Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 18
மண்ணில் புதைந்த விதை
போல என்னுள் விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது
உன் மீதான காதல்!!!
காதல் நூலிழை
ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த்.
அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள்.
“இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு இல்லைன்னு சொல்றான்”
“நீங்க பேசாமலா வந்தீங்க?”
“அது எப்படி வருவேன்?  எதுக்கு சார் எனக்கு தரலைன்னு கேட்டேன். மேல இடத்தில இருந்து எனக்கு ஆர்டர் வரலைன்னு சொன்னான். அடுத்த நிமிஷம் வெளிய வந்துட்டேன். வேணும்னு பண்ணுறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. அதுக்கு மேல அவன் கிட்ட என்ன பேச?”
“சரி விடுங்க. வேற வடகைக்கு வீடு பாக்க ஆரம்பிப்போம். உங்க பிரண்ட் யார் கிட்டாயாவது கேளுங்க”
“கேக்கணும். ஆனா எங்கயும் சேஃப்டி இல்லை. இப்ப ஊர் ரொம்ப மோசமா ஆகிருச்சு”
“நீங்க பாத்த பழைய வீடு என்ன ஆச்சு? அது மெயின் ஏரியா தான? அப்புறம் என்ன?”
“அங்கயும் அன்னைக்கு திருடன் வந்துட்டானாம். அதுவும் பகல்லே”
“இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க?”
“எதுக்கு இப்ப கோப படுற?”
“நீங்க சொல்றதைப் பாத்து கோப படாம வேற என்ன செய்ய? இத்தனை நாள் குவார்ட்ரஸ்ன்னு சொல்லி ஏமாத்துனீங்க? அங்க ஒண்ணும் உங்களால கிழிக்க முடியலை. வாடகைக்கு வீடு பாக்க சொன்னா, சும்மா கதை விட்டுட்டு இருக்கீங்க? முடிவா என்ன தான் சொல்றீங்க? ஒரு வீடு பாத்து இருந்தோம்னா வாடகை போகும்னு பயப்படுறீங்களா? இல்லை நாம தனியா போய்ட்டோம்னா உங்க வீட்டுக்கு ஓசில வந்த வேலைக்காரி இல்லாம போய்ருவன்னு பயமா?”
“எதுக்கு இப்படி எல்லாம் பேசுற?”
“பின்ன கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை பாத்துக்க தெரியாதவனுக்கு எதுக்கு கல்யாணம்? கடைசி வரை உங்க அம்மா அப்பா கூடவே இருந்துருக்க வேண்டியது தான? என் வாழ்க்கையை எதுக்கு கெடுக்கணும்? தினமும் செத்து செத்து பிழைக்க வேண்டி இருக்கு. இது வீடா? எனக்கு சுடுகாடு மாதிரி இருக்கு”
“இப்ப நீ நல்லா தான இருக்க? அவங்க யாரும் உன்கிட்ட பேசுறது இல்லை. எந்த குறையும் சொல்றது இல்லை. அப்புறம் என்ன?”
“அப்புறம் என்னவா? அவங்க பேசாம இருக்குறது நல்லா தான் இருக்கு. ஆனா யார் வீட்லயோ இருக்குற மாதிரி இருக்கு. இத்தனை நாள் சொல்லியும் என்னோட பீலிங்க்ஸ் புரியலை. இப்ப மட்டும் புரியவா போகுது. பொண்டாட்டியை பாத்துக்க தெரியாத உங்களுக்கு பிள்ளைங்க ஆசை இனி வரக்கூடாது. உங்களுக்கு எல்லாம் பிள்ளைங்க ஒரு கேடு ச்சே. எப்படி எல்லாம் இருப்போம்னு கனவு கண்டேன். கடைசில இப்படி ஆகிருச்சே”, என்று கண்ணீர் வடித்தவளின் அருகில் வந்தான் சித்தார்த்.
