Advertisement

“இப்ப வாங்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பிரிட்ஜ் இருந்தா நாமளும் உள்ள வச்சு வச்சு கெட்டு போனதை திம்போம். இப்ப நிறைய செலவு இருக்கு. அடுப்பு, பெருக்குமாறு, குப்பை கூடை இன்னும் நிறைய இருக்கு வாங்க வேண்டியது. கேஸ் சிலிண்டர்க்கு என்ன செய்ய போறீங்க?”
“எங்க பாட்டி வீட்ல உள்ளது சும்மா தானே இருக்குது. பாட்டி வீடுன்னு சொன்ன உடனே தான் ஒரு விஷயம் நினைவு வருது சிந்து. எங்க அண்ணன் மாரியையும் குழந்தையையும் கூட்டிட்டு பாட்டி வீட்டுக்கு போக போரானாம்”
“நல்ல விஷயம் தான். அவங்க இவ்வளவு நாள் இருந்த வீடு இடியுர மாதிரி இருக்கு”
“ஆமா, நாமளும் புது வீட்டுக்கு போக போறோம், அண்ணனும் போக போறான். அம்மா அப்பா தான் இனி ஒத்தைல இருப்பாங்க”
“என்ன ஒத்தை? நாம தான் வேற ஊருக்கு வந்திருக்கோம். அதுவும் வண்டி எடுத்தா இருபது நிமிஷம் தான். உங்க அண்ணன் அடுத்த தெருவுக்கு தானே போக போறாங்க. எப்படி வீடு பாத்ததை உங்க அம்மா அப்பா கிட்ட சொல்ல போறீங்க?”
“அதை நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி முடித்து விட்டான். 
அடுத்த இரண்டு நாளில் சுந்தரத்திடம் வீடு பார்த்திருப்பதாக சொன்னதும் அவர் முகம் இருண்டு போனது. “எதுக்கு டா, திடீர்னு?”, என்று கேட்டார்.
“அவளை கோச்சிங் கிளாஸ்ல சேக்க போறேன் பா”
“ஹ்ம் சரி”, என்று சொன்னவர் தான். ஆனால் முகம் மட்டும் சோகமாக மாறிப் போனது. தாயம்மா அவளுடைய அம்மா வீட்டுக்கு சென்றிருப்பதால் அந்த விஷயத்தை சுந்தரம் சொல்லிக் கொள்ளட்டும் என்று நினைத்து கொண்டான் சித்தார்த். 
அதன் பின் பாஸ்கரை அழைத்து வந்து வாடகை வீட்டில் இருந்த பழைய பொருளை எல்லாம் எடுத்துப் போட்டு பாத்ரூமுக்கு கரண்ட் கனேக்ஸன் எல்லாம் கொடுத்தான் சித்தார்த். அடுத்த நாளில் தன்னுடன் வேலை செய்யும் நண்பனை அழைத்து வந்து வீட்டை கழுவி விட்டான். 
அடுத்த நாள் சிந்துவை அழைத்துக் கொண்டு அடுப்பு மற்ற பொருள் எல்லாம் வாங்கி சிந்து வீட்டில் வைத்து ராணி தான் அனைத்தையும் வாங்கி கொடுப்பதைப் போல ஏற்பாடு செய்தான்.  
அன்று இரவு அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் சந்தோசத்துடன் அழுதாள். அவள் கண்ணீரில் அவன் கண்களும் நனைந்தது. அம்மா அப்பாவை விட்டு போவது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் சிந்துவின் மனநிலை அவனுக்கு இப்போது முக்கியமாக பட்டது.
எதுக்கு எடுத்தாலும் கோப பட்டு அவளும் நிம்மதி இல்லாமல் அவனையும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்பவளின் மனநிலையைக் கண்டு முதல் முறையாக பயம் வந்தது. 
அதிக கோபம் அவளது உடலையும் மனதையும் பாதிக்க கூடாது என்று எண்ணினான். அது மட்டும் அல்ல திருமணம் ஆகி பத்து மாதம் ஆகி விட்டது. இனியும் குழந்தை உருவாக வில்லை. எல்லாரும் “எப்ப நல்ல விஷயம் சொல்ல போற”, என்று கேட்கும் போது இருவருக்கும் இருக்கும் மன அழுத்தம் குழந்தை பிறப்பதை தள்ளி போடுகிறதோ என்ற பயமும் அவனை அரித்தது.
