Advertisement

அதை புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு குழம்பு நல்லா இருந்துச்சுன்னு அப்பா சொன்னாரு. எங்க பெரியம்மா போன் பண்ணி உன்னைப் பத்தி கேட்டாங்களாம்ம். அவ தான் எல்லா வேலையும் செய்றான்னு அம்மா சொல்லிருக்காங்க”,என்று சொல்லி தாயம்மா மற்றும் சுந்தரத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க முயன்றான்.
மனதில் இருந்த வலி அவர்கள் பேச்சை எடுத்தாலே அவளை சகஜமாக இருக்க விட வில்லை. செவ்வாழை விசயத்துக்கு பின்னர் தேவை இல்லாமல் பாஸ்கரிடம் சிந்து பேச வில்லை. இவள் எதார்த்தமாக பேச போக சுந்தரம் அசிங்கமாக ஏதாவது சொல்லி விட்டால் சிந்து சாகும் வரை அவர் முகத்தில் விழிக்க மாட்டாள். அதனால் பாஸ்கர் வீட்டுக்கு வந்தாலே சிந்து தன் அறைக்கு சென்று விடுவாள். 
ராணியிடம் மாமனார் சொன்னதை சிந்து சொன்னதும் “அந்த பையன் உன்னை அவங்க பொண்ணா நினைச்சு ஒரு அக்கரைல தான் சொல்லிருக்காங்க. உங்க மாமனார் தான் தப்பா புரிஞ்சிருக்கார். சரி பெரியவங்க இப்படி தான் இருப்பாங்க. பொறுமையா இரு”, என்று சிந்துவுக்கு ஆறுதல் சொன்னாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து பயம் வந்தது ராணிக்கு. 
சுந்தரம் மற்றும் தாயம்மா பற்றி பேச்சை எடுக்காதவரைக்கும் அவர்கள் அறையில் சிந்துவும் சித்தார்த்தும் காதல் பறவைகள் தான். ஆனால் அவர்களின் பேச்சு வந்தாலோ, அவர்கள் அவளை ஏதாவது சொன்னாலோ சித்தார்த்திடம் மொத்த கோபத்தையும் காட்டினாள். அப்படி சண்டை வரும் போது மட்டும் காதல் பறவைகளாய் இராமல் இரு துருவமாய் நிற்பார்கள். 
இப்படி இருக்கும் போது ஒரு நாள் சென்னையில் சித்தார்த்துக்கு மீட்டிங் போட்டிருந்தார்கள். அதை அறிந்த பிரேமாவும், “சிந்துவை கூட்டிட்டு வா சித்தார்த். ரெண்டு நாள் லீவ் போடு”, என்றாள்.
“லீவ் இல்லைக்கா. நான் காலைல வந்துட்டு நைட்டே கிளம்பிருவேன். அவளை இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டான்.
அவனை பிரிந்திருக்க முடியாமல் அவள் தவிக்க, அவளுடைய வாசனை இல்லாமல் எப்படி இருக்க என்று அவன் போக முடியாமல் துடித்தான்.
“பேசாம ரெண்டு நாள் தானே? உங்க வீட்ல போய் இரு சிந்து”, என்று அவன் சொல்லி இருந்தால், அவள் அங்கே போயிருந்தால் சிந்துவின் மனதில் ஒரு பள்ளம் விழ நேராமல் தடுத்திருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது. 
அன்று இரவு சித்தார்த் சென்னை கிளம்பி விட்டான். போகும் முன் “நான் தான் இந்த தளவாணின்னு நினைச்சிக்கோ செல்லம், லட்டு பாப்பா, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் டி. நாளான்னைக்கு காலைல வந்துருவேன் சரியா டி செல்லம்? ஒழுங்கா சாப்பிடு”, என்று கொஞ்சி விட்டு தான் சென்றான். 
அவளும் “சரி பாப்பா, சரியான அமுல் பாபி. டிரைன் ஏறிட்டு போன் பண்ணுங்க”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள். 
இருவருமே மாற்றி மாற்றி பாப்பா பாப்பா என்று தான் சில நேரம் கொஞ்சிக் கொள்வார்கள். சில நேரம் மௌன பாசையும் உண்டு. அவர்களுக்கு மட்டுமே அது புரியும். அது கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான புரிதல். சுந்தரம் தாயம்மா அவளுக்கு குடைச்சல் கொடுக்கும் போதெல்லாம் சிந்து சித்தார்த்தை வறுத்து எடுதாலும் அவனை அதிகம் தேடுவாள். அவனிடம் கத்தி தீர்த்து விட்டால் அவள் கோபமும் குறைந்து விடும்.

