Advertisement

அத்தியாயம் 8
எனக்குள் நீ
உறைந்திருக்கும் காரணத்தால்
உயிர் இருக்கிறது
என் உடலில்!!!
எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான். 
சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து சிரித்த சித்தார்த் “கதவை பூட்டிட்டு வா சிந்து”, என்றான்.
“நான் போகலை. கூச்சமா இருக்கு”
“எனக்கு அதுக்கு மேல இருக்கு. பிளீஸ் பூட்டிட்டு வா”, என்று சொன்னதும் அறைக் கதவை தாழ்ப்பாள் போட்டாள்.
“எனக்கு பால் பிடிக்காது சிந்து. நீயே குடிச்சிறேன்”
அது அவளுக்கு தெரியும் என்பதால் அதை குடித்து முடித்து விட்டு அங்கு வைத்தாள்.
பிரேமாவின் கணவன் ராஜா பூக்களால் சிறிது அலங்காரம் செய்து பழம் ஸ்வீட் என்று அந்த அறையில் எடுத்து வைத்திருந்தான்.
சிந்துவிடம் பேசிய படியே அங்கிருந்த அல்வாவை அவளுக்கு ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டான் சித்தார்த். 
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். “டிரஸ் வேணும்னா மாத்திக்கோ”, என்றான் சித்தார்த்.
அவளும் லைட்டை நிறுத்தி விட்டு நைட்டியை மாற்றினாள். பின் அவளை அழைத்து தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டவனின் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் ஊர்வலம் போனது. 
அவன் தொடுகையில் சிவந்தவள் அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான். அவள் கண்கள் தன்னால் மூடிக் கொண்டது. இதற்கு முன்னரும் முத்தமிட்டிருக்கிறான். அப்போது எல்லாம் கல்யாணம் முடிய வில்லை என்ற காரணம் இருவருக்கும் குறுக்கே நின்றது. 
இப்போது எந்த தடையும் இல்லாததால் அவனுடைய கைகள் அவள் நெளிவு சுளிவுகளை பரிசோதிக்க ஆரம்பித்தது. அவனுடைய தொடுகையில் அவனுக்குள் அடங்கினாள். 
அங்கே இனிய இல்லறம் ஆரம்பமானது.  காலையில் ஐந்து மணிக்கே சித்தார்த் அலாரம் வைத்திருந்ததால் இருவரும் எழுந்து விட்டார்கள். 
குளித்து முடித்து வெளியே வந்த சிந்து “சேலை கட்டவா என்று அவனிடம் கேட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம். சும்மா நைட்டியே போடு. அப்புறம் துணி எங்க காய போடன்னு எங்க அக்கா கிட்ட கேளு. நான் போய் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
தயக்கத்துடன் வெளியே வந்தவளின் கண்ணில் பட்டாள் பிரேமா. 
“சீக்கிரம் எந்திச்சிட்டீங்களா அண்ணி?”, என்று கேட்டாள் சிந்து.
“ஆமா, சிந்து. தூக்கம் வரலை. சரி உனக்கு கோலம் போட தெரியுமா?”
“அதெல்லாம் தெரியாது அண்ணி”
“சரி சீக்கிரம் எந்திச்சு சாணி தெளிச்சு, முத்தம் கூட்டிரு.எங்க அம்மா எப்ப எந்திக்காங்களோ அப்ப கோலம் போட்டுக்குவாங்க”
“சாணியா?”, என்று அதிர்ந்தாலும் “அது எங்க கிடைக்கும்?”, என்று கேட்டாள் சிந்து.
“மாரி வீட்ல முந்தின நாளே எடுத்து வச்சிருப்பா. அங்க போய் எடுத்துக்கோ. சரி இப்ப நீ ரெஸ்ட் எடு. நான் முத்தம் தெளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
ஆறாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டல் வாசம், அதுவும் டவுன் பள்ளியில். அதன் பின் பி.ஈ ஹாஸ்டல், எம்.ஈ ஹாஸ்டல். சிந்துவின் வாழ்க்கை அப்படி இருக்க, சாணியைப் பற்றி நினைத்த உடனே வயிற்றில் புளியைக் கரைத்தது. 
