அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?”
“அது அவ அம்மா வீட்ல இருந்தான்னு சொன்னேன்ல?”
“ஓ, அவங்க அம்மா வீடு எங்க இருக்கு?”
“மூணு தெரு தள்ளி”
“…..”
“சரி நீ என்ன கேக்க வரேன்னு புரியுது. இரு சொல்றேன். எங்க அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் தான் எல்லாரும் சேந்து இருந்தோம். அப்புறம் எங்க அண்ணன் பாரின் கிளம்பி போறதுக்கு முன்னாடி மாரி எங்க கூட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டா”
“ஐயையோ எதுக்கு?”
“எனக்கு தெரியாது. அவ தனியா தான் இருப்பேன்னு சொன்னா. நாங்க குவார்ட்ரஸ்ல இருந்தோம். அவ மட்டும் ஊர்ல எங்க பழைய வீட்ல இருந்தா. அந்த வீட்டுக்கு அடுத்து கிடந்த இடத்துல தான் இப்ப நாங்க வீடு கட்டி வந்துருக்கோம். ரெண்டு வீட்டுக்கும் இடைல ஒரு காலி மனை மட்டும் கிடக்குது?”
“அப்ப இந்த ஒன்பது வருஷமா அவங்க தனியாவா இருக்காங்க?”
“ஆமா”
“உங்க அண்ணன் கூட இருந்தா பரவால்ல. ஆனா உங்க அண்ணன் பாரின் போனதுக்கு அப்புறமும் எதுக்கு தனியா இருக்கணும்?”
“அப்ப தான இஷ்டத்துக்கு பக்கத்து வீட்ல எல்லாம் கதை பேசலாம். அவளுக்கு தோணுனதை செய்யலாம். எங்க அண்ணன் மாசம் மாசம் எங்க அப்பா பேருக்கு பணம் அனுப்புவான். எங்க அப்பா அவ கிட்ட ஐயாயிரம் கொடுப்பாரு. ஹாசினியும் எங்க கூட தான் இருந்தா. அப்ப அவளுக்கு என்ன செலவு இருக்க போகுது. மத்த பொருளும் எங்க அப்பாவே வாங்கி போடுவாறு. ஆனா பணம் எல்லாம் என்ன செஞ்சாளோ?”
“பணத்தை என்னமும் செய்யட்டும். அது அவங்க வீட்டுக்காரர் பைசா. ஆனா தனியா இருக்குறது கஷ்டம்ல?”
“நைட் அவங்க அம்மா அவளுக்கு துணையா வந்து படுப்பாங்க. அவ குணம் அப்படி தான். இப்ப புது வீட்ல இன்னும் நாங்க சமைக்க ஆரம்பிக்கல. அங்க இருந்து தான் சாப்பாடு வருது. சரியான நேரத்துக்கு செய்ய மாட்டா. மூஞ்சியையும் முகரையையும் தூக்கிட்டு உக்காந்துருப்பா. நாங்க தனியா செய்யலாம்னு பாத்தா இன்னும் காம்பவுண்ட் வேலை முடியலை. அது முடிஞ்சா தான் கிட்சன்ல புழங்குற தண்ணி வெளிய போக வழி விட முடியும்”
“உங்க அண்ணன் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”
“இப்ப அவன் தான் முக்கால்வாசி சமையல் செய்றான். கல்யாணம் வரைக்கும் அங்க தான் சாப்பாடு”
மாரியைப் பற்றி சொல்லப் பட்ட விஷயங்கள் அனைத்தும் சிந்துவுக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. தாயம்மாவும் சிந்துவிடம் போனில் பேச ஆரம்பித்தாள். சித்தார்த் தான் இருவரையும் பேச வைத்தான்.
தாயம்மாவும் தங்கம் தங்கம் என்று குழைந்த படி தான் பேசினாள். அது போக மாரியைப் பற்றி தவராகவும் சொன்னாள். 
