Advertisement

அத்தியாயம் 15
அழகான உன் பிறை
முகம் கண்டு
என்னுள் மலர்கிறது
பலவண்ண மலர்கள்!!!
பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான். 
அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும் மௌனம் தொடர்ந்தது. 
இறங்கும் போது “இனி யாருக்கும் பட்ட பேர் வச்சு கூப்பிட மாட்டேன் போதுமா? பிளீஸ் டி. சிரி”, என்றான் சித்தார்த்.
“சொன்னதை செய்றீங்களான்னு பாப்போம்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே கால் எடுத்து வைத்த சிந்துவை “அங்கே நில்லு மா“, என்ற சுந்தரத்தின் குரல் தேக்கியது.
“என்னப்பா?”, என்று கேட்டான் சித்தார்த்.
“அங்க போயிட்டு வந்துருக்கீங்க. காலை கழுவிட்டு உள்ள வாங்க”, என்ற சுந்தர்த்தை பார்த்து சிந்துவுக்கு வெறுப்பு தான் வந்தது. 
ஹாஸ்பிட்டல் போய்விட்டு வந்திருப்பதால் குளிங்க என்று சொன்னால் அது நியாயம். ஆனால் அந்த பாட்டியைப் பார்த்து விட்டு வந்ததால் காலை கழுவ சொன்னது அசிங்கமாக பட்டது.
கால் கழுவும் போது எரிச்சலாக வந்தது சிந்துவுக்கு. அடுத்த நாள் இரவு, எதற்கோ ஹாசினியை சித்தார்த் பழைய படி ஓச்சம்மா என்று அழைக்க சிந்து மறுபடியும் சண்டையை ஆரம்பித்தாள்.
இவர்கள் சண்டை அவர்களின் அறைக்குள்ளே தான் இருக்கும். அதுவும் இரவு தான் இருக்கும். அதனால் வேறு யாருக்கும் தெரியாது.
“நீங்க என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டீங்களா?. உங்க ரத்தம் அப்படி. எப்படி திருந்துவீங்க? அவ்வளவு சொல்லிருக்கேன்? என் பேச்சு உங்க காதுல ஏறலைல? எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. என்னை எங்க வீட்ல கூட்டிட்டு போய் விடுங்க”, என்றாள் சிந்து. 
அவன் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவள் மலை இறங்கவே இல்லை. “மனசளவுல நான் ரொம்ப நொந்து போயிருக்கேன். எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். எங்க வீட்ல போய் விடுங்க. நான் ஒரு ரெண்டு நாள்ல வரேன்”, என்று சிந்து சொன்னதும் அவன் சரி என்றான். 
அடுத்த நாள் காலையில் சித்தார்த்துடன் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள். அவளை அவள் வீட்டில் விட்டு விட்டு சித்தார்த் வேலைக்கு சென்றான். 
ஆனால் அவளை ஒரு மணிக்கு அழைத்த சித்தார்த் “கிளம்பி இரு சிந்து. மாலையை கழட்டிட்டு வந்துருவோம். பாட்டியை நைட் வீட்டுக்கு கூட்டிட்டு போறங்கலாம். அதுக்குள்ளே கழட்ட சொல்லிட்டாரு அப்பா”
“எங்க அம்மாவும் அதை தான் சொன்னாங்க. ஆனா எப்படி பழனி போக முடியும்?”
“எங்க அப்பா குறுக்குதுரை கோயில்ல கழட்ட சொன்னாரு. நாம திருச்செந்தூர்ல கழட்டிரலாம். ஆனா கஷ்டமா இருக்கு”
“சரி போகலாம். எதுக்கு கஷ்ட படணும்? அதான் இருபத்தியொரு நாள் ஆகிருச்சே. கெட்டது நடந்த அப்புறம் கழட்டுறதுக்கு முன்னாடியே செய்யலாம். நீங்க எப்ப கம்பெனில இருந்து கிளம்புறீங்க? வீட்டுக்கு போயிட்டா வருவீங்க?”
“நான் கம்பெனில இருந்து அப்பவே வீட்டுக்கு வந்துட்டேன். வீட்ல டிரஸ் எடுத்து வச்சிட்டு இருக்கேன்.
