Advertisement

அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு வந்தார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம்.
சிந்துவின் அப்பா சுந்தரம் அன்று கொஞ்சம் குடித்திருந்தார். ஆனால் ஒரு நொடி கூட நிதானம் தவற வில்லை. சித்தார்த் அப்பாவை வரவேற்றார் சாப்பிட அழைத்தார். மரியாதையாக தான் நடத்தினார்.
ஆனால் கிளம்பும் போது “உன் மாமனார்க்கு ஒரே ஜாலி தான் போல டா. எந்நேரமும் புல்லா தான் இருக்கணுமா? கொஞ்சம் நிதானமா இருக்க சொல்லு”, என்று சிந்துவின் முன்னிலையிலே சொன்னார் சுந்தரம். அதைக் கேட்டு அமைதியாக இருந்த சித்தார்த்தைப் பார்த்து திகைத்து போனாள் சிந்து.
ஒரு வார்த்தை “என் மாமனார் ரொம்ப எல்லாம் குடிக்க மாட்டார் பா. இப்பவும் கொஞ்சம் தான் குடிச்சிருக்கார்”. என்று ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து வராதா என்று எதிர் பார்த்தாள்.
ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவரை பஸ் ஏற்ற நடந்து விட்டான். அதே இடத்தில் ஒரு சேரில் அதிர்வோடு அமர்ந்து விட்டாள். 
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர தயாராக இருந்தது. வீடு மற்றும் முற்றத்தைச் சுற்றிலும் ஆட்கள், இப்போது அழுவது ஆபத்து என்று உணர்ந்து கட்டு படுத்திக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
மகள் கவலையை தாயால் கண்டு பிடிக்காமல் இருக்க முடியுமா? “என்ன ஆச்சு தங்கம்? முகமே சரியில்லை”,என்று அங்கு வந்த ராணி கேட்கும் போதே அவளுடைய தந்தை சுந்தரமும் அவளின் தாய்மாமா செல்வமும் வந்து விட்டார்கள். 
மூவரையும் பார்த்ததும் கண்களில் சேர்ந்த கண்ணீர் தடுக்க முடியாமல் வடிந்தது. அப்பாவை பஸ் ஏற்றி விட்டு வந்த சித்தார்த் சிந்து அழுவதையும் அவளை சுற்றி மூவரும் துருவி துருவி விசாரிப்பதையும் பார்த்தவன் அங்கு செல்லாமல் தூரத்திலே நின்று கொண்டான். ஆனால் “இவ ஏதாவது அவங்க கிட்ட சொல்லி எனக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்துற கூடாதே”,என்று அவன் மனம் எண்ணியது. 
ஆனால் சிந்துவோ மனதில் இருப்பதை அழுது கொண்டே மூவரிடம் சொல்லி விட்டாள். “என் மாமனார் அப்பாவைப் பத்தி நக்கலா  சொல்லிட்டு போறார் மா. அவங்க வீட்ல ரொம்ப பண்ணுறாங்க. அப்படியே கடுப்பா இருக்கு”,என்று அவள் சொல்ல “இப்ப உங்களுக்கு சந்தோஷமா? நீங்க குடிச்சதுனால தான் அவர் அப்படி சொல்லிட்டு போயிருக்கார். எல்லாரும் இருக்கும் போது தான் குடிக்கணுமா?”,என்று சுந்தரத்தை வறுத்தெடுத்தாள் ராணி.
அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். செல்வமும் “விடு சிந்து எதுக்கும் கவலை படாத”, என்றான். 
“உனக்கு ரெண்டு தாய் மாமா இருக்கானுங்க தங்கம்”,. என்று ராணி சொன்னதும் புன்னகையுடன் சிரித்தாள் சிந்து. அடுத்து நிலைமை சகஜமாக சென்றது. 
சிரித்தாலும் சித்தார்த் மீதான கோபம் உள்ளே கனன்று கொண்டே இருந்தது சிந்துவுக்கு. “சரி மா நேரம் ஆச்சு, நாங்க கிளம்புறோம்”, என்று எழுந்து கொண்டாள் சிந்து.
“சாப்பிட்டு போங்க சிந்து”, என்று மூவருமே சொன்னார்கள். 
“சாப்பிடுற மன நிலை இல்லை. நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி எழுந்ததும் அங்கு சித்தார்த்தும் வந்தான். இருவரும் அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார்கள்.
