Advertisement

அவனுக்கு தெரியும் சிந்து அவனுக்கு கிடைத்த வரம். அவன் இளைப்பாற அவனுக்கு கிடைத்த நிழல். தன்னுடைய அக்கா, குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்க, அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க, கல்யாணம் முடிக்க வேண்டிய வயதில் தாயம்மாவால் சித்தார்த் மட்டும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருந்தான். 
அவளுக்கு ஹாஸ்பிட்டலுக்கு அலைந்தே அவனுக்கு திருமண வயது சென்று கொண்டிருந்தது. தாயம்மா பற்றிய கவலையில் அவன் திருமணத்தைப் பற்றி ஒருவருமே எண்ண வில்லை.
சுந்தரம் பகலில் வேலைக்கு சென்றதால் சென்னையில் பார்த்துக் 
கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஊருக்கே வந்து விட்டான். கடைசியில் வேலையும் போய், கல்யாணமும் நடக்காமல் அவனைப் பரிதாபத்தோடு பார்த்தவர்கள் அதிகம். 
ஒன்று மாற்றி ஒன்று தாயம்மாவுக்கு வந்து மரண படுக்கைக்கு சென்று தான் மீட்டு வந்திருக்கிறார்கள்.
மருத்துவ கருவிகள் பொறுத்த பட்டு மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டே “உன்னை மட்டும் குடும்பம் ஆக்காம போயிருவேனோன்னு இருக்கு சித்தார்த்”, என்று அம்மா பேசியதும் இப்போது நடந்தது போல் நினைவில் வந்தது.
“என்ன இருந்தாலும் அம்மா அம்மா தானே. எனக்கு நல்ல அம்மாவா தான் இருந்தாங்க. ஆனால் நல்ல மாமியாரா தான் இருக்க முடியலை போல? அடுத்து அப்பா அவர் குரலே எப்பவும் அதிகாரமாக தான் ஒலிக்கும். அவருக்கு மென்மையாக பேச தெரியாது. அன்பைக் கூட காட்ட தெரியாது. அவரும் தாயம்மாவை நல்ல படியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தான் அவளுடைய துணியைக் கூட துவைத்து போடுவார். இந்த சிந்து கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்”, என்று எண்ணினான். 
ஒரு பக்கம் அம்மா அப்பா, இன்னொரு பக்கம் அவனையே நம்பி வந்த சிந்து. என்ன செய்ய என்று தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டான். சிந்துவை அவனால் எந்த குறையும் சொல்ல முடியாது தான். 
பல பெண்கள் வீட்டு வேலை செய்யாமல், மாமனார் மாமியாரை பார்க்காமல் ஊர் சுற்றிக் கொண்டு பணத்தை கரியாக்கிக் கொண்டு இருக்கையில் சிந்து தேவைக்கு அதிகமாக எதையும் வாங்கியதில்லை. வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவளே செய்தாள். 
இந்த எட்டு மாதத்தில் அது வாங்கி தாங்க இது வாங்கி தாங்க என்று கேட்டதும் இல்லை. பிறந்த நாளுக்கு இவன் தான் ஒரு வாட்ச்சும் டிரெஸ்ஸும் வாங்கிக் கொடுத்திருந்தான். 
படித்த திமிர் இல்லாமல் கர்வம் இல்லாமல் வீட்டு வேலை அனைத்தையும் எந்த மன சுணுக்கமும் இல்லாமல் தான் சிந்து செய்தாள். அவளை குறை சொல்லி சொல்லித் தான் இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சித்தார்த் முன்னாடியே அம்மா அப்பாவைக் கண்டித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்காது. 
ஆனால் அவன் முன்னமே கண்டித்திருந்தால் அதுக்குள்ளே பொண்டாட்டி தாசனா ஆகிட்டான் என்று பேசி இருப்பார்கள். சிந்து தான் காலம் முழுக்க அவனுடன் வரப் போகிறாள். சுந்தரமும் தாயம்மாவும் இப்போது நன்றாக தான் இருக்கிறார்கள். பெற்றோரைப் பற்றியும் சிந்துவைப் பற்றியும் எண்ணிப் பார்த்தான். 
