Advertisement

அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது.
அவனும் வேலை இருக்கிறது என்று சொல்லி வைத்து விட்டான். 
அன்று மாலை அவள் முகத்தை வைத்தே ஏதோ குழப்பம் என்று கண்டு கொண்டாள் ராணி.
“என்ன ஆச்சு? எதுக்கு ஒரு மாதிரி இருக்க? அந்த பையன் எப்படி பேசுறாங்க? நல்ல பையனா தான தெரியுது?”
“இந்த அம்மா மட்டும் எப்படி தான் என் முகத்தை வச்சே எல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ?”, என்று எண்ணிக் கொண்டு “கொஞ்சம் பயமா இருக்கு மா. வேலை செய்ய தெரியுமானு கேக்குறாங்க. எல்லா வேலையும் நான் தான் செய்யனுமாம். அவங்க அம்மா அடுப்படிக்கே போகாதாம். இவ்வளவு நாள் அவங்க அப்பா தான் செய்வாங்களாம்”, என்றாள்.
“ஆமா அவங்க அம்மாவுக்கு கொஞ்சம் சளிப் பிரச்சனை இருக்கு போல? சரி வேலை தான? நான் நம்ம வீட்ல செய்யலையா? அத மாதிரி நினைச்சிக்கோ. அது உன் வீடு. நீ தான் வேலை செய்யனும். அப்புறம் உன் சொக்காரிக்கும் உன் மாமியாருக்கும் கொஞ்சம் ஆகாது போலயே”
“என்னம்மா சொல்றீங்க?”
“அந்த ஷியாமளா பொண்ணு மாப்பிள்ளையை விட மாமியார் தங்கம்னு சொன்னா. ஆனா அவங்களுக்கும் மூத்த மருமகளுக்கும் ஆகாதாம். நம்ம அடுத்த தெருல இருக்குற நேசமணி தெரியும் தான?”
“அந்த அத்தையை தெரியுமே மா? அந்த மாமாவோட பஸ்ல தான நான் சின்ன வயசுல ஸ்கூல்க்கு போவேன்”
“அவங்க பொண்ணு ரமா இருக்காளே? அவளுக்கு தான் முதல்ல இந்த பையனை பாத்தாங்களாம்”
“இதை இந்த சித்தார்த் சொல்லவே இல்லையே”, என்று எண்ணிக் கொண்டு “அந்த அத்தை என்னமா சொன்னாங்க?”, என்று கேட்டாள் சிந்து.
“தெளிவா சொல்லல சிந்து மா. முதல்ல ரமாவ தான் பாத்தாங்களாம். அப்புறம் என்ன ஆச்சோ தெரியலை அது முடியலையாம். நிறைய வரன் வரும் போகும் தான். அது பெருசா எடுக்க கூடாது. யாருக்கு எங்க முடியும்னு இருக்கோ அங்க தான் முடியும்”
“அதுவும் சரி தான். ஆனா மாரி அக்காவுக்கும் மாமியாருக்கும் என்ன சண்டை?”
“அது தெரியலை சிந்து, ஆனா நேசமணியக்கா, மூத்த மருமக பொண்ணு பாக்க வந்துருக்க மாட்டாளே. உள்ள ஒரு பூசல் இருக்குன்னு சொன்னாங்க”
“ஓ”
“நீ தேவை இல்லாம யோசிக்காத. யாரு எப்படியும் போகட்டும். கல்யாணம் முடிஞ்ச அப்புறம், எக்ஸாம்க்கு படிச்சு ஒரு வேலைல சேரப் பாரு”, என்று சொல்லி அந்த பேச்சை முடித்து விட்டாள்.
அதன் பின்னர் சித்தார்த் போன் செய்த போது “இதுக்கு முன்னாடி எங்க ஊர் சைட் வந்துருக்கீங்களா?”, என்று கேட்டாள்.
“வந்துருக்கேன். ஆனா எந்த வீடுன்னு கூட நினைவு இல்லை. பொண்ணு பாக்க கூட்டிட்டு போனாங்க. அந்த பொண்ணு வீட்டை பிடிக்கல. வேண்டாம்னு சொல்லிட்டோம். அவங்க அப்பா குடிப்பாராம். எங்க ஊருக்கு எல்லாம் வந்து எங்களை பத்தி விசாரிச்சிருக்காங்க”
“இவன் என்ன மொட்டையா சொல்ற மாதிரி இருக்கு”, என்று எண்ணிக் கொண்டு “எதுக்கு நீங்க வேண்டாம்னு சொன்னீங்க? பொண்ணைக் கொடுக்கணும்னா விசாரிக்க தான செய்யணும்”, என்று கேட்டாள்.