அவனை விலக்கி விட்டு கட்டிலில் அமர்ந்தாள் சிந்து. “நான் ஏற்கனவே வீடு பாத்துட்டு தான மா இருந்தேன். ஒண்ணும் செட் ஆகலை”
“வேற வீட்டுக்கு போகணும்னு ஆசை இருந்தா தானே செட் ஆகும்? உங்களுக்கு தான் உங்க அம்மா அப்பாவை விட்டு வர மனசு இல்லையே? உங்க பிரண்ட் அன்னைக்கு ரெண்டு வீடு கிடக்குன்னு சொன்னாங்க தானே? வாங்க இப்ப போய் பாப்போம்”
“அது மாடில தான் காலியா இருக்கு. கீழ கவுஸ் ஓனர் இருக்காங்கலாம். அது வேண்டாம்”
“இந்த ரீசன் உங்களுக்கே சில்லியா தெரியலையா? சரி இன்னொரு வீடு?”
“அது பஸ் ஸ்டாண்ட் விட்டு தள்ளி இருக்கு. இந்த ஒரு மாசம் மட்டும் பொறு. நான் வீடு பாக்குறேன்”
“பாப்போம். இந்த மாசமாவது பாப்பீங்களா? இல்லை இன்னொரு மாசம் பொறுன்னு சொல்லுவீங்களான்னு”
அந்த பேச்சு அத்துடன் முடிந்தாலும் மீண்டும் மீண்டும் சிந்து “வீடு பாத்துட்டீங்களா?”, என்று கேட்டு நச்சரித்துக் கொண்டு தான் இருந்தாள். 
அவள் தொல்லை தாங்க முடியாமல் தீவிரமாக வீடு தேடியவன் ஒரு நாள் மாலை “வா ஒரு வீடு இருக்கு பாக்க போவோம்”, என்று அழைத்தான். கண்களில் சந்தோசத்துடன் சிரித்த முகமாக “நிஜமாவா? இப்பவே பாக்க போறோமா?”, என்று கேட்டாள்.
“ஹிம் ஆமா, இப்பவே கிளம்பு. போய் பாத்துட்டு வந்துருவோம். என் பிரண்டு வீட்டுக்கு நாலு வீடு தள்ளி தான்”
இருவரும் கிளம்பி சென்றார்கள். ஆனால் சிந்து முகத்தில் இருந்த சந்தோஷம் சித்தார்த் முகத்தில் இல்லை. தன்னுடைய நண்பன் வீட்டுக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டைப் பார்க்க சென்றார்கள். 
போய் பார்த்ததுமே சிந்து முகம் பியூஸ் போன பல்ப் போல ஆனது. அந்த வீடு ரொம்ப சின்னதாக இருந்தது. அவள் வீட்டில் வாங்கி தந்த பீரோவும் அந்த வீட்டுக்குள் வைக்க முடியாது. கட்டிலையும் அங்கே வைக்க முடியாது. 
அவனுக்கும் அதுவே தான் தோன்றியது. அவன் நண்பனிடம் சொன்னதற்கு “ரெண்டு பேர் தானே சின்ன வீடா போதும்னு நினைச்சேன். சரி, இரு அடுத்த காம்பவுண்ட்ல ஒரு வீடு இருக்குன்னு சொன்னாங்க”, என்றான் சித்தார்த்தின் நண்பன் பாலா. 
“அந்த வீடு ஒரு டீச்சர் வீடு தானே? அவங்களை முன்னாடியே தெரியுமே எனக்கு. அவங்களுக்கு தான் என்னை நினைவு இருக்குமான்னு தெரியலை”, என்று சித்தார்த் பேசிக் கொண்டே வரும் போதே அந்த வீடு வந்திருந்தது. சிந்து மனதில் வேண்டிக் கொண்டே இருந்தாள். 
“டீச்சர்”, என்று வெளியே இருந்து அழைத்தான் பாலா. 
