Advertisement

அத்தியாயம் 2
உன்னிலே பிறந்து
உன்னிலே அழியும்
காதல் வரம் ஒன்று
கிடைக்குமா அன்பே?!!!
பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவளைக் காண ஆசையாக காத்திருந்தான்.
இப்போது யாரோ இறந்த செய்தி கேட்டு “இன்னைக்கு தான் அவங்க சாகணுமா?”, என்று எண்ணிக் கொண்டான் சித்தார்த்.
வியாழன் இரவு சிந்து வீட்டுக்கு போன் செய்த சித்தார்த்தின் பெரியப்பா “வர சண்டே அன்னைக்கு பாக்க வரோம். மாப்பிள்ளை அன்னைக்கும் வேலைக்கு போகணுமாம். அதனால காலைல ஒரு பத்து மணிக்கு வரோம்”, என்று சொன்னார்.
அந்த சண்டே வந்தே விட்டது. சிந்துவின் தந்தை சுந்தரம் அன்று லீவ் போட்டு விட்டு மிச்சர், ஸ்வீட், பால் பாக்கெட் எல்லாம் வாங்கி வந்தார். முந்தைய நாள் இரவே பூ வாங்கி கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டாள் ராணி. ஒன்பது மணிக்கே பாண்டியும் அமுதாவும் வந்துவிட்டார்கள்.
வீட்டில் கிளம்பி கொண்டிருந்த சித்தார்த்தோ “ஏமா இந்த சம்பந்தம் அமையலைன்னா நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு சென்னை பக்கம் போயிருவேன்”, என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
“அப்படி எல்லாம் சொல்லாதப்பா. எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தான் தெரியுது. நல்லதே நடப்போம். உன் அண்ணன் அக்கா மாதிரி உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்னா எங்க கடமை முடிஞ்சிரும்”, என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் தாயம்மா.
இருவரின் வீட்டுக்கும் அரை மணி நேரம் தான் பயண நேரம்.
போன முறை போல தயாராக இருந்தாள் சிந்து. “மாப்பிள்ளை நம்ம கிட்ட தனியா பேசுவாரா? பேசினா என்ன பேசுவார்? படத்துல நடக்குற மாதிரி எல்லாம் நடக்குமா? இல்ல போன தடவை மாதிரி அவன் வராம பல்ப் கொடுத்துருவானா?”, என்று ஏகப்பட்ட கனவுகளை சுமந்து கொண்டு காத்திருந்தாள்.
அனைவரும் வந்து விட்டார்கள். அன்று வந்தவர்களும் கூட மாப்பிள்ளையாக
சித்தார்த்தும் வந்திருந்தான். 
யார் யார் வந்திருக்கிறாள் என்று சிந்துவுக்கு தெரியாததால் தவிப்புடன் அறையில் அமர்ந்திருந்தாள். 
உள்ளே வந்த அமுதா “மாப்பிள்ளை தாடியோட இருக்கார். அடுத்த வாரம் பங்குனி உத்தரம் வருதுல்ல? அதுக்கு விரதம் இருக்காராம். அதனால பயந்துராத”, என்று சொல்லி அழைத்து போனாள்.
கையில் ஒரு தட்டை கொடுத்தாள் அமுதா. “மாப்பிள்ளை விரதம். அவர் குடிக்க மாட்டார். நீ இதை அவங்க பெரியம்மா கிட்ட கொடு”, என்று சொல்லி தான் அமுதா கொடுத்தாள்.
ஆனால் பதட்டத்தில் அமுதா சொன்ன எந்த விஷயமும் சிந்து காதில் ஏற வில்லை. கையில் ஒரு டம்ளர் இருந்த உடனே அது மாப்பிள்ளைக்கு தான் போல என்று எண்ணி மாப்பிள்ளை முன்பு போய் நின்றாள் சிந்து.
“அவன் குடிக்க மாட்டான்…., அவங்க பெரியம்மா கிட்ட கொடுக்க சொன்னேன்…., அவன் விரதம்…..,”, என்று ஆள் ஆளுக்கு பேசினார்கள். 
