Advertisement

அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே செய்தாள் சிந்து. 
ஆனால் சிந்துவும் சித்தார்த்தும் சிந்து வீட்டுக்கு சென்ற பின்னர் மீதி இருந்ததை மாற்றி வைக்க சோம்பேறி பட்டு சில்வர் டப்பாவை பிரிட்ஜில் தாயம்மா வைக்கும் போது “இவங்க மட்டும் செய்யலாமோ?”, என்ற எரிச்சல் வந்தது. 
சித்தார்த்துக்கு வாரத்தின் முதல் நாள் மட்டும் வார விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை சிந்து வீட்டுக்கு கிளம்பி அடுத்த நாள் இரவு வருவார்கள்.
ஆனால் போகும் போதே “சீக்கிரம் கிளம்ப வேண்டியது தானே? இருட்டுன அப்புறம் போறீங்க?”, என்று திட்டி தான் வழி அனுப்பி வைப்பார் சுந்தரம். 
நேரம் கழித்து போக வேண்டும் என்று சிந்துவுக்கு மட்டும் ஆசையா என்ன? ஐந்தரைக்கு சித்தார்த் வேலை முடிந்து வந்ததும் அனைவருக்கும் டீ பால் என்று விதவிதமாக ஆற்றிக் கொடுத்து அந்த பாத்திரத்தையும் விளக்கி போட்டு விட்டு ஆறரைக்கு கிளம்புவார்கள். ஆறரைக்கே இருட்டினால் சிந்து என்ன செய்வாள்.
“எதுக்கு போகும் போதே உங்க அப்பா இன்சல்ட் பண்ணுறாங்க?”, என்று அவனிடம் கேட்டால் “எனக்கு பழகிருச்சு உனக்கும் பழகிரும்”, என்பான்.
அதை ராணியிடம் சிந்து புலம்பிய போதோ “அக்கரைல சொல்லிருக்காங்கன்னு நினைச்சிக்கோ சிந்து”, என்றாள். 
திரும்பி வரும் போதும் அதே திட்டு தான் இருக்கும். உள்ளே வந்ததும் உங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க என்று கேக்க மாட்டார்கள். 
“அங்க இருந்து சீக்கிரமாவே வர வேண்டியது தான? ஏழு மணிக்கு வாரீங்க”, என்ற காரசாரமான வரவேற்பு தான் கிடைக்கும்.
அதனால் அடுத்த வாரத்தில் இருந்து ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்து விடுவார்கள். 
சில சமயம் “இப்படி எல்லாம் டார்ச்சல்
பண்ணுணதுனால தான் மாரியக்கா, மச்சான் பாரின் போனப்ப  தனியா கூட இருந்துக்கலாம், ஆனா இவங்க கூட இருக்க முடியாதுன்னு தான் இத்தனை வருஷம் தனியா இருந்தாங்களா?”, என்ற கேள்வி பிறந்தது சிந்துவுக்கு. 
அந்த வார வெள்ளிக் கிழமை “வா சிந்து கோயிலுக்கு போகலாம்”, என்றான் சித்தார்த். 
“நான் அங்க வரலை. நீங்க போய்ட்டு வாங்க”
“ப்ச் கோயிலுக்கு தான கூப்பிடுறேன் வா. வீட்லே இருந்தாலும் உனக்கும் ஒரு மாதிரி இருக்கும்”
“ரொம்ப தான் அக்கறை. அப்படி அக்கறை இருந்தா எங்கயாவது ஹனிமூன் கூட்டிட்டு போக வேண்டியது தான?”
“நான் என்ன செய்ய சிந்து? எனக்கு லீவ் கொடுக்க மாட்டிக்காங்க”
“இப்படியே சொல்லுங்க”
“ஆமா, நீ தான் உனக்கு எங்கயும் போக பிடிக்காதுன்னு சொல்லுவியே? இப்ப என்ன?”
“ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சிகோங்க. எனக்கு எங்கயும் போக பிடிக்காது தான். ஆனா உங்க கூட போக பிடிக்கும். ரெண்டாவது எங்கயும் போக பிடிக்காதவ இப்ப போகணும்னு சொல்றேனா, உங்க வீட்ல இருக்குறப்ப என் மனநிலை எப்படி இருக்குனு புரிஞ்சிக்கோங்க”
“அந்த அளவுக்கு உன்னை யாரு என்ன பண்ணிட்டா?”
“நான் என் பிரச்சனையை எப்படி சொன்னாலும், கடைசில நீங்க இந்த கேள்வியை தான கேப்பீங்க? உங்க கிட்ட சொல்லி வேஸ்ட். நீங்க கோயிலுக்கு போங்க. எனக்கு சேலை கட்ட நேரம் எடுக்கும். அதுக்குள்ள டைம் ஆகிரும்”
“பேசாம சுடிதார் போட்டுட்டு வா. போன வாரம் மாரி கூட சுடிதார் தான் போட்டுட்டு வந்தா. வா செல்லம் பிளீஸ்”
“சரி சரி வரேன்”, என்றவள் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு அவனுடன் சென்றாள்.
அங்கே சாமியை சுற்றி கும்பிட்டு, சுந்தரம் பூஜை செய்து விபூதி பூசுவது வரை அனைத்தும் சரியாக தான் சென்றது. 
ஆனால் சிறிது நேரம் அமரலாம் என்று அமரும் போது தான் “கோயிலுக்கு சுடிதார் போட்டுட்டு வராத மா. சேலை கட்டு. அடுத்தவங்க அப்படி இருக்காங்கன்னு நாமளும் அப்படி இருக்கணும்னு இல்லை”, என்று சொன்னார் சுந்தரம்.
ஒரு விட அவமானமும், கோபமும் சிந்து மனதில் உருவானது. சித்தார்த்தை பார்த்து உக்கிரமாக முறைத்தாள். 
“நம்ம கோவில் தானேப்பா? நம்ம மூணு பேர் தானே இருக்கோம்? வேற யாரும் தான் இன்னைக்கு வார மாட்டாங்களே? சுடிதார் போட்டா என்ன?”, என்று சித்தார்த் கேப்பான் என்று எதிர் பார்த்தாள்.
அவனோ “அவ சேலை கட்டுறேன்னு தான் சொன்னா. நான் தான் நேரம் ஆகிட்டுனு சுடிதார் போட சொன்னேன். இனி அப்படி போட மாட்டா”, என்று சொன்னான் சித்தார்த். 
அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் திரும்பிக் கொண்டாள் சிந்து. 
வீட்டுக்கு வந்ததும் “எங்க அப்பா கூட என்னை அது போடாத, இது போடாதேன்னு சொன்னது இல்லை. இவர் எப்படி என்னை சொல்லலாம்? நான் என்ன அவ்வளவு கேவலமாவா டிரஸ் போட்டுருக்கேன். இதுக்கு மேல கண்ணியமா டிரஸ் பண்ண முடியாது. உலகத்துல ஆயிரம் கோவில் இருக்கு. அங்க எல்லாம் பொண்ணுங்க சுடிதார் போட்டுட்டு போக தான் செய்றாங்க. உங்க கோவில் அதை விட பெருசுன்னா, நான் அந்த கோயிலுக்கே வரலை போதுமா? இனி வரவே மாட்டேன்”, என்று கத்தி தீர்த்து விட்டாள். 
“சரி சரி கத்தாதே. கடைசி வெள்ளிக்கு மட்டும் சேலை கட்டிட்டு வா. மத்த நேரம் நான் மட்டும் போய்க்கிறேன். அவர் சொன்னதுக்கு என்கிட்ட எதுக்கு கோப படுற?”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் சித்தார்த். 
அதில் இருந்து அவனுடன் கோவிலுக்கு போவதை நிறுத்தி விட்டாள். கடைசி வெள்ளி மட்டுமே பொங்கல் வைப்பார்கள்.அதனால் அப்போது மட்டும் போகலாம் என்று முடிவெடுத்தாள். 