“அவங்க அப்பா கிட்ட பேசுறதுக்கு எங்க அம்மா போன் செஞ்சாங்க. அவங்க அம்மா எடுத்தாங்க. உங்க வீட்டுக்காரர் கிட்ட கொடுங்கன்னு சொன்னதுக்கு மழுப்புனாங்க. அப்புறம் தான் அவர் தண்ணி அடிச்சிட்டு மட்டைன்னு சொன்னாங்க. எங்க அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா புரோக்கர் தான் அவங்க போனா போகட்டும். கண்டிப்பா இதை விட நல்ல பொண்ணை தம்பிக்கு முடிச்சு தரேன்னு சொன்னார். உங்க அப்பா டிரிங்க்ஸ் பண்ணுவாங்களா? எங்க வீட்ல அந்த பழக்கம் இல்லை. யாருக்கும் பிடிக்கவே செய்யாது”
அவன் சொல்வதில் எதுவோ உண்மை குறைவது போல பட்டது. ஆனால் அதை யோசிக்க விடாமல் அவன் கேள்வி அவளை நடப்புக்கு கொண்டு வந்தது. 
சுந்தரத்துக்கு அந்த பழக்கம் உண்டு. ஆனால் நிதானம் இழப்பவர் அல்ல. அதனால் “ஏதாவது பங்க்ஸன்னா குடிப்பாங்க”, என்று உண்மையையே சொன்னாள்.
“பாத்துக்கோ, எனக்கு அந்த வாடையே ஆகாது. குடிச்சிட்டு என்னை ஏதாவது சொல்லிட்டார்னா நான் அப்புறம் முகத்துலே முழிக்க மாட்டேன்”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னான். 
“அப்படி எல்லாம் நடக்காது”, என்று அவனிடம் சொன்ன சிந்து அடுத்த நாளே ராணியிடம் சொல்லி விட்டாள்.
ராணி சுந்தரத்திடம் மாப்பிள்ளை நீங்க குடிப்பீங்களான்னு கேட்டுருக்கார். எப்பவாது தான்னு மரியாதையா சொல்லிருக்கா. ஏதாவது அசிங்க படுத்திராதீங்க”, என்று சொல்லி விட்டாள். அவரும் சரி என்றார்.
அதன் பின்னரும் சிந்துவின் முகம் தெளியாதது போல தான் இருந்தது. 
ராணி விசாரித்ததும் “அவங்க ஏதோ ஆர்டர் போடுற மாதிரி இருக்கு மா”, என்று சொன்னாள் சிந்து.
“என்ன தான் சொல்றாங்க சிந்து?”
“லக்கேஜ் எல்லாம் எங்கயாவது போகனும்னா நான் தான் தூக்கணுமாம். வெள்ளி செவ்வாய் நான் வெஜ் சமைக்க கூடாதாம். அது கூட பரவாயில்ல. ஆனா வேலைக்கு போனா சம்பளத்தைக் கூட அவங்க கைல தான் கொடுக்கணுமாம் மா”, என்று சொல்லும் போது சிந்துவின் கண்கள் கலங்கி விட்டது.
“சரி விடு, எல்லா பொண்ணுங்களும் இதே மாதிரி தான? நீ நம்ம வீட்டு கஷ்டம் பாத்துட்டு நம்ம வீட்டுக்கு பணம் தரணும்னு நினைச்சிருப்ப? அதெல்லாம் பழகிரும். எங்கள பத்தி கவலைப் படாத. உன் வாழ்க்கையை மட்டும் பாரு”, என்று சொல்லி முடித்து விட்டாள் ராணி.
அவள் முகத்தை வைத்து அவள் குழப்பத்தை அறிந்தது சித்தார்த்தும் தான்.
“என்ன ஆச்சு சிந்து? எதுக்கு டல்லா இருக்குற? அத்தை உன்கிட்ட போன் கொடுக்குறதுக்கு ஏதாவது சொன்னாங்களா? கவலைப் படாத. இன்னும் ரெண்டு நாள்ல எங்க அத்தை என்னோட புது போனை எங்க அக்கா வீட்ல இருந்து வாங்கிட்டு வந்துருவாங்க”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை”
“அப்புறம் எதுக்கு டல்லா இருக்க? என்கிட்ட சொல்லக் கூடாதா செல்லம்”
முதல் முறை செல்லம் சொன்னதும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவள் “இவன் கிட்டயே விளக்கம் கேட்டா என்ன?”, என்று யோசித்தாள்.
“என்னன்னு சொன்னா தான சிந்து தெரியும்”
“இல்லை தப்பா எடுத்துக்காதீங்க? மீசை வைக்க மாட்டீங்கன்னு தெரியும். எனக்கு ஆசை இருந்தாலும் உங்களை கட்டாயப் படுத்துறது தப்புன்னு தெரியும். நான்வெஜ் ரெண்டு நாள் சாப்பிடலைன்னா ஒண்ணும் இல்லை. ஆனா எல்லா வேலையும் நான் தான் செய்யணும்னா எப்படி?”
