Advertisement

இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி. 
“அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?”
“இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா இறந்ததுக்கும் இப்படி தான் செஞ்சாங்க. இப்ப சாமி கும்பிடுற இடத்துல கொடுக்குறதைக் கூட மாமா சாப்பிட மாட்டார். தாத்தா இறந்ததுக்கு நான் சாப்பிட்டேன்னு சொல்லி உனக்கு திங்குறதுக்கு வேற ஒண்ணும் இல்லையோன்னு என்னை ஒரே திட்டு. நான் உங்க மச்சான் கிட்ட சொல்லி அழுதேன். நீ அதைக் கண்டுக்காதன்னு சொன்னாங்க. அவங்களும் சாப்பிட்டாங்க. ஆனா சித்தார்த் சாப்பிடலை”
“அவங்க அப்பா அம்மா தானேக்கா இறந்தது? எதுக்கு யாரோ மாதிரி நினைக்கணும்? புரியாத புதிரா இருக்காங்கக்கா”
“எனக்கு பழகிருச்சு சிந்து. உனக்கும் பழகிரும்”, என்று அவளுக்கு
சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தாள் மாரி. 
ஆனால் எந்த சமாதானமும் சிந்துவிடம் வேலை செய்ய வில்லை. மனதில் ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கு சென்றதும் அப்போது வந்த சித்தார்த் “வீட்டுக்கு போவோமா சிந்து?”, என்று கேட்டான்.
அவனிடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருந்தாலும் “சாமி கும்பிட தான் மாரியக்கா கூட்டிட்டு வந்தாங்க. கும்பிடலையா?”, என்று கேட்டாள் சிந்து. 
“அதெல்லாம் எங்க அப்பா பாத்துக்குவாங்க. நாம இங்க இருக்க வேண்டாம் வா. இப்ப தான் அம்மாவை வீட்ல விட்டுட்டு வரேன்”
“உங்க அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு?”,என்று நக்கலாக ஆனால் அதே நேரம் நக்கலே இல்லாத குரலில் கேட்டாள். 
“நல்லா தான் இருக்காங்க, ஏன் கேக்குற?”
“சும்மா தான்,சரி நைட்டுக்கு சமைக்கணுமா? இல்ல எல்லாருக்கும் உங்க பாட்டி வீட்ல சாப்பாடா? எங்க தாத்தா ஆச்சி இறந்ததுக்கு நாங்க ஒரு வீட்ல தான் சாப்பிட்டோம்”
“அங்க எல்லாம் சாப்பிட மாட்டோம். நம்ம வீட்ல தான் சாப்பிடணும். கஞ்சி வச்சு துவையல் அறைச்சிரு”
வீட்டுக்கு வந்த போது திடகாத்திரமாக  டி‌வி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த தாயம்மாவைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது சிந்துவுக்கு. 
மன அழுத்தம் தாங்க முடியாமல் “நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் கொஞ்ச நேரம் மாடில இருக்கேன்”,என்று சித்தார்த்திடம் சொல்லி விட்டு சென்று விட்டாள் சிந்து.
அன்று எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சித்தார்த்திடம் சொல்லி விட்டாள் சிந்து. “எனக்கும் பசிக்கல சிந்து. ஒரு காபி குடிப்போமோ?”, என்று கேட்டதும் இருவருக்கும் இஞ்சி டீ போட்டாள். அது வரை நன்றாக தான் இருந்தது. 
மொட்டை போட்டு வந்த சுந்தரம், பாஸ்கர், தாயம்மா மூவரும் பேசிக் கொண்டிருப்பது சமையல் ரூமில் இருந்த சிந்துவுக்கும் சித்தார்த்துக்கும் தெளிவாக கேட்டது.
“எவ்வளவு செலவு ஆச்சு? கணக்கு எழுதி வச்சிருக்கீங்களா? நாளைக்கு எல்லா செலவையும் நம்ம தலைல கட்டிறக் கூடாது. உங்க ரென்று தம்பிகளும் என்ன சொன்னாங்க?”, என்று தாயம்மா விசாரிக்க அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் சுந்தரம்.