அவன் இல்லாத வீடு வெறுமையை அழித்தாலும் அவள் வேலையை சரியாக செய்தாள். பகலில் அவன் வேலைக்கு செல்லும் போது இப்படி தனிமையாக உணர மாட்டாள். ஆனால் நான்கு மணிக்கே எப்போது ஐந்தரை ஆகும் என்று காத்திருப்பாள் சிந்து. அவளின் தேடல் சித்தார்த்துக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் அவன் இல்லாத இரவு அவளுக்கு கஷ்டமாக இருந்தது. 
ஒவ்வொரு நாள் வேலை முடிந்து வரும் போது “செல்லம் என்னை தேடுச்சா?”, என்று அவன் கேட்கும் போது “ஹிம், ரொம்ப ரொம்ப”, என்று சொல்லி அவன் கழுத்தை கட்டிக் கொள்ளும் தருணங்கள் அழகானது இருவருக்கும். 
ஆனால் இரவில் இது வரை அவன் இல்லாமல் இருந்ததில்லை. திருமணத்துக்கு பின் வந்த முதல் பிரிவு இருவரையும் வதைத்தது. 
ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் பேசிக் கொண்டு தான் இருந்தான் சித்தார்த். 
அதிகாலையில் பிரேமா வீட்டுக்கு சென்று குளித்து முடித்து மீட்டிங் சென்றவன் மாலை ஆறு மணிக்கு மீண்டும் பிரேமா வீட்டுக்கு வந்து ஊருக்கு கிளம்பி விட்டான்.
எட்டு மணிக்கு அவன் அங்கே பஸ் ஏறிக் கொண்டிருக்கும் போது இங்கே சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தாள் சிந்து. 
அப்போது அங்கே வந்த தாயம்மா, “ஏ தாயீ சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத”, என்று ஆரம்பித்தாள்.
“இந்த அத்தை பேசுனாளே வில்லங்கம் தானே வரும்”,என்று எண்ணிக் கொண்டு “என்ன அத்தை சொல்லுங்க?”,என்று கேட்டாள். 
“இந்த தாலிசெயினை கழட்டி பீரோல வச்சிரு. கழுத்துலே போட்டுருந்தா தேஞ்சி போயிரும். அழுக்கா ஆகிரும். மாரியெல்லாம் பாரு, எங்கயாவது போனா தான் போடுவா”, என்று சொன்னதும் விதிர்த்து போனவள் வந்த கண்ணீரை வெளி விடாமல் தடுத்தாள்.
“இந்த பொம்பளை முன்னாடி இப்ப அழுதுராத சிந்து”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு “சரி”, என்றாள் சிந்து.
அந்த குரலில் இருந்த கோபத்தை உணர்ந்த தாயம்மா “கோபமா தாயி?”, என்று கேட்டாள்.
“அப்படி எல்லாம் இல்லை அத்தை”,என்று சொல்ல வந்தவள் “அப்படி எல்லாம் இல்லை”, என்று மட்டும் சொன்னாள்.
இப்போது புரிந்தது மாரி எதனால் அன்று என்ன மாமா என்று கேட்காததற்கு காரணம். ஏன் என்றால் உறவு என்பது வெறும் வாய் வார்த்தையாக வரக் கூடாது. உள்ளார்ந்த அன்பில் வர வேண்டும். 
“இப்படி வெறுப்பு இருந்தா எப்படி அத்தை மாமான்னு கூப்பிட தோணும்?”, என்று எண்ணிக் கொண்டாள். 
ஆனால் அவள் உள்ளம் கொதித்தது மட்டும் நிஜம். சாதாரணமாக அல்ல உலைகலமாக கொதித்தது. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் சிந்துவுக்கு தாலிசெயின் ஒரு கனவு. அவள் ஒன்றும் ஏழு பவுன் கேட்க வில்லையே. சின்னதாக தானே கேட்டாள்.
அவள் மனது ஏழு பவுன் செயினுக்கு ஆசை பட வில்லை. திருமணம் ஆகி விட்டது என்று காட்ட நினைத்து அதை போட ஆசைப் பட்டாள். 
