Advertisement

தாயம்மாவை கொன்று விடும் அளவுக்கு வெறி வந்தது. அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். சிந்துவின் சந்தோஷ குரலை எதிர் பார்த்த ராணிக்கு சிந்துவின் அழும் குரல் பீதியை கிளப்பியது.
“என்ன ஆச்சு தங்கம்?”
“இவங்க என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க மா”
“அழுறதை விட்டுட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு சிந்து?”, என்று பதட்டமாக கேட்டாள் ராணி. 
“காலைல இருந்து இங்க தான அந்த பொம்பளை கிடந்துச்சு. நல்ல தூங்கி எந்திச்சு வயிறு முட்ட தின்னு சாப்பாடும் எடுத்துட்டு போய் அவங்க திங்க்ஸ் எடுக்க போகும் போது ஒரே அழுகையாம். அவங்க அம்மா அழுதாங்கன்னு இவங்க ஒரே அழுகை. இந்த பொம்பளை எதுக்கு மா இப்படி இருக்கு? போகும் போது நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி விடாம, இப்படியா மா அழ வச்சு அனுப்புவாங்க. என்னை ஏதாவது ஹாஸ்டல்ல சேத்து விடுங்க மா. நான் கோச்சிங்க் கிளாஸ் போறேன். இவங்க கூட இருந்தா என்னால நிம்மதியா இருக்கவே முடியாது. இவங்க அவங்க அம்மா அப்பா கூடவே இருக்கட்டும்”
“கொஞ்சம் பொறுமையா இரு சிந்து. பையன் தனியா போறது வருத்தமா இருந்துருக்கலாம் சிந்து. பொறுமையா இரு தங்கம்”
“அப்படி பாசம் பொங்குச்சுன்னா மூணு மாசம் முன்னாடி தனியா போறோம்னு சொன்னப்பவே வேண்டாம்னு கதறி அழ வேண்டியது தானே மா? நேத்து பால் காச்ச போறோம்னு சொன்னப்ப அழ வேண்டியது தானே மா? அவங்க கிளம்பும் போதா மா இப்படி பண்ணனும்?”
“கொஞ்சம் விட்டு பிடி சிந்து. அழுதா அழுதுட்டு போகட்டும்னு விடு. தனியா வந்தாச்சுல்ல? உன் வேலையை மட்டும் பாரு. அவங்க அம்மாவை நினைச்சு அவங்க அழுதா உனக்கு என்ன? அம்மா சொல்றதை கேப்ப தானே?”
“ஹிம்”
“எதையும் யோசிக்காம உன் வேலையை மட்டும் பாரு”
“சரிம்மா”,என்று சொல்லி போனை வைத்த சிந்துவுக்கு என்ன முயன்றும் தாயம்மா மேல் இருந்த கோபம் மட்டும் குறைய வில்லை. 
சித்தார்த்திடம் பேசாமல் அமர்ந்திருந்தவளை அவனே பேசி சமாதானப் படுத்தினான். “அழ வச்சிட்டு இவனே சமாதான படுத்துரானே”, என்று எண்ணிக் கொண்டு திங்க்ஸ் கொண்டு வார ஆள்கள் வருவார்கள் என்பதால் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாள். 
அவள் சரியானதும் அவன் முகத்தை சோகமாக வைத்திருந்தான். புரியாத புதிராக இருந்தான் சித்தார்த். திங்க்ஸ் எல்லாம் வந்ததும் அவர்களுக்கு டீயும் சுந்தரத்துக்கு லெமன் ஜூஸும் போட்டுக் கொடுத்தாள் சிந்து. பின் அவர்கள் சென்றதும் மதியம் மீதி இருந்ததை சாப்பிட்டு விட்டு அனைத்தையும் எடுத்து வைத்து படுக்கும் போது நேரம் ஆகி விட்டது.
