Advertisement

கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம். 
“அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து.
“ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”, என்றான் சித்தார்த்.
“மேல வைக்கிறது முக்கியம் இல்லை. கீழ வைக்கணும். உங்க அம்மா இன்னைக்கு சோம்பேறியா இருக்குன்னு குளிக்கலைல. இவ வச்சிருக்க வேண்டியது தான?”, என்று அவர் கத்தியதும் “இந்த பொம்பளை குளிக்கிதா இல்லையானு பாக்குறது தான் என் வேலையா?”, என்று குமுறிய சிந்துவுக்கு நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை. கொஞ்சம் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டாள். 
“உங்க அம்மா தான தினமும் விளக்கு வைக்கும். என்கிட்ட வைக்க சொல்லி சொல்லிருக்க வேண்டியது தான? உங்க அப்பா கேக்கும் போது அம்மா ஒரு வார்த்தை அவ கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானேன்னு நீங்க எதுக்கு உங்க அப்பா கிட்ட கேக்கலை”, என்று சொல்லி சித்தார்த்திடம் சிறிது நேரத்தில் சண்டையை ஆரம்பித்தாள்.
“இந்த அம்மா சொல்லிருக்கலாம்”, என்று நினைத்தாலும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். 
அடுத்த நாள் “பாட்டிக்கு உடம்பு சரி இல்லைப்பா”, என்றான் பாஸ்கர்.
“நம்பாதீங்க, அது நடிக்கும்”,என்றாள் தாயம்மா. 
“என்ன ஏதுன்னு விசாரிக்காம எப்படி சொல்லுது பாரு?”, என்று எண்ணிக் கொண்டு சிந்து அமைதியாக இருந்தாள். 
ஆனால் அடுத்த இரண்டு நாளில் “பாட்டியை ஆஸ்பத்திரியில் சேத்துருக்கேன் ப்பா”, என்றான் பாஸ்கர்.
விஷயம் அறிந்து “நாம பாக்க போவோமா?”, என்று கேட்டாள் சிந்து.
“முதலில் எங்க அம்மா அப்பா பாக்க போகட்டும். அப்புறம் 
நாம பாப்போம்”.,என்று சொல்லி விட்டான் சித்தார்த்.
“எங்க தாத்தா ஆஸ்பத்திரில இருக்கும் போது அடிக்கடி என்னை கூட்டிட்டு போனாங்க. இவங்களும் பாக்க போனாங்க. ஆனா இவங்க பாட்டியை பாக்க இப்படி யோசிக்கிறாங்க. இந்த சித்தார்த்தை புரிஞ்சிக்கவே முடியலை”, என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள் சிந்து. 
சுந்தரம் அம்மாவை பார்க்க கிளம்பினாலும் அவரை தாயம்மா செல்ல விட வில்லை. 
“அந்த கிழவி நடிச்சிட்டு இருப்பா. நீங்க எல்லாம் பாக்க போகாதீங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவர் சரி என்று சொல்லி விட்டார். 
ஆனால் அடுத்த நாள் வந்த பாஸ்கரோ “பாட்டியை போய் பாருங்கப்பா. உங்களை எங்கன்னு கேக்குது”, என்றான். அப்போதும் அவர் போக வில்லை. 
பாட்டிக்கு சீரியஸ் என்று பாஸ்கர் சொன்ன போதும் போக வில்லை.
அடுத்த நாள் அனைவரும் கோயிலுக்கு சென்றிருந்த போது ஊர்க்காரர் ஒருவரும், வரிக்காரர் ஒருவரும் “என்ன சுந்தரம் பெத்த தாயை போய் பாக்க வேண்டாமா? என்ன தான் கோபம் இருந்தாலும் இப்படியா இருக்குறது?”, என்று சத்தம் போட்டார்கள். 
அப்போது தான் அவருக்கு உரைத்ததோ என்னவோ காலையில் பாக்க போகலாம் என்று முடிவு எடுத்தார். 
அடுத்த நாள் காலையில் சுந்தரமும் தாயம்மாவும் கிளம்பி சென்று விட்டார்கள். சிந்துவும் சித்தார்த்தும் மதியம் போவதாக இருந்தது. 
