Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 17
காயம் தரும் கத்தி
நீ என்று எண்ணினேன்
அந்த காயத்துக்கு 
மருந்தும் நீயே
என்று உணர்த்தி விட்டாய்!!!
பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க கூட விரும்பாதவள் போல இருந்தாள். 
கிளம்பும் போது சித்தார்த் மட்டும் அவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்லி விட்டு வந்தான். ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்ததும் ராணி அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள். 
சாப்பிட்டு முடித்து எல்லாம் எடுத்து வைக்கும் வரை பொறுமையாக இருந்த சித்தார்த் “நீ எங்க அம்மா அப்பா கிட்ட போயிட்டு வரோம்னு சொல்லிட்டு வந்துருக்க வேண்டியது தானே?”, என்று ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்து முறைத்தவள் “அவங்க கிட்ட நான் எதுக்கு பேசணும்? அவங்களால தான் என் நிம்மதி சந்தோஷம் எல்லாம் போச்சு. அது மட்டும் இல்லாம நான் அவங்க கிட்ட பேச மாட்டேன்னு சொல்லி தானே அங்க வந்தேன். அப்படியும் அவங்க ஏதாவது என்கிட்ட பேசிருந்தா நான் பேசிருப்பேன். அவங்க என்கிட்ட ஏதாவது பேசினாங்களா?”, என்று கேட்டாள்.
“அவங்க தான் பேசலைன்னா நீ பேச மாட்டியோ? அப்ப உங்க வீட்ல நான் இனி எப்படி இருக்கணுமோ அப்படி இருந்துக்குறேன்”
“என்ன பிளாக்மெயில் பண்ணுறீங்களா? எங்க வீட்ல உங்களை என்ன செஞ்சிட்டாங்க? லாஜிக்கே இல்லாம மிரட்டுறீங்க? உங்களை எல்லாம் திருத்தவே முடியாது”, என்று அவனை திட்டி விட்டு வெளியே சென்றவள் வாசல் படியில் அமர்ந்து விட்டாள்.
அவள் முகத்தைப் பார்த்து விட்டு விசாரித்த ராணியிடம் “நீங்க சொன்னீங்கன்னு தான மா அவங்க கூட போனேன். இப்ப அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு வரலைன்னு சண்டையை ஆரம்பிக்காங்க”, என்றாள்.
“அவங்களா வந்து வீட்டுக்கு என்னைக்கு வரன்னு உன்னை கேக்கலையா சிந்து?”
“அவங்க எதுக்கு மா என்னை கேக்க போறாங்க. அவங்க வந்து என்கிட்ட பேசணும்னு நானும் எதிர் பாக்கலை. ஆனா இவங்க எதுக்கு மா எப்பவும் அவங்க அம்மா அப்பாவுக்கே சப்போர்ட் பண்ணி பேசுராங்க? எவ்வளவு சொல்லியும் புரிஞ்சிக்க மாட்டிக்காங்க. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை மா. கேட்டதுக்கு உங்க வீட்ல எப்படி நான் இருக்கணுமோ அப்படி நான் இருந்துக்குறேன்னு சொல்றாங்க. சரி அங்க போகாம இங்கயே நான் இருந்துக்குறேன்னு சொன்னா நம்ம வீட்டுக்கு எப்ப போவோம், வா சிந்து போகலாம்னு கூப்பிடுறாங்க. நைட் முழுக்க என்னை தூங்கவே விடலை. நம்ம வீட்டுக்கு எப்ப போகன்னு கேட்டுட்டே இருந்தாங்க. தனியா விடவும் மாட்டிக்காங்க. கூட இருந்தா அவங்க அம்மா அப்பா என்னை சாகடிக்கிறாங்க”, என்று சொல்லும் போதே அழ ஆரம்பித்தாள் சிந்து.
“எதுக்கெடுத்தாலும் முதல்ல அழுறதை நிறுத்து சிந்து. அழுது அழுது உன் உடம்பை நீயே கெடுத்துக்காத. நல்ல பையன் நல்ல குடும்பம்னு நினைச்சு தான் கட்டி வச்சோம். இப்ப தான் தெரியுது அவங்க உன்னை வேலைக்காரியா தான் நடத்துராங்கன்னு”,என்று கடுப்புடன் சொன்னாள் ராணி. ஒரே மகளின் கண்ணீர் ராணியின் பொறுமையையும் போக்கி இருந்தது. 
