Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 13
காதல் என்ற
மயிலிறகால் என் உள்ளம்
வருடி தொல்லை
செய்கிறாயே அன்பே!!!
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து. 
“உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த்.
“உங்க அக்கா எனக்கு போன் பண்ணி எப்படி இருக்கன்னு கேக்கட்டும்”, என்று நக்கலாக சொன்னவள் “அப்புறம் ரெண்டு குட்டிசும் வளந்துட்டாங்களா?”, என்று குழந்தைகளைப் பற்றி சந்தோசமாகவே பேசினாள். 
“நீ அவளுக்கு போன் பண்ணலாம்ல சிந்து? போன் பண்ணி பிள்ளைங்களைப் பத்தி கேக்கலாம்ல?”
“என்னது நானா? உங்க அக்காவுக்கா? கடைசியா உங்க போன்ல இருந்து நான் தானே அவங்களுக்கு பண்ணுனேன்? உங்க அம்மா தான் ஏதாவது சொன்னாங்கன்னா உங்க அக்காவுக்கு எங்க போச்சு அறிவு? நான் அவங்கள விட சின்ன பொண்ணு தானே? என் மேல தப்பு இருக்குறதா அவங்களுக்கு பட்டுச்சுன்னா என்ன ஆச்சு சிந்து எதுக்கு இப்படி பண்ணுற? அப்படின்னு என்கிட்ட கேட்டுருக்கலாம்ல? நான் விளக்கம் கொடுத்துருப்பேன்ல? ஒரு ஃபிரண்ட் மாதிரி தானே என்கிட்ட பேசினாங்க. இப்ப நான் தப்பே பண்ணாம அவங்க கிட்ட இறங்கி போகனுமா? நான் கடைசியா போன் பண்ணிட்டேன். என்னோட நம்பருக்கு அவங்க பழைய படி கூப்பிட்டு பேசட்டும். நான் அப்ப பேசுறேன். அது வரைக்கும் என்னை தேவை இல்லாம இதுல டென்ஷன் பண்ணாதீங்க”, என்று சிந்து சொன்னதும் அமைதியாகி விட்டான் சித்தார்த்.
ஆனால் பிரேமாவை நினைத்து பார்த்தால் மொத்த கோபமும் தாயம்மா மேல் தான் சிந்துவுக்கு திரும்பியது. “நல்ல ஃபிரண்ட் மாதிரி பேசிட்டு இருந்தவங்களை இப்படி பிரிச்சிட்டாங்களே? சரியான சகுனி”, என்று எண்ணி தாயம்மா மேல் கொலை வெறி வந்தது. 
அடுத்து வந்த நாட்களிலும் தாயம்மா சிந்துவிடம் முகத்தை திருப்பிய படி தான் இருந்தாள். பூஸ்ட் காபி கொடுக்கும் போதும் கையில் கொடுத்தால் வாங்க மாட்டாள். அதனால் சிந்து தரையில் வைத்து விட்டு வந்து விடுவாள்.
இதில் சுந்தரம் வேறு அடிக்கடி கடுப்பேற்றுவார். ஒரு நாள் பூஸ்ட் ஆற்றிக் கொடுக்கும் போது “எதுக்கு சீனியே போடுற? அதான் நாட்டு சர்க்கரை வாங்கி வச்சிருக்கேன்ல? அதை போடு. நான் நாட்டு சர்க்கரை இல்லை போலன்னு நினைச்சேன். இருக்கும் போதே நீ இதை போட்டு கொடுக்குற?” என்று மிரட்டினார்.
“அட பாவிகளா? நான் இங்க வந்த இந்த நாலு மாசமும் சீனி தான் போட்டு ஆத்தி கொடுக்குறேன். இவரோட மகளும் சீனி தான் ஆத்திக் கொடுத்தாள். இதுல இந்த ஆள் இப்படி சொல்றாரே?”, என்று எண்ணம் வந்தாலும் “சரி மாமா”, என்றாள் சிந்து.
மற்றொரு நாள் “அத்தைக்கு இனி மஞ்சள் மிளகு பால் வேண்டாம். நாட்டு சர்க்கரை கலந்து பூஸ்ட் கொடு”, என்றார்.