“இந்த நேரத்துலயும் இந்த பொம்பளை பணத்தைப் பத்தி தான் பேசனுமா? அது தான் முன்னாடியே சொல்லிட்டாங்களே. பாட்டியோட பணத்துல இருந்து தான் செலவு செய்ராங்கன்னு”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள் சிந்து. 
ஆனால் அப்போது தாயம்மா கேட்ட கேள்வி சிந்துவை மீண்டும் சொறிந்து விட்டது. “சிந்து வீட்ல இருந்து வந்தவங்க எத்தனை மணிக்கு போனாங்க? தூக்குறதுக்கு முன்னாடியே போய்ட்டாங்களோ?”,.என்று குறை சொல்வது போல கேட்டதும் சித்தார்த்தை முறைத்தாள் சிந்து.
“அவங்க இப்ப தான் மா போனாங்க”, என்று சொன்னான் சித்தார்த். 
அறைக்குள் நுழைந்ததும் “உங்க அம்மா சீன் போட்டு வந்தது எல்லாம் பெருசு இல்லை. எங்க வீட்ல உள்ளவங்க எப்ப வந்தாங்க போனாங்கன்னு குறை சொல்றது தான் முக்கியமோ?”, என்று ஆரம்பித்தாள.
“அதான் நான் பதில் சொல்லிட்டேன்ல சிந்து”
“பதில் சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சிருச்சா? உங்க அம்மாவை பாத்தா எனக்கு அருவருப்பா இருக்கு”
“சிந்து, வார்த்தையை அளந்து பேசு”
“என்ன கத்துறீங்க? இந்த மாதிரி கேடு கேட்ட பொம்பளையை நான் பாத்ததே இல்லை. சி அசிங்கம் புடிச்சவ. என்ன மாதிரி நடிச்சிருக்கா”
“சிந்து மரியாதை இல்லாம பேசாத”
“மரியாதையா இந்த நாய்க்கா? சனியன், ஏழரை நாட்டு சனியன். என்னைக்கு இது மூஞ்சுல முழிச்சேனோ அன்னைல இருந்து எனக்கு கேடு காலம் தான்”
“அவங்க என்ன செஞ்சாங்க?”
“என்ன செஞ்சாங்களா? உன் அம்மா காரி என்ன நடிப்பு நடிச்சா தெரியுமா? நான் கையை சுட்டு வெண்ணி குடுத்தா ஒத்த சொட்டு குடிக்கல”
“அவங்க குடிக்க மாட்டாங்க சிந்து”
“அவ குடிச்சா குடிக்கா. குடிக்காம இருக்கா. என்னோட கேள்வி அது இல்லை. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நாளைக்கு உங்க அம்மாவும் அப்பாவும் நடு வீட்ல செத்து கிடந்தா அந்த வீட்ல நானும் பச்ச தண்ணி கூட குடிக்க கூடாது அப்படி தானே? ஏன்னா அது செத்த வீடாச்சே”
“சிந்து”
“அரட்டாதீங்க? இந்த அரட்டல் உருட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம். என்ன பொறுத்த வரைக்கும் தப்புன்னா தப்பு தான். அன்புக்கு மட்டும் தான் இந்த சிந்து கட்டுப் படுவா. அதை விட்டுட்டு என்கிட்ட அதிகாரத்தைக் காட்டுனா நான் சும்மா இருக்க மாட்டேன்”
…. 
“மாரியக்கா ஹாசினியை பாட்டி காலை தொட்டு கும்பிடுன்னு சொல்றாங்க. உங்க அம்மா தடுக்குறாங்க. அது அந்த பிள்ளை பயந்துரக் கூடாதுன்னு செஞ்சா சரின்னு சொல்லுவேன். ஆனா அந்த பாட்டியை இவங்களுக்கு பிடிக்காதுங்குற காரணத்துனால சொன்னதை என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியலை. நாளைக்கு உங்க அம்மா செத்து கிடந்தா என் பிள்ளையை தொடாதேன்னு தான் சொல்லுவேன்”
“சிந்து கோப படாத. பொறுமையா இரு மா”,என்று சொல்லி அவள் கையைப் பற்றினான்.