“ஆமா மா, இப்பவும் அதுக்கு தான் கூப்பிடுறாங்க. நான் இங்க வந்த அஞ்சு நாள்ல அவங்க அம்மா அப்பா ஒழுங்கா பால் குடிக்கலையாம். இவங்க துணியை துவைக்க ஆள் இல்லையாம். காலைல எந்திச்சு இவங்களுக்கு சமையல் ஒழுங்கா செஞ்சு கொடுக்களையாம். அது மட்டுமில்லாம இவங்களை தான் அவங்க அம்மா அப்பா நைட்டு சமையல் செய்ய வைக்காங்கலாம். இந்த வேலை எல்லாம் செய்றதுக்கு தான் வா வான்னு கூப்பிடுறாங்க”
“இங்க பாரு சிந்து, உன்னை வேலைக்காரியா தான் கூப்பிடுறாங்க. நீ வேலைக்காரியாவே போ”
“அம்மா என்னை அங்க போக சொல்றீங்களா மா? அங்க இருந்தா நிம்மதியா இருக்க முடியலை மா. ஒழுங்கா சாப்பாடு கூட சாப்பிட முடியலை”
“சிந்து இப்ப எதையும் யோசிக்காத. எல்லாமே ஒரு நாள் மாறும். அம்மா உன்னை அங்க போக சொல்றேன்னு கஷ்ட படாத தங்கம். நீ அங்க போ, பழைய படி இல்லாம சுட சுட எல்லாம் ஆக்கிக் கொடுக்க வேண்டாம். காலைலே மதியத்துக்கும் சேத்து செஞ்சு வை. அவங்களுக்கு பால் ஆத்துறது, வெண்ணி வைக்கிறதுன்னு எந்த வேலையும் நீ செய்யாத. முக்கியமா உங்க வீட்டுக்காரர் கூட அதிகம் பேசாத. மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தா சண்டை தான் வரும். நீ முதல்ல நல்ல படிச்சு வேலைக்கு போக பாரு. கொஞ்ச நாள் கஷ்ட படு மா. வேலை கிடைச்சா உனக்கே தன்னம்பிக்கை வரும்”
கண்களை துடைத்த சிந்து மனதில் ஒரு முடிவு எடுத்துக் கொண்டு “சரி மா, இனி நான் எப்படி இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்படி இருந்துக்குறேன். நான் அவங்க கூட கிளம்புறேன்”, என்றவள் புன்னகைத்தாள். 
அவள் மனதில் நினைத்தது போல் நடக்குமா? இல்லை அனைத்தும் தலை கீழ் தான் போகுமா? அதுவும் விதி வசமே. 
ராணியின் அறிவுரைப் படி சித்தார்த் வீட்டுக்கே வந்தாள் சிந்து. வீட்டுக்கு வந்தாலும் அமைதியாக இருந்த சிந்துவிடம் பேச்சு கொடுத்தான் சித்தார்த்.
“நானே கொலைவெறில இருக்குறேன். பேசாம போய்ருங்க”, என்று கத்தினாள் சிந்து.
அவள் வந்ததே போதும் என்று எண்ணி சந்தோஷமடைந்தான் சித்தார்த். அன்று மாலை டீ போடும் போது தன்னுடைய வேலையைக் காட்டினாள் சிந்து.
தனக்கும் அவனுக்கும் மட்டும் டீயைப் போட்டவள் அவன் கைகளில் கொடுத்தாள்.
“அவங்க மூனு பேருக்கும் பால் சூடு பண்ணிட்டியா?”,என்று கேட்டான் சித்தார்த்.
“உங்க அம்மா அப்பாக்கு, உங்க அண்ணன் மகளுக்கு வேணும்னா நீங்க சூடு பண்ணி கொடுங்க. எனக்கு இது தான் வேலையா?”, என்று அவள் சொன்னதும் அவனே எடுத்து பாலை சூடு செய்தவன் அவளை பாவமாக பார்த்தான்.
“எவ்வளவு பூஸ்டும் எவ்வளவு சக்கரையும் போடணும்னு தெரியலை”, என்று அவன் சொன்னதும் மனது கேட்காமல் 
அவளே ஆற்றி அவன் கையில் கொடுத்தாள். 
