Advertisement

அவள் முகத்தில் இருந்தே என்ன கண்டானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் சிந்து உறங்கி விட்டாள்.
அவனுடைய அணைப்பில் எல்லையில்லா ஆறுதல் கிடைக்க சிறிது நேரத்திலே தூங்கி விட்டாள். 
தன் கையணைப்பில் சிறு குழந்தை போல் தூங்கும் சிந்துவை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. தாயம்மா, சுந்தரமும் சரி, அவனுடைய அத்தை மாமாவும் சரி, அத்தை பிள்ளைகளும் சரி அனைவருமே “உனக்கேத்த பொண்ணு டா. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. எவ்வளவு வேலை முகம் சுளிக்காம செய்றா, குழந்தைகளை இன்னைக்கு குளிக்க வச்சு டிரஸ் மாத்தி விட்டதும் அவ தான். அவளை நல்லா பாத்துக்கோ”, என்று தான் அவனிடம் சொன்னார்கள்.
அனைவரும் சொன்னதைக் கேட்டு அவளை பெருமையாக நினைத்தவன் அவள் மனதில் எதுவும் வருத்தம் இருக்கிறதா என்று கேட்டிருக்கலாம். 
அடுத்த நாள் எழுந்ததும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான் சித்தார்த். அந்த இதழ் ஒற்றலில் அவளுடைய நேற்றைய கோபம் ஆழ்மனதில் கீழே போனது. அவனை இறுக்கி அணைத்தவள் அவனுடைய கன்னத்தில் இதழ் பதித்தாள். 
“நேத்து ரொம்ப வேலை அப்படி தான செல்லம். இன்னைக்கு ரொம்ப வேலை இருக்காது. ரெண்டு நாள்ல எங்க அக்கா குடும்பமும் போய்ரும். அப்புறம் நம்ம நாலு பேர் தான?”, என்று சொல்லி சமாதான படுத்தினான்.
“உங்க அண்ணன் அண்ணி இங்க தான சாப்பிடுறாங்க. தூங்க தான் அவங்க வீட்டுக்கு போறாங்க. பின்ன நாலு பேர்ன்னு சொல்றீங்க?”
“ஆமா, ஆனா அவங்க எப்ப வேணும்னாலும் இங்க சாப்பிடாம இருக்கலாம். ஏன்னா கல்யாண வரைக்கும் தான் இங்க சாப்பிடுவோம்னு மாரி ஏற்கனவே சொல்லிட்டா”, என்று சொன்னான் சித்தார்த்.
பின் சிந்து குளித்து முடித்து வெளியே வரும் போது பிரேமா சுந்தரத்துக்கு பால் ஆற்றி கொண்டிருந்தாள். எவ்வளவு சீனி, எவ்வளவு பூஸ்ட் போடணும் என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்த சிந்து பின் வாசலில் இருந்தே மாரி வீட்டைப் பார்த்தாள். 
அது பழைய வீடு தான். நல்ல ஒழுகும் என்று சித்தார்த் சொல்லி இருந்தான். அங்கே பாத்ரூமும் கிடையாது.  பெரிய மாமரமும் வாழை மரங்களும் அந்த வீட்டை நிறைத்திருந்தது.
ஆனால் இந்த புதிய வீட்டிலோ ரெண்டு பெட்ரூம் அட்டாச் பாத்ரூம். ஹால், சாமிரூம், போர்டிகோ, மாடியில் இரண்டு அறைகள் என்று பிரம்மாண்டமாக இருந்தது. 
அனைத்தையும் பார்த்துக்  கொண்டிருந்த சிந்துவுக்கு மனதில் எழுந்தது ஒரே கேள்வி தான். “இவ்வளவு பெரிய வீட்ல இந்த மாரியக்கா இருக்காம எதுக்கு எந்த வசதியுமே இல்லாத அந்த சின்ன வீட்ல இருக்காங்க?”, என்று தான்.
அடுத்த நாளும் முந்தைய நாள் போல் சென்றது. ஆனால் அதிக வேலைகள் மட்டும் இல்லை. அன்று இரவு சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த மாரியைப் பார்த்த சிந்து “நீங்க பேசாம இங்கயே இருக்கலாம்லக்கா? அந்த  வீட்ல பாத்ரூம் கூட கிடையாதே”, என்று கேட்டே விட்டாள்.
