Advertisement

“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண வேண்டாமே”, என்று சிந்து சொன்னதும் அது நியாயமாக பட்டதால் தாயம்மாவை பார்க்க சென்றான்.
“அம்மா, இந்த பண்டத்தை எல்லாம் பக்கத்து வீட்ல, எதுத்த வீட்ல, அப்புறம் தெரிஞ்சவங்களுக்குன்னு கொடுத்து காலி பண்ணலாம்ல? வேஸ்டா போக போகுது”, என்றான் சித்தார்த்.
“இனி ராணி கிட்ட சொல்லிறேன். இந்த வீட்டுக்கு எதுவுமே கொண்டு வர வேண்டாம்னு. நீங்க தனியா போன அப்புறம் உங்களுக்கு செய்யட்டும்”,என்று முகத்தில் அடித்தது போல பேசினாள் தாயம்மா.
அதிர்ச்சியில் திகைத்து விழித்த சித்தார்த் கண்களே கலங்கி விட்டது. “நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுறீங்க? வேஸ்டா ஆக கூடாதுன்னு சொன்னது தப்பா?”, என்று கேட்டான் சித்தார்த்.
“யார் மேலயும் தப்பு இல்லை. நான் இங்க இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் வேற எங்கயாவது போறேன். இல்லைன்னா அநாதை ஆஸ்ரமத்துக்கு போறேன்”, என்று கோபத்தில் சொன்னாள் தாயம்மா.
இதற்கு பின் அவளிடம் பேசி பயன் இல்லை என்று உணர்ந்த சித்தார்த் சிந்துவிடம் தாயம்மா பேசியதை சொன்னான்.
“உங்க அம்மா இப்படி தான் இருக்காங்க. வேணும்னு பண்ணுறாங்க. சரி விடுங்க. காலைல சீக்கிரம் கிளம்பனும் படுங்க”, என்று சொல்லி அவனை சமாதான படுத்தினாள். 
அடுத்த நாள் ஐந்து மணிக்கே இருவரும் கிளம்பினார்கள். 
சுந்தரம் பால் வாங்க சென்று விட்டார். தாயம்மா உறங்கி கொண்டிருந்தாள். 
அவளிடம் சொல்ல கூட தோன்றாமல் இருவரும் கிளம்பி விட்டார்கள். போகும் வழியில் சுந்தரத்தை பார்த்ததும் வண்டியை நிறுத்தியவன் “போயிட்டு வரோம் பா”, என்றான். சிந்துவும் “போய்ட்டு வரோம் மாமா”, என்றாள்.
“சரி நல்ல படியா போயிட்டு வாங்க”, என்று சுந்தரம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
ஆனால் அவரோ நடு ரோட்டில் விடிந்தும் விடியாத அந்த வேளையில் “நீ நேத்து அம்மாவை என்ன சொல்லி திட்டுன?”, என்று கேட்டு அதட்டினார்.
சிந்துவுக்கு எரிச்சலாக இருந்தது. போகும் போது நல்ல வார்த்தை சொல்லாம என்ன ஜென்மங்க இவங்க என்று கடுப்பாக இருந்தது.
“நான் ஒண்ணும் சொல்லலை. வேஸ்ட் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்”
“வேற என்ன சொன்ன? அவ கவலை படுறா. இனி இப்படி பேசாத. அவங்க வீட்ல செய்றது கடமை”, என்று சம்பந்தமே இல்லாமல் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
அதற்கு மேல் அவரிடம் பேச விருப்ப மில்லாமல் “கிளம்புறோம்”, என்று சொல்லி வண்டியை கிளப்பி விட்டான். 
“நான் என்ன சொன்னாலும் உங்க அம்மாவுக்கே சப்போர்ட் பண்ணுவீங்க. இப்ப பாத்தீங்களா? உங்களை பத்தி எப்படி போட்டு கொடுத்துருக்குன்னு”, என்று கேட்டாள் சிந்து.
“ஹிம், ஒண்ணுமே சொல்லாததுக்கு எப்படி பேசுறாங்க. கஷ்டமா இருக்கு சிந்து”
“சரி விடுங்க, போற நேரத்துல நல்ல படியா போயிட்டு வாங்கன்னு சொல்லி இருந்தா நல்லா இருக்கும். அப்புறம் உங்க அம்மா வேணும்னு தான் சண்டை இழுத்துருக்காங்க. இந்த வீட்டை விட்டு எல்லாம் போக மாட்டாங்க. முன்னாடி ஒரு தடவை இந்த வீட்ல மாரியக்கா இருக்கட்டும்., எங்களுக்கு குவாட்ரஸ் கிடைச்சா எங்க கூட வாங்கன்னு நான் சொன்னதுக்கே, அவ கிட்ட இந்த வீட்டை கொடுப்பேனா? அவ கிட்ட கொடுக்கவா கட்டிருக்கேன்னு பேசினாங்க. அதனால அவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை யாருக்கும் உங்க அம்மா விட்டுக் கொடுக்க மாட்டாங்க. தாலி செயின் மாத்துனது தான் பிரச்சனைன்னு எனக்கு தோணுது? 