சுந்தரத்துக்கும் தாயம்மாவுக்கும் கொண்டு போய் கொடுத்தான். ஆற்றுவதற்குள் ஹாஷினி அவள் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
“ஏமா எதுக்கு அவளை போக சொன்னீங்க? இருக்க சொல்லிருக்கலாம்ல? அவ வந்தா நீங்க தான் பால் ஆத்தணும் சொல்லிட்டேன்”, என்று சித்தார்த் சொல்ல “ஆமா எங்களுக்கு ஆத்தி குடிக்க தெரியாதோ? இவங்க ஆத்தி தான் நாங்க குடிச்சிட்டு இருக்கோமோ”, என்று முகத்தில் அடித்தது போல திட்டி விட்டாள் தாயம்மா. அது மட்டுமல்லாமல் சுந்தரத்தின் அருகில் சென்றும் திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு என்னவோ போல் ஆனது. அவனைப் பார்த்து சிரித்த சிந்து “உங்களுக்கு தேவையா இது? வேணும்னா அவங்களே ஆத்தி குடிக்கட்டும்னு விட வேண்டியது தான?”, என்று கேட்டாள். 
அன்றில் இருந்து காலையில் சுந்தரம் பால் வாங்கி வந்ததும் அதை சூடு செய்து அப்படியே வைத்து விடுவாள். அதை அவர்களுக்கு ஆற்றிக் கொடுக்கவும் மாட்டாள். பிரிட்ஜ் உள்ளே வைக்கவும் மாட்டாள். அப்போதும் அந்த வேலையை தாயம்மா செய்ய வில்லை. குளித்து முடித்து வரும் சுந்தரம் தான் அந்த வேலையை செய்வார்.  
அதே போல் மாலையும் சித்தார்த் தான் அவர்களுக்கு பால் ஆத்துவான். “இவ்வளவு போடுங்க”, என்று மட்டும் தான் சிந்து சொல்லுவாள்.
அது போல சமையலும் காலையிலே முடித்து விடுவாள். அதில் மதிய சாப்பாடும் அடக்கம். அது அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஐந்தரைக்கு எழுந்து அனைவருக்கும் இட்லி அல்லது தோசை, சட்னியோ, சாம்பரோ, பின்னர் மதியத்துக்கு சாதம் பொரியல் என்று ஏழு மணிக்குள் முடிப்பதற்குள் சிறிது மூச்சு முட்டியது.
ஆனால் சந்தோசமாகவே வேலை செய்தாள். ஏனென்றால் ஏழரைக்கு சமையல் முடித்து எட்டரை மணிக்குள் பாத்திரம் விளக்கி வீடு கூட்டி அனைத்து வேலையையும் முடித்து விட்டு ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை ஓய்வு கிடைத்தது அவளுக்கு.  
“எதுக்கு இப்படி கஷ்ட பட்டு சீக்கிரம் எந்திரிச்சு ஆக்குற? மெதுவா அப்புறம் செய்ய வேண்டியது தான?”,என்று கேட்டான் சித்தார்த். 
“உங்க அம்மா அப்பா சுட சுட திங்குறதுக்கு நான் நாள் முழுக்க அடுப்படில இருக்கனுமா? சூடா வேணும்னா அவங்களே ஆக்கிக்கட்டும்“,என்று பதில் கொடுத்தாள்.
அவனுடனே காலையில் சாப்பிட்டு விடுவாள். மதியம் உணவை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய அறையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள்.
சட்டி காலி ஆகி இருப்பதைப் பார்த்து தான்  அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்றே அவளுக்கு தெரியும். அதுவும் சாப்பிட்ட தட்டைக் கூட விளக்காமல் போட்டிருப்பார்கள். 
“அவர்களே எடுத்து வைத்து சாப்பிடுவதே பெரிய சந்தோஷம். என்னை தொல்லை செய்யாம இருந்தா போதும்”, என்று நினைத்த சிந்து பாத்திரத்தை மட்டும் விளக்குவாள். 
சுந்தரம் மற்றும் தாயம்மா இருவரின் முகத்தைக் கூட பார்க்காமல் விலகி விடுவாள் சிந்து. 