“என்னப்பா பாலா? இன்னேரத்துல?”
“இங்க வீடு இருக்குன்னு சொன்னாங்க”
“இல்லைப்பா, இங்க வீடு இல்லை. என் பிள்ளைக வந்து தங்குறதுக்கு வச்சிருக்கேன்”, என்று அந்த டீச்சர் சொன்னதும் சிந்து மனது வெகுவாக சோர்ந்து போனது.
“அப்படியா, சரி டீச்சர், நாங்க வரோம்”,என்று சொல்லி கிளம்பினான் பாலா.
“இவங்களுக்கு எந்த ஊர் பா?”
“உங்க வீட்டுக்காரர் ஊர் தான் டீச்சர்”
“எங்க ஊரா? அப்படின்னா இரு. இந்த வீடு என் பிள்ளைகளுக்கு இருக்கட்டும். அந்த கடைசி வீட்டை வேணும்னா பாருங்க. எங்க ஊருன்னு சொன்னதுனால தான் வீடை காட்டுறேன்”, என்று சொல்லி திறந்து விட்டாள். 
அந்த காம்பவுண்டில் மொத்தம் ஐந்து வீடுகள் இருந்தது. ஹவுஸ் ஓனர் இருக்கும் வீடு கொஞ்சம் பெரியது. அதற்கு மேலே இருக்கும் வீடும் பெரியது தான். அந்த வீட்டுக்கு ஐயாயிரம் வாடகை வாங்கிக் கொண்டிருந்தாள். அங்கேயும் மற்றொரு டீச்சர் குடும்பம் இருந்தது. 
அது போக மூன்று லைன் வீடுகள் இருந்தன. அதில் கடைசி வீட்டை திறந்து காட்டியதும் சந்தோஸமாக போய் பார்த்தார்கள். வீடு நன்றாக தான் இருந்தது. ஆனால் அந்தோ பரிதாபம் இரண்டு வீட்டுக்கு ஒரே ஒரு பாத்ரூம் பொதுவாக இருந்தது. அது மட்டுமில்லாமல் அந்த இரண்டு வீட்டுக்கும் இடையில் கதவு வேறு இருந்தது. 
இந்த இரண்டு காரணங்களால் சிந்து சித்தார்த் இருவருக்கும் அந்த வீடு பிடிக்க வில்லை.
“வீடு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டாள் டீச்சர்.
“வீடு நல்லா இருக்கு. ஆனா ஒரே பாத்ரூம் இருக்குறது… அது கொஞ்சம் செட் ஆகாதது மாதிரி இருக்கு. பாத்ரூம் தனியா இருந்தா கண்டிப்பா வந்துருவோம்”, என்று வெளிப்படையாகவே புன்னகையுடன் சொல்லி விட்டாள் சிந்து. 
அதைக் கேட்ட டீச்சர் என்ன நினைத்தாளோ? “ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொல்லி அவளுடைய மகளுக்கு போனை செய்து எதுவோ பேசிவிட்டு வெளியே வந்தாள். 
“அந்த முதல் வீட்டைப் பாருங்க. அந்த வீடு தனி தான். லெட்டின் தனியா தான் இருக்கு. பிள்ளைக வந்தா தங்கட்டும்னு நினைச்சேன். இப்ப ஒரே ஊரா போய்ட்டீங்க? பிடிச்சிருக்கான்னு பாருங்க”, என்று சொல்லி சாவியைக் கொடுத்ததும் சந்தோஷமாக புன்னகைத்தாள் சிந்து. 
வீடு பிடித்த மாதிரியாக இருந்தது. ஆனால் தண்ணீர் வசதி எதுவுமே உள்ளே இல்லை. போர் தண்ணீர் காம்பவுண்டுக்குள் இருந்து எடுக்க வேண்டும்.  ஆற்று தண்ணீர் காம்பவுண்ட் வெளியே இருக்கும் பைப்பில் இருந்து எடுக்க வேண்டும். 
