Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு. 
“உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”, என்று அமுதா சொன்னதும் துளி அளவு விருப்பம் இல்லை என்றாலும் “நீங்க பால் காய்ங்க அத்தை”,என்று சொன்னாள் சிந்து. 
அடுப்பில் பால் பொங்கியதோ இல்லையோ சிந்துவுக்கு தெரியாது. சிந்து சமையல் அறைக்கு செல்லவே இல்லை. மனம் முழுவதும் அழுத்தமே இருந்தது. 
அவளின் மன அழுத்தத்துக்கு காரணம் சித்தார்த் தான். காலையில் ஆறு மணிக்கு இந்த வீட்டுக்கு வந்த உடன் நடந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாள். 
“மணி ஆறாகிட்டு, உங்க அம்மா அப்பா இன்னும் வரலை. போன் பண்ணி கேளு”, என்றான் சித்தார்த். 
“ஆறு மணி தானே ஆகுது. அதுக்குள்ளே கேக்க சொல்றாங்க”, என்று தோன்றினாலும் ராணியை அழைத்த சிந்து “என்ன மா கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்டாள். 
“இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவோம் சிந்து”, என்று சொல்லி ராணி போனை வைத்ததும் “இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவாங்கலாம் மா”, என்று சித்தார்த்திடம் சொன்னாள் சிந்து. 
“எதுக்கு, இன்னைக்கு ஒரு நாள் சீக்கிரம் எந்திக்க முடியாதோ? மணி இப்பவே ஆறு ஆகிருச்சு. இன்னும் நேரம் ஆகும்னு சொல்ற?”, என்று சிந்துவின் பெற்றோரை குறை சொல்லி இருந்தான் சித்தார்த். ஆனால் மன சாட்சியே இல்லாமல் வெகு தாமதமாக வந்தது அவனுடைய பெற்றோர்களே. அவர்களை ஒரு வார்த்தை கூட கேட்காதது மிகப் பெரிய வலியை அவளுக்கு கொடுத்தது. 
சித்தார்த் எப்போதுமே தாயம்மா மற்றும் சுந்தரத்தை தவிர மற்ற அனைவரையுமே குறை சொல்வான். இன்றும் அதுவே நடக்க அவன் மீது உச்ச கட்ட எரிச்சல் உருவானது சிந்துவுக்கு. 
சாமி கும்பிட்ட பிறகு சித்தார்த் கடைக்கு சென்று அனைவருக்கும் இட்லி மற்றும் வடை வாங்கிக் கொண்டு வந்தான். அனைவரும் சாப்பிட்ட பின்னர் அமுதா “எனக்கு வேற ஒரு பங்ஷன் இருக்கு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்தாள்.
சிந்துவின் அப்பா சுந்தரமும் “நான் வேலைக்கு கிளம்புறேன்”, என்று சொல்லி அமுதாவுடன் சென்று விட்டார். 
ராணியும் சிந்துவும் மதியம் சமைக்க காய் வெட்டலாம் என்று முடிவு எடுத்தார்கள். சாப்பிட்ட இடத்திலே படுத்து விட்டாள் தாயம்மா. சிறிது நேரத்தில் குறட்டை விட்டு தூங்கவும் ஆரம்பித்தாள்.
சமையல் அறையில் இருந்த சிந்துவும் ராணியும் காய் வெட்டி கொண்டிருந்தார்கள். “சிந்து சாம்பார் வச்சா அவியல் ரசம் ன்னு வைக்கணும். நான் வெஜிடபுள் பிரியாணி செஞ்சிறேன்”, என்றாள் ராணி. 
“சரி மா, நான் உங்களுக்கு இஞ்சி பூண்டு எல்லாம் உரிச்சு கொடுத்துட்டு அவங்க கூட ஊருக்கு போய் எல்லா பொருளையும் எடுத்து வச்சிட்டு வரேன். இன்னைக்கு சாயங்காலம் தான் பொருள் எல்லாம் எடுத்துட்டு வருவாங்க”, என்று சிந்து சொன்னதும் வேலை வேகமாக நடந்தது. 