“ஐயோ சோதப்பிட்டோமே”, என்று எண்ணிக் கொண்டு அதை கொடுத்து விட்டு அந்த பக்கம் ராணி அருகில் போய் நின்று கொண்டாள்.
அதன் பின் அனைவரும் கதை பேசிக் கொண்டு தான் இருந்தார்கள். ஹாஷினியை ராணி கையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
சிந்துவுக்கு தான் முள் மேல் நிற்பது போல இருந்தது. அவளை அங்கே நிறுத்தி விட்டு ஒருவர் கூட அவளைப் பற்றி பேசவில்லை. அந்த டிரைன் எப்போ, டிக்கட் எவ்வளவு என்று வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் மாப்பிள்ளையும் அடக்கம்.
“இவன் என்ன கூச்சமே இல்லாம இப்படி கதை பேசுறான்”, என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் இப்போது வரை அவள் மாப்பிள்ளையை பார்க்க வில்லை. 
ஆனால் ஓரக் கண் வழியாக பார்த்ததில் போட்டோவில் இருந்ததை விட வேறு மாதிரி இருந்தான். முழுதாக அவன் முகம் அவளுக்கு தெரிய வில்லை. ஆனால் கொஞ்சம் வயது தெரிந்தது.
“சின்ன வயசு போட்டோவைக் கொடுத்து ஏமாத்திட்டானோ? ஒருவேளை தாடி வச்சிருக்குறதுனால இப்படி இருக்கா?”, என்று எண்ணி குழம்பினாள் சிந்து. அவள் வந்து அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் கிளம்புவதற்காக எழுந்து கொண்டார்கள். 
“ஒண்ணுமே சொல்லாம போறாங்களே”, என்று பரிதவிப்பாக இருந்தது சிந்துவுக்கு. அவன் தனியா பேசுவான் என்று எதிர்பார்த்தாள். அவனோ முதல் ஆளாய் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தான்.
மொத்த கனவும் தவிடு பொடி ஆனது போல உணர்ந்தாள் சிந்து. அனைவர் முன்னிலையிலும் ஆழ கூட அவளால் முடியவில்லை.
சித்தார்த்தின் பெரியம்மா “நீங்களும் ஜாதகம் பாருங்க, நாங்களும் பாக்குறோம்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
அவ்வளவு தான் அனைவரும் கிளம்பியே விட்டார்கள். அறைக்குள் சென்று குமுறிக் கொண்டிருந்த சிந்துவை அழைத்தாள் அமுதா.
“என்ன பெரியம்மா?”
“உனக்கு பையனை பிடிச்சிருக்கா டி?”
“என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க?”
“பின்ன உன்கிட்ட கேக்காம? பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம். அவங்க உன்னை பிடிச்சிருக்குற மாதிரி தான் பேசுறாங்க. ஆனா நகை தான் எவ்வளவு கேப்பாங்கன்னு தெரியலை”
“நான் முகத்தையே பாக்கல பெரியம்மா”
“என்னது பாக்கலையா?”
“அதெல்லாம் அவ நம்ம சொன்னா கேட்டுக்குவா அக்கா. பையன் நல்ல பையனா தான் தெரியுது. இந்த வயசுல யாரு இவ்வளவு பக்தியா இருக்கா? ஆனா நகை பத்து பவுன் தான் போட முடியும். அதுவும் கடன் வாங்கி தான் திருப்ப முடியும்”, என்றாள் ராணி.
“அது எப்படி பத்தும்? பையனுக்கு வேற போடணும். என்ன செய்ய போறீங்கன்னு எனக்கே கவலையா தான் இருக்கு”, என்றாள் அமுதா.
“பாத்தீங்கல்ல? இப்ப தான் லோனை அடைச்சோம். அதான் இப்படி இடிக்குது”, என்று ராணி சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கிருந்து உள்ளே வந்த சிந்துவுக்கு மனம் முழுவதும் வேதனையாக இருந்தது.
