Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 14
அழகிய வர்ணங்களை
என்னுள் உருவாக்கி
சென்ற வானவில்லே
இப்போது கருமையை 
மட்டும் பூசிவிட்டு
சென்றது ஏனோ?!!!
பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து.
“இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா?
“சரி”
“சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?”
“சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?”
“உங்க அண்ணன் சொல்லிட்டு இருந்தாங்க மா. ஹாசினியை ஓச்சம்மான்னு கூப்பிடுறதுக்கு மாரியக்காவே நிறைய டைம் அழுதுருக்காங்களாம்”
“சரி சொல்லலை. விடு. வேற என்ன சொன்னான் என் அண்ணன்? இல்லாதது பொல்லாதது எல்லாம் வத்தி வச்சனா?”
“உங்க தப்பை சொல்றதுக்கு பேர் வத்தி வைக்கிறதா? அப்ப உங்க அம்மா பண்ணுற வேலை எல்லாம் என்னது?
“இப்ப எதுக்கு அவங்கள பத்தி பேசுற?”
“நீங்க தேவை இல்லாம பேசுனா, நானும் அத தான செய்யனும். வேற ஒண்ணும் சொல்லலை. பீடை சனியன்னு பேர் வைக்கிறதை நிறுத்துங்க. உங்க அம்மா என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டாதீங்க”
“எங்க அண்ணன் நல்லா போட்டு கொடுத்துருகானா? அவனுக்கு என் மேல பொறாமை”
“நீங்க தான் அப்படி நினைக்கிறீங்க? அவங்க உங்க மேல அக்கரைல தான் சொன்னாங்க. அது எப்படி உங்களுக்கு புரியும். செவ்வாழை வாங்கிட்டு வந்ததுக்கே தப்பா பேசுன குடும்பம் தானே?”
“ஹாஸ்பிட்டல் வந்துருச்சு. பேசாம வா”
“ஹிம் எந்த ரூம்னு தெரியுமா?”
“அங்க பாரு எங்க அப்பா நிக்காரு. போய் கேப்போம்”
“பேச்சு மூச்சு இல்லைன்னு சொன்னாங்க, பாவம் பாட்டி”
“அதெல்லாம் இல்லை நல்லா தான் இருக்குனு எங்க அப்பா அப்பவே போன் பேசினாரு. எங்க அண்ணன் தான் புழுவிருக்கான்”, என்று சொல்லிக் கொண்டே சுந்தரம் அருகில் சென்றான்.
“உள்ள நர்ஸ் கிளீன் பண்ணிட்டு இருக்காங்க டா. இப்ப போகாதீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு போங்க”, என்றார் சுந்தரம்.
சரி என்று உள்ளே சென்றவர்களை மீண்டும் அழைத்தார் சுந்தரம். 
“கிளீன் பண்ணும் போது தூக்க ஏதும் சொன்னா நீங்க அம்மாவை  தொடாதீங்க”, என்று சொன்னதும் மனதுக்குள் கொதித்தது சிந்துவுக்கு.
“இந்த ஆளைப் பெத்த அம்மா தானே? தொடக் கூடாதுன்னு சொல்றாரே? இந்த ஆள் கால்ல போய் வாரம் வாரம் விழுந்து கூம்புடுறேன் பாரு?”, என்று தன்னையே காரி துப்பினாள் சிந்து. 
உள்ளே போன போது ரிசப்சன் அருகே தலையில் முக்காடிட்டு உடல் நிலை சரியில்லாத தோரணையோடு அமர்ந்திருந்தாள் தாயம்மா. 
அந்த போசில் பார்த்ததும் சிந்துவின் தோழி ரம்யா சொன்னது நினைவில் வந்தது. “உங்க மாமியாருக்கு எப்பவுமே உடம்பு சரியில்லாம தான் இருக்குமா? எப்பவுமே அப்படி தான் இருப்பாங்களா?”, என்று கேட்டிருந்தாள். 
இதெல்லாம் உண்மையா வேசமா என்று குழப்பம் தான் வந்தது சிந்துவுக்கு. 
உள்ளே சென்ற போது பாஸ்கர் சொன்னது போல நெஞ்சு குளி மட்டுமே ஏறி இறங்கி உயிர் இருக்கிறது என்று காட்டியது. மற்றபடி எந்த அசைவும் இல்லை. 