சிறிது நேரத்தில் சிந்துவும் சித்தார்த்தும் கிளம்பி விட்டார்கள். 
தாயம்மா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க அவர்களுக்கு சமைத்துக் கொண்டிருந்தாள் ராணி. அதைப் பார்த்தே தன்னுடைய மகள் அங்கே தனியாக எவ்வளவு வேலையை செய்திருப்பாள் என்று ராணிக்கு புரிந்து போனது. 
பைக்கில் சென்று கொண்டிருந்த சித்தார்த் அமைதியாக இருந்தான். சிந்து அதைக் கவனிக்காமல் ராணியைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள். ராணிக்கு சளிப் பிடித்து வேலை செய்ய முடியாமல் செய்து கொண்டிருந்தாள். 
“இந்த பொம்பளை இப்படி குறட்டை விட்டு தூங்குதே. எங்க அம்மாவுக்கு ஏதாவது உதவி செய்யனுமான்னு கேட்டு செய்றதுக்கு என்ன? ஒரு காய் வெட்டிக் கொடுக்கவுமா முடியாது. இதெல்லாம் இவன் கண்ணுக்கு தெரியுமா தெரியாதா?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள். 
காய் வெட்ட சிந்து உதவி செய்தாலும், “இன்னும் சாப்பாடு செய்யனும், மசால் அரைக்கணும், கிரேவி வைக்கணும். பாயாசம் வேற வைக்கணும்னு சொன்னாங்க. அம்மாவை தனியா விட்டுட்டு வந்தது தப்போ? இன்னும் ஏதாவது வேலை செஞ்சு கொடுத்துட்டு வந்துருக்கணுமோ?”, என்று எண்ணிக் கொண்டே வந்தவளுக்கு அப்போது தான் சித்தார்த் மௌனம் கண்ணில் பட்டது. 
“இவன் பண்ணுற எல்லாத்துக்கும் நான் தான் உர்ருன்னு இருக்கணும். ஆனா இவன் இருக்கான். எல்லாம் என் நேரம்”, என்று எண்ணியவள் “என்ன சார் அமைதியா வாரீங்க?”, என்று பேச்சு கொடுத்தாள். 
“இல்ல உங்க அப்பாவுக்கு என்ன தான் பிரச்சனை?”, என்று சித்தார்த் கேட்டதும் கோபம் தலைக்கேறியது சிந்துவுக்கு. “எங்க வீட்ல உள்ள யாரையாவது இவனுக்கு குறை சொல்லிக்கிட்டே இருக்கணுமா?”, என்று மனதுக்குள் பொறுமியவள் “இப்ப எதுக்கு எங்க அப்பாவை இழுக்கீங்க?”, என்று கேட்டாள்.
“இல்லை என்னமோ உடனே கிளம்புராறு. மதியம் சாப்பிட்ட அப்புறம் போக வேண்டியது தான?”
“சும்மா குறை சொல்லணும்னு சொல்லாதீங்க ஓகே? அவர் காலைல சாப்பிட்டார். மதியம் வேலைக்கு போகணும்னு தானே போறார்”
“அப்படி வேலைக்கு போகணுமோ? லீவ் போட வேண்டியது தானே?”
“நீங்க என்ன லூசு மாதிரியே பேசுறீங்க? இங்க இருந்து என்ன செய்ய போறாங்க? ஒரு நாள் சம்பளம் தானே போகும். நீங்க பூ வைக்கிற பங்ஷன்க்கு லீவ் போட மாட்டேன்னு அப்படி குதிச்சீங்க? அதே மாதிரி அவருக்கும் லீவ் இல்லையோ என்னவோ?”
“ஆமா நான் சொன்னா உனக்கு லூசு மாதிரி தான் தெரியும்”
“லூசு மாதிரி பேசுனா அப்படி தான் தெரியும். மித்த விஷயம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே. எங்க அம்மா அப்பா தான இளிச்ச வாய்”
“வேற யார் என்ன பண்ணுனா?”