“என்னை தொடாதீங்க”, என்று கத்தியவள் “உங்க பாட்டியை கும்பிட்ட இடத்துல உங்க அப்பா எதையுமே சாப்பிட மாட்டாராமே? மாரியக்கா சாப்பிட்டதுக்கே முன்னாடி திட்டினாங்கலாமே”
“இப்ப அவ தான் உன்னை ஏத்தி விட்டுருக்காளா?”
“அவங்களை எதுக்கு குறை சொல்றீங்க? உண்மையை தானே சொல்றாங்க. அன்னைக்கு உங்க அண்ணன் கூட சொன்னாங்க”
“அவனும் அவளும் தான் உன்னை ஏத்தி விடுறாங்க. அதுக்கு நீ இங்க வந்து ஆடுற?”
“நான் ஆடுறேனா? உண்மையை சொன்னா அப்படி தானே உங்களுக்கு இருக்கும்”
“அவங்க சொல்றதை கேக்காத சிந்து. நாம சண்டை போடணும்னு ஏத்தி விடுவாங்க. முதல்ல நாளைக்கு என் அண்ணன் காரனுக்கு இருக்கு. அவன் எதுக்கு என் பொண்டாடிட்ட பேசுறான்?”
“அடுத்தவங்க சொல்லிக் கொடுக்குறதைக் கேட்டுட்டு ஆடுறதுக்கு நான் ஒண்ணும் குழந்தை கிடையாது. எல்லாததையும் பண்ணுற உங்க அப்பனும் ஆத்தாலும் நல்லவங்க. அதை எடுத்து சொல்ற உங்க அண்ணன் கெட்டவங்களா? தேவை இல்லாம அவங்கள பத்தி பேசாதீங்க, சொல்லிட்டேன்”
“அவனை சொன்னா உனக்கு ஏன் எரியுது?”,என்று  அவசரப் பட்டு வார்த்தையை விட்டான் சித்தார்த்.
அந்த வார்த்தையில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்த சிந்து “அடச்சி வாயை மூடு. நீ சொல்றதுக்கு என்ன அர்த்தமெல்லாம் வரும்னு தெரியுமா?”,என்று கேட்டாள்.
“சிந்து நான் அப்படி சொல்லலை.கோபத்துல சொல்லிட்டேன்”
“வாயை மூடு. உன் கூட போய் இத்தனை நாள் வாழ்ந்துருக்கேன்னு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு. நீ யோக்கியமா இருந்தா உன் அண்ணன் காரன் எதுக்கு என்கிட்ட வந்து பேச போறான்? அவன் மாமியார் பேரை சொல்லி நீ கிண்டல் செய்ய போய் தானே உன் புருஷனை கண்டிச்சு வைன்னு சொன்னான். நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன் அவன் கிட்ட பேச போறேன். கடைசில உன் அம்மாவுக்கு பிள்ளைன்னு நிரூபிச்சிட்டல்ல? ஒரு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்ததுக்கே சந்தேகப் பட்டுக் கேட்ட அப்பனுக்கு பொறந்தவன் தானே நீ? நீ வேற எப்படி இருப்ப? இனி நீ எனக்கு வேண்டாம். உனக்கு உன் அப்பனும் ஆத்தாலும் தான் முக்கியம். அவங்க கூட இருந்து சாவு. என்னை வேண்டாம்னு சொல்லி எங்க வீட்ல வீட்டுரு. நமக்கு கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசம் ஆக போகுது. இது வரை பிள்ளை இல்லைன்னு சொல்லி என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேற பொண்ணை கட்டிக்கோ”, என்று சிந்துவும் வாயை விட்டு விட்டாள்.