“ஏய், நான் சொன்னது அப்படி இல்லை. எங்க அம்மா தான் சமைக்க மாட்டாங்க. ஆனா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். இதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா? அவங்களுக்கு உடம்பு சரி இல்லை மா”
“அதெல்லாம் அவங்களை நான் பாத்துப்பேன். வேலை செய்றதும் கஷ்டம் கிடையாது. ஆனா ஏதோ பயமா இருக்கு. அப்புறம் எங்க வீட்ல என்னை படிக்க வைக்க தான் நிறைய கடன் வாங்கினாங்க. ஆனா நான் வேலைக்கு போனா எங்க வீட்டுக்கு கொஞ்சம் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா உங்க கிட்ட சம்பளத்தைக் கொடுக்க சொல்றீங்க?”
“நான் சொன்னது எல்லாம் தப்பா நீ புரிஞ்சிக்கிற? ரெண்டு பேர் பணமும் இருந்தா வீட்டு பட்ஜட் போட சரியா இருக்கும். நான் உன் சம்பளத்துக்கு ஆசை படுறேன்னு நினைச்சிட்டியா? நீ வேலைக்கு போகாம இருந்தா கூட உன்னையும் உன் குடும்பத்தையும் சேத்து நான் பாத்துக்குவேன். என் கைல எல்லாம் நீ தர வேண்டாம். என் சம்பளத்தை உன் கிட்ட தரேன் போதுமா. நீயே பொறுப்பை பாத்துகோ. அப்புறம் உங்க வீட்டுக்கு நான் இன்னொரு மகன். உன் வீட்டையும் நான் தான் பாக்கணும். மாசம் மாசம் எல்லா பொருளும் நாம தான் வாங்கி போட போறோம். அது போக அவங்க செலவுக்கு தனியா கொடுத்துரலாம். இது நீ வேலைக்கு போனாலும் செய்வேன். நீ வீட்ல இருந்தாலும் செய்வேன்”
“சாரி, நிறைய குழப்பமா இருந்தது. நீங்க பேசினது கொஞ்சம் கஷ்டமா ஆகிருச்சு. அதான் தெளிவா கேட்டுட்டேன்”
“எங்க வீட்டுக்கு வந்த அப்புறம் என்னை புரிஞ்சிக்குவ சிந்து. சரி கம்மல் எங்க? கவரிங் போட்டுருக்குற மாதிரி இருக்கு.  அன்னைக்கே கேக்கணும்னு நினைச்சேன். கழுத்துலயும் எதுவுமே இல்லை”
“வீட்ல தங்கமே இல்லைன்னு எப்படி சொல்ல?”, என்று எண்ணிக் கொண்டு “அது எனக்கு போட பிடிக்கலை. இப்படி இருக்குறது தான் நல்லா இருக்கு”, என்றாள். அது உண்மையும் கூட கம்மல் இருந்தாலும் சிந்து அதை கழட்டி தான் வைத்திருப்பாள்.
“இனி அப்படி இருக்காத. நல்லா இல்லை. எடுத்து போடு”
“அப்புறம் போடுறேன். கசகசன்னு இருக்கு”, என்று சமாளித்து விட்டு போனை வைத்தாள்.
 
அவன் சொன்னதை அனைத்தையும் ராணியிடம் சொன்னதும் “நல்ல  பையன் தான் போல சிந்து. அவசர பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது”, என்று சொல்லி விட்டு “கம்மல் முதல்ல திருப்பணும்”, என்று எண்ணிக் கொண்டாள்.  
அடுத்த நாளே அமுதா ஒரு நெக்லசைக் கொடுத்து “கொஞ்ச நகையை திருப்பு”, என்றாள்.
அவளிடம் கடன் வாங்குவது கவலை அளித்தாலும் ராணிக்கு வேறு வழி இருக்க வில்லை.
அடுத்த நாளே சிந்துவின் கம்மல் மற்றும் நெக்லசை திருப்பிக் கொண்டு வந்து விட்டாள். கம்மலை மட்டும் அணிந்து கொண்டாள் சிந்து. 
“செயின் எங்க?”, என்று கேட்டான் சித்தார்த். அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாமல் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள் சிந்து.