காலையில் சித்தார்த் வேலைக்கு சென்றதும் இருந்த வேலையை முடித்த சிந்து வீட்டுக்கு வெளியே வராண்டாவில் காத்தாட அமர்ந்திருந்தாள்.
அப்போது அங்கு வந்த பாஸ்கர் “என்ன சிந்து, ஒரு வழியா கிளம்பி போய்ட்டாங்களா?”, என்று கேட்டான்.
“ஆமா மச்சான். அப்பவே போயிட்டாங்க. அன்னைக்கே போயிருக்கலாம்”
“நானும் அதை தான் சொன்னேன். கேக்கல. நீங்களும் போய் பாத்துட்டு வந்துடுங்க. இனி தாங்காது. இப்பவே நெஞ்சு குழில மட்டும் தான் உயிர் ஒட்டிக்கிட்டு இருக்கு”
“என்னது? அவ்வளவு சீரியஸா இருக்கா? எனக்கு தெரியாதே? என்ன ஆச்சு?”
“ஒரு புண்ணு வந்துச்சு. நான் தான் ரெண்டு நாள்க்கு ஒரு தடவை பாக்க போவேன்ல? அப்படி போனப்ப தான் கால்ல உள்ள புண்ணை காட்டுச்சு. அடுத்த நாள் வலிக்குன்னு சொன்ன அப்புறம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். அந்த டாக்டர் நீர் ன்னு சொல்லி கொஞ்சமா கீறி விட்டான். அடுத்த நாள் ரொம்ப வலிக்குதுன்னு அழுதுச்சு. இன்னொரு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனேன். அவன் இன்னொரு இடத்துல கிழிச்சு நீரை எடுத்தான். அந்த புண்ணு ஆறாம சலம் வச்சுருச்சு”
“சுகர் வந்துருக்குமோ?”
“சுகர் லெவல் குறைஞ்சிருச்சு. இப்பவும் அப்படி தான் இருக்கு. ரொம்ப குறைய இருக்கு. சுகர் ஏறுறதுக்கு குளுக்கோஸ் ஏத்துறாங்க. அது சளியா மாறிட்டு இருக்கு”
“ஐயையோ, அன்னைக்கே ஆஸ்பத்திரில சேத்துட்டீங்களா?”
“இல்லை, என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்”
“இங்கயா, எனக்கு தெரியாது”
“பாட்டி இந்த வீட்ல தான் விட சொல்லுச்சு. கால்ல சலம் வந்துட்டு இருந்துச்சா. பாஸ் இங்க வயித்து பிள்ளைக்காரி இருக்கா. அவளுக்கு நிறை மாசம் வேற. எனக்கு சலம் ஒழுகிட்டு இருக்கு. நான் இங்க இருக்குறது நல்லது இல்லை. உன் அப்பன் வீட்ல கொண்டு வந்து விடுன்னு சொன்னாங்க. பாட்டி உங்களை எல்லாம் எங்க அம்மா உள்ள விடாது. நீங்க இங்கயே இருங்கன்னு சொல்லிட்டு எங்க அப்பா கிட்ட சொன்னேன். எங்க அப்பா உன்னை யாரு இங்க கூட்டிட்டு வர சொன்னதுன்னு என்னை திட்டினார்”
“என்னது? உங்க அப்பாவா? அதுவும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கா?”
“ஆமா, ஆனா நீங்க பாக்கலைன்னா இருங்க. என்னால அப்படி இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். என்னை திட்டிட்டு போய்ட்டார்”
“அப்புறம் என்னைக்கு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணீங்க?
“ரொம்ப வலிக்குதுன்னு அழுதுச்சு. மாரி வேற நிறை மாசம். எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. உடனே எங்க சின்ன சித்தப்பாக்கு போன் பண்ணுனேன். அவர் என்கிட்ட பணம் இல்லைப்பா. பொண்ணுக்கு வேற இன்னும் பத்து நாள்ல நிச்சயம் வச்சிருக்கேன். இப்ப ஆஸ்பத்திரிக்கு செலவு செய்யணும்னா என்ன செய்ய தெரியலை. பணம் இருந்தா நான் பாக்குறேன்னு சொன்னார்”
“பெத்த அம்மாவை பணம் இருந்தா பாப்பேன்னு சொன்னாரா?”
