Advertisement

ராணி வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்து போய் பார்த்த சித்தார்த் “வாங்க அத்தை”, என்றான்.
“உங்களுக்கு என்ன மா பிரச்சனை? நான் என்ன பண்ணுனா அவ கூட நிம்மதியா இருப்பீங்க? உங்க கிட்ட பணம் வாங்கினதுனால இப்படி பண்ணுறீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை அத்த. நான் ஒண்ணும் பண்ணலை”
“கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா இருந்ததே இல்லை. அதனால இவளை பேசாம கன்னியாஸ்திரி ஆக்கிரலாம்னு நினைச்சேன். ஆனா கல்யாணம் பண்ணுனா சந்தோஷமா இருப்பான்னு நினைச்சு தானே கட்டி வச்சோம். பணம் இல்லாம இருந்தாலும் தன்மானம் இருக்கே. என் குணம் தப்பானதா இருந்தா நான் எதுக்கு கடன் காரியா இருக்க போறேன். எப்படி எப்படியோ சம்பாதிச்சிருப்பேனே”
“ஐயோ அத்தை அப்படி எல்லாம் பேசாதீங்க?”
“நீங்க அப்படி தானே பேச வைக்கிறீங்க? அவ எங்க வீட்ல சமையலே செஞ்சது கிடையாது. ஆனா உங்க வீட்ல வந்து எவ்வளவு வேலை செஞ்சா?”
“ஆமா, அதெல்லாம் நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்”
“அப்புறம் ஏன்? நானும் என் மகளும் தான் உங்களை உங்க குடும்பதுல இருந்து பிரிச்சிடோம்னு நினைச்சு இப்படி பண்ணுறீங்களா? எங்க யாருக்கும் அந்த புத்தி இல்லை. அங்கயே இருந்தா இவ குணத்துக்கு அவங்களை வெடுக்குன்னு ஏதாவது சொல்லி சண்டையா மாறுறதுக்குள்ள விலகி இருந்தா பிரச்சனை வராதேன்னு நினைச்சு தான் தனி வீடு பாக்க சொன்னேன்”
“அப்படி எல்லாம் இல்லை அத்தை?”
“வேற என்ன தான் பண்ணனும்? தினம் தினம் என் பிள்ளை அழுறதுக்கா கல்யாணம் பண்ணி வச்சேன்?”
“இனி இப்படி நடக்காது அத்தை?”
“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை”
தலை குனிந்து நின்றான் சித்தார்த். அழுது கொண்டே இருந்தாள் சிந்து. 
“உங்க கிட்ட பணம் வாங்கினது தான் பிரச்சனைன்னா நான் சீக்கிரம் அந்த கடனை அடைச்சிருவேன். இல்லை நீங்க மாறாம இப்படியே தான் இருப்பீங்கன்னா அதையும் சொல்லிறுங்க. நான் என் மகளை கூட்டிட்டு போறேன். கல்யாணம் முடியலைன்னு கவலைப் பட்டோம். இனியாவது நிம்மதியா அவ இருக்கட்டும். நீங்க உங்க வீட்டோட இருங்க”
“என்னை மன்னிச்சிருங்க அத்தை. இனி இப்படி நடக்காது”
அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று தெரியாமல் சிந்துவைப் பார்த்தாள் ராணி. சிந்துவோ அழுது கொண்டிருந்தாள். 
“அழாத சிந்து, நான் உன் தம்பிக்கிட்ட லோன்  போட சொல்லிருக்கேன். லோன் போட்டு இவங்க கடனை அடைக்கலாம். அவங்க என்ன சொன்னாலும் நீ காது கேக்காத மாதிரி இருந்துக்கோ. சிந்து புக்கை எடுத்து படிச்சு வேலைக்கு போ சிந்து. நான் கிளம்புறேன்”, என்று சிந்துவிடம் சொன்ன ராணி சித்தார்த்திடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். 
வீட்டுக்குள் மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது. இருவருக்குள்ளும் அமைதியே நிலவியது. வெளியே சென்ற ராணிக்கோ மனது பாரமாக இருந்தது. 
“உணர்ச்சி வசப் பட்டு வந்து பேசிட்டோமோ? இப்ப நாம பேசினதும் சிந்து வாழ்க்கைக்கு தானே பிரச்சனை ஆகும்?”, என்று அந்த தாயின் மனது பரிதவித்தது. 
சிந்துவும் சித்தார்த்தும் எதுவுமே பேசிக் கொள்ள வில்லை. மதியம் உணவு சமைத்த சிந்து “சாப்பிட வாங்க”, என்று மட்டும் அழைத்தான். 
இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். அப்போது “என்கிட்ட பேசு சிந்து. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்லை”, என்று பேச்சை ஆரம்பித்தான் சித்தார்த்.
“இவனை எல்லாம் எந்த லிஸ்ட்ல சேக்க?”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள் சிந்து.