இந்த மாதம் குவார்ட்ரஸ் கிடைக்க வில்லை என்றால் அவனே நிச்சயம் வேறு வீடு பார்த்திருப்பான். மற்றொரு புறம் தாயம்மா மற்றும் சுந்தரத்தை நினைத்து வருத்தம் வந்தது. வீடு பார்த்ததை சொன்னதில் இருந்து அமைதியாக அமர்ந்திருக்கும் சுந்தரத்தைப் பார்க்கும் போது மனதில் எதுவோ அழுத்தியது. சிந்து எந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தாளோ, சித்தார்த் அந்த அளவு மன அழுத்தத்தில் இருந்தான். 
சந்தோசத்தில் அழுது கொண்டிருந்தவளை பார்க்கும் போது “என் வீடு இவளை இந்த அளவுக்கு காய படுத்தி இருக்கிறதா?”, என்று கவலையாக இருந்தது.
ஆனாலும் சில மாதம் முன்பு சுந்தரத்திடம் “நாங்க வேற வீடு பாக்க போறோம்”, என்று சொன்ன போது “என்ன பிரச்சனைப்பா? கொஞ்சம் பொறுமையா இருங்க. யோசிப்போம்”, என்று பெரிய மனிதராக அட்வைஸ் பண்ணாமல் “சந்தோஷமா வேற வீட்டுக்கு போங்க”, என்று சொன்னது அவன் மனதை அசைத்து பார்த்தது.
“நான் இல்லைன்னா இவங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. அதனால தான சந்தோஷமா போன்னு சொன்னாங்க. இப்ப எதுக்கு இவர் டல்லா உக்காந்துருக்கார்? ஊருக்கு போன அம்மா கிட்டயும் அப்பா சொல்லிறுப்பாரு. ஆனா இது வரைக்கும் அம்மா போன் பண்ணி ஒண்ணுமே கேக்கலை. ஒரு பக்கம் பொண்டாட்டி, இன்னொரு பக்கம் அம்மா அப்பாவை விட்டுட்டு போறது. நான் செய்றது தப்பா சரியா?”, என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
“சரி அவங்களுக்கு பென்ஷன் பணம் வருகிறது. பாசம் வைக்க பக்கத்திலே மூத்த மகன் குடும்பமும் இருக்கிறது. அவர்களுக்கு எப்போது என் தேவை வேணும்னு தோணுதோ அப்ப என்னை தேடி வரட்டும்”, என்று முடிவெடுத்தான்.
ஆனாலும் ஒரு வலி உள்ளே அரிக்க தான் செய்தது. அந்த வலி சிந்துவை மேலும் வதைக்க போகிறது என்று தெரியாமல் சந்தோஷமாக அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் கண்களில் இருந்த வலி அவளுக்கு புரிந்ததோ என்னவோ இன்னும் அவனை இறுக்கிப் பிடித்தவள் “என்னால தான் எல்லாம்னு யோசிக்கிறீங்களா மா? என் மேலே உங்களுக்கு வெறுப்பு வருதா? நானும் எவ்வளவோ பொறுமையா போகணும்னு முயற்சி செஞ்சேன். ஆனா எனக்கு நிம்மதி சுத்தமா இல்லை. இவ்வளவு பெரிய வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியலை. உங்க அம்மா அப்பா கிட்ட இருந்து உங்களை பிரிக்கிறது என்னோட நோக்கம் இல்லை. ஆனா நமக்கு இனி தான் வாழ்க்கை இருக்கு. இந்த பிரச்சனைல நம்ம வாழ்க்கையை தொலைச்சிருவோம்ன்னு பயத்துல தான் வேற வீடு பாக்க சொன்னேன். இப்ப ரெண்டு பேருமே கெதியா இருக்காங்க. அவங்களை அவங்க பாத்துக்குவாங்க.  அது போக உங்க அண்ணனும் பக்கத்து தெருவுல தான் இருக்காங்க. அவங்களுக்கு உடம்புக்கு முடியாதப்ப நம்ம வீட்ல கூப்பிட்டு வச்சு பாத்துக்குவோம். அன்னைக்கு நம்ம வீட்டுக்கு அவங்க வரக்கூடாதுன்னு நான் சொல்ல மாட்டேன். கடைசி காலத்துல அவங்களை அனாதையா விடணும்னு நான் சொல்லலை. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. நாளைக்கு என் தம்பி பொண்டாட்டி என் அம்மா அப்பாவை பாக்காம போனா எனக்கு கஷ்டமா இருக்கும் தானே? அதனால அந்த தப்பை நான் செய்ய மாட்டேன். இப்ப அவங்க மேல கொஞ்சம் வெறுப்பு அப்படியே இருக்கு. அது மறையனும்னா கொஞ்சம் தனிமை தேவை. உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப வந்து பாத்துக்கோங்க. வாரம் ஒரு தடவை அங்க ஏதாவது சமைச்சி எடுத்துட்டு வந்து உங்க அம்மா அப்பாவுக்கு கொடுத்துட்டு போவோம். ஆனா நீ தான் என் குடும்பதை பிரிச்சிட்ட அப்படின்னு ஒரு வார்த்தை உங்க வாயில இருந்து வந்துச்சுண்ணா அன்னைக்கு நமக்குள்ள இருந்த காதல் செத்து சவ பெட்டிக்குள் போயிருக்கும்”, என்றாள் சிந்து. 
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாப்பா. நீ தேவை இல்லாம யோசிக்காத. தூங்கு”
அடுத்த நாள் ராணிக்கு அழைத்த சிந்து “அம்மா வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு மா. அவங்க ஆபீஸ் பக்கத்துல தான்”, என்று சந்தோஷமாக சொன்னாள் சிந்து. 
“ரொம்ப சந்தோஷம், இனியாவது சந்தோஷமா இரு. என்னைக்கு வர போறீங்க?”, என்று கேட்ட ராணியின் மனதிலும் மகள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் எழுந்தது. 
“சண்டே தான இவங்களுக்கு லீவ். அன்னைக்கு தான் வரணும். நீங்களும் வந்துருங்க. பால் காய்க்கணும்”
“சரி சிந்து, அங்க போயாவது படிக்கிற வேலையைப் பாரு. ஆமா உங்க மாமனார் மாமியார்க்கு தெரியுமா?”
“மாமனார் கிட்ட சொல்லிட்டாங்க. அத்தை இங்க இல்லை. அவங்க ஊர்ல இருக்காங்க. நாளைக்கு எனக்கு மதியம் ஒரு எக்ஸாம் இருக்கு. அது எழுத போகும் போது அவங்க அம்மா ஊருக்கு போய் அவங்க அம்மா கிட்ட சொல்லிட்டு போகணுமாம்”
“சரி இனியாவது எல்லாம் நல்ல படியா நடந்தா சரி”
“சரி மா, நான் நைட் பேசுறேன்”, என்று சொல்லி  போனை வைத்தாள் சிந்து. 
அடுத்த நாள் தாயம்மாவிடம் சொல்வதற்காக சென்றார்கள். சிந்து தாயம்மாவின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். 
அப்போது “அம்மா, நாளான்னைக்கு வீடு பால் காய்க்க போறோம்”, என்று தாயம்மாவிடம் சொன்னான் சித்தார்த்.
“அப்படியா சந்தோஷமா காய்ங்க, எந்த வீடு?”
“நம்ம ஊர் சார் அங்க வீடு கட்டிருக்காங்கள்ள?”
“ஆமா, அந்த டீச்சர் கூட தெரியுமே நமக்கு. நல்ல குணம் தான். வாடகை எவ்வளவு?”
“ஆயிரத்து ஐநூறு”
“அப்படின்னா பரவால்ல”
“சரி மா, அவளுக்கு ஒரு எக்ஸாம் இருக்கு. அதனால கிளம்புறோம். நீங்க நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்க”
“சரிப்பா போயிட்டு வாங்க, நீ இன்னைக்கு வேலைக்கு போகலையா?”