“மாமா இருந்தா கூட கட்டில்ல படுத்து காலாட்டிட்டு கிடக்குறா. அப்படி இருக்கலாமா தங்கம்?”, என்று தாயம்மா கேட்பதும் நியாயமாக தான் தெரிந்தது. 
“அவ அம்மா வீட்ல இல்லாதது பொல்லாதது எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுத்து இழுத்து விடுவாங்க. அதான் அப்படி இருக்கா. நாம ஏதாவது சொன்னா சரினு சொல்ல மாட்டா. முகத்தை திருப்பிட்டு போவா”, என்றாள் தாயம்மா.
அது போக பிரேமாவும் மாரியைப் பற்றி தப்பாக தான் சொன்னாள். 
இன்னும் சிந்துவின் காதில் தாயம்மா, பிரேமா, சித்தார்த் மூவரும் தப்பான விசயங்களையே ஓதினர்.
திரும்ப திரும்ப சொன்னால் பொய் கூட உண்மையாகிவிடும் என்ற உண்மை அப்போது சிந்துவுக்கு புரிய வில்லை.
“எதுக்கு இந்த மாரியக்கா இப்படி இருக்காங்க. அவங்க பெத்த பிள்ளையையும் இவங்க கிட்ட விட்டுட்டாங்க. புகுந்த வீட்லயும் இல்லாம, தனியா இருக்காங்க?”, என்று சிந்து மனதிலும் மாரி மேல் சிறு வருத்தம் எழுந்தது.
ஆனால் சில விஷயங்கள் முன்னுக்கு பின் முரனாகவும் சிந்துவுக்கு பட்டது. “இந்த வீடு கட்டுறப்ப மாரியோட அண்ணன் மூணு பேரு இருக்காங்க. ஒருத்தன் கூட உதவி செய்ய வரலை தெரியுமா?”, என்று சித்தார்த் சொன்ன போது “மாரியக்காவே இவங்க கூட இல்லை. இதுல அவங்களோட அண்ணன்கள் எதுக்கு இவங்களுக்கு ஹெல்ப் பண்ண வரணும்?”, என்ற கேள்வி பிறந்தது சிந்துவுக்கு.
“இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம் மேல ஆக போகுது. இங்க வந்து அவ வீடு கூட கூட்டுனது இல்லை”, என்று சொன்ன போது அவர்கள் இந்த வீட்டுக்கு வரவே இல்லை என்னும் போது பெருக்குவதற்க்கு மட்டும் எதற்கு வரணும் என்ற கேள்வி எழுந்தது.
“பிள்ளைக்கு கூட ஒழுங்கா சாப்பாடு ஊட்ட மாட்டா. நாங்க தான் ஊட்டனும்”, என்று சொன்ன போது “அவங்க பிள்ளையை எப்படியும் பாக்காங்கன்னு இவங்க விட வேண்டியது தான? எதுக்கு சொந்த பேத்திக்கு சாப்பாடு ஊட்டினதை இப்படி பெருசா பேசணும்?”, என்ற எண்ணம் எழுந்தது.
ராணியிடம் இந்த குழப்பங்களை எல்லாம் சொன்ன போது, “அவங்க எப்படி இருந்தா உனக்கு என்ன? நீ உன் வேலையை பாக்க போற? உங்க வீட்டுக்காரர்க்கு குவார்ட்ரஸ் கிடைச்சா அங்க போக போற? கவலைப் படாம இரு”, என்று சொல்லி அந்த குழப்பததை முடித்து விட்டாள்.
மாரியைப் பற்றி சிந்து யோசிக்காமல் இருந்தாலும் சித்தார்த் யோசிக்க வைத்தான். மாலை வீட்டுக்கு போன பிறகு “டீ குடிச்சாச்சா?”, என்று சிந்து கேட்டால் “போட்டு தர யார் இருக்கா? மாரி அவளுக்கு மட்டும் தான் போட்டுக்குவா”, என்று சோகமாக கேட்டதும் ஒரு பக்கம் மாரி மேல் கோபம் வந்தாலும் “இவங்க அம்மா ஒரு டீ கூடவா போட்டுக் கொடுக்காது?”, என்று திகைப்பு எழுந்தது.
