Advertisement

காதல் நூலிழை
திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று சிலர் கூறுவர். அது சாத்தியமா? இல்லை அந்த பிரச்சனைகளால் இருவரையும் இணைத்த அந்த நூலிழை அறுந்து விடுமா? விடை கதையில்….
கதாநாயகன்: சித்தார்த்
கதாநாயகி : சிந்து
அத்தியாயம் 1
நீ மழையாக
வராமல் போனாலும்
சிறு சிறு சாரலாய்
நெஞ்சம் நனைப்பாயா?!!!
சுந்தரம் மற்றும் ராணிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சிந்து. அடுத்தது மகன். அவன் பெயர் அரவிந்த். சுந்தரம் ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். ராணி சத்துணவில் உதவியாளராக பணிபுரிகிறாள். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தான் இருவருடையதும்.
சிந்து எம்.ஈ படித்திருக்கிறாள். அவள் வயது இருபத்தி ஒன்பது. ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்தவள், குறைந்த சம்பளத்தால் அதை விட்டு விட்டாள். தற்போது கவர்ன்மெண்ட் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். வேலை தான் கிடைத்த பாடில்லை. முதல் தேர்வில் வெற்றி பெற்றாலும் அடுத்த தேர்வில் தோல்வியே கிடைத்தது.
வயது ஏறிக் கொண்டே செல்கிறது. கல்யாணம் எப்போது என்று அவளை மேலும் குத்தி கிழிப்பதும் உண்டு.
சிந்து பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் தான். ஆனால் தற்போது இருப்பதோ திருநெல்வேலி மாவட்டம் டவுன் அருகே.
அரவிந்தும் பி. ஈ தான். அவன் கோயம்பத்தூரில் ஒரு பிரைவேட் கம்பெனியில் பணி புரிகிறான். அவனுக்கு வயது இருபத்தி ஏழு.
இவர்கள் குடும்பம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. இங்கே சுந்தரத்தின் அண்ணன் பாண்டியின் குடும்பம் இருப்பதால் பாண்டியின் மனைவி அமுதா “இங்க வந்துருங்க. சிந்துவும் கோச்சிங் கிளாஸ் போவால்ல?”, என்று சொன்னதும் இங்கே வந்து விட்டார்கள். பாண்டி வீட்டுக்கு அடுத்த தெருவில் தான் சிந்துவின் வீடு.
வாடகை வீடு தான் ஆனால் நேர்த்தியாக இருந்தது. வீட்டுக்கு வரும் போதே இலவச இணைப்பாக ஒரு நாய்க் குட்டி இவர்களுடன் வந்து சேர்ந்தது. அதை வளர்த்தவர்கள் தெருவில் விட்டு விட்டு சென்று விட்டார்கள் போல.
குட்டியாக, வெள்ளைக் கலரில் தங்கள் பின்னே வந்த நாய்க்குட்டி அன்றில் இருந்து வீட்டில் ஒருவராகிப் போனது. அதன் பெயர் பப்பி.
பாண்டி மிலிட்டரியில் பணி புரிந்தவர். அதனால் தனக்கு தெரிந்த ஆட்களிடம் சொல்லி சுந்தரத்திற்கு ஒரு கம்பெனியில் செக்யூரிட்டி வேலையும் வாங்கி கொடுத்து விட்டார்.
சிந்துவும் கோச்சிங் கிளாஸ் போய்க் கொண்டு இருந்தாள். சிந்துவுக்கு வரனும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 
படிப்பதற்கு வாங்கிய லோனை வேற கட்ட சொல்லி பேங்கில் இருந்து நோட்டீஸ் வந்த வண்ணம் இருந்தது. 
கடைசியில் சூரிட்டி கையெழுத்து போட்ட இரண்டு பேரின் அக்கவுண்ட்களை பேங்க் நிறுத்தி அவர்களை பணம் எடுக்க விடாமல் செய்து விட்டது. 
