Advertisement

அத்தியாயம் 3
காற்றில் கூட வீணையுண்டு
என்று உணர்ந்தேன்,
உன் கை விரல்
அங்கே இங்கே அசையும் போது!!!
அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும். 
இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி கிளம்பும் போது “போனை நீயே வச்சிக்கோ”, என்று சொல்லி கொடுத்தாள்.
“ஐயையோ வேண்டாம் மா, நீங்க கொண்டு போங்க”
“அந்த பையன் பேசுராங்கள்ல? நீயே வச்சிக்கோ”, என்று சொல்லி கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
காலையில் எட்டு மணிக்கு பேக்டரிக்கு வந்த சித்தார்த் பிரிண்டிங்க் மெஷின் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தான்.
அனைத்தும் சரியாக இருந்ததும் தன்னுடைய அறைக்கு வந்தவன் போனை எடுத்தான். சிந்துவிடம் பேச ஆவல் இருந்தாலும் “அவ அம்மா கிட்ட போன் இருந்தா என்ன செய்றது?”, என்று எண்ணி தவிப்பாக இருந்தது. 
அவன் ஏற்கனவே ஒரு புது போன் வாங்கி வைத்திருந்தான். அதை அவனுடைய அக்காவின் கணவர் ராஜா தான் ஒரு ஆபரில் வாங்கினார். அதற்கு இவன் தான் பணம் அனுப்பி வைத்தான். வருங்கால மனைவிக்காக தான் அது வாங்கியது. அது இப்போது சென்னையில் இருக்கிறது. “கண்டிப்பா அதை சிந்துவுக்கு சீக்கிரம் கொடுக்கணும்”, என்று எண்ணிக் கொண்டான்.
போனையே வெறித்து வெறித்துப் பார்த்தவன் “சும்மா பண்ணி தான் பாப்போமே”, என்று எண்ணி “ஹாய்”, என்று மட்டும் அனுப்பி வைத்தான்.
அங்கே சிந்துவும் போனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மெஸ்ஸெஜ் அனுப்ப ஆசை இருந்தாலும் அவளாக பேச தயக்கம் இருந்ததால் அமைதியாக இருந்தாள். 
அவன் மெஸ்ஸெஜ் பார்த்ததும் தயக்கம் பறந்து பதிலுக்கு மெஸ்ஸெஜ் அனுப்பி வைத்தாள். அதைப் பார்த்து சந்தோஷப் பட்டவன், “ஏய் சிந்து, போன் உன் கிட்டயா இருக்கு?”, என்று கேட்டான்.
“ஆமா, நீங்க பேசுவீங்கன்னு அம்மா வச்சிட்டு போயிட்டாங்க”
“ஹேய் சான்ஸே இல்லை. எங்க மாமியார் சூப்பர் டைப்”, என்று சொல்லி சந்தோஷப் பட்டான்.
“சரி சரி வீடியோ கால்ல வா சிந்து. உன்னை பாக்கணும் போல இருக்கு. நைட் எல்லாம் தூக்கமே வரலை தெரியுமா?”
“என்னது வீடியோ வா? அதெல்லாம் முடியாது”
:வீட்ல யாரும் இல்லை தான? என்னை பிடிக்கும்னா வா”
:அதெல்லாம் வேண்டாமே பிளீஸ், நான் நைட்டில இருக்கேன்”
“அதனால் என்ன? நீ என் பொண்டாட்டி தான?”
அந்த வார்த்தையில் அடி வயிற்றில் ஒரு மின்னல் தெறிக்க “இவன் இப்படி எல்லாம் பேசாம இருந்தா நல்லா இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு “சரி பண்ணுங்க”, என்றாள்.
அவன் போன் செய்ததும் இவள் எடுத்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இதுவரை இருவரும் நேரில் பார்த்ததில்லை. 
அவள் நினைத்தது போல அவனுக்கு வயது கூட தான் தெரிந்தது. தாடி அவன் முகத்தை மறைத்திருந்தது. “சின்ன வயசு போட்டோவைத் தான் கொடுத்துருக்கான்”, என்ற உண்மை புரிந்தது.
“நான் இன்னைக்கு தான் உங்களை நேர்ல பாத்துருக்கேன்”, என்றாள் சிந்து.
“நானும் உன்னை போட்டோல தான் பாத்தேன். அன்னைக்கு நேர்ல எல்லார் முன்னாடி பாக்க கூச்சமா இருந்தது. நீ அனுப்புன போட்டோல சூப்பரா இருந்த? நான் எப்படி இருக்கேன்?”