ஒரு பக்கம் கல்யாணம் நடக்குமா என்ற கவலை, இன்னொரு பக்கம் பண பிரச்சனை எல்லாம் சேர்ந்து சோர்ந்து போனாள். ஆனால் அன்று இரவே  “ஜாதகம் சரியா இருக்கு. நீங்களும் பாத்துட்டா மேற்கொண்டு பேசலாம்”, என்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து தகவல் வந்து விட்டது.
“பாரு அவங்க எவ்வளவு வேகமா இருக்காங்க. எங்க வீட்ல பாக்காம இருக்காங்களே?”, என்று கவலையாக இருந்தது சிந்துவுக்கு.
அடுத்த நாள் ராணியும் அமுதாவும் ஜாதகம் பார்க்க சென்றார்கள். போய் விட்டு வரும் வரை தவிப்புடன் இருந்தாள் சிந்து. ராணியும் வந்த உடனே எதையும் சொல்லி விட வில்லை. “எப்ப தான் சொல்லுவாங்களோ?”, என்று காத்திருந்தாள் சிந்து.
“ரெண்டு பேருக்கும் அப்படி பொருந்திருக்காம். நல்ல பொருத்தம்னு சொல்லிட்டார். எங்க எல்லாருக்கும் சம்மதம் தான். நீ என்ன சொல்ற? உங்க பெரியம்மாவும் மாப்பிள்ளை வீட்டை பத்தி விசாரிச்சாங்க. அந்த பையன் வீட்டு பக்கத்துல ஒரு பிள்ளை  இருக்காம். பேரு ஷியாமளாவாம். உனக்கும் அவளை தெரியுமாமே”, என்று கேட்டாள் ராணி.
“ஆமா மா பெரியம்மா வீட்ல இருந்து ஸ்கூல் படிக்கும் போது அவ கூட தான் ஸ்கூல்க்கு போவேன். ஆமா அவளுக்கு அந்த ஊர் தான்”
‌”ம்‌ம், அவ தான் சொன்னாளாம். மாப்பிள்ளை எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன்னு. அதை விட மாமியார் தங்கமாம். அப்படி பட்ட மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணுமாம். எப்படினாலும் உனக்கு கல்யாணம் முடிஞ்சா தான் எங்களுக்கு நிம்மதி. நீ என்ன சொல்ற? உன்னை கட்டாய படுத்தலை. நிதானமா யோசிச்சு சொல்லு”
“சரின்னு சொல்லிருங்க. ஆனா பணத்துக்கு என்ன செய்ய போறீங்க?”
“ஏதாவது செய்யணும். எப்படியும் அஞ்சாறு லட்சமாவது ஆகும். பத்து பவுன் அடவுல இருக்கு அதை திருப்ப ரெண்டரை லட்சம் மேல வேணும். அப்புறம் புதுசா நகை வாங்கணும். ஒரு ஆரம் கண்டிப்பா வாங்கணும். அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னு தெரியலை. பாப்போம்”, என்று சொல்லி விட்டு ராணி சென்றதும் பணத்தை நினைத்து வருத்தம் இருந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பீரிட்டது.
“இந்த அம்மா ஜாதகம் பொருந்திருச்சுன்னு எப்ப அவங்க வீட்ல சொல்வாங்க?”, என்று காத்திருந்தாள்.
அங்கே சித்தார்த்தும் அவள் வீட்டில் இருந்து வரும் தகவலுக்காக தான் காத்திருந்தான். “நேத்தே ஜாதகம் பார்த்து சரி சொல்லியாச்சு. ஆனா அவங்க வீட்ல எந்த ரெஸ்பான்சும் இல்லையே. என்னை பிடிக்கலைன்னு எல்லாரும் முடிவு பன்னிருப்பாங்களோ?”, என்று எண்ணி மூன்று முறை “அவங்க வீட்ல இருந்து போன் பண்ணுனாங்களா மா?”, என்று வெட்கத்தை விட்டு தாயம்மாவிடம் கேட்டு  விட்டான்.