அதை கொண்டு போய் கொடுத்தால் “எனக்கு இது வேண்டாம். சுக்கு காபி வேண்டும்” என்பாள். அடுத்த நாளில் அதைக் கொடுத்தால் “அத்தைக்கு இதையா கொடுக்க சொன்னேன்?”, என்று சுந்தரம் சொல்வார். 
இன்னொரு நாள் “தண்ணியை ரொம்ப கொட்டாதே. தெருவுல போகுது”, என்பார். “வேஸ்ட் தண்ணி தெருவுல போற மாதிரி பைப் வச்சா தெருவுல தான போகும்?”, என்று எண்ணி சோர்ந்து போனாள்.
எதற்கு எடுத்தாலும் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்க மன உளைச்சலுக்கு ஆளானாள் சிந்து. அத்தனை கோபமும் சித்தார்த்திடம் திரும்பியது. 
திடீரென்று தாயம்மா சிந்துவிடம் பேச ஆரம்பித்தாள். சிந்துவுக்கு பேசப் பிடிக்க வில்லை என்றாலும் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்வாள். சில நேரம் “இந்த பொம்பளை பேசாமலே இருந்திருக்கலாம்”, என்றும் நினைப்பாள்.
பழைய படி பாத்ரூமில் அழுக்கு துணிகளை துவைக்க போட்டாள். “ஐயோ பாவம்”, என்று துவைக்க நினைத்தாலும் சிந்துவின் தன்மானம் அதை செய்ய விட வில்லை. அங்கு கிடந்தாலும் அதை மட்டும் ஒதுக்கி போட்டு விட்டு தன்னுடைய துணியை மட்டும் துவைத்தாள். சுந்தரம் தான் தாயம்மாவின் துணியை எப்போதும் போல் இப்போதும் துவைத்தார். 
ஒரு நாள் இட்லி மாவுக்கு நனையப் போட்டு அரைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. அவளிடம் பேசிய படியே அங்கு அமர்ந்திருந்தான் சித்தார்த். 
அப்போது அங்கு வந்த தாயம்மா, “முதல்ல அரிசி போடணும், அடுத்து தான் உளுந்து போடணும்” என்றாள்.
“போட்டுட்டேன்ல, பரவால்ல”, என்றாள் சிந்து. 
“தண்ணியை ஊத்தி அரை”, என்றாள். இன்னும் மாற்றி மாற்றி எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள் சிந்து. 
அப்போது சித்தார்த் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் “அரிசியை எதுக்கு ஒரே தடவை போட்ட? ரெண்டு தடவையா போட்டுருக்கலாம்ல?”, என்று சொன்னது தான் தாமதம் அவனிடம் பாய்ந்து விட்டாள் சிந்து.
“நீங்களா மாவு அரைக்கீங்க? நான் தான அரைக்கேன். சும்மா நொய் நொய்ன்னு பேசிட்டு இருக்கீங்க? பேசாம இருந்தா இருங்க. இல்லை தூர போங்க”, என்று கடுப்புடன் கத்தி விட்டாள். அந்த கத்தல் தனக்கானது தான் என்று உணர்ந்த தாயம்மா அங்கிருந்து சென்று விட்டாள்.
பாவமாக அமர்ந்திருந்த சித்தார்த் அருகில் அமர்ந்தவள் அவன் கைகளை பற்றிக் கொண்டு, “நீங்க பாத்தீங்க தானே உங்க அம்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை திட்ட முடியாம தான் உங்களை திட்டுனேன். நீங்களும் தான் எதுக்கு அப்படி சொல்லணும்? இத்தனை நாள் அரைக்கேன் தானே? எனக்கு தெரியாதா?”, என்று கேட்டு அவனை சமாதான படுத்தினாள்.
அதன் பின் வந்த நாட்களில் தாயம்மா மற்றும் சிந்து பேசவே இல்லை. தாயம்மா பேச வில்லை என்று சிந்து வருத்தமும் பட வில்லை. ஆனால் பேசாத ஆளிடம்‌ போய் சாப்பாடு எடுத்து வைக்கவா? டீ போடவா என்று கேட்க தான் கடுப்பாக இருக்கும். 