“சரி விடு திருச்சி போய்ட்டு வந்த அப்புறம் பேசிக்கலாம்”
அந்த பயணம் இருவருக்கும் சந்தோஷமாக தான் சென்றது. மூன்று நாள் கழித்து வீட்டுக்கு வந்ததும் வீட்டின் நிலைமை பழைய படி தான் இருந்தது. அதன் பின் வந்த நாட்களிலும் சிந்து சாப்பாடு எடுத்து வைத்து விட்டு சுந்தரத்தை தான் சாப்பிட அழைப்பாள். 
தாயம்மாவிடம் சிந்துவும் பேச வில்லை. அந்த வாரம் சனிக்கிழமை சாயங்காலம் சிந்துவின் வீட்டுக்கு கிளம்பினார்கள். “அங்க இருந்து வரும் போது நேரம் காலத்தோட வரப் பாருங்க”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னார் சுந்தரம். 
“போயிட்டு வரேன் அத்தை”, என்று தாயம்மாவிடம் சொன்ன போது அவளிடம் எந்த பதிலும் இல்லை. சரி என்று கூட சொல்ல முடியாதா? என்ன ஆட்கள் இவர்கள் என்று எரிச்சலாக இருந்தது சிந்துவுக்கு. 
“எப்ப பாத்தாலும் போகும் போது ரெண்டு பேரும் எரிச்சலை கிளப்புறாங்க. கடுப்பா இருக்கு மா”,என்று சித்தார்த்திடம் காய்ந்தாள் சிந்து.
“விடு சிந்து அவங்க அப்படி தான். கண்டுக்காத. உனக்கு பழகிரும்”, என்று சித்தார்த் சொன்னதும் அவளுக்கு எரிச்சல் அதிகமாக தான் வந்தது.
வீட்டுக்கு சென்றதும் அந்த வாரம் நடந்ததை ராணியிடம் ஒப்பித்தாள் சிந்து. “அன்னைக்கு தாலி செயின் மாத்தி விட்டுட்டேன்ன்னு சொன்னதுக்கு உங்க மாமியார் முகம் ஒரு மாதிரி ஆச்சு? அதனால இருக்குமோ?”, என்று கேட்டாள்.
“அதனால தான் மா. அதுக்கு இப்படி பண்ணுனா நான் எப்படி திருப்பி முகம் கொடுத்து பேசுவேன். எரிச்சலா வருது. எல்லாரையும் சாப்பிட சொல்லி தாங்கி சாப்பிட வைக்கிறதுக்குள்ள எனக்கு இருக்குற பசியே போயிருது. போகும் போது போயிட்டு வறேன்னு சொல்றேன். தலையைக் கூட திருப்பலை”
“விடு சிந்து”, என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள் ராணி.
அன்று இரவு தான் பிரேமா நினைவு வந்தது. இந்த கலவரத்தில் அப்போது தான் மற்றொன்றும் நினைவில் வந்தது. தாயம்மா பேசாமல் இருந்த நாளில் இருந்து இன்று வரை பிரேமாவும் அவளிடம் பேச வில்லை. 
“கடைசியா பேசும் போது இந்த அண்ணி நல்லா தான பேசினாங்க. இப்ப என்ன போன் பண்ணுறதே இல்லை. ஒரு வேளை அந்த நம்பருக்கு டவர் கிடைக்கலையோ. என்னோட இன்னொரு நம்பர் அண்ணிக்கு தெரியுமே? அதுக்கும் பண்ணலையே”,என்று எண்ணிக் கொண்டு சிந்துவே போன் செய்தாள்.
நான்கு முறை பண்ணியும் பிரேமா எடுக்கவே இல்லை. அதையும் சித்தார்த்திடம் சொன்னதுக்கு வழக்கம் போல “விடு”, என்றான் அவன். 
ஆனால் சிந்துவால் அதை எளிதாக விட முடியவில்லை. இந்த மூன்று மாதத்தில் மணிக்கணக்காக பேசுபவள் திடீரென்று பேசவில்லை என்றால் என்ன நினைப்பது. 
“முடிவு தெரியாமல் நிம்மதியாக இருக்க முடியாது”, என்று எண்ணிக் கொண்டு சித்தார்த் போனில் இருந்து பிரேமாவை அழைத்தாள்.
தம்பி தான் போன் செய்கிறான் என்று எண்ணி எடுத்த பிரேமா சிந்து பேசுவாள் என்று எதிர் பார்க்க வில்லை போல. வேறு வழி இல்லாமல் பேசினாள். அவள் பேசிய போது இருந்த விலகலை நொடியில் உணர்ந்து கொண்டாள் சிந்து.
