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என்று மூளை அறிவுறுத்தியதால் அவன் மடியில் இருந்து எழப் பார்த்தாள்.
அவனோ அவள் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டு இறுக்கி பிடித்திருந்தான்.
“பிளீஸ் விடுங்க, அம்மா வந்தா அவ்வளவு தான்”, என்று கெஞ்சினாள் சிந்து.
“அதெல்லாம் வர மாட்டாங்க மேடம். ஏதாவது கொடு. விடுறேன்”
இத்தனை நாள் பேசியதில் அவன் பிடிவாததம் புரிந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட சென்றாள். அது புரிந்தவனோ சரியாக தலையை திருப்பி விட்டான். அவள் கொடுத்த முதல் முத்தம் விழுந்ததோ அவன் உதட்டில்.
அதிர்ந்து அவன் மடியில் இருந்து துள்ளி எழுந்தவள் “ஐயோ சத்தியமா நான் கன்னத்தில் தான் கொடுக்க வந்தேன்”, என்றாள்.
அவளைப் பார்த்து அவன் சிரித்ததிலே புரிந்தது அவன் தான் இதற்கு காரணம் என்று. “சரியான கள்ளன்”, என்று மனதில் கொஞ்சி கொண்டவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அடுத்து இருந்த கால் மணி நேரமும் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். “பால் குடம் எடுக்குறது எல்லாம் எப்படி போச்சு? கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சா?”, என்று கேட்டாள் சிந்து.
“நல்லா போச்சு சிந்து. லைட்டா சாமி வந்துச்சு”
“நீங்க சாமி ஆடுவீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் சிந்து.
“அப்படி யெல்லாம் இல்லை லைட்டா குழுக்கும் அவ்வளவு தான்”
“பெருசா ஒண்ணும் இல்லையே. சரி கோயில் எங்க இருக்கு? என்ன சாமி?”
“கோயில் எங்க ஊர்ல தான் இருக்கு. பழனி முருகன்”
“உங்க ஊர்ல தான் கோயிலா?”
“ஆமா எங்க ஊர்ல தான்.எங்க கோயில்”
“உங்க கோயில்னா?”
“எங்க கோயில்னா நாங்க தான் கட்டினது. எங்க அப்பா தான் பூசாரி”
“உங்க குடும்பம் மட்டும் தான் கூம்புடுவீங்களா?”
“எங்க சொக்காரங்க மட்டும் வருவாங்க. பதினாலு வரி, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பதினஞ்சு வரி”
“எனக்கு ஒண்ணுமே புரியலை.நான் கோயிலுக்கு ரொம்ப போக மாட்டேன். அம்மா சாமி கும்பிட்டு வெறுத்து போய் சர்ச்க்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாக்கும் தம்பிக்கும் கடவுள் இருக்காருன்னு மட்டும் நம்புவாங்க. விழுந்து விழுந்து கூம்புடுவாங்க”
“எங்க வீட்ல பயங்கரமா கும்பிடுவோம்”
அவனை விட்டு விலகி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளிடம் கண்களால் காதல் கதை பேசிக் கொண்டிருந்தான் சித்தார்த்.
அவனுக்கு பதில் பார்வை கொடுக்க முடியாத படி வெட்கத்தில் சிவந்திருந்தாள் சிந்து. “பிளீஸ் டி கிட்ட வாடி”, என்று அவன் மறுபடி கெஞ்சியதும் உடனே அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அவளைப் பார்த்து அவன் சிரித்ததும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் சிந்து. இப்போது கண்களை மூடி இருந்த, அவள் முகத்தையே ஒரு நொடி பார்த்தவன் அவள் உதடுகளை சிறை செய்தான். 
அவனுடைய கழுத்தில் பதிந்திருந்த அவள் கைகள் அவனுடைய தலை முடியை இறுக்கி பிடித்தது. 