சிந்துவைப் பார்த்து சிரித்த மாரி “அது சரி வராது சிந்து. ஒரே இடத்துல ரெண்டு பேர் வேலை செய்ய முடியாது. நாளைக்கு சித்தார்த் வேலைக்கு போவாங்க. அப்ப நீ சமைச்சிட்டு இருப்ப. அந்த நேரத்துல நான் வந்து வேற எதுவும் செய்ய முடியாது. இப்ப என்ன பக்கத்து வீடு தான? சித்தார்த்  வேலைக்கு போன அப்புறம் வா , நாம பேசிட்டு இருக்கலாம்”, என்றாள்.
“மச்சான், இனி பாரின் போக மாட்டாங்க தானக்கா?”
“ஆமா, இங்க ஏதாவது தான் வேலை தேட சொல்லணும்”, என்று . ஆரம்பித்து அவர்கள் பேச்சு வேறு பக்கம் சென்றது.
ஆனால் அங்கே சிந்துவை பாதித்த மற்றொரு விஷயம் கல்யாணத்துக்கு வர முடியாதவர்கள் விட்டுக்கு வந்து மொய் செய்து விட்டு சென்றார்கள். வந்தவர்களுக்கு சிந்து வீட்டில் இருந்து வந்த பழகாரம், வாழைப் பழம், காபி என்று கொடுத்துக் கொண்டிருந்தாள் சிந்து. தாயம்மா வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.  
அவர்கள் எதுவும் கேட்காத போது “பொண்ணுக்கு ஏழு பவுன்ல தாலி செயின் போட்டுருக்கோம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள் தாயம்மா.
“பொண்ணு வீட்ல எவ்வளவு நகை போட்டாங்க., மாப்பிள்ளைக்கு எவ்வளவு போட்டாங்க”:,என்று அவர்கள் கேட்டால் இப்படி சொல்வது நியாயம். ஆனால் இவர்களாக சொல்வது சிந்துவுக்கு வித்தியாசமாகவும் சரியான பந்தா பார்ட்டி போல என்ற எண்ணத்தையும் விதைத்தது. 
அடுத்த நாள் அந்த ஊரில் திருவிழா என்பதால் அன்று இரவு அனைவரும் கிளம்பினார்கள். தாலிசெயின், மஞ்சள் கயிறு, மற்றொரு செயின் போட்டு தயாராகி நின்றவளைப் பார்த்த தாயம்மா, “மத்த நகையையும் போட்டுட்டு வா. இன்னைக்கு எல்லாரும் பாப்பாங்க”, என்று சொன்னதும் பிடிக்காவிட்டாலும் அனைத்தையும் அணிந்தாள்.
அனைத்தையும் அணிந்தவளைக் கண்ட சுந்தரம் “கல்லு வச்ச நகை எதுக்கு மா வாங்குறீங்க? இனி அப்படி எல்லாம் வாங்காதீங்க. அது வேஸ்ட்”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி சென்றார். 
அவர் சொன்ன விஷயம் சரியானதாக இருந்தாலும் சொன்ன முறை சரியாக இல்லை. ஏன் தான் போட்டோமோ?”, என்று நினைத்துக் கொண்டாள். 
பின் சிறிது நேரம் கழித்து சித்தார்த்துடன் புது பைக்கில் கிளம்பினாள் சிந்து. அன்று தான் புது பைக்கில் அவனுடன் செல்கிறாள். 
அதுவும் சிந்துவுக்கு சிறு வருத்தம் இருந்தது. பைக் வாங்கி இத்தனை நாள் ஆகி விட்டது. ஒரு அஞ்சு நிமிஷம் அதில் உக்கார வச்சு பக்கத்துல எங்கயாவது என்னை கூட்டிட்டு போயிருக்க கூடாதா என்று  அவளுக்கு தோன்றியது.
கோயிலுக்கு கிளம்பும் போதும் “எங்க அம்மா அக்கா கூட வரியா, இல்லைன்னா என்கூட வரியா?”, என்று கேட்டு தான் அழைத்து சென்றிருந்தான்.