அதே போல் “நைட் சாப்ட்டாச்சா?”, என்று கேள்வி கேட்டாலும் “இன்னும் குளிக்கல சிந்து. குளிக்கலாம்னு போனா மாரி குளிக்க
கிளம்பினா. அதான் நான் இங்க வந்துட்டேன். ஏன் இவ இப்ப தான் குளிக்கணுமா? இவ்வளவு நேரம் என்ன செஞ்சாளோ”, என்று சித்தார்த் சொன்னான்
“புது வீட்ல நீங்க குளிக்க வேண்டியது தான?”,என்று கேட்டாள் சிந்து.
“அது அங்க குளிச்சு பழக்கமாயிருச்சு. இந்த வீட்டுக்கு இன்னும் ஈ. பி ல பதியல. அதனால மோட்டார் போட்டா கரண்ட் ரொம்ப எடுக்கும்”
“என்னது பதியலயா? அப்ப நான் வந்தாலும் அங்க போய் தான் குளிக்கணுமா?”
“ஏன் குளிச்சா என்ன? அங்க மோட்டார் இருக்கு. துணி துவைக்க வசதியா இருக்கும். வாழை மரம் சுத்தி மறைச்சிக்கும்”
“எனக்கு பாத்ரூம்ல குளிச்சு தான் பழக்கம். உங்க வீட்ல அப்ப பாத்ரூம் இல்லையா?”
“மூணு பாத்ரூம் இருக்கு போதுமா?”
‘ஹிம், பாத்ரூம் இல்லைன்னா என்ன செய்ய முடியும்? நம்ம ரூம்ல இருக்கா?”
“ஹிம்ம இருக்கு, நீ இங்க வா. உனக்கு வீடு பிடிக்கும்”
“சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல், அது போக வாடகை வீட்டுக்கும் காமன் பாத்ரூம் தான். இப்ப இருக்குற வீட்ல தனி பாத்ரூம் தான். ஆனா வெளிய இருக்கு. நைட் அம்மாவ எழுப்பனும். அதனால கல்யாணத்துக்கு அப்புறம், பெட்ரூம்ல பாத்ரூம் இருக்கணும்னு ஆசை”
“நம்ம ரூம்ல உனக்கே உனக்குன்னு பாத்ரூம் இருக்கு போதுமா?”
“ஹிம், சரி”, என்று அந்த பேச்சு அத்துடன் முடிந்தது. ஒரு வழியாக சிந்துவின் அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா சித்தார்த் வீட்டைப் பார்க்க கிளம்பினார்கள். அன்றே திருமணத்துக்கு நாள் குறிக்க பட்டது. அதற்கு முன்னர் நிச்சயதார்த்தம் எப்போது வைக்க என்று கேள்வி எழுந்தது. 
ராணியோ “கல்யாணத்துக்கு முன்னாடி வச்சிக்கலாம், இல்லைன்னா இப்பவே கூட வச்சிக்கலாம்”, என்றாள்.
ஆனால் தாயம்மாவோ, “கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம். ஆனால் இப்ப பூ வைக்கிற பங்ஷன் வச்சிக்கலாம்”, என்று முடிவாய் சொன்னாள்.
வீட்டுக்கு வந்து ராணி தான் புலம்பினாள். “எதுக்கு ஒரு வேலைக்கு இரு வேலை? அது என்ன பூ வைக்கிறதுக்குன்னு பங்ஷன்? அன்னைக்கே நிச்சயமாவது வச்சிக்காலம். உன் மாமியார் தான் இப்படி சொல்லிருச்சு. சரி அதை சண்டே வைக்கலாம்னு பாத்தா உங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் அன்னைக்கு வேற ஒரு பங்ஷன் இருக்கு. திங்கள் கிழமை வைங்கன்னு சொல்லிட்டாங்க. மாப்பிள்ளையோட பெரியப்பாவும் எங்களுக்கும் ஒரு பங்ஷன் இருக்குன்னு சொல்லிட்டாரு”
“சரி விடுங்க மா. அவங்க வீடு எப்படி இருந்தது?”
