Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 20
கற்பனையில் கூட
என் காதல் தாகம்
தீர்க்க நீ வருவாயெனில்
அதுவே என் வாழ்வின் வசந்தம்!!!
இந்த நிலைமை மாறுமா என்று குழம்பினாள் சிந்து. அவள் தான் தனி வீடு வேண்டும் என்று அடம் பிடித்தது. தனியே சென்றால் தாயம்மா சுந்தரம் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிந்து நினைத்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரக் கூடும் என்று அவள் அறிந்ததே. 
அவள் எதிர் பார்த்த பிரச்சனைகள் குழந்தை பிறந்தவுடன் வரலாம், பிரேமாவின் மகள் வயதுக்கு வந்தால் அவள் வீட்டுக்கு போக சொல்லி சித்தார்த் அழைக்கும் போது பிரச்சனை வரலாம், இப்படி எல்லாம் பிரச்சனை வரலாம் என்று தான் எதிர் பார்த்தாள். ஆனால் சித்தார்த்தே முற்றிலும் மாறிப் போவான் என்று அவள் எதிர் பார்க்க வில்லை. தினம் தினம் பிரச்சனை வரும் என்று அவள் கனவிலும் எண்ண வில்லை. 
அவன் மாறி விட்டானா? இல்லை இது தான் அவன் குணமா? என்று கூட குழம்பி தவித்தாள். 
ஒரு நாள் சித்தார்த் வேலைக்கு கிளம்பி சென்ற பின்னர் சித்தார்த்தின் அண்ணன் பாஸ்கர் வீட்டுக்கு வந்தான். 
“வாங்க மச்சான். சாப்பிடுறீங்களா? தோசை ஊத்தவா?”,என்று கேட்டாள் சிந்து.
“அங்க வீட்லயும் தோசை தான் சிந்து. தண்ணி மட்டும் கொடு. ஹாஷினி சென்னை போயிட்டு வந்த அப்புறம் இன்னைக்கும் ஸ்கூல்க்கு போக மாட்டேனு அடம் பிடிச்சா. அதான் அவளை ஆட்டோல அனுப்பாம நானே விட்டுட்டு வரேன். சித்தார்த் ஏதோ வயர் இங்க இருக்குன்னு சொன்னான். அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”
“இருங்க எடுத்து தரேன்”, என்று சொல்லி எடுத்துக் கொடுத்தாள்.
“புது வீடு நல்லா இருக்கா சிந்து?”
“நல்லா இருக்கு”
“அங்க பாத்திரம் வைக்க ஸ்டாண்ட் சும்மா தான் இருக்கு. அதை கொடுத்து விடுறேன். அதுல வச்சா இடைஞ்சலா இருக்காது”
“சரி, மாரியக்கா பையன் நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க, ஆனா நிம்மதி தான் இல்லை”, என்று பாஸ்கர் சொன்னதும் குழம்பிய சிந்து “என்ன ஆச்சு?”, என்று கேட்டாள். 
“எங்க அம்மா பண்ணுறது தான் எதுவுமே சரியில்லை”
“என்ன ஆச்சு?”
“பழைய வீட்டை விட்டு பாட்டி வீட்டுக்கு போற அன்னைக்கு ஒரே அழுகை, இனி நீ உன் சொந்த பந்தங்களோட தான் இருப்பன்னு அழுதுட்டு இருந்துச்சு. மாரி வீடு பாட்டி வீட்டுக்கு பக்கத்துல தானே இருக்கு. அவங்க கூட ரொம்ப ஒட்டிருவோம்னு எங்க அம்மாவுக்கு பயம். அதனால ஒரே திட்டு. நான் இதை மாரிகிட்ட சொல்லலை. சொல்லிருந்தா கிழி கிழின்னு கிழிச்சிருப்பா”
“அங்கயும் இதே கதை தானா?”
“ஏன்,இங்க என்ன ஆச்சு?”
