Advertisement

ஒரு வழியாக முடித்தும் விட்டாள். அப்போது குளித்து முடித்து வந்த சித்தார்த்திடம் “நாங்க இன்னைக்கு பையனை பாக்க போறோம். வண்டி எங்களுக்கு வேணும் டா. நீ பஸ்ல போ”, என்று சொன்னார் சுந்தரம்.
எதுவும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டு வந்தான் சித்தார்த். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு தான் எரிச்சலாக வந்தது சித்தார்த்தை நினைத்து.
அதை அப்படியே அவனிடம் காட்டவும் செய்தாள். “என்கிட்ட வண்டில போறதா தான சொன்னீங்க. அப்புறம் எதுக்கு பிளான் மாத்தணும்? அவர் கேட்ட உடனே சரின்னு சொல்லனுமா? வேற வேலை இருக்கு வண்டி வேணும். நீங்க பஸ்ல போங்கன்னு சொல்ல வேண்டியது தான?”, என்று கத்தினாள்.
அவளை சமாதான படுத்த முடியாமல் விழி பிதுங்கினான் சித்தார்த். எப்போதும் காலை உணவை ஊட்டி விடுபவள் இன்று தட்டை அவன் அருகே வைத்து விட்டு அகன்று விட்டாள்.
அவள் ஊட்ட வில்லை என்பதால் “எனக்கு வேண்டாம் நான் கிளம்புறேன்”, என்றான் சித்தார்த்.
“போங்க, எனக்கென்ன? இதை அப்படியே குப்பைல கொட்டுவேன். மதிய சாப்பாடு எடுத்துட்டு போகலைன்னாலும் அதை தான் செய்வேன்”, என்று சிந்து சொன்னதும் வேறு வழியில்லாமல் அவனே சாப்பிட்டான். 
போகும் போது அவனைக் கொஞ்சி வழி அனுப்பும் அவள் இன்று அசையாமல் இருந்தாள். அவளை முத்தமிட முன்னேறியவனை கையை வைத்து தள்ளி நிறுத்தினாள்.
மனதில் பாரத்தோடு அங்கிருந்து சென்று விட்டான் சித்தார்த். அவன் போய் சிறிது நேரத்தில் பாஸ்கரன் வந்தான். “பையன் எப்படி இருக்கான் மச்சான்?”, என்று கேட்டாள் சிந்து.
“நல்லா இருக்கான். சித்தார்த் வண்டி எடுத்துட்டு போகலையா? அம்மா அப்பா போக வண்டி கொண்டு வறேன்னு சொல்றதுக்கு தான் போன் பண்ணுனேன். யாரும் எடுக்கலை. நான் நைட் தான் போவேன். நீயும் சித்துவும் உங்க வண்டில வந்தா அப்பா அம்மா என் வண்டில வரட்டும்னு நினைச்சேன். யாரும் போனை எடுக்கலை?”
“ஆமா உங்க அப்பா வண்டி வேணும்னு சொன்னார். உடனே அவங்க பஸ்ல போயிட்டாங்க. சாப்பிடுறீங்களா?”
“இப்ப தான வந்தேன். இன்னும் குளிக்கலை”
“சரி குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க”, என்று சொன்னதும் அவன் கிளம்பி விட்டான்.
தாயம்மாவும் சுந்தரமும் அவர்கள் வண்டியிலே சென்று விட்டார்கள். அன்று மாலை சித்தார்த்தும் சிந்துவும் “காலைல போய் பாக்கலாம். நாளைக்கு லீவ் தான?”, என்று முடிவு எடுத்தார்கள்.
“நாளைக்கு காலைல பொங்கல் செஞ்சு தரியா சிந்து. சாப்பிடணும் போல இருக்கு?”, என்று கேட்டான் சித்தார்த்.
“சரி, நைட் இட்லிக்கு, சாம்பார் வைக்க போறேன். அது காலைலே இருக்கும், பொங்கலும் சட்னியும் காலைல வைக்கிறேன்”
“சரி வடை நான் கடைல வாங்கிட்டு வரவா?”