ஏனென்றால் அடுத்த பெண்களைப் பார்த்து அவள் ஏங்கின விஷயம். அவள் தாலிகயிரை வேறு தாலிசெயினை வேறு என்று பார்க்க வில்லை. அவளைப் பொறுத்த வரை இரண்டுமே ஒன்று தான். திருமணம் முடிந்து மூன்று மாதம் கழித்து தான் தாலிகயிரை அவிழ்க்க வேண்டும் என்பதால் தான் அந்த கயிரைப் போட்டிருந்தாள். 
கயிறு போடவும் அவளுக்கு பிடிக்கும் தான். ஆனால் அவளால் மஞ்சள் போட்டு அந்த கயிரை பராமரிக்க முடிய வில்லை. மஞ்சள் போட்டு அறைக்கு வந்தால் சில நேரம் சித்தார்த்தின் பனியனில் கரை படிகிறது. 
மஞ்சள் போட வில்லை என்றால் அந்த கயிறு அசிங்கமாக  தெரிகிறது. அதனால் மூன்று மாதம் கழித்து தாலிசெயினில் தான் தாலியை கோர்த்து போட வேண்டும் என்று அந்த நாளுக்காக காத்திருந்தாள்.
“இவங்க போட்ட செயின், அதனால தான கழட்ட சொல்றாங்க. அதை இவங்களே வச்சிக்கட்டும். இனி எனக்கு இது வேண்டாம். இதை என் கழுத்துல போட்டவன் காலைல வரட்டும். அவனை விட்டே கழட்ட வைக்கிறேன்”, என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்.
அவள் குரலை வைத்தே எதுவோ சரி இல்லை என்று உணர்ந்த சித்தார்த் என்னவென்று கேட்டதுக்கு “என் கவலை மட்டும் என் முகம் பாக்கமலே எப்படி தான் இந்த அம்மாவும் சித்தார்த்தும் கண்டு பிடிக்காராங்களோ?”, என்று எண்ணினாலும் அவன் அன்பில் உள்ளம் சிறிது பூரித்தது. “ஒண்ணும் இல்லை.நீங்க பத்திரமா வாங்க”, என்று சொல்லி அவனை திசை திருப்பினாள்.
அன்றைய இரவு சிந்துவுக்கு தூங்கா இரவாகிப் போனது. இத்தனை நாள் ஆசையாக போட்டிருந்த அந்த செயின் இப்போது அவள் கழுத்தை அறிப்பது போலவும் நெரிப்பது போலவும் இருந்தது. 
எப்போது அவன் வருவான் என்று காத்திருந்தாள். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்த சித்தார்த்தை சிறு சிரிப்புடன் வரவேற்றவள் அவன் நெஞ்சில் இறுக்கமாக சாய்ந்து கொண்டாள். 
அவனும் அவளை அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து இருவரும் விலகியதும் “நான் கொஞ்ச நேரம் படுக்குறேன் சிந்து”, என்று சொன்னான் சித்தார்த்.
“ஒரு நிமிஷம் இருங்க”
“என்னமா?”
“இந்த செயினை கழட்டுங்களேன்”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாலும் “எதுக்கு செல்லம்?”, என்று கேட்டான்.
“நீங்க கழட்டுங்க சொல்றேன்”, என்று விடா பிடியாக சொன்னதும் அதை அவனே கழட்டி அவள் கையில் கொடுத்தான்.
அதை வாங்கிய சிந்து அடுத்த நொடி அதை அங்கிருந்த பெட்டில் வீசியிருந்தாள். 
“சிந்து என்ன ஆச்சு மா? என்ன டா ஆச்சு?”, என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான் சித்தார்த். 
“இதை என் கழுத்துல போட்டிருந்தா தேஞ்சிருமாம். அழுக்கா ஆகிருமாம். அவங்க மூத்த மருமக தினமும் போடுறது இல்லையாம். அதனால உங்க அம்மா என்னை கழட்ட சொன்னாங்க. நான் கழட்டிட்டேன்”
“உங்க அம்மான்னு சொல்லாத சிந்து”
“உங்க அம்மா தான அவங்க? இனி மத்தவங்க முன்னாடி தான் அத்தைன்னு சொல்லுவேன். மித்த படி அவங்க எனக்கு யாரோ தான்”
“இதை போடு மா, போடு சிந்து. இரு நான் போட்டு விடுறேன். கழுத்து வெறிச்சோடி இருக்கு டி”
“நீங்க போடுங்க போட வேண்டாம்னு சொல்லலை. உங்க பணத்துல ஒரு மூணு பவுன்ல வாங்கி போடுங்க. சந்தோஷமா போட்டுக்குறேன். ஆனா இனி செத்தாலும் இந்த செயினைப் போட மாட்டேன்”
“அப்ப இதை என்ன செய்ய?”