“அதெல்லாம் பெருசா தான் இருக்கு. ஆனா காம்பவுண்ட் ஒட்டி கொஞ்சம் தான் இடம் இருக்கு. வீடு பெருசா இருக்கு. சுத்தி இடம் கம்மியா இருக்கு. ரெண்டு பெட்ரூம், ஒரு ஹால், ஒரு சாமி ரூம், கிட்சன் இருக்கு”
“வீடு நல்லா இருக்குல்ல? அது போதும்”, என்று நினைத்தாள் சிந்து. 
அன்று போன் செய்த சித்தார்த்தோ “உங்க பெரியப்பா பெரியம்மாவுக்கு சண்டே வேற பங்ஷன் இருந்தா அவங்க போக வேண்டியது தான? எதுக்கு மண்டே பங்ஷன் வைக்கணும். எனக்கு எல்லாம் லீவ் தரமாட்டாங்க”, என்று குத்தித்தான்.
“அது எப்படி அவங்க இல்லாம பங்ஷன் வைக்க முடியும்? அவங்க தான் எனக்கு மாப்பிள்ளை பாத்து விசாரிச்சு, இந்த அளவுக்கு பண்ணிருக்காங்க. அவங்க இல்லாம எப்படி செய்ய?”
“எனக்கு லீவ் கிடைக்காது. நீங்களே எல்லாம் பாத்துக்கோங்க”
“என்ன விளையாடுறீங்களா? நீங்க வராம எப்படி? எங்க சொந்த காரங்க யாருமே உங்களைப் பாக்கல. அப்படி இருக்கும் போது நீங்க வந்து தான் ஆகணும். உங்க பெரியப்பாவும் வேற பங்ஷன் இருக்குன்னு தான் சொல்லிருகாரு”
“அவர் கிடக்கார். உங்க வீட்ல எதுக்கு சண்டே வைக்கல?’ என்னால வர முடியுறது டவுட் தான்”
“எங்க அம்மா பூ வைக்கிற பங்க்ஸனே வேண்டாம். நேரடியா நிச்சயமே வச்சிக்கலாம்னு சொல்லிருக்காங்க. உங்க அம்மா தான் ரெண்டு செலவு இழுத்து விட்டது”
“அதுக்கு நான் வேணா பைசா கொடுத்துறேன்”
“நான் இப்ப பைசா கேட்டனா? நீங்க வராம எப்படி?”
“முடிஞ்சா தான் வருவேன், சரி உன் தம்பி வருவானா?”
“பூ வைக்கிறதுக்கு எதுக்கு அவன்?”
“பின்ன அவன் வர வேண்டாமா? நான் அவனை வர சொல்றேன்”, என்று சொல்லி அந்த பேச்சை முடித்து விட்டான்.
பூ வைக்கும் நாளும் வந்தது. சொன்னது போல் பூ வைக்கிற பங்சனுக்கு அழைத்த சொந்தங்கள் சிந்து வீட்டு தெருவில் இருந்தவர்கள் என அத்தனை பேரும் வந்திருந்தார்கள். 
சித்தார்த் வீட்டில் இருந்து அனைவரும் வந்தார்கள். தாயம்மா பாசமாக பேசினாள். சித்தார்த்தின் அண்ணன் பாரினில் இருந்து கொண்டு வந்திருந்த சென்ட் பாட்டில், நக பாலிஷ், சாக்லேட் என்று அனைத்தும் புது மருமகள் கையில் கொடுத்தாள்.
சிந்துவை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்கள் “நல்ல மாமியார் தான் டி உனக்கு கிடைச்சிருக்காங்க”, என்று சொன்னார்கள். 
சித்தார்த் சொன்னது போல் வர வில்லை. மறுபடி மறுபடி சிந்து போன் செய்தும் சித்தார்த் போனை எடுக்கவும் இல்லை. எல்லாரும் மாப்பிள்ளை எங்க எங்க என்று கேட்கும் போது ராணிக்கும் சுந்தரத்துக்கும் எரிச்சலாக இருந்தது.