சிந்து படுத்ததும் தூங்கி விட்டாள். நிம்மதியான தூக்கம் வந்தது அவளுக்கு. புது இடம் என்ற பயம் இல்லாமல் அமைதியான தூக்கம் அவளை தழுவியது. திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் இன்று தான் அவள் நிம்மதியாக தூங்கியது போல இருந்தது. 
ஆனால் அவளுக்கு எதிர்மறையாக தூங்காமல் விழித்திருந்தான் சித்தார்த். அடுத்த நாள் காலை அவன் சரியாக சாப்பிடவும் இல்லை. என்ன தான் அவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் சரியாக சாப்பிடாதது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. 
அன்று மதியம் பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த்தின் அப்பா சுந்தரம் வீட்டுக்கு வந்தார். மாவரைத்துக் கொண்டிருந்த சிந்து  அவர் பூஸ்ட் மட்டும் தான் குடிப்பார் என்பதால் டீ காபி போடாமல் அவருக்கு லெமன் ஜூஸ் போட்டுக் கொடுத்தாள். 
குடித்து முடித்தவர் “இந்தா மா, இதை சித்தார்த் கிட்ட கொடு. நாங்க சென்னை போறோம். அதுக்கு டிக்கட் புக் பண்ணுறதுக்கு பணம். அவன் கிட்ட கொடுத்துரு”, என்று கொடுத்தவர் வீட்டை ஒரு ரவுண்ட் அடித்தார். பின் கிளம்பி விட்டார். 
அன்று மாலை வேலை முடிந்து வந்த சித்தார்த் “நான் ஊருக்கு போய் ஸ்டூல் எடுத்துட்டு வரேன். இங்க மிக்சி வைக்க முடியலைல?”, என்று சொல்லி விட்டு சென்றான். 
வரும் போது சித்தார்த் மீண்டும் சோகமாக வந்தான். அவன் முகத்தைப் பார்த்தவள் “என்ன ஏத்தி அனுப்பி விட்டாங்களோ தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள். அப்போது அவனே பேச்செடுத்தான். 
“அம்மா உன்னை கேட்டாங்க சிந்து”
“ஓ, சரி”
“அப்புறம் என்ன சாப்ட்டீங்கன்னு கேட்டாங்க. மதியம் என்ன தயிர் மட்டும் தாளிச்சு வச்சிருந்தாளாமே? எதுக்கு? குழம்பு வைக்கலையோ? இங்க இருந்து கொண்டு போன்னு சொன்னாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”
“அதான பாத்தேன், என்னடா இன்னும் வில்லங்கம் வரலையேன்னு பாத்தேன். இன்னைக்கு குழம்பு வச்சி கொடுக்குறேன்னு சொன்ன உன் அம்மாகாரி இத்தனை நாள் எதுக்கு சமைக்கலையாம்? எனக்கு உடம்பு சரியில்லைன்னா கூட அடுப்படி பக்கம் உங்க அம்மா வந்துருக்காங்களா? இந்த பத்து மாசத்துல நான் தானே எல்லாம் செஞ்சேன்? இப்ப பிள்ளை மேல பாசம் வந்துருச்சோ? சரி அதை விடுங்க. அது என்ன வெறும் தயிர் மட்டும் தாளிச்சு வச்சிருக்கான்னு கேட்டுருக்காங்க? நீங்க தானே இன்னைக்கு வெயில் ரொம்ப இருக்கு, வெறும் தயிர் போதும்னு சொன்னீங்க? நீங்க என்கிட்ட வெயிலா இருக்கு தயிர் போதும்னு சொல்லிட்டு அங்க போய் வெறும் தயிர் சாப்ட்டோம்னு சொன்னீங்களா?”