“சின்ன வயசு போட்டோவைக் கொடுத்துட்டு கேக்குறதைப் பாரு?”, என்று எண்ணிக் கொண்டு “நல்லா இருக்கீங்க? ஆனா போட்டோல 
இருக்குற மாதிரி இல்லை. அது பழைய போட்டோவா?”, என்று கேட்டே விட்டாள்.
ஆமா மூணு வருஷம் முன்னாடி எடுத்தது. நல்லா இருந்துச்சா?”
“அது எடுத்து மூணு வருஷம் தான் ஆகுதா?”, என்று எண்ணிக் கொண்டு “போட்டோ நல்லா இருந்தது. ஆனா போட்டோல தாடி மீசை இல்லை. நேர்ல தாடி முகத்தையே மறைச்சு இருக்கு”
“நான் எப்பவுமே தாடி மீசை வச்சிருக்க மாட்டேன். இப்ப பங்குனி உத்திரம் முடிஞ்சதும் எல்லாம் எடுத்துருவேன்”
“ஐயையோ மீசை இல்லாம நல்லா இருக்குமா?”
“எனக்கு நல்லா தான் இருக்கும். எனக்கு மீசை வச்சு பழக்கம் இல்லை. எடுத்த அப்புறம் நீயே பாரேன்”
“சரி, ஆனா ஆம்பளை ஆளுக்கு மீசை இருந்தா நல்லா இருக்குமே. வச்சிக்க வேண்டியது தான?”
“பிடிக்காது”
“எனக்காக வைக்க மாட்டீங்களா?”
“எனக்கு வைக்க பிடிக்காது”, என்று சொல்லி வேறு பேச ஆரம்பித்து விட்டான்.
“இதை கூட தனக்காக செய்ய மாட்டானா?”, என்ற கவலை பிறந்தது சிந்துவுக்கு.
“சரி சிந்து எதுக்கு கழுத்துல காதுல எதுவுமே போடாம இருக்க? பொட்டும் வைக்கல? முதல்ல எல்லாம் எடுத்து போடு”
“எனக்கு வீட்ல இருக்குறப்ப போட தோணாது. அப்புறம் போட்டுக்குறேன்”, என்று அவனிடம் பாதி உண்மையைச் சொன்னாலும் இப்போது கம்மல் கூட பேங்கில் அடவில் இருக்கிறது என்று எப்படி அவனிடம் சொல்ல முடியும் என்று எண்ணினாள்.
“அதெல்லாம் கிடையாது. நீ எடுத்து போடு”, என்று பிடிவாதமாக இருந்தான் சித்தார்த். 
“இவன் இதுக்கெல்லாம் வற்புறுத்துவானா? என்னோட ஆசைக்கு மதிப்பு இவன் கிட்ட இருக்காதா?”, என்று எண்ணிக் கொண்டு பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தவள் கம்மாலை எடுத்து காதில் போட்டாள், “கடவுளே கவரிங் கம்மல்ன்னு கண்டு பிடிக்க கூடாது”, என்ற வேண்டுதலோடு. 
“இப்ப அழகா இருக்கு சிந்து. இப்ப நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லவா?”
“சொல்லுங்க”
“ஐ லவ் யு”
“அட பாவி, என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டான்”,என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள். அவன் மீதிருந்த குழப்பம் போய் ஒரு சிலிர்ப்பு வந்தது.
“என்ன அமைதியாகிட்ட?”
“இத சொல்வீங்கன்னு நினைக்கல. திடீர்னு சொன்ன உடனே ஷாக் ஆகிட்டு”
“தோணுச்சு சொன்னேன். சரி நீ சொல்லு”
“நான் நேர்ல சொல்றேன்”
“என்னை பிடிக்கலயா?”
“ஐயோ பிடிச்சிருக்கு”
“அப்ப சொல்றதுக்கு என்ன?”
“நான் நேர்ல சொல்றேனே பிளீஸ். நீங்க ரொம்ப வேகமா இருக்கீங்க. என்னால டக்குன்னு எல்லாம் சொல்ல முடியாது”
“சரி சாப்பிட்டியா? என்ன சாப்பாடு?”
“சாம்பார், ஆம்ப்ளேட்”
“இன்னைக்கு செவ்வாய் கிழமை முட்டை சாப்பிடுவியா?”