சிந்து ஒரு முறை சொன்னதும் இப்போது நினைவில் வந்தது. “இங்க பாருங்க நமக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிருச்சு. எல்லாரும் குழந்தையைப் பத்திக் கேக்காங்க. இங்க இருந்தா இவ்வளவு மன அழுத்தத்துல குழந்தை உருவாகுறதே சந்தேகம் தான். உங்க அம்மா அப்பாவை பாக்க மாட்டேன்னு சொல்லலை. அவங்க கிட்ட இருந்து உங்களை பிரிக்கிறதும் என்னோட நோக்கம் இல்லை. அவங்களுக்காக பாத்தா நம்ம வாழ்க்கை என்ன ஆகுறது. அவங்க வாழ்ந்து முடிச்சவங்க. உங்க அம்மாவை உங்க அப்பா நல்லா பாத்துக்குவார். இப்போதைக்கு நம்ம வாழ்க்கையைப் பாக்கணும்., அவங்களுக்கு முடியாதப்ப நம்மலே பாதுக்குவோம். கொஞ்சம் என் மனசு பக்குவ படுற வரைக்கும் நாம தனியா இருக்கலாம்”, என்று தான் சிந்து சொல்லி இருந்தாள். 
அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன் “தனியா போறது தான் இனி நமக்கு நல்லது”, என்று முடிவெடுத்த பின்னர் தான் வீட்டுக்கு சென்றான்.
அதே நேரம் ராணியும் மகளின் மனதை கரைத்துக் கொண்டு தான் இருந்தாள். 
“இங்க பாரு சிந்து கொஞ்சம் கோபத்தை குறைக்க பாரு. இது தான் உன் வாழ்க்கைன்னு ஆகிருச்சு. அவங்க எப்படி இருந்தா உனக்கென்ன? நான் தான் சொல்றேன்ல? உக்காந்து படிச்சு வேலைக்கு போ. அது வரைக்கும் பல்லை கடிச்சிக்கோ. அதிக வேலையை செய்யாத. உன் மாமியாரை உன் மாமனார் பாத்துக்குவார். வெண்ணி போடுறது, பால் ஆத்துற வேலையை எல்லாம் அவங்களே செய்வாங்க”
“கண்ட நேரத்துல வேலை வாங்குராங்க மா. ஷோபால காலை ஆட்டிக்கிட்டு அந்த பொம்பளை படுத்துருக்கும். நான் தூங்கிட்டு இருப்பேன். என்னை எழுப்பி மாமாக்கு சாப்பாடு எடுத்து வைன்னு சொல்லுவாங்க.  எத்தனை தடவை வெண்ணி போடுறேன்னு தெரியுமா?”
“அந்த வேலையை எல்லாம் இனி செய்யாத. அவங்களே செஞ்சிக்கட்டும். சமையல் வேலை மட்டும் செய். உனக்கு பசிச்சா உன் ரூம்ல எடுத்துட்டு வந்து சாப்பிடு. அவங்க செஞ்சு வச்ச சாப்பாடை எடுத்து சாப்பிட முடியாமலா இருக்காங்க? பொறுமையா போ மா”
“ஆனாலும் என் மாமனார் அடிக்கிற மாதிரி வந்தார் மா. எப்படி அரட்டி பேசினார் தெரியுமா? அந்த வீட்டுக்கு எப்படி இனி போக?”
“உங்க மாமனார் குணமே அப்படி தான் போல சிந்து. எல்லா வலிகளையும் கடந்து வர பாரு மா. உன் வீட்டுக்காரரும் உனக்கு சப்போர்ட் பண்ணி அம்மா அப்பாவை திட்டவான்னு யோசிக்கிராரு. அவரையும் தப்பா நினைக்காதே. உனக்கே தெரியும் நம்ம வீட்ல எவ்வளவு கடன் இருந்ததுன்னு. மொய் வந்த பணத்துல கௌரிக்கு கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் என் தங்கச்சி கிட்ட வாங்கினது, உன் அண்ணன் கிட்ட வாங்கினது, தம்பிக்கிட்ட வாங்கினது மூணு லட்சம், அது போக நம்ம நகை என்பதாயிரத்தை உன் மாப்பிள்ளை தான் அடைச்சிருக்காரு. அதுல ஒரு லட்சம் நாம அவருக்கு திருப்பிக் கொடுத்துட்டாலும் மீதி கடனையும் அவரே தானே அடைக்கிறேன்னு சொல்றாரு. இப்படி ஒரு மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்? பொண்டாட்டி வீட்ல புடுங்க நினைக்கும் மாப்பிள்ளைக்கு மத்தியில அவரே எல்லாம் செய்ராறு,. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கி போடுராறு. வண்டி டியூ அவர் அக்கவுண்ட்ல இருந்து தான் போகுது”
“நீங்களும் தான் உங்க கைல பணம் இருக்கும் போதெல்லாம் கொடுக்குறீங்களே மா ?”