“ஐயோ நான் அப்படி சொல்லலை. நான் தான தயிர் சாதம் கேட்டேன். அப்பா போய் குளம்பு வச்ச மாதிரி தெரியலை. தயிர் தாலிச்சிருக்கா போலன்னு சொல்லிருக்காரு”
“ஓ இது உங்க அப்பா வேலையா? உங்க அப்பா கிட்சன் உள்ள எதுக்கு போனாருன்னு இப்ப தானே புரியுது. உங்க அப்பா எதுக்கு இப்படி வேவு பாத்துட்டு போகணும்? இதெல்லாம் உங்களுக்கு தப்பாவே தெரியாது அப்படி தானே? நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க”, என்று கத்தி விட்டு நகர்ந்து விட்டாள்.
ஆனால் மனது தான் வெகுவாக சோர்ந்து போனது. “தனியா வந்தா நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, இன்னும் கஷ்ட படுத்துராங்களே? அது மட்டுமில்லாம இவனும் அவங்க சொன்னதை அப்படியே கேக்குறானே? கடைசில எங்களையே பிரிச்சிருவாங்களோ?”, என்று பயந்து போனாள் சிந்து. 
அடுத்து வந்த நாட்களில் அது போல தான் நடந்தது. சிந்து மிக்ஸியில் தான் மாவரைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் பிரிட்ஜ் இல்லாததால் அதிகமாக அரைத்து வீணாக்கமல் இருப்பதற்க்காக கிரைண்டரில் அவள் அரைப்பதில்லை. 
ஒரு நாள் மாவு அரைக்காமல் கடையில் இட்லி மாவு வாங்கியதுக்கு “அவளால அரைக்க முடியாதோ?”, என்று சித்தார்த்திடம் சிந்துவை தாயம்மா திட்டினாள். 
அதை சித்தார்த் சொன்ன போது கடுப்பாக இருந்தது சிந்துவுக்கு. இத்தனைக்கும் கடையில் மாவு வாங்கிப் பாப்போம் என்று வற்புறுத்தி வாங்கி வந்தது சித்தார்த் தான். 
அந்த மாதம் நாள் தள்ளி போயிருந்ததால் கொஞ்சம் கவனமாக இருந்த சிந்து டிராவல் பண்ண கூடாது என்று நினைத்து கடைசி வெள்ளி அன்று அவர்கள் கோயிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள். சித்தார்த் மட்டும் தான் சென்றான். 
“அவளை எங்க?”, என்று சுந்தரம் கேட்டதற்கு “அவ வீட்டில் சமையல் செஞ்சிட்டு இருக்கா பா”, என்றான் சித்தார்த். 
“எதுக்கு வாரத்துல ஒரு நாள் இங்க வர வேண்டியது தான? தங்கிட்டு காலைல போக வேண்டியது தான? எதுக்கு அவ வர மாட்டாளோ?”,என்று சிந்துவை திட்டினார் சுந்தரம். 
இதை எல்லாம் சிந்துவிடம் சித்தார்த் சொல்லும் போது அவள் வெகுவாக சோர்ந்து போனாள். “கல்யாணம் முடியாம இருக்கும் போது எப்ப டா கல்யாணம் முடியும்னு இருந்தது. கல்யாணம் நிச்சயம் ஆனப்ப எவ்வளவு சந்தோஷப் பட்டேன். எப்படி எல்லாம் வாழ போறேன்னு கனவு கண்டேன்? ஆனா இப்படி ஒவ்வொரு நாளும் போராட்டமாவே இருக்கே”, என்று அழுதாள் சிந்து. 
அவளை நிம்மதியில்லாமல் ஆக்கியிருந்தான் சித்தார்த். எப்போதும் சிரிக்காமல் அவளிடம் பேசாமல் உர்ரென்று இருப்பது, அவளிடம் எரிந்து விழுவது, அவனுடைய அம்மாவோ அப்பாவோ போன் பேசினால் கொஞ்சி குலாவுவது என்று அவளை வெகுவாக சோதித்தான். 
ராணி ஏதாவது செய்து கொண்டு வந்தாலோ, கடையில் வாங்கி வந்தாலோ அதை தொட்டுக் கூட பார்க்காமல் அவளை சாகடித்தான். 
