Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 12
உனக்குள் இருக்கும் நான்
காதல் தூரிகையால்
உன் உள்ளத்தில்
வண்ணம் தீட்டுகிறேன்!!!
திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன் செயினை திருப்பி விட்டாள்.
அது மட்டுமல்ல, சித்தார்த்துக்கு ஒரு சீட்டு விழுந்ததும் அந்த பணத்தை அப்படியே ராணி கையில் கொடுத்தான். அந்த பணத்தை வைத்து சிந்துவின் அண்ணனிடம் வாங்கிய பணத்தை கொடுத்தாள் ராணி. 
அதன் பின்னர் சிந்துவின் சித்தியின் கடனையும் சித்தார்த் தான் அடைத்தான். 
“எங்க மாமா கிட்ட வாங்கின பணத்தை கொடுக்கணும் மா, என்னோட நெக்லசும் பெரிய கம்மலும் சும்மா தான் இருக்கு. நான் அதை போட போறது இல்லை. அது அம்மா கிட்ட கொடுக்கவா? உங்க வீட்ல ஏதாவது சொல்லுவாங்களா?”, என்று கேட்டாள் சிந்து.
“அவங்க கிட்ட நாம எதுவும் சொல்ல வேண்டாம் சிந்து. நான் பணம் கொடுத்ததையும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா மாமியார் வீட்டுக்கே கொடுக்கான்னு திட்டுவாங்க. நீ நகையைக் கொடு. பின்னாடி நாம திருப்பிக்கலாம். அத்தை கடன் எல்லாம் அடைஞ்சு நிம்மதியா இருந்தா சரி”
“எங்க அம்மா அப்பாவை கடனாளி ஆக்கி இங்க வந்தேன். இப்ப உங்களையும் கடன் காரனா ஆக்குறேன்ல? அம்மாவும் அதை தான் சொல்றாங்க. உன் வீட்டுக்காரர் கிட்ட நிறைய பணம் வாங்கியாச்சுன்னு புலம்புறாங்க”
“நீ வேற நான் வேற இல்லை சிந்து. உன் வீட்டை பாத்துக்க வேண்டியது நான் தான். அத்தையை கவலைப் படாம இருக்க சொல்லு. நான் இது வரைக்கும் மூணு லட்சத்து அறுபதாயிரம் கொடுத்துருக்கேன். அதுல ரெண்டு லட்சம் வட்டிக்கு தான் வாங்கிருக்கேன். உன் தம்பி லோன் போட்டு ஒரு லட்சம் ரூபாய் எனக்கு திருப்பி கொடுத்துட்டான். மீதி இருக்குற ரெண்டு லட்சத்து அறுபதாயிரத்தை உங்க வீட்ல கொடுக்கணும்னு நான் கேக்க மாட்டேன். அவங்க கொடுத்தாலும் நீ வாங்காதேன்னு தான் சொல்லுவேன். நீ என் பொண்டாட்டி டி, நீ பட்ட கடனை நான் தான அடைக்கணும். உங்க வீட்லயும் எவ்வளவு செஞ்சிருக்காங்க பாவம்? என்ன டா நல்லது செஞ்சிட்டு பணம் கொடுத்ததை கணக்கு வச்சிருக்கான்னு பாக்குறியா? ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு பழமொழி இருக்கே. எவ்வளவு பணம் யாருக்கு கொடுத்துருக்கோம்னு கணக்கு வச்சிருக்கணும்ல?”
“உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. சில நேரம் நீங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு குழப்பம் தான் வருது. எந்த மருமகனும் செய்யாத விஷயத்தை நீங்க செய்றீங்க? ஆனா உங்களையே நம்பி வந்த என்னை உங்க அம்மா அப்பா கூட போராட விடுறீங்க?”
“உன்னை இப்ப அவங்க என்ன செஞ்சிட்டாங்க?”
“மறுபடி ஆரம்பிச்சிட்டீங்களா? உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க. சரி எங்க அம்மா செயினை திருப்பிட்டாங்களாம். ஒரு நல்ல நாளுல தாலிக் கயிரை மாத்திரணும்”
“சரி, அந்த செயினை நாம பாலிஷ் பண்ணிறலாம்”, என்று அவனும் சொல்லி விட்டான். 
அந்த வாரம் ஆடிக்கு சிந்து வீட்டுக்கு போயிருக்கும் போது “தாலி கயிரை மாத்திருவோமா சிந்து? ரொம்ப அசிங்கமா தெரியுது”, என்று கேட்டாள் ராணி.