லோனை கட்ட வேண்டிய நிலை என்றதும் இருந்த நகை அனைத்தையும் பேங்கில் வைத்து பணம் புரட்டினாள் ராணி. 
பாண்டியின் மகன் ராஜ் ஒரு லட்சம் கொடுத்ததும் மொத்த தொகையும் கட்டி முடிக்க பட்டது. லோன் கட்டியது பிப்ரவரி மாதத்தில்.
மார்ச் மாதத்தில் ஒரு நாள் “சிந்து இந்த நம்பருக்கு உன்னோட போட்டோவையும் பயோடேட்டாவையும் அனுப்பி வை”, என்றாள் ராணி.
“சரி மா”, என்று சொன்ன சிந்து “ஆமா இதோட எத்தனை பேருக்கு அனுப்பி வச்சாச்சு. பிடிச்சிருக்குன்னு சொல்றவன் பணத்தை எதிர் பாக்குறான். இல்லைன்னா ஜாதகம் செட் ஆக மாட்டிக்கு. வீட்ல வசதி இல்லை. இப்ப கையில கழுத்துல கூட ஒத்த தங்கம் இல்லை. இதுல கல்யாணம் எங்க நடக்கும். படிச்ச படிப்புக்கு வேலை இல்லை. நம்ம நாட்டில் இதெல்லாம் தோஷம் தான். இத்தனை தோஷம் பத்தாதுன்னு செவ்வா தோஷமுமா எனக்கு இருக்கணும்? எல்லா தோஷமும் எனக்கே இருந்தா எப்படி கல்யாணம் நடக்கும்”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
“இப்ப அனுப்புறவங்களுக்காவது என்னை பிடிச்சிருக்கணும் முருகா”, என்ற வேண்டுதலோடு ராணி சொன்ன நம்பருக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தாள்.
சில மணி நேரங்களிலே அந்த பக்கம் அவர்கள் பார்த்ததுக்கான அடையாளம் தெரிந்தது. ஆனாலும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாள். 
அந்த நம்பருக்குரிய புரோபைல் போட்டோவில் ஒருவன் அழகாக இருந்தான். “இவன் தான் மாப்பிள்ளையா இருக்குமோ? இது யார்ன்னு தெரியாம எதையும் யோசிக்க கூடாது. வேற யாராவது கூட இருக்கலாம்”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைப் பார்த்தாள்.
அன்று மாலை வரை அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு ஐந்து மணி போல் அந்த பக்கம் இருந்து ஒரு மெஸ்ஸேஜ் வந்திருந்தது. ஆர்வத்துடன் எடுத்து பார்த்தாள்.
புரோபைல் போட்டோவில் இருக்கும் போட்டோவே கொஞ்சம் பெரியதாக அனுப்ப பட்டிருந்தது. ஊதா வண்ண சட்டை மற்றும் கிரீம் கலர் பேன்ட்டில் இன் செய்து இருக்கும் அவனின் போட்டோ மற்றும் ஜாதகம் அனுப்ப பட்டிருந்தது.
அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் சிந்து விழுந்தது மட்டும் நிஜம். ஆனால்  முகத்தில் மீசை இல்லாமல் வடநாட்டு காரன் போல இருந்தான் அவன். 
“மீசை இருந்தா நல்லா இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு “பேர் என்னவா இருக்கும்?”, என்று எண்ணி பயோடேட்டாவை எடுத்துப் பார்த்தாள்.
சித்தார்த் பி. ஈ, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாஞ்சான் குளம் என்ற கிராமம். வேலை செய்வது ஒரு தனியார் சிமெண்ட் கம்பெனியில்.
அவனுடன் பிறந்தது பாஸ்கரன் என்ற அண்ணனும், பிரேமா என்ற அக்காவும். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்று போட்டிருந்தது.
சிந்துவை கவர்ந்தது மற்றொரு விஷயம். அதில் சித்தார்த்தின் பெற்றோர் பெயர்கள் சுந்தரம் மற்றும் தாயம்மா என்று போட்டிருந்தது.