“கம்பெனில இருந்து உங்க ஊருக்கு போயிருக்கீங்க? ஆனா என்கிட்ட சொல்லலை. இதையே நான் பண்ணிருந்தா, சும்மா இருப்பீங்களா? உங்களை நீங்களே மாத்திக்க பாருங்க. இல்லைன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம் தான். சரி கிளம்பி வாங்க”, என்று சொல்லி வைத்து விட்டாள். 
அன்று மாலை ஆறு மணிக்கு திருச்செந்தூரில் மாலையை கழட்டி விட்டான் சித்தார்த். ஒழுங்கான விரதத்தை கடவுளுக்கு செலுத்த வில்லையே என்று எண்ணி அவன் கண்களில் கண்ணீர் வந்தது. 
“இன்னும் அஞ்சாறு வருஷம் கழிச்சு உங்க மகன் கூட மாலையை போட்டு காணிக்கை செலுத்துங்க” என்று சொல்லி அவனை சமாதான படுத்தினாள். 
மதியம் நான்கு மணிக்கு கிளம்பியவர்கள் திரும்பி வரும் போது பத்து மணி ஆகி இருந்தது. அதனால் சிந்து வீட்டில் தங்கி விட்டு காலையில் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் போன் செய்த சித்தர்த்தின் அப்பா “என்ன இன்னும் வீட்டுக்கு வரலை. உன்னை யாரு திருச்செந்தூர் போக சொன்னா? ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேருங்க”, என்று குதித்தார்.
“இந்த நேரத்துல அவ்வளவு தூரம் பைக்ல வர முடியாதுப்பா. கடைசி பஸ்சும் போயிருக்கும். காலைல வரோம். பாட்டியை கூட்டிட்டு வந்தாச்சா?”, என்று கேட்டான் சித்தார்த். 
“நாளைக்கு தான் கூட்டிட்டு வரணும்”, என்று சொல்லி வைத்து விட்டார். 
அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்து வேலைக்கு கிளம்பி சென்று விட்டான். அன்று மாலை பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். சித்தார்த்தின் அத்தைக்கு சிந்து தான் சாப்பாடு கொடுத்து விட்டாள்.  கால் உயிரில் இருந்த பாட்டியை அனைவரும் வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.
அன்று மாலை வேலை முடிந்து வந்த சித்தார்த்தும், அனைவரும் சேர்ந்து பால் ஊத்தினார்கள். அப்போதும் உயிர் பிரிய வில்லை. 
அடுத்த நாள் காலை சித்தார்த் வேலைக்கு சென்று விட்டான். தாயம்மாவும் சுந்தரமும் தாயம்மாவின் சளிப் பிரச்சனைக்கு பார்க்க  ஹாஸ்பிட்டலுக்கு சென்றார்கள். மதியம் பன்னிரெண்டு மணிக்கு பாஸ்கரிடம் அவனின் அத்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டாள் சிந்து.
அடுத்த ஒரு மணி நேரத்தில் “பாட்டி இறந்துருச்சாம் சிந்து”, என்று போனில் தகவல் சொன்னான் சித்தார்த்.
“இப்ப தான் உங்க அத்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டேன், உங்க அண்ணன் இப்ப தான் அங்க போனாங்க, அவங்க தான் உங்களுக்கு தகவல் சொன்னாங்களா?”
“இல்லை அவன் எங்க அப்பாக்கு சொல்லி, எங்க அப்பா எனக்கு சொன்னாரு. அவங்க ஹஸ்பிட்டல்ல இருந்து கிளம்பிட்டாங்கலாம்”
“நீங்க எப்ப வறீங்க?”
“அரை மணி நேரத்துல வரேன், நீ கிளம்பி இரு”, என்று சொல்லி வைத்து விட்டான். 
இவன் வந்ததும், இருவரும் சென்றார்கள். அடுத்த நாள் திருக்கார்த்திகை என்பதால் இன்றே அடக்கம் என்று முடிவெடுக்க பட்டது. ராணிக்கு போன் செய்து சித்தார்த் விஷயத்தை சொல்லி விட்டான்.