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? அம்மா கொண்டு வந்த முட்டை வீணா போகுது. உங்களுக்கு முட்டை பிடிக்குமே? ஆம்ப்ளேட் போடட்டுமா?”, என்று அவள் கேட்டால் “நான் இனி நான்வெஜ் சாப்பிட போறதில்லை”, என்று அறிவித்தான். 
“அம்மா இன்னைக்கு சாம்பார் செஞ்சு கொண்டு வந்தாங்க. ஊத்தட்டா?”,என்று அவள் கேட்டால் “எனக்கு வயிறு சரி இல்லை. தயிர் போதும்”, என்றான். 
பொறுத்து பார்த்த சிந்து “அவங்க எவ்வளவு பாசமா செஞ்சு கொண்டு வாராங்க. நீங்க ஏன் இப்படி பண்ணுறீங்க?”, என்று கேட்டாள். 
“அவங்களை யாரு கொண்டு வர சொன்னா? இனி கொண்டு வர வேண்டாம்னு சொல்லு”, என்று முகத்தில் அடித்தது போல பதில் சொன்னான். 
“அவங்க பாசமாக பாக்க வந்தா இப்படியா பண்ணுறது?”
“அவங்களை யாரு வர சொன்னா?”, என்று கேட்டு அவளைப் படுத்தி எடுத்தான். 
அழுது கொண்டே “நீங்க பண்ணுறது ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்று சிந்து சொன்னால் “தனியா வர சொன்ன? வந்தாச்சு. அப்புறமும் எதுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்க?”,என்று கேட்டான் சித்தார்த். 
இவன் படுத்திய படுத்தலில் டென்ஷன் அதிகம் ஆனதாலோ என்னவோ அந்த மாதம் பீரியட்ஸ் வந்து விட்டது. இந்த மாதமாவது கரு தங்கும் என்று எதிர் பார்த்து அதுவும் இல்லையென்று ஆனதால் மனது வெகுவாக வலித்தது. 
வீட்டுக்கு தேவையான அனைத்தையும் சித்தார்த் வாங்கிப் போட்டான். அவனுக்கு தோன்றிய போது கண்ணே மணியே என்று கொஞ்சவும் செய்தான். மற்ற நேரம் புரியாத புதிராக இருந்தான். 
“இவங்க அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிச்சிட்டோம்னு நினைக்கிறானோ?”, என்று நினைத்து “உங்களுக்கு உங்க அம்மா அப்பா தான் வேணும்னு நினைச்சா உங்க வீட்டுக்கே போங்க”, என்று கோபத்தில் சொன்னாள் சிந்து.
“என்னை போக சொல்ற? அப்ப நான் உனக்கு முக்கியம் இல்லையோ? எதுக்கு கழட்டி விட நினைக்கிற?”, என்று அர்த்தம் புரியாமல் பேசினான் சித்தார்த். 
இந்த பிரச்சனைகளை வேறு யாரிடமும் சொல்ல முடியாது அதனால் அனைத்தும் ராணியிடம் மட்டுமே பகிரப் பட்டது. மகளை நினைத்து அந்த தாயும் சோர்ந்து போனாள். 
ராணி கவலைப் படும் போது “நாம அம்மா கிட்ட இதெல்லாம் சொல்லி கஷ்ட படுத்த கூடாது. நமக்குள்ளே வச்சிருக்கணும்”, என்று நினைக்கும் சிந்து, சித்தார்த் படுத்தி எடுக்கும் போது ராணியிடமே கதறினாள்.
அவனிடம் ஒதுங்கி இருக்கலாம் என்று நினைத்தாலும் அவளை அவன் அப்படி இருக்க விட வில்லை. 
கடவுள் அவளுக்கு கொடுத்த வாழ்க்கை தான் என்ன என்று தெரியாமல் குழம்பி தவித்தாள் சிந்து. 
காதல் தொடரும்….

Advertisement