இப்போது வாழ்க்கை அழகானதாக தான் சென்றது. காலையில் வேலை பகல் முழுவதும் படிப்பு சாயங்காலம் காபி, இரவு உணவு என்று நிம்மதியாக இருந்தது சிந்துவுக்கு. அந்த நிம்மதிக்கும் அடுத்த வேட்டு வந்தது. 
ஒரு நாள் சித்தார்த்தும் சிந்துவும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் கீழே வரும் போது அவளுடைய போனுக்கு பாஸ்கரன் அழைத்திருந்தான்.
“உங்க அண்ணன் எதுக்கு போன் பண்ணிருக்காங்க”, என்று கேட்டாள் சிந்து.
“இரு கேக்குறேன்”,என்று சொன்னவன் பாஸ்கரனை அழைத்தான். 
“சித்தார்த், பையன் பிறந்திருக்கான் டா. இப்ப அரை மணி நேரம் தான் ஆகுது. உனக்கு போன் பன்னேன் லைன் கிடக்கலை. அதான் சிந்துவுக்கு பண்ணுனேன்”, என்றான் பாஸ்கரன்.
“அப்படியா ரொம்ப சந்தோஷம். ஆஸ்பத்திரிக்கு எப்ப போனீங்க? மாரி எப்படி இருக்கா? சுக பிரசவம் தானா?”
“காலையிலே போய்ட்டோம். சும்மா செக்கப்க்கு தான் போனோம். அவங்க இன்னைக்கே பிறந்துரும்னு சொல்லிட்டாங்க. நார்மல் தான். பையன் நல்லா இருக்கான்”
“சரி”, என்று சொல்லி போனை வைத்த சித்தார்த் சிந்துவிடம் விஷயத்தை சொன்னான். அதை கேட்டு சந்தோஷ பட்டாலும் அவளுக்குள்ளும் குழந்தையை நினைத்து சிறு ஏக்கம் வந்தது உண்மை. 
அதே ஏக்கத்தை அவன் கண்களிலும் கண்டாள் சிந்து. “காலைலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ருக்கான். ஒரு வார்த்தை சொல்லலை பாரேன்”, என்றான் சித்தார்த்.
“உடனே அவங்களை குறை சொல்ல ஆரம்பிச்சாச்சா? விடுங்க”
“காரியம் ஆகணும்னா மட்டும் தான் தேடுவாங்க போல சே. எங்க அம்மா அப்பா கூட என்கிட்ட சொல்லலை பாரேன்”
“இந்த அளவுக்கு புரிஞ்சிக்கிற அறிவு இருக்கா? சந்தோஷம் தான்”, என்றாள் சிந்து.
பின் இருவரும் சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே தாயம்மாவும் சுந்தரமும் பேசுவது கேட்டது.
“சும்மா வயிறு வலிக்குதுன்னு அவ அண்ணி சாந்தாவை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு இருக்கா. அவங்க நாள் நெருங்கிட்டு இருங்கன்னு சொல்லிட்டாங்களாம்‌”, என்று தாயம்மா சொன்னதும் “ஏன் அவளைக் கூப்பிட்டாளாம்? நம்மளை கூப்பிட வேண்டியது தான?”, என்று மாரியை திட்டினார் சுந்தரம்.
அவர்கள் பேச்சைக் கேட்டு “இவங்களை கூப்பிட்டுருந்தாலும் விளங்கிரும். அவங்க அண்ணியை தானே கூட்டிட்டு போயிருக்காங்க. இவங்க வயசானவங்கன்னு இவங்களை கூப்பிடாம போயிருக்கலாம். இதைக் கூட இவங்களுக்கு புரிஞ்சிக்க முடியலையா?”, என்று எண்ணிக் கொண்டாள் சிந்து.
“நாளைக்கு நாம போய் பையனை பாப்போமா?”, என்று கேட்டான் சித்தார்த்.
“ம்ம் சரி”, என்றாள் சிந்து.
“நாளைக்கு நான் வண்டில போறேன். சீக்கிரம் வந்துருவேன். நீ கிளம்பி இரு. போயிட்டு வந்துருவோம்”
முடிவு செய்து படுத்தார்கள். அடுத்த நாள் காலை எழுந்து சமையல் வேலையை துடங்கினாள் சிந்து. வண்டியில் தானே செல்ல போகிறான் என்று எண்ணி கொஞ்சம் மெதுவாக சமையலை செய்தாள். 

Advertisement