“என்ன பண்ணுனாவா? என் வாயைக் கிளறாதீங்க சொல்லிட்டேன்.நானே கொலை வெறில இருக்கேன்”
“உன்னை யார் என்ன செஞ்சா? தேவை இல்லாம பேசாத சிந்து”
“நான் தேவை இல்லாம பேசுறேனா? உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு கிடையவே கிடையாதா? எங்க அம்மா அங்க முடியாம சமைச்சிட்டு இருக்காங்க. உன் அம்மாகாரி குறட்டை விட்டு தூங்குறா. ஏதாவது செய்யனுமான்னு கேட்டு செய்யலாம்ல? இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதே. நீயெல்லாம் ஒரு ஆள். சும்மா குறை சொல்ல கிளம்பிட்ட. காலைல என்ன சொன்ன? எங்க அம்மா லேட்டா வந்ததுக்கு அப்படி குதிச்ச? உன் அப்பனும் ஆத்தாளும் எத்தனை மணிக்கு வந்தாங்க? அதை கேக்க உனக்கு துப்பில்ல? நீயெல்லாம் ஒரு ஆளு.  அவங்களுக்கு பிறந்த நீ வேற எப்படி இருப்ப?”
“மரியாதையா பேசு சிந்து”

“உனக்கெல்லாம் என்ன மரியாதை. நியாயமா நடந்தா தான் மரியாதை கொடுக்கணும். உனக்கு எல்லாம் எதுக்கு கொடுக்கணும்? உன்கிட்ட எல்லாம் பேசுறது வேஸ்ட். வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள். 
கஷ்ட பட்டு சமைத்து முடித்து, தயிர் வெங்காயம் வரை எல்லாம் தயார் செய்து வைத்து வெளியே தண்ணீர் எடுத்து, கிடந்த பாத்திரத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ராணி. இந்த வேலைகளில் சளிப் பிரச்சனையும் சேர்ந்து கொஞ்சம் சோர்ந்து போனாள். 
மதியம் இரண்டு மணிக்கு எழுந்த தாயம்மா “மணி ரெண்டு ஆச்சு, இன்னும் சமைச்சு முடிக்கலையா ராணி?”, என்று கேட்டதும் அவளை கொலை செய்யும் அளவுக்கு வெறி வந்தது ராணிக்கு.
“இதெல்லாம் ஒரு பொம்பளையா? து. நல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு எப்படி அதிகாரமா கேக்கா பாரு. இனி இவங்க வேலையை இவங்க தான செய்யணும். நல்லதா போச்சு என் மகள் தப்பிச்சிட்டா”, என்று மனதில் நினைத்த ராணி “எல்லாம் முடிஞ்சிருச்சு அண்ணி. சாப்பாடு எடுத்து வைங்க”, என்று சொல்லி பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதைக் கூட செய்யாமல் “நீ கழுவிட்டு வா. அப்புறம் சாப்பிடலாம்”, என்று சொல்லி ஹாலில் சென்று அமர்ந்து விட்டாள்.
மனம் வெறுத்து போனது ராணிக்கு. “இந்த சிந்துவுக்கு சும்மாவே பொறுமை கிடையாது. சட்டுனு கோபம் வந்துரும். இப்படி பட்ட பொம்பளைகிட்ட இது வரை அவ கோபத்தைக் காட்டாம இருந்தது அதிசயம் தான். செஞ்சு வச்சதை எடுத்து சாப்பிடவுமா முடியாது?”, என்று எண்ணிக் கொண்டு அனைத்தையும் எடுத்து வைத்தவள் அவர்களுக்கு பரிமாறினாள். 
ராணி பரிமாற தாயம்மாவும் சுந்தரமும் வக்கணையாக தின்றார்கள். ஒரு வார்த்தைக்கு கூட நீயும் சாப்பிடு ராணி என்று தாயம்மா சொல்ல வில்லை. 
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் தான் ராணி தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட்டாள். அப்போது தான் சித்தார்த்தும் சிந்துவும் வந்தார்கள். ராணியைப் பார்த்து சிந்துவுக்கு மேலும் வருத்தமாக இருந்தது. சோர்ந்து போய் தெரிந்தாள் ராணி. 