“லட்ச லட்சமா அவர் கொடுத்தார்,. ஆனா நான் பத்தாயிரமா தான மூணு தடவை கொடுத்துருக்கேன். பண விசயத்துல மட்டும் இல்லை சிந்து. உன் மேல அன்பா இருக்கார். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கஞ்சனும் இல்லை, அதே நேரம் ஊதாரியும் இல்லை. அம்மா அப்பா மேல பாசம் அதிகம் போல அது மட்டும் தானே பிரச்சனை? அதுவும் தப்பு இல்லையே? வேற ஒண்ணும் அவர் கிட்ட குறை சொல்ல முடியாதே?”
“இப்ப என்ன? அவங்க வீட்டுக்கு என்னை போக சொல்றீங்க அப்படி தானே?”
“ஹிம், ஆனா உடனே இல்லை. உன் கோபம் குறைஞ்ச பிறகு போ. அது வரை  நீ இங்க நிம்மதியா இரு. உன் அருமை உன் வீட்டுக்காரருக்கும் புரியட்டும்”
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் தான் அவள் இல்லாமல் தவித்தான். போனில் பேசும் போது ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு வைத்து விடுவாள் சிந்து. 
தன்னையே சுத்தி சுத்தி வந்தவளை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமோ என்று முதல் முறையாக சரியாக யோசித்தான்.
அப்போது ஒரு நாள் சித்தார்த்தின் சித்தப்பா மகளுக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்லி அவளை அழைத்தான். முதலில் வர முடியாது என்று மறுத்தவள் அது சித்தார்த்த்கு மரியாதை இல்லை என்று எண்ணி “சரி எனக்கு நல்லதா ஒரு சேலை, என் நகை எடுத்துட்டு வாங்க”,என்றாள்.
அதன் படி இவனும் எடுத்துக் கொண்டு சென்றான். அவனைப் பார்த்ததும் அவனையே அவள் கண்கள் அளவெடுத்தது. இந்த ஐந்து நாட்களில் அவன் உடல் எடை குறைந்தது போல இருந்தது. கோயிலுக்கு என்று முடி வெட்டாமல் இருந்தது பாட்டி இறந்ததால் மொட்டை போட முடியாமல் போய் தாடி அதிகம் வளந்து மொத்தத்தில் பரதேசி போல் இருந்தான்.
அவனுடைய தோற்றம் அவள் நெஞ்சில் ஈரத்தை வரவழைத்தது. அவனை கட்டிக் கொள்ள ஆவல் இருந்தாலும் அதை அடக்கியவள் “ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா?”, என்று மட்டும் கேட்டாள்.
“என்னை கவனிக்கிற நீ இங்க இருக்கும் போது என்னை யாரு பாத்துப்பா? சிந்து உனக்கு என்னை தேடவே இல்லையா?”,என்று கேட்டவனின் குரலில் அளவுக்கு அதிகமான தேடல் இருந்தது.
அவன் குரல் அவன் கண்ணில் இருந்த ஏக்கம் அனைத்தும் 
அவளுக்குள் புகுந்து அடுத்த நொடி அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள். 
“நீ எனக்கு வேணும் டி, வேற யாரும் வேண்டாம். அடுத்தவங்களால நம்ம வாழ்க்கையை கெடுத்துக்க வேண்டாம். உனக்கு நாம தனியா தான போகணும். எனக்கு ஒரே ஒரு மாசம் மட்டும் டைம் கொடு. அடுத்த மாசம் குவாட்ரஸ் கிடைச்சிரும். அப்படி கிடைக்கலைன்னா நான் கண்டிப்பா வேற வீடு பாத்துருவேன் சரியா?”
“ஹிம் சரி, உங்க அம்மா அப்பா கிட்ட இருந்து உங்களை பிரிக்கிறது என்னோட நோக்கம் இல்லைங்க. என்னால அவங்க  கூட சமாதானமா போக முடியலை. கொஞ்சம் எனக்கு நிம்மதி வேணும். நம்ம வாழ்க்கை இனி தான் இருக்கு”
“புரியுது, கொஞ்சமே கொஞ்ச நாள் தான் பிளீஸ் மா”
“சரி”
“இப்ப பங்சனுக்கு கிளம்பலாமா?”
“போகலாம், ஆனா உங்க அம்மா அப்பா வந்தா நான் பேச மாட்டேன்”
“அவங்க ஏதாவது பேசுனா பேசு போதும்”
அரை மனதாக சம்மதம் சொன்னவள் அவனுடன் கிளம்பினாள். இருவர் முகத்திலும் இருக்கும் சந்தோஷம் ராணிக்கு நிம்மதியை கொடுத்தது. 
காதல் தொடரும்….

Advertisement