கடைசி வெள்ளி அன்று கோவிலுக்கு சென்றாள் சிந்து. பக்கத்து வீட்டில் இருந்தாலும் சிந்து மாரியை பார்க்க வில்லை. இப்போது கோவிலில் பார்த்ததும் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். 
பூஜை முடிந்து அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தான் இன்னொரு நல்ல விஷயம் தெரிந்தது. மாரி அடுத்த குழந்தைக்கு உண்டாகி இருந்தாள். 
“வாழ்த்துக்கள் கா”, என்று சிரித்தாள் சிந்து.
“சீக்கிரம் நல்ல செய்தி நீயும் சொல்லு சிந்து. அப்புறம் வேலை செய்ய பழகிட்டியா? கஷ்டமா இருக்கா?”
“ஆமாக்கா. அடுப்படிலே இருக்குற மாதிரி இருக்கு. சாப்பாடு கூட காலைல, மதியம் ரெண்டு டைம் வைக்கிறேன். நைட்டுக்கு சப்பாத்தி உருட்டிட்டே இருக்க வேண்டி இருக்கு. தனியா செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு”
“சித்தார்த் ஹெல்ப் பண்ணலையா?”
“அவங்களுக்கு அம்மா அப்பா கூட ஊருல இருக்குறவங்களை பத்தி கதை பேச தான் நேரம் இருக்கு”
“உன்னை காலைல மதியத்துக்கும் சேத்து தான சோறு வைக்க சொன்னேன்”
“அட போங்கக்கா. அப்படி செஞ்சதுக்கு மாமாக்கு சூடா சாப்பிட்டா தான் பிடிக்கும்னு சொல்றாங்கக்கா. சரின்னு எங்க வீட்டுக்காரர்க்கு குக்கர்ல வச்சா, குக்கர்ல வைக்காதேனு சொல்றாங்க. நர்மலா சோறு வடிச்சா, குழைச்சு வைன்னு சொல்றாங்க. குழைச்சு வச்சா எதுக்கு இப்படி குழைச்சு வச்சிருக்கன்னு சொல்றாங்க. எப்படிக்கா இவங்க கூட பத்து வருஷம் ஒண்ணா இருந்தீங்க?”
“நாங்க எங்க ஒண்ணா இருந்தோம்? நான் தனியா தான் இருந்தேன். என்கிட்ட இதை மாதிரி சொன்னா, ஒண்ணுமே செய்யாம தலை வலின்னு படுத்துக்குவேன். புலம்பிட்டே அவங்களே செய்வாங்க. நீ முடியலைன்னா அத்தையை சமைக்க சொல்லு”
“அவங்களா நான் செய்யவான்னு கேட்டா இதை செய்ங்கன்னு சொல்லுவேங்க்கா. ஆனா அவங்க காலைல லேட்டா எந்திக்காங்க. அப்புறம் சாப்பிட்டுட்டு டி‌வில உக்காருறாங்க. மதியம் சாப்பிட்டுட்டு தூங்குறாங்க. அப்புறம் சாயங்காலம் எங்க வீட்டுக்காரர் எல்லாம் சேந்து ஊருக்கதை பேசுறாங்க. இதுல எங்க அவங்க கிட்சன் பக்கம் வர?”, என்று சிந்து சொன்னதும் அவளை பரிதாபமாக பார்த்தாள் மாரி. ஆனால் மாரிக்கும் அடுத்து என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“சீக்கிரமே பிள்ளை உண்டாகிரு சிந்து. குழந்தை உண்டானா அஞ்சாறு மாசம் அம்மா வீட்ல இரு”, என்று அவள் மனதில் பட்டதை சொன்னாள் மாரி.
ஏற்கனவே சிந்துவுக்கும் சித்தார்த்துக்கும் சீக்கிரமே பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசை தான். அதனால் சந்தோஷமாக சரி சொன்னாள். 
ஆனால் அந்தோ பரிதாபம் அந்த மாதம் கரு தங்க வில்லை. அதை விட கொடுமையான விஷயம் அவள் விளக்கு ஏத்தாததால் சுந்தரம் ஏன் என்று தாயம்மா விடம் கேட்க தாயம்மா சிந்துவிடம் கேட்க மறுபடியும் சுந்தரத்துக்கு காரணம் சொல்ல பட்டது.