எப்போது சிந்துவுக்கும் சித்தார்த்துக்கும் சண்டை வரும் போதும் சித்தார்த் தான் சிந்துவை சமாதான படுத்துவான். ஆனால் அவனிடம் பிடிக்காத ஒன்று செய்த தவறுக்கு சாரி மட்டும் கேட்கவே மாட்டான். அவளிடம் இறங்கி போவான். வேறு ஏதாவது பேசி அவள் மனதை மாற்றுவான். ஆனால் செய்தது தப்பென்று இது வரை அவன் ஒத்துக் கொண்டதே இல்லை.
“தப்பு செஞ்சா ஒத்துக்கொங்க என்று சிந்து சொன்னால் “சரி தப்பு தான், நீ வாயை மூடு”, என்று வாய் வார்த்தையாக சொல்வானே தவிர ஆத்மார்த்தமான மன்னிப்பு அவனிடம் இருக்காது. 
இப்போதும் அமைதியாக வந்த சிந்துவை “சிந்து”, என்று அழைத்தான்.
அவனிடம் பேச பிடிக்காமல் அவள் அமர்ந்திருப்பதே அவளின் கோபத்தை பறைசாற்றியது. 
“நைட் என்ன சாப்பாடு செல்லம்?”
….
“குளிரடிக்குதா சிந்து? ஹெல்மெட் போட்டுக்குரியா?”
….
“பேக் வச்சிருக்க கஷ்டமா இருக்கா? நான் வேணும்னா வச்சிக்கவா?”
“கொஞ்ச நேரம் அமைதியா வறீங்களா? உங்க கிட்ட பேசவே எனக்கு பிடிக்கலை. பேச வேண்டிய நேரத்துல பேசாம, இப்ப சீன் போட்டுகிட்டு”, என்று கோபத்துடன் சொன்னாள் சிந்து. 
“இப்ப என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சா? உங்க அப்பா பேசும் போது உங்க வாய் எதுக்கு சும்மா இருந்தது? எங்க மாமனார் ரொம்ப குடிக்க மாட்டார்னு சொல்ல வேண்டியது தான?”
:”நான் சொன்னேன்”
“பொய் சொன்னா நாக்கு அழுகிரும்”
“பஸ் ஏத்த போகும் போது சொன்னேன் டி”
“நம்பிட்டேன், என் அப்பாவை சொல்றதுக்கு உங்க அப்பாவுக்கு என்ன தகுதி இருக்கு? அந்த ஆள் எப்படி அப்படி சொல்லலாம்? உங்க அப்பாவும் முன்னாடி குடிச்சிருக்காரு தான? எங்க அப்பா என்ன குடிச்சுட்டு தெருவுலயா விழுந்து கிடந்தார்? உங்க அப்பாவை வாங்க சாப்பிடுங்கன்னு தாங்கிட்டு இருந்தார். கண்ட நாயி வருதுன்னு சும்மா இருந்துருக்கனும். எங்க அப்பாவுக்கு இது தேவை தான்”
“சிந்து வார்த்தையை ஒழுங்கா பேசு”
“உங்க அப்பா பேசுனது மட்டும் சரி. நான் பேசுனது தப்பா? அப்ப வாயை மூடிட்டு தான இருந்தீங்க? உங்க அப்பாவை சொன்ன உங்களுக்கு கோபம் வரும். எனக்கு மட்டும் வரக் கூடாதோ?”
“அவர் சாதாரணமா தான் சொன்னார் சிந்து”
“யாரு உங்க அப்பாவா? சாதாரணமாவா? நக்கல் அடிக்கும் போது உங்க அப்பா முகம் எப்படி போகும்னு தான் தெரியுமே? எனக்கு ஒரு டவுட் உங்க அப்பாவுக்கு எங்க குடும்பம்னா இளக்காரமா? பணம் இல்லை தான் அதுக்காக சுய மரியாதையுமா இருக்க கூடாது”
“அப்படி எல்லாம் எங்க வீட்ல நினைக்கல சிந்து”
“பொய் சொல்லாதீங்க. நீங்களும், உங்க அம்மா என்ன செஞ்சாலும் சரினு இருக்கீங்க? எங்க அம்மாவை மட்டும் குறை சொல்றீங்க? உங்க அப்பாவும் எங்க அம்மாவை கிண்டல் பண்ணுனாறு. அவர் பூசாரியா இருந்துட்டு உங்க அம்மாவை சர்ச் க்கு அனுப்புனாறு. ஆனா எங்க அம்மா சர்ச்க்கு போனதுக்கு சிரிச்சாரு. இப்ப எங்க அப்பாவை கிண்டல் பண்ணுனாறு. ஒரு காலத்துல அவரும் குடிச்சவர் தானே? எங்க அப்பாவை சொல்றதுக்கு அந்த ஆளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? நீங்க அதை வாயை மூடி கேப்பீங்க அப்படி தானே?”