“சிந்து காபி கொண்டு வரவா?”,என்ற ராணியின் குரலில் தான் இருவரும் நடப்புக்கு வந்தனர். “ஐயோ இவங்க எப்ப ரூமை பூட்டினாங்க? ரூம் பூட்டி இருக்குறதைப் பாத்து, அம்மா என்ன நினைப்பாங்க?”, என்று அதிர்வுடன் வெளியே வந்தவள் “கொண்டு வாங்க மா குடிப்பாங்க”, என்று அவள் முகம் பார்க்காமல் சொன்னாள்.
அவளின் முகச் சிவப்பு கண்ணில் பட்டாலும் அதை கவனிக்காதவறு அங்கிருந்து சென்றாள் ராணி. 
அவனும் வேலைக்கு செல்ல வேண்டும், அவளும் டிரைனை பிடிக்க வேண்டும் என்பதால் பிரிய மனமில்லாமல் “எக்ஸாம் நல்லா பண்ணு. போன் பண்ணு. அப்புறம் நான் சிம் வாங்கல. வாங்க நேரம் இல்லை. நான் கம்பெனி போய்ட்டு பேசுறேன்”, என்று சொல்லி விட்டு வருங்கால மாமனார் மாமியாரிடமும் சொல்லி விட்டு சென்றான். 
சிம் வாங்க வில்லை என்று சொன்னதுமே சிறிது கடுப்பாக இருந்தது சிந்துவுக்கு. சித்தார்த் ஒரு வாரமாக சொல்லிக் கொண்டு தான் இருந்தான் “சிம் வாங்கணும், ஆனா நேரம் இல்லை”, என்று. 
அதனால் சிந்து “நான் வேணும்னா அம்மாவை வாங்க சொல்றேன்”, என்று சொன்னதுக்கும் “இல்லை இல்லை நானே வாங்கிக்கிறேன்”, என்று சொன்னவன் இப்போது வரை வாங்காமல் வெறும் போனைக் கொடுத்து சென்றால் அவளும் தான் என்ன செய்வாள்? 
“புது போன் வந்துருச்சா? இனி என் போனுக்கு ரெஸ்ட்”, என்று சொல்லி சிரித்தாள் ராணி.
“அட போங்கம்மா, அவங்க இன்னும் சிம் வாங்கல”
“இன்னும் வாங்கலாயா? நானாவது வாங்கிருப்பேன். சரி விடு. சென்னை போயிட்டு வந்து பாத்துக்கலாம்”
இருவரும் சென்னை சென்றார்கள். சித்தார்த் அக்கறையாக போன் பேசிய படி தான் இருந்தான். நேராக அமுதாவின் மகள் லட்சுமி வீட்டுக்கு சென்றார்கள். லட்சுமியின் கணவன் மோகன் இவர்களை அழைக்க ஸ்டேஷன் வந்திருந்தான்.
அடுத்த நாள் ஓய்வு எடுத்து விட்டு டெஸ்டுக்கு சென்றாள். கஷ்ட பட்டு எல்லாம் நல்ல படியாக முடித்து விட்டு ரிசல்ட் அன்று இரவுக்குள் வரும் என்பதால் ஆசையாக காத்திருந்தாள். ஆனால் வந்ததோ பெயில் என்று.
சிந்து அழுதாளோ இல்லையோ? ராணி கண்களில் கண்ணீர் வந்தது. “உனக்கு எப்ப தான் வேலை கிடைக்குமோ?”, என்று கேட்ட ராணியின் கண்கள் கலங்கியது.
சிந்துவுக்கும் அழுகை வர பார்த்தது. ஆனால் சித்தார்த்தோ, “இப்ப என்ன இது இல்லைன்னா இன்னொன்னு. நீ வேலைக்கு போகணும்னு எந்த கட்டாயமும் இல்லைடி செல்லம். கிடைச்சா போ. இல்லைன்னா வீட்ல ரெஸ்ட் எடு”, என்று சொல்லி தேற்றினான்.