குழப்பத்துடன் அறைக்குள் வந்த சிந்துவை அப்போது தான் குளித்து முடித்து வந்த சித்தார்த் பாத்தான். “துணி காயப் போட்டுட்டியா சிந்து?”
“ஆன், இன்னும் போடலை. அண்ணி கிட்ட கேக்க மறந்துட்டேன்”
“சரி எதுக்கு குழப்பமா இருக்க?”
“இல்ல, சாணி தெளிச்சு நான் தான் முத்தம் தெளிக்கணுமா?”
“ஹிம், கொஞ்ச நாள் தான். அதுக்கப்புறம்  வீட்டு முன்னாடி, சிமெண்ட் போட்டுருவோம்”
“அவங்க வீட்ல எல்லாம் போய் என்னால சாணி எடுக்க முடியாது”
“பக்கத்து வீடு தான? சரி விடு. நான் எடுத்து கொடுக்குறேன்.சரி நீ வெளிய போய் ஏதாவது வேலை இருந்தா பாரு”, என்று அவன் சொன்னதும் வெளியே சென்றவள் துணி காயப் போடலாம் என்று பார்த்தாள்.
ஆனால் துணியை பிரேமா காயப் போட்டு விட்டு வந்தாள். சங்கடமாக உணர்ந்தாலும் “நானே போட்டுருப்பேன்ல அண்ணி? உங்களுக்கு எதுக்கு சிரமம்?”, என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சிந்து, விடு. அப்புறம் காலைல பூரி போடலாம். நீ மாவு பிசையுறியா? நான் குருமா வைக்கிறேன்”
“சரி”, என்று சொல்லி மாவை பாதி பிசைந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மாரி “நான் பிசையுறேன் சிந்து”, என்று வாங்கிக் கொண்டாள்.
அதன் பின்னரும் வேலை இருந்து கொண்டே இருந்தது. “இந்தா சிந்து சித்தார்த்க்கு காப்பி கொடு, அவனுக்கு கருப்பு காபி தான் பிடிக்கும்”, என்று சொல்லி அவள் கையில் கொடுத்தாள் பிரேமா.
அறைக்குள் வந்தவளை இறுக அணைத்தவன் அக்கா மற்றும் அண்ணன் பிள்ளைகள் அறைக்குள் வரும் ஆபத்து இருப்பதால் அவளை விட்டு விட்டான்.

“உள்ள ஒருத்தன் இருக்கானேன்னு நினைப்பு இருக்கா உனக்கு? இவ்வளவு லேட்டா வர?”, என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சித்தார்த்.
அவனை பொய்யாக முறைத்தவள் “நீங்க தான வெளிய போக சொன்னீங்க? சரி நான் கிளம்புறேன். பூண்டு உரிக்கணுமாம். உங்க அத்தை குடும்பம் நைட் சென்னை போறாங்கலாமே. அதனால மதியம் அசைவ உணவு இருக்கு. நான் போறேன்”, என்றாள். 
“உன்கூடவே இருக்கணும்னு ஆசையா தான் இருக்கு சிந்து. ஆனா ரெண்டு பேரும் ரூமுக்குள்ள இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்களோன்னு இருக்கு. சரி நீ போ, நான் ஒரு ஆளைப் பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் அவனுடைய அத்தை குடும்பம் ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள். “சித்தார்த்தின் அத்தைக்கு ஐந்து பெண்கள், அவர்களுடைய கணவர்கள் பிள்ளைகள், அது போக பிரேமா குடும்பம், பாஸ்கர் குடும்பம் என்று அந்த வீடே கும்பலாக இருந்தது. 
பிரேமா குருமாவை வைத்து விட்டு கழண்டு கொண்டாள். சிந்து பூரி உருட்ட, மாரி அடுப்பில் போட்டு எடுத்தாள். அதன் பின் மாரியும் பாஸ்கரும் தாலுகா ஆபீஸ் போய் விட்டார்கள். 
சித்தார்த்தின் அத்தை பெண் பூரி உருட்ட சிந்து போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள்.