“அவனோட அப்பா பேரும் சுந்தரம் தானா?”, என்று எண்ணிக் கொண்டு “அம்மா, அங்க இருந்து எதுவோ அனுப்பிருக்காங்க”, என்று நல்ல பிள்ளையாய் பொய் சொல்லி அதை பார்க்காதது போல ராணி கையில் கொடுத்தாள்.
“போட்டோ அனுப்பிருக்காங்க”, என்று சொல்லிக் கொண்டே எடுத்து பார்த்த ராணி, மாப்பிள்ளையை பார்த்ததும் “நல்லா தான் இருக்கார். ஆனா கொஞ்சம் கருப்பு போல”, என்றாள்.
“கலரா முக்கியம்? அவங்க பிடிச்சிருக்குன்னு சொல்லணுமே”, என்று மனதில் எண்ணிக் கொண்டு சிரித்து வைத்தாள்.
“கல்யாணத்துக்கு இப்படி அலைவோம்ன்னு நானே நினைக்கலையே? ஆனா இந்த வருஷமும் முடியலைன்னா அடுத்து முப்பது வயசு வந்துரும். பாதிக் கிழவி ஆகிருவேன். கடவுளே பையன் கருப்பா இருக்கான், பொண்ணு எம்.ஈ படிச்சிருக்கா, பையன் பி.ஈ தான் படிச்சிருக்கான்னு இப்படி ஏதாவது சொல்லி இந்த வரணும் தட்டிப் போயிரக் கூடாது.முருகா நீ தான் முடிச்சு வைக்கணும்”,என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு நம்பரில் இருந்து போன் வந்தது. ராணி எடுத்து பேசினாள்.
போனில் பேசிக் கொண்டிருந்த ராணியை கவனிக்காதது போல கவனித்துக் கொண்டிருந்தாள் சிந்து.  
ராணியின் பேச்சில் இருந்தே அவளை அவர்கள் பெண் பார்க்க வருவது பற்றி கேட்கிறார்கள் என்று புரிந்தது.
உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு தோன்றினாலும் “இவன் மட்டும் என்னை பிடிச்சிருக்குன்னா சொல்ல போறான்?”, என்று எண்ணிக் கொண்டு ராணியின் பேச்சை கவனித்தாள்.
“பத்தாம் தேதி பொண்ணுக்கு ஒரு பரிட்சை இருக்கே”, என்றாள் ராணி.
அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ “சரி சரி, வாங்க. ஆனா பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு. அதனால பாத்துக்கோங்க”, என்றாள் ராணி.
“அவங்களே சும்மா இருந்தாலும் இந்த அம்மா சும்மா இருக்குதா பாரு”, என்று எண்ணினாள் சிந்து.
“இல்லை, வீணா நீங்க அலைய கூடாதுன்னு தான் சொன்னேன்”, என்று ராணி சொல்வது கேட்டது.
சிந்துவும் “அம்மா சொன்னது சரிதான். இல்லைன்னா இங்க வந்து என்னை பாத்ததுக்கு அப்புறம் ஜாதகம் செட் ஆகலைன்னா என்ன பன்றது?”, என்று எண்ணிக் கொண்டாள்.
போனை வைத்த ராணி, சிந்துவிடம் “பத்தாம் தேதி சாயங்காலம் வருவாங்கலாம். அந்த பையனுக்கும் செவ்வா தோஷம் இருக்காம். சரி நான் உங்க பெரியப்பா வீட்ல போய் சொல்லிட்டு வந்துறேன். புரோக்கர் கிட்ட கேட்டுகிட்டு அவரையும் அன்னைக்கு வர சொல்லணும்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
சுந்தரம் வேலை முடிந்து வந்ததும் அவரிடமும் சொன்னதும் அவருக்கும் சம்மதமே. 
அன்றில் இருந்து பத்தாம் தேதி வரை குறுகுறுப்புடன் இருந்தாள் சிந்து. முகத்துக்கு அதை இதை என்று தேய்த்து மேலும் அழகு சேர்க்க முயற்சித்தாள்.