அடுத்து தலை தீபாவளிக்கு ராணி, சுந்தரம் இவர்களை அழைக்க வந்திருந்தார்கள். இவர்களுக்கு புது துணி எடுத்து வைத்திருந்தாள் ராணி. அரவிந்தும் வந்திருந்ததால் தீபாவளி சந்தோஷமாக இருந்தது.
திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆகி விட்ட நிலையில் சிந்துவுக்கு கரு தங்கவும் இல்லை. வேலைக்கு செல்லும் இடத்தில் சித்தார்த்திடம் விஸேஷம் உண்டா என்று கேட்க ஆரம்பித்தார்கள். 
அவர்களிடம் அவ படிக்கிறா என்று ஏதாவது சொல்லி சமாளித்தாலும் சிந்துவிடம் வந்து புலம்புவான். அவனுக்கு ஆறுதல் சொல்வாள் சிந்து. 
சில நேரம் தாயம்மா மற்றும் சுந்தரம் ஏதாவது எரிச்சல் படுத்தினால் “இந்த வீட்ல இருக்குற வரைக்கும் உங்களுக்கு குழந்தையே கிடைக்காது. என்னை எப்படி டென்ஷன் பண்ணுறாங்க தெரியுமா? இந்த டென்சன்ல எப்படி பேபி உருவாகும்?”, என்று அவனிடம் சண்டையும் போடுவாள். 
அடுத்த மாதமும் உருவாகாததால் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். அங்கே அந்த டாக்டரோ, வெறும் ரத்தம் ஏறுவதற்காக மாத்திரை கொடுத்து விட்டு அந்த ஸ்கேன் இந்த ஸ்கேன் எடுக்கணும் என்று சொல்லி பீசையும் அதிகம் பிடுங்கி கொண்டாள். 
“இன்னும் ரெண்டு மாசம் பாப்போம்”, என்று முடிவு செய்து எந்த ஸ்கேன்னும் எடுக்காமல் வந்து விட்டார்கள். 
ஓரளவு நடக்க முடிந்தாலும் முழுதாக கால் வலி சரியாகாததால் தாயம்மா திடீரென்று சர்ச்க்கு போக ஆரம்பித்தாள். கோயிலுக்கு வரும் வரிக் காரர்கள் எதுக்கு அங்க போறாங்க என்று திட்டினார்கள். யார் சொல்லியும் கேட்காமல் தாயம்மா சென்றாள்.சில நேரம் நைட் ஜெபத்துக்கு அங்கேயே தங்கியும் விடுவாள். 
அப்போது ஒரு நாள் கல்யாண ஆல்பம் வாங்கிக் கொண்டு வந்தான் சித்தார்த். அதில் ராணி இருவருக்கும் நெற்றியில் சிலுவை போடும் போட்டோவைப் பார்த்து “பிள்ளையார் கோயிலுக்கு யேசு வந்துட்டார்”, என்று நக்கல் அடித்தார் சுந்தரம். 
திருமணம் அன்றும் நக்கல் செய்தார் தான். இப்போதும் சொன்னதும் “உங்க அம்மா சர்ச்க்கு போகலாம், எங்க அம்மா போக கூடாதோ?”, என்று திட்டினாள்.
“அவங்களுக்கு தோணுது போறாங்க. விடு சிந்து”, என்றான் சித்தார்த்.
“உங்களுக்கு விடுன்னு வார்த்தையை தவிர வேற ஒண்ணும் தெரியாதா? நீங்களும் தான் எங்க அம்மா எதுக்கு சர்ச்சுக்கு போறாங்கன்னு முன்னாடி திட்டினீங்க? உங்க அம்மா மட்டும் போகலாமோ?”