அந்த ஒத்த வார்த்தையில் அவ்வளவு திடம் பெற்றாள் சிந்து. எல்லாருமே “நீ நல்லா பண்ணலையா? அதான் கிடைக்கலையா? இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துருக்கலாம்ல?”, என்று சொல்லும் போது அவன் அப்படி சொன்னது அவன் மேல் காதல் என்ற எண்ணத்தை முதன் முதலில் விதைத்தது.
இத்தனை நாள் “ஐ லவ் யு சொல்லு சொல்லு”, என்று அவன் டார்சல் செய்தாலும் “நேரில் தான் சொல்லுவேன்”, என்று அவள் சமாளித்திருந்தாலும் இன்று அவளாகவே சொன்னாள்
“எல்லாரும் நான் எக்ஸாம் நல்லா பண்ணலைனு தான் சொன்னாங்க. ஆனா நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை தெரியுமா? தேங்க்ஸ், அப்புறம்… அது வந்து… ஐ லவ் யு”, என்று சொன்னதும் சித்தார்த் ஆனந்தமாக அதிர்ந்து போனான்.
“ஏய்., சிந்து இப்ப நீ என்ன சொன்ன?””
“ஐ, லவ் யு, ஐ லவ் யு, இப்படி ஒரு சப்போர்ட்டான லைப் பார்ட்னர் கிடைச்சா எந்த பொண்ணும் லக்கி தான். நீங்க மட்டும், ஒழுங்கா டெஸ்ட் பண்ணிருந்தேன்னா இந்த வேலை கிடைச்சிருக்கும்ன்னு சொல்லிருந்தா கண்டிப்பா வாழ்க்கையையே வெறுத்துருப்பேன். நீங்களும் மத்தவங்க மாதிரி தானான்னு கவலையா இருந்துருக்கும். தேங்க்ஸ்”
அதன் பின் இருவரும் வெகு நேரம் பேசினார். இருவரும் சந்தோசமாக தான் பேசினார்கள். பேசி முடித்ததும் சிந்து முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது. குழப்பத்துக்கு காரணம் சிந்துவை சித்தார்த்தின் அக்கா வீட்டுக்கு போக சொன்னது தான். 
“என்ன ஆச்சு சிந்து?”, என்று கேட்டாள் ராணி.
“அண்ணி வீட்டுக்கு போக சொல்றாங்க மா?”
“கல்யாணம் முன்னாடி எப்படி சிந்து போக முடியும்?”
“அதே தான் மா நானும் சொன்னேன். ஆனா ரொம்ப போர்ஸ் பண்ணுறாங்க”
“உங்க அண்ணி கூப்பிட்டாங்களா சிந்து?”, என்று கேட்டாள் லட்சுமி.
“அன்னைக்கு எங்க ஸ்டே பண்ண போற? இங்க வீட்டுக்கு வரியான்னு கேட்டாங்க. இல்லை அக்கா வீடு இருக்குனு சொன்ன அப்புறம், சரி சொன்னாங்க. நேத்தும் எக்ஸாம் நல்ல பண்ணுன்னு சொன்னாங்க. வேற ஒண்ணும் சொல்லலை”
“இப்ப போக கூடாது சிந்து. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் விருந்துக்கு முதல் முறையா போங்க”, என்று லட்சுமி சொன்னதும் ராணியும் அதையே சொன்னாள். 
சித்தார்த்திடம் அவர்கள் சொன்னதை சொன்னதும் அவன் எதுவும் பேச வில்லை. பின் வேறு விஷயங்கள் பேசினான். “பரவால்ல புரிஞ்சிக்கிட்டாங்க”, என்று நினைத்தாள் சிந்து.