“ஹ்ம் சரி மா. நானும் எவ்வளவோ மஞ்சள் போடுறேன். கலர் அப்படியே இருக்கு. மாத்திருங்க”, என்று சாதாரணமாக சொன்னாலும் சித்தார்த் வீட்டில் போட்ட தாலி செயினை நினைத்து உள்ளுக்குள் வலித்தது. 
“இரு முடிச்சு போட கயிறு வாங்கிட்டு வரேன். இன்னைக்கே மாத்திரலாம்”, என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றாள் ராணி.
சிறிது நேரத்தில் திருப்பி இருந்த மூன்று பவுன் செயினில் மாங்கல்யத்தை மாற்றி போட்டு விட்டாள். அதை சித்தார்த்திடம் காட்டினாள் சிந்து. 
“நல்லா இருக்கு. செயின் பாலிஷ் போட்ட உடனே புதுசு மாதிரி தெரியுது”, என்றான்.
“நீங்க தான பாலிஷ் பண்ண ஐடியா கொடுத்தீங்க. சரி உங்க அம்மா உங்க வீட்ல வச்சு மாத்தலைன்னு எதுவும் சொல்லுவாங்களா?”
“அதெல்லாம் சொல்ல மாட்டாங்க”
அடுத்த நாள் ஆடிப் பலகாரங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு சுந்தரம் ராணி முன்னே சென்றார்கள். சித்தார்த்தும், சிந்துவும் வண்டியில் பின்னே சென்றார்கள். 
போகும் போதே “சிந்து, அத்தை அக்கவுண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வச்சிருக்கேன். ஆடிக்கு செலவாகிருக்கும்ல? பாவம் அவங்க கைல ஒண்ணும் இருக்காது”, என்று அவன் சொன்னதும் அவனை நினைத்து சந்தோஷப் பட்டாள். 
வீட்டுக்கு சென்றதும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது “நான் என்ன சொல்லிட்டேன்னு அந்த செயினை போட மாட்டிக்கான்னு தெரியலை. நீயாவது சொல்லலாம்ல ராணி?”, என்று ராணியிடம் கேட்டாள் தாயம்மா.
“விடுங்க அண்ணி, சின்ன பிள்ளை தான? நீங்க பெரியவங்க நல்லதுக்கு தான் சொல்லிருப்பீங்க. போக போக புரிஞ்சிக்குவா. நான் வேற செயின்ல தாலியை கோர்த்து போட்டு விட்டுட்டேன்”, என்று சாதாரணமாக சொல்லி விட்டு சென்று விட்டாள் ராணி.
ஆனால் அதைக் கேட்டு தாயம்மா முகம் இருண்டு போனது. “என்கிட்ட சொல்லாம இவங்களா எப்படி தாலியை மாத்தலாம்”, என்று எரிச்சல் வந்தது. அந்த கோபத்தில் முகத்தில் முள்ளைக் கட்டி கொண்டு இருந்தாள்.
அப்போதில் இருந்து உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு திரிந்தாள் தாயம்மா. சிந்து வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பி சென்று விட்டார்கள். இரவு, சாப்பாடை எடுத்து வைத்த சிந்து “அத்தை சாப்பிட வாங்க”, என்றாள்.
ஆனால் டி‌வி பார்த்துக் கொண்டிருந்த தாயம்மா அது காதில் விழுந்தும் விழாதது போல இருந்தாள். “என்ன இது? இவங்க முன்னாடி நின்னு கூப்பிடுறேன். இப்படி அசையாம இருக்காங்க. ஒரு வேளை டி‌வி பாக்குற இண்ட்ரெஸ்ட்ல நான் கூப்பிட்டது கேக்கலையோ?”, என்று எண்ணிக் கொண்டு “அத்தை அத்தை”, என்று மீண்டும் அழைத்தாள். .
ஆனால் தாயம்மா திரும்பி கூட பார்க்க வில்லை. மனதுக்குள் அதிர்ந்து போனாள் சிந்து. இப்படி ஒருவரால் அவமான படுத்த முடியுமா என்று கேள்வி எழுந்தது சிந்துவுக்கு. “எத்தனை தடவை கூப்பிடுறேன்? இந்த பொம்பளை இப்படி உக்காந்திருக்கு”, என்று உச்ச கட்ட எரிச்சலில் நேராக தன்னுடைய அறைக்கு சென்றவள் சித்தார்த்திடம் “நீங்க சாப்பிட வாங்க”, என்றாள்.
“எனக்கு பசிக்கலை சிந்து”
“என்னைக்காவது எனக்கு பசிக்குனு யோசிச்சு பாத்துருப்பீங்களா? கல்யாணம் ஆன அடுத்த நாளே என்னைப் பத்தி கவலைப் படாதவர் தானே நீங்க?”