“தெரியலை டா, உங்க பெரியப்பா கிட்ட தான பேசுறாங்க. அவர் கிட்ட சொல்லிட்டாங்களான்னு தெரியலை? அவர் தான் சொல்லாம இருக்காரா? இல்லைன்னா அவங்க போன் பண்ணலையானு தெரியலையே”, என்ற தாயம்மா “சித்து அப்பா, பேசாம நீங்களே பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு கேளுங்களேன். மாமா ஒரு வேளை நம்ம கிட்ட சொல்ல மறந்துருக்கலாம்”, என்று சொன்னாள்.
அதுவும் சரி என்று படவே சுந்தரம் போனை எடுத்து ராணி போனுக்கு அழைத்தார்.
ராணி யாரோ என்று எண்ணி எடுத்தாள். “அன்னைக்கு பொண்ணு பாத்துட்டு போனோம்ல மா. நான் சித்தார்த்தோட அப்பா பேசுறேன்”, என்றார் சுந்தரம்.
பதட்டதில் இருந்த ராணி “சொல்லுங்க”, என்றாள்.
“இல்லை ஜாதகம் பாத்தீங்களான்னு கேக்க தான் 
போன் பண்ணுனேன்”
“ஜாதகம் பாத்தோம். நல்ல தான் பொருந்திருக்கு. நான் உங்க அண்ணனுக்கு போன் பண்ணுனேன். அவர் எடுக்கல”
“அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம் மா. அப்புறம் மேற்கொண்டு பேசலாம். அவர் போனை பாத்துருக்க மாட்டார். பாத்துட்டு கூப்பிடுவார். அப்புறம் இவ்வளவு போடுங்க அவ்வளவு போடுங்கன்னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம். உங்க விருப்பம்”
“ரொம்ப சந்தோஷம், நான் எங்க வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுறேன். இந்த நம்பர்க்கு கூப்பிடவா? இல்லை உங்க அண்ணனுக்கு கூப்பிடவா?”
“நீங்க இந்த நம்பர்க்கு கூப்பிட்டே சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.
“ஜாதகம் நல்ல பொருந்திருக்காம்,. அவங்க சரின்னு சொல்லிட்டாங்க. என்னைக்கு அவங்க வீடு பாக்க வாராங்களோ, அன்னைக்கே தேதி குறிச்சிறலாம்”, என்று சுந்தரம் சொன்னதும் தாயம்மா புன்னகையுடன் “சரி”, என்றாள்.
சித்துவோ சந்தோசத்துடன் அங்கிருந்து சென்றான். உள்ளத்தில் இருந்த படபடப்பு எல்லாம் மறைய சந்தோசத்துடன் உரிமையானவளாக எண்ணி அவள் புகைப்படத்தைப் பார்த்தான். 
உருண்டையான முகம், அழகான கண்கள். லேசாக சிரித்திருந்தாள். உதட்டுக்கு மேலே உள்ள சிறு மச்சம் அவளுக்கு தனி அழகை கொடுத்தது. “என்னவள் நீ தானா? உனக்காக தான் இத்தனை நாட்கள் என் திருமணம் தள்ளிப் போனதா?”, என்று பூரித்து போனான்.
சிந்துவிடம் பேச ஆசை இருந்தாலும் அது உடனே முடியாததால் அமைதி காத்தான்.
அங்கே சிந்துவின் நிலையோ தவிப்புடன் இருந்தது. இன்னும் ராணி அவளிடம் அவர்கள் வீட்டில் பேசியதை சொல்லவில்லை. இரவு படுக்கும் போது தான் “அந்த பையன் வீட்ல இருந்து போன் பண்ணுனாங்க. உங்க அப்பா கிட்டயும் பேசுனேன். அவரும் சரின்னு சொன்னதும் மாப்பிள்ளை வீட்ல சரின்னு சொல்லிட்டேன். நாளைக்கு எப்ப வீடு பாக்க வரன்னு கேட்டு போன் பண்ணி பேசணும்”, என்று சொன்னதும் றெக்கை இல்லாமல் வானில் பறந்தாள்.