சிந்துவுக்கு இயற்கையிலே அழகான முகம். வெள்ளை என்று சொல்ல முடியாது. அதே நேரம் மாநிறத்தை விட கொஞ்சம் கலர் அதிகம். இடுப்பு வரை இருக்கும் கூந்தல். ஒன்றே ஒன்று தான் குறை மாப்பிள்ளையை விட இவள் உயரம் கொஞ்சம் குறைவு. 
மாப்பிள்ளை கொஞ்சம் உயரம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது. அதற்காக உயரத்தைக் கூட்டவா முடியும்?
இடையில் அவனுடைய போட்டோவை கல்லத்தனமாக பல தடவை பார்த்தது தனி விஷயம்.
பத்தாம் தேதியும் வந்தது. காலையில் அவனுடைய நினைப்பு எழுந்தாலும் அதை ஒதுக்கி விட்டு பரிட்சை எழுத சென்றாள்.
அதே நேரம் சித்தார்த் வீட்டிலோ “நான் வரலை”, என்று போராடிக் கொண்டிருந்தான். அவனை வர சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். 
அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் “நீங்க போய் பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே. நான் வேலைக்கு போகணும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
சித்தார்த் இது வரை நான்கு வீட்டுக்கு பெண் பார்க்க சென்றிருக்கிறான். ஆனால் நான்குமே செட் ஆக வில்லை. அதுவும் நான்காவது பார்த்த பெண் சிந்து வீட்டுக்கு பக்கத்தில் தான். அதாவது சிந்துவின் பெரியப்பா வீட்டு பக்கத்தில் தான் இருக்கிறது.
“அதே ஊர்ல போய் பொண்ணு பாத்துருக்காங்க”, என்று எரிச்சலாக வந்தது சித்தார்த்துக்கு. 
வேலைக்கு சென்றவனும் நிலை கொள்ளாமல் தான் தவித்தான். இந்த சம்பந்தமாவது அமையனுமே என்று அவனுக்கும் தவிப்பாக தான் இருந்தது. 
அவன் ரொம்ப கருப்பு என்று சொல்ல முடியாது. மாநிறமாக இருந்தான். ஆனால் அவன் குடும்பதில் அவன் அப்பாவை தவிர மற்ற அனைவரும் கலராக இருப்பதால் அவனுக்கு தான் மட்டும் கருப்பு என்ற எண்ணம்.
அதுவும் கலர் கம்மியா இருக்கான் என்று ஒரு குடும்பம் அவனை நிராகரிக்கவே “நான் ரொம்ப கருப்பு”, என்று அவனே எண்ணிக் கொண்டான். அவனுக்கும் வயது முப்பத்தி ரெண்டு என்பதால் அனைவரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அவனுமே திருமணத்தை ஆவலாக எதிர் பார்த்தான்.
வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் போட்டோவில் பார்த்த பெண்ணின் முகம் மனக் கண்ணில் வந்து போனது. 
இங்கே பரிட்சை எழுதி முடித்து மதியம் வந்த சிந்துவோ வீட்டை சுத்தம் செய்வதில் இறங்கி விட்டாள். 
“வீடு சுத்தமா இல்லைன்னு பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டா? ஒரு போட்டோவை காட்டி இப்படி கல்யாணத்துக்கு அலைய வச்சிட்டானே“, என்று எண்ணிக் கொண்டாள். மாலை நான்கு மணி ஆனதும் குளித்து கிளம்பினாள். சித்தார்த் முகம் அவள் மனதில் பதிந்தது. 
இது வரை வந்த வரன்களை ஆவலாக பார்த்தாலும் இந்த அளவு எதிர் பார்க்க வில்லை. எல்லாமே பொருந்தி இருப்பது போல தோன்றவும் சித்தார்த் அவள் மனதில் அமர்ந்து விட்டான்.