டைவர்ஸ் என்ற வார்த்தை இருவருக்குமே அதிர்ச்சி தான். சொல்ல வேண்டும் என்று அவளும் நினைக்க வில்லை. அப்படி சொல்வாள் என்று அவனும் நினைக்க வில்லை. 
சிந்து என்று ஏதோ சொல்லி சமாதான படுத்த வந்தான். “என்னை எதுவும் பேச வைக்காத. உன் அம்மா காரி ஊரெல்லாம் சுத்திட்டு வருவா. அப்பா எல்லாம் கால் வலிக்காது. வீட்ல ஒரு துரும்பை கூட நகர்த்த மாட்டா, ஏன்னா அப்ப கால் வலி வந்துரும். உன் அம்மாகாரிக்கு ஏத்தவன் தான் உன் அப்பன். உன் அப்பனுக்கு எல்லாம் பேர் ஜால்ட்ரான்னு வைக்கணும். அவனுக்கும் ஒரு சேலையை வாங்கி கொடு கட்டிக்கட்டும். பொண்டாட்டி தப்பு செஞ்சா திருத்தனும் அவன் ஆம்பிள்ளை. எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிட்டு அடுத்தவங்களை அதிகாரம் பண்ணிட்டு இருந்தா அவன் ஆம்பளையா? பெத்த அம்மா சாக கிடக்கும் போது பொண்டாட்டி பேச்சைக் கேட்டு பாக்க போகாம இருந்தவன் தானே அவன்?”
“அடுத்தவங்களால தான் நமக்குள்ள சண்டை வருது சிந்து. விடு மா”
“விடணுமா? விடுற மாதிரியா நீ பேசின? உன் அண்ணனை சொன்னா எரியுதோன்னு கேக்குற? கண்டவனைப் பத்தி சொன்னா எனக்கு எதுக்கு எரியனும்? யார் மேல தப்பு இருக்குன்னு உனக்கு இன்னும் புரியலைல்ல?”
“புரியுது சிந்து.நீ தான் மா எனக்கு முக்கியம். கோபத்துல சொல்லிட்டேன். சாரி”
“நான் முக்கியமா? எவ்வளவு பெரிய பொய்? நான் அந்த ரூம் பாத்ரூம் சரி பண்ண சொன்னேன் பண்ணுனியா? எனக்காக என்ன செஞ்சிருக்க?”
“அந்த பாத்ரூம் சரி பண்ண முடியாது மா. பைப் கனேக்சன் கொடுக்கணும்னா சுவர் இடிச்சிட்டு தான் கட்டணும்?”
“அப்ப என்ன டேஸுக்கு அந்த பாத்ரூம் கட்டணும்? சரி உடனே குவாட்ரஸ் கேளுன்னு சொன்னேன் கேட்டியா?”
“கேட்டேன் சிந்து கிடைக்கலை”
“அது கிடைக்கலைன்னா வேற வீடு பாக்க வேண்டியது தானே? பாத்தியா? பொண்டாட்டிக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ய தெரியலை. நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளை? உனக்கு அம்மா அப்பா தான் வேணும்னா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணுண? நான் கல்யாணம் ஆகலைன்னு ஒரு கவலையோட கடைசி வரை வாழ்ந்துருப்பேன். இல்லைன்னா இதை விட வேற நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கலாம். இங்க வந்து வேலைக்காரியா ஆனது இல்லாம, நிம்மதி இல்லாம ச்சே என்ன வாழ்க்கை?”
 
அடுத்து சிந்து பேச பேச சித்தார்த் எதுவும் பதில் சொல்ல வில்லை. இப்போதைக்கு அவளை சமாதான படுத்துவதும் கஷ்டம் என்று புரிந்தது.
கத்து கத்து என்று கத்தி தீர்த்தவள் பின் அழுது அப்படியே தூங்கி போனாள். உறக்கம் வராமல் எதையோ யோசித்த படியே படுத்திருந்தான் சித்தார்த். 
காதல் தொடரும்….

Advertisement