“இவங்க வேணுக்குன்னு தான் பேசாம இருந்துருக்காங்க போலயே”, என்று நினைத்துக் கொண்டு “எனக்கு டவர் கிடைக்கிறது இல்லை அண்ணி. இன்னொரு நம்பர் உங்களுக்கு தெரியும்ல? அந்த நம்பருக்கு பண்ணுங்க. நான் ரெண்டு நாளா உங்களுக்கு பண்ணுனேன். நீங்க எடுக்கலை. சரி உடம்பை பாத்துகோங்க. உங்க தம்பிக்கிட்ட போனைக் கொடுக்குறேன்”, என்று கடமைக்கு சொல்லி விட்டு சித்தார்த்திடம் கொடுத்து விட்டாள்.
அப்போது இதற்கெல்லாம் காரணம் தாயம்மா தான் என்று தெளிவாக புரிந்தது சிந்துவுக்கு. “என்னைப் பத்தி தப்பு தப்பா அவங்க மக கிட்ட சொல்லிருக்காங்க. அவங்களும் அவங்க அம்மாவை நான் கஷ்ட படுத்துறேன்னு நினைச்சு என் மேல கோபத்துல இருக்காங்க போல?”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவன் போன் பேசி முடித்ததும் “உங்க அம்மா செய்றது கொஞ்சமும் சரி இல்லைங்க”, என்றாள் சிந்து.
“என்ன ஆச்சி செல்லம்?”
“அவங்க தான் அண்ணிக்கிட்ட என்னைப் பத்தி எதையோ சொல்லிருக்காங்க. உங்க அக்காவும் என்கிட்ட கோபத்துல தான் பேசாம இருக்காங்க”
“அவ பேசலைன்னா விடு”
“விட்டுறேன், இனி அவங்களா என்னோட போனுக்கு பேசுனா மட்டும் தான் நான் பேசுவேன். உங்க நம்பருக்கு போன் பண்ணும் போது என் அக்கா கிட்ட பேசுன்னு கொடுத்தீங்கன்னா நமக்குள்ள சண்டை தான் வரும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அதன் பின் வந்த நாட்களில் அந்த பிரச்சனை வரவே இல்லை. ஏன் என்றால் பிரேமா சித்தார்த்துக்கு போன் செய்து பேசும் போது “சிந்துகிட்ட போனைக் கொடு”, என்று அவளும் சொல்ல வில்லை. “சிந்து பக்கத்துல இருக்கா பேசு”, என்று சித்தார்த்தும் சொல்ல வில்லை. 
ஆனால் இந்த இடத்தில் சித்தார்த் சிறிது யோசித்திருக்க வேண்டும். மனைவிக்கும் அக்காவுக்கும் இருக்கும் சிறு மனஸ்தாபத்தை உடனடியாக சரி செய்திருக்க வேண்டும். அதை அப்படியே விட்டது பின்னாளில் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்திக்க தவறி விட்டான். 
ஒரே குடும்பத்தில் சில உரசல்கள் நிகழும் தான். ஆனால் அதை உடனடியாக சரி செய்திருக்க வேண்டும். அக்கா குடும்பம் அவனுக்கு முக்கியம். பிரேமாவின் பிள்ளைகளுக்கு தாய்மாமனாக சித்தார்த்தும் பிரேமாவுக்கு முக்கியம். 
அப்படி இருக்க தம்பி முக்கியம் என்னும் போது தம்பி மனைவி முக்கியம் என்று பிரேமா யோசித்திருக்க வேண்டும். தன்னுடைய அக்கா வீட்டுக்கு மனைவியுடன் செல்லக் கூடியது அவசியம் என்று சித்தார்த் யோசித்திருக்க வேண்டும். 
நாளைக்கு பிரேமாவின் மகள் வயதுக்கு வந்தால் பிரேமா திடீரென்று தான் சிந்துவை அழைப்பாளா? இல்லை சித்தார்த் தான் என் மருமகளுக்கு சீர் செய்ய என் அக்கா வீட்டுக்கு போகணும், வா சிந்து என்று அழைப்பானா? அப்படி அழைத்தால் சிந்துவால் போக முடியுமா?
தன்னுடைய மனைவியும் அக்காவும் இப்படி பேசாமல் இருப்பது நாளைக்கு என்ன நிலைக்கு கொண்டு வரும் என்று அவன் யோசித்திருக்க வேண்டும்.
உடனேயே பிரேமாவுக்கு போன் செய்து, “உனக்கு என்ன ஆச்சுக்கா? சிந்து கிட்ட தினமும் பேசுவ? ரெண்டு பேரும் நல்லா தான பேசிநீங்க? அப்புறம் ஏன் பேசலை?”, என்று அவன் கேட்டிருந்தால் ஒரு வேளை இந்த பிரச்சனை சரியாகி இருக்கலாம். 
ஆனால் கொஞ்ச நாளில் பேசிருவாங்க என்று அவன் தவறாக கணித்து விட்டான். யாராவது அவமான படுத்தினால் அவர்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டான் சித்தார்த். அதே குணம் சிந்துவுக்கும் இருக்கும் என்று அவன் புரிந்து கொள்ள வில்லை. 
மதியாதோர் தலை வாசல் மிதியாதே என்று பொன்னுரையே இருக்கும் போது இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன? விதியின் கையில் தான் முடிவும். 
காதல் தொடரும்….

Advertisement