“காலைலே அங்க போகணும். நான் வீட்லே போடுறேன். கூட கொஞ்சம் வடை சாப்பிடலாம்ல?”, என்று சொல்லி சனியனை தூக்கி பனியனில் போட்டாள் சிந்து.
காலையில் அனைத்து வேலையையும் முடிக்கும் போது பசித்தது. சித்தார்த்தும் குளித்து விட்டு வந்தான். அவன் வந்ததும் “எப்பவும் போல நான் நம்ம ரூம்ல வச்சு சாப்பிடுவேன். நீங்க என் கூட சாப்பிட போறீங்களா? இல்லை உங்க அம்மா அப்பா கூட சாப்பிட போறீங்களா?”, என்று கேட்டாள் சிந்து.
“நம்ம ரெண்டு பேருமே சாப்பிடுவோம். கிச்சன்ல வச்சு சாப்பிடுவோம். தினமும் நைட் நீ தனியா சாப்பிடுற? நான் அவங்க கூட சாப்பிடுறேன். இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும்  சாப்பிடுவோமா?”, என்று சித்தார்த் கேட்டதும் சந்தோஷமாக சரி என்று சொல்லி தட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் அதிர்ந்தாள்.
அங்கே “அப்பா சாப்பிடுவோமா?”, என்று கேட்டுக் கொண்டிருந்தான் சித்தார்த்.
“சரி சாப்பிடுவோம், எடுத்து வை. நான் அம்மாவைக் கூட்டிட்டு வரேன்”, என்று எழுந்து விட்டார் சுந்தரம்.
அவளுடன் சாப்பிட முடிவு செய்து அவர்களையும் அழைத்தது சிந்துவுக்கு எரிச்சலை உருவாக்கி இருந்தது. அடுத்த நொடி அழுது கொண்டே அங்கிருந்து தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள் சிந்து.
அவன் ஒரு தட்டில் போட்டுக் கொண்டு அவளுக்கு கொடுக்க வந்தான்.  அவனைப் பார்த்து முறைத்தவள் “என்ன டேஷ்க்கு என் கூட உக்காந்து சாப்பிடுறேன்னு சொல்லணும்? நான் ஒழுங்கா எப்பவும் போல நம்ம ரூம்லே உக்காந்து சாப்பிட்டுருப்பேன்ல? நீங்க உங்க அம்மா அப்பா கூடவே போய் சாப்பிடுங்க போங்க”, என்று சொல்லி வறுத்தெடுத்தாள்.
ஒரு மரியாதைக்காக தான் சுந்தரத்திடம் கேட்டான் சித்தார்த். அவர் நேரம் ஆகட்டும்னு சொல்லுவார் என்று எதிர் பார்த்தான். இப்படி நடக்கும் என்று அவன் கனவா கண்டான்.
பசிக்குது என்று சொன்ன சிந்து அவன் கொண்டு வந்த பொங்கலை தொட கூட செய்யாமல் துணி துவைக்க சென்று விட்டாள்.
குளித்து முடித்து வந்ததும் அவளை சாப்பிட சொல்லி வற்புறுத்தினான். அவளோ அதை தொட கூட செய்யாமல்  கிளம்பி விட்டாள்.
வேறு வழியில்லாமல் அவளுடன் வெளியே கிளம்பி வந்தவன் அவளுக்கு ஹோட்டலில் நான்கு இட்லியை வாங்கி கொடுத்தான்.
அந்த பிரச்சனை அதோடு முடிந்தது.  குழந்தையை பார்த்து இருவருக்கும் இருந்த ஏக்கம் அதிகமானது மட்டும் நிஜம். 
பன்னிரெண்டு மணிக்கு ஹஸ்பிட்டலில் இருந்து இருவரும் வெளியே வந்து விட்டார்கள். “வீட்டுக்கு போய் என்ன செய்ய?”,என்று எண்ணிக் கொண்டே வந்தாள் சிந்து. 
ஒரு ரோட்டை காண்பித்த சித்தார்த் “இப்படி தான் ஆலங்குளம் போகணும்”, என்றான்.