“ஐயோ அன்னைக்கு அசதில மறந்துட்டேன் மா. இப்ப உன்னை அக்கறையா தானே பாத்துக்குறேன். உனக்கு காய் வெட்டிக் கொடுக்குறேன். நீ சப்பாத்தி தேச்சா நான் சுட்டு எடுக்குறேன். நானே வாசல் பெருக்கி தண்ணி தெளிக்கிறேன். ஹாசினிக்கு நானே ஊட்டி விடுறேன். இவ்வளவும் உனக்காக தானே செல்லம் பண்ணுறேன்”
இதெல்லாம் உண்மை தான் என்பதால் ஒரு நொடி அமைதியாக இருந்தவள் “எனக்கு பசிக்குது, நீங்க சாப்பிட வாங்க”,என்றாள்.
“எங்க அம்மாவை கூப்பிட்டியா? அப்பா குளிச்சிட்டு வந்துட்டாரா?”
இவ்வளவு சொல்லியும் அவன் சாப்பிட எழ வில்லை என்ற கோபத்தில் “கூப்பிட்டேன், உங்க அம்மாவை எத்தனை தடவை கூப்பிட்டேன் தெரியுமா? கண்டுக்காம இருக்காங்க. இனி நான் என்னைக்கும் உங்க அம்மாவை சாப்பிட வாங்கன்னு கூப்பிட மாட்டேன்”, என்று கடுப்புடன் உரைத்தாள். 
“சரி டென்ஷன் ஆகாத. சாப்பாடு எடுத்து வை, நான் வரேன்”, என்று சொல்லி எழுந்தவன்  “அம்மா வாங்க சாப்பிடுவோம்”,என்றான்.
“எனக்கு இப்ப வேண்டாம்”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
“ஆக பையன் மேல கோபம் இல்லை. என் மேல தான் கோபம் போல? மகன் கிட்ட மட்டும் பதில் சொல்ல முடியுது? அந்த அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?”, என்று மண்டைக்குள் குழப்பம் வந்தது சிந்துவுக்கு. 
அடுத்த நாள் துணி துவைக்கும் போது மேலும் குழம்பினாள். எப்போதும் அழுக்கு துணியை பாத்ரூமிலே கழட்டி போட்டிருக்கும் தாயம்மா இன்று துணியை எடுத்திருந்தாள்.
“அழுக்கு துணியை காணுமே. நேத்து குளிச்சாங்களே. எங்க போயிருக்கும்?’;,என்று எண்ணி தங்களின் துணிகளை மட்டும் துவைத்து காய போட செல்லும் போது மாடி படிக்கு கீழே ஒரு பக்கெட்டில் தாயம்மா துணி இருந்தது.
“அடப்பாவி, நான் துணியை துவைக்க கூடாதுன்னு இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்களோ? ஆனா என் மேல என்ன கோபம்?”, என்று நினைத்தவள் “கோப பட்டா படட்டும். எனக்கு மட்டும் இவங்க துணியை துவைக்கணும்னு ஆசையா? இனி அவங்க பாத்ரூம்ல துணியை போட்டா கூட நான் அவங்க துணியை துவைக்க மாட்டேன். இருந்தாலும் செக் பண்ணனும். ஒரு வேளை வேற எதுக்காவது எடுத்திருந்தா?”, என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் அவளுக்கு குழப்பமே தேவை இல்லை என்பது போல அடுத்து வந்த நாட்களில் துணியை அவ்வாறே எடுத்து வைத்தாள் தாயம்மா.
அதை சித்தார்த்திடம் சொன்னாள் சிந்து. அவனும் “உனக்கு வேலை மிச்சம்னு நினைச்சிக்கோ சிந்து. எங்க அப்பாவே துவைக்கட்டும்”, என்று சொன்னான்.
“இனி உங்க அம்மாவே மனசு மாறி துணியை பாத்ரூம்ல போட்டா கூட நான் துவைக்க மாட்டேன்”, என்று சொன்ன சிந்துவை கவலையோடு பார்த்தான் சித்தார்த்.
“எல்லா வேலையும் சிந்து தான் தானா இழுத்து போட்டு செய்றா. இந்த அம்மா எதுக்கு தான் இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துகுறாங்களோ?”, என்று எண்ணிக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் திருச்சியில் உள்ள சிந்துவின் சித்தப்பா வீட்டுக்கு விருந்துக்கு கிளம்பும் பிளான் இருந்தது. முந்தைய நாள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. 

Advertisement