“தெரியாம சொல்லிட்டேன் போதுமா? இப்ப சண்டே நாம அங்க இருந்தா நான் தானே உங்க அம்மாவை கொண்டு போய் விடுறேன்”
“உங்க அப்பா எதுக்கு கிண்டல் செய்றார்? உங்க அம்மாவும் பல்லைக் காட்டுது. உங்க அப்பா தான் உங்க அம்மா ஆடுறது எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணுறார்னா நீங்களும் அதையே தான் செய்றீங்க?”
“நான் என்ன செஞ்சேன்?”
“எங்க அம்மா அன்னைக்கு சேலை அயர்ன் பண்ணப்ப சேலையெல்லாம் அயர்ன் பண்ணி தான் கட்டுவாங்களோன்னு நக்கல் அடிச்சீங்க. ஆனா உங்க துணியை அயர்ன் க்கு கொடுக்கும் போது உங்க அம்மா சேலையும் கொண்டு போனீங்க தானே?”
“அது….”
“இருங்க நான் இன்னும் முடிக்கலை. உங்க அம்மா சர்ச்சுக்கு போறதுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லலை. ஆனா எங்க அம்மாவை எதுக்கு அங்க எல்லாம் போறாங்கன்னு சொன்னீங்க. அப்புறம் உங்க அம்மா அழுக்கு துணியை பாத்ரூம்ல உள்ளாடை தெரியுர மாதிரி எல்லாரும் பாக்குற மாதிரி போடுது. எங்க அம்மா அன்னைக்கு பாத்ரூம்ல நைட்டியை போட்டதுக்கு திட்டினீங்க?”
“இதெல்லாம் எதேர்ச்சியா நடந்தது சிந்து?”
“இன்னொரு தடவை எங்க அம்மாவை ஏதாவது சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்றாள் சிந்து. 
அடுத்த பிரச்சனை சித்தார்த்தின் பாட்டி ரூபத்தில் வந்தது. என்பத்தி ஒன்பது வயதாகியும் கெதியாக இருக்கும் அந்த பாட்டி. ஒரு கம்பை கையில் வைத்துக் கொண்டு அடிக்கடி சித்தார்த் வீட்டுக்கு வந்து விடும். வரும் போதெல்லாம் சிந்து ஏதாவது சாப்பிட குடுப்பாள்.
சில நேரம் “இப்ப தான் மாரி காபி கொடுத்தா சிந்து. எனக்கு வேண்டாம்”, என்று சொல்லுவாள் பாட்டி. ஆனால் அந்த பாட்டி வந்தால் தாயம்மா திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.
“சொந்த பேத்தியா எப்படி முகத்தை திருப்பிட்டு போறா பாரு. நேத்து என் மகன் கிட்ட வீட்ல ஓடு விழுற மாதிரி இருக்கு மாத்தணும்னு சொல்றேன். உள்ள இருந்து கேட்ட உன் மாமியா வெளிய வந்து உங்களுக்கு இது தேவையான்னு என் மகனை திட்டுறா”,என்று சிந்துவிடம் புலம்புவாள். அதே போல வெள்ளி செவ்வாய் கோயிலுக்கும் நடந்தே வந்து விடுவாள். 
வரும் போது சில நேரம் மாங்காய், முருங்கை காய், கீரை என்று கொண்டு வருவாள். அப்போதெல்லாம் சுந்தரமும் தாயம்மாவும் வாயை மூடிக் கொண்டு தான் இருந்தார்கள். திடீரென்று தாயம்மா என்ன நினைத்தாளோ?
ஒரு நாள் அந்த பாட்டி கீரை கொடுத்ததும் அன்று மாலை சிந்துவும் சித்தார்த்தும் அதை உருவி அடுத்த நாள் காலையில் வைக்க வேண்டும் என்று எடுத்து வைத்தார்கள். 
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் “அந்த கிழவி கொடுத்ததை வைக்காதே. தூர போடு”,என்றாள் தாயம்மா.
“அதை குப்பையை நீக்கி கிளீன் பண்ணி எடுத்து வச்சிட்டேனே?”, என்றாள் சிந்து.
“அதான் அவ தூர போடுன்னு சொல்றாள்ள? எங்க அம்மா இனி என்ன கொடுத்தாலும் வாங்காத. இங்க கொடுத்துட்டு சுந்தரம் வீட்டுக்கு கீரை கொடுத்தேன்னு சொல்லிக்கிட்டு அலையும்”, என்றார் சுந்தரம்.