அப்போது ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் “வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னா கூட்டிட்டு போங்க. பிழைக்கிறது கஷ்டம் தான்”, என்று சொல்லி விட்டு சென்றார். 
என்பத்தி ஏழு வயதில் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும்? அதனால் கஷ்டம் தான் என்று சிந்துவுக்கு புரிந்தது. அங்கிருந்த சித்தார்த்தின் அத்தையோ “இங்க இருந்தா நர்ஸ் பாப்பாங்க. வீட்டுக்கு கொண்டு போய் உடனே உயிர் பிரியலைன்னா யார் பாக்க?”, என்று கேட்டாள். 
அப்போது அங்கு வந்த சித்தார்த்தின் சித்தி “வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம்னு தோணுது சித்தார்த். உங்க சித்தப்பா வந்த அப்புறம் கேக்கணும்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
“எப்படி சொல்லிட்டு போறா பாரு. இன்னும் பத்து நாளுல அவ மகளுக்கு நிச்சயதார்த்தம், இப்ப கொண்டு போனா ரெண்டு நாளுல உயிர் போயிருச்சுனா நல்லா இருக்கும்னு அவ நினைக்கிறா. பங்ஷன் அப்ப இறந்து போனா கஷ்டம்னு நினைச்சு இப்படி சொல்றா. வீட்டுக்கு போனா இவ பாப்பாளா? பங்ஷன் வேலைன்னு இவ ஊர் சுத்திக்கிட்டு அம்மாவை என்னைய பாக்க வைப்பா”, என்று புலம்பிய சித்தார்த்தின் அத்தையைப் பார்த்து அருவருப்பு தான் வந்தது.
ஒரு வீடு, இரண்டு இடத்தில் நிலங்கள் என்று ஒரே மகளின் பெயரில் எழுதி வைத்திருந்தாள் பாட்டி. ஒரு அக்காவுக்கு மூன்று தம்பிகளும் சந்தோஷமாக எழுதிக் கொடுத்திருந்தார்கள். அப்படி இருக்கும் போது பெத்த அம்மாவை பாக்க இந்த பொம்பளைக்கு கறி வலிக்குதே. சொத்து மட்டும் வேணும். ஆனா பாக்க மட்டும் கூடாது. இதுல மருமகள் பாக்கணும்னு இந்த பொம்பளைக்கு எதிர் பார்ப்பு வேற? 
பாட்டி பெயரில் சொத்துக்கள் இருக்கிறது, பல இடத்தில் வட்டிக்கு கொடுத்திருக்கிறாள். அவளுடைய பணத்தில் தான் இந்த ஹாஸ்பிட்டல் செலவும். இவ்வளவு வைத்திருக்கும் பாட்டியை பார்பதற்கே அனைவரும் சுயநலமாக இருக்கிறார்களே? கடைசி காலத்துல பணம் இல்லாத முதியோர்களின் நிலை என்னவோ?
அப்போது அங்கே சித்தார்த்தின் சித்தி வந்தாள். மற்றொரு புறம் இருந்து சித்தார்த்தின் அம்மாவும் வந்தாள். இருவருக்கும் எப்போதும் ஒத்து போகாது.
“டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றார் சித்தார்த்”, என்று ஆரம்பித்தாள் சித்தார்த்தின் சித்தி.
“அப்போது சும்மா இருக்காமல் வீட்டுக்கு கூட்டிட்டு போய் யாரு பாப்பா? எனக்கு நல்லா இருந்தாலாவது நான் பாப்பேன்”, என்று ஆரம்பித்தாள் தாயம்மா.
“ஆமா நல்லா பாத்தீங்க? அடுத்த தெருவுல உடம்பு சரியில்லாம அத்தை இருந்தப்ப கூட நீங்க பாக்கல. நானும் என் மகன் சரத்தும் தான் இங்க இருந்து பாக்குறோம். என் ஒரே மகளுக்கு நல்லது நடக்கும் போது அதை கூட என்னால முழு மனசோட செய்ய முடியலை. நைட் எங்க வீட்டுக்காரரும் சின்ன அத்தானும் தான் அத்தையை பாத்தாங்க. பெரியத்தானும் நீங்களுமா வந்து பாத்தீங்க? அண்ணி இன்னைக்கு தான் வந்திருக்காங்க. வந்த அன்னைக்கே இங்க இருக்க முடியலைன்னு புலம்புறாங்க”, என்று கத்தி விட்டாள்.
