Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 16
முகிலினை
தூது விட்டேன்
உன் இதயத்தை திருட அல்ல,
உன்னையே திருட!!!
சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது. 
கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல இருந்தது. தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“எதுக்கு டா இப்படி இருக்க? எதுக்கு தப்பு பண்ணிட்டு இருக்குற உன் அம்மா அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட வெறுப்பை வாங்கி கட்டிக்கிற? உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? ஆனா எதுக்கு, நியாயம் எது அநியாயம் எதுன்னு புரியாம இருக்குற?”, என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டாள். 
பின் தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாள். தூங்கி எழுந்த சித்தார்த் நேராக சிந்துவை தான் தேடிச் சென்றான். அவள் முகம் சாதாரணமாக இருந்தது. “கோபம் போயிருச்சு போல?”,என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான்.
அவனைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் “இன்னைக்கு வேலைக்கு போறீங்களா? மதியத்துக்கு சமைக்கவா?”, என்று கேட்டாள் சிந்து. ஆமாவேன்று சொல்லி அவன் அன்று வேலைக்கு கிளம்பி இருந்தால் அடுத்த சண்டை வந்திருக்காதோ என்னவோ? விதி யாரை விட்டது?
“இல்லை இன்னைக்கு லீவ் தான் போட்டுருக்கேன்”
“சரி குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவோம்”
காலை உணவுக்கு இட்லியும் பூரியும் செய்திருந்தாள். “பூரி எதுக்கு செய்ற? மாமாவுக்கு பிடிக்காது, இனி செய்யாத”, என்று தாயம்மாவும் “அவனுக்கு பூரி பிடிக்கும். அவனுக்கு பூரி செஞ்சு கொடு”, என்று சுந்தரமும் ஏற்கனவே அவளை கடுப்பேற்றி இருந்தார்கள். 
அதனால் இன்று அவர்களுக்கு இட்லியும் தனக்கும் சித்தார்த்துக்கும் பூரி என்று இரண்டையும் செய்து வைத்தாள். வேலை முடிந்து பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்கும் போது அங்கு “எதுக்கு பூரி சுட்டுருக்க? அதான் இட்லி இருக்கே?”, என்று கேட்ட படி வந்தாள் தாயம்மா.
“அவங்க தான் இன்னைக்கு பூரி கேட்டாங்க”, என்று அவன் மேல் பழி போட்டு பேச்சை முடித்து விட்டாள். பின் காலை உணவை முடித்து விட்டு சுந்தரமும் தாயம்மாவும் பாட்டி வீட்டுக்கு சென்றதும் இருவரும் சாபிட்டார்கள். மீதி இருந்த உருளை கிழங்கை பிரிட்ஜில் எடுத்து வைத்தாள்.
பின் பதினொரு மணிக்கு மதிய சமையலை ஆரம்பித்தாள் சிந்து. பன்னிரெண்டு மணிக்கு திரும்பி வந்த தாயம்மா “இன்னும் சாப்பாடு செய்யலையா? எனக்கு பசிக்குது”, என்று கேட்டாள்.
“இந்த பொம்பளை என்ன லூசா? தினமும் ஒரு மணிக்கே சாப்பாடு செஞ்சு வச்சா இரண்டு மணி மேல தான் சாப்பிடும். இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் இப்படி கேக்குது”, என்று எண்ணிக் கொண்டு “இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகும்”, என்றாள்.
ஆனால் அதுக்கு பொறுமை இல்லாமல் காலையில் சுட்ட பூரியை தட்டில் எடுத்து வைத்து கொண்டு “கிழங்கு எங்க?”, என்று கேட்டாள் தாயம்மா. 
“பிரிட்ஜ்ல வச்சிட்டேன். குளம்பு கொதிச்சிட்டு. அதை வேணா எடுத்துக்கோங்க”
“வேண்டாம் சீனி வச்சு சாப்பிடுறேன். வெண்ணி வச்சிட்டியா?”
“ஆறின வெண்ணி இருக்கு”
“அதை எப்படி குடிக்க? சூடு பண்ணு”, என்று சொன்னதும் நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சிந்து மனதில் அணிவகுத்தது.
கோபத்தோடு தண்ணியை கொதிக்க வைத்தவள் பின் அடுப்பை அணைத்து விட்டு தாயம்மாவிடம் எடுத்துக் கொடுக்காமலே அவள் அறைக்கு சென்று விட்டாள்.
கோபத்தோடு உள்ளே வந்த சிந்து, என்னவென்று விசாரித்த சித்தார்த்திடம் பொரிந்து தள்ளி விட்டாள். “உங்க வீட்ல நான் என்ன வேலைக்காரியா? உன் அம்மா காலைலே மொக்கிட்டு தான அங்க போச்சு? இப்ப பன்னிரெண்டு மணிக்கே வந்து அது இல்லையா அது இல்லையானு அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கு. வெண்ணி வைக்கணுமாம் வெண்ணி.  அதை அந்த பொம்பளை மூஞ்சுல தான் ஊத்தணும். இனி என் கையாள அந்த பொம்பளைக்கு தண்ணி கொடுக்க மாட்டேன். நேத்து வெண்ணி கொடுத்ததுக்கு முகத்தை திருப்பிட்டு போச்சு. இன்னைக்கு எந்த முகத்தோட கேக்குதாம்?”