“உங்க அம்மா யாரையும் நிம்மதியா வாழவே விட மாட்டாங்களா? அன்னைக்கு பொருள் எல்லாம் எடுத்துட்டு வரும் போது அழுது அனுப்பிருக்காங்க. இங்க வந்து உங்க தம்பி ஒரே அழுகை. இப்ப வரைக்கும் தினமும் சண்டை”
“எனக்கும் இப்படி எல்லாம் செய்யும் போது கடுப்பா தான் இருக்கும். ஹாஷினிட்ட கூட உன் வீட்டுக்கு போ, உன் சொந்த பந்தங்களோட போய் இருன்னு விரட்டிருக்கு. அவ வந்து ஆச்சி திட்டுரான்னு அழுறா. அவளே எங்க அம்மா கிட்ட நீ இப்படி எல்லாம் பண்ணுனா என் தம்பியை இங்க கூட்டிட்டே வர மாட்டேன்னு சொல்லிருக்கா. மாரி அம்மா வீட்டாள்கள் கூட நாங்க சேந்துருவோம்னு இப்படி எல்லாம் பேசுது. அது மட்டுமில்லாம ஊர்ல எல்லாரும் எதுக்கு அண்ணனும் தம்பியும் ஒரே நாள்ல தனியா போய்ட்டீங்கன்னு கேட்டா சாதாரணமா பதில் சொல்ல வேண்டியது தான? அவங்க கிட்ட இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அழுறது. என்கிட்ட கேக்குறவங்க கிட்ட நான் அந்த வீடு ஒழுகுதுன்னு போயிட்டேன். என் தம்பி நடு ராத்திரில வேலைக்கு போக வேண்டி இருக்குன்னு போய்ட்டான்னு சொல்றேன். அது மாதிரி சொல்ல வேண்டியது தானே?”
“உங்களுக்கு புரியுது. ஆனா உங்க தம்பி அவங்க குடும்பத்தை விட்டு அவங்களை பிரிச்ச மாதிரி என்னை பாக்குறாங்க. இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்க தம்பி சிரிக்கவே இல்லை. தினமும் சண்டை தான்”
“கொஞ்சம் விட்டு பிடி சிந்து. குழந்தைங்க வந்துட்டா மாறிருவான். முன்னாடியே அவன் எங்க அம்மா அப்பா என்ன சொன்னாலும் நம்புவான். உனக்கு தெரியும் தானே? கொஞ்ச நாள்ல சரியாகிருவான். மாரி உன்கிட்ட பேசணும்னு சொன்னா. நான் வீட்ல போய் பேச சொல்றேன்”
“ஹிம் சரி”
“கவலை படாத, சந்தோஷமா இருக்க பாரு. எங்க அம்மா குணமே இப்படி தான். பாட்டி விசயத்துலே பாத்த தானே? எங்க அப்பாவை கடைசி வரை பாட்டியைப் பாக்க போக விடலை. எங்க அம்மா பேச்சை எங்க அப்பா கேக்கணும்னு எங்க அம்மா நினைக்கும் போது அப்ப நாங்களும் எங்க பொண்டாட்டி பேச்சை கேட்டா என்ன தப்பு?”
“ம்ம், பொண்டாட்டி பேச்சை மட்டும் கேக்கணும்னு நான் சொல்ல மாட்டேன். நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்க வேண்டியது தானே? வெறும் தயிர் தாளிச்சு வச்சிருக்கேன்னு திட்டனுமா? உங்க வீட்ல நான் தயிர் சாதம் கொடுக்கவே இல்லையா?”
“அதானே அவன் வெயில் நேரம் தயிர் நல்லா சாப்பிடுவானே. இப்படி தான் ரொம்ப பண்ணுறாங்க. நேத்து நானே திட்டி விட்டுட்டேன்”
“என்ன ஆச்சு? நீங்க எதுக்கு திட்டினீங்க?”
“ஹாசினிக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். உண்டியல்ல ரெண்டாயிரம் இருந்தது. மேற்கொண்டு ஆயிரம் போட்டு வாங்கி கொடுத்தேன். நான் சொல்லிட்டு வெளிய தான் வந்துருக்கேன். அதுக்கு எங்க அம்மா இவன் பைசா இல்லை இல்லைன்னு சொல்றான். சைக்கிள் வாங்க மட்டும் பணம் இருக்கோ? இனி நீங்க எதுவும் கொடுக்காதீங்கன்னு சொல்றாங்க. நான் வேலைக்கு போய் ஒரு வருஷம் ஆகிட்டு சிந்து. உங்க கல்யாணத்துக்கு முந்துன மாசம் இங்க வந்தேன். வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு வந்ததால திருப்பி அப்ளை பண்ணிருக்கேன். விசா வரும் வரும்னு பாத்து, அப்புறம் மாரிக்கு பிரசவம்ன்னு இவ்வளவு நாள் ஆச்சு. மூணு லட்ச ரூபாய் எங்க அப்பா கிட்ட கொடுத்துருக்கேன். அதை என்ன செஞ்சார்னே தெரியலை. அதுக்கு நான் கணக்கு கேட்டா என்ன செய்வாங்க சொல்லு சிந்து. கோபத்துல நீங்க இப்படியே பண்ணுனா நான் இங்க வரவே மாட்டேன் மா. ஹாஷினியையும் கூட்டிட்டு வர மாட்டேன்னு  திட்டிட்டேன். கண்ணீர் வடிச்சீட்டு உக்காந்துருந்தாங்க. எங்க அப்பா ஒண்ணும் சொல்லாம இருக்காரு”
“சரி விடுங்க. ஏதாவது மாற்றம் வந்தா சரி தான்.நேரம் ஆச்சு சாப்பிடுறீங்களா?”