எச்சி தண்ணி எடுக்கும் மாரியின் அண்ணி சாந்தா இரண்டு நாள் வராமல் போக, பாஸ்கரிடம் “எதுக்கு சாந்தா தண்ணி எடுக்க வரலையாம்?”,என்று கேட்டார் சுந்தரம்.
“அவளுக்கு உடம்பு சரி இல்லை பா”, என்றான் பாஸ்கர். 
“என்ன ஆச்சாம்?”
“தலைக்கு ஊத்திருப்பா போல?”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் பாஸ்கர். 
அப்போது உள்ளே இருந்து வந்த தாயம்மா ”எதுக்கு சாந்தா வரலையாம்?”, என்று கேட்டாள்.
“அவளுக்கு டைமாம். அதான் வரலையாம்”, என்று சுந்தரம் சொன்னதற்கு “நேத்து போன் பண்ணி எதுக்கு வரலைன்னு கேட்டேன். நாளைக்கு வரேன்னு சொன்னா. ஏன் தலைக்கு ஊத்திருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே?”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள் தாயம்மா. 
கிட்சனில் இருந்து அவர்கள் பேசுவதை அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு ச்சி என்று தான் தோன்றியது. 
வெளியே சொல்ல முடியாத விஷயம் இங்கே சாதாரணமாக அலசப் படுவது சிந்துவுக்கு அருவருப்பைக் கொடுத்தது. 
அடுத்து வந்த நாட்களும் இதே போல் கழிய முன்பு எழுதிய பரிட்சையில் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாள் சிந்து. அதில் சந்தோஷப்பட்ட சித்தார்த் “இன்னும் ஒரு எக்ஸாம் தானே இருக்கு. நல்லா படி”, என்றான்.
“நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு இருந்தா எப்படி படிக்க?”, என்று சிந்து கேட்டதும் “ஒரு மாசத்துக்கு எங்க அம்மாவை மதியம் சமைக்க சொல்றேன்”, என்ற சித்தார்த் தாயம்மாவிடம் சொல்லியும் விட்டான்.
“சரி படிக்கட்டும்”, என்று தாயம்மாவும் சொல்லி விட்டாள். அதனால் சிந்துவுக்கு காலை நைட் சமையல் வேலை தான் இருந்தது. பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை படிக்க நேரம் இருந்தது.
ஆனால் நான்கு நாட்கள் சமையல் செய்த தாயம்மா “கால் வலிக்கு,….. காச்சல் வர மாதிரி இருக்கு….”, என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.
அதனால் மீண்டும் சிந்துவே சமைத்தாள். அப்போது சித்தார்த் படிக்க வில்லையா என்று கேட்க அவனை திட்டி தீர்த்து விட்டாள். “உங்க அம்மா சமைக்கும்னு நம்பிட்டு இருந்தா எல்லாரும் பட்டினியா தான் இருக்கும். உங்க வீட்ல வேலை செய்றதுக்கு தானே என்னை கட்டிக் கொடுத்துருக்காங்க. நான் வேலைக்காரியாவே இருந்துட்டு போறேன். இன்னும் படிக்கலையான்னு என்கிட்ட கேட்டுட்டு இருந்தா நான் மனுசியா இருக்க மாட்டேன்”, என்று அவள் சொன்னதும்  அவனுக்கும் அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை. 
அதன் பின் எங்கே படிக்க? அது அவ்வளவு தான். இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஒரு நாள் “படிப்பு படிப்புன்னு இருக்காத. சீக்கிரம் பிள்ளையை பெத்துக்கோ”, என்று தாயம்மா சொன்னதும் ராணியிடம் சொல்லி அழுது விட்டாள் சிந்து.
“ஒரு மாசத்துலே பிள்ளையைப் பத்தி பேசுராங்களே”,என்று ராணிக்கும் கடுப்பாக இருந்தது. இருந்தாலும் சிந்துவுக்கு ஆறுதல் சொன்னாள். 