கஷ்ட பட்டு நேரம் செலவு செய்து எடுத்து வைத்ததை குப்பையில் போடும் போது சிந்துவுக்கு கஷ்டமாக இருந்தது.  
“எதுக்குப்பா? பாட்டி கொடுத்தது தானே? இவ்வளவு நேரம் கஷ்ட பட்டு கிளீன் பண்ணிருக்கோம்?”,என்று சித்தார்த் கேப்பான் என்று அவள் எதிர் பார்க்க “அவனும் தூர போடு சிந்து”, என்றான். அந்த விஷயத்தில் அன்று இரவு இருவருக்கும் சண்டை நடந்தது. 
கார்த்திகை மாதத்தில் “இன்னும் அஞ்சு நாள்ல மாலை போட போறேன்”, என்று அறிவித்தான் சித்தார்த். அவன் வருடம் வருடம் பழனிக்கு ஒரு மாதம் மாலை போடுவான் என்று தெரிந்தாலும் இந்த வருஷம் தேவையா என்று தான் சிந்துவுக்கு தோன்றியது.
ஆனால் கடவுளுக்கும் அவனுக்கும் தான் குறுக்க நிற்க வேண்டுமா என்று நினைத்த சிந்து “உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்க”, என்று சொல்லி விட்டாள். 
ஆனால் கார்த்திகை ஆரம்பிக்கும் நாள் சிந்துவுக்கு பீரியட்ஸ் வரும் நாள் என்பதால் அதற்கு முந்தைய நாளே சிந்துவை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான்.
அடுத்த நாளில் இருந்து விரதம் ஆரம்பமானது. காலையில் இருந்து இரவு வரை தண்ணீர் மட்டுமே சித்தார்த் குடிப்பான். இரவு விரத சாப்பாடை தாயம்மா தான் தயார் செய்தாள்.
சித்தார்த் மாடியில் தங்கிக் கொண்டான். ஐந்து நாட்களில் சிந்துவை அழைத்து வந்து விட்டான். மாலையில் விரத சாப்பாடு செய்ய ஆரம்பிக்கும் போது “நான் ஏதாவது செய்யவா?”, என்று கேட்டாள் சிந்து.
“காய் வெட்டு”, என்று தாயம்மா சொன்னதும் அதை அவள் செய்யும் போது “அப்படி வெட்டாதே, இப்படி வெட்டு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள் தாயம்மா.
“ஏன்  தான் கேட்டோமோ?”, என்று நினைத்த சிந்து அடுத்த நாளில் இருந்து வீட்டை பெருக்குவது முத்தம் தெளிப்பது என்று அந்த வேலையில் இறங்கி விட்டாள். 
ஆனால் அடுத்த இரண்டு நாளில் மாலை ஐந்து மணி ஆகியும் தாயம்மா சாப்பாடு ஆக்க ஆரம்பிக்க வில்லை என்று சிந்துவே செய்தாள். ஆனால் கொஞ்சம் நேரம் அதிகமாகி விட்டது.
“ஏன் லேட்?”, என்று கேட்டான் சித்தார்த். “இத்தனை நாள் உங்க அம்மா தான செஞ்சாங்க. இன்னைக்கு டி‌வி பாத்துட்டே இருந்தாங்க. எந்திக்கவே இல்லை. நேரம் ஆய்ட்டுன்னு நானே செஞ்சேன். ஒரு வார்த்தை நீ செய் மான்னு சொல்ல வேண்டியது தான?”, என்று கேட்டாள் சிந்து.
“ஏன் நான் செய்யட்டுமா அத்தைன்னு நீ கேக்க வேண்டியது தான?”
“அதானே என்ன நடந்தாலும் நீங்க உங்க அம்மாவுக்கு தான சப்போர்ட் பண்ணுவீங்க”
“சரி சரி விடு. கோயிலுக்கு போய்ட்டு வந்து விரதம்
முடிப்போம்”, என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டான். 

Advertisement