“அவர் சொன்னதுக்கு நான் என்ன செய்வேன்?”
“இப்ப இப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி தான பேசுநீங்க? நாங்க என்ன உங்களை மாதிரி ஏமாத்தியா கல்யாணம் பண்ணுனோம்? எங்க அப்பா பங்சனுக்கு குடிப்பாருன்னு உண்மையை சொல்லி தான கல்யாணம் பண்ணுனோம். உங்க குடும்பம் மாதிரி பொய் பொய்யா சொல்லலை ஓகே”
“நாங்க என்ன பொய் சொன்னோம்?”
“என்ன பொய்யா? எல்லாமே பொய் தான். உங்களுக்கு முன்னாடி பாத்த பொண்ணு வீட்ல உங்களை அவங்க தான் வேண்டாம்னு சொல்லிருக்காங்க. ஆனா நீங்க என்கிட்ட உங்க வீட்ல தான் வேண்டாம்னு சொல்லிட்டோம்னு பொய் சொன்னீங்க? உங்க அம்மா அந்த பொண்ணோட அப்பாவை பத்தி ஏதோ தப்பா சொல்ல பொய் தான் அவங்க வீட்ல உங்களை வேண்டாம்னு சொல்லிருக்காங்க? நான் சொல்றது சரி தானே?”
…..
“எங்க அப்பாவை இப்படி சொல்ற நீங்க அந்த பொண்ணோட அப்பாவை என்ன சொன்னீங்களோ? அதான் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. உங்க அப்பா முன்னாடி குடிக்கலையா? இல்ல இப்ப உங்க அண்ணன் அத்தான் ரெண்டு பேரும் குடிக்கலையா? அந்த ஆளுக்கு என்ன உரிமை இருக்கு இப்படி பேச?”
….
“அது மட்டுமா? ஒண்ணுமே வேண்டாம் வேண்டாம்னு சொல்லி சொல்லி உங்களுக்கு நகை போட வச்சது ஏமாத்து வேலை இல்லையா? அதுவும் நீங்க நகை போட சொல்லிட்டு அதை உங்க அம்மா கேக்குற மாதிரி சீன் போடலையா?”
“ஏய், அதை வேணும்னா நான் திருப்பி கொடுத்துறேன் போதுமா? மேடைல போட்டா பெருமையா இருக்கும்னு தான் போட சொன்னேன்”
“இப்ப கொடுத்து நாக்கு வலிக்கவா? அது இப்ப நமக்கு தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அன்னைக்கு நீங்க நல்லவர் மாதிரி நடிச்சீங்க தானே?”
….
“இன்னொரு ஏமாத்துன விஷயம் உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலைன்னு கேட்டதுக்கு பொய் காரணம் தானே சொன்னீங்க? ஆனா அவங்க கல்யாணம் ஆகி ஒரு வருசத்துல இருந்து உங்க கூட இல்லாம தனியா இருக்குறதை எதுக்கு என்கிட்ட மறைச்சீங்க? ஏமாத்துனது நீங்க தான் நாங்க இல்லை ஓகே”
“நீயும் தான் கடைசி வரை எங்க அம்மா அப்பாவை பாத்துக்குவேன்னு சொன்ன? ஆனா இப்ப வேற வீடு பாக்குறது பத்தி பேசுற தான?”