“காலைல முதல் ஷிப்ட் போயிட்டு வந்துட்டேன். சரி கிளம்புறோம். சிந்து கிளம்பலாமா? பாட்டி போயிட்டு வரோம்”
சிந்துவும் பாட்டி மற்றும் தாயம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தார்கள். “அப்பாடி பால் காய்க்கிறதைப் பத்தி இந்த அத்தை ஒண்ணுமே சொல்லலை”, என்று நிம்மதியாக அவனுடன் பரீட்சை எழுத சென்றாள் சிந்து. 
அந்த சண்டே அழகாக விடிந்தது. காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நல்ல நேரம் என்று தான் அனைவருக்கும் சொல்லி இருந்தார்கள். 
நான்கு மணிக்கே சந்தோஷமாக எழுந்த சிந்து குளித்து கிளம்பினாள். சித்தார்த்தும் கிளம்பினான். ஐந்தரை மணிக்கு பால் காய்க்க மட்டும் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு தாயம்மா இன்னும் தூங்கி கொண்டிருந்ததால் சுந்தரத்திடம் மட்டும் சொன்னார்கள். 
“நாங்க முன்னாடி போறோம் பா, நீங்க பின்னாடி வாங்க”, என்று சித்தார்த் சொன்னதும் சரி என்று சொன்னார் சுந்தரம். 
இங்கே வந்து பூஜைக்குரிய பொருள்களை எல்லாம் எடுத்து வைத்தார்கள். சிந்து வீட்டில் இருந்து ராணி, சுந்தரம், சிந்துவின் பெரியம்மா அமுதா மூவரும் ஏழு மணிக்கு எல்லாம் வந்து விட்டார்கள். 
ஏழே முக்கால் வரை சித்தார்த் வீட்டில் இருந்து வரவே இல்லை. “நல்ல நேரம் முடிய போகுது சிந்து, இன்னும் உன் அத்தை மாமாவைக் காணும். உங்க மச்சான் வீட்ல இருந்தும் வரலையா?”, என்று கேட்டாள் அமுதா. 
“அவங்க அண்ணனும் இன்னைக்கு அவங்க பாட்டி வீட்ல பால் காச்சிறாங்க பெரியம்மா. அத்தை மாமா தான் வருவாங்க. ஆனா இன்னும் காணும்”, என்று சொன்னவள் சித்தார்த்தைப் பார்த்தாள். 
“நீங்க தனியா வரது, அவங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டார் சுந்தரம். 
“அப்படி எல்லாம் இல்லைப்பா. இப்ப வந்துருவோம்னு தான் சொன்னாங்க. ஆனா இன்னும் காணும்”, என்று சொன்ன சிந்துவின் கண்கள் இப்படி இவங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல வச்சிட்டாங்களே”, என்று கடுப்பாக இருந்தது. 
அவள் முகத்தில் இருந்த கவலையைக் கண்ட ராணி “எல்லா நேரமும் நல்ல நேரம் தான் சிந்து, அவங்க எப்ப வராங்களோ, அப்பவே பால் காய்க்கலாம்”, என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள்.
“சரிம்மா”, என்று சொல்லி சிந்து சமாதானமானாலும் எட்டு மணிக்கு நல்ல நேரம் முடிந்து ஒன்பதரை வரைக்கும் அவனுடைய அப்பா அம்மா வரவில்லை என்றதும் பொறுமை சுத்தமாக போய் விட்டது.
“ச்சி என்ன மனிதர்கள் இவர்கள்? படிச்சு படிச்சு நல்ல நேரம் பத்தி சொல்லியும் நேரத்துக்கு வராமல், இவங்க எல்லாம் மனுசங்களே கிடையாது. நல்லதா போச்சு, இவங்க கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்”,என்று எண்ணிக் கொண்டாள். 
ஆனால் அவளுடைய சோதனை காலம் இன்னும் முடிய வில்லை என்று அவளுக்கு புரிய வில்லை. 
காதல் தொடரும்….

Advertisement