சிந்துவுக்கு சேலை கட்ட தெரியாது என்பதால் ராணி தான் இவளுக்கு கட்டிவிட்டாள். பின்னர் அவள் வேலையை பார்க்க சென்றாள்.
அன்று தான் ராணி வாங்கி வந்திருந்த கவரிங் நகைசெட்டை எடுத்தாள். வீட்டில் தான் கம்மல் கூட தங்கம் இல்லையே. வேறு என்ன செய்வது. இல்லாதவர்களுக்கு எப்போதும் கை கொடுப்பது கல்யாணி கவரிங் மட்டுமே. 
ஒரு கம்மல், ஒரு ஆரம் மட்டும் தான் அதில் இருந்தது. அதுவே தங்கம் போல் இருந்தது. அதனால் அதை அணிந்து கொண்ட சிந்து ஒரு கையில் பழைய கவரிங் வளையலும் மற்றொரு கையில் கைக்கடிகாரத்தையும் அணிந்து கொண்டாள்.
தலை நிறைய பூவை சூடியவள் முகத்துக்கு பவுடர் மட்டும் பூசினாள்.
பின் அசையாமல் அமர்ந்து விட்டாள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதற்கு முன்பே பாண்டியும் அமுதாவும் வந்து விட்டார்கள்.
இவள் கிளம்பி இருப்பதை பார்த்ததும் “இந்த செயின் ஏது?”, என்று கேட்டார் பாண்டி. “பெரியப்பா அழகா இருக்கா? கவரிங் தான்”, என்று சிரித்தாள் சிந்து. 
“என்னோடதை எடுத்துட்டு வரட்டா? எடுக்கணும்னு நினைச்சேன்.  மறந்தே போயிட்டேன்”, என்றாள் அமுதா. 
“வேண்டாம் பெரியம்மா. பாக்க வித்தியாசமா தெரியலைல்ல? இதுவே இருக்கட்டும்”, என்று மறுத்து விட்டாள் சிந்து.
ஆனாலும் உள்ளுக்குள் கவலை அறிக்க தான் செய்தது. “ஒரு கம்மல் கூட வீட்ல இல்லையே. அப்ப எப்படி கல்யாணம் செய்ய முடியும்?”, என்று.
சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அவர்கள் வந்து விட்டார்கள் என்று தெரியும். ஆனால் யார் யார் வந்த்திருக்கிறார்கள் என்று தெரியாது. “மாப்பிள்ளை தனியா பேசணும்னு நினைப்பாரா?”, என்று ஆசையும் பயமும் இருந்தது.
படித்த கதைகளில் பார்த்த படங்களில் பெண் பார்க்கும் நிகழ்வுகள் மனக் கண்ணில் வந்து போனது. அடி வயிற்றில் படபடப்பாக வந்தது.
சிறிது நேரத்தில் ஒரு மூன்று வயது சிறுமி மட்டும் உள்ளே ஓடி வந்தாள்.
“மாப்பிள்ளையின் அண்ணன் மகள், இல்லையென்றால் அக்கா மகளா இருக்கும்” என்று எண்ணி அவளிடம் “பேர் என்ன மா?”,என்று கேட்டாள் சிந்து.
“ஹாஷினி”, என்று அது மழலை மொழியில் சொன்னது. அதை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
சில நிமிடம் கழித்து அது ஓடி விட்டது.  அமுதா அறைக்குள் வந்து “வெளிய வா சிந்து. கூப்பிடுறாங்க”, என்றாள்.
“பயமா இருக்கு பெரியம்மா”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை வா”
“சரி”, என்று எழுந்தாள். அவளைப் பார்த்ததும் “எல்லாருக்கும் வணக்கம் சொல்லு”, என்று அவள் காதைக் கடித்தார் அவளுடைய தந்தை சுந்தரம்.
அவர் சொன்னது போல் அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த நால்வரையும் பார்த்து வணக்கம் என்பது போல கை குவித்தாள்.