அவன் புகைபடத்தை இத்தனை நாட்கள் ஒரு இருபது முறை பார்த்தால் என்றாள் அடுத்த அரை மணி நேரத்தில் அதை பார்த்துக் கொண்டே இருந்த நிமிடங்கள் தான் அதிகம். 
“எனக்கு கல்யாணம் கல்யாணம்”, என்று மனது கும்மாளமிட்டது. அன்று படுக்க போவதற்கு முன்பே “வெள்ளிக்கிழமை வீட்டை பாக்க வரோம். அன்னைக்கே நாள் குறிச்சிறலாம்”, என்று சொல்லி விட்டாள் ராணி.
காலையில் வேலைக்கு கிளம்பிய சித்தார்த்திடம் “வெள்ளிக்கிழமை வீடு பாக்க வாராங்கலாம் டா. அன்னைக்கு தான் உன் அண்ணனும் பாரீன்ல இருந்து வாரான். நீ அன்னைக்கு லீவ் போடுறியா?”, என்று கேட்டார் சுந்தரம்.
“நான் லீவ் போடலைப்பா. லீவ் தரமாட்டாங்க. நீங்க பாத்துக்கோங்க”
“சரி டா, அவங்க நம்பர் இருக்குல்ல? அந்த பொண்ணு கிட்ட பேசணும்னா பேசு”
‌”ம்‌ம் பாக்குறேன். இப்ப கிளம்புறேன். போயிட்டு வரேன் மா”, என்று சொல்லி விட்டு கிளம்பிய சித்து “எப்போது டா கம்பெனிக்கு போய் அவளிடம் பேசுவோம்”, என்று தவம் இருந்தான்.
ஒரு பத்து மணி போல் தயங்கி தயங்கி “ஆர் யு கம்ப்லீடெட் எம்.ஈ?”, என்று கேள்வி கேட்டு வாட்சப்பில் அனுப்பி வைத்தான். அடுத்த நொடியே அந்த பக்கம் பார்த்து விட்டது தெரிந்தது.
பதில் வரும் என்று தவம் இருந்தான். அங்கிருந்து எந்த பதிலும் வர வில்லை. உள்ளம் பந்தையக் குதிரை போல தட தடத்தது.
அது மட்டுமல்லாமல் அந்த பக்கம் அடிக்கடி வாட்சப்க்கு வந்து வந்து போவது எல்லாம் தெரிந்தது. “வாராங்க பாக்குறாங்க. பதில் இல்லையே”, என்று எண்ணிக் கவலையாக இருந்தது.
இங்கு வேலைக்கு வந்த ராணி கையில் தான் போன் இருந்தது. ராணிக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியும் எழுத தான் தெரியாது. அதனால் பதில் அனுப்பாமல் இருந்தாள். மாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்ததும் “சிந்து அந்த பையன் மெஸ்ஸேஜ் அனுப்பிருக்காங்க. என்னன்னு பாரு”, என்று அவள் கையில் கொடுத்தாள்.
உள்ளம் பட படக்க அதை எடுத்து பார்த்தாள். “எம்.ஈ படிச்சிருக்கீங்களான்னு கேக்காங்க மா”, என்றாள் சிந்து. மனதுக்குள் “பயோ டேட்டால பாத்தும் கேக்குற கேள்வியைப் பாரு”, என்று எண்ணிக் கொண்டாள்.
“சரி, பதில் அனுப்பி விடு”, என்று ராணி சொன்னதும் “யெஸ்”, என்று பதில் அனுப்பி வைத்தாள் சிந்து.
பதில் வந்ததும் “எதுக்கு ரிப்ளை பண்ண இவ்வளவு நேரம்?”, என்று கேட்டான் சித்து.
“போன் அம்மா கிட்ட இருந்தது”
“உனக்கு போன் இல்லையா?”