அன்று முழுவதும் ஓய்வு எடுத்து விட்டு அடுத்த நாள்; காலை அனைவரும் லட்சுமியின் அண்ணன் ராஜ் வீட்டுக்கு சென்றார்கள். அவர்கள் வீட்டில் இருந்தே சிந்துவும் ராணியும் ஊருக்கு செல்வதாய் இருந்தது.
ஆனால் விஷயம் அறிந்த சித்தார்த்தோ, “உங்க அக்கா வீட்டுக்கு போவ, உன் அண்ணன் வீட்டுக்கு போவ. ஆனா எங்க அக்கா வீட்டுக்கு போக மாட்ட? அப்படி தான?”, என்று கேட்டு அவன் பிடிவாத குணத்தை அவளுக்கு புரிய வைத்தான்.
பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து போனாள் சிந்து. ஊருக்கு கிளம்பும் போது கவலையாக வந்த சிந்துவிடம் “நான் வேணா அவங்க அக்கா கிட்ட சாரி சொல்றேன்ன்னு இவங்க கிட்ட சொல்லு சிந்து. நான் தான் கூட்டிட்டு போகலைன்னு சொல்லு”, என்றாள் ராணி.
“விடுங்கம்மா, நம்ம மேல என்ன தப்பு? நீங்க எதுக்கு சாரி கேக்கணும்? அவங்க கொஞ்ச நேரத்துல சரியாகிருவாங்க”,என்று முடித்து விட்டாள்.
அடுத்த நாள் ஊருக்கு வந்து இறங்கும் வரை கோபத்துடனே பேசிக் கொண்டிருந்த சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை கை விட்டு அந்த பிரச்சனையையே மறந்து போனான். சிந்துவுக்கும் நிம்மதியாக இருந்தது.  
அதன் பின் ஒரு நாள் அவளுக்கு பரீட்சை இருக்க, “எனக்கு லீவ் தான். நான் உன்னை கூட்டிட்டு போறேன் பைக்ல?”, என்றான் சித்தார்த். 
“கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டாமே”, என்று சிந்து மறுக்க மற்றொரு பூசல் வந்தது. என்னவென்று கேட்ட ராணியுமே வேண்டாம் என்றாள். 
“என்னை நீ ஹஸ்பண்டா நினைக்கலை அப்படி தானே?”, என்று வாதாடி அதை ராணியிடம் சொல்லி அவள் “பஸ் ஸ்டேண்ட் வரைக்கு நடந்து போய் அதுக்கப்புறம் வண்டில போய்க்கோ”, என்று சம்மதம் சொன்னாள்.
ஆனால் சிந்துவின் அப்பா சுந்தரமோ, “சும்மா கூட்டிட்டு போக சொல்லு ராணி. யார் என்ன சொல்ல போறா?”, என்றார்.
“உங்க அப்பா ஏதாவது சொல்லுவாரோன்னு தான் பயந்தேன். அவரே சரின்னு சொல்லிட்டார். நீ அவங்க கூட போ”, என்று ராணி சொன்னதும் சித்தார்த்துடன் கிளம்பினாள்.
வண்டியில் பட்டும் படாமல் அமர்ந்தவளை “என்னை பிடிச்சிக்க மாட்டியா டி?”, என்ற கேள்வி அவனை நெருங்கி அமர வைத்தது.
“இப்ப தான் டி செமையா இருக்கு. முதலில் கோவிலுக்கு போவோம்”, என்று சொல்லி முருகர் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
அவளுடையை நெற்றியில் குங்குமம் வைத்தவன் பின் அவளை பரீட்சை நடக்கும் இடம் அழைத்து சென்று அவள் ஹால்க்கு சென்ற பின்னர் தான் அங்கிருந்து சென்றான். 
பின் பரீட்சை முடிந்ததும் அவளை வீட்டுக்கு அழைத்து சென்று, அவளிடம் பல முத்தங்களை பெற்று விட்டே அங்கிருந்து சென்றான். 
காதல் தொடரும்….

Advertisement