பதிலுக்கு சண்டை போட போன தாயம்மாவை அங்கிருந்து அழைத்து சென்ற சித்தார்த் “உங்களுக்கு எங்க வச்சு என்ன பேசணும்னு தெரியாதா?”,என்று திட்டி விட்டு வந்து விட்டான். 
பின் சிந்துவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். பல விதமான மனிதர்களை எண்ணி அமைதியாக அமர்ந்திருந்தாள் சிந்து.
“பாத்தியா சிந்து என் சித்திக்காரி எப்படி சண்டைக்கு வாரான்னு?”, என்று ஆரம்பித்தான் சித்தார்த்.
“சண்டைக்கு வந்தது உங்க அம்மா தான். அதை மறந்துறாதீங்க. பக்கத்து தெருவுல இருக்கும் போதே அந்த பாட்டிக்கு ஒரு சுடு தண்ணி வச்சி கொடுக்கலை. இதுல நான் நல்லா இருந்தா பாத்துக்குவேன்னு டயலாக் வேற. வாயை திறந்தாலே பொய். உங்க சித்தி சண்டைக்கு வரல ஓகே? உங்க அம்மா தான் சீன் மேல சீன் போடுது. அதுல உங்க அத்தையும் அடக்கம்”
“உனக்கு எங்க சித்தியைப் பத்தி தெரியாது. சரியான கைக்காரி”
“உங்க சித்தியை நான் பாராட்டல. அவங்களும் அவங்க பொண்ணு பங்ஷன் நல்ல நடக்கணும்னா சீக்கிரம் உயிர் போறது தான் நல்லதுன்னு சுயநலமா இருக்காங்க. நான் இல்லைன்னு சொல்லலை”
“புரிஞ்சிக்கிட்டா சரி. எங்க அத்தை கூட பாரு. எப்படி பேசுதுன்னு”
“அது தான் ஆச்சர்யமா இருக்கு. உங்க அத்தையை எவ்வளவு நல்ல பொம்பளைன்னு நினைச்சேன். ஆனா அவ்வளவு சொத்தையும் வாங்கி கிட்டு இப்படி தெரியாதவங்களை பாக்குற மாதிரி சீன் போடுது. ஆஸ்பத்திரில கொசுக் கடிக்குமாம், தூக்கம் வறாதாம், புருஷன் சாப்பாடுக்கு என்ன செய்வாறுன்னு தெரியலையாம்? அப்பப்பா என்ன புலம்பல்?”
“எங்க குடும்பத்துல எல்லாரும் அப்படி தான்”
“உங்க அம்மா அப்பாவும் அதுல அடக்கம்”
“:அவங்களை எதுக்கு இப்ப இழுக்குற?”
“அவங்களை சொன்னா கோபம் வருதோ? அப்பத என்ன சொன்னீங்க? உங்க அண்ணன் புழுகுவாங்க. உங்க அப்பா உண்மையையே பேசுவாரா? உங்க பாட்டி உங்க அப்பா சொன்ன மாதிரி நல்லா தான் இருக்கா? இப்பவா நாளைக்கான்னு இழுத்துட்டு இருக்கு. அவங்க அப்படி சொல்லிருக்காங்க”
“அவர் சொன்னா நான் என்ன செய்வேன்?”
“எனக்கு ஒண்ணு தான் புரியலை. யார் தப்பு செஞ்சாலும் அவங்களை திட்டுறீங்க. தப்பே செய்யாமல் இருந்தாலும் திட்டுறீங்க? ஆனா உங்க அம்மா அப்பா மட்டும் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை அவங்களை திட்ட மாட்டிக்காங்க?”
“அவங்க என்ன தப்பு செஞ்சாங்க? முன்னாடி எங்க அம்மா அப்பாவுக்கு எங்க பாட்டி சண்டை மூட்டி விட்டுருமாம். எங்க அப்பா எங்க அம்மாவை அடிப்பாராம். எங்க அம்மா வாங்க நாம சாகலாம்னு எங்களை எல்லாம் கூப்பிட்டுருக்கு தெரியுமா?”