“போன மாசம் தான் லோன் கட்டுனோம். நகை எல்லாம் வச்சு தான் கட்டி முடிச்சோம். நேத்து நீங்க சொன்னப்ப கைல ஒத்த போட்டு தங்கம் இல்லை. இன்னைக்கு பெரியம்மா கொடுத்த செயினை வச்சு தான் இதையும் நெக்லசையும் திருப்பினாங்க. செயின் எல்லாம் இன்னும் திருப்பல”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவன் “என்கிட்ட முன்னாடிய சொல்ல வேண்டியது தான? சரி இப்ப நகை எவ்வளவுக்கு இருக்குனு சொல்லு”, என்று கேட்டான்.
“அது நிறைய ரூபாய்க்கு இருக்கு. ஆனா என்னோடது இன்னும் ஒண்ணே கால்க்கு இருக்கு”
“சரி விடு, என்கிட்ட சொல்லிட்டல்ல? நான் என் பணத்தை எல்லாம் முடக்கிட்டேன். என் கைல இப்ப இல்லை ஆனா. நான் அரெஞ்ச் பண்ணி தரேன்”, எண்டு சொல்லி அடுத்த நாளே ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்தை ராணி கையில் கொண்டு வந்து கொடுத்தான் சித்தார்த்.
வாங்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த ராணியை எப்படியோ சம்மதிக்க வைத்தான். 
“யார் இப்படி நிச்சயம் முடியுறதுக்குள்ளே இவ்வளவு பணம் கொடுப்பா. நான் தான் சித்தார்த்தை தப்பா நினைச்சிட்டேனோ?”, என்று எண்ணி அவனுக்கு மனதார நன்றி சொன்னாள்.
“என் பொண்டாட்டிட்க்கு நான் செய்யாம வேற யார் செய்வா”, என்று சொல்லி அவளை புல்லரிக்க வைத்தான்.
“உங்க கைல இல்லைன்னு சொன்னீங்களே?”
“என் கைல ஒரு எழுபதாயிரம் இருக்கு சிந்து. அதை முக்கியமான செலவுக்கு வச்சிக்கலாம்னு அதை எடுக்கல. அப்புறம் நான் சொல்றதை யார் கிட்டயும் சொல்லாத. இரண்டரை லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணிருக்கேன். அது நமக்கு பின்னாடி தேவைப் படும். அப்ப போல யாரையும் நம்ப கூடாதுல்ல. எங்க வீட்டுக்கே அது  தெரியாது. அப்புறம் நான் பணம் கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிஞ்சா கல்யாணம் முன்னாடியே பொண்ணு வீட்டுக்கு கொடுக்குறான்னு பேசுவாங்க”, என்று சொல்லி விட்டான்.
அவளும் “சரி”, என்றாள்.
“என்ன அமைதியாகிட்ட? என்ன டா இவன் எப்படி நம்மளை பாத்துப்பான்னு யோசிக்கிறியா சிந்து?”
“ஐயோ அப்படி எல்லாம் நினைக்கலைங்க”
“என் சம்பளத்தை சேவிங்ஸ் பண்ணிட்டு இருக்கேன். வீட்டுக்கு இது வரை ஒத்த பைசா கொடுத்தது இல்லை. எல்.ஐ. சி போட்டுட்டு தான் இருக்கேன். நீ நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் எல்லாம் காட்டுறேன். நீயே மிரண்டுருவ. நான் இப்ப ரெண்டு வருஷம் அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு வேலைக்கே போகல சிந்து. இப்ப ஒரு வருஷமா தான் இங்க வேலை பாக்குறேன். அதெல்லாம் உன்னையும் உன் குடும்பத்தையும் நல்லா பாத்துக்குவேன். நம்ம பிள்ளைகள் கூட எதுக்கும்‌ அடுத்தவங்க கிட்ட போய் நிக்க மாட்டாங்க”
“உங்க வீட்டையும் நாம தான பாக்கணும். வீட்டுக்கு நீங்களும் மாசம் மாசம் பணம் கொடுக்கலாம்ல?”
“அதெல்லாம் எங்க அப்பாவே சாப்பாடு போடுவார். ரெண்டு பேருக்கும் பென்ஷன் வருது. நம்ம நாலு பேர் தான? சரி நான் அப்புறம் உன்கிட்ட பேசுறேன். வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
“நாலு பேரா, இவங்க அண்ணன் அண்ணியைப் பத்தி கேக்காம விட்டுட்டேனே? அவங்களுக்குள்ள என்ன சண்டையா இருக்கும்? சரி சித்தார்த் அம்மாவும் நம்ம அம்மா மாதிரி தான? அவங்க அண்ணா அன்னை அவங்களை பாக்கலைன்னா கூட நம்ம பாத்துக்கலாம். அப்புறமா அவங்க அண்ணியைப் பத்தி கேக்கணும்”, என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் கேட்ட பின்னர் “ஏன் தான் கேட்டோமோ?”, என்று எண்ணி நொந்து போனாள் சிந்து.
காதல் தொடரும்….

Advertisement