“பிளீஸ் சிந்து பேசு, இனி பழைய விஷயம் எதுவும் பேச மாட்டேன்”
“உங்கள எப்படி நம்புறது. ஒவ்வொரு டைமும் இப்படி தான் சொல்றீங்க? ஆனா திருப்பியும் நீங்க தான் சண்டையை ஆரம்பிக்கிறீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கலையா? நான் நல்ல பொண்டாட்டியா இல்லையா?”
“அப்படி எல்லாம் இல்லை சிந்து”
“நான் என்னங்க தப்பு செஞ்சேன்? மத்த பொண்ணுங்க மாதிரி நானும் சந்தோஷமா இருக்கணும்னு தானே கல்யாணம் பண்ணுனேன்? எங்க அம்மா கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் சண்டையே போட மாட்டோம்னு. ஆனா இப்ப நிமிசத்துக்கு ஒரு சண்டை”
“நான் தப்பான பொண்ணா இருக்கேனா? யார் கிட்டயும் அவசியம் இல்லாம பேசுறேனா? நைட்டி மேலே துண்டை போடாம வெளிய போயிருக்கேனா?”
“அப்படி எல்லாம் இல்லை”
“வீட்ல வேலை செய்யாம சோம்பேறியா இருக்கேனா? எங்க வீட்ல நான் டி‌வி பாத்துட்டே தான் சாப்பிடுவேன். ஆனா நான் டி‌வி பாத்து பதினொரு மாசம் ஆச்சு. உங்களுக்கு டி‌வி பாக்க பிடிக்காது. அதனால என்னையும் பாக்க விட மாட்டீங்க? உங்க அம்மா உங்க வீட்ல பாக்க விட மாட்டாங்க. எங்க வீட்ல நீங்க பாக்க விட மாட்டீங்க? அப்படி மத்தவங்க மாதிரி நான் டி‌வி பாக்கணும்னு ஆசை பட்டு கேட்டேனா? தியேட்டர்க்கு கூட்டிட்டு போங்க ஷாப்பிங் கூட்டிட்டு போங்கன்னு சொன்னேனா?”
“இல்லை”
“உங்க அம்மா அப்பாவை என் அம்மா அப்பாக்கும் மேல தான் நான் பாத்துக்கிட்டேன். ஆனா அவங்க என்னை அப்படி வச்சிருக்க போய் தானே அவங்களை எனக்கு பிடிக்காம போச்சு. என் தப்புன்னு பாத்தா மரியாதை இல்லாம பேசுறது மட்டும் தான். ஆனா இது என்னோட பழக்கமே இல்லை தெரியுமா? நான் யாரையும் வா போ ன்னு பேசுனது இல்லை. என்னை இந்த அளவுக்கு பேச வச்சது யாரு? நீங்களும் உங்க குடும்பமும் தானே?”
“எங்க அம்மா பாவம் மா. அவங்களை நான் எப்படி எல்லாம் வச்சிருக்கணும்னு நினைச்சேன். படிச்சு யாருக்கும் யூஸ் இல்லை. என்னால அவங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான். உங்க அம்மா அப்பாவையும் நான் பாக்க மாட்டேன்னு சொல்லலையே. அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னா நாமலே பாத்துக்குவோம்னு தானே நான் சொன்னேன். இதுக்கு மேல நான் எப்படி இருக்கணும்?”
….
“அப்புறம் இன்னொன்னும் புரிஞ்சது, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குறது காதலே கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்குற ஈர்ப்பு மட்டும் தான். காதல் இருந்துருந்தா நாம இப்ப இரண்டு துருவத்துல நின்னுருக்க மாட்டோம்”
….
“எல்லாரும் குழந்தை வந்தா மாறிரும் மாறிரும்னு சொன்னா அப்ப நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு தான் என்ன அர்த்தம்?”
“அப்படி சொல்லாத சிந்து. இனி அப்படி பேச மாட்டேன்”
“இனி நீங்க பேசினாலும் நான் கவலை பட மாட்டேன். என்ன இப்படி சொல்றேன்னு பாக்குறீங்களா? எங்க அம்மா என்கிட்ட போயிட்டு வறேன்னு சொல்லிட்டு போகும் போது அவங்க கண்ணுல இருந்த வலியை என்னால பாக்கவே முடியலை. எல்லாமே என்னால தான? இனி நீங்க என்னை என்ன டார்ச்சல் செஞ்சாலும் அது என் தொண்டையை விட்டு வெளிய போகாது”
“நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீ பழைய மாதிரி ஆகு”
“நீங்க சொன்னாலும் நான் கவலைப் பட போறதில்லை. என் வீதியை நான் ஏத்துகிட்டு தான் ஆகணும். இந்த உலகத்துல இருக்குற கணவன் மனைவி எல்லாம் காதலோடவா வாழுறாங்க? கடமைக்காக தான வாழுறாங்க. நாமளும் அப்படியே வாழ்வோம்”
“அப்படி சொல்லாத, காதலோட தான் வாழனும்”
“அப்படி காதலோட வாழணும்னா என்னால உங்க விரல் என் மேல படுறதைக் கூட என்னால அனுமதிக்க முடியாது. ஆனா அது முடியாதே. வாழ்ந்து தானே ஆகணும்?”