“அங்க துணி குறைந்த விலைக்கு இருக்கும்னு சொன்னீங்க தானே? வாங்க போகலாம். பதினாறு கிலோமீட்டர் தான? எப்படியும் ஒரு நாள் போகணும்னு சொல்லிட்டு இருந்தீங்கல்ல?”, என்று சொன்னாள் சிந்து.
அவனும் சரி என்று வண்டியை விட்டான். “இப்ப யாருக்கு எடுக்க போற?”
“அன்னைக்கு மாரியக்கா எனக்கு ஒரு புது நைட்டியை கொடுத்தாங்கல்ல? அதுக்கு பதில் ஒரு சேலை வாங்கி கொடுக்கலாம்”
“சரி அப்ப உனக்கு ஒண்ணு எடு”
“சரி”
“அப்புறம் உங்க அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும் எடுப்போமா?”
“சரி”, என்று சொல்லி கடையில் அவள் அப்பா, அவனுடைய அப்பா அவள் தம்பி அவனுடைய அண்ணன் என்று எல்லாருக்குமே எடுத்து விட்டார்கள்.
ஹாசினிக்கு மட்டும் எடுக்க வில்லை.  வீட்டுக்கு வந்து சித்தார்த் தான் அவர்கள் கையில் கொடுத்தான்.
சுந்தரமும் தாயம்மாவும் “பொங்கலுக்கு எல்லாருக்கும் துனியா? நல்லா இருக்கு”, என்று வாங்கிக் கொண்டார்கள். “ஹாஷினிக்கு வாங்கிட்டு அப்புறமா உன் அண்ணன் கிட்ட கொடு”, என்று சொல்லி விட்டார் சுந்தரம்.
பொங்கப்பொடி நாளை மாலை கொண்டு வருவதாக சொன்னாள் ராணி.
“நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. பெர்மிசன் தர மாட்டாங்க”, என்று சித்தார்த் சொன்னதும் பொங்கி விட்டாள் சிந்து.
“எதுக்கு எடுத்தாலும் கம்பெனி கம்பெனி தானா? பூ வைக்கிற அன்னைக்கும் இப்படி தான் செஞ்சீங்க. உங்களை எல்லாரும் தாங்கணுமோ? நீங்க இல்லாம நாளைக்கு எனக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் வருவாங்க. நீங்க இல்லைன்னா என்ன செய்ய முடியும்? சாயங்காலம் தானே வாராங்க”
தலையை பிடித்துக் கொண்ட சித்தார்த் அவளிடம் ஒன்றும் சொல்ல வில்லை. “நாளைக்கு மும்பையில் இருந்து லோட் வந்து இறங்குகிறது. நான் இல்லைன்னா என்ன சொல்லுவாங்க?”, என்று குழம்பினான். 
அடுத்த நாளை நினைத்து அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. 
வருபவர்களுக்கு வேறு கறி சோறு ஆக்கிப் போட வேண்டும். 
“நான் நான்வெஜ் இது வரைக்கும் சமைச்சது இல்லை தான். ஆனா நான் நாளைக்கு செய்றேன். அதெல்லாம் நல்லா தான் இருக்கும். அம்மா சொல்லி சொல்லி நான் செஞ்சிருக்கேன். உங்க அம்மா செய்ய வேண்டாம். சொன்னா பெரிய சீன் போடுவாங்க”, என்றாள் சிந்து. 
“நீ ஒரு ஆளே எல்லாம் செஞ்சா கஷ்டம்”, என்று அவளிடம் சொன்னவன் நேராக தாயம்மா அருகில் சென்று “நாளைக்கு பத்து பதினஞ்சு பேர் வருவாங்க மா. சிக்கன் சமைச்சிருவீங்களா?”, என்று கேட்டான். 
“சரி வைக்கேன், ஆனா சீக்கிரம் வந்து வாங்கி தா”, என்றாள் தாயம்மா.
“கல்யாணத்துக்கு அப்புறம் நாலு லட்சம் ரூபாய் செலவாகிருக்கு டா. நானும் துட்டுக்கு என்ன செய்வேன்?”, என்று புலம்பினார் சுந்தரம். 
ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்த சித்தார்த்துக்கும் மனசு விட்டு போனது.
மூத்த மகனுக்கு செய்தார்கள், அடுத்து மகளுக்கு செய்தார்கள். இப்போது வரை அவர்களுக்கு செய்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு செய்கிறார்கள். இவனுக்கு செய்யும் போது மட்டும் பணமில்லையாமாம். 
கவலையுடன் தான் அறைக்குள் வந்தான். ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சிந்து அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.
“நாலு லட்ச ரூபாய் செலவாகிருக்குன்னு அவர் சொல்றதை நான் பொய் ன்னு சொல்ல மாட்டேன். ஒரு லட்ச ரூபாய்க்கு மாடி ரூம்க்கு கதவு ஜன்னல் போட்டுருக்கு. இன்னொரு லட்ச ரூபாய்க்கு பலகை எல்லாம் வாங்கி எல்லா ரூமுலையும் கபோர்ட், ஷோக்கெஸ் ன்னு எல்லாம் செஞ்சிருக்கு. அதை செஞ்ச ஆளுக்கு சம்பளம்னு இவ்வளவு கூட செலவாகாதா? என்னமோ நாமளே தின்னு அழிச்ச மாதிரி சொல்றாங்க. நீங்களும் பேசாம வாரீங்க?”
அதே வலி தான் அவனுக்கும். அதையே குத்திக் கீறினாள் சிந்து. கூடிய சீக்கிரம் இங்க இருந்து போகணும் என்ற எண்ணம் வலுபெற்றது அவனுக்கு. 
அதன் பின் பொங்கபொடி வந்து இறங்கியது. அன்று மாலை சீக்கிரமே வந்து விட்டான் சித்தார்த்.
பொங்கல் வைக்க இரண்டு பானை, நான்கு கட்டு கரும்பு, காய் கறி கிழங்கு வகைகள் பூ மாலை வாழைத்தார் என அனைத்தும் இறங்கியது. இதற்காக வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் ராணிக்கு பணம் அனுப்பி வைத்ததும் சித்தார்த் தான்.
“உங்க கிட்டயே பணம் வாங்கி உங்க வீட்டுக்கே செய்றது அம்மாவுக்கு கஷ்டமா இருக்காம்”,என்றாள் சிந்து.
“இப்ப அவங்க கைல இல்லை. இருந்தா அவங்க நமக்கு செய்ய போறாங்க. அத்தை பாவம். இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல விடு”, என்றான் சித்தார்த். சில நேரம் சித்தார்த் தான் சிந்துவுக்கு புரியாத புதிராக இருந்தான். அனைத்தையும் செய்தான். ஆனால் மனைவியின் உணர்வுகளை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை போல?
பொங்கல் அன்று சிந்துவுக்கு பீரியட்ஸ் வந்ததால் மற்ற அனைவரும் பொங்கல் வைத்தார்கள். தாயம்மாவுடன் சேர்ந்து பொங்கல் வைப்பதற்கு இந்த மாசம் பீரியட்ஸ் வந்தது சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டாள் சிந்து.
“இந்த வீட்ல இருந்துகிட்டு இவங்க கூட எதுலயும் கலந்துக்காம இருக்குறதுக்காக நான் ஏன் இப்படி கேவலமா யோசிக்கிறேன்? என் மாமியார் கூட சேந்து பொங்கல் வைக்காம இருக்குறதுக்கு எனக்கு பீரியட்ஸ் வரணும்னு வேண்டுறேனே. ஏன் என்னோட மனநிலை மட்டும் இப்படி இருக்கு? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? நான் தான் கெட்டவளா?”, என்று கவலையாக எண்ணிக் கொண்டிருந்தாள். 
அவள் கண்களில் கண்ணீர் வந்தது. “கடவுளே இங்க இருந்து எப்படியாவது போகணும். அப்ப தான் நிம்மதியா இருக்கும்”, என்று ஒரு மனது எண்ணியது சிந்துவுக்கு.
காதல் தொடரும்….

Advertisement