….
“சனியன் புடிச்ச பொம்பளை. இது என்னைக்கு சாவுதோ அன்னைக்கு தான் உங்களுக்கு வாரிசு வரும் போல? ஒருவேளை முன்னாடியே பிறந்தாலும் உன் அம்மா காரியை என் பிள்ளையை தொடவே விட மாட்டேன்”
“சிந்து நீ அதிகம் பேசுற?”
“நான் அதிகம் பேசுறேனா? என்னை இப்படியே எல்லாரும் சேர்ந்து கோப படுத்தி எனக்கு மனநிம்மதி இல்லாம வச்சிருந்தா எப்படி பிள்ளை உருவாகும்? அப்படியே உருவானாலும் உங்க வீட்ல கொடுக்குற குடைச்சல்ல அது வளந்தா தான் ஆச்சர்யம்”
“மெல்ல பேசு. எல்லாருக்கும் கேக்க போகுது. கதவு திறந்து இருக்கு”
“கேட்டா கேக்கட்டும். எனக்கு என்ன பயமா? கண்ட நாய்க்கு நான் ஏன் பயப்படனும்? உங்களால வேற வீடு பாக்க முடியுமா முடியாதா? என்னால இங்க இருக்க முடியலை. டென்ஷன் ஆகி டென்ஷன் ஆகி நெஞ்சு வெடிச்சு செத்துருவேன் போல?”
“கொஞ்சம் பொறுமையா இரு சிந்து”
“பொறுமையா இருந்து நாக்கு வழிக்கவா? உங்க அம்மா அப்பா இருக்குற இந்த சுடுகாட்டுல என்னால இருக்க முடியாது. வேற வீடு பாருங்க. இல்லைன்னா என்னை எங்க வீட்ல போய்விடுங்க”
“சரி கிளம்பு”
“ரொம்ப சந்தோஷம்”, என்ற படி அனைத்தையும் எடுத்து வைக்கும் போது மேலே இருந்த ஒரு பேக் கீழே விழ அது பட்டு கப்போர்ட் வேகமாக மூட வெளியே அமர்ந்திருந்த சுந்தரம் அந்த சத்தம் கேட்டு “டேய் சித்தார்த் என்ன டா, என்ன ஆச்சு?”, என்று கேட்டார்.
“ஒண்ணும் இல்லை ப்பா”, என்று சொல்லி கொண்டே வெளியே போய் விட்டான் சித்தார்த்.
அப்போது உள்ளே வந்த சுந்தரம் “ஏமா என்ன மா ஆச்சு?”, என்று சிந்துவிடம் கோபத்தோடு கேட்டார்.
அவருக்கு பதில் சொல்ல பிடிக்க வில்லை என்றாலும் ஒரு மரியாதைக்காக “ஒண்ணும் இல்லை மாமா”, என்று பொறுமையாக தான் சொன்னாள் சிந்து. 
புருஷன் பொண்டாட்டி சண்டை என்று அவர் வாயை மூடி போயிருந்தால் விஷயம் அத்துடன் முடிந்திருக்கும்.
“என்ன ஒண்ணும் இல்லை? இல்லை என்னன்னு கேக்குறேன்.  கேட்டா பதில் சொல்ல முடியாதோ? என்னன்னு சொல்லு. என்னன்னு சொல்ல போறியா இல்லையா?”, என்று சண்டைக்கு வருவது போல் அரட்டினார்.
“என் அப்பா கூட என்னை அரட்டினது இல்லை. கண்ட நாய் எல்லாம் அரட்டுது. விட்டா அடிக்க கூட செய்வாரு போல ச்சே”, என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வந்தது. “இந்த ஆளுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?”, என்று வாயை மூடிக் கொண்டாள். 
அதன் பின்னரும் இரண்டு முறை கேட்ட அவருக்கு பதிலே சொல்லாமல் தன்னுடைய துணியை எடுத்து வைப்பதிலே கவனத்தை செலுத்தினாள். 
வெளியே சென்ற சுந்தரம் முகம் கழுவி வந்த சித்தார்த்திடம் “என்ன ஆச்சு டா?”,என்று கேட்டார்.
“தனியா போகலாம்னு இருக்கேன் பா. வேற வீடு பாக்க போறேன்”, என்றான் சித்தார்த்.
“சந்தோஸமா போயிட்டு வா. இப்ப என்ன பிரச்சனை?”