“ரொம்ப வேலை அப்படி தானே மா? கஷ்ட பட்டீங்களா? ரொம்ப டயர்டா தெரியுறீங்க?”, என்று ராணிக்கு மட்டும் கேட்கும் வகையில் பேசினாள் சிந்து. 
சிந்துவைப் பார்த்து ஆறுதலாக புன்னகைத்தாலும் அதிக சோர்வாக உணர்ந்தாள் ராணி. 
மணி நான்கு ஆனதும் சுந்தரமும் தாயம்மாவும் கிளம்பினார்கள். “அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து விடு”,என்று அதட்டினான் சித்தார்த். 
ஒரு புது சம்படத்தை எடுத்து சாப்பாடை அடைத்துக் கொடுத்தாள் சிந்து. அவர்கள் கிளம்பியதும் “ரெண்டு பேரும் தனியா இருக்கட்டும்”, என்று நினைத்து “சரி சிந்து நீங்க சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி கிளம்பினாள் ராணி. 
ராணி சென்ற பின்னர் “எதுக்கு உங்க அம்மா இப்பவே போறாங்க. கூட கொஞ்ச நேரம் இருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டு வம்பிழுத்தான் சித்தார்த்.
“இன்னும் எங்க அம்மா வேலை செய்யணுமா இவனுக்கு? இவங்க அம்மா அப்பாவும் தானே கிளம்பி போனாங்க. எதுக்கு என்னோட அம்மா அப்பாவை மட்டும் குறை சொல்றான்?”,என்று எண்ணம் வந்தாலும் “உங்க கிட்ட பேச எனக்கு தெம்பு இல்லை. பசிக்குது வாங்க சாப்பிடலாம்”, என்று தன்மையாக சொன்னாள் சிந்து. 
“எனக்கு வேண்டாம், எனக்கு பசிக்கலை”, என்று சொல்லி அவளை வெறுப்பேற்றினான் சித்தார்த். 
“இவன் வேணுக்குன்னு செய்றானே? ஆளே ஒரு மாதிரி மாறுன மாதிரி இருக்கு. கொஞ்சம் கூட சிரிக்காம உர்ருன்னு இருக்கான். சரியாகிறுவானா? இல்லை இப்படியே தான் இருப்பானா?”, என்று பயந்தவள் ராணி செய்த பாயாசத்தை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்.
“எனக்கு வேண்டாம், எனக்கு பசிக்கலை”, என்று அவன் சொன்னதும் பொறுமை இழந்தவள் அவனை முறைத்தாள். 
அவள் முறைப்பை பார்த்தவன் பாயாசத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். “வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படி நிம்மதி இல்லாம இருக்கே. தனி வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா ஆரம்பமே பயமா இருக்கே”, என்று மனதுக்குள் வருந்தினாள் சிந்து. 
மாலை ஆறு மணிக்கு “நான் போய் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி கிளம்பினான் சித்தார்த். 
அவன் சென்றதும் வீட்டை பெருக்கி ஒதுங்க வைத்தாள். எட்டு மணி போல் வண்டியில் வந்து இறங்கிய சித்தார்த் முகமே சரியில்லாதது போல இருந்தது சிந்துவுக்கு.
“என்ன ஆச்சு? டல்லா இருக்கீங்க? பொருள் எல்லாம் எங்க?”, என்று கேட்டாள் சிந்து. 
“பின்னாடி தொட்டி ஆட்டோல வருது. அப்பாவும் அண்ணனும் அதுல வாராங்க”
“சரி நீங்க எதுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க? கண்ணுல்லாம் கலங்குன மாதிரி இருக்கு”, என்று சிந்து கேட்டது தான் தாமதம் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டான். 
அவன் அழுகையில் துடித்து போனவள் “என்ன ஆச்சு மா?”, என்று கேட்டாள். 
“கிளம்பும் போது அம்மா அழுதுட்டாங்க”, என்று சொல்லிக் கொண்டே மேலும் அவன் அழும் போது எரிச்சலின் உச்சத்துக்கே சென்றாள் சிந்து. 

Advertisement