“எங்க அப்பா பாக்கவே மாட்டேன்னு சொன்னதுக்கு அது பரவால்லயே சிந்து?”
“அதுவும் சரி தான். அப்புறம் தான் அங்க கூட்டிட்டு போனீங்களா?”
“ஆமா, அவங்க வீட்ல விட்டுட்டு தினமும் பாக்க போனேன். பாட்டி அம்பதாயிரம் வச்சிருந்தது. அதை கொடுத்தேன் அவங்க கிட்ட. அப்புறம் எங்க சித்தி தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போச்சு”
“பரவால்ல”
“ஆனா நீர் ரொம்ப ஆகவும் அட்மிட் பண்ணிட்டாங்க. உங்க அப்பா வரலையான்னு கேட்டுச்சு. உடனே தான் அம்மா அப்பாவை போய் பாருங்கன்னு சொன்னேன். இவங்க போகவே இல்லை. எங்க அத்தையையும் கேட்டுச்சு. அவங்களும் இன்னும் வரலை. பெரிய சித்தப்பாவும், சின்ன சித்தப்பாவும் தான் மாத்தி மாத்தி நைட்டு தங்கி பாக்காங்க. நேத்து பாட்டிக்கு நினைவே இல்லை. கண்ணு மூடிருச்சு. மூச்சு மட்டும் தான் இருக்கு. இன்னைக்கு போய் பாக்க போறாங்க. ஊர் காரங்க எல்லாருமே எங்க அம்மா அப்பாவ திட்டுறாங்க. நாளைக்கு நமக்கும் இந்த நிலைமைதான்னு நினைக்கல பாத்தியா?”
“உங்க அப்பா அன்னைக்கு போறேன்னு சொன்னார். உங்க அம்மா விடலை”
“எனக்கு தெரியும், நானும் சத்தம் போட்டேன். நேரடியாவே சொல்லிட்டேன். இப்படி இருந்தீங்கன்னா நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைமைதான்னு சொன்னதுக்கு அழுதுச்சு”
“அப்படி என்ன தான் பாட்டி மேல உங்க அம்மாவுக்கு கோபமாம்?”
“எங்க அப்பா தான் எங்க ரெண்டு சித்தப்பவையும் படிக்க வச்சு எல்லாம் செஞ்சிருக்காரு. எங்க பாட்டி மூத்த சித்தப்பாவுக்கு முப்பத்தஞ்சு செண்டும், ரெண்டாவது சித்தப்பாவுக்கு பதினஞ்சு செண்டும் இடம் வாங்கி கொடுத்துருக்கு. எங்க அப்பாவுக்கு மட்டும் அஞ்சு செண்டுன்னு சொல்லி எங்க அம்மா சண்டை போடுது. அவங்க கிட்ட கேட்டா நாங்க தான் வாங்குனோம்ன்னு சொல்றாங்க. முதல்ல நான் தான் வாங்கி கொடுத்தேன்னு சொன்ன பாட்டி அடுத்து இல்லை கொஞ்சம் பணம் தான் கொடுத்தேன். அவங்களா தான் வாங்குனாங்கன்னு சொல்லுது. எது உண்மை எது பொய்ன்னு தெரியலை”
“சொத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கணுமா?”
“எங்க அம்மாவுக்கு அவங்க நினைச்சது தான் சரி. சில நேரம் ரொம்ப பண்ணுவாங்க. சித்தார்த் அம்மா என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டுவான். நான் தப்புன்னா திட்டி விட்டுருவேன். என் கிட்ட முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கும். நான் கண்டுக்கவே மாட்டேன்”
“என்கிட்டயும் பேச மாட்டாங்க”
“உன்கிட்ட எதுக்கு?”