அங்கே போன மாதம் வரை துருதுருவென்று ஒவ்வொரு வீட்டிலும் கதை பேசிய படி வரும் பாட்டி சடலமாக கிடத்தி வைக்க பட்டிருந்தாள். உள்ள சென்ற சிந்து காலை தொட்டு வணங்கி அங்கிருந்த மாரி அருகில்  பாட்டியின் கால் அருகே அமர்ந்து விட்டாள்.
அப்போது அங்கு வந்த தாயம்மா “எதுக்கு ரெண்டு பேரும் இங்க உக்காந்துருக்கீங்க? அங்க உக்காருங்க”, என்று தள்ளி உக்கார சொல்லி விட்டாள். 
“இந்த பாட்டி நல்லவங்களா கெட்டவங்களானு தெரியாது.ஆனா மருமக இப்படி அமஞ்சிருக்க வேண்டாம்”,என்று எண்ணிக் கொண்டாள் சிந்து. 
மாலை நான்கு மணிக்கு ஸ்கூல் முடிந்து வந்த ஹாஷினி சிந்து மடியில் வந்து அமர்ந்தாள்.
“பூட்டி ஆச்சி காலை தொட்டுக் கும்பிட்டு வா”, என்றாள் மாரி.
சிந்துவும் அவளை போக சொன்னாள். ஆனால் அங்கிருந்த தாயம்மா தரதரவென்று ஹாசினியை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு “அங்க எல்லாம் போக வேண்டாம். பேசாம இரு”, என்றாள்.
“நாளைக்கு இதுக்கு இந்த நிலைமை தான், இது செத்து கிடந்தா நானும் இப்படி தான் உங்க ஆச்சியை தொடதேன்னு சொல்லுவேன்”, என்று மாரி சிந்துவின் காதில் சொன்னதும் “இவங்க இப்படி பண்ணுனா அப்படி தான் அக்கா சொல்ல முடியும். ரொம்ப
படுத்துறாங்கக்கா. அன்னைக்கு இந்த பாட்டியை பாத்துட்டு வந்ததுக்கு காலை கழுவிட்டு தான் உள்ள வர சொன்னார். பாட்டியை தொடக் கூடாதுன்னும் சொன்னாங்க”, என்றாள் சிந்து.
“இவங்க குணமே இப்படி தான் சிந்து. நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை தான்னு நினைக்கல பாரேன்? இவங்க அப்படி கிடந்தா நாம எப்படி அவங்களை தொட தோணும்? இவங்க மகளா வந்து நாளைக்கு இவங்களைப் பாப்பா? நாம தான் பாக்கணும்?”
“கால் ஓடிஞ்சு கிடந்ததுக்கே வந்து இவங்க மக பாக்கல? கடைசி காலத்துலயா பாக்க போறாங்க? அவங்க எல்லாம் போன்ல அஞ்சு நிமிஷம் பாசமா பேசுனா அவங்க பெருசு. நாம இடுப்பு ஓடிஞ்சு வேலை செஞ்சு அம்மா அப்பா மாதிரி பாத்துக்கிட்டா அது எல்லாம் இவங்க மதிக்கவே மாட்டாங்க அக்கா”
“இவங்க ஆச்சி தான் செத்துருக்கு. ஏதாவது பீலிங்க்ஸ் இருக்கான்னு பாரு”, என்று சொக்காரிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிந்து வீட்டில் இருந்து ராணி சுந்தரம் அமுதா மூவரும் வந்தார்கள். 
அடுத்து கொஞ்ச நேரத்தில் தான் பெரிய டிராமா ஆரம்பித்தது. அதில் மொத்தமாக சிந்து புகுந்த வீட்டை வெறுத்து விட்டாள்.
அவ்வளவு நேரம் சாதாரணமாக கதை பேசிக் கொண்டிருந்த தாயம்மா அருகில் ஒரு பெண் அமர்ந்தாள். அந்த பாட்டிக்கு தம்பி மகள் தான் அந்த பெண் என்று சிறிது நேரத்தில் புரிந்தது.
தாயம்மாவும் அந்த பெண்ணும் நன்றாக தான் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் தாயம்மா. அதைப் பார்த்து “இப்படியா நடிக்கணும்?”, என்று எண்ணி சிந்துவுக்கு சிரிப்பு தான் வந்தது. 
ஆனால் அடுத்த இரண்டு நிமிடத்தில் “ஐயையோ, என்ன ஆச்சு? என்று பதட்டமான குரல் கேட்டு திரும்பி பார்த்தார்கள் மாரியும் சிந்துவும்.