“இல்ல சிந்து நான் கிளம்புறேன். நீ கவலைப் படாம இரு. அவன் சரியாகிறுவான்.நான் கிளம்புறேன். அங்க வாங்க. சும்மா தலையை காமிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்து போய் இரு”
“சரி மச்சான் பத்திரமா போங்க”, என்று சொன்னதும் அவன் கிளம்பி சென்றான். “ஆக மொத்தத்துல இந்த பொம்பளை யாரையுமே நிம்மதியா வாழ விடாது போல”,என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளை அழைத்த மாரி “எல்லாம் சரியாகிரும் சிந்து. இனி நீங்க மட்டும் தானே? சந்தோஷமா இருக்க பாரு. அவங்க இப்படி தான் பண்ணுவாங்க. என்னை எல்லாம் எப்படி டார்ச்சல் பண்ணிருக்காங்க தெரியுமா? நான் சொல்லிருந்தா நீ எப்பவோ தனியா போயிருப்ப? நீ பயந்துரக் கூடாதுன்னு தான் நான் எதுவும் உன்கிட்ட சொல்லலை. சித்தார்த் குழந்தை பிறந்தா மாறிருவாங்க”, என்று ஆறுதல் சொல்லி வைத்தாள். 
“குழந்தை தான் எங்க வாழ்க்கையை மாத்தும்னா அப்ப இத்தனை மாசம் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையா? எங்க ரெண்டு பேருக்குள்ளே காதலே இல்லையா? இல்லை இருந்த காதல் அழிஞ்சிருச்சா?”, என்று குழப்பம் வந்தது. 
“இல்லை அழியலை. இன்னும் இவங்க இப்படி இருக்காங்களேன்னு கவலை தானே இருக்கு. இன்னும் வெறுப்பு வரலையே? இப்படியே செஞ்சா வெறுப்பு வந்துருமா? கொஞ்சம் ஒட்டி இருக்குற பாசமும் அத்து போயிருமா?”, என்று எண்ணி தவித்துக் கொண்டிருந்தாள். 
மொத்த பாரத்தையும் கடவுள் மேல் தூக்கிப் போட்டாள் சிந்து.கடவுளிடம் வேண்டுவதை தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லாமல் போனது. 
என்ன வேண்டுதல் செய்தாலும் மாற்றம் மட்டுமே வாழ்வில் வராமல் இருந்தது. 
சிந்து வீட்டில் இருந்து வரும் எதையும் சித்தார்த் சாப்பிடாத நிலையில், கோயிலுக்கு சென்று வந்த சித்தார்த் அவன் வீட்டில் இருந்து தடியங்காயும், ரேஷன் கடையில் உள்ள பச்சரிசியும் கொண்டு வந்தான். 
அதைப் பார்த்ததும் கோபம் கொந்தளிக்க அதை வெளிக் காட்டாமல் அமைதியாக இருந்தாள் சிந்து. அவள் அமைதியை சோதிக்கும் விதமாக அவளிடம் பேச்சுக் கொடுத்தான் சித்தார்த். 
“நாளைக்கு தடியங்காய் கூட்டு வை சிந்து”
“நான் வைக்கிறேன், வைக்க மாட்டேன்னு சொல்லலை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம், எங்க வீட்ல இருந்து என்ன கொண்டு வந்தாலும் நீங்க அதை தொட்டு கூட பாக்க மாட்டுக்கீங்க. ஆனா உங்க வீட்ல இருந்து கொண்டு வரதை நான் சாப்பிடணுமா?”
“அது..”
“உங்களை எங்க அம்மா என்ன செஞ்சாங்க. எதுக்கு இப்படி என்னை நிம்மதி இல்லாம ஆக்குறீங்க?”
“சரி சரி இனி சாப்பிடுறேன். இது உங்க அம்மா கொண்டு வந்த இட்லி பொடி தானே? நான் சாப்பிடுறேன் போதுமா?”, என்று கேட்டு வெறும் வாயில் சாப்பிட்டான். 