“தாலிசெயினை போட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மாரியக்கா போடலைலன்னு சொல்லி. அதனால அவங்க கிட்ட சொல்லாம நாங்களே தாலியை மாத்துனதுக்கு கோபமாம். உங்க அக்காவும் பேச மாட்டாங்க”
“மாரி எதுக்கு போடலைன்னா, அவ வீட்லே இருக்கா. அடுத்த தெருல தான் அவளோட அம்மா வீடும். நீ அப்படியா வெளிய இடத்துக்கு போற. எங்க அம்மா குணம் அப்படியே என் தங்கச்சி கிட்டயும் உண்டு. அவ மாப்பிள்ளையையும் எங்க அம்மா அப்பா மதிக்கவே மாட்டாங்க. கண்ட படி பேசுவாங்க. பிரேமாவும் வாயை மூடி கேப்பா. சென்னைல இருந்து வந்தாலும் நேரா இங்க தான் வரது. அப்புறம் போறதுக்கு ஒரு நாள் முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்கு போய் தலையை காமிச்சிட்டு போறது. அவருக்கு கஷ்டமா இருக்கும்ல? போன தடவை சண்டை போட்டேன். அங்க இருந்து வந்தா நேரா அவர் வீட்டுக்கு போ. அங்க இருந்துட்டு போகும் பொது இங்க வந்தா போதும்னு சொன்னேன். அவ உடனே அதை எங்க அம்மா கிட்ட சொல்லிருப்பா போல. எங்க அம்மா எதுக்கு அப்படி சொன்னன்னு என்கிட்ட கேட்டுச்சு. நான் சொன்னது சரி தான்னு சொல்லி திட்டி விட்டுட்டேன்”
“எனக்கும் உங்க அம்மாவை புரிஞ்சிக்கவே முடியலை”
“இந்த வயசுல அவ்வளவு நகை போட்டுட்டு பங்சனுக்கு போகனுமா? கேட்டா நீயா வாங்கி போட்டன்னு கேப்பாங்க. நான் பாரின்ல இருந்தப்ப போனை போட்டு மாரியை ஒரே திட்டு திட்டுவாங்க. கடுப்பா இருக்கும். அவ எதிர் வீட்ல உள்ளவங்கட்ட பேசுறா. அவங்க பிள்ளையை கொஞ்சுரான்னு என்கிட்ட சொல்லி திட்டுவாங்க. அவ அண்ணன் வீட்லே போய் இருக்கான்னு திட்டுவாங்க. அவ கிட்ட கேட்டா, எதிர் வீட்ல இருக்குறது என் பெரியப்பா மகன். அவங்க கிட்ட பேச கூடாதா. அவங்க பிள்ளையை பாத்துக்கோன்னு சொன்னா பாத்து கிட்டா என்ன தப்பு? ஹாசினியை அவங்க தான சின்ன பிள்ளைல பாத்தாங்கன்னு சொல்றா, நான் அவ கிட்ட அவங்க சொல்றதை கண்டுக்காதன்னு சொல்லிருவேன். மகன் பொண்டாட்டியை பிரிஞ்சு கடல் கடந்து இருக்கானே. இப்படி எல்லாம் சொல்லலாமான்னு யோசிக்க மாட்டாங்க. சில நேரம் போனை ஆன் பண்ணி காதுல வைக்காம தரைல வச்சுருவேன்”
“கஷ்டம் தான். ஹாசினிக்கும் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க. அவ இப்ப எந்த சொல் பேச்சும் கேக்க மாட்டிக்கா”
“அவ அப்படியே எங்க அம்மா தான். மாரி தான் அடி வெளுத்துருவா. நல்ல காரிய வாதி”
“அன்னைக்கு சின்னம்மா சின்னம்மானு வந்தா, மருதாணி போட்டு விட சொன்னா. இப்ப வேலை இருக்கு போன்னு சொன்னா, சின்னமா என்னை திட்டிட்டாங்கன்னு போட்டு கொடுக்குறா. இப்ப எல்லாம் நான் சாப்பாடு ஊட்டுறதே இல்லை. உங்க தம்பி தான் ஊட்டுறாங்க”
“விவரம் தெரிஞ்சா மாறிருவான்னு நம்புவோம். பாப்போம். அப்புறம் சிந்து தப்பா எடுத்துக்காதே. சித்தார்த் கிட்ட சொல்லு. எல்லாரையும் பட்ட பேர் வச்சி கூப்பிடுறான். எங்க சித்தியை பீடை பெரியம்மாவை சனியன்னு கூப்பிடுறான். ஹாசினியை கூட ஓச்சம்மான்னு தான் கூப்பிடுறான். அது தப்பு தானே? அவங்க காதுக்கு போச்சுன்னா என்ன நினைப்பாங்க? எங்க அம்மா அப்பாவும் கூட சேந்து சொல்லுவாங்க. நீயாவது சொல்லு”
“ஆமா, நானும் பல தடவை சொல்லிட்டேன் கேக்க மாட்டிக்காங்க. உங்க அம்மா அப்பாவும் சப்போர்ட் பண்ணுறாங்க. எதுக்கு ஹாசினியை ஓச்சம்மான்னு கூப்பிடுறாங்க?:”
“மாரியோட அம்மா பேரு, பேச்சம்மாள், மாரியோட அம்மாவை எங்க அம்மாவுக்கு பிடிக்காது. அதனால அப்படி சொல்ல வச்சிருக்காங்க. அவ சொல்றதைப் பார்த்து சித்தார்த் ஹாசினியை அப்படி கூப்பிடுறான். மாரி அழுதுட்டே ரெண்டு தடவை என்கிட்ட சொல்லிட்டா, அவங்க அம்மான்னா இப்படி கூப்பிடுவாங்களான்னு. 