அங்கே ஏங்கி ஏங்கி இளைப்பு வந்தது போல நடித்துக் கொண்டிருந்தாள் தாயம்மா. அவளை சில பெண்கள் சூழ்ந்திருந்து பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
“வெண்ணி இருக்கா? இவங்களுக்கு முன்னாடியே இந்த பிரச்சனை இருக்கு போல?”, என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரல் கொடுக்க ராணியும் சிந்துவும் தான் பாட்டி வீட்டில் இருந்த கேஸ் அடுப்பில் சிறிது வெண்ணியை வைத்தார்கள். அதற்குள் தாயம்மாவை வீட்டுக்கு வெளியே அழைத்து சென்றார்கள்.  
சூடான சட்டியைப் பிடித்து கையில் சுட்டு வெது வெதுப்பான நீரைக் கொண்டு போய் “அத்தை இதை குடிங்க, என்று தாயம்மா வாயில் வைத்தாள் சிந்து. 
பேசவே முடியாதது போல தலையை திருப்பிய தாயம்மா ஒரு சொட்டு கூட குடிக்க வில்லை. மறுபடி மறுபடி கொடுத்தாள். அப்போது பின்னால் இருந்து சிந்துவை அழைத்த மாரி “அவங்க குடிக்க மாட்டாங்க விடு சிந்து”,என்றாள்.
“ஏன்கா?”, என்று குழப்பமாக கேட்டாள் சிந்து. 
“அவங்க செத்த வீட்ல ஒண்ணுமே சாப்பிட மாட்டாங்க”
அது சிந்துவுக்கு தெரியும். ஏன் சித்தார்த்தே சடங்கு வீட்டிலும் இறந்த வீட்டிலும் சாப்பிட மாட்டான். சிந்துவின் தாத்தா சாவுக்கு வந்த போது கூட சித்தார்த் வீட்டினர் யாரும் அங்கு சாப்பிட வில்லை. 
ஆனால் சித்தார்த் “அடுத்த வீட்ல சாவு விழுந்தா தான் சாப்பிட கூடாது. அவங்க போனா போகட்டும். நாம சாப்பிடலாம்”, என்று சாப்பிட்டான். அப்போது சித்தார்த்தை பெருமையாக நினைத்தாள் சிந்து. மூன்றாவது நாள் விஷேசத்துக்கும் சித்தார்த்தின் அப்பா அங்கு சாப்பிட வில்லை. இவர்களும் அன்று சண்டை வந்ததால் சாப்பிட வில்லை. அதை இப்போது நினைத்துப் பார்த்தாள். 
பின்னும் குழப்பம் நீங்காமல் “அக்கா எனக்கு புரியலை, இவங்க இறந்த வீட்ல சாப்பிட மாட்டாங்க தான். ஆனா இது அடுத்த வீடு இல்லையேக்கா. சொந்த மாமியார் வீடு தானே க்கா?”, என்று கேட்டாள். 
“அவங்க இப்படி தான் சிந்து, விடு. அவங்களைப் பொறுத்த வரைக்கும் இது மாமியார் வீடு இல்லை. செத்த வீடு தான்”, என்றாள் மாரி.
அதன் பின் மனம் வெறுத்து போனது. ஆறு மணிக்கு தான் பாட்டியை நல்லடக்கம் செய்தார்கள். சித்தார்த் பாஸ்கர் கல்லறைக்கு சென்றதால் சிந்து, மாரியோடு வீட்டுக்கு வந்தாள்.
வீடு பூட்டி இருந்தது. “எங்க அத்தையை காணும். வீட்டுக்கு வந்ததா தான சொன்னாங்க?”, என்று கேட்டாள் மாரி.
“ஆமாக்கா, ஆனா இங்க காணும். அங்கயே யார் வீட்லயும் இருக்காங்களோ? என்னவோ? இப்ப சாவி இல்லையே? என்ன செய்ய தெரியலைக்கா”
“சரி நீ எங்க வீட்டுக்கு வா. குளிச்சிட்டு என் நைட்டியை போட்டுக்கோ”,என்று சொல்லி அழைத்து சென்றாள். 

Advertisement