அவன் அதை சாப்பிட்டால் தான் அந்த காயை அவள் சமைப்பாள் என்பதால் தான் அவன் சாப்பிட்டான். அது சிந்துவுக்கும் புரிந்தது. அதற்கு மேல் அவனிடம் எத்தனை தடவை கேட்டும் அவன் பதில் சொல்ல வில்லை. 
அடுத்த பிரச்சனையாக “உங்க அம்மா எப்ப பாத்தாலும் வாட்சப்லே இருக்காங்க போல?”, என்று ஆரம்பித்தான். 
அவனைப் பார்த்து முறைத்த சிந்து “இதுக்கு மேல இதைப் பத்தி பேசினீங்கன்னா நான் மனுசியாவே இருக்க மாட்டேன்”,என்று சொல்லி அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள். 
இந்த பிரச்சனை இன்று ஆரம்பிக்க வில்லை. தலை தீபாவளி அன்றில் இருந்து சித்தார்த் அவளுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தான். சிந்து அதிக கோபத்துடன் அவனை திட்டிய பிறகு தான் அமைதியாக இருப்பான். 
ஒரு ரெண்டு மாசமாக அதைப் பற்றி ஆரம்பிக்காதவன் இன்று பேசியதும் “இவன் வேணுக்குன்னு என்கிட்ட சண்டை இழுக்க நினைக்கிறானா? ரெண்டு மாசமா பேசாதவன் மறுபடியும் என் அம்மாவை பத்தி பேசி சண்டையை இழுக்குறானே”, என்று எண்ணிக் கொண்டு பழைய சண்டையை எண்ணிப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. 
இவர்கள் தலை தீபாவளிக்கு ராணி வீட்டுக்கு சென்றிருந்த போது ராணி போனை எடுத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். 
அப்போது “இது அந்த ஆட்டோக்காரன் தானே? எதுக்கு உங்க அம்மா அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி இருக்காங்க?”, என்று கேட்டான்.
அவன் கேள்வியில் அதிர்ந்து போனவள் அவனை முறைத்துக் கொண்டே போனைப் பார்த்தாள். 
“நீங்க என்ன லூசு மாதிரி பேசுறீங்க? பாக்குறீங்க தானே? அவங்க குட்டி பிள்ளைங்க கூட தான் பேசிருக்காங்க. அந்த அண்ணானோட பிள்ளைகளும் அத்தைன்னு சொல்லி அம்மாக்கு பேசி மெஸ்ஸேஜ் அனுப்பிருக்காங்களே? அந்த அண்ணானோட பிள்ளைங்க பேசிருப்பாங்க. அதான் அம்மா பேசிருக்காங்க”
“நீங்க இந்த ஊருக்கு போன வருஷம் தானே வந்தீங்க? அவனை எப்படி உங்களுக்கு தெரியும்?”
“இப்ப எதுக்கு அந்த அண்ணனை அவன் இவன்னு பேசுறீங்க? உங்களை விட மூத்தவங்க தானே? எங்க போனாலும் அந்த அண்ணா தான் கூட்டிட்டு போவாங்க. அந்த அக்காவும் எங்க கிட்ட நல்லா பேசுவாங்க. அவங்க தான் எனக்கு கல்யாணத்துக்கு பேஷியல் எல்லாம் பண்ணி விட்டாங்க. ஆடி பலகாரம் அந்த அண்ணானோட அம்மா தான் இங்க வந்து செஞ்சு கொடுத்தாங்க”
“உங்க அம்மாவுக்கு அவன் கிட்ட என்ன பேச்சு?”
“லூசு மாதிரி பேசாதீங்க? அந்த அண்ணானோட பிள்ளைங்க கிட்ட தானே பேசிருக்காங்க?”
“யாருக்கு தெரியும்? அவன் கிட்டயும் பேசுவாங்களோ என்னவோ?”
“உங்க அம்மா மாதிரி இருக்குறவங்களை இப்படி தான் பேசுவீங்களா?”
“சரி சரி விடு”, என்று சொன்னவன் அவளை விட வில்லை. அடுத்து ராணி எப்போது ஆன்லைன் வந்தாலும் “உங்க அம்மா ஆன்லைன்ல இருக்காங்க. அவன் கிட்ட தானே பேசுவாங்க. எப்பவும் ஆன்லைன் தான். நான் எல்லாம் மெஸ்ஸேஜ் பண்ணுனா ரிப்ளை இல்லை. அங்க மட்டும் ரிப்ளை”, என்று சொல்லி வறுத்தெடுத்தான். 

Advertisement