ஆனால் சிந்து சந்தோஸமாக “எனக்கு வீடு புடிச்சிருக்கு”, என்று சித்தார்த்திடம் சொன்னாள்.
“லெட்டின்க்கு கூட தண்ணி எடுத்துட்டு தான் போகணும் சிந்து பாத்துக்கோ. வெளிய கூட நான் எடுத்துக்குவேன்”
“அதெல்லாம் பாத்துக்கலாம், பிளீஸ் மா, எனக்கு வீடு புடிச்சிருக்கு. இங்கயே இருப்போம் பிளீஸ்”
“சரி வா, அட்வான்ஸ் வாடகை எவ்வளவு சொல்றாங்கன்னு தெரியலை. முவ்வாயிரம் வாடகைன்னா நல்லா இருக்கும். அதுக்கும் மேலன்னா நாம மாசம் மாசம் கஷ்ட படணும்”, என்று சொல்லி அவளை வெளியே அழைத்து வந்தான். 
“கடவுளே வாடகை கம்மியா இருக்கணும்”,என்ற வேண்டுதலோடு சித்தார்த் மற்றும் டீச்சர் பேசுவதை கவனித்தாள்.
“வாடகை ஆயிரத்து ஐநூறு. அட்வான்ஸ் மூவாயிரம்”, என்று அந்த டீச்சர் சொன்னதும் நம்ப முடியாமல் திகைத்தாள் சிந்து. 
ஆச்சர்யம் மற்றும் சந்தோசத்துடன் சித்தார்த்தைப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் அவனை என்னவோ செய்ய சட்டைப் பையில் இருந்த இரண்டாயிரத்தை எடுத்து டீச்சரிடம் கொடுத்தவன் “இதை இப்ப வச்சிக்கோங்க. ஒன்னாம் தேதி குடி வரோம். மீதி ஆயிரம் அப்ப தரேன்”, என்று சொன்னான். அதைக் கேட்டு பூவாய் மலர்ந்து போனாள் சிந்து. 
“சரிப்பா, சந்தோஸமா வாங்க. உள்ள கொஞ்சம் பழைய சாமான் கிடக்குதுள்ள?  யாராவது தெரிஞ்ச ஆள் கூட்டிட்டு வந்து அதை எடுத்து கடைசி வீட்டில் போட முடியுமா?”, என்று டீச்சர் கேட்டதும் “சரி, நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன சித்தார்த் சிந்துவை அழைத்துக் கொண்டு பாலாவிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
போகும் போது “பரவால்ல இவ்வளவு கம்மியா வாடகை சொல்லுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை”, என்றான் சித்தார்த்.
“நானும் தான் எனக்கே அதிர்ச்சியா இருந்தது. உங்களுக்கு கம்பெனிக்கு ரொம்ப பக்கம்”
“ஆமா நடந்தே போயிருவேன். மதியம் சாப்பிட வீட்டுக்கே வந்துருவேன். அடுப்பு, மத்த பொருள் எல்லாம் வாங்கணும்”
“அடுப்பு மட்டும் போதும், பாத்திரம் எல்லாம் அம்மா வாங்கினது இருக்கு. ச்சே பிரிட்ஜ் விஷயம் தான் சொதப்பிருச்சு. அம்மா சீர் வரிசை வாங்கும் போது உனக்கு பிரிட்ஜ் வாங்கணுமா இல்லை சோஃபா வாங்கணுமான்னு கேட்டாங்க. நான் நீங்க சோபான்னு சொன்னதும் அது வாங்கி இப்ப நமக்கு பிரிட்ஜ் இல்லை. அந்த சோஃபாவை உங்க வீட்ல கிழிச்சு குதறி வச்சிருக்காங்க”
“சரி விடு, நான் வாங்குறேன்”

Advertisement