சிந்துவின் தம்பி அரவிந்தும் வந்திருந்தான். “உன் தம்பி வருவானா? வருவானா?”, என்று கேட்டு பல தடவை சித்தார்த் கடுப்பு ஏற்றி இருந்தான். 
“பூ வைக்கிறதுக்கு நான் எதுக்கும்மா வரணும்? எனக்கும் போன் பண்ணி வருவியான்னு மாமா கேட்டாங்க”, என்று அரவிந்த் சொல்லிய போது “அவங்க இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல? வந்துரு அரவிந்த்”, என்று ராணி சொன்னதும் வேலையை மூட்டை கட்டி வைத்து விட்டு அவனும் வந்து விட்டான். 
ஆனால் அழைத்த சித்தார்த் வரவே இல்லை. 
ராணிக்கும் கடுப்பாகவே இருந்தது.”ஒரு மணி நேரம் வந்து முகத்தை காட்டிட்டு போயிறக் கூடாதா?”, என்று நினைத்தாள். 
அனைவரும் மாப்பிள்ளை எங்க எங்க என்று கேட்க வேறு வழியில்லாமல் சித்தார்த் அப்பாவிடம் சென்று “எப்படியாவது வர சொல்லுங்களேன். எல்லாரும்  கேக்குறாங்க அண்ணா”, என்று சொன்னாள்.
“சரி நான் நேர்ல போய் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி கிளம்பினார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம்.  
“இருங்க அண்ணா, என் தம்பியோட கார் இருக்கு. அதுலே போங்க”, என்று சொல்லி ராணி காரை அனுப்பியும் வைத்தாள். 
சுந்தரம் கம்பெனிக்கு சென்று பெர்மிசன் வாங்கி சித்தார்த்தை அழைத்து வந்தார். 
“நேத்து பங்க்ஸனை வச்சிருக்க வேண்டியது தான?”, என்று திட்டி தான் அவனுக்கு பெர்மிசன் கொடுத்திருந்தனர். வேறு வழியில்லாமல் கம்பெனிக்கு போட்டிருந்த உடையுடன் தான் வந்தான் சித்தார்த்.
இங்கே வந்து பார்த்தால் மிகப் பெரிய கும்பலே இருந்தது. “சே பேக்கு மாதிரி வந்துருக்கேனே? டிரெஸ்ஸும் நல்லா இல்லை. தாடியும் வளந்து அசிங்கமா இருக்கேனோ? சிந்து சொந்த காரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?”, என்று மனதுக்குள் புழுங்கினான்.
டென்சனில் அமர்ந்திருந்த சிந்து காதில் “சித்தார்த் வந்துட்டாங்க சிந்து”, என்று சொன்னாள் மாரி.
புன்னகையுடன் அவளைப் பார்த்தாள் சிந்து. “நான் தான் மாரி”, என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
“மச்சான் வரலையாக்கா?”, என்று புன்னகையுடன் கேட்டாள் சிந்து.
“வெளிய இருக்காங்க”, என்று சொன்ன மாரி “வா நாம ரெண்டு பேரும் போட்டோ எடுப்போம்”, என்று சொல்லி போட்டோ எடுத்தாள்.
மொத்த குடும்பமே மாரியை வருத்தெடுக்கிறார்கள். ஆனால் அவளோ புன்னகையோடு, ஒரு தோழி போல பேசுகிறாள். எது நிஜம்? மாரியைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள் சிந்து.
சித்தார்த்தின் பெரியம்மா பிள்ளைகள் இருவரும் “தலை சீவிருக்குறது நல்லா இல்லை”, என்று சொல்லி அந்த நேரத்தில் தலையை உலைத்து விட்டனர்.
அவளுக்கு தலை சீவிக் கொண்டிருக்க அனைவரும் “மாப்பிள்ளை வந்தாச்சு, பொண்ணைக் கூப்பிடுங்க”, என்று ஏலம் விட்டனர்.