“உங்க அம்மா முகத்துல வீசுங்க. அது முடியாதுன்னா நீங்களே வச்சிக்கோங்க. அவங்க போட்டது உங்க பிள்ளைகளுக்கு வரட்டும். ஆனா எனக்கு இது தேவை இல்லை. இப்ப தூங்குங்க. எனக்கு சமைக்க வேலை இருக்கு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அந்த செயினை மற்ற நகைகளுடன் வைத்த சித்தார்த்துக்கு தூக்கம் அவனை விட்டு சென்றிருந்தது. 
அவள் கழுத்தை பார்த்து புரிந்து கொண்ட தாயம்மா “நான் சொன்னேனு தான் கழட்டிடியோ தாயி?”, என்று கேட்டாள்.
குரலிலும் முகத்திலும் எந்த உணர்வையும் காட்டாமல் “ஆமா”, என்றாள் சிந்து.
“வேணும்னா போட்டுக்கோ. உனக்கு கோபம் போல?”
“அதெல்லாம் வேண்டாம். கோபமும் இல்லை. இந்த பேச்சை விடுங்க”, என்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
அதன் பின் சித்தார்த் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் அதை செய்ய வில்லை. அந்த வார இறுதியில் சிந்து வீட்டுக்கு கிளம்பிய போது அதை அணியாமல் தான் கிளம்பினாள். 
“தாலி செயினை எடுத்து போடு”, என்றாள் தாயம்மா.
“இல்லை எனக்கு வேண்டாம்”, என்று புன்னகையோடு சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் சிந்து.
“அதை போடலாம்ல சிந்து. எங்க அம்மா கண்ணு கலங்கிருச்சு”
“உங்க அம்மா அழுதா அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது”
“அப்ப நானும் உங்க வீட்ல எப்படி இருக்கணுமோ அப்படி இருந்துக்குறேன்”
“பிளாக் மெயிலா? இங்க பாருங்க நீங்க லாஜிக்கே இல்லாம மிரட்டுனா நான் ஒண்ணும் செய்ய முடியாது. எங்க வீட்ல உங்களை அவமான படுத்துற மாதிரியோ மதிக்காத மாதிரியோ ஏதாவது செஞ்சா நானே அங்கே போக மாட்டேன். அப்படி அவங்க ஏதாவது செஞ்சாங்களா? உங்க அம்மா இஷ்டதுக்கு என்னை பந்தாடுவாங்க. நான் பொறுத்து போகனுமோ?”, என்று கேட்டதும் அவள் மனதை மாற்ற வேற பேச்சை எடுத்தான். 
ஆனால் அவளோ “இந்த பிரச்சனை  முடிஞ்சிருச்சுன்னு நினைக்காதீங்க. நாளைக்கு எங்க அம்மா உன்னை போட சொல்றாங்கன்னு சொல்லி என்னை நீங்க கம்பல் பண்ணா என் முகத்தை அவங்க கிட்டயும் காட்ட வேண்டி யிருக்கும். இந்த விஷயத்தை இதோட முடிக்கிறது தான் நமக்கு நல்லது”, என்று சொல்லி முடித்தாள்.
செயின் எங்கே என்று கேட்ட ராணியிடம் நடந்த அனைத்தையும் ஒப்பித்து விட்டாள் சிந்து. மனம் வருந்திய ராணிக்கு “எதுக்கு இவங்க இப்படி பண்ணுறாங்க?”, என்று கோபமாக வந்தது.
“பெத்த மக மாதிரி பாத்துக்குவேன்னு உன் மாமியார் சொன்னாங்க சிந்து. ஆனா இப்படி கஷ்ட படுத்துராங்க”, என்று புலம்பினாள் ராணி.
“அத்தனையும் நடிப்பு மா. பெத்த பொண்ணு மாதிரியா? அவங்க என்னை வேலைக்காரியா தான் நடத்துராங்களோன்னு தோணுது மா”
“வீட்ல வேலை பாக்குறது தப்பு இல்லையே சிந்து?”