கேக்குறா? அவன் அப்படி கூப்பிடுறது தப்பு தானே?”
“ரொம்ப தப்பு தான். நானே சொல்லிட்டேன். கேக்க மாட்டிக்காங்க”
“பாட்டிக்கு ஏதாவது ஆச்சுன்னா, நாங்க பாட்டி வீட்டுக்கே போயிருவோம். இந்த வீடு ரொம்ப ஒழுகுது. நீங்க தான் இங்க இருக்க போறீங்க. அவனை தேவை இல்லாம பேச வேண்டாம்னு சொல்லு. நாளைக்கு சொத்து பிரச்சனை வரும். நான் என் வழில போயிருவேன். மறுபடியும் பாரின் க்கு கூட போயிருவேன். ஆனா எங்க அம்மா அப்பா அவனை தூண்டி விட்டுட்டு வேடிக்கை பாப்பாங்க. ஒரு தடவை எங்க ரெண்டாவது சித்தப்பா பொண்டாட்டி இவனை அடிக்க ஆள் எல்லாம் செட் பண்ணிருக்காங்க. சொல்லிருப்பானே”
“ஆமா”
“கவனமா இருக்க சொல்லு. நான் எல்லார் கிட்டயும் சிரிச்சிட்டே போயிருவேன். இவன் அப்படி இல்லை. யார் கிட்டயும் ஒட்ட மாட்டான். ஒட்ட வேண்டாம், அதுக்காக பகையையும் வளக்க கூடாதுள்ள?”
“ஆமா”
“இந்த வீடு கட்டினப்ப என் மச்சினங்க வந்து ஒரு வேலையும் செயலைன்னு எங்க அம்மா அப்பா சித்தார்த் மூணு பேரும் திட்டுராங்க. அவங்க வந்து வேலை செய்யணும்னு என்ன இருக்கு சொல்லு. இப்ப மாரியோட அண்ணன் வீடு கட்டுநா நான் போய் வேலை செயலாம். ஆனா எங்க அப்பவோ சித்தார்தோ போயி வேலை செய்யணும்னு என்ன இருக்கு?”
:ஆமா, நானும் இதை யோசிச்சேன்”
:”சரி இன்னைக்கே நீங்களும் பாட்டியைப் போய் பாத்துருங்க”
“இப்ப உங்க தம்பி வந்த அப்புறம் போகணும். உங்க அத்தை என்னைக்கு வாராங்கலாம்?”
“இன்னைக்கு காலைல வந்துட்டாங்க. நான் தான் ஆஸ்பத்திரில விட்டுட்டு வந்தேன்.ஆனா அதையும் சாதாரணமா எடை போட்டுராத. எங்க அம்மா குணம் தான் அதுக்கும். அதனால ரெண்டு பேருக்கும் பிடிச்சிரும்”
“அவங்க நல்ல குணம் தானா? ரொம்ப அன்பா பேசுவாங்க. பாவமா இருக்குற மாதிரி இருக்கும்”
“போக போக உனக்கே தெரியும், சரி நீங்க பாத்து போய்ட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் பாஸ்கர். 
சித்தார்த் வந்ததும் அவனிடம் பல மூட்டை அட்வைஸ் செய்ய காத்திருந்தாள் சிந்து. 
காதல் தொடரும்….

Advertisement