“இதெல்லாம் இவனுக்கே தோணாதா?”, என்று எரிச்சலாக வந்தது.
கோயிலிலே அன்னதானம் சாப்பிட்டு விட்டு இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்ததும் “சரியான ராங்கி பிடிச்சவ தாயி இந்த மாரி. மாமா போய் கோயிலுக்கு வரலையான்னு கேட்டுருக்காரு. அதுக்கு எனக்கு டைம் அதனால வரலைன்னு சொல்லிருக்கா”, என்று சொல்லி மாரியை திட்டினாள் தாயம்மா. 
அதைக் கேட்டு அதிர்ச்சியாகவும் அதே நேரம் குழப்பமாகவும் இருந்தது சிந்துவுக்கு.
“அப்படியேவா சொன்னாங்க அத்தை?”
“ஆமா, எப்படி பேசிருக்கா பாரு”
மாதம் மாதம் பீரியட்ஸ் வரும் போது சிந்து ராணியிடம் கூட அதை சொல்ல மாட்டாள். நேப்கின் வாங்க வேண்டும் என்று சொல்லும் போது மட்டும் தான் ராணியிடம் அதைப் பற்றி பேசுவாள்.
அப்படி இருக்க மாமனார் கிட்ட அப்படி சொல்ல முடியுமா? என்று அதிர்ச்சியாகவும், அப்படி எப்படி அந்த அக்கா சொல்லிருப்பாங்க
என்று குழப்பமாகவும் இருந்தது. 
அந்த கேள்விக்கு விடை சிறிது நேரத்திலே தெரிந்தது. மதியம் மீதி இருந்த சாப்பாடை எடுக்க வந்த மாரி சிந்துவைப் பார்த்து சிரித்தாள்.
“நாங்க அங்க சாப்பிட்டோம்க்கா. உங்களுக்கு கொஞ்சம் தான் சாதம் இருக்கு. நான் வேற ஏதாவது செஞ்சு தரவா?”, என்று கேட்டாள் சிந்து.
“எனக்கு இது போதும் சிந்து. எனக்கு பீரியட்ஸ் வர கூடிய நாள். அங்க வந்த அப்புறம் வந்துற கூடாதுள்ல? அதனால தான் நான் வரலை. மாமா கூப்பிட வந்தாங்க. வயிறு வலிக்கு அதனால நான் வரலைன்னு சொன்னேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் மாரி.
அன்று இரவு அதை சித்தார்த்திடம் சொன்னதுக்கு அவன் “விடு, அவ தான் ஏதாவது சொல்லிருப்பா”,  என்று சொல்லி முடித்து விட்டான். 
அடுத்த நாள் பிரேமா குடும்பம் கிளம்பி சென்றது. “சீக்கிரம் விருந்துக்கு வாங்க”, என்று சொல்லி விட்டு தான் சென்றாள் பிரேமா.
அன்று இரவு அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் உப்பு வேண்டும் என்று கேட்பதற்காக “மாரி மாரி, இங்க வாமா”, என்று அழைத்தார் சுந்தரம்.
கிட்சன் உள்ளே இருந்த மாரி “ஆன், இதோ வரேன்”, என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள்.
“என்னது ஆனா? என்ன மாமான்னு கேக்க முடியாதோ? ஆன்னு சொல்ற?”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னார் சுந்தரம். 
அதில் அவமானமாக உணர்ந்த மாரி எதுவுமே பேச வில்லை. 
“உப்பு எடுத்துட்டு வா”, என்றார் சுந்தரம்.
அமைதியாக எடுத்துக் கொடுத்த மாரி அதன் பின்னர் முற்றிலும் அமைதியாக இருந்தாள். சிந்து வீட்டு பழகாரத்தை மாரியின் சித்தி வீட்டுக்கு கொடுத்து விட்டு வந்த தாயம்மா மாரியின் சித்தியைப் பற்றியே குறை கூறிக் கொண்டிருக்க மாரி முகத்தில் சிறு சலனமே இல்லை. 