வந்திருப்பது மாப்பிள்ளையின் அம்மா அப்பாவும், பெரியம்மா பெரியப்பாவும் தான் என்று நேரம் ஆக ஆக புரிந்தது. சித்தார்த்தின் பெரியம்மா “இங்க உக்கார் மா”, என்று சொல்லி அருகில் அமர் வைத்துக் கொண்டாள்.
பின்னர் படிப்பு, எந்த காலேஜ், இன்று எழுதிய எக்ஸாம் பற்றி ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி கேட்டார்கள்.
நால்வரையும் பார்த்து பதில் சொன்னாள் தான். ஆனால் யார் உருவமும் அவள் மனதில் பதிய வில்லை. மாப்பிள்ளை வராதது அவளுடைய உற்சாகத்தை துணி கொண்டு துடைத்தது. 
இந்த சம்பந்தம் தேரும் என்று நம்பிக்கை அவளுக்கு சுத்தமாக இல்லை. பின் இரண்டு குடும்பமும் பேசிக் கொண்டிருந்தது. “அடுத்த வாரம் மாப்பிள்ளையை கூட்டிட்டு வரோம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
அவர்கள் போன பிறகு “நல்ல குடும்பமா தான் இருக்கு. மாப்பிள்ளை வந்து என்ன சொல்றாருன்னு பாப்போம்”, என்று சொல்லி விட்டு சென்றார்கள் பாண்டியும் அமுதாவும்.
“மாப்பிள்ளையோட அண்ணன் பாரீன்ல இருக்காங்கலாம். பொண்டாட்டி இவங்க கூட தான் இருக்காம். இப்ப வந்த பிள்ளை அண்ணன் பிள்ளை போல. அக்காக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காம். அவங்க எல்லாம் சென்னைல இருக்காங்கலாம். நல்ல குடும்பமா தான் தெரியுது. அந்த பையன் வந்து என்ன சொல்றானோ? இப்பவே மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்துருக்கலாம். அது வரைக்கும் டென்ஷன் தான்”, என்று ராணி புலம்பும் போது ஒவ்வொரு தகவலை சேகரித்தாள் சிந்து.
அன்று இரவே மாப்பிள்ளையின் பெரியப்பா ராணிக்கு போன் செய்தார். “மாப்பிள்ளையை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு புதன் கிழமை வறோம்”, என்று சொன்னதும் “சரி”, என்று வைத்த ராணி “புதன் கிழமை எல்லாரும் வாராங்கலாம்”, என்று சொன்னாள்.
புதன் கிழமை எப்போது வரும் என்று கனவு கண்டாள் சிந்து. ஆனால் செவ்வாய் மாலையே சிந்து வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது. 
புதன் கிழமை தான் உடலை எடுப்பார்கள் என்பதால் நாளை வர வேண்டாம் என்று மாப்பிள்ளையின் பெரியப்பாவிடம் சொல்லி விட்டாள் ராணி.
சிந்துவுக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ராணியும் “பாரேன், இந்த பொம்பளைக்கு கேன்சர் வந்து இத்தனை மாசம் நல்லா தான் இருந்தது. என்னைக்குனாலும் இறந்துரும்னு தெரியும்.  இத்தனை நாள் நல்லா இருந்த பொம்பளை இன்னைக்கு தான் சாகனுமா? இன்னும் என்னைக்கு வரோம்னு கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொல்றாங்க. நம்ம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணு நடக்குது. எதுக்கு தான் நமக்கு மட்டும் இப்படி நடக்குன்னு தெரியலை”, என்று புலம்பினாள்.
சுந்தரம் வேலை முடிந்து வந்த பிறகு அவரிடம் சொன்னதுக்கு அவரும் “நடக்கணும்னு இருந்தா நடக்கும். கவலையை விடு ராணி”, என்று சொல்லி விட்டார்.
“இது என்ன பாக்கும் போதே இப்படி தடுக்குது?”, என்று உண்மையாக கவலைப் பட்டது சிந்துவும் சித்தார்த்தும் மட்டும் தான்.
காதல் தொடரும்….

Advertisement