சித்தார்த் அருகில் அரவிந்தும், சிந்துவின் பெரியம்மா மகன் குமாரும் அமர்ந்திருந்தார்கள். 
இருவரும் பேசியதும் கொஞ்சம் சகஜமாக உணர்ந்தான் சித்தார்த்.
எப்படியோ சித்தார்த் வந்தது ராணிக்கும் சிந்துவின் அப்பா சுந்தரத்துக்கும் நிம்மதியாக இருந்தது.
சிந்துவை அழைக்க வந்த ராணிக்கு அவளுக்கு தலை வாரிக் கொண்டிருப்பதைக் கண்டு மறுபடியும் டென்ஷன் தலைக்கேறியது. “மாப்பிள்ளை உடனே போகனுமாம். இந்நேரம் தலை சீவிட்டு இருக்கீங்க? சீக்கிரம் அனுப்புங்க”, என்று சொல்லி விட்டு சென்றாள்.  
சிந்துவுக்கும், சித்தார்த்துக்கும் இதய துடிப்பு பயங்கரமாக இருந்தது. பெண் பார்க்க வந்த அன்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வில்லை. அதன் பின் வீடியோ காலில் தான் இருவரும் பார்த்திருக்கிறார்கள். முதல் முறை நேரில் பார்ப்பது இன்று தான்.
இருவரையும் விளக்கு முன்னே நிறுத்தினார்கள். சிறிது பூவை எடுத்து அவள் தலையில் வைத்தான் சித்தார்த்.  அவனை நிமிர்ந்து பார்க்க ஆசை இருந்தாலும் தயக்கம் வந்தது.
“மாப்பிள்ளையோட அக்காவை கூப்பிடுங்க பூ வைக்க”, என்று ஒரு பெண் அழைத்தாள். 
பிரேமா தான் வரவில்லையே. அதனால் பூவை சித்தார்த்தின் பெரியப்பா மகள் மங்கை வைத்தாள். 
அப்போது சிந்துவின் மனதில் “என் தம்பியை அப்படி கட்டாய படுத்தி வர வச்சாங்க. அதே மாதிரி இவங்க அக்காவை எதுக்கு சித்தார்த் வர வைக்கல?”, என்ற கேள்வி பிறந்தது. 
அதன் பின் பூ வைப்பது, போட்டோ எடுப்பது, சாமி கும்பிடுவது, என்று நேரம் சென்றது. 
அவன் ஓரக் கண்ணில் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் சிந்து. 
இப்போது வேறு மாதிரி தெரிந்தான் சித்தார்த். “இவன் என்ன ஒவ்வொரு டைமும் ஒவ்வொரு மாதிரி இருக்கான்? தாடியை எடுத்தா தான் ஒரு முடிவுக்கு வர முடியும் போல”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவனோ, அவளைப் பார்த்து “அழகா இருந்த முகத்தை இப்படி மேக்கப் பண்ணி கெடுத்து வச்சிருக்காங்களே? யார் இப்படி செஞ்சான்னு கேக்கணும்?”,என்று எண்ணிக் கொண்டான்.
பின் இருவருக்கும் சேர் போட்டு அதில் உக்கார சொன்னார்கள். அப்போது சித்தார்த் ஏதாவது பேசுவான் என்று அவள் எதிர் பார்க்க, அவள் ஏதாவது பேச கூடாதா என்று அவன் எதிர் பார்த்தான்.
இருவரும் பேசலாம் என்று நினைக்கும் போது “சரி கஷ்ட பட்டு வந்தீங்க. உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டோம். நேரம் ஆகிட்டுன்னா நீங்க கிளம்புங்க”,என்று சொன்னாள் ராணி. 
“சரியா பேச போற நேரத்துல இந்த அத்தை வந்து கிளம்ப சொல்லிட்டாங்களே?”, என்று எண்ணிக் கொண்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான் சித்தார்த். 
காதல் தொடரும்…