சிந்துவுக்கு தான் மாரியைப் பார்க்க எதுவோ போல் இருந்தது. “இவங்க முன்னாடியே அவங்க சித்தியை திட்டணுமா?”, என்று இருந்தது சிந்துவுக்கு. 
அடுத்த நாள் காலை சீக்கிரமே குளித்து முடித்த சிந்து, சித்தார்த் சாணி எடுத்துக் கொடுத்ததும் வேறு வழியில்லாமல் தெளித்து முடித்தாள். பின் ஒரு பயத்துடன் கோலம் போட ஆரம்பித்ததும் கோடு பழக்கம் இல்லாமல் எங்கோ சென்றது. 
அப்போது அங்கு வந்த மாரி கண்ணில் பட்டதும் “அக்கா பிளீஸ் இதை முடிச்சிருங்களேன்”, என்று சொல்லி அவள் கையில் கொடுத்தாள்.
“பழகுனா வந்துரும் சிந்து. இல்லைன்னா அத்தையைப் போட சொல்லு”, என்று சொல்லி அந்த கோலத்தை முடித்த மாரி சிந்துவைப் பார்த்து சிரித்தாள். 
ஒரு ஏழு மணி போல் இட்லி அவிக்கலாம் என்று சிந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது “நான் எங்களுக்கு அங்க சாப்பாடு வச்சிட்டேன் சிந்து. உங்களுக்கு மட்டும் சமைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டு சென்றாள் மாரி.
“எப்ப வேணாலும் அவங்க தனியா சமைக்கலாம்”, என்று சித்தார்த் சொன்னதால் “இவங்க நேத்து எப்படி எல்லாம் அந்த அக்காவை பேசினாங்க. அதான் இன்னைக்கே தனியா பொங்கிட்டாங்க போல?.”,என்று எண்ணிக் கொண்டு சித்தார்த் மற்றும் தாயம்மாவிடம் சொன்னாள்.
சித்தார்த் “விடு சிந்து. அவ எப்பவுமே அப்படி தான்”, என்றான்.
தாயம்மா சுந்தரத்திடம் மாரியை காய்ச்சு காய்ச்சு என்று காய்த்துக் கொண்டிருந்தாள். 
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் புரியாத புதிராக இருந்தார்கள். ஏற்கனவே காலையில் இருந்து வேலை ரெடியாக இருந்தது சிந்துவுக்கு.
வாசல் தெளிச்சு, காபி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி கொடுத்து பின் டிபன் மதிய சாப்பாடு, சாயங்கால காபி இரவு உணவு, வீடு கூட்ட, பாத்திரம் விளக்க என்று வேலை எக்கச்சக்கமாக இருந்தது. 
இதில் மற்றொரு தலைவலியையும் இந்த ஐந்து நாட்களில் சிந்து இழுத்து வைத்திருந்தாள் அது மாரியின் மகள் ஹாசினியை குளிக்க வைப்பது. 
எல்லாரும் ஒரு வேலையும் இல்லாமல் நிம்மதியாக இருந்து, தான் மட்டும் வேலை செய்து கொண்டே இருப்பது போல பட்டது சிந்துவுக்கு.
“இப்படி செஞ்சிட்டு இருந்தா டென்ஷன் ஆகி நானே செத்துருவேன் போல?”, என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போது ஹாஷினி 
“சின்னம்மா குளிக்க வைங்க”, என்று வந்து நின்றாள். 
மனதுக்கு வலித்தாலும் வேறு வழியில்லாமல் “ஆச்சியைக் குளிக்க வைக்க சொல்லு “, என்று சொல்லி அவளை விரட்டி வைத்தாள்.
இத்தனை வருடங்கள் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்த சிந்து முதல் முறையாக ஜெயிலில் இருப்பது போல உணர்ந்தாள். ஒரு சின்ன சட்டியில் ராணி குளம்பு வைப்பாள். இங்கே சிந்துவோ பெரிய பெரிய சட்டியில் சமைத்துக் கொண்டிருந்தாள். 
அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் ராணியின் சமையல் கைப் பக்குவம் அப்படியே சிந்துவுக்கும் வந்திருந்தது தான். 
காதல் தொடரும்….

Advertisement