“எங்க வீட்ல அதெல்லாம் பாக்க மாட்டோம். எப்ப என்ன தோணுதோ அதான்”
“எங்க வீட்ல வெள்ளி செவ்வாய் நான்வெஜ் சமைக்க மாட்டோம்”
“ஓ, சரி நானும் அங்க வந்து ரெண்டு நாள் சாப்பிடாம இருக்கேன் போதுமா?”, என்று உடனே விட்டுக் கொடுத்தாள். அதன் பின் அவர்கள் குடும்பம் பற்றி பேசப் பட்டது.
“உங்க அக்கா எல்லாம் எங்க இருக்காங்க? உங்க குடும்பம் பத்தி தெளிவா தெரியாது”, என்றாள் சிந்து.
“முதல்ல அண்ணன்,அவன் பேர் பாஸ்கர். அவனுக்கு அப்புறம் தான் அக்கா. பிரேமாக்கு தான் முதல்ல கல்யாணம் நடந்தது. எங்க அத்தான் சிவில் இஞ்சீனியர். மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவளுக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துட்டு. அதுக்கப்புறமும் ரொம்ப கஷ்ட பட்டா. அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வருஷம் தான் அண்ணனுக்கு கல்யாணம் ஆச்சு. அவன் பொண்டாட்டி பேரு மாரி. அவளுக்கு உள்ளூர் தான்”
“என்ன அண்ணியை பேர் சொல்லி கூப்பிடுறீங்க?”
“அவளுக்கு உன்னோட ஒரு வயசு தான் கூட. அப்படி கூப்பிட்டே பழகிருச்சு. அவளுக்கு செகண்ட் இயர் படிக்கும் போதே கல்யாணம் ஆகிருச்சு. அப்புறம் பிரேமாவுக்கு டிவின்ஸ் பிறந்தாங்க. ரெண்டு பேரையும் வளக்குறதுக்கு ரொம்ப கஷ்ட பட்டா. மாரிக்கும் குழந்தை தங்கலை. எங்க அண்ணனும் பாரீன்ல கொஞ்ச நாள் இங்க கொஞ்ச நாள்னு இருந்தான். அப்புறம் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் கழிச்சு தான் ஹாஷினி பிறந்தா” 
“உங்க அம்மா, அப்பா வேலை பாத்தாங்கன்னு போட்டுருந்தது. ரிட்டயர்ட் ஆகிட்டாங்களா?”
“அப்பா சிமெண்ட் கம்பெனில தான் வேலை பாத்தார். அம்மா சத்துணவு டீச்சர். அம்மா போன வருஷம் ரிட்டயர்ட் ஆனங்க. அப்பா இந்த வருஷம் பிப்ரவரில தான். அப்பாவ விட அம்மாக்கு ஒரு வயசு கூட. ரெண்டு பேரும் சொந்த காரங்க. அதாவது எங்க அப்பா எங்க அம்மாவுக்கு மாமா முறை. எங்க அப்பா ஆச்சிக்கு எங்க அம்மா ஆச்சி அக்கா மக”
“புரியலை. எனக்கு உறவு முறை ரொம்ப தெரியாது”
“பரவால்ல விடு. முறை மாமன்னு வச்சிக்கோயேன். ரெண்டு தாத்தாவும் இப்ப இல்லை. ரெண்டு பாட்டியும் இருக்காங்க”
“உங்க கூடவா?”
“இல்லை எங்க அப்பாவோட அம்மா எங்க ஊர்ல தான் தனியா இருக்காங்க. அவங்களே சமைச்சு சாப்பிடுவாங்க. அம்மா ஆச்சி அம்மா ஊர்ல அதாவது எங்க ஊருக்கு பக்கத்து ஊரு தான். அங்க எங்க அம்மாவோட அக்கா கூட இருக்காங்க. பெரியம்மாவுக்கு பிள்ளைங்க இல்லை. ஒரு பையன் இருந்தான், அவன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான். பெரியப்பாவும் இல்லை. அவங்களுக்கு பென்ஷன் வருது. ரெண்டு பேரும் தான் அங்க இருக்காங்க”
“அப்படியா?”
“ஆமா, நாங்க நாப்பத்திரெண்டு வருஷமா குவார்ட்ரஸ்ல தான் இருந்தோம், போன மாசம் தான் இங்க ஊருக்கு வந்துருக்கோம். வீடு இப்ப தான் கட்டுனோம். இன்னும் எல்லா வேலையும் முடியல. கல்யாணத்துக்குள்ள முடிஞ்சிரும்னு நினைக்கிறேன். அம்மாவுக்கு சளி பிரச்சனை இருக்கு. இடைல சாகுற மாதிரி ஆகிட்டாங்க. இப்பவும் அப்ப அப்ப ஏதாவது ஆகிரும்”
“ஐயையோ, ரொம்ப உடம்பு சரி இல்லையா?”