“வேலை பாக்குறது எல்லாம் கஷ்டமே இல்லை மா. ஆனா, அன்னைக்கு எனக்கு சரியான ஜலதோஷம், கண்ணுல இருந்து மூக்குல இருந்து தண்ணியா வருது. வீடு கூட்டணுமேன்னு குனிய முடியாம கூட்டிட்டு இருக்கேன். எங்க மாமியார் சளி புடிச்சிருச்சோன்னு கேட்டாங்க. நானும் ஆமான்னு சொன்னேன். எங்க மாமனார் கிட்ட நல்ல சளி பிடிச்சிருக்கு போல? அவங்க வீட்ல நைட் மாடில இருந்துருப்பாங்க. அதான் பிடிச்சிருக்கும்ன்னு சொல்லி வேற கதை பேசிட்டு இருக்காங்க. எனக்கு எப்படி இருக்கும்?”
…..
“அந்த இடத்துல நீங்களா இருந்தா என்ன மா செஞ்சிருப்பீங்க? நீ பெருக்காத வச்சிருன்னு சொல்லிருப்பீங்கல்ல மா? அவங்க பொண்ணா இருந்தா அதை தான் மா சொல்லிருப்பாங்க. இவங்க டார்சல் தாங்க முடியாமல் தான் அந்த அக்கா தனியாவே இருந்துக்குறேன்னு சொல்லிருக்காங்க. நிறைய பண்ணுறாங்க மா. எல்லாத்துக்கும் குறை சொல்றாங்க. எனக்கு தெரியாதா மா, சாம்பார்க்கு எப்படி காய் வெட்டணும், கூட்டுக்கு எப்படி வெட்டணும்னு? இப்படி வெட்டணும், நீ இப்படி வெட்டிருக்கன்னு சொல்றாங்க. சரி நான் தப்பா வெட்டி குழம்பு நல்லா இல்லைன்னு தூர ஊத்த வேண்டியது தான? சட்டியோட காலியாகிருது. கடுப்பா இருக்கு மா”
“விடு சிந்து”
“விட முடியலை மா. அந்த ஹாஷினி பிள்ளையை இவங்களே அங்க இருந்து கூட்டிட்டு வந்து அந்த அக்கா பிள்ளையை பாக்க மாட்டிக்கா. சாப்பாடு ஊட்ட மாட்டிக்கான்னு அந்த அக்காவை திட்டுராங்க. அந்த பிள்ளை இங்க வந்து டி‌வி பாக்கணும்னு சொன்னா, எங்க மாமியார் நாடகம் பாத்துக்கிட்டு மாத்த மாட்டேன்னு சொல்லுது. அந்த பிள்ளை அழுது டார்ச்சல் பண்ணுது. அவளை தூக்குனு சொல்லி என்கிட்ட கோர்த்து விடுறாங்க. அந்த பிள்ளையையும் நான் தான் பாத்துக்கணும். அவ வீட்ல இருந்து கூட்டிட்டு வரலைன்னா எனக்கு டார்சல் குறையும்ல? அந்த பிள்ளை அவங்க வீட்ல உள்ள பொருளை ஏதாவது செஞ்சா அதை செய்யாத உடஞ்சிரும், இதை செய்யாத உடஞ்சிரும்னு சொல்லி தடுக்குறாங்க. ஆனா நம்ம வாங்கி போட்ட சோஃபாவை அவங்க கண்ணு முன்னாடியே நகத்தை வச்சு கீறி கிழிச்சு அசிங்கமாக்கிட்டா. ஆனா அவளை ஒண்ணுமே சொல்லலை”
“பொறுமையா இரு சிந்து மா”
“இது என் வீடுன்னு நினைச்சு தான் வீட்டுக்கு அழகா இருக்கும்னு சோஃபா வாங்குனோம். பேசாம வாசிங்க் மெஷின் இல்லைன்னா பிரிட்ஜ் வாங்கிருக்கலாம். அந்த பிள்ளைட்ட நான் சொல்லவும் செஞ்சேன் மா. எதுக்கு கிழிக்கிறேன்னு கேட்டதுக்கு ஒரு டைம் நான் கிழிக்கலை சின்னம்மான்னு பொய் சொல்லுது. இன்னொரு டைம் சொன்னதுக்கு சின்னம்மா என்னை திட்டுராங்கன்னு போட்டு கொடுக்குது. அப்படியே அவங்க ஆச்சி குணம். அது வீடே இல்லை மா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மனதின் பாரம் தாங்க முடியாமல் அழுது விட்டாள் சிந்து. 
காதல் தொடரும்….

Advertisement