“சிந்து”
“உங்க மேல முழுக்க முழுக்க இருந்த காதல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒரு நூலிழை அளவு ஒட்டி இருக்குனு நான் நினைச்சேன். அது காதலே இல்லைன்னு நீங்க புரிய வச்சிட்டீங்க?”
“காதல் இல்லாம வாழ்ந்தா நல்லா இருக்காது சிந்து”
“அப்ப அதை காதலா நீங்க மாத்திக் காட்டுங்க. நீங்க மாறிக் காட்டுங்க. உங்க காதலை புரிய வைங்க. அப்ப பாப்போம். இப்ப சாப்பிடுங்க”, என்று சொல்லி தன் வேலையை தொடர்ந்தாள். 
அடுத்து வந்த இரண்டு வாரங்கள் வாழ்க்கை சாதாரணமாக சென்றது. அடிக்கடி அவனுடைய ஊருக்கு சென்று வந்தான். வந்த பின்னரும் சாதாரணமாக இருந்தான். 
அந்த மாதமும் சிந்துவுக்கு நாட்கள் தள்ளிப் போனது போல் இருந்தது. அப்போது ஒரு நாள் “வளக்காப்புக்கு உனக்கு வெள்ளி வளையல் போட போறேன் சிந்து. அப்புறம் அதை அழிச்சு பிள்ளைக்கு கொலுசாவது தண்டையாவது செய்யனும்”, என்று பேச்சுக் கொடுத்தான் சித்தார்த். 
“இன்னும் மாசமாவே ஆகலை. அதுக்குள்ளே இந்த பேச்சா?”, என்று சிரித்தாள் சிந்து. 
“ஆனா, உன் வளைகாப்புக்கு என் எதிரி எல்லாம் வரக் கூடாது சொல்லிட்டேன். அவன் வந்தா நான் அந்த இடத்துலே இருக்க மாட்டேன்”, என்று சொல்லி அவன் குணத்தை நிரூபித்தான் சித்தார்த். 
“இவன் திருந்தவே மாட்டானா?”, என்று எண்ணி அவனை ஒரு பார்வை பார்த்த சிந்து “என் வயித்துல குழந்தை உருவானா அது முழு காதலோட உருவாகணும்னு நினைச்சேனே? ஆனா இவன் குணத்துக்கு இவன் மேலே காதல் என்ற உணர்வு எப்படி வரும்? அப்ப என் குழந்தையும் கடமைக்கு மட்டும் தான் உருவாகுமா?”, என்று மானதுக்குள்ளே கண்ணீர் வடித்தாள். 
பின் அவன் எதுவோ பேச வரும் போது அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். எப்போதும் பிரச்சனையை ராணிக்கு சொல்லும் சிந்து தனக்குள்ளே அந்த கசப்பை விழுங்க பழகிக் கொண்டாள். 
சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் முழுக் காதலோடு மனைவியை தாங்கிக் கொள்ளும் கணவன் கிடைப்பது அபூர்வம். மனைவியின் மனதை புரிந்து நடக்கும் கணவன் கிடைப்பது வரம்.  
தனக்கு அந்த வரம் கிடைக்க வில்லை என்று புரிந்து கொண்ட சிந்து வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக் கொண்டாள். இந்த சமுதாயத்தில் பல பெண்களின் வாழ்க்கை இது போல தான் நகர்கிறது. 
எதிர் காலத்தில் ஒரு வேளை அவள் எதிர் பார்த்த காதல் மலரலாம். கதை முற்றும்….
இந்த கதையை இதோட முடிக்கிறேன் பிரண்ட்ஸ். படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன தோழிகளுக்கு நன்றி. 
இதன் பின்னரும் சிந்துவின் வாழ்கையில் பிரச்சனைகள் வரலாம். இதற்கு மேல் எழுத எனக்கே அழுகை வருகிறது. எப்போதும் சந்தோஷமாக கதையை நகர்த்த நினைக்கும் எனக்கே இந்த கதை வலியை தருகிறது. 
எப்போதும் கஷ்டம், சண்டை அழுகை என்று இந்த கதை இருந்ததால் சில பேருக்கு இது போர் அடித்திருக்கலாம். ஆனால் சில பேர் வாழ்கையில் இது நடப்பதால் தான் இந்த கதையை எழுதினேன். 
ஒரு வேளை இதன் மூலம் எந்த பெண்ணின் வாழ்வாவது மாறும் என்ற நப்பாசையில். 
சித்தார்த் திருந்தி, அவள் மனதை புரிந்து கொண்டு நடப்பது போலவும், சிந்துவுக்கு வேலை கிடைத்து, அழகான குழந்தை இருப்பது போலவும் கதையை முடிக்க எனக்கும் ஆசைதான். 
ஆனால் இது உண்மைக் கதை. கற்பனையை இதனுள் நான் திணிக்க விரும்ப வில்லை. அதனால் உள்ளதை உள்ள படியாக எழுதினேன்.  
கூடிய விரைவில் புதிய கதையுடன் வருகிறேன்…
இப்படிக்கு, உங்கள் கார்த்திகா கார்த்திகேயன்……
     

Advertisement