“ஹ்ம், அவங்களுக்கு ரொம்ப பிரச்சனை இருக்கு. எப்பவும் வெண்ணி தான் குடிப்பாங்க. எனக்கு ஒன்பது வயசுலே கர்ப்ப பையை எடுத்துட்டாங்க”
“அப்ப வீட்ல யார் சமையல்?”
“மாரி செய்வா, இல்லைன்னா எங்க அப்பா”
“சரி பொண்ணு பாக்க வரும் போது உங்க அண்ணி எதுக்கு வரலை?”
“அவ அவளோட அம்மா வீட்ல இருந்தா. அதான்”
“ஓ சரி”
“எங்க அக்கா உன்கிட்ட பேசணும்னு சொன்னா. அவ கிட்ட பேசுறியா? நான் நம்பர் தரேன்”
“என் நம்பரை அவங்க கிட்ட கொடுத்து பேச சொல்லுங்களேன். நானா எப்படி பேசுறது?”
“அதெல்லாம் பரவால்ல சும்மா பேசு”
“அதான் அவங்கள பண்ண சொல்லுங்கன்னு சொல்றேன்ல?”
“அதெல்லாம் முடியாது. நான் இப்ப நம்பர் அனுப்புறேன். நீ எங்க அக்கா கிட்ட பேசிட்டு அப்புறம் எனக்கு பண்ணு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
“தெரியாதவங்க கிட்ட எப்படி பேசுறது”, என்று எண்ணி சிந்துவுக்கு எரிச்சல் வந்தது. நம்பர் அனுப்பியதும் வேறு வழி இல்லாமல் பிரேமாவுக்கு அழைத்தவள் “நான் சிந்து பேசுறேன்”, என்று ஆரம்பித்தாள்.
“சிந்து எப்படி இருக்க? சித்து சொன்னான், நீ கால் பண்ணுவேன்னு. உன் போட்டோ பாத்தேன். ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்”, என்று பிரேமா பேசிக் கொண்டே சென்றாள்.
“நான் போன் பண்ணுவேன்னு அவங்க அக்கா கிட்ட சொல்ற சித்தார்த் நேரா போன் பண்ணியே கொடுத்துருக்கலாமே என்ற எரிச்சல் அவளை அறியாமலே அவளுக்குள் வந்திருந்தது.
பிரேமா சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் போதே சித்தார்த் லைனில் வந்தான்.
“உங்க தம்பி கால் பண்ணுறாங்க அண்ணி”, என்றாள் சிந்து.
“வெயிட்டிங்க்ல வந்தா டென்ஷன் ஆக போறான். நான் நைட் உனக்கு பேசுறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
“எங்க அக்கா என்ன சொன்னா?”, என்று கேட்டு இருவரும் பேசியதை அவளிடம் விசாரித்த பின்னர் தான் அந்த விஷயத்தை விட்டான்.
“உன் தம்பி போன் பண்ணுவானா?”
“ஹ்ம் பண்ணுவான்”
“மாப்பிள்ளையை எனக்கும் போன் பண்ண சொல்லு. எனக்கு ஒரே ஒரு மாப்பிள்ளை தான்”, என்று சிரித்தான் சித்தார்த்.
“இவங்க அக்காக்கு மட்டும் நான் போன் பண்ணி பேசனுமாம். என் தம்பி மட்டும் இவங்களுக்கு போன் பண்ணனுமா?”. என்று எண்ணிக் கொண்டு “நான் நம்பர் அனுப்பி வைக்கிறேன். நீங்களே பேசுங்க”, என்றாள் சிந்து.
 
“ஏன் அவனா என்கிட்ட பேச மாட்டானோ?”
“உங்க அக்காவுக்கு நான் தான பண்ணுனேன். அதே மாதிரி பண்ணுங்க”
“சரி நைட் பேசுறேன்”, என்று அவன் சொன்னதும் “இவனா என் தம்பிக்கு போன் பண்ணுறானான்னு பாப்போம்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள் சிந்து.
“சரி உனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை இருக்கா சிந்து?”
“கிடைச்சா போவேன்”
“சம்பளம் என்கிட்ட கொடுத்துருவ தான?”

Advertisement