“நான் சொன்னேன் தான் இல்லைன்னு சொல்லலை. என் அம்மா அப்பா மாதிரி தான் உங்க அம்மா அப்பாவையும் நினைக்கணும்னு நினைச்சேன். உங்க அண்ணன் அவங்களை பாக்காம போனாலும் நாம பாக்கணும்னு தான் நினைச்சேன். ஏன் இப்ப கூட, எனக்கு உடம்பு சரியில்லைன்னா கூட அவங்களுக்கு எல்லா வேலையும் நான் தானே செய்றேன்? காலைல எட்டு மணிக்கு எந்திக்கிற உங்க அம்மாவுக்கு அடுத்த நிமிஷம் பூஸ்ட், அடுத்த அரை மணி நேரத்துல டிபன், அப்புறம் ரெண்டு மணிக்கு சுட சுட சாப்பாடு, சாயங்காலம் பூஸ்ட் நைட் டிபன் எல்லாமே அவங்க கைல போய் கொடுக்க தானே செஞ்சேன்? நான் செஞ்ச வேலைல எனக்கு வெறுப்பு வர வச்சது யாரு? கொடுக்குற காபில, செய்ற சாப்பாடுல குறை சொல்லிக்கிட்டு சட்டியை வழிச்சு நக்கி தின்னா எப்படி இருக்கும்? எனக்கு கூட சாப்பாடு இல்லாம உங்க அண்ணன் கிட்ட தூக்கி குடுத்தா எப்படி இருக்கும்? உங்க அண்ணன் மகள் அந்த சோபாவை அவங்க கண்ணு முன்னாடி கிழிச்சிட்டு இருக்கா, அதைப் பாத்தும் ஒண்ணும் சொல்ல மாட்டிக்காங்க. ஆனா அதே அவ ஒரு சேரை இழுத்தா தரை வம்பா போயிரும்னு சொல்றாங்க. ஏன் சோஃபா எங்க வீட்ல வாங்கினதுனால தானே?”
….
“அதை எல்லாம் விடுங்க. கல்யாணம் அன்னைக்கு பெத்த பொண்ணு மாதிரி பாத்துக்குறேன்னு உன் அம்மா காரி சொன்னா தானே? பெத்த பொண்ணு மாதிரியா நடத்துனாங்க? வேலைக் காரியை விட மோசமா தானே என்னை பாத்துக்கிட்டாங்க. மட்ட மல்லாக்க படுத்து டி‌வி பாக்க தெரியுது? அடுத்த வீட்டுக்கு கதை பேச போக தெரியுது, வேப்ப முத்து பிறக்க போக தெரியுது, குளத்து வேலைக்கு போகணும்னு நினைக்க தெரியுது? ஆனா வீட்ல வேலை செய்ய முடியலையோ? நான் ஒண்ணும் தினமும் செய்ய சொல்லலையே? ஏதாவது எக்ஸாம் வந்தா, உடம்பு சரியில்லைன்னா, மாசம் மாசம் வயிறு வலிக்கும் போது கூட வீட்டு வேலை உங்க அம்மாவால செய்ய முடியாதோ? உங்க அக்காவை அவங்க இப்படி தான் நடத்துவாங்களோ?”
“இப்ப என்ன தான் செய்யணும்னு சொல்ல வர?”
“இங்க பாருங்க சித்தார்த். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா உங்க கிட்ட இருக்குற சில குணம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. ஒண்ணு செஞ்ச தப்பை ஒத்துக்காம இருக்குறது. இன்னொன்னு உங்க அம்மா அப்பா தப்பே செஞ்சாலும் நியாய படுத்துறது. இன்னொரு குணமும் இருக்கு. அது உங்க அம்மா அப்பாவை தவிர மத்தவங்களை வாய்க்கு வந்த படி திட்டுறது. என் புருஷன் எப்பவும் நியாயமா இருக்கணும்னு நான் ஆசை படுறேன். நான் தப்பு செஞ்சா கூட நீங்க என்னை தண்டிக்கலாம். ஆனா உங்க அம்மா அப்பாக்கு கண் மூடி தனமா சப்போர்ட் பண்ணுறது எனக்கு பிடிக்கலை. இன்னும் சொல்ல போனா அந்த மூஞ்சிக்களை பாக்கவே எனக்கு 
பிடிக்கலை. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் பேசாதீங்க”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள். அவனும் அடுத்து எதுவும் வாதாடாமல் அமைதியாக இருந்து கொண்டான். 
இதை எல்லாம் யோசித்த படி எல்.ஐ.சி ஆபீஸில் அமர்ந்திருந்தாள் சிந்து. 
காதல் தொடரும்….

Advertisement