“அதெல்லாம் பழைய கதை. உங்க அண்ணன் உங்க பாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்ன உடனே அது நடிக்கும்னு சொல்லுச்சு. போய் என்னன்னு கூட பாக்கலை. ஆனா அடுத்த நாள் 
உங்க சித்தி பாட்டியை பாக்க வந்துருக்காங்க. அது உங்க அண்ணன் மூலமா தெரிஞ்ச உங்க அம்மா உங்க அக்கா கிட்ட கடைசி மருமக வந்தாலாம். அப்புறம் சாயங்காலமே மக ஒத்தைலே இருக்கான்னு போய்ட்டாலாம். இருந்து பாக்க வேண்டியது தானேன்னு திட்டுச்சு. எப்படி எப்படி? ஒன்றறை மணி நேரம் டிராவல் பண்ணி வந்து பாத்துட்டு போன உங்க சித்தி கெட்டவ. வண்டில ஏறினா ஒன்றறை நிமிசத்துல இருக்குற பாட்டியை பாக்க கூட போகாத உங்க அம்மா
நல்லவங்க அப்படி தானே?”
“ஃப்ச் விடு சிந்து”
“பதில் பேச முடியாலைன்னா விடணுமா? இன்னும் இருக்கு சொல்றேன் கேளுங்க. உங்க அண்ணன் பாக்க போங்கன்னு சொன்னதுக்கு சின்ன மருமகளே பாக்கட்டும். நாம ஆறுமாசம் உடம்பு சரி யில்லாம இருக்கும் போது பாக்கலையான்னு கேட்டுச்சு. அதுக்கு உங்க அப்பா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசம் பாத்திருப்போம்னு சொல்றார். அதுக்கு உங்க அம்மா அப்படி தான் பொய் சொல்லணும்னு சொல்லுது. எதுக்கு இந்த பொய் பித்தலாட்டாம்?”
“எங்க அண்ணன் தான் ஏத்தி விட்டானா?”
“அடுத்து அவங்களை குறை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? சரி அதை விடுங்க. பெத்த அம்மா தான உள்ள சாக கிடக்குறது. உங்க அப்பா எதுக்கு பாட்டியை தொடாதீங்கன்னு சொல்லி அனுப்புராரு? அப்படியே செருப்பால அடிக்கணும் போல இருந்தது”
“நீ ரொம்ப ஓவரா பேசுற சிந்து”
“நான் நியாயத்தை தானே பேசுறேன். அது உங்களுக்கு புரியவும் செய்யாது. என்னால புரிய வைக்கவும் முடியாது. எங்க தாத்தா மூணு மாசம் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரில இருந்தார். ரெண்டு மாசம் வீட்லயும் முடியாம இருந்தார். எங்க அம்மா அவரை எப்படி பாத்துக்கிட்டாங்க தெரியுமா? எங்க அம்மா மட்டும் இல்லை. எங்க ரெண்டு மாமா கூட அப்படி தாங்கினாங்க”
“தெரியும், நானும் தானே இருந்தேன். அவர் ரொம்ப நல்லவர்”
“நல்லவரோ கெட்டவரோ அப்பா அப்பா தானே? எங்க தாத்தா சாவுக்கு வந்த உங்க அப்பா என்னை எரிச்சல் படுத்திட்டு தானே வந்தார். அவரை எல்லாம் வரணும்னு யார் அழைச்சா?”
“அது முடிஞ்சு போன விஷயம் சிந்து” என்று சொல்லிக் கொண்டே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு வண்டியை நிறுத்திய சித்தார்த் “இங்க உக்காரு சிந்து. நான் கட்டிட்டு வரேன்”,என்று சொல்லி விட்டு சென்றான்.
தன்னுடைய தாத்தா இறந்த போது நடந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாள் சிந்து. தாத்தாவை சித்துவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளை அதிகமாக சிரிக்க வைத்ததும் அவர் தான். அவள் வாழ்வில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. அவருக்கு நான்கு பேத்திகள் இருந்தாலும் சிந்து அவர் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருந்தாள். 

Advertisement