இதில் சித்தார்த்தின் அண்ணன் பாஸ்கர் மற்றும் மாரி இருவருமே சிந்துவிடம் செவ்வாழை சாப்பிடு என்று பார்க்கும் நேரம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்த செவ்வாழைப் பழத்தை வைத்தும் சிந்துவுக்கு தலை வலி வந்தது. 
ஒரு நாள் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள் சிந்து. அங்கே அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அப்போது அங்கு வந்த பாஸ்கர்  “டேய் சித்தார்த், அவளுக்கு செவ்வாழை வாங்கி கொடு டா”, என்றான்.
“ஹிம் சரிண்ணே வாங்குறேன்”, என்று சொன்னான் சித்தார்த்.
ஆனால் அடுத்த நாள் பாஸ்கரும் சுந்தரமும் வீட்டு கபோர்ட் போட பலகை ஆர்டர் கொடுக்க கடைக்கு செல்லும் போது “சிந்துவுக்கு செவ்வாழை பழம் வாங்கணும் பா. இருங்க வாங்கிட்டு வரேன்”, என்றான் பாஸ்கர். 
வீட்டுக்கு வந்ததும் சிந்துவை அழைத்த பாஸ்கர் “இந்தா சிந்து இது உனக்கு. உன் ரூம்ல வச்சிக்கோ. தினமும் நைட் ஒண்ணு சாப்பிடு.முன்னாடி மாரியும் இதை தான் சாப்பிட்டா”, என்று சொல்லிக் கொடுத்தான். அதில் எந்த கள்ளமும் இல்லை.கழங்கமும் இல்லை. உண்மையான அக்கறை மட்டுமே தெரிந்தது சிந்துவுக்கு. 
ஆனால் சிந்துவை அழைத்த சுந்தரம் “செவ்வாழை உனக்கு வாங்கிட்டு வந்துருக்கான். நீ அவன் கிட்ட கேட்டியோ?”, என்று கேட்டார். 
அவர் கேட்ட தொணி சிந்துவை கூச செய்தது. “நான் கேக்கலை? அவங்களா தான் வாங்கிட்டு வந்துருக்காங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து அறைக்குள் வந்த சிந்து குமுறி குமுறி அழுதாள்.
அவள் அழுவதை கண்டு துடித்து போன சித்தார்த் அவளிடம் காரணம் கேட்டான்.  “உங்க அண்ணன், பழம் வாங்கும் போதே உங்க அப்பா அவங்க கிட்ட கேட்டுருக்க வேண்டியது தான? எதுக்கு உங்க அப்பா என்கிட்ட அவன் கிட்ட நீ கேட்டியான்னு கேக்கார்? நான் எதுக்கு அடுத்தவங்க கிட்ட கேக்க போறேன்.எனக்கு வேணும்னா என் புருஷன் கிட்ட தானே கேப்பேன். அவர் கேட்ட கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா?”, என்று அவனிடம் கத்தி விட்டாள். 
ஆனால் சித்தார்த்தோ “இவனை யாரு வாங்கிக் கொடுக்க சொன்னா? நீ அழாத மா”,என்று சொல்லி அவளை சமாதான படுத்தி விட்டு பாஸ்கரை தான் திட்டினான்.  சித்தார்த் சுந்தரத்தை ஒன்றும் சொல்லாமல் பாஸ்கரை மட்டும் எதுக்கு திட்டினான் என்று தோன்றினாலும் அதை பெரிது பண்ணாமல் விட்டுவிட்டாள். 
சித்தார்த் சிந்து இடையே அடுத்தவர்களால் இப்படி சின்ன சின்ன உரசல்கள் வந்து கொண்டே இருந்தது. தங்களைப் பற்றி மட்டும் எண்ணும் போது இருவருமே சந்தோஸமாக இருந்தார்கள். ஆனால் அவனின் வீட்டாள்களை  பற்றி பேச்சு வந்தால் சிந்து முகம் மாறி விடும். 

Advertisement