“நீங்க பாட்டி வீட்ல சாப்பிடாதது, அம்மா அங்க தண்ணி குடிக்கலைன்னு சண்டை போடுறா”
“இது நல்லா இருக்கே? அது எங்க விருப்பம்? அதை இவ எதுக்கு கேக்கணும்? வேற வீடு பாக்கணும்னா சந்தோஷமா பாத்துக்கோ டா”, என்று அவர் சொன்னதும் அறைக்குள் வந்தான். 
அதற்குள் கிளம்பி அமர்ந்திருந்தாள் சிந்து.  வெளியே போகும் போது “அவ வீட்ல விட்டுட்டு வரேன் பா”, என்று சொன்னான் சித்தார்த்.
சிந்து அவர்கள் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டாள். இனி இங்கே வரவே கூடாது என்ற முடிவோடு. ஆனால் அந்த முடிவை அவளால் செயல் படுத்த முடியுமா? 
வண்டியில் போகும் போதே ”உங்க அம்மா கிட்ட நீ பேசுனதை எல்லாம் சொல்லுவேன். எங்க அம்மாவை சாக சொன்னேன்னு சொல்லுவேன்”,என்றான் சித்தார்த்.
“சொல்லுங்க, நானும் சொல்வேன். ஏற்கனவே உங்க அம்மா அப்பா மேல எங்க அம்மாவும் கோபமா தான் இருக்காங்க. அதை விட கோபம் உங்க மேலயும் இருக்கு. எவ்வளவு ஆசையா கல்யாணம் செஞ்சு வச்சாங்க? எவ்வளவு போராடி எவ்வளவு சந்தோஷப் பட்டாங்க. நான் அவங்க கிட்ட பேசும் போதெல்லாம் அழுதுட்டு பேசுனா அவங்களுக்கு எவ்வளவு வலிக்கும்?”
“அந்த அளவுக்கு உன்னை யாரு என்ன செஞ்சிட்டா?”
“ஒண்ணும் செய்யலைப்பா, ஒண்ணுமே செய்யலை. உங்களுக்கு என்னைக்கு புரிஞ்சிருக்கு இன்னைக்கு புரியுறதுக்கு. நீங்க கடன் அடைக்க ஹெல்ப் பண்ணுறீங்க தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா என்னை சந்தோஷமா வைக்கலைன்னா அது உங்க தப்பு தான?”
“நான் வீட்ல சொல்லிட்டேன், தனியா போறோம்னு. சந்தோஷமா போங்கன்னு சொல்லிட்டார்”
“பெத்த மகன் வேற வீட்டுக்கு போனா, எதுக்கு டா என்ன ஆச்சு? பேசி சரி செய்யலாம்னு தான் அம்மா அப்பா சொல்லுவாங்க. சந்தோஷமா போங்கன்னு விரட்டி விடுற மாதிரி சொல்ற உங்க அம்மா அப்பா உங்களுக்கு உசத்தி தான”, என்று நக்கலாக கேட்டாள் சிந்து. 
“அவங்களை விடு. அவங்க எப்படியும் நினைக்காங்க. நாம தனியா போயிரலாம். சரி ரெண்டு நாள்ல திரும்பி வந்துருவ தான?”
“நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன். வேற வீடு பாருங்க. அப்படி இல்லைன்னா நான் இங்க தான் இருப்பேன். உங்களுக்கு நான் வேணும்னா என் கூட வந்து இருங்க. உங்க வீட்ல விட எங்க வீட்ல உங்களை நல்லா தான் பாத்துக்குவாங்க”, என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டாள்.
அவளை விட்டு விட்டு சித்தார்த் கிளம்பியதும் மேலோட்டமாக ராணியிடம் சொல்லி விட்டாள். 
அழுது கொண்டிருக்கும் மகளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள். கிளம்பி போன சித்தார்த்துகோ வீட்டுக்கு போக மனதில்லை. அவன் மனம் முழுவதும் சிந்துவே இருந்தாள். 
அவனும் குவாட்ரஸ்க்கு கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். “கொஞ்சம் பொறுங்க பொறுங்க”, என்று அவனை காக்க வைக்கிறார்கள். 
“வாடகை வீடுன்னா மாசம் பட்ஜட் இடிக்கும். அதுக்கும் மேல அம்மா அப்பா வை நாம  தான பாக்கணும். அவங்களை தனியா விட்டுட்டு போனா எப்படி? அவங்க குணமே அப்படி தான். எனக்கு அது பழகிருச்சு. இது சிந்துக்கு புதுசா இருக்கு. ஏன் இப்படி பண்ணுறீங்கன்னு கேட்டால் நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ ன்னு சொல்லுவாங்க. போய்ற வேண்டியது தான். காலைல தனியா போறோம்னு சொன்னதுக்கு உண்மைலே பாசம் இருந்தா எதுக்கு பா போற? என்ன பிரச்சனைன்னு கேட்டு தடுக்க பாத்திருப்பாங்க?”, என்று எண்ணி நிம்மதியை இழந்தான். 

Advertisement