“இல்லை, தோணலை. நானும் வாங்கல”
“நான் வாங்கி தரவா?”
“ஐயோ வேண்டாம்”
“சரி சமைக்க எல்லாம் செய்வியா?”
“ம்‌ம் செய்வேனே”
“வீட்டு வேலை எல்லாம் செய்வியா?”
“இவன் என்ன வேலைக்காரிக்கு ஆள் எடுக்குறானா?”, என்று கோபம் வந்தாலும் “எல்லா வேலையும் செய்வேன். நான்வெஜ் செய்ய தெரியுமான்னு தெரியலை. இது வரை செஞ்சதில்லை”, என்று அனுப்பினாள்.
“நான் போன் பண்ணவா? பேச முடியுமா?”
“வேண்டாம், அம்மா ஏதாவது நினைப்பாங்க”, என்று அவள் அனுப்பும் போதே “என்ன சொல்றாங்க?”, என்று கேட்ட படி வந்தாள் ராணி. 
“வேலை தெரியுமா, சமைக்க தெரியுமானு கேட்டாங்க மா. போன் பண்ணட்டான்னு கேட்டாங்க”
“சரி பேசு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“என்கூட பேசுறதுக்கு என்ன பயம்? இனி எனக்கு நீ, உனக்கு நான். என்னை பிடிச்சிருக்கு தான?”, என்று கேட்டான் சித்தார்த்.
‌”இவன் என்ன இப்படி பொசுக்குன்னு கேள்வி கேக்குறான்”, என்று எண்ணிக் கொண்டு ”ம்‌ம் பிடிச்சிருக்கு. சரி போன் பண்ணுங்க”, என்றாள்.
அடுத்த நொடி அழைப்பு வந்ததும் பயத்துடன் காதில் வைத்து “ஹேலோ”, என்றாள்.
அவனோ எடுத்த உடனே “என்னை பிடிச்சிருக்கா?”, என்று தான் கேட்டான்.
இருவருக்குமே அந்த நிமிடம் ஸ்வீட் நத்திங்க்ஸ் என்பார்களே. அது போல தான். அடுத்த நொடி என்ன பேசினார்கள் என்று கேட்டால்‌ இருவருக்கும் சொல்ல தெரியாது.
அவன் கேட்க கேட்க எதை எதையோ பதில் சொல்லி கொண்டிருந்தாள்.
“சரி நான் போன் வைக்கிறேன். வொர்க் முடிஞ்சிருச்சு. ஊருல டவர் கிடைக்காது. வீட்ல போய் மெஸ்ஸேஜ் பண்ணுறேன். உங்க அம்மா பேசுனதுக்கு எதுவும் சொல்லலை தான?”,என்று கேட்டான் சித்து.
“அவங்க ஒண்ணும் சொல்லலை. சரி பாத்து போங்க”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
அன்று இரவு பத்து பதினொரு மணி வரை அங்கே இங்கே என்று மெஸ்சேஜ் பறந்தது. 
இத்தனை நாட்கள் வீணாக போன நூறு மேஸ்ஸேஜும் இன்று காலி ஆனது. டவருக்காக போனை மேல தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிந்தான் சித்தார்த்.
இனிய கனவுகளில் அவனுடன் சஞ்சரித்தாள் சிந்து. வாழ்க்கை இருவருக்கும் அழகானதாக இருந்தது.
காலதாமதமான திருமணம் இவர்களுடையது. ஆணின் திருமண வயதை இருபத்தி ஒன்று என்று அரசாங்கம் வைத்திருந்தாலும் சித்தார்த்துக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆவலுக்கோ இருபத்தி ஒன்பது.
இருவரும் இது வரை காதல் என்ற வலையில் விழவும் இல்லை. அதனால் இருவருக்குமே இது புது அனுபவமாக இருந்தது. வயது கூடினாலும் இருவருக்கும் வரும் வெட்கம் மட்டும் அப்படியே இருந்தது.
காதல் தொடரும்….

Advertisement