தங்கள் வீட்டில் ஒரு இருபது பூரி போடுவதே பெரிய விஷயம். இங்கோ சட்டி சட்டியாக போட்டு எடுக்கவும் பெண்டு நிமிர்ந்தது சிந்துவுக்கு. அனைவரும் வேலை செய்தார்கள் தான். ஆனால் ஒவ்வொரு வேலையையும் செய்து விட்டு கழண்டு கொண்டார்கள். 
சிந்துவுக்கு மட்டும் வேலை இருந்து கொண்டிருந்தது. வேலை செய்யாமல் இருந்தால் “மாரியக்காவை திட்டுறது மாதிரி திட்டுவாங்களோ?”, என்று எண்ணியே வேலையைப் பார்த்தாள்.
ஒன்பதரை மணிக்கு தான் தாயம்மா எழுந்து வந்தாள். “ஐயோ இந்த அத்தை தினமும் இத்தனை மணிக்கு தான் எழும்புமா? அப்ப எல்லா வேலையும் நான் தான் செய்யணுமா?”, என்று பயந்து போனவள் “சே, அப்படி எல்லாம் இருக்காது. நேத்து டயர்டா இருந்துருக்கும். அதான் தூங்கிருப்பாங்க”, என்று மனதை தேற்றிக் கொண்டாள்.
அப்போது அவள் அறிந்திருக்க வில்லை. தாயம்மா தினமும் எட்டரைக்கு தான் எழுவாள் என்பது. இப்போது மட்டும் அல்ல. இதற்கு முன்னரும் சுந்தரம் தான் அந்த வீட்டில் சமையல் செய்வார். நான் வெஜ் மட்டும் தான் தாயம்மா சமைப்பாள் என்ற உண்மை போக போக தான் சிந்து புரிந்து கொண்டாள்.
அதன் பின் அனைவருக்கும் டீ கொடுக்க, டிபன் கொடுக்க, அனைத்துக்கும் சிந்து அலைந்து கொண்டே இருந்தாள்.
பத்து மணி ஆகும் போது வயிறு பசித்தது. சித்தார்த்தை இன்னும் காண வில்லை. அவன் வந்தாளாவது சாப்பிடலாம் என்று அவள் எண்ணியிருக்க அவன் வந்த பாடே இல்லை. 
அனைவரும் சாப்பிட்டார்கள். அவர்கள் சாப்பிட்ட பாத்திரத்தையும் விளக்கி வைத்தாள் சிந்து. பதினொரு மணி வரைக்கும் அவளை அனைவரும் சாப்பிட்டியா என்று கேட்டார்களே தவிர ஒருவரும் சாப்பிடு என்று வற்புறுத்தி சொல்ல வில்லை.
“சாப்பிட்டியா சிந்து?”, என்று ஒருவர் கேட்டால் “அவள் சித்தார்த்க்காக வெயிட் பண்ணுறா. அவன் எங்க போனான்னு தெரியலை.போன் வீட்ல வச்சிட்டு போய்ட்டான்”, என்று மற்றொரு ஆள் பதில் சொல்ல “அவன் வந்த பிறகு தான் சாப்பிடணும் போல?”, என்று அவளே மனதில் எழுதிக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.
கல்யாணத்துக்கு முந்தைய நாள் அவளுடைய வீட்டில் வேலை, கல்யாண நாள் அன்று மேடையில் நின்றது, அங்கே இங்கே அலைந்தது, இரவு சித்தார்த்துடன் இருந்த கூடல் பொழுதுகள், இன்றைய வேலை, பசி என்று அனைத்தும் சேர்ந்து பெரிய அளவு சோர்வையும், சிறிது எரிச்சலையும் சிந்துவுக்குள் உருவாக்கி இருந்தது. 
சரியான நேரத்துக்கு உணவை தரும் ராணி நினைவு வந்தது. மகளின் முகத்தை பார்த்தே அவள் எண்ணத்தை ஊகிக்கும் ராணியை வெகுவாக தேடினாள் சிந்து. 
பன்னிரெண்டு மணி ஆவதற்கு சிறிது நேரம் முன்பு தான் வந்து சேர்ந்தான் சித்தார்த். அவனைப் பார்த்ததும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. சூழ்நிலை கருதி அதை அடக்கினாள்.
“இவ்வளவு நேரம் எங்க போன? அவ சாப்பிடாம இருக்கா பாரு”, என்று அவனை அனைவரும் திட்டினார்கள். “பாட்டி வீட்டுக்கு போனேன், அங்க தூங்கிட்டேன். நீ சாப்பிட்டுருக்கலாம்ல சிந்து”, என்று அவளை சமாதான படுத்தினான் சித்தார்த்.
ஆனால் புது பொண்டாட்டியை வீட்ல விட்டுட்டு வந்துருக்கோமே என்ற குற்ற உணர்வும் அக்கறையும் அவனுக்கு இல்லாதது சிந்துவை வெகுவாக தாக்கியது.
சாப்பிட்டு முடித்த பின்னர் கோபம் சிறிது மட்டுப் பட்டது சிந்துவுக்கு. அதன் பின்னர் அவன் அறையில் படுத்து உறங்க, மறுபடியும் மதிய சமையலுக்கான வேலை செய்ய சென்று விட்டாள் சிந்து.
அன்று முழுவதும் வேலை வேலை என்று வதக்கினாலும் “இது என்னோட வீடு, வீட்டுக்கு வந்துருக்குறது கெஸ்ட். நாம தான் செய்யனும்”, என்று மனதை தேற்றிக் கொண்டாள்.
சமையலுக்கு வெங்காயம், பூண்டு, இஞ்சி உரித்து அரைத்து கொடுக்க தாயம்மா குழம்பை வைத்தாள்.
மதியம் இரண்டு மணிக்கு அனைவருக்கும் கறி குழம்பை பரிமாறும் போது “நம்மள யாராவது சாப்பிட சொல்ல மாட்டார்களா?”, என்று ஏங்கினாள் சிந்து. 
சித்தார்த்தை தாயம்மா அழைத்ததுக்கு “எனக்கு பசிக்கல”, என்று சித்தார்த் சொன்னானே தவிர சிந்துவுக்கு பசிக்குமே என்று அவன் எண்ணவில்லை.
ஒரு வழியாக மூன்று மணிக்கு சாப்பிட அவன் வரும் போது சிந்து அவனுடன் அமர்ந்தாள். அப்போது தான் உணர்ந்தாள். அங்கே சமைக்கப் பட்டது ஆட்டுக்கறி என்று.
சிந்து சிக்கன் என்று எண்ணி இருக்க, அங்கே இருந்ததோ அவளுக்கு பிடிக்காத மாட்டன். அவள் ஆட்டுக்கறி வேண்டாம் என்றதும் பிரேமா அவளுக்கு சாம்பாரை ஊற்றும் போது மனது வெகுவாக சோர்ந்து போனது சிந்துவுக்கு.
பேருக்கு கொறித்து விட்டு எழுந்ததும் “நீயே வேலை செஞ்சிட்டு இருக்க. இனி நீ வேலை செய்ய வேண்டாம். போய் ரெஸ்ட் எடு. மீதி வலையை நாங்க பாத்துக்குறோம்”, என்று அக்கறையாக தாயம்மா சொன்னதும் அந்த அக்கறை மனதை தொட்டாலும் “எல்லாம் வேலையும் தான் முடிஞ்சிருச்சே.இன்னும் என்ன வேலை இருக்குன்னு இப்படி சொல்றாங்க?”, என்று மனது எண்ணியது.
அன்று இரவு அவர்கள் அத்தை குடும்பம் கிளம்பியதும் மதியம் இருந்ததை அனைவரும் சாப்பிட்டார்கள். 
இரவு அறைக் கதவை தாழிட்டு விட்டு வந்ததும் அவளை இறுக்கி அணைத்த சித்தார்த் அவளை நாட, எரிச்சலோடு அவனை விலக்கினாள் சிந்து.
முந்தைய நாளும் அவளுக்கு உடம்பு சோர்வாக இருந்தது தான். ஆனால் மனதில் எந்த சோர்வும் இல்லை. ஆனால் இன்றோ